எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, June 11, 2017

நினைத்தேன், எழுதுகிறேன்! :)

நல்லெண்ணெய் கிலோ 132 ரூ

கடலை எண்ணெய் கிலோ 80 ரூ

தேங்காய் எண்ணெய் கிலோ 200 ரூபாய்

இன்றைய எண்ணெய் விலை நிலவரம் இது!  மற்றபடி காய்கறிகள் விலை குறைந்த பட்சமாக 30 ரூபாயாக இருக்கிறது. போன வாரம் 20 ரூக்கு விற்ற நாட்டுத் தக்காளி இந்த வாரம் 30 ரூ ஆகிவிட்டது. வாழை மரங்கள் அதிக அளவில் சேதம் அடைந்ததாலும் தண்ணீர் இல்லாததாலும் வாழை இலைக்குப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது!  வாழைத் தண்டு முன்னர் 5 ரூக்குக் கொடுத்தது இப்போது பத்து ரூபாய். ஆனால் எங்களுக்கு அது 2 நாட்களுக்கு வரும். பால்காரர் பால் விலையை 35 ரூக்கு ஒரு தரம், 40 ரூக்கு ஒரு தரம் என விலை ஏற்றம் பண்ணி விட்டார். இரண்டுமே தரம் குறைந்த பாலாக இருந்தது. எங்கள் வாழ்க்கையிலேயே முதல் முறையாக இப்போது ஆவின் பாக்கெட் பால் வாங்குகிறோம். வாடிக்கையாகப் பால் கொடுக்கும் பால்காரர் ஏகப்பட்ட கடன் வைத்து விட்டு எங்கோ காணாமல் போய்விட்டார். நாங்க அம்பேரிக்கா போறதுக்கு முன்னரே எங்களுக்கு 2,500 ரூக்குக் கிட்டத்தட்டக் கொடுக்கணும்! அப்போவே வேறே பால்காரரை ஏற்பாடு செய்துட்டு அவர் விலகிக் கொண்டார். ஆனால் தினம் தினம் இங்கே வந்து கொண்டிருந்தார். விரைவில் பணத்தைத் திருப்பி விடுவேன் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் கடந்த ஒரு மாதமாக ஆளையே காணோமாம்! பலருக்கும் பணம் பாக்கி என்றார்கள்.


வந்து வீட்டைச் சுத்தம் செய்தது போதாமல் ஏசி, குளிர்சாதனப் பெட்டி, கழிவறைக்குழாய்கள் எனத் தொந்திரவு கொடுத்தனவற்றை எல்லாம் சரி செய்தாயிற்று. எரிவாயுவுக்கு வந்த அன்று பதிவு செய்தோம். உடனே வந்து விட்டது. ஆனால் சிலிண்டர் கொண்டு போடுபவர் தான் மாலை நேரம் ஆகிவிட்டபடியால் மறுநாள் காலை கொண்டு வந்தார். ஏற்கெனவே இருந்த சிலிண்டரில் எரிவாயு இருந்ததால் பிரச்னை இல்லை!

4ஆம் தேதியிலிருந்து தான் அம்பேரிக்காவிலிருந்து கொண்டு வந்த பெட்டிகளைப் பிரித்து எல்லாவற்றையும் அதனதன் இடத்தில் வைத்தோம். இந்த வேலை ஒருவழியாக நேற்றோடு முடிந்தது. இப்போ ஜெட்லாக் இல்லை.   மதியம் ஓய்வாகப் படுத்தால் தூக்கமெல்லாம் இப்போ வரதில்லை. வழக்கம் போல் கொட்டுக் கொட்டு தான்! குட்டிப் பேத்தி ஸ்கைபில் எங்களைப் பார்த்துவிட்டு சந்தோஷம் அடைந்தாலும் தூக்கிக்கவில்லை என்பது தெரிந்து அழுகிறாள். மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது! சுற்றிச் சுற்றிப் பார்த்துத் தேடுகிறாள். :(  இந்த இடைவெளியில் கிடைத்த நேரத்தில் கடுகு சார் அனுப்பிய "கமலாவும் நானும்" புத்தகம் படித்து முடித்தேன். ஏற்கெனவே புஸ்தகா மூலம் வெங்கட் அனுப்பிய "பஞ்ச துவாரகா!" மற்றும் மோகன் ஜி தபாலில் அனுப்பிய "பொன் வீதி" ஆகியன படித்தாயிற்று. பஞ்ச துவாரகா புத்தகத்துக்கு ரஞ்சனி கொடுத்திருக்கும் சிறப்புரையை விட நாம எழுதினால் நன்றாகவா இருக்கும் என்று தோன்றுகிறது. கடுகு சாரை விமரிசிக்கும் தகுதி நமக்கெல்லாம் இல்லை. எவ்வளவு பெரிய மனிதர்! எத்தனை பேரை அறிந்து வைத்திருக்கிறார்! நம்மோடெல்லாம் அவர் பழகுவதே நமக்குப் பெருமை!

