எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 17, 2013

லக்னோ னு பேர் வைச்சால் லக்கும் நோ தானா? :)

கங்கைக்கரையில் பார்க்க வேண்டியவற்றைப் பார்த்துவிட்டு அங்கிருந்து லக்னோ போக வேண்டிக் கிளம்பினோம்.  கான்பூருக்குள் நுழைந்து தான் செல்ல வேண்டும். ஆகவே மறுபடியும் போன வழியிலேயே கொஞ்ச தூரம் சென்று பின்னரே லக்னோ செல்லும் வழியைப் பிடிக்க வேண்டி இருந்தது.  கான்பூரில் ஒரு இடத்தில் அருமையான லஸ்ஸி வாங்கிச் சாப்பிட்டோம்.  20 ரூபாய்க்கு மிக அருமையான லஸ்ஸி. வண்டியில் ஏ.சி. போடச் சொன்னால் டிரைவர் கை ஏசி ஸ்விட்சில் அரை நிமிஷம்  நிற்கும். போட்ட பின்னர் அடுத்த அரை நிமிஷத்திலேயே அதை அணைத்துவிடுவார்.  ஜன்னல் கதவுகளோ சார்த்தியாச்சு ஏசினு நினைச்சு.  அவரானால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு இந்த விளையாட்டையே விளையாடினார். சொல்லிச் சொல்லி அலுத்துப் போய்ப் பின்னர் ஏசியே வேண்டாம்னு அறிவிப்புச் செய்துவிட்டு ஜன்னல் கதவுகளைத் திறந்து கொண்டோம்.   பின் மாலையில் குளிர் எட்டிப் பார்க்க ஆரம்பித்திருந்தாலும் அப்போது வெயில் தாக்கியது. ஆனால் இவரோ ஏசி போட மனமில்லாமல் இருக்கிறாரே!  பேசினது என்னமோ ஏசி வண்டினு தான்! :(

ஒரு வழியா மதியம் ஒரு மணிக்கெல்லாம் லக்னோ வந்துவிட்டோம்.  லக்னோ ஏர்போர்ட்டுக்கு அருகேயே தங்குமிடம் பார்க்க வேண்டி வண்டியை மெதுவாக விடச் சொன்னோம்.  டிரினிடி ஸ்டார் ஹோட்டல் அருகே திரும்பிய ஒரு தெருவில் மெயின் ரோடின் மற்றொரு பகுதியில் ஒரு ஹோட்டல் கண்ணுக்குத் தென்பட்டது.  அங்கே இறங்கிப் போய் விசாரிக்கலாம்னு ரங்க்ஸ் கிளம்பினார். இந்த ஹோட்டலும் மாடியில் தான்! லிஃப்ட் கிடையாது.  தெருவில் இருந்து மாடி ஏறி மேலே செல்ல வேண்டும்.  சென்றவர் வர நேரம் ஆகவே நானும் மாடி ஏறினேன்.  இரண்டு அறை காலி.  வாடகை ஆயிரத்துக்கும் மேலே சொன்னார்.  சாப்பாடு  கிடைக்கும்னு சொன்னார்.  அலுப்பிலும், சலிப்பிலும் இருந்த நாங்கள் சரினு ஒத்துக் கொண்டு ஒரு அறையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.  அதுக்குள்ளே டிரைவரும் மேலே வரவே ஹோட்டல் பையர்களைக் கூட அனுப்பி சாமான்களை எடுத்துவரச் செய்தோம்.  அறையில் சாமான்களை வைத்துவிட்டு டிரைவர் பணத்துக்கு நிற்க, ஹோட்டல் பையர்களிடம் நான் நாலு தவா ரொட்டியும், மிக்சட் காய்களும், இரண்டு லஸ்ஸியும் வேணும்னு சொன்னேன்.

