எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, August 11, 2011

”த.ம.அ. 10ம் ஆண்டு நிறைவு - மரபுப் பதிவுகள்: முளைக்கொட்டு உற்சவம்

ஆடி பிறந்தால் அழைத்து வரும் என வழக்குச் சொல் அல்லது சொலவடை உண்டு. ஆடிமாதம் பிறந்ததுமே ஒவ்வொரு பண்டிகையாக அது அழைத்துவரும் என்பதையே அவ்வாறு கூறுகின்றனர். ஆடி மாதம் முதல் மூன்று தினங்கள் நதிகள் அனைத்துக்குமே மாதவிலக்கு ஏற்படும் எனவும் அந்த முதல் மூன்று நாட்கள் நதிகளில் குளிக்கக் கூடாது எனவும் சொல்வார்கள். விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால் மலைகளில் விழும் மழை நீர் வெள்ளப் பெருக்காகப் புது வெள்ளம் வரும் அல்லவா? அந்தப்புது வெள்ளத்தில் குளிக்க வேண்டாம் என்பதற்காகவும் இருக்கலாம். அடுத்து வரும் தினங்களில் ஆடி வெள்ளம் கரை புரண்டு ஓடுகையில் எல்லாக் கோயில்களிலும் அம்மனுக்கு வளைகாப்பு உற்சவம் நடை பெறும். சில கோயில்களில் ஆடிப்பூர நக்ஷத்திரத்தன்று நடத்துவார்கள். சில கோயில்களில் ஆடிப் பதினெட்டு அன்று நடைபெறும். சிலர் சாகம்பரியாக அன்னையைக் காய், கனிகளால் அலங்கரிப்பார்கள். சிலர் முளைப்பாரி என்னும் முளைக்கொட்டால் அம்மனை வழிபடுவார்கள். மதுரையின் முளைக்கொட்டு உற்சவம் குறித்து இப்போது பார்ப்போம்..மதுரை மீனாக்ஷி கோவிலில் சித்திரை மாதம் சித்திரைத் திருவிழா நடப்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் அங்கே ஒவ்வொரு மாதமும் அன்னைக்கு விழாதான். என்றாலும் இப்போது நாம் பார்க்கப்போவது முளைப்பாரி உற்சவம் பற்றி மட்டுமே. மதுரையில் ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஆடி மாத முளைக்கொட்டுத் திருவிழாவுக்குக் கொடியேற்றுவார்கள் இந்த உற்சவத்திற்கு அன்னைக்கு மட்டுமே கொடி ஏற்றப் படுகிறது. அதைத் தொடர்ந்து பத்து நாட்கள் முளைக்கொட்டு உற்சவம் நடக்கும். எல்லா நதிகளிலும் வெள்ளம் புத்தம்புதியதாக வந்து வயல்களில் செழிப்பாக நாற்றுக்கள் வளரவேண்டி நடத்தப்படும் உற்சவம் எனலாம். மதுரை எப்போதுமே ஒரு பெரிய கிராமம் என்றே பெயர் பெற்றது. ஆகையால் சுற்றியுள்ள கிராமங்களின் மக்கள் அனைவருமே மீனாக்ஷியைத் தங்கள் குலதெய்வமாய்க் கொண்டு அவளுக்கு முளைப்பாரி எடுத்து வந்து வழிபட்டுப் பிரார்த்திப்பார்கள்.ஆனால் இதற்கான ஏற்பாடுகள் கிராமங்களில் எல்லாம் பங்குனி, சித்திரை மாதங்களிலேயே ஆரம்பிப்பார்கள். சிலர் நோன்பும் இருப்பது உண்டு. முளைப்பாரி அல்லது முளைக்கொட்டு போடுவதற்கு வயதுக்கு வந்த, வராத சிறுபெண்களில் இருந்து குழந்தைப்பேறு இழக்கும் தகுதியை அடைவதற்கு முன்னர் உள்ள பெண்கள் வரை போடலாம் என்று சிலர் கூற்று. ஆனால் பொதுவாக எல்லாப் பெண்களுமே முளைப்பாரி போட்டு நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இதற்கென விரதம் இருப்பதால் சுத்தம், ஆசாரம் கடைப்பிடிக்கப்படும். முளைப்பாரியைச் சில கிராமங்களில் அனைத்து வீட்டினருக்கும் பொதுவாகவும் போடுவார்கள். அப்போது பிள்ளையார் கோயில், பஜனை மடம் போன்ற பொது இடங்களில் எல்லாப் பெண்களும் கூடி முளைப்பாரி போடுவதுண்டு. ஆனால் நகரங்களில் அவரவர் வீடுகளில் போட்டு ஆடிப் பெருக்கன்றோ அல்லது முளைப்பாரி உற்சவம் முடிவு நாளன்றோ ஆற்றில் விட்டுக் கரைப்பார்கள். மதுரையில் நாங்கள் வீட்டிலேயே முளைப்பாரி போடுவோம். முளைப்பாரி போடும் நாளன்று விடிகாலையிலிருந்தே சிறு பெண்கள், சிறுமிகள் போன்றோர் சிறு பானையை எடுத்துக்கொண்டு பல வீடுகளிலும் முளைப்பாரிக்கான தானியங்களைச் சேகரிப்பதும் உண்டு. இன்று பெரும்பான்மையாக அம்மாதிரியான ஒரு நிகழ்வைப் பார்க்கவே முடிவதில்லை.

