எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, October 10, 2014

"மால்குடி டேஸ்!"

சின்ன வயசிலே அதிகம் காமிக்ஸ் படிச்சது இல்லை.  அப்போக்குழந்தைகள் பத்திரிகையாகக் கலைமகள் பதிப்பகம் வெளியிட்டு வந்த "கண்ணன்" பத்திரிகையும், "அம்புலி மாமா" பத்திரிகையும், "கல்கண்டு" துக்கடாக்கள் நிறைந்தது ஆகியவையே.  இதிலே கல்கண்டு எப்படியும் படிச்சுடுவேன்.  கூட இருந்த குடித்தனக்காரங்க வீட்டிலே குமுதம் வாங்கறச்சே கல்கண்டும் வாங்குவாங்க.  அவங்க கலைமகளும் வாங்கினாங்க தான். அப்போ பிரபலமான "வெற்றிலைச் சுருள்" என்னும் தொடர் வந்து கொண்டிருந்தது.  அம்மா விடாமல் படிப்பாங்க! ஆனால் கண்ணன் வாங்கவில்லை.  மஞ்சரி வாங்குவாங்க.  அதையும் விடாமல் படிப்பேன். ஹிஹிஹி, மளிகை சாமான் கட்டி வரும் பேப்பரைக் கூட விடாமல் படிச்சிருக்கேன்.  அம்புலி மாமா பெரியப்பா வீட்டில் வாங்குவாங்க.  அங்கே போகையில் அதுவும் படிக்க முடியும்.  மற்றபடி குழந்தைகள் புத்தகம் என எதுவும் தெரியாது.


ஸ்கூலில் படிக்கிறச்சே தான் "ஸ்வாமியும் நண்பர்களும்" என்னும் புத்தகம் "Swamy and his friends"  என்னும் ஆங்கிலப் புத்தகம் ஆங்கிலம் இரண்டாம் தாளின் பாடநூலாக ஏழாவது படிக்கையிலேயோ என்னமோ வைச்சிருந்தாங்க.  அதை எழுதிய ஆர்.கே.நாராயண் குறித்து அதிகம் அப்போத் தெரியாது.  பின்னர் "கைட்" படம் வந்தப்போ அதைப் பத்திப் பேசினாங்க.  அவரோட கதை தான் என.  அப்பா மட்டும் தான் அந்தப் படம் போய்ப் பார்த்துட்டு வந்தார்.  "கைட்" என் தம்பிக்குக் கல்லூரியில் பி.யு.சி. படிக்கையில் பாடமாக வந்திருந்தது.  எனக்குப் படிக்கத் தடை.  ஆனாலும் தெரியாமல் இன்னொரு புத்தகத்துக்குள்ளே வைத்துப் படித்திருக்கேன்.  பின்னால் தெரிஞ்சு போய் அடி வாங்கினதெல்லாம் இன்னொரு நாள் வைச்சுக்கலாம்.  இப்போ ஆர்.கே.நாராயண் குறித்து.

இவரைக் குறித்து நான் அறிந்ததெல்லாம் கல்யாணம் ஆகி முதல் முதலாய் ராஜஸ்தான் வந்தப்போ தான்.  அப்போத் தான் இவரோட மற்றப் புத்தகங்களும் அறிமுகம் ஆயிற்று.  அப்போத் தான் ஜான் மாஸ்டர்ஸ் புத்தகங்களும் அறிமுகம்.  மால்குடி டேஸ் படிச்சதும் அப்போத் தான். மால்குடினு நிஜம்மாவே ஒரு ஊர் இருக்குனு நினைச்சுப்பேன்.  இல்லைனா லால்குடியைத் தான் பெயரை மாத்தி இருக்காரோனு தோணும்.  அதுக்கப்புறம் குழந்தைகள் எல்லாம் பெரியவங்களா ஆகிறச்சே அவங்க ஆர்.கே.நாராயண் புத்தகங்களை வெகு எளிதாகப் படித்ததோடு அதை அலசி ஆராயவும் செய்தார்கள்.   நாங்க எந்தத் தடையும் போட்டதில்லை.  ஆர்.கே.நாராயண் படிச்ச மாதிரியே இர்விங் வாலஸும், அகதா கிறிஸ்டியும், ஆர்தர் ஹெய்லியும் படிச்சாங்க. எல்லாவற்றையும் என்னோடு விவாதிப்பார்கள்.  ஆனாலும் அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சது தேவனின் புத்தகங்களே.  அதிலும் தேவனின் "கல்யாணி"யை எத்தனை முறை படிச்சுச் சொன்னாலும் அலுக்காது.  ஹிஹி, எங்கேருந்தோ எங்கேயோ போயிட்டேன்.  மீண்டும் ஆர்.கே.நாராயண்.





