எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, February 29, 2012

சாதனை பல படைத்த பிரதமருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

இந்தியா கண்ட பிரதமர்களிலேயே மிகக் குறைந்த காலம் ஆட்சியில் இருந்தவர்களில் லால்பகதூர் சாஸ்திரியும், மொரார்ஜி தேசாயும் ஆவார்கள். இருவருமே நேர்மையும், நாணயமும், மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு தங்கள் பதவியைத் துஷ்பிரயோகம் செய்யாதவர்களாகவும் இருந்தனர். இந்தக்காலத்தில் இது அதிசயமாக இருக்கலாம். ஆனால் இது நடந்தது. சாஸ்திரிஜியின் பிள்ளை கல்லூரியில் சேரும்போது தன் பதவியின் அதிகாரத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அவர் சொல்லிவிட, பிள்ளையும் கல்லூரிக்கு விண்ணப்பம் அளித்திருக்கிறார்.

தகப்பன் பெயர்: லால்பகதூர் சாஸ்திரி

தகப்பன் வேலை: இந்தியப் பிரதமர்

எல்லா விண்ணப்பங்களையும் பரிசீலித்தவருக்குத் தூக்கிவாரிப் போடப் பிரின்சிபாலுக்குச் செய்தி போக சாஸ்திரியின் பிள்ளையை வரவழைத்துக் கேட்க உண்மை தெரிகிறது. பிரின்சிபால் உடனேயே பிரதமரின் அலுவலகத்திற்குத் தொலைபேசிப் பிரதமரோடு பேச வேண்டும் என்று கேட்க, சில மணிகளில் பிரதமர் பேசுகிறார். பிரின்சிபால் உங்கள் பையன் என்று தெரிந்தால் கல்லூரியில் சேர்க்க மாட்டோமா? இது என்ன சோதனையா என்று வருந்த, இல்லை, ஐயா, அவன் என் பிள்ளை என்பதால் நீங்கள் உங்கள் கல்லூரியில் அவனைச் சேர்த்தால் நான் வருத்தப் படுவேன். அவன் வாங்கி இருக்கும் மதிப்பெண்கள் அவன் கேட்டிருக்கும் பாடத்திட்டத்திற்கு ஏற்றதாக இருந்தால், அவன் தகுதியுள்ளவனாக இருந்தால் அவனை உங்கள் கல்லூரியில் சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லை எனில் வேண்டாம்."

எந்தத் தகப்பனும் இப்படிச் சொல்ல மாட்டார். அதே போல் மொரார்ஜி தேசாயும். அவர் உயர் பதவியில் இருந்த சமயம் அவர் மகளோ, மகனோ, மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க நினைத்து விண்ணப்பித்தால் இடம் கிடைக்கவில்லை. மொரார்ஜி ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் போதும்; இடம் கிடைத்திருக்கும். ஆனால் அவர் தன் பதவியைப் பயன்படுத்தி கல்லூரியில் சேர்க்க விரும்பவில்லை. நம் நாட்டில் இப்படிப்பட்ட மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் என்பதில் பெருமைப் படுவோம். அவருக்கு இன்று பிறந்த நாள். மொரார்ஜியின் காலத்தில் உண்மையாகவே தேனாறும், பாலாறும் ஓடத் தான் செய்தது. ரேஷன் கடைகளில் கூட்டத்தைக் காண முடியாது. எல்லா விலைவாசிகளும் கட்டுக்கடங்கி இருந்தன. ரயிலில் மூன்றாம் வகுப்பை ஒழித்துக் கட்டிவிட்டு இரண்டாம் வகுப்பை மட்டும் வைத்துக் கொண்டு அந்தப்பயணிகளுக்கும் வேண்டிய செளகரியம் செய்துகொடுக்கப் பட்டது இவர் ஆட்சியில் தான். எச்.எம்.படேல் என்ற ஒரு ஐசிஎஸ் அதிகாரி, நடுத்தரக் குடும்பஸ்தரை தைரியமாக நிதி மந்திரியாகப் போட்டார். வாயில் வெள்ளி ஸ்பூனோடு பிறக்காத காரணத்தால் அவரும் நடுத்தர, பாமர ஜனங்களுக்கான பட்ஜெட்டைப் போட்டார். அது நம் பொருளாதார மேதைகளால் குமாஸ்தாவின் பட்ஜெட் என விமரிசிக்கப் பட்டது. ஆனால் பண வீக்கம் என்னமோ கட்டுக்குள் இருந்ததை எவரும் பாராட்டவில்லை. கீழே திரு இன்னம்புராரின் மொரார்ஜி பற்றிய கட்டுரை வழக்கம் போல் பகிர்ந்திருக்கிறேன்.