முளைப்பாரி போடும் விதம்:


இதற்கெனத் தனி மண் குடம், அல்லது பானை இருத்தல் நல்லது. பானை அல்லது குடத்தின் அடிப்பகுதியைக் கவனமாக உடைத்து எடுத்துவிட்டு அடியில் கம்பால் சதுரமாய்க் கட்டி அல்லது ஓலைப் பாயைப் போட்டுவிட்டு, வாய்ப்பகுதி தரையில் இருக்குமாறு வைப்பார்கள். இப்போதெல்லாம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எனப்படும் எவர்சில்வர் குடங்கள், பானைகளில் போடுவதாய்க் கேள்விப் படுகிறோம். ஆனால் நான் இன்னமும் நேரில் பார்க்கவில்லை. முதலில் பானையில் கரம்பை எனப்படும் மண்ணை நிரப்புவார்கள். அதன் மேல் இயற்கை உரங்களான சாணி, சாம்பல், ஆட்டுப் புழுக்கை போன்றவற்றைப் போடுவார்கள். இல்லாதவர்கள் ஆர்கானிக் உரம் எனக் கிடைப்பதைப் போடலாம். இதன் பின்னர் விதைகளைத் தூவ வேண்டும். பொதுவாகப் பச்சைப்பயிறே பெரும்பாலானவர்கள் முளைப்பாரிக்கு விடுவார்கள். என்றாலும் தட்டைப் பயிறு, சிறு பயிறு, சோளம்,கம்பு போன்றவையும் சில கிராமங்களில் போடுவதை வழக்கமாய்க் கொண்டிருக்கின்றனர். ஊரின் செழிப்பைப் பொறுத்தும் சில கிராமங்களில் முளைக்கொட்டு அமையும். அம்மனுக்கு 21 என்ற கணக்கிலேயே எல்லாச் சீரும், சிறப்பும், உபசாரங்களும் செய்வதால் இதையும் 21 விதமான விதைகளைக் கொண்டு செய்வதும் உண்டு. படரும் கொடிகளின் விதைகளை எப்போதுமே போட்டுப் பார்த்ததில்லை. விதைகளைப் போட்டதும் மேலேயும் கொஞ்சம் மண்ணைத் தூவ வேண்டும். இதை முளைக்கொட்டு அல்லது முளைப்பாரி என்பார்கள்.முளைப்பாரி அல்லது முளைக்கொட்டுப் பானைக்குக் காலை, மாலை இருவேளையும் வீட்டுப் பெண்கள் வழிபாடு நடத்துவார்கள். அந்நிய மனிதர்கள் சுத்தமாக இருந்தால் மட்டுமே வீட்டிற்குள் வர முடியும். இப்போல்லாம் தெரியாது. தினமும் பாடல், ஆடல், கோலாட்டம், கும்மி என முளைப்பாரிக்கு முன்னால் விளக்கு ஏற்றி வைத்துவிட்டுப் பெண்கள் கூடிப் பாடி ஆடுவார்கள். இதிலே போட்டியும் நடக்கும். யார் வீட்டு முளைக்கொட்டு நல்ல உயரமாக வளர்கிறது என்றெல்லாம் பார்ப்பார்கள். சிலர் முளைப்பாரி உயரமாக வந்தால் நினைத்தது நடக்கும் என வேண்டிக்கொள்வதும் உண்டு. ஆனாலும் முளைப்பாரி உயரமாக வளர்ந்தால் தான் அந்த வருஷம் விவசாயமும் செழிப்பாக இருக்கும் என்பது பொதுவானதொரு நம்பிக்கை. ஊர் செழித்தால் தான் நாம் செழிப்பாக இருப்போம் என்பதால் பொதுவானதொரு இடத்தில் முளைப்பாரி போட்டுக் கடைசி நாளன்று ஊர் மக்கள் அனைவருமாக முளைப்பாரியை எடுத்துச் சென்றுப் பொதுக்கிணற்றிலோ, அல்லது ஆற்றிலோ கரைப்பதும் உண்டு.

