எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 02, 2019

கஞ்சி வரதப்பா! எங்கே எல்லாம் போய் ஒளிஞ்சிருக்கே!

அத்தி வரதர் க்கான பட முடிவு

மன்னனுக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிந்தது. தன் தவறை உணர்ந்து கொண்டான். உடனேயே ஒரு சிறு படையைத் திரட்டிக் கொண்டு காஞ்சியை விட்டுச் சென்ற திருமழிசை ஆழ்வாரையும், கணிகண்ணனையும் தேடிக் கொண்டு சென்றான். அருகில் இருந்த ஓர் சிறிய கிராமத்தில் தங்கி இருந்த இருவரையும் கண்டான். மனமார மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். இருவரையும் காஞ்சிக்குத் திரும்பச் சொன்னான். மன்னனின் மன்னிப்பு மனதார இருப்பதை உணர்ந்துகொண்ட ஆழ்வாரும் காஞ்சிக்குத் திரும்ப முடிவு செய்தார். அவர் மட்டும் திரும்பினால் போதுமா? கூடவே கணிகண்ணனும், எல்லாத்துக்கும் மேலே பெருமாளும் அல்லவோ திரும்பணும்? அதுக்கும் ஆழ்வார்தான் மனசு வைக்கணும். ஆழ்வார் உடனேயே பெருமாளைப் பார்த்து,

“கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீகிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்
பைந்நாகப் பாய்விரித்துக் கொள்”

என்று வேண்டிக் கொள்ள பெருமாளும் ஆழ்வாரின் வேண்டுகோளுக்குத் தலைசாய்த்து காஞ்சிக்குத் திரும்பினாராம். அன்று முதல் இவருக்குச் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்ற பெயர் ஏற்பட்டது. இதே கதையில் கணிகண்ணனை மன்னன் பாடச் சொன்னான் என்பதற்குப் பதிலாக வேறு மாதிரியும் சொல்கின்றார்கள்.

திருமழிசை ஆழ்வாருக்கும், கணிகண்ணனுக்கும் சேவைகள் செய்து வந்த மூதாட்டியின் அன்பிலும், அவள் குணத்திலும் நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் போன திருமழிசை ஆழ்வார் அந்த மூதாட்டி இளமையில் சிறப்போடும், செல்வத்தோடும் வாழமுடியவில்லை என்பதை அறிந்து கொள்கிறார். அவருடைய பக்தியின், தவத்தின் உதவியால் பெருமாளை வேண்டி அந்த மூதாட்டிக்கு இளமை திரும்பக் கிடைக்கச் செய்கிறார். இந்தத் தகவல் மன்னனின் அரண்மனை வரையிலும் எட்ட, தானும், தன் ஆசைக்கிழத்தியும் வயது முதிர்ந்து வருவதை எண்ணிய மன்னன், நமக்கும் இளமை திரும்பினால் இன்னமும் பலநாட்கள் ஆநந்தம் அநுபவிக்கலாமே என எண்ணினான். திருமழிசை ஆழ்வாரை இதற்காக வேண்ட, ஆழ்வார் மறுக்கிறார். மூதாட்டியின் இறை பக்தியையும், மன்னனின் சுயநலத்தையும் சுட்டிக் காட்டிய அவர் திட்டவட்டமாய் மன்னன் கோரிக்கைக்கு மறுக்கிறார். மன்னன் விடாமல் கணிகண்ணனைக் கேட்க தன் குரு மறுத்த ஒரு விஷயத்திற்குத் தான் எங்கனம் உதவுவது என அவனும் மறுக்கிறான். கோபம் கொண்ட மன்னன் கணிகண்ணனை நாடு கடத்த அன்பு சீடனைப் பிரிய மனமில்லாமலும், பெருமாளையும் பிரிய மனமில்லாமலும் இருவரையும் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுகிறார் திருமழிசை ஆழ்வார். பின்னர் மன்னன் வேண்டுகோளின்படி திரும்புகிறார். இப்படியும் சிலர் சொல்கிறார்கள்.

