எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, January 04, 2015

திருப்பாவைக் கோலங்கள்!

பாடல் 20

முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்!
செப்பமுடையாய் திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்!
செப்பன்ன மென்முலைச் செவ்வாய் சிறுமருங்குல்
நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டலோர் எம்பாவாய்.


இங்கே உக்கம், தட்டொளி எனக் குறிப்பிட்டிருப்பது விசிறியையும் கண்ணாடியையும்,  கண்ணாடி என்றால் முகம் பார்க்கும் கண்ணாடி ஆகும்.  ஆகவே மயிலிறகினால் விசிறி செய்வதால் மயில் கோலம் போட்டு வண்ணம் தீட்டலாம். இங்கே தட்டொளி என்ற கண்ணாடியாக நப்பின்னையின் முகத்தையே சுட்டி இருக்கிறது.  எப்படி எனப் பார்ப்போமா?

 இங்கேயோ நப்பின்னையும், கண்ணனும் இணை பிரியாது இருக்கின்றனர். அத்தகைய கண்ணன் நப்பின்னைக்கு மட்டும் உரியவன் அல்ல;  அனைத்து கோபியர்க்கும் உரியவன் எனச் சொந்தம் கொண்டாடும் ஆண்டாள் நப்பின்னையையே அவனை எழுப்பித் தங்களுடன் நீராட அனுப்பி  வைக்குமாறு சொல்கிறாள்.

இங்கே கோபியருடன் கண்ணன் நீராட வருமாறு அழைப்பது ராஸக்ரீடையைக் குறிப்பது. கணவன் காலை எழுந்ததும் விழிக்க வேண்டியது மனைவியின் முகத்தில் தான் என்றே பொதுவாகச் சொல்வது. ஆகவே அவனை விட்டு இணை பிரியாது இருக்கும் நப்பின்னைப் பிராட்டி அவனைத் துயிலெழுப்பி, அவன் முகத்துச் சிறு வியர்வையைத் தன் முந்தானையால் விசிறி மலர்ந்த தன் முகமாகிய கண்ணாடியைக் காட்டிப் புன்முறுவலுடன் அவனை கோபியருடன் நீராட அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறாள் ஆண்டாள்.  தாய் தன் குழந்தைக்கு வியர்த்தால் தன் முந்தானையால் தான் துடைத்து விடுவாள்.  அதோடு முந்தானையே விசிறியாகவும் ஆகும்.  அப்படியே இங்கே நப்பின்னையையும் அவள் சேலையின் முந்தானையால் கண்ணன் முகத்தில் விசிறச் சொல்கிறாள்

கண்ணாடி உள்ளதை உள்ளபடியே காட்டும்.  அதற்கென எவ்விதமான சுயமான உணர்வுகள் கிடையாது.  நாம் கோபமாகப் பார்த்தோமானால் கோபத்தை அதுவும் காட்டும்.  சிரித்தால் அதுவும் சிரிக்கும். இப்படி எதுவும் ஒட்டாமல் இருக்கும் கண்ணாடியைப் போல் நாமும் பற்றற்று இருத்தல் வேண்டும். நப்பின்னையும் இங்கே கண்ணன் இவ்வுலகுக்கே சொந்தம் தனக்கு மட்டும் சொந்தமல்ல என்ற உணர்வோடு சிரித்த முகத்தோடு  அவனை அனுப்பி வைக்க வேண்டும்.

ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவன். ஒருவருக்கு மட்டும் சொந்தமல்ல.  ஆண்டவனின் அன்பும் அனைவருக்கும் பொதுவான ஒன்றே. உலகப் பற்றை விடுத்து எல்லோரிடமும் சீராக ஒரே மாதிரி அன்பைக் காட்டும் பெருமானிடம்  நம் பற்றை வைத்தோமானால் நமக்கு ஞானம் கிட்டி வைகுந்தப் பதவியும் கிட்டும்.

பாடல் 21

ஏற்ற கலங்கள் எதிர்பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்
ஊற்றமுடையாய்! பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்துன் வாசற்கண்
ஆற்றாது வந்துன் அடிபணியு மாபோலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்

மீண்டும் பசுக்களைக் குறிக்கும் பாடல்.  அதிலும் எப்போது கலங்களை எடுத்துக் கறந்தாலும் மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும்பசுக்கள். ஆகவே காமதேனுக் கோலமோ, பசுவும் கன்றுமாகவோ கோலம் போடலாம்.