இந்தியா கண்ட ஒரே நாணயமான பிரதமர். உண்மையாக நாட்டு மக்களை முன்னேற்ற நினைத்த பிரதமர். இவரின் ஆட்சிக் காலத்தில் நானும் இருந்திருக்கிறேன் என்பதை ஒரு பெருமையாகவே நினைக்கிறேன். நாம் நினைத்து நினைத்துப் பெருமைப் பட்டுக்கொள்ளும் ஒரே பிரதமர். தன் சொந்தக் குழந்தைக்குக் கூட சிபாரிசு செய்யாத மனிதர். தன் பதவியை எந்த விதத்திலும் துர் உபயோகம் செய்யாத ஒரே மனிதர். இன்னும் எத்தனையோ சொல்லிக் கொண்டே போகலாம்.கேட்பார் பேச்சைக் கேட்டுச் செளத்ரி கெடுத்தார் எல்லாவற்றையும். எளிமை, பொறுமை, பணிவு, எதற்கும் கலங்காத திட சித்தம். மொத்தத்தில் ஸ்தித ப்ரக்ஞர் என்பதற்குத் தகுதியான ஒரே நபர்.

எங்கு காண்போம் இவரைப் போல் இனி??


*************************************************************************************











அன்றொருநாள்: ஃபெப்ரவரி 29:

ரிக்கார்டு மனிதர்!

இன்றைய தினம் ஜனித்தவர்களுக்கு நான்கு வருடங்களுக்கு ஒரு முறை தான், ஜன்மதினம். அதுவே ஒரு ரிக்கார்டு. ஸ்வபாவமோ, பாவனையோ, அவரது ‘ராஜரிஷித்துவம்’ மற்றொரு ரிக்கார்டு; ‘நான் தான் ‘எவெர்’ ரைட்டு’ சுயச்சான்று மற்றொரு ரிக்கார்டு; கடிவாளமில்லாத, இடை விடாத, பிடிவாத எவெரஸ்ட் இவர் என்பது மற்றொரு ரிக்கார்டு; ‘வாக்கு சுத்தம்’ என்றால், வெட்டு ஒன்று: துண்டு பனிரண்டு! அதுவும் இடம், பொருள், ஏவல் பொருட்படுத்தாமல். இவர் பிரதமர் பதவி ஏற்றவுடன் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வாழ்த்துக்கூற வந்தார். தலைமை நீதிபதி பிரதமரை காண வருவது முறையன்று என்று மொழிந்தார்,இவர். இதுவும் மற்றொரு ரிக்கார்டு; உள்குத்து பகைவர்களால், ‘இது ஒரு கிறுக்கு/ நூறாம் பசலி/குரங்கு பிடி/... என்று அன்றாடம் சகஸ்ர நிந்தனை செய்யப்பட்டது, மற்றொரு ரிக்கார்டு; ‘சிறுநீராமுதம்’ பருகுவது மற்றொரு ரிக்கார்டு; படித்தது விஞ்ஞானம்; அவருக்கு பிடித்தது மெய்ஞ்ஞானமும், யோகமும். அதுவும் மற்றொரு ரிக்கார்டு; 21 வயதில் பிரிட்டீஷ் சர்க்காரின் உயர்பதவி -33 வயது வரை; அதையும் மற்றொரு ரிக்கார்டு என்று சொன்னால் மிகையாகாது. ஒரு காந்தியை நம்பி, அந்த பதவியை தொலைத்ததும், இன்னொரு காந்தியை நம்பி(?) அண்டி வந்த அரசியல் பதவியை தொலைத்ததும், மற்றொரு ரிக்கார்டு. இந்தியாவின் உயரிய விருது ‘பாரத ரத்னா’; பாகிஸ்தானின் உயரிய விருது ‘நிஷான் எ பாகிஸ்தான்’ இரு விருதுகளையும் பெற்ற பாரதமாதாவின் மைந்தன் இவர் தான் என்பதும் ஒரு ரிக்கார்டே.

