திவா விட்ட காத்தாடி இங்கே
ஒரு நாலைந்து நாள் இணையத்திலே இல்லைன்னது என்னல்லாம் நடக்குது பாருங்க! திவா காத்தாடி விட்டுட்டு இருந்திருக்கார். திடீர்னு காத்தாடி விட ஆரம்பிச்சுட்டாரே, என்னடா இதுனு போய்ப் பார்த்தேனா! உடனேயே எனக்கும் மலரும் நினைவுகள். பனை ஓலையிலேயும் காத்தாடி பண்ணியதுண்டு. அந்தக் காத்தாடியிலே ஒரு குண்டூசியைக் குத்திப் பூந்துடைப்பக் குச்சியின் உள்ளே வெண்மையாகச் சதைப்பற்றுத் தெரியும் இடத்திலே லேசாய்க் குத்திட்டு ஓடினோமானால் காத்தாடி உங்க ஓட்டத்தின் வேகத்துக்கு ஏற்றாற்போல் சுத்தும். நானெல்லாம் ஓட முடிஞ்சதில்லை. அப்பா விடமாட்டார். (க்ர்ர்ர்ர்ர்ர்) ஸ்கூல்லே ஓடினதோட சரி. திவா விட்ட இந்தக் காத்தாடியைப் போலக் கலர்பேப்பரிலே, ஜிகினா பேப்பரிலேனு பண்ணினதும் உண்டு. பள்ளியிலே படிக்கும்போது இந்தக் காத்தாடியைக் கையாலேயே அவங்க அவங்க தானே பண்ணி எடுத்துட்டுப் போகணும். அதோட டீச்சர் வேறே பேப்பர் எல்லாம் கொடுத்துக் கத்திரிக்கோலையும் கொடுத்துச் செய்து காட்டவும் சொல்வாங்க. அப்படி ஒரு சமயம் பண்ணின காத்தாடியைத் தம்பி விளையாடக் கேட்டான். நமக்குத் தான் எப்போவுமே தம்பினா ஒரு தனிப் பாசம் ஆச்சா! சரினு கொடுத்தேன்.
மேலாவணி மூலவீதியிலே ஏழாம் நம்பர் வீட்டிலே குடி இருந்தோம். அப்போத் தான் சிவாஜியோட படமான "பார்மகளே பார்!" அரங்கு நிறைந்த காட்சிகளாய் ஓடிட்டு இருந்தது. அப்பா சிவாஜி ரசிகர். படம் பார்த்துட்டு எங்களுக்கெல்லாம் கதை சொல்லி இருந்தார். நாங்கல்லாம் பார்க்கலை. அப்படி எல்லாம் உடனே அனுப்பிட மாட்டார். படத்தைத் தியேட்டரிலிருந்து தூக்கப் போறாங்கனு தெரிஞ்சதும் கடைசி நாள் போவோம். அதனால் நாங்க பார்க்க இன்னும் நிறைய நாட்கள் இருந்தன. ஆனால் பாட்டுக்கள் மதுரை முழுதும் ஒலித்துக்கொண்டிருந்தன. அதிலே அவள் பறந்து போனாளே! பாட்டு ரொம்பவே பிரபலம். அவள் எனக்கா மகளானாள், நான் அவளின் மகனானேன். அப்படினு டிஎம் எஸ். குரலிலே காட்டி இருக்கும் உருக்கம் கேட்கும்போதே உருக வைக்கும். பார்க்காத படம் வேறே, என்னதான் கதை தெரிஞ்சாலும் நிறையக் கற்பனைகள்.
அந்தப் பாடலைப் பாடிக்கொண்டு தம்பி நான் கொடுத்த காத்தாடியை வலக்கையில் வைத்துக்கொண்டு கையை நீட்டிய வண்ணம் முதல் நம்பர் வீட்டிலே இருந்து தெருவின் ஒரு பகுதிக் கடைசியில் இருக்கும் பிள்ளையார் கோயில் வரையிலும் போயிட்டுத் திரும்பி வடக்கே எங்க வீடு இருக்கும் பகுதிக்கு ஓடி வந்து கொண்டிருந்தான். மறுநாள் அவனுக்குத் தேர்வு ஏதோ இருந்தது. நான் வீட்டு வாசலில் நின்று கொண்டு தம்பி காத்தாடி விடும் அழகை ரசித்துக்கொண்டிருந்தேன். அப்பா மீனாக்ஷி கோயிலில் வழக்கமான தரிசனத்தின் பின் வந்து கொண்டிருந்தார. நடுவில் எதிர்சாரியில் இருந்த பெரியப்பா வீட்டுக்குப் போயிருந்ததால் எங்களுக்குத் தெரியவில்லை. இல்லைனா இந்தப் பூனையும் பாலைக்குடிக்குமானு வீட்டுக்குள்ளே இருந்திருப்போம். பெரியப்பா வீட்டு வாசலில் நின்னுட்டுத் தம்பி அங்கே உள்ளே இருக்கும் எங்க பெரியப்பா பொண்ணு கிட்டேக் காத்தாடியைக் காட்டி வம்பு பண்ண, அவளோ, (இப்போ அவ இல்லை) ஜாடை காட்டறா, எங்க அப்பா உள்ளே இருக்கார்னு, நாம தான் மு.மு. ஆச்சே புரியலை.
இன்னும் பாட்டு ஓங்கி வரத் தம்பியும் கிளம்ப, காத்தாடியும் கிளம்ப தம்பி குரலைக்கேட்டு அப்பாவும் கிளம்ப, பளாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆர் தம்பி முதுகு பழுக்க. ஆஹா, அவள் என்ன பறந்தா வந்து முதுகிலே அடிச்சுட்டா? திகைத்த தம்பி திரும்பிப் பார்க்க மாட்டிக்கப் போறோம்னு தெரிஞ்சு நான் உள்ளே போக முயல, அதைக் கவனிச்ச அப்பாவின் கழுகுக் கண்கள், தம்பியைப் படிக்க வைக்காமல் விளையாட விட்ட என்னைத் திட்டனு ஒரே அல்லோல கல்லோலம். ஹிஹி, எனக்குப் பரிக்ஷை எல்லாம் மார்ச் மாசமே முடிஞ்சுடும். சேதுபதி பள்ளியில் தான் ஏப்ரல் கடைசி வரை இழுத்தடிப்பாங்க. அதுக்கு நான் என்ன செய்யறது? :D ஆனால் அது ஒரு மறக்கமுடியா அநுபவம். இப்போவும் அவள் பறந்து போனாளே என்று பாட்டு கேட்கும்போது நினைவு வரதோடு இல்லாமல், நாங்க மூணு பேரும் சேர்ந்திருக்கும்ப்போதும் சொல்லிச் சொல்லிச் சிரிச்சுப்போம்.
டிஸ்கி: மறந்துட்டேனே, அப்புறம் எனக்குக் குழந்தைகள் பிறந்ததும் அவங்களுக்குக் காத்தாடியை என்னோட மாமனாரோ, மாமியாரோ செய்து கொடுப்பாங்க. அழகாயும் இருக்கும். நல்லாவும் சுத்தும்.
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Showing posts with label அப்பாடா. Show all posts
Showing posts with label அப்பாடா. Show all posts
Tuesday, February 22, 2011
Subscribe to:
Posts (Atom)