அதுக்குள்ளே இங்கே தகராறு.  டிரைவர் போட்ட கணக்கும், ரங்க்ஸ் போட்ட கணக்கும் ஒன்றுக்கொன்று இடிக்க, இருவருக்கும் வாக்குவாதம்.  டிரைவர் டவேரா வண்டி ரேட்டில் போட்டு இருக்க, இவரோ இன்டிகா அதுவும் நான் ஏசி ரேட்டுக்குப் போட இருவருக்கும் ஒத்துவராமல் ஹோட்டல் ரிசப்ஷனில் இருந்து ஆட்கள் எல்லாம் வந்துட்டாங்க.  எவ்வளவோ எல்லாரும் எடுத்துச் சொல்லியும் கூட ஐநூறு ரூபாய் தருவதாக ரங்க்ஸ் சொல்லியும் டிரைவர் ஒத்துக்கொள்ளவில்லை.  தான் சொன்னது தான் எனப் பிடிவாதமாக நிற்க, ஒருவழியாய் அவர் கேட்ட தொகையைக் கொடுத்து அவரை அனுப்பி வைச்சார் ரங்க்ஸ்.  சாப்பாடு என்ன ஆச்சுனு  ரங்க்ஸ் என்னைக் கேட்க, நான் "சொல்லி அனுப்பி இருக்கேன்," என்று சொன்னேன்.  இரண்டரை மணி வாக்கில் ஒரு சின்ன ப்ளாஸ்டிக் தட்டில் நாலு ரொட்டி, ஒவ்வொன்றும் உள்ளங்கை அகலம் தான் ஒரு அலுமினியம் ஃபாயில் பேப்பரில் சுத்தி ஒரு பையர் கொண்டு வந்து கொடுத்தார்.

"இது என்ன?(யே க்யா ஹை?)

"சாப்பாடு!" (ஆப் கே லியே)

நாங்க தவா ரொட்டி கேட்டிருந்தோமே! ( ஹம்னே தவா ரொட்டி மாங்தே தே)

அதான் இது! (வோ ஹி ஹை!)

எத்தனை பேருக்கு? (கித்னே லோகோங்கோ?)

நாலு ரொட்டி கொடுத்தாங்க!( சார் ரோட்டி தியா தா)

சரி, இன்னொரு ப்ளேட் இல்லையா? ஏன்?( அச்சா, தூஸ்ரா ப்ளேட் நஹி தியா! க்யோ?)

இன்னொரு ப்ளேட்டா? (தூஸ்ரா ப்ளேட்?!!!!!!!!!!!!!!!!!!!) இத்தனை ஆச்சரியப்பட்டார் அந்தப் பையர் இன்னொரு ப்ளேட் கேட்டதுக்கு! 

சரி, காய் ஏதும் இல்லையா?  ஊறுகாய்? (சப்ஜி குச் நஹி தியா? அசார் பி நஹி!)

என்ன காயா, ஊறுகாயா? (க்யா?  சப்ஜி? அசார்?) இந்த உலகத்திலேயே முதல்முறையாக ரொட்டிக்குக் காய் அல்லது ஊறுகாய் கேட்ட முதல் மனிதர்கள் நாங்க தான் என்பது போல் அந்தப் பையர் விசித்திரமாய் எங்களைப் பார்த்தார். 

போய் இன்னொரு தட்டும் சப்ஜியும் கொண்டு வா!(ஜாகே  ஏக் ப்ளேட் அவுர் சப்ஜி லாவோ!)  அரை மனதாகக் கிளம்பிச் சென்றான்.

தலையில் அடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தோம்.  இதுக்குள்ளாக மணி மூணும் ஆகிவிட்டது.  லஸ்ஸியை இன்னொருத்தர் கொண்டு வந்து கொடுத்தார்.  ரிசப்ஷனில் இருந்து சாப்பாடு வந்துடுச்சானு கேட்டு தொலைபேச, நாங்க விஷயத்தைச் சொல்ல அவங்க சொல்லி இருப்பாங்க போல, முன்னர் ரொட்டி கொண்டு வந்து கொடுத்த அதே பையர் மீண்டும் வந்து, "ஆப் கா சப்ஜி பனா ரஹா ஹை! அபி மத் காவோ!" னு சொல்லி, சப்ஜி பண்ணிட்டு இருக்காங்க, சாப்பிடாதீங்கனு சொல்லிட்டுப் போனார்.  அந்த உள்ளங்கை அளவு ரொட்டி எங்களுக்கு ஒரு வாய்க்குக் கூடப் போதாது. ஆனால் வேறு வழியில்லாமல் இன்னொரு அரை மணிக்கும் மேல் காத்திருப்புக்குப் பின்னர் சப்ஜி ஒரு சின்னக் கிண்ணத்தில் வந்தது.  சாப்பாடின் விலை என்ன என்று பார்த்தால் ஒரு ரொட்டி பனிரண்டு ரூபாய் என்றும் ஒரு சப்ஜி 110 ரூபாய் என்றும் போட்டிருந்தது.  வயிற்றெரிச்சல்! அரை வாய்க்குக் கூட வராத சாப்பாடு கிட்டத்தட்ட 200 ரூபாய்! :(