ஸ்ரீமத் வேதாந்த தேசிகர் இந்தப் பெருமான் பேரில் அடைக்கலப் பத்து என்ற பாசுரங்களைப் பாடி உள்ளார். இந்தப் பாசுரங்கள் வெள்ளிப்பதக்கங்களில் பொறிக்கப் பட்டு ஸ்ரீவரதராஜருக்கு மாலையாக அணிவித்துள்ளனர். அடைக்கலப் பத்து தவிர, அருத்த பஞ்சகம், மெய் விரத மான்மியம், திருச்சின்ன மாலை ஆகிய பிரபந்தங்களையும் இயற்றியுள்ளார் ஸ்ரீதேசிகர். ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் கூட இந்தப் பெருமாளின் பெயரில் ஒரு கீர்த்தனை பாடியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

இந்தப் பெருமாள் தங்கக் கொண்டையுடன் காட்சி அளிப்பார். இந்தத் தங்கக் கொண்டையை இவருக்கு அளித்தது வெங்கடாத்ரி என்னும் தெலுங்கு அந்தணக் குடும்பத்தைச் சேர்ந்த வைணவர் ஒருவர். அவர் ஸ்ரீரங்கத்தின் பெருமாளுக்கு ஆப்ரணங்கள் வழங்கி உள்ளதாய்த் தெரிய வருகிறது. ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்குத் தங்கக் கொண்டை செய்யவேண்டி, போதிய பணம் பெற யாசகம் செய்து பொருள் சேர்த்தார் வெங்கடாத்திரி. நகை செய்யும் ஆசாரியிடம் பொருளைக் கொடுத்துப் பொன் வாங்கி கொண்டை செய்யச் சொல்ல, அதில் நட்ட நடுவில் பதிக்கவேண்டிய எமரால்ட் கற்களைப் பார்த்த ஆசாரியின் ஆசை மனைவியான நடன நங்கை அதைத் தன்னோடு எடுத்துச் சென்றுவிட்டாள். இந்த் அவிஷயம் அறிந்த வெங்கடாத்ரி அந்த மாது எங்கே இருக்கிறாள் எனக் கேட்டறிந்து அவள் வசித்து வந்த தஞ்சைக்கே சென்று அங்கே அவள் வீட்டு வாயிலில் உண்ணாவிரதம் இருந்து அந்தக் கற்களை மீட்டு வந்தார். பின்னர் பெருமாள் அவர் கனவில் வந்து ஸ்ரீதேவி, பூதேவிக்கு அவ்வாறே செய்து கொடுக்கும்படிச் சொல்ல அவ்வாறே இரு நாச்சிமார்களுக்கும் இதே போல் யாசகம் செய்து பொருளீட்டி ஆபரணங்கள் செய்து கொடுத்திருக்கிறார் வெங்கடாத்ரி.

நம்மை ஆண்ட ஆங்கிலேயர்களில் சிலரும் இந்தக் கோயிலுக்குத் திருப்பணிக்குப் பண உதவி, ஆபரணங்கள் என நன்கொடையாகக் கொடுத்திருக்கின்றனர்.  ஆற்காடு யுத்தம் நடக்கும்போது ராபர்ட் கிளைவிற்கு உடலநலமில்லாமல் போக, இந்தக் கோயிலின் துளசிதீர்த்தம் பருகக் கொடுத்தனராம். நோய் தீர, நன்றிக்கடனாக ராபர்ட் கிளைவ், தான் போரில் வெற்றி வீரனாய்த் திரும்பும்போடு வரதார்ஜருக்கு விலை உயர்ந்த மகரகண்டியைக் கழுத்தில் அணிவிக்க அன்பளிப்பாய் அளித்தாராம். மேலும் பிரம்மோற்ச்வத்தின்போது காஞ்சிக்கு வந்து பெருமாளையும் தரிசிக்கும் வழக்கமும் கிளைவிற்கு இருந்திருக்கிறது. ஒருமுறை அத்தகைய பிரம்மோற்சவத்தின்போது பெருமாளின் அழகில் மயங்கிய கிளைவ் தன் மனைவியின் தங்கச் சங்கிலியை ஸ்ரீவரதனுக்குக் கொடுத்துவிட்டாராம். இன்றளவும் அந்தச் சங்கிலியை கருடசேவையின்போது சார்த்துவது வழக்கம் என்கின்றனர். கிளைவ் தவிர ஆங்கிலேய அதிகாரியான ப்ளேஸ்துரை என்பவரும் ஸ்ரீவரதருக்குத் தலையில் அணியும் ஆபரணத்தை அன்பளிப்பாய்த் தந்து மகிழ்ந்தாராம். ஸ்ரீவரதராஜர் கோயில் என்று சொன்னாலும் மூலவர் பெயர் தேவராஜப் பெருமாள். உற்சவருக்கே வரதராஜர் என்ற திருநாமம். உற்சவருக்கு இருக்கும் இரு தேவியருமே பூமாதேவியர் என்றும் சொல்கின்றனர். இதன் காரணமாய்ச் சொல்லப் படுவது, முகமதியர் படை எடுப்பின்போது விக்கிரஹங்களை மறைக்கவேண்டி, உடையார்பாளையம் ஜமீனுக்கு விக்கிரஹங்கள் எடுத்துச் செல்லப் பட்டன. பின்னர் அங்கிருந்து மீண்டும் வரும்போது விக்கிரங்கங்கள் மாறிவிட்டதாயும், இரு தேவியருமே பூமிப் பிராட்டியாக அமைந்துவிட்டதாகவும் சொல்கின்றனர். மேலும் உடையார்பாளையம் ஜமீனில் காஞ்சி வரதர் தவிர ஸ்ரீரங்கம் ரங்கநாதரும் அங்கே அடைக்கலம் புகுந்ததால், திரும்ப எடுத்து வரும்போது அடையாளம் காணமுடியாமல், சலவைத் தொழிலாளி ஒருவர் காஞ்சி வரதரின் ஆடையின் மணத்தை வைத்துக் கண்டு பிடித்ததாயும் கூறுவார்கள். இதன் காரணமாக சலவைத் தொழிலாளி வம்சத்தைச் சேர்ந்தவர்களுக்கு நவராத்திரியில் மரியாதைகள் செய்யப் பட்டு வருகின்றன.