மால்குடி டேஸ் பின்னாடி தொலைக்காட்சித் தொடராகவும் வந்தது.  அதிகம் சினிமாத்தனம் இல்லாமல் ஆர்.கே.நாராயண் அவர்களின் மால்குடியைக் கண்ணெதிரே கொண்டு வந்தார்கள். ஸ்வாமியாக அந்தச் சிறுவனும் அற்புதமாக நடித்திருந்தான்.  ஆர்.கே.நாராயணின் தம்பியான ஆர்.கே.லக்ஷ்மணின் கார்ட்டூன்களோடு அருமையான தொடக்கப்பாடலுடன் வந்திருக்கும்.  அது ஒரு பொற்காலம்.  பலவிதமான சானல்கள் வந்து மக்கள் மனதைக் கெடுக்காமல் தூர்தர்ஷன் மட்டுமே இப்படியான ஆக்கபூர்வமான படைப்புக்களைக் கொடுத்து வந்தது.  என்ன வேலை செய்தாலும் அதைக் கொஞ்ச நேரம் நிறுத்திவிட்டு இதைப் பார்த்துவிட்டுப் போவேன்.   கைட் படத்தைத் தான் கெடுத்துவிட்டார்கள். :(  மிஸ்டர் சம்பத் கூட ஆர்.கே.நாராயண் படைப்புத் தான் என எண்ணுகிறேன்.





அதோடு இல்லாமல் சிறு குழந்தைகளைப் பாடப்புத்தகம் சுமக்க வைப்பதையும்  ஒரு தாயின், தந்தையின், தாத்தாவின் பரிவுடன் அரசுக்கு எடுத்து உரைத்து ஆவன செய்யுமாறு தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆணித்தரமாக எடுத்து உரைத்திருக்கிறார் ஆர்.கே.நாராயண்.  அது சரி, எதுக்கு இதெல்லாம் என்று கேட்பவர்களுக்கு!  இன்று ஆர்.கே.நாராயண் அவர்களின் பிறந்த தினமாம்.  கூகிளார் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.  அப்படி இருக்கையில் நம் நாட்டில் பிறந்த பெரியவரின் பிறந்த நாளை நாம் கொண்டாட வேண்டாமா?  தன் எழுத்துகளின் மூலம் இன்னமும் உயிர் வாழ்கிறார் ஆர்.கே.நாராயண் அவர்கள்.




படங்கள் மூன்றுமே கூகிளார் கடன் கொடுத்தவை என்றாலும் கடைசிப் படத்துக்குச் சொந்தக்காரர் நண்பர் கரந்தை ஜெயக்குமார் என்று தெரிய வருகிறது.  அனைவருக்கும் நன்றி.

21 comments:

  1. அப்பல்லாம் குமுதம் கல்கண்டு நிறையபேர் - எங்களையும் சேர்த்து - சேர்த்தேதான் வாங்குவாங்க...!

    சரக்கு கட்டி வரும் பேப்பரைப் படிக்கும் பழக்கம் எனக்கும் உண்டு...!

    கண்ணன் பத்திரிக்கை பார்த்ததே இல்லை. அம்புலிமாமா, ரத்னபாலா, கோகுலம் இவைகள்தான்!

    'கைட்' படிப்பதில் என்ன தவறு? ஏன் அடிக்கணும்?

    நேற்றைய ஹிந்து தமிழ் நாளிதழில் ஆர் கே நாராயன் பற்றி கட்டுரை வெளியிட்டு விட்டு அவர் தம்பி லக்ஷ்மன் படம் போட்டிருந்தோம் மன்னிக்கவும் என்று குறிப்புப் பார்த்தேன்.

    இன்று சிவராம் கரந்த் பிறந்தநாளாம். அவர் எழுதிய சுயசரிதைப் புத்தகம் தமிழில் கிடைகிறதா என்று பார்க்கவேண்டும்!

    ReplyDelete
  2. கண்ணன் பத்திரிகை குமுதம் அளவில் வந்தது. அதுவும் இன்னொருத்தர் வீட்டில் வாங்கினது தான். ஓ.சி. தான் வாங்கிப் படிப்போம். கண்ணனின் வந்த தொடரெல்லாம் பைண்டிங்கில் அவங்க வீட்டில் கிடைக்கும். அம்மா தான் மெல்லப் போய்ப் பேசி வாங்கி வருவாங்க. அதிலே மஞ்சள் பங்களானு ஒரு திகில் கதை. :)))) தலைப்பு மட்டும் நினைவில் இருக்கு.

