எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, November 19, 2019

ஹூஸ்டனில் இந்திய ஓட்டல்கள்! "திங்க"ற கிழமைக்கு ஒரு பதிவு!

பொதுவாகவே இப்போ இந்தியாவிலும் அதிலும் தமிழ்நாட்டில் ஓட்டல்கள் சாமானியர்களால் சாப்பிட முடியாத அளவுக்கு விலை உயர்வுடனும் தரமற்றும் காணப்படுகிறது. இதுக்குச் சில ரோட்டோரக் கடைகளும், மெஸ் எனப்படும் சின்னஞ்சிறு ஓட்டல்களும் ஓரளவுக்குச் சாப்பிடும்படி இருக்கும். இங்கே அம்பேரிக்காவிலும் பல இந்திய ஓட்டல்கள் உள்ளன. இங்கே பதினைந்து வருஷங்களுக்கு முன்னே வர ஆரம்பிச்ச போதில் இருந்து பல ஓட்டல்களுக்கும் போய்ச் சாப்பிட்டுப் பார்த்திருக்கோம். பெரும்பாலும் இங்கே இந்திய உணவுகளைச் சமைப்பவர்கள் ஸ்பானிஷ் பேசும் மெக்ஸிகன்கள் தான். அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துச் செய்ய வைத்திருக்கின்றனர். ஆனாலும் வட இந்திய ஓட்டல