உற்சவரின் திருமுகத்தில் காணப்படும் வடுக்கள் பிரம்மாவின் யாகத்தின் வெப்பம் தாங்காமல் ஏற்பட்டவை என்கின்றனர். இங்கே இருக்கும் வையமாளிகை என்னும் இடத்தில் உள்ள இரு பல்லிகளின் தரிசனம் மிகவும் சிறப்பாகச் சொல்லப் படுவது. ஸ்ருங்கிபேரர் என்னும் முனிவரின் குமாரர்கள் ஹேமன், சுக்லன் இருவரும் கெளதம முனிவரின் சீடர்கள். குருகுலத்தில் இருந்த இவர்கள் குருவுக்கெனக் கொண்டு வரும் தீர்த்தத்தில் சுத்தமில்லாமையால் இரு பல்லிகள் துள்ளிக்குதித்து வெளியே வர, சீடர்களின் கவனக்குறைவைக் கண்ட குருவானவர் இருவரையும் பல்லிகளாய்ப்பிறக்கும்படி சாபம் கொடுக்கிறார். சாபவிமோசனம் வேண்டிய இருவரையும் சத்தியவிரத க்ஷேத்திரமான காஞ்சியில் ஸ்ரீவரதராஜரை வழிபட்டு வரச் சொல்லி அனுப்பி வைக்க, இங்கே வந்து தவம் செய்த இருவருக்கும், யானை ரூபத்தில் வழிபட்டு வந்த இந்திரனுக்கும் ஒரே சமயம்சாபவிமோசனம் கிடைக்கிறது. இவர்களின் கதையைக் கேட்ட இந்திரன் தங்கப் பல்லி ஒன்றும், வெள்ளிப் பல்லி ஒன்றும் செய்து இங்கே பிரதிஷ்டை செய்ததாகவும் இந்தப் பல்லிகளைத் தொட்டுப் பிரார்த்திப்போருக்கு சகல தோஷங்களும் விலகும் என்றும் சொல்கின்றனர்.

இங்கு பாஞ்சராத்திரமுறைப்படி மந்த்ராஸநம் என்னும் திருப்பள்ளி எழச் செய்தல், ஸ்நாநாஸநம் என்னும் திருமஞ்சனம் அல்லது அபிஷேஹம், அலங்காரஸநம் என்னும் ஆடை, ஆபரணங்கள் அணிவித்து மலர்மாலைகள் சூட்டல், போஜ்யாஸநம் என்னும் உணவு படைத்தல், புநர் மந்த்ராஸநம் என்னும் துளசியால் அர்ச்சனையும் பர்யாங்காஸநம் என்னும் பள்ளியறை வழிபாடு போன்றவை நடைபெறுகின்றன. வருடத்தின் பனிரண்டு மாதங்களும் திருவிழாக்கள் உண்டு. மதுரையில் கள்ளழகர் வைகையில் இறங்குவது போல் இங்கே ஸ்ரீவரதராஜர் பாலாற்றில் இறங்குகிறார். இதற்குக் காரணமாய்ச் சொல்லப் படுவது:

மொகலாயர் படை எடுப்பின்போது வரதராஜர் காஞ்சிக்கு அருகே பாலாற்றங்கரையில் உள்ள செவிலிமேடு என்னும் ஊரில் லக்ஷ்மிநரசிம்மர் கோயிலில் அடைக்கலம் புகுந்திருக்கிறார். ஒரு வருஷத்துக்குக் காஞ்சி வரதருக்கு அந்தக் கோயிலிலேயே திருமஞ்சனம் மற்றும் அனைத்து உற்சவங்களும் நடைபெற்று வந்துள்ளது. இதன் அடையாளமாகவே ஒவ்வொரு சித்ரா பெளர்ணமிக்கும் காஞ்சி வரதர் பாலாற்றில் எழுந்தருளி லக்ஷ்மி நரசிம்மரை வலம் வந்து நன்றி தெரிவித்துச் செல்வதாய் ஐதீகம். இதே போல் வைகாசிமாசம் நடக்கும் பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் சோளிங்கபுரத்தில் வசித்த ஒரு பக்தனுக்காக பெருமாள் அங்கே சேவை சாதிப்பதாக ஐதீகம் ஒன்று உண்டு. அதற்காக மூன்றாம் நாள் உற்சவத்தின் போது அதிகாலை சூரியோதயத்தில் கருடவாகனத்தில் இரட்டைக்குடைகளோடு எழுந்தருளும் பெருமாளை சில நிமிட நேரம் அந்தக் குடைகளால் மறைக்கின்றனர். அந்த மறைக்கும் சில நிமிடங்கள் பெருமாள் சோளிங்கபுரத்தில் வசித்து வந்த தோட்டாச்சார் என்பவருக்காக அங்கே தரிசனம் கொடுப்பதாய் ஐதீகம். வருடா வருடம் கருடசேவைக்குக் காஞ்சி வந்த தோட்டாசாரியாருக்கு ஒரு வருஷம் வரமுடியாமல் போக மனம் வருந்தி பகவான் நினைவாகவே தவித்துக் கொண்டு இருக்க, பகவான் அவருக்கு அங்கேயே தன் தரிசனத்தைக் காட்டி அருளினார். அதன் நினைவாய் இது இன்றளவும் நடந்து வருவதாய்ச் சொல்கின்றனர்.

ஸ்ரீராமாநுஜருக்கு யக்ஞமூர்த்தி என்பவ்ருடன் நடந்த வாதத்தில் வெல்ல உதவியதும் இங்கேதான். கூரத்தாழ்வார் இழந்த தன் கண்களைத் திரும்பப் பெற்றதும் இங்கேதான். ஸ்ரீவரதாராஜஸ்தவம் என்னும் பாடல்களைப் பாடிப் பெற்றார் என்பார்கள். திருக்கச்சிநம்பிகள் ஸ்ரீவரதராஜருக்கு விசிறி கைங்கரியம் செய்து பெருமாளுடன் நேரடியாகப் பேசி அவர் கட்டளைகளை ஸ்ரீராமாநுஜருக்குத் தெரிவித்து வந்தாய்ச் சொல்லுகின்றனர். கவி காளமேகமும் கஞ்சி வரதரின் கருடசேவையைப் பார்த்துவிட்டு நிந்தாஸ்துதியாக ஒரு பாடலைப் பாடி இருக்கிறார்.

அத்தி வரதர் க்கான பட முடிவு


இத்துடன் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் பற்றிய பதிவுகள் முடிவடைந்தன. அத்தி வரதர் மூன்று நாட்களாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இப்போது மக்களுக்கு அதிகம் வசதிகள் செய்திருப்பதாகவும் வரிசையில் அதிக நேரம் நிற்காமல் மக்கள் வேகமாக நகருவதாகவும் சொல்கின்றனர். இன்று தொலைக்காட்சியில் காட்டியபடி மக்கள் கூட்டம் ஒரே இடத்தில் நின்று நசுங்கி நெருக்காமல் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தனர். நல்லபடியாக அத்திவரதர் அனைவருக்கும் அருள் பாலித்துவிட்டு மறுபடி போய்ப் படுத்துக்கட்டும். அதன் பின்னர் மழை கொட்டும் என்கின்றனர். வரதர் மழையை வரவழைக்கட்டும். மக்களுக்கு நன்மையே நடக்கட்டும்.