உச்சகட்ட ரிக்கார்டு: 1977-79ல் இந்திய பிரதமராக இருந்த போது, உலக தேசீய தலைவர்கள் எல்லாரையையும் விட வயதில் மூத்தவர்் என்பதே. அந்த காலகட்டத்தில் ஒரு சின்ன விமான விபத்து. எதோ அன்றாட சம்பவம் போல் பாவித்து, இறங்கி வந்து விட்டார். ஒரு நிருபர் கேட்டதற்கு பதில்: பல் செட் உடைந்து விட்டது! (பேராசிரியரை நினைத்துக்கொண்டேன்!) இத்தனை சாதனை படைத்த ரிக்கார்டு மனிதர், நழுவ விட்ட ரிக்கார்டு: நூற்றாண்டு! இவருடைய பிறந்த தினம் 29 02 1896. மறைந்த தினம் 10 04 1995. பத்து மாதம் பொறுக்க மாட்டாரோ! இந்த மாஜியினால், அரசுக்கு செலவு, மாளிகை உபயம், தண்டச்செலவு ஒன்றும் இல்லை. வேலை போன பின், மும்பையில் மகனில் அபார்ட்மெண்டில், எளிமையாக வாழ்ந்தார். அது கூட ஒரு ரிக்கார்டு தான்.

எனக்கு இவரிடமிருந்து ஒரு ஏகலைவ பாடம். இவர் உதவி பிரதமராகவும், நிதி அமைச்சராகவும் இருந்த கால கட்டத்தில், நான் குஜராத் அரசு பணியில். இவரின் ஆளுமைக்கு அடியிலிருந்த சுங்க இலாக்காவோடு லடாய். இவருடைய பரம சிஷ்யரான ஹிது பாய் தான் எங்களுடைய முதல்வர். அவர் ஒரு நாள் என்னை கூப்பிட்டார். கையில் உதவி பிரதமரின் இரு வரி கடிதம். ‘ இன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது. உமது வழக்குக்கு வெற்றி. வாழ்த்துக்கள்’ அதன் பின்னணி, சுங்க இலாக்காவின் மீது நான் தொடுத்த தர்மயுத்தம். அது வெற்றி பெற்றால், எல்லா மாநிலங்களும் கோடிக்கணக்கில் பயன் அடையும். வழக்கோ இழுத்தடிக்கப்பட்டது. இவருக்கு, முதல்வரிடமிருந்து அனுப்புவதாக, ஒரு கடிதம் தயார் செய்து கொண்டு போய், முதல்வரிடம் போய் நின்றேன், சில மாதங்களுக்கு முன். ‘வேறு வினை வேண்டாம். சிபாரிசா கேட்கிறாய் என்று என்னை கோபிப்பார். நீ இலாக்கா-யுத்தம் நடத்து,ராஜா.’ என்றார், 'இ'ங்கிதமாக! அப்படியே நடந்தது. ஆறு மாத தாமதம். கெலித்த பின் தான் மொரார்ஜி ரஞ்சோத்பாய் தேசாய் ( இப்போது தான் பெயர் வருகிறது) வாழ்த்து அனுப்பினார். நோ சிபாரிசு என்றால் காந்திஜி, ராஜாஜி, மொரார்ஜி. இப்போதெல்லாம் 2ஜி! சிபாரிசு கந்தரகூளம். ஆண்டவா! எங்கள் நாட்டை இப்படி உருக்குலைத்து விட்டாயே. சிபாரிசு என்பது சர்வசாதாரணம். ஆனால், அது விஷவித்து. முதலில் குமாஸ்தா வேலைக்கு சிபாரிசு. அதுவே காலப்போக்கில் 2ஜி பகல் கொள்ளையாயிற்று. சிபாரிசுகளை தவிர்ப்பதில் மொரார்ஜி தேசாயின் கறார் பாலிசியில் ஒரு பின்னம் கூட மற்றவர்களால் காப்பாற்ற முடிவதில்லை.

ஐயா குஜராத்தின் பதேலி என்ற கிராமத்தின் மண். தந்தை பள்ளி ஆசிரியர். பலமுறை சிறை என்றவர். பழைய பம்பாய் மாகாணத்தில் அமைச்சராகவும், முதல்வராகவும் இருந்தவர். மத்திய அரசில் வணிகம் & தொழில் இலாக்கா அமைச்சராகவும், நிதி அமைச்சராகவும் இருந்து, கட்சித்தொண்டுக்காக, பதவியிலிருந்து விலகி இருந்து, பிரதமர் பதவிக்கு 1964லிலும் 1966லும் போட்டியிட்டு தோல்வியுற்றார். எமெர்ஜென்சியின் போது கைதும் செய்யப்பட்டார். அது காலாவதியான பின் 1977ல் ஜனதா கட்சி பிரதமரானார். உள்குத்து, அவரை 1979ல் விலக வைத்தது. அவருடைய மகனால் இவருக்கு கெட்ட பெயரும் வந்தது. ஆதாரத்துடன் குற்றச்சட்டுக்கள் வந்ததாகத் தெரியவில்லை. இவருக்கும், அமெரிக்க வேவுத்துறைக்கும் தொடர்பு இருந்ததாக, ஸேமூர் ஹெர்ஷ் என்ற பிரபல இதழாளர் கூறினார். அதை ‘பைத்தியக்காரத்தனம்’ என்ற மொரார்ஜி ஒரு மிலியன் டாலருக்கு நஷ்ட ஈடு வழக்கு ஒன்று தொடர்ந்தார், அமெரிக்காவில். இருதரப்பிலும், உருப்படியாக ஒன்றும் நிரூபிக்கப்படவில்லை.

