எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 11, 2016

சோள இட்லியும், குடமிளகாய் கொத்சுவும்!


அரைத்த மாவு

நாங்க சிறு தானியம் சாப்பிட ஆரம்பிச்சு ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகிறது. எல்லாத்தையும் மசிக்க முடிஞ்ச எனக்கு சோளத்தை வேக வைப்பது ஒரு சோதனையாகவே இருந்தது. ஒரு மாதிரியா வேக வைச்சுடறேன். சில நாட்களுக்கு முன்னர் ஏதோ ஒரு சானலில் எல்லா சிறு தானியங்களிலும் இட்லி செய்வதைப் பற்றிச் சொன்னார்கள். நாம தான் ஏற்கெனவே வரகு, கம்பு போன்றவற்றில் இட்லி செய்து பார்த்துட்டோமே. இப்போ சோளத்தில் செய்யலாம் என நினைத்து நேற்று அதற்கான பொருட்களைத் தயார் செய்தேன்.

சோளம் உடைச்சது 250 கிராம் அல்லது ஒரு ஆழாக்கு அல்லது 2 கிண்ணம்

உளுந்து கால் கிண்ணம்

வெந்தயம் ஒரு டேபிள் ஸ்பூன்.

இன்று காலை உணவுக்குச் செய்யப் போவதால் ஏற்கெனவே ஊற வைச்சு அரைச்சிருக்கணும். ஆனால் நேற்று மாலை தான் இந்த யோசனை உதித்ததால் மாலை ஆறு மணி அளவில் சோள ரவையைக் களைந்து தனியாக ஊற வைத்தேன். பின்னர் உளுந்து, வெந்தயம் இரண்டையும் ஒன்றாகக் கலந்து ஊற வைத்தேன்.  இரண்டு மணி நேரம் ஊறப் போதும் என்பதால் இரவே அரைத்து வைத்து உப்புப் போட்டுக் கலந்து விடலாம். மாவு நன்கு பொங்கி வருகிறது.

                             
                                       சோள இட்லி தயார், சாப்பிட வாங்க!

இன்று காலை அதை இட்லிகளாக வார்த்து எடுத்தேன். தொட்டுக் கொள்ளக் குடமிளகாய்க் கொத்சு!

செய்முறை

புளி ஒரு சின்ன நெல்லிக்காய் அளவுக்கு நீரில் ஊற வைத்துக் கரைத்து எடுத்தது இரண்டு கிண்ணம்

பயத்தம்பருப்பு ஒரு டேபிள் ஸ்பூன் குழைய வேக வைக்கவும். அதிலேயே புளி ஜலத்தைச் சேர்க்கவும்.

ஒரு நடுத்தர அளவுக் குடைமிளகாய்,

நடுத்தர அளவுத் தக்காளி

பெரிய வெங்காயம் பெரிதாக ஒன்று அல்லது நடுத்தரமாக இரண்டு பொடிப்பொடியாக நறுக்கவும்.

சாம்பார்ப் பொடி இரண்டு டீஸ்பூன்

மஞ்சள் பொடி கால் டீஸ்பூன்

தாளிக்க எண்ணெய் ஒரு மேஜைக்கரண்டி, கடுகு, க.பருப்பு, உபருப்பு, கருகப்பிலை, பெருங்காயம்

மேலே தூவ பச்சைக் கொத்துமல்லி பொடிப்பொடியாக நறுக்கியது.

உப்பு தேவையான அளவு


                                          குடமிளகாய்க் கொத்சு கொதிக்குது! :)

அடி கனமான வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கொண்டுக் கடுகு, உபருப்பு, கபருப்பு தாளித்து, பெருங்காயமும், கருகப்பிலையும் சேர்க்கவும்.  மஞ்சள் பொடியைச் சேர்க்கவும். பின்னர் முதலில் வெங்காயத்தை நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் குடைமிளகாயைச் சேர்க்கவும். குடைமிளகாய் அரைப்பதம் வேகும்போது தக்காளியைச் சேர்க்கவும். தக்காளி சேர்ந்து வரும்போது பருப்புக்கலவையுடன் சேர்ந்த புளிக்கரைசலைச் சேர்க்கவும். உப்புச் சேர்த்துக் கொதிக்க விடவும். ரொம்ப நீர்க்கவும் இல்லாமல் சேறு போல் கெட்டியாகவும் இல்லாமல் இருக்க வேண்டும். பொதுவாக சாம்பார், கொத்சு போன்றவை சேறு போல் கெட்டியாக இருந்தால் அவ்வளவாக ருசிக்காது. கூடியவரை பால் போன்ற பதத்தில் வைத்துக் கொண்டால் நல்லது.