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே என பெருமானைக் கூறுகிறாள் ஆண்டாள். இருளை நீக்கும் ஆதவனைப் போல் நம் மனமாகிய காட்டில்  எந்நேரமும் காணப்படும்  துர் எண்ணங்களாகிய இருட்டை அங்கே பெருமானைக் குடியேற்றுவதன் மூலம் ஒளி பொருந்தியதாக மாற்றலாம்.  இதயத்தினுள் சுடராக ஒளிவீசிப் பிரகாசிப்பவன் பெருமானே.  அதை அறியாமல் நாம் மூட நம்பிக்கைகளில் மூழ்கிக் கிடக்கிறோம்.  உலகினில் தோற்றமாய் நின்றவன் நம்முள்ளும் சுடராய் ஒளி வீசுகிறான். அவன் திருவடிகளைப் புகழ்ந்து பாட வேண்டும். அதுவும் எப்படி?  எதிரிகள் கண்ணனின் பலத்தைக் கண்டு அவனுக்கு சேவை செய்ய வேண்டி அவனடிகளைப் பணிந்து வணங்குவது போலவா?  அவர்கள் அடி பணிவதில் அச்சம் கலந்திருக்கிறது கண்ணா!  எங்களுக்கு என்ன அச்சம்?

நாங்கள் உன்னைக் கட்டி இருப்பது எங்கள் பக்தியாகிய அன்பெனும் கயிற்றினால்.  இதற்கு தாமோதரனாகிய நீ கட்டுப்பட்டே தீர வேண்டும்.  உன்னிடம் நாங்கள் எங்களை ஒப்படைத்து விட்டோம்.  நீ எங்களை ஒதுக்க முடியாது.  அதே போல் நீயன்றி நாங்களும் இல்லை.  உன்னில் நாங்களும், எங்களில் நீயும் ஐக்கியம் ஆகிவிட்டோம். உன்னைப் புகழ்ந்து ஏத்துவது ஒன்றே எங்கள் வேலை.

10 comments:

 1. கலர் மயிலும் வெள்ளை மயிலும்.

  சமீபத்தில் ஆனந்த விகடன் பாலசுப்ரமணியம் பற்றிப் படிக்கும்போது படித்தது : அவர்தான் வெள்ளை மயில் வகையை உருவாக்கினாராம். இது போல நிறைய க்ராஸ் ஆராய்ச்சிகள் அவர் தனது படப்பைப் பண்ணையில் செய்வாராம்.

  ஜலக்க்ரீடையும் ராஸக்க்ரீடையும் ஒன்றா? அல்லது ஜலக்ரீடையில் ராஸக்ரீடையா?

  பாடல்களும் விளக்கமும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், வெள்ளை மயிலைக் கண்காட்சி சாலையில் பார்த்திருக்கேன். :)))) ராஸக்ரீடை என்பது உயர்ந்த தத்துவம் கொண்டது. ஜலக்ரீடை என்பது சாமானிய மனிதருக்கானது. ராஸக்ரீடை குறித்து ஏற்கெனவே கண்ணன் வந்தான் தொடரில் எழுதி இருக்கேன். மத்தியானமாத் தேடிப் பார்த்துச் சுட்டி தரேன் :))

   Delete
 2. வணக்கம்
  அழகிய கோலங்கள் அற்புதமான விளங்கம் பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. // உலகப் பற்றை விடுத்து எல்லோரிடமும் சீராக ஒரே மாதிரி அன்பு ... //

  சிறப்பான விளக்கங்கள் அம்மா...

  ReplyDelete
 4. ஆழ்ந்த கருத்துக்களை அற்புதமாகத் தந்திருக்கிறீர்கள்!..காமதேனு கோலம் புள்ளி வைத்துப் போட்டிருப்பது (ரங்கோலி மாதிரி வரைந்ததில்லை) என்று நினைக்கிறேன்!.. கரெக்டா அம்மா!..

  ReplyDelete
  Replies
  1. புள்ளிகள் கணக்குப் பக்கத்திலேயே காணலாம் பார்வதி. வரையத் தெரிந்தவர்கள் வரையலாம். தெரியாதவங்க புள்ளி வைச்சுப் போடலாம்.

   Delete
 5. திருப்பாவைப் பாடல்களில் ஒரு ஆராய்ச்சியே செய்கிறீர்கள் போலிருக்கிறது. பாட்டுக்கேற்ற கோலங்கள். ரசிக்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆராய்ச்சியெல்லாம் இல்லை ஐயா. ஏதோ மனதில் பட்டதை எழுதுவேன். அவ்வளவு தான். அதுவும் அந்த நேரத்தில் பதிவுகளை நேரடியாக எழுதிவிடுவதால் அந்த நேரம் தோன்றும் எண்ணங்கள்!

   Delete