இவருடைய டாப் ரிக்கார்ட்: 1966லியே திருமதி.இந்திரா காந்தி ஆளுமை புரிய லாயக்கு இல்லை என்று சொன்னது. நின்னா ரிக்கார்ட்! உக்காந்தா ரிக்கார்ட்! அது தான் மொரார்ஜி ரஞ்சோத்பாய் தேசாய்!

இன்னம்பூரான்

29 02 2012

http://www.timescontent.com/photos/preview/13412/Indira-Gandhi-Morarji-Desai.jpg



உசாத்துணை:

http://www.independent.co.uk/news/people/obituary-morarji-desai-1615165.html

18 comments:

  1. ஃபிப்ரவரி 29 இல் பிறந்ததினம் வருபவர்கள் பாக்கியவான்கள்...அவ்வளவு சீக்கிரம் வயது ஏறாதே.....!! :)))

    மேலேயே லால்பகதூர் பற்றியும் சொல்லி விட்டு கீழே சிபாரிசுகளைத் தவிர்த்த ஒரே பிரதமர் என்றால் என்ன நியாயம்...!

    இவர்கள் காலத்தில்தான் ஹோட்டல்களில் 'ஜனதா சாப்பாடு' என்ற ஒன்று வந்ததாக நினைவு...( அப்பாடா...பின்னூட்டக் காரர்களுக்கு ஒரு விஷயமாவது விட்டு வைத்திருக்கிறீர்களே....!!)

    இன்னம்பூரார் கட்டுரை பிரமாதம். அந்தக் கேஸ் பற்றி அவர் இன்னும் விளக்கமாக முன்னர் எழுதி இருக்கிறாரா...பாரதத்தின் சிறந்த புத்திரர்களைப் பற்றி நினைவு வைத்து எழுதிய உங்கள் இருவருக்கும் வணக்கங்கள். இன்னம்பூரார் கட்டுரையில் சில வார்த்தைகள் புன்னகைக்க வைத்தன.

    அட, ஆமாம்...கமெண்ட் பாக்ஸ் தோற்றம் மாறி தொல்லை தருகிறதே....

    ReplyDelete
  2. hehehe, Sriram, திருத்திட்டேன். கமென்ட் பாக்ஸில் பின் தொடரும் ஆப்ஷனே இல்லை! :))))))

    ReplyDelete
  3. நீங்க இப்போத் தான் பார்க்கறீங்க போல! அது என்னமோ கூகிள் எல்லாத்தையும் முதல்லே எனக்கு அனுப்பிடுது! பிள்ளையாரோட சிநேகிதின்னோ என்னமோ?? :P :P:P

    ReplyDelete
  4. தில்லியில் இருக்கும் லால்பகதூர் சாஸ்திரி நினைவு இல்லத்திற்கு வரும் நபர்கள் மிகக் குறைவு....

    ReplyDelete
  5. மொரார்ஜி வேறே எதுக்கோ பேமசாச்சே.. சட்னு ஞாபகத்துக்கு வர மாட்டேங்குதே.
    ஐபிஎம் கோகோ கோலா கம்பெனிகளை இந்தியாவிலந்து துரத்தினது இவரோட சாதனைனும் நினைக்கறேன் - சரியா?

    ReplyDelete
  6. உண்மையானவர்
    நேர்மையானவர்
    எளிமையானவர்
    அதிகார துஷ்பிரயோகம் செய்யாதவர்
    பண்பானவர்,
    கண்டிப்பானவர்
    பொறுமையானவர்
    எதற்கும் கலங்காதவர்
    சரி, ஸ்தித பிரக்ஞர்..