19 comments:

 1. இட்லி கலர்கூட நன்றாக வந்துள்ளது. பதமும் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். கொத்ஸுக்கு பச்சைமிளகாயும் சேர்த்தால் இன்னும் வாஸனையாக இருக்கும் என்று நான் சேர்ப்பேன். சோள ரவையாதலால் இரண்டு மணிநேரத்தில் ஊறி அறைக்க முடிந்திருக்கிறது. படமும்,பதமும் சாப்பிடத் தூண்டுகிறது. சிறுதானியத்திற்கு மாறி விடாது கைப்பிடித்து வருவதில் உள்ள ஸௌகரியங்களையும் கூடவே பட்டியலிடுங்கள். எல்லோரும் பயனடையட்டும். நல்ல பதிவு அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சி அம்மா, பாராட்டுக்கு நன்றி. பொதுவாக் குடைமிளகாய் போட்டுச் செய்யும் உணவு வகைகளில் நான் பச்சை மிளகாய் சேர்ப்பதில்லை. காரம் ஜாஸ்தியாகிடும் என்பார்கள்! அதோடு பச்சை மிளகாய் குறைவாகவே பயன்படுத்துவேன். :) மிக்க நன்றி முதல் கருத்துக்கு.

   Delete
 2. துவரம் பருப்புக்கு பதிலா பயத்தம் பருப்பு போட்டு சாம்பார் வச்சுட்டா அது கொஸ்து ஆகிவிடுமா? கொஸ்த்துக்கு சாம்பார் பொடி போடமாட்டோம். பச்சை மிளகாய் தான் (குடை மிளகாய் தான் இருக்கிறதே). கொஸ்த்துக்கு முக்கியம் சின்ன வெங்காயம், பின்னர் தனியா. முக்கியமான சமாசாரம் கொச்துன்னா பெரிய்ய்ய கத்திரிக்காய் சுட்டு எடுத்ததுதான். மற்ற காய்கறிகள் எல்லாம் கூட்டு அல்லது சாம்பார் தான்.

  ஜெயகுமார்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா ஜேகே அண்ணா, கொத்சு என்றால் என் பிறந்த வீட்டுப் பக்கம் பருப்பே சேர்க்காமல் செய்வதே! ஆனால் தஞ்சாவூர்க்காரரைக் கல்யாணம் செய்துட்டு வந்ததும் பொரிச்ச கூட்டில் கூடப் பருப்புச் சேர்க்கலைனா சிரிப்பாங்க! என்றாலும் பல சமயங்களிலும் வெண்பொங்கலுக்குச் செய்யும் கொத்சுவில் பருப்பே போடாமல் பண்ணுவேன். குழம்பு என நாமகரணம் சூட்டிடுவேன். :) மற்றபடி நீங்க சொன்ன பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய கத்திரிக்காய் சுட்டு எடுத்த கொத்சு பத்தியும் எழுதி இருக்கேன். சுட்டியில் பார்க்கவும்!
   http://geetha-sambasivam.blogspot.in/2013/07/blog-post_27.html

   Delete
 3. நாங்கள் இன்னும் பெரும் தானியங்களில் தான் இருக்கிறோம் சோளத்தில் ரவையில் உப்புமா செய்வதோடு சரி. சுவை பற்றி ஏதும் கூறவில்லையே

  ReplyDelete
  Replies
  1. சுவை நன்றாகத் தான் ஐயா இருந்தது. சாதாரண இட்லிக்கும் இதற்கும் நிறத்தில் தான் வேறுபாடு! சுவையில் தெரியலை!

   Delete
 4. கொத்ஸுவுக்கு எதற்கு பருப்பு? ஜேகே ஸார் சொல்லியிருப்பது போல கொத்ஸுன்னா சுட்ட கத்தரிக்காய்தான்! சோள இட்லி சுவை எப்படி இருந்தது? நல்ல முயற்சி.

  ReplyDelete
  Replies
  1. அதானே! ஶ்ரீராம், கொத்சுவில் பருப்புச் சேர்த்தால் எனக்கும் பிடிக்கலைதான்! ஆனால் நம்ம ரங்க்ஸுக்கு கொத்சு என்றால் பருப்புச் சேர்த்தாகணும்! அதோடு இதிலே குடைமிளகாய், வெங்காயம், தக்காளி எல்லாம் நிறையவே போடுவதால் சாம்பார்னு சொல்ல முடியலை! வறுத்த்ப் பொடித்துச் செய்தும் பார்த்தேன். அதை விட இதான் சுவையில் நல்லா இருக்குனு ரங்க்ஸும் சொல்லிட்டார். எனக்கும் அதான் சரினு தோன்றியது! து.பருப்பை விட இதற்கெல்லாம் ப.பருப்புத் தான் நல்லா இருக்கும். அதிலும் நான் சேர்த்தது ஒரு டேபிள் ஸ்பூன் தான். எங்க ரெண்டு பேருக்குத் தானே! அதைச் சாப்பிட்டால் பருப்புப் போட்டிருக்கிறதே தெரியவராது!