ஒரு வழியாய்ச் சாப்பிட்டு முடித்து ரிசப்ஷனுக்குப் போய் மறுநாள் நைமிசாரண்யம் போக வண்டிக்கு ஏற்பாடு பண்ணும்படியும், அன்று மாலை கொஞ்சம் கடைத்தெருவுக்குப் போக வேண்டி இருப்பதால் அதுக்கு ஆட்டோ வேண்டும் என்றும் கேட்டோம்.  ஆட்டோ ஹோட்டலிலேயே கிடைக்கும் என்றும் சொன்னதோடு ஒரு மணி நேரத்துக்கு நூறு ரூபாய் என்றும் சொன்னார்கள்.  அந்த ஒரு மணி நேரத்துக்குள் நாம் போய்ச் சேர வேண்டிய இடம் போக முடியுமானு தெரியலை! :( ஆனால் வேறு வழி இல்லை.  சரினு ஒத்துக் கொண்டோம். அதுக்குள்ளே கார்க்காரரும் வர வண்டிக்குப் பேசினோம். சின்ன வண்டி கிடைக்காதுனு சொல்லிப் பெரிய வண்டி தான் கிடைக்கும்னு சொல்ல, எப்படியானும் சின்ன வண்டியையே ஏற்பாடு செய்து அனுப்பச் சொல்லிட்டு ஆட்டோ வர கடைக்குக் கிளம்பினோம்.

கடைத்தெருவில் அரைமணி நேரத்தில் வேலை முடிய ஆட்டோக்காரர் ஊரைச் சுத்திக்காட்டவா?  மாயாவதி செய்த யானைச் சிலைகளைக் காட்டவானு கேட்க, எதுவும் வேண்டாம் ஆளை விட்டால் போதும்னு சொல்லிட்டு ஹோட்டலுக்கு வந்தோம்.  மத்தியானச் சாப்பாடு சரியில்லாததால் இரவுக்குச் சாப்பிட வேண்டி ஹோட்டலிலேயே தந்தூர் ரொட்டிக்கும் சப்ஜிக்கும் சொன்னோம்.  வெளியே இருந்து வந்ததும் ஏழு மணிக்குச் சொன்னது வர இரவு ஒன்பதரை ஆகிவிட்டது.  அதுவும் தந்தூர் ரொட்டி ஒரு பக்கம் காந்திப் போய் இருக்க அந்தக் காந்தலைப் பிய்த்துப் போட்டுவிட்டுக் கொடுத்திருக்காங்க.  ரொட்டியில் சத்தே இல்லை. சொல்லப் போனால் ஒண்ணுமே இல்லை. இரு பக்க மடிப்பான ரொட்டியில் காந்தல் பாகம் போக மெலிதாக ஒருபக்க ரொட்டியைக் கற்பனை செய்துக்கோங்க. அதான் அன்றைய இரவு உணவு. சாதாரணமாகத் தந்தூர் ரொட்டி மிகப் பெரிதாக இருக்கும்.  ஒரு ரொட்டியை இரண்டு பாதியாகவே கொடுப்பாங்க. ஒரு பாதியே ஒரு சப்பாத்தி அளவுப் பெரிதாக இருக்கும்.   ஒருத்தருக்கு இரண்டு தந்தூர் ரொட்டியே அதிகம். ஆனால்  இங்கேயோ நேர்மாறாக இருந்தது. 

நல்லவேளையா ஏசி போட்டாங்க.  ஏசி கன்ட்ரோல் ஸ்விட்சை அணைக்கலை.  இரவு நல்லாத் தூங்கினோம்.  காலை எழுந்து  தேநீருக்குச் சொல்ல வேண்டி ரிசப்ஷனுக்குக் கூப்பிட்டதில் பாட் டீ இருக்குனு சொல்லவே இவர் பாட் டீனா நாலு கப் இருக்கும் அது போதும் இரு வேளைக்குனு அதை ஆர்டர் பண்ணினார்.  காலை ஆறரை மணிக்குக் கொடுத்த ஆர்டர் ஏழரைக்கு வந்தது.  அப்போவும் ஒரே ஒரு டீ கப் மட்டும் தான் எடுத்து வந்தார் அதே பையர்.  இன்னொரு கப் வேண்டாமானு கேட்டால் மீண்டும் அதே விசித்திரமான பார்வை.  பொதுவா பாட் காஃபி, பாட் டீ வாங்கினால் ஒரு பாட் டிகாக்‌ஷன், ஒரு பாட் பால், சர்க்கரைக் கிண்ணம், ஸ்பூன்கள் இரண்டு, நாலு கப் கொடுப்பாங்க.  நாங்க அப்படித் தான் பார்த்திருக்கோம். இந்த மாதிரி ஒரு பாட் டீக்கு ஒரே ஒரு கப்பைக் கொண்டு வந்து பார்த்ததே இல்லை.  அதுவும் பஞ்சாபி ஹோட்டலில்!  மறுபடி தலையில் அடித்துக் கொண்டு இன்னொரு கப் கொண்டு வரச் சொல்லிட்டு டீயைக் குடித்தால் சரியா இரண்டே இரண்டு கப் தான் இருக்கு!  இதிலும் ஏமாற்றல்! :(