33 comments:

  1. /இப்படியும் சிலர் சொல்கிறார்கள்.// - இப்படித்தான் நான் படித்திருக்கிறேன். நீங்க எழுதினதைப் படித்ததும் இன்னொரு முறை அந்தப் பெருமாளை (யதோத்தகாரி, சொன்னவண்ணம் செய்த பெருமாள்) சேவிக்கணும்னு மனசுல தோன்றுகிறது. கொஞ்சம் வெயில் காலம் ஒழியட்டும். நான் மட்டும் செல்ல நினைத்திருக்கிறேன். (மனைவி, மகள் படிப்புல பிஸி.... வாட்ச்வுமன் ஹா ஹா)

    ReplyDelete
    Replies
    1. வாங்க நெல்லை, நன்றி.

      Delete
  2. //ஸ்ரீதியாகராஜ ஸ்வாமிகள் கூட இந்தப் பெருமாளின் பெயரில் ஒரு கீர்த்தனை பாடியுள்ளதாகவும் தெரிய வருகிறது.//

    தியாகராஜ ஸ்வாமிகள் இரண்டு கீர்த்தனை பாடியுள்ளார்.

    வரதராஜ நிந்நு கோரி - ஸ்வரபூஷணி - ரூபக தாளம்
    இன்னொரு பாடல் வரதா நவநீதாசா - ராகபஞ்சரம்

    வரதா நவநீதாசா பாஹி வர டானவ மாட நாசா ஏஹி

    எல்லாம் தேடிக் கவர்ந்ததுதான்.

    ReplyDelete
    Replies
    1. அட? நெல்லை! உங்களுக்கு இதெல்லாம் கூடத் தெரியுமா? பாடுவீங்களோ?

      Delete
  3. //அத்தி வரதர் மூன்று நாட்களாக நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.// - நான் நேற்று முதல் நாள் தரிசனம் செய்தேன். இன்று இரண்டாவது நாள்.

    ReplyDelete
    Replies
    1. அதிர்ஷ்டம் தான்! எங்களால் எல்லாம் முடியாது! இங்கேயே பார்த்துக்கறோம். அநேகமாத் தொலைக்காட்சி தயவிலே தினம் 2,3 தரம், முகநூல் தயவிலே 4,5 தரம் பார்க்கிறேன்.

      Delete
  4. //மக்களுக்கு அதிகம் வசதிகள் செய்திருப்பதாகவும் வரிசையில் அதிக நேரம் நிற்காமல் மக்கள் வேகமாக நகருவதாகவும் சொல்கின்றனர். //

    10 ரூபாய் பஸ் நிறுத்தும் இடத்திலிருந்து 1 கிலோ மீட்டருக்கும் அதிகமாக நடக்கவேண்டியுள்ளது.

    நேற்று பெண்ணுக்கு மாலை 6 மணிக்கு 300 ரூ டிக்கெட் புக் பண்ணியிருந்தது (அதுக்கே ரொம்ப கஷ்டப்பட்டது. இரண்டாவது முயற்சி பண்ணுவதற்குள் முடிந்துவிட்டதாம். இருவரும் முயற்சித்திருக்கிறார்கள்). அதுனால நான் மட்டும் அவளைக் கூட்டிக்கொண்டுபோய் 300 ரூ டிக்கெட் கியூவில் விட்டுவிட்டு, வெளியே வரும் வழியில் திரும்பக் கூட்டிக்கொண்டு திரும்பணும் என்ற திட்டம். 1 கிலோ மீட்டர் நடந்து கோவில் நுழைவாயில் அருகே வந்ததும் காவலரிடம் (ஒன்றுக்கு மேல்...நாங்கள்லாம் சந்தேகப்ப்ராணியில்லையா) கேட்டதற்கு 300 ரூ டிக்கெட் நுழைவாயிலுக்கு இன்னும் 600 மீட்டருக்கு மேல் நடக்கணும், இப்போ இங்க கூட்டம் கம்மி, 1 மணி நேரத்துக்குள் தரிசனம் செய்துடலாம் என்றார். நாங்கள் சென்று சேர்ந்த நேரம் 4.30 மணி. அதனால் இருவரும் சர்வ தரிசன கியூவில் நின்றோம்.