   Delete
 5. அருமையான புதுமையான சுவையான செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 6. சோள இட்லியும், குடமிளகாய் கொத்சுவும்.....சூப்பர் ...நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக செய்ய வேண்டும் ....

  ReplyDelete
  Replies
  1. செய்து பாருங்கள். நன்றாகவே இருக்கிறது!

   Delete
 7. சகோதரி....வெங்கட்ஜி இங்கு சென்னை வந்திருந்த போது சோள இட்லிதான் செய்திருந்தேன். ஆனால், அவர் மதியம் உணவு உண்டுவிட்டு வந்ததால் ஒன்றும் வேண்டாம் என்றும் சொல்லிட நானும் கூடுதல் விருந்துபசாரம் செய்ய முடியவில்லை என்று வருத்தம். என் கைவண்ண சோள இட்லியை சுவைக்க வெங்கட்ஜிக்குக் கொடுத்துவைக்கவில்லையே! ஹிஹிஹி...ஒருவேளை தப்பித்துவிட்டாரோ ஹஹஹ்ஹ....

  சிறு வயதிலிருந்தே சிறுதானியப் பழக்கம் உண்டு...செய்வது உண்டு. அப்போதெல்லாம் கோழித்தீவனக் கடையிலும், சந்தைகளிலும் மட்டுமே கிடைக்கும். இப்போது டயட் என்று மிகவும் பிரபலம் அடைந்துவிட்டது. விலையும் கொள்ளை வில. ஆந்திராவில் மார்க்கெட்டில் நன்றாகக் கிடைக்கின்றது. விலையும் குறைவு.

  இடையில் கேரளாவில் வசித்த போதுதான் சிறுதானியங்கள் கிடைப்பது கஷ்டமாக இருந்தது. மீண்டும் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு தொடர முடிந்தது.

  கொத்சு பருப்பில்லாமல்தானே செய்வது.....உங்கள் ரெசிப்பியும் நன்றாக இருக்கின்றது. பார்த்துக் கொண்டேன்...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. தென் மாவட்டங்களில் தான் கொத்சு பருப்பில்லாமல் செய்யறாங்க போல! எங்க மாமியார் வீட்டில் அல்லது பொதுவாகவே தஞ்சை மாவட்டத்தில் பருப்புப் போட்டுத் தான் கொத்சு செய்யறாங்க. திரு ஜேகே சொன்னாப்போல் கொத்சு என்றால் பயத்தம்பருப்பு! கல்யாணம் ஆன புதிசில் பருப்பில்லாம் கொத்சு செய்துட்டு வாங்கிக் கட்டிப்பேன்! :))))

   Delete
 8. do u grind such small quantity in grinder or in mixie I would like to try.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வேதா! என்னோட அல்ட்ராவில் சின்ன கிரைண்டர்! அதில் கால் கப் உளுந்தும், டேபிள்ஸ்பூன் வெந்தயமும் சேர்த்து ஊற வைத்ததை அரைத்தால் நிறையவே விழுது காண்கிறது. ஒரு ஆழாக்கு அதாவது கிட்டத்தட்டக் கால்கிலோ சோள ரவை என்பதால் அதையும் சுலபமாக அரைக்க முடிகிறது. நான் கிரைண்டரில் தான் அரைத்தேன்! அதில் தான் அரைப்பேன். மிக்சியில் அரைத்தால் இப்படி வருமானு சந்தேகமா இருக்கு!

   Delete
 9. கொத்சு வா ? கொஸ்து என்று தான் எங்க பக்கம் சொல்வார்கள்.
  உதாரணம்.
  கத்திரிக்காய் கொஸ்து
  கொஸ்து வில் க கவர்கத்தில் மூன்றாவது எழுத்து.
  ஸ் சரஸ்வதி ஸ .

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. நாங்களும் கொத்ஸு என்றுதான் சொல்வோம். கொஸ்து என்றால் எழுத்துப் பிழை போலத் தோன்றும்!

   :))))

   Delete
 10. ஹிஹிஹி, சு.தா. போட்ட கருத்துக்கு பதில் சொல்ல முடியலை. என்றாலும் இது போகுதானு பார்க்கிறேன். சு.தா. கொஸ்துனு யாரும் சொல்லிக் கேட்டதில்லையே! கொத்சு என்று தான் சொல்லிக் கேள்வி! :)

  ReplyDelete