எல்லாம் முடிச்சுக் குளிச்சு முடிச்சு நைமிசாரண்யம் கிளம்பினோம்.  இங்கே காலை ஆகாரம் வைத்துக் கொண்டால் இன்னிக்குக் கிளம்ப முடியாது. அவ்வளவு நேரம் பண்ணுவாங்கனு வெளியே சாப்பிட்டுக்க முடிவு செய்து கிளம்பினோம்.  ரிசப்ஷனில் ஆள் மாறி இருந்தார்.  அவர் எங்களை விசாரித்துவிட்டு அன்றைய வாடகையைக் கேட்க அதைக் கொடுத்துட்டு, கீழே வண்டி வந்திருக்கிறதாச் சொல்லவும் கீழே இறங்கினோம்.  பெரிய வண்டி தான் வந்திருந்தது. :( ஆனால் கூடவே ஏற்பாடு செய்தவரும் வந்து சின்ன வண்டி கிடைக்கலைனும், சின்ன வண்டித் தொகையே கொடுக்குமாறும் சொல்லிவிட்டு டிரைவரை அறிமுகம் செய்துவிட்டுக் கிளம்ப சரினு நாங்களும் வண்டியில் ஏறி நைமிசாரண்யத்துக்குக் கிளம்பினோம்.


19 comments:

 1. //சாப்பாடின் விலை என்ன என்று பார்த்தால் ஒரு ரொட்டி பன்னிரண்டு ரூபாய் என்றும் ஒரு சப்ஜி 110 ரூபாய் என்றும் போட்டிருந்தது. வயிற்றெரிச்சல்! அரை வாய்க்குக் கூட வராத சாப்பாடு கிட்டத்தட்ட 200 ரூபாய்! :( //

  அடடா, அதுபோல ஒரு 10 ப்ளேட் ஆர்டர் செய்து, வயிற்றுக்கு முழுத் திருப்தியாக சாப்பிட்டிருக்கலாம் !!!!!

  ரூபாய் 2000 தான் ஆகும். பணம் இன்று போகும் .. நாளை வரும் !

  இன்று போகும் சரி, நாளை எங்கிருந்து வரும்ன்னு கேட்காதீங்கோ, எனக்குத் தெரியாது. எல்லோரும் அப்படிச்சொல்லிச்சொல்லி கேள்வி மட்டுமே ;)))))

  ReplyDelete
 2. தமிழர்கள் எவ்வளவோ தேவலாம் போலேருக்கே....இப்படி ஏமாற்றுகிறார்கள்...

  ReplyDelete
 3. தொடரை தொடர்ந்து படித்து வருகிறேன், கீதா - பின்னூட்டம் தான் போடவில்லை.
  எனக்குள் ஒரு கேள்வி: நீங்கள் ஏன் இந்த மாதிரி தனியாகப் போக வேண்டும். packaged tour-இல் போகலாமே. தங்க இடம், சாப்பாடு இவை பற்றிய கவலை இல்லாமல் எல்லா இடங்களையும் சேவித்து வரலாமே!

  ReplyDelete

 4. என் அண்ணா பெண் லக்னோவில் இருந்தபோது அங்கு வரச் சொல்லி நிறையவே தொலை பேசினாள்.வெரி இண்டெரெஸ்டிங் இடம் என்றெல்லாம் கூறீருந்தாளே. எங்களுக்கு நோ லக் என்று இருந்துவிட்டோம்.