அடுத்து தம்பி மோகன் ஜியின் புத்தகமும்! ஏற்கெனவே பலரும் அலசித் துவைத்துக் காயப் போட்டு விட்டார்கள்! அதிலும் வைகோ சார் ஒவ்வொன்றாக அலசுகிறார். இதை விட நாம் என்ன பெரிதாகச் சொல்லப் போகிறோம்.  அவ்வப்போது மோகன் ஜியின் கதைகளைப் படித்து வந்தாலும்
"பாண்டு" கதையிலிருந்து தான் அவரோட பதிவுக்குத் தொடர்ந்து போக ஆரம்பித்தேன்.  தம்பியின் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முத்து. அதுவும் ஸ்வாதி முத்யம்! ஸ்வாதி நக்ஷத்திரத்தன்று ஆழ்கடலில் உள்ள சிப்பிகள் மேலெழுந்து வருகையில் அதனுள் விழும் அபூர்வமான மழைத்துளியைப் போல், அதிலிருந்து உருவாகும் முத்துக்களைப் போன்றவை இந்தக் கதைகள்! ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமானது.  இதை எழுதுகையில் தினமலர் வாரமலரில் முத்துக்கள் எடுப்பதைக் குறித்து மார்க்கோ போலோ எழுதினதைப் போட்டிருக்கிறார்கள் என்று அதைக் கொடுத்து என்னைப் படிக்கச் சொன்னார் ரங்க்ஸ். இங்கே நான் முத்தைப் பற்றி எழுதியதும் முத்துக்குளிக்கிறவங்க பத்தி ரங்க்ஸ் படிச்சதும் ஒரே சமயத்தில்! :))))

ஏழாம் தேதியன்று காலை சென்னை கிளம்பிப் போய் உறவினர்களில் முக்கியமாகப் பார்க்க வேண்டியவர்களைப் பார்த்துவிட்டு அன்றிரவு அம்பத்தூரில் அண்ணா வீட்டில் தங்கி விட்டு மறுநாள் காலை ஏழரைக்குக் கிளம்பி ஶ்ரீரங்கம் வந்தாச்சு. அம்பத்தூரில் எங்க வீட்டில் குடி இருப்பவர் வீட்டை வைத்திருக்கும் அழகைக் கண்டால் கண்ணீர் வருது! அவ்வளவு மோசமாக வைத்திருக்கிறார்.  இதை விற்றுவிடலாம் என்று போனவருஷம் முடிவு பண்ணிச் செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. இப்போதோ நிலங்கள் விற்பது, வாங்குவது போன்றவற்றில் முதலீடு செய்யக் கட்டுமானத் துறையில் இருப்பவர்கள் யோசிப்பதாலும் வியாபாரம் மந்தமாக இருக்கிறது என்கிறார்கள். அதோடு அரசாங்கமும் வழிகாட்டும் விலையைக் குறைத்துள்ளது. ஆகவே விற்பவர்கள் இப்போது விற்றால் நல்ல விலை கிடைக்காது என்கிறார்கள். அந்த வீட்டில் கழித்த நாட்களை நினைத்தால் ஒரு பக்கம் சந்தோஷமாகவும் இன்னொரு பக்கம் வருத்தமாகவும் இருக்கிறது. என்றாலும் நம் வீடு இவ்வளவு மோசமாக இருக்கே என்னும் எண்ணம் மனதில் வருத்தம் அளிக்கிறது. பார்க்கலாம்! கடவுள் இதற்கும் ஒரு தீர்வைக் கட்டாயம் வைத்திருப்பார். அது விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.!

22 comments:

 1. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியாச்சுன்னு சொல்லுங்க..... சென்னை வேறு வந்து திரும்பினீர்களா? அட!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சென்னை வந்தோம், சித்தப்பாவின் மறைவுக்குப் பின்னர் சித்தியையும் பார்க்க வேண்டி இருந்தது! புதன்கிழமை வந்துட்டு வியாழனன்றே திரும்பிட்டோம்.