    நிறைய தடுப்பு தடுப்பா போட்டு, 100 பேர் நகர்ந்து இடம் வந்தால்தான் அடுத்த நூறு பேரை கியூவில் முன்னேற விடுகிறார்கள். அப்படி மெதுவாக நகர்ந்து நேரடி வரிசையில் வருவதற்கு 1 மணி நேரம் ஆகியது. இந்த நேரடி வரிசைக்கு நான் ஒரு மாதம் முன்பு, உடனேயே சென்றுவிட்டேன் (அப்போ இந்தத் தடுப்புகள் கிடையாது). அப்புறம் 1 மணி 20 நிமிடங்களில் (மொத்தம் 2 மணி 20 நிமிடங்கள்) பெருமாள் தரிசனம் செய்தேன். மூன்று வரிசை இருக்கு. அதில் இடது பக்க வரிசையில்தான் நிறையபேர் இருப்பதால் அது மெதுவாகத்தான் நகர்ந்தது. நிறைவான தரிசனம்.

    வழியில் தண்ணீர் கொடுக்க காவலர்கள், முடியலைனா, வரிசையை விட்டு வெளியேற வசதி, மெயின் வரிசையில் வரும் வரை, அல்பசங்கைகளுக்காக நிறைய மொபைல் டாய்லட்டுகள், நெரிசல் ஏற்படாமல் இருக்க போலீஸ் கண்காணிப்பு என்று நிறையச் செய்திருந்தார்கள். குறை சொல்ல ஏதுமில்லை. கடைசியில் தரிசன மண்டபம் வரும் வரை, 100 பேர்களை முன்னேறச் செய்வது, மற்றவர்களை நிறுத்தி இடைவெளி ஏற்படுத்துவது என்று ரொம்ப கவனமாக இருந்தார்கள்.

    தரிசனம் முடிந்து கோவிலை விட்டு வெளியே வந்து சுமார் 1 கிலோ மீட்டருக்கும் அதிகமாக நடந்து 10 ரூபாய் பஸ் பிடிக்கவேண்டியிருக்கு. கூட்டம் அதிகம் என்பதாலும், மக்கள் மெதுவாகத்தான் இந்த ஒரு கிலோமீட்டரைக் கடப்பதாலும், வழியில் நிறைய சிறு கடைகளில் மக்கள் நின்றுவிடுவதாலும் இந்த 1 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடக்க கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. ஆனால், சாலையோர, குடிநீர்க் கடைகள், சிறு உணவுக் கடைகள், ஹெரிடேஜ், ஆவின் பால் பெரிய கடைகள் என்று சிரமம் தீர்க்க நிறைய கடைகள் இருந்தன.

    மதிய நேரம் என்றால், வரிசை ரொம்ப கசகசப்பாகவும் வெக்கையாகவும் இருக்கும். நிறைய கன்னட தெலுங்கு மக்கள் தரிசனத்துக்கு வருகிறார்கள்.

    நான் 4ம் நாளில் (சென்ற மாதம்) போனதுக்கும் இப்போ போனதுக்கும் வித்தியாசம் இருந்தது. இப்போ லட்சம் பேருக்கு மேல் வந்தாலும் தாங்கக்கூடிய அளவு ஏற்பாடுகள் இருந்தன.

    ReplyDelete
    Replies
    1. மாடவீதியிலேயே குடி இருக்கும் நண்பர் கேசவபாஷ்யம் அலுவலகம் சென்று வீடு திரும்ப முடியவில்லையாம். இத்தனைக்கும் அவர் அங்கேயே இருக்கிறார் என்னும் ரெசிடென்ட் பாஸ் வைத்திருக்கிறார். அதைக் காட்டியும் அனுமதி மறுத்துப் பின்னர் கடும் வாக்குவாதங்களுக்குப் பின்னர் போயிருக்கார்! :(

      Delete
    2. பள்ளி செல்லும் குழந்தைகள் இன்னமும் அதிகமாய்க் கஷ்டப்படுவதாய்ச் சொல்கின்றனர்.

      Delete
  5. கிடந்த கோலத்தைவிட, நின்ற கோலம் தரிசிக்க சுலபம், தூரத்தில் இருந்தாலும் தெளிவாகத் தெரியும். அதனால் வரிசை வேகமாக நகர்வதில் ஆச்சர்யம் இல்லை. அங்கயும், பெருமாள் முன்னால நின்னு படம் எடுக்க முயற்சிக்கிறார்கள், போலீஸ் அதனைத் தடுக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நெல்லைத் தமிழரே, நின்ற கோலத்தில் பெருமாளைப் பார்ப்பது வசதி தான்!

      Delete
  6. பத்து வருடங்களுக்கு முன்னால் சென்ற காஞ்சி வரதராஜர் கோவில் பயணம் பற்றி எழுத ஆரம்பித்து நிகழ்கால அத்திவரதர்ல வந்து முடிச்சுட்டீங்க.