    மொத்தத்தில் இவர் தெய்வப்பிறவியாகவே இருந்து விட்டு போகட்டும், என்றாலும் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவராயிற்றே.. இந்த நாட்டின் பிரதமர் பதவி என்பது நேருவின் (இந்திராவின்) குடும்பச் சொத்தாயிற்றே.. அதற்கு போய் ஆசைப்படலாமோ.. ஏதோ அவர்களாக போனால் போகின்றது என முன்வந்து பிச்சை போட்டால்தான் உண்டு என்பது தெரியாமல் போட்டி போட்டால் எப்படி?

    நியாயம் கேட்கிறேன் . பதில் சொல்லுங்கள்..

    ReplyDelete
  7. //எங்கு காண்போம் இவரைப் போல் இனி??//

    இந்த மாதிரி இருப்பவர்களை பார்ப்பது ரொம்ப கஷ்டம்தான்.அருமையான பதிவு,மாமி.

    ReplyDelete
  8. கமெண்ட் பாக்ஸ் வேறொரு செட் அப்பில் சப்ஸ்க்ரைப் வாய்ப்பு இருக்கிறது! (பதிவோடு சேர்ந்து, பதிவின் அடியிலேயே பின்னூட்டம் இடும் வாய்ப்பு தரப்பட்டுள்ள அமைப்பில்)

    ReplyDelete
  9. சாஸ்திரி போன்ற தலைவர்கள் வாழ்ந்த நாடுதானா இது:(? நல்ல பதிவு. இன்னும்பூரான் சார் கட்டுரை ஏற்கனவே வாசித்திருந்தேன்.

    ReplyDelete
  10. ஶ்ரீராம், நீங்க சொன்ன ஆப்ஷன்லே கமென்ட் கொடுக்கத் திறக்கவே இல்லை. உள்ளேயும் அது இயலாதுனு மெசேஜ் இருக்கு. :(((((

    ReplyDelete
  11. Embedded below post
    The embedded comment form can not be used if you have Post Pages disabled.

    போஸ்டுக்குக் கீழே கொடுக்கும் ஆப்ஷனைக் கொடுத்ததுக்கு மேற்கண்ட மாதிரி செய்தி வந்திருக்கு. நான் எதையும் டிசேபிள் பண்ணலை; அதனால் என்னனு புரியலை. பாப் அப் வின்டோ கொடுத்துப் பார்த்தால் அதிலும் பின் தொடரும் ஆப்ஷன் இல்லை. :(((((

    ReplyDelete
  12. எல்லாருக்கும் பதில் சொன்னாப் போகுமானு தெரியலை; அதான் யோசிச்சேன், பதில் சொல்ல. :( கொஞ்சம் அசெளகரியமாகவே இருக்கு, இந்தப்பின் தொடரும் வசதி இல்லாமல் போனது!

    ReplyDelete
  13. வாங்க வெங்கட் நாகராஜ், டில்லியில் இருக்கீங்களா? விஜய்காட் நாங்க போயிருக்கோம். :)))

    ReplyDelete
  14. ஆமாம், அப்பாதுரை, இப்போத் தான் இது குறித்த கடுமையான விமரிசனங்களை முன் வைத்துவிட்டு வந்தேன்.

    இந்த கோகா கோலாவும் பெப்சியும் நம் நாட்டுக் குளிர்பானங்களான மாப்பிள்ளை விநாயகர், காளி மார்க், வின்சென்ட் போன்றவற்றையும் காஞ்சீபுரம் பன்னீர் சோடாவையும் அடியோடு ஒழித்ததோடு அல்லாமல் பொருளாதாரம், நிலத்தடி நீர், கலாசாரம், பண்பாடு என எல்லாவற்றையும் உறிஞ்சுகிறது. :(((( எங்கே போய் முட்டிக் கொள்ள!

    ReplyDelete
  15. அட?? திவாகர்?? இங்கே?? அதிசயம் ஆனால் உண்மை. வரவுக்கு முதலில் நன்றி

    அடுத்து கேள்விக்கு பதில்

    அதானே! பட்டா எழுதிக் கொடுத்தாச்சே ஆறாம் தலைமுறையும், அடுத்து ஏழாம் தலைமுறையும் கூட ரெடியாகிக் கொண்டு இருக்கே. :P :P :P

    ReplyDelete
  16. வாங்க ராம்வி. வரவுக்கு நன்றி

    ReplyDelete
  17. வாங்க ரா.ல. வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

    ReplyDelete
  18. இதுவரையில் இருந்த பிரதமமந்திரிகளில், எனக்குப் பிடித்தவர்கள்: நேரு, சாஸ்திரி, மொரார்ஜி, வாஜ்பாய்.

    ReplyDelete