  ReplyDelete
 5. வாங்க வைகோ சார், சாப்பிட்டிருக்கலாம் தான்! பணம் தான் யார் கொடுப்பாங்கனு யோசிச்சுட்டு விட்டுட்டோம்! :))))

  ReplyDelete
 6. நன்றி டிடி. செல்லினம் இன்ஸ்டால் பண்ணினால் அன்ட்ராய்டில் தமிழில் எழுதலாம்னு செல்லி, சேச்சே, சொல்லிக் கேள்வி. :))))

  ReplyDelete
 7. வாங்க ஶ்ரீராம், எல்லா இடங்களிலும் ஏமாற்றுதல் உண்டு. அதிலே தமிழ்நாடு விதிவிலக்கு இல்லை. :))) இங்கே திருச்சியிலும் ஏமாத்தல் பயங்கரமாவே இருக்கு! :(

  ReplyDelete
 8. வாங்க ரஞ்சனி, பாகேஜ் டூரில் நாங்க பார்த்தவரை சித்திரகூடம், நைமிசாரண்யம் இல்லை. இப்போத் தான் கொஞ்ச நாட்களாக பெங்களூரில் ஒரு ட்ராவல்ஸ் விளம்பரம் சங்கரா தொலைக்காட்சியில் வருது. அதோடு நாங்க பத்ரிநாத், காசி, கயா போன்ற இடங்கள் போனப்போவும், கிருஷ்ண ஜன்மபூமி போனப்போவும் தனியாத் தான் போனோம். ஒண்ணும் பிரச்னை இல்லை.

  அதோடு சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் தங்குமிடம் கொடுப்பது அநேகமாய் டார்மிடரி, அல்லது பள்ளி வளாகம், கல்யாண மண்டபம் போன்ற இடங்கள் தான். அங்கே எங்களால் கீழே படுக்க இயலாது என்பதோடு கழிவறை வசதியும் தேவை. முக்கியமாய் இவற்றுக்காகவே பல சுற்றுலா நடத்துநர்களிடமும் பேசிய பின்னரே செய்த முடிவு இது.

  ReplyDelete
 9. வாங்க ஜிஎம்பிசார், ஒரு முறை போயிட்டு வாங்க. :))))

  ReplyDelete
 10. @டிடி, http://sellinam.com/

  இங்கே போய்ப் பாருங்க. உங்களுக்கே தெரிஞ்சிருக்கலாம், என்றாலும் நினைவூட்டலுக்காக.... :)))))

  ReplyDelete
 11. "லக்னோ னு பேர் வைச்சால் லக்கும் நோ"
  சாப்பாடும் இல்லாமல் மிகுந்த சிரமமான யாத்திரைதான்.

  ReplyDelete
 12. லக்கும் நோ .. பின்றீங்களே.
  பயணம் போனா பாதி இடத்தில் சாப்பாடு கஷ்டம் தான். உடல் நலத்துக்கும் கேடு.
  ஏமாற்றும் டாக்சிக்காரர்களை சுட வேண்டும் என்று சட்டம் இருக்கிறதே தெரியாதா?

  ReplyDelete
 13. வாங்க மாதேவி, பொதுவா வீட்டை விட்டு வெளிக்கிளம்பினாலே வீட்டின் செளகரியங்களை மறந்துடணும் தான். அதுவும் இது போன்ற இடங்களுக்குச் சென்றால்!! :)

  ReplyDelete
 14. வாங்க அப்பாதுரை, உங்களை விடவா? ஏமாற்றும் ஆட்டோக்காரங்க (குறிப்பாச் சென்னை ஆட்டோக்காரங்க) அவங்களுக்குத் தனிச் சட்டம் இல்லையாமா? :))))

  ReplyDelete
 15. ரசித்த தலைப்பு......

  மொத்தமாக கஷ்டப் பட்டு இருக்கீங்க..... :(((

  ReplyDelete
 16. உச்சாடணங்கள் எப்போதும் செம்ம்மையாக அமையவேண்டும். 'லக் நோ' என்று சொன்னால் பின்னெ எப்டி? நம்ம லக்ஷ்மணபுரிக்கு சரியான தற்கால பெயர்: லக்நவ். Lucknow. அப்படி உச்சாடணம் பண்ணியிருந்தால் எல்லாம் கன ஜோராக நடந்திருக்கும்.
  இன்னம்பூரான்

  ReplyDelete
 17. வாங்க வெங்கட், இதெல்லாம் பெரிய கஷ்டம்னு சொல்ல முடியலை. கொஞ்சம் எரிச்சலைக் கிளப்பிய விஷயங்கள்! :)))))

  ReplyDelete
 18. வாங்க "இ" சார், நீங்க சொல்றாப்போல தான் வா.தி.யும் சொன்னார். சரி தான். அப்படித் தான் எடுத்துக் கொண்டிருக்கணும். :))))

  ReplyDelete