    ReplyDelete
    Replies
    1. இப்போ அத்தி வரதர் தானே சீசன்? அதான்!

      Delete
  7. வரதன் வரலாறுகள் அனைத்தும் படித்தேன்.
    காஞ்சி வரதராஜபெருமாளின் பெருமைகளை நாள் முழுக்க கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
    நின்ற கோலம் அருள் பாலிப்பதை தினம் தொலைக்காட்சியில் காலை, மாலை பார்க்கிறேன்.

    //நல்லபடியாக அத்திவரதர் அனைவருக்கும் அருள் பாலித்துவிட்டு மறுபடி போய்ப் படுத்துக்கட்டும். அதன் பின்னர் மழை கொட்டும் என்கின்றனர். வரதர் மழையை வரவழைக்கட்டும். மக்களுக்கு நன்மையே நடக்கட்டும்.//

    அத்தி வரதரை நானும் வேண்டிக் கொள்கிறேன் உங்களுடன் சேர்ந்து.
    அங்கு போய் பார்க்கமுடியாதவர்கள் காலை பிரம்ம முகூர்த்த வேளையில் அவரை நினைத்து வணங்கி பூஜை செய்தால் அத்தி வரதர் நலங்களை தருவார் என்று ஒருவர் தொலைக்காட்சியில் சொன்னார்.


    ReplyDelete
    Replies
    1. நன்றி கோமதி! அத்தி வரதர் அருளால் மழை பொழிந்து நாடு செழிக்கட்டும். ஆனால் சென்ற வாரம் கும்பகோணம் போனப்போ கிராமங்களில் நடவு முடிந்திருந்தது. சில ஊர்களில் அறுவடையும் ஆரம்பம். முதல் போகம்னு நினைக்கிறேன். அப்படி ஒன்றும் வறட்சி தெரியவில்லை.

      Delete
  8. பெருமாள் ஊர் விட்டுச் சென்ற கதை இருவேறாயினும் மையம் ஒன்றுதான்.​ அவர் ஊரைவிட்டு வெளியேறி திரும்புகிறார்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஶ்ரீராம். ஊரை விட்டு வெளியேறிப் பின் உள்ளே வருகிறார்.

      Delete
  9. கிளைவின் பெருமாள் பக்தி பற்றி பற்றி கேள்விப்பட்டநினைவு.

    ReplyDelete
  10. இரண்டு நாட்களாக சீக்கிரம் தரிசனம் செய்து விடுவதாக செய்திகள் கூறுகின்றன. ஏற்பாடுகள் பலமா? அல்லது கூட்டம் கம்மியா? தெரியவில்லை.

    ReplyDelete
    Replies
    1. ஏற்பாடுகள் ஓரளவு நன்றாக இருக்கிறது. ஏகப்பட்ட காவலர்களைக் குவித்திருக்கிறார்கள், 1 லட்சத்துக்கு மேல் கூட்டம் வந்தாலும் சமாளிக்க. எனக்கு ஏற்பாடுகளில் முழு திருப்தி.

      Delete
    2. குறைகள், நிறைகள் இரண்டுமே இருக்கின்றன ஶ்ரீராம். ஆனால் இப்போது அல்ப சங்க்யைக்காக வசதிகள் கூடுதலாகச் செய்திருக்கின்றனராம். கோயில் உள்ளே பிரகாரத்தில் ஒரே நாற்றம் சகிக்கமுடியவில்லை, அதைச் சுத்தம் செய்யணும் என்று சொல்லி இருக்கின்றனர். மற்றபடி பெரிய அளவில் பிரச்னைகள் இல்லை என்றே சொல்கின்றனர். கூட்டம் வந்தாலும் விரைவில் தரிசனம் கிடைப்பதாகவும் சொல்கின்றனர்.

      Delete
    3. //கோயில் உள்ளே பிரகாரத்தில் ஒரே நாற்றம் சகிக்கமுடியவில்லை, // - எழுத விட்டுப்போய்விட்டது. நிறையபேர் கர்சீப்பால் மூக்கை மூடிக்கொண்டிருந்தனர். அந்த முதல் வளாகம் முழுவதும் 'சகிக்க முடியாத நாற்றம்' என்றே தோன்றுகிறது. எனக்குத்தான் வாசனை தெரியாதே..

      Delete
    4. ஆமாம், நாற்றம் சகிக்க முடியவில்லை என்றே சொன்னார்கள். இதனால் பலரின் உடல்நலம் பாதிக்கக் கூடும்.

      Delete
  11. வணக்கம் சகோதரி

    தொடர்ச்சியான "சொன்ன வண்ணம் செய்த பெருமாள்"கதை முடிவு நன்றாக இருந்தது. வேறு மாதிரி கூறுகிற கதையும் அறிந்து கொண்டேன். ஆங்கிலேயர்கள் மெய்மறந்த பக்தியில் நம் தெய்வங்களையும் மனதாற வணங்கியுள்ளனர். அவர்கள் வேண்டும் வேண்டுதல்கள் நிறைவேறிப் போகும் போகும் போது அவர்கள் மனமுவந்து பக்திப் பரவசமடைந்திருக்கிறார்கள். மனிதர்களை படைத்த ஆண்டவனுக்கு என்றுமே பாகுபாடு என்பது கிடையாதே.!

    தாங்கள் மிகவும் விபரமாக காஞ்சி வரதராஜ பெருமாள் பற்றி கூறியுள்ளீர்கள்.எவ்வளவு விமரங்கள்.! இத்தனையும் திரட்டி எங்களுக்கு படிக்கத்தந்த தங்களுக்கு மிக்க நன்றி. அனைத்தும் படிக்க படிக்க மிகவும் சந்தோஷமாகவும், மனத்திருப்தியாகவும் நிறைவாகவும் இருக்கிறது.

    அத்திவரதரின் அருளால் மழை பொழிந்து அனைவரும் வளமுடன் வாழ நானும் வரதராஜ பெருமாளை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, எல்லாவற்றையும் ஆழமாகப் படித்துக் கருத்துச் சொல்வதற்கு நன்றி. அத்திவரதர் அருளால் மழை பொழிய வேண்டும்.

      Delete
  12. அத்தி வரதருடன் ஆங்கிலேயர்கள் பந்தப்பட்ட வரலாறு எனக்கு ஆச்சர்யமான தகவல்கள்.
    தொடர்கிறேன்... (நேற்று கருத்துரை இடமறந்து விட்டேன் போல)

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நானும் தாமதமாகவே பதில் கொடுக்கிறேன்.

      Delete
  13. கிளைவ் பற்றிய தகவல்கள் படித்திருக்கிறேன் - பை நாகப் பை கதையும்.

    அத்தி வரதர் தரிசனத்திற்கான வசதிகள் - இன்னும் செய்யலாம். தரிசிக்க வரும் பக்தர்களும் ஒத்துழைப்பு தரவேண்டும். ஆனால் தருவதில்லை என்பது கண்கூடு! பல முறை திருவரங்க தேரோட்டச் சமயங்களில் மக்கள் செய்யும் பல தகாத செயல்களைக் கண்டு வெறுத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், வசதிகள் நிறைய இருப்பதாக ஒரு சாராரும் இல்லை என இன்னொரு சாராரும் கூறுகின்றனர். ஆனால் காவல்துறை கெடுபிடி அதிகமாக இருப்பதாகவும் உள்ளூர்க்காரர்களையே மாடவீதிகளில் அவரவர் வீட்டிலிருந்து வெளியே காரிய காரணங்களுக்குக் கூட அனுமதிப்பதில்லை என்றும் உள்ளூர் நண்பர் கேசவ பாஷ்யம் வி.என். வருந்துகிறார்.

      Delete
  14. காஞ்சி வரதன் மஹாத்மியம் படிக்க விருந்து. திருமலை ஸ்ரீனிவாசனுக்கும் ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஒரு வெள்ளைக்கார துரை பக்தனாகியிருந்தான் எனப் படித்திருந்தேன். அவனது திருநாமம் நினைவில்லை.
    அத்திவரத தரிசனம் எளிதாகியிருந்தால் அடியார்களுக்கு நல்லதே.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், நேற்று ஒரு நாள் மட்டும் ஐந்து லக்ஷம் பக்தர்கள் தரிசனம் செய்திருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இரவு ஒரு மணி வரை தரிசனம் செய்விக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். எளிதாகவெல்லாம் ஆகி இருப்பதாய்த் தெரியலை. ஆனாலும் மக்கள் கூட்டம் நெரிகிறது. வெளிமாநில மக்களும் அதிகமாக வந்திருப்பதாகவும்/வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்!

      Delete
  15. வரதராஜபெருமாள் தகவல்கள் அறிந்து கொண்டோம்.

    பல்லிகளை தொட்டு நாங்களும் வணங்கி இருக்கிறோம்.

    ReplyDelete