முன்பெல்லாம் முளைப்பாரி ஊர்வலம் மிகப் பெரியதாக இருக்கும். கூச்சமில்லாமல் பெண்கள் தங்கள் தலையில் முளைப்பாரியைத் தூக்கி வருவார்கள். இப்போதெல்லாம் பார்க்க முடிகிறதில்லை. இந்த உற்சவம் மதுரையில் ஆரம்பிக்கையில் அம்மனுக்கு மட்டுமே கொடியேற்றுவார்கள். ஆயில்ய நக்ஷத்திரத்தில் ஏற்றப்படும் கொடி பத்து நாட்கள் உற்சவத்திற்குப் பின்னர் இறக்கப் படும். பத்துநாட்களும் அம்மன் ஒவ்வொரு விதமான அலங்காரத்தில் அம்மன் சந்நிதியிலேயே இருக்கும் மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் காட்சி தருவாள். வரும் முளைப்பாரிகளை எல்லாம் அம்மனுக்கு எதிரே வைத்திருப்பார்கள். பச்சை நிறம் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். கடைசி நாள் கும்மியோடு முளைக்கொட்டைப் பொற்றாமரையில் கரைப்பதோடு அம்மனுக்கு உற்சவம் முடியும்.

10 comments:

 1. அழகிய படங்களுடன் அருமையான பதிவு.முளைக்கொட்டு உற்சவம் பற்றி அறிந்துகொண்டேன்.நன்றி மாமி.

  ReplyDelete
 2. நல்வரவு ராம்வி. அப்படியா?? முன்னர் கேட்டதில்லையா? வரவுக்கும் கருத்துக்கும் நன்றி ராம்வி.

  ReplyDelete
 3. Arumai..... Pls visit my blog ullolipayanam.blogspot.com

  on various temples & details......

  Karthik..

  ReplyDelete
 4. நான் முளைக்கொட்டு பற்றி எழுத இருந்தேன், நீங்கள் எழுதிவிட்டீர்கள்....மீனாக்ஷி கோவில் வழக்கங்கள், இந்த் விழாவில் அம்மனது அலங்காரங்கள் பற்றியும் சொல்லியிருக்கலாமோ?

  ReplyDelete
 5. வாங்க கார்த்திக், உங்க பதிவையும் பார்த்தேன்., பின்னூட்டம் கொடுக்க முடியலையே?? :( முதல் வரவுக்கு நன்றிப்பா.

  ReplyDelete
 6. வாங்க மதுரையம்பதி, எழுதி இருக்கலாம். ஆனால் பதிவு விரிவாக ஆகிவிடும். இது மரபு விக்கிக்காகத் தமிழ்நாட்டின் தொன்று தொட்டு வரும் மரபைப் பற்றி மட்டுமே குறிக்கும் பதிவு. நீங்க சொல்வது எல்லாம் நீங்களே எழுதுங்கள். மதுரை குறித்த பதிவுகளில் அவற்றைச் சேர்க்கலாம். இது தனி! அது தனி! அம்மன் அலங்காரத்தோடு மீனாக்ஷி நாயக்கன் மண்டபத்தில் இருப்பாள்னு மட்டும் சொல்லி இருக்கேன். சாம்பிளுக்கு ஒரு அலங்காரம் மட்டும்! :)))))) இதிலே மதுரை குறித்து வேண்டுமென்றே அதிகம் எழுதவில்லை

  ReplyDelete
 7. எவ்வளவு நல்ல concept !! நீர் நிலைகள் வற்றாமல் தண்ணி இருக்கவும் வெள்ளம் இல்லாமல் இருக்கவும் எல்லாரும் நன்றாக இருக்கணும் என்றும் !!intergrated spirituality அப்ப வாழ்க்கை !!எனக்கு ஞாபகம் வரிசையா double deckerமுளைப்பாரி மதுரைல போறது தான் :))

  ReplyDelete
 8. வாங்க ஜயஸ்ரீ,

  ஆமாம், தென் மாவட்டங்களில் முளைக்கொட்டு உற்சவம் இன்னமும் ஓரளவுக்கு நடந்தும் வருகிறது என்பதே ஆறுதலான செய்தி.

  ReplyDelete
 9. முளைக்கொட்டு எனக்குப் புதிய தகவல் அறிந்துகொண்டேன்.

  ReplyDelete