   Delete
 2. புத்தகங்களை அல்லது எழுத்தாளர்களை நாம் விமர்சிக்கிறோம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாமே... அப்படி ஒரு புத்தகம் இருப்பதையும் அதன் உள்ளடக்கங்களையும் அனைவருக்கும் அறியத் தருகிறோம். நான் அப்படித்தான் நினைக்கிறேன். வாராந்தரிகளில் வரும் புத்தக அறிமுகங்களையும் அப்படித்தான் பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம்ம் இதுவும் நல்லதொரு கோணமாகவே இருக்கிறது. இப்போப் புத்தகங்கள் வாங்குவதையே நிறுத்திட்டோம்.:)

   Delete
 3. யதார்த்த நிகழ்வுகளை யதார்த்தமாக சொல்லி விட்டீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 4. நல்லெண்ணெய் கிலோ 132 ரூ, கடலை எண்ணெய் கிலோ 80 ரூ - இதெல்லாம் எந்த நாட்டில்? போன வாரம்தான், செக்கு எண்ணெய் என்று 290ரூ கொடுத்து ஒரு லிட்டர் (கிலோவுக்கும் இதற்கும் கொஞ்சம் வித்தியாசம் இருப்பது தெரியும்) நல்லெண்ணெய் வாங்கினேன். அவங்க, எள் விலை, கருப்பட்டி, நாட்டுச் சக்கரை விலை எல்லாம் போட்டு, 270 ரூக்குக் குறைந்து விற்கமுடியாது, பாரபின், தவிடு ஆயில், டர்பன்டைன் போன்ற எண்ணைகளைக் கலந்தால்தான் குறைந்த விலைக்கு விற்கமுடியும் என்று சொன்னார். இதுலவேற, இதயம் 200ரூக்கு மேல் கொடுத்து வாங்கினேன். (ஒருவேளை 1/2 கிலோவா?)

  ஒருவழியா இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியாச்சா? வாழ்க.

  ReplyDelete
  Replies
  1. நாட்டுச் செக்கு எண்ணெய் அப்படித் தான் விலை அதிகம் சொல்கிறார்கள் நெ.த. நாங்க வாங்குவது ஆயில் மில்லில் ஆட்டி எடுக்கப்படும் எண்ணெய். சுத்தமான சுத்திகரிக்கப்படாத எண்ணெய். இந்த (ரிஃபைன்ட்) சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள் எனக்கு எப்போதுமே பிடிக்காது. அக்மார்க் நல்லெண்ணெய்தான் சமையலுக்கு. அதே போல் கொப்பரையிலிருந்து நேரே எடுக்கப்பட்ட தே.எ. தான் சமையல் மற்றப் பயன்பாடுகளுக்கு. கடலை எண்ணெயும் சுத்திகரிக்கப்படாத சுத்தமான க.எ. இதயம் எண்ணெயெல்லாம் யு.எஸ்ஸில் பிள்ளை, பெண் வீட்டில் உபயோகித்தது தான். அதன் வாசனை எங்களுக்குப் பிடிக்கவில்லை. இங்கே ஆறு மாசம் முன்னர் நான் வைச்சுட்டுப் போன க.எ., ந.எ. இரண்டையும் இப்போது வந்து உபயோகித்துக் கடந்த பதினைந்து நாட்களாகப் பயன்படுத்தினேன். எண்ணெயில் ஒரு துண்டு வெல்லம் போட்டு வைத்தால் கெட்டுப் போகாது. நல்லெண்ணெய் காயும்போதே கம்மென்று வாசனை வரும்.

   Delete
  2. ஸ்கானர் இல்லை. இல்லைனா எண்ணெய்க்கடை பில்லை ஸ்கான் செய்து போட்டிருப்பேன்! :)))))

   Delete
  3. ஸ்கான்லாம் பண்ணவேண்டாம் (மொபைல்ல இல்லாத ஸ்கானரா? போட்டோ எடுத்துட்டு போடலாமே தேவைனா). அடுத்ததடவை திருவரங்கம் வரும்போது கடையில் வாங்கினால் ஆச்சு. (அங்க டெம்பிள் இன் ல தங்கினபோது, அவங்க இட்லி மிளகாய்ப்பொடிக்கு உபயோகப்படுத்திய நல்லெண்ணெய் ரொம்ப வாசனையா இருந்தது. டெம்பிள் இன் என்ற தங்கும் விடுதி, ஆனைக்கா கோவில் அருகில் மெயின் ரோட்டில் இருக்கிறது)

   Delete
  4. நெ.த. மொபைல்லே ஸ்கானர்? ஙே! நீங்க ஶ்ரீரங்கம் வரப் போவது தெரிஞ்சிருந்தால் இங்கே எங்க தெருவிலேயே ஒரு நல்ல லாட்ஜிங்&போர்டிங் இருக்கு! சொல்லி இருப்பேன்! :) அடுத்த முறை வந்தாச் சொல்லுங்க!