    ReplyDelete
  3. ரத்னபாலா கேள்விப் பட்டதே இல்லை. :) கைட் கதையில் கணவனை அம்போனு விட்டுட்டு கைடோட போயிடுவா மனைவி. அதனால் அப்பா தடுத்தார். :)))) ஆனால் எங்க பொண்ணு அதைப் பற்றி ஆய்வுக் கட்டுரையெ எழுதினா! :)))))

    கூகிளார் இன்னிக்கு ஆர்.கே.நாராயண் பிறந்த நாள்னு தான் சொல்லறார்.

    ReplyDelete

  4. சிறு வயது முதல் படிக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் படித்ததை மீண்டும் பார்க்கும்போதுதான் முன்பு படித்தது நினைவுக்கு வரும். நானும் ரத்னபாலா பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ஆர்.கே நாராயணனின் பல படைப்புகள் வாசித்திருக்கிறேன். ஆங்கிலத்திலும் தமிழாக்கத்திலும். பதிவுகளில் எழுத வந்தபோது “அனுபவங்கள் அரக்கோணம் நாட்கள்” என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். அதைப் படித்த சுந்தர்ஜி நாராயணனின் ‘மால்குடி டேஸ்’ படிப்பது போலிருந்தது என்று பின்னூட்டமிட்டிருந்தார்.சுட்டி தருகிறேன் பாருங்களேன்
    gmbat1649.blogspot.in/2011/05/blog-post_11.html

    ReplyDelete
  5. மிகவும் நல்ல கதைகள். ரிவி யிலும் மால்குடிடேய்ஸ் விரும்பி பார்த்திருக்கின்றேன்.

    கண்ணன் புத்தகம் பார்த்ததில்லை மற்றையவை படித்ததுண்டு.

    ReplyDelete
  6. மால்குடி டேஸ், சுவாமியும் நண்பர்களும் இவையெல்லாம் மறக்க முடியாத புத்தகங்கள். திரு ஆர்.கே.நாராயணன் பிறந்த நாளன்று மலரும் நினைவுகள் உருவாக்கியது உங்கள் பதிவு.

    ReplyDelete
  7. அதோடு இல்லாமல் சிறு குழந்தைகளைப் பாடப்புத்தகம் சுமக்க வைப்பதையும் ஒரு தாயின், தந்தையின், தாத்தாவின் பரிவுடன் அரசுக்கு எடுத்து உரைத்து ஆவன செய்யுமாறு தான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது ஆணித்தரமாக எடுத்து உரைத்திருக்கிறார் ஆர்.கே.நாராயண்.//

    குழந்தைகளின் புத்தகச் சுமைக்காகப் பேசியவர் இவரைத் தவிர வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை! அவர் பெயர் பல்லாண்டு நிலைத்திருக்கட்டும்!!

    ஆம். கூகுள் ஆண்டவர் சொன்னால் தவறாகுமா? இன்று ஆர் கே என் நின் பிறந்தநாள் என்று?!!

    நல்லபதிவு!

    ReplyDelete
  8. ஆர்.கே.நாராயண் பிறந்த நாள் பதிவு வெகு அருமை!.. நான் ரத்னபாலா படிச்சிருக்கேன்... பூந்தளிர்னும் ஒரு புத்தகம் வந்தது!..நீங்க சொன்ன மாதிரி 'மால்குடி டேஸ்' தொடரும் பாத்திருக்கேன்.. அதோட டைட்டில் சாங்க் சுட்டி இந்தாங்க...

    https://www.youtube.com/watch?v=TLHE5KnVpPk

    ReplyDelete
  9. என்னுடைய முதல் சிறுகதை (முதன் முதலாய் அச்சு வாகனம் ஏறியது)
    தமிழ்வாணனின் 'கல்கண்டு' பத்திரிகையில் தான். அப்பொழுது
    நான் சேலத்தில் Vth Form படித்துக் கொண்டிருந்தேன்.

    ReplyDelete
  10. ஆஹா! எனக்கு மட்டும் எழுதத் தெரிந்திருந்தால், என் மால்குடி டேஸ் பின்னர் வந்திருக்கலாம். கூகிள் மால்குடி டேஸ் என்று மறு உரு எடுத்து அவரை பாராட்டி இருக்கிறது.

    ReplyDelete
  11. எனது எழுத்தாளர்கள் பகுதியில் பெரியவர் ஆர்வியைப் பற்றி எழுதும் பொழுது அவர் ஆசிரியராக இருந்த
    'கண்ணன்' பத்திரிகை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். பிற்காலத்தில் மிகச் சிறந்த எழுத்தாளர்களாய் திகழ்ந்த
    ஜோதிர்லதா கிரிஜா, புவனைக் கலைச்செழியன், மாயூரன், சரஸ்வதி ராமநாதன், அம்பை, இளையவன்,ஹரிஹரன் (ரேவதி) ஜே.எம்.சாலி,லெமன், இலக்கிய வீதி இனியவன் என்று கண்ணனில்
    தங்கள் இளம் வயதில் எழுதியவர்கள் பட்டியல் மிகப் பெரிய ஒன்று.

    ReplyDelete
  12. வாங்க ஜிஎம்பி சார், உங்களோட சுட்டிக்குச் சென்று படித்துப் பார்க்கிறேன். நன்றி.

    ReplyDelete
  13. நன்றி மாதேவி. பல நாட்கள் கழித்துப் பார்க்க நேர்ந்ததில் மகிழ்ச்சியும் கூட.

    ReplyDelete
  14. வாங்க ராஜலக்ஷ்மி, எனக்கும் தெரியாது. கூகிளார் சொல்லித் தான் தெரிந்து கொண்டேன். உடனே மால்குடி டேஸ் நினைவில் வந்தது.

    ReplyDelete
  15. வாங்க துளசிதரன், பாராட்டுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  16. வாங்க பார்வதி, ரத்னபாலா நான் கேள்விப் படவே இல்லை. பூந்தளிர் கேள்விப் பட்டிருக்கேன். சுட்டிக்குச் சென்று இனிமேல் தான் பார்க்கணும். இம்மாதிரி விஷயங்களில் நான் ரொம்பவே மெதுவாகச் செய்வேன். :))))

    ReplyDelete
  17. வாங்க ஜீவி சார், எந்த வருஷம்? என்ன பெயரில் எழுதினீங்க? நினைவெல்லாம் இருக்கப் போவதில்லை. சும்ம்ம்மாக் கேட்டேன். :).

    ReplyDelete
  18. வாங்க "இ" சார், உங்க அம்மா சொல்படி ராஜுவே ஒரு மால்குடி டேஸ் தானே! அது உங்களோட மாஸ்டர் பீஸ், என்னைப் பொறுத்தவரை.

    ReplyDelete
  19. மீள் வரவுக்கு நன்றி ஜீவி சார், இத்தனை எழுத்தாளர்கள் கண்ணனில் எழுதி இருப்பது குறித்து இன்று தான் அறிந்தேன். ஆனால் ஆர்வி அவர்கள் கண்ணன் பத்திரிகையின் ஆசிரியராக இருந்தது தெரியும். அவர் விலகியதும் சில மாதங்கள் தான் கண்ணன் வந்ததுனு நினைக்கிறேன். :))))

    ReplyDelete
  20. /எந்த வருஷம்? என்ன பெயரில் எழுதீனிங்க?//

    முதல் கதை பிரசுரமான நினைவு இல்லாமல் போகுமா?..

    1958-ம் வருஷம். ஜி.வி.இராமன்
    என்கிற பெயரில் எழுதினேன். 1963-ம் வருஷம் வேலையில் சேர்ந்த பிறகு தான் 'ஜீவி'யானேன். கதையின் பெயரும் நினைவிலிருக்கிறது. கதையும் நினைவில் உள்ளது.ஆனால், இப்போது வேண்டாம். சென்னை வந்து சேர்ந்த பிறகு சொல்கிறேன்.

    என் சிறுகதைத் தொகுப்பு புத்தகம் ஒன்று மணிமேகலை பிரசுரத்தில் பிரசுரமானது. என் முதல் கதை பிரசுரத்தைப் பற்றி அறிந்த தமிழ்வாணனின் திருமகனார்
    ரவி (மணிமேகலை பிரசுரத்தின் நிர்வாக இயக்குனர்) பழைய கல்கண்டு இதழ்களின் வால்யூம்களில் தேடி எடுத்து இந்தக் கதையை எப்படியாவது அந்த சிறுகதைத் தொகுப்பில் சேர்த்து விட வேண்டும் என்று ரொம்பவும் பிரயத்தனப்பட்டார். ஆனால் என்ன முயற்சித்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. என்னிடம் பிரதி கைவசம் இல்லாததினால் அந்த வாய்ப்பும் நிறைவேறாமல் போயிற்று.

    ReplyDelete
  21. 'கலைமகள்' குழும 'கண்ணன்' பத்திரிகைக்கு கடைசி வரை அவர் தான் ஆசிரியர். அவர் விலகவில்லை,பணி ஓய்வு பெற்றார் என்பதே என் நினைவு.

    ReplyDelete