   Delete
  5. திருநெல்வேலியிலே ஜானகிராமன் ஹோட்டலிலே தங்கினப்போவும் அங்கே கொடுத்த இட்லி மிளகாய்ப் பொடியும், நல்லெண்ணெயும் நல்ல வாசனையுடன் இருந்தது. :)

   Delete
  6. எங்கள் வீட்டருகில் செக்கு நல்லெண்ணை கிலோ 185 ரூபாய். நன்றாக நல்ல மணமாக இருக்கிறது! அதனால் இப்போ அதுதான் வாங்குகிறோம். நானும் இதயம் எண்ணை எல்லாம் பயன்படுத்துவதில்லை!! அக்மார்க் தான்! இதயம் எண்ணை எல்லாம் கொள்ளை விலை. அது போல ஹார்ட்டுக்கு நல்லது ஆலிவ் ஆயில் மிக்ஸ் என்றெல்லாம் வருவது எல்லாமே கொள்ளைதான்....எதுவும் தரமில்லை என்றுதான் சொல்லப்படுதிறது

   அது சரி எண்ணை எல்லாம் நல்ல விலை குறைவாக இருக்கே...சென்னையிலும் அப்படிக் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

   கீதா

   Delete
 5. தாம் நினைத்தவை
  நாம்
  சிந்திக்க விதைத்தவை

  ReplyDelete
  Replies
  1. நன்றி காசிராஜலிங்கம்.

   Delete
 6. Ennai vizhai, milk vizhai masathukku masam yetram thaan, BP illathavangalukkum BP vandhudum :)

  ReplyDelete
  Replies
  1. அட ஏடிஎம்? என்ன இப்படி திடீர்னெல்லாம் வந்து பயமுறுத்தல்? எண்ணெய் விலை, காய்கறி விலை எல்லாம் மற்ற ஊர்களை விட இங்கே கொஞ்சம் பரவாயில்லைனே நினைக்கிறேன். உ.கி. வெங்காயம் கிலோ 20 ரூக்குள் தான் ஏறி ஏறி இறங்கிட்டு இருக்கு. சி.வெ. தான் அதிக விலை. கிலோ எண்பதிலிருந்து 120 வரை! :)

   Delete
 7. உங்கள் மனம் நல்லதே நடக்கும் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வீடு விஷயம் தான் ஒரு பாரமாக மனதில் தேங்கி நிற்கிறது! பார்க்கலாம். ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி டிடி.

   Delete
 8. கூடவே இருந்தாலும் சில குடித்தனக் காரர்கள் வீட்டை வைத்துக் கொள்ளும் அழகை அனுபவித்திருக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஜிஎம்பி சார், சொல்லவும் முடியாது! சொன்னால் பிரச்னையாகும்! நாங்க இருந்தப்போ இருந்த ஒரு குடித்தனக்காரங்க அவங்க தான் வீட்டுக்காரங்க போல் நடந்துப்பாங்க! நாங்க துணி உலர்த்தும் கொடியில் உள்ள துணிகளை ஒதுக்கிட்டு அவங்க துணியைப் போட்டுட்டுப் போவாங்க! கேட்டால் அது அவங்க பக்கமாம்! நாங்க உலர்த்தக் கூடாதுனு சட்டம் பேசுவாங்க! எவ்வளவோ அனுபவங்கள்!:(

   Delete
 9. நம் வீடு இவ்வளவு மோசமாக இருக்கே என்னும் எண்ணம் மனதில் வருத்தம் அளிக்கிறது. பார்க்கலாம்! கடவுள் இதற்கும் ஒரு தீர்வைக் கட்டாயம் வைத்திருப்பார். அது விரைவில் கிடைக்கும் என்று நம்புகிறோம்.!//

  நிச்சயமாக உங்களுக்கு நல்லதே நடக்கும்! ஸோ பேக் டு நார்மல் லைஃப்!!??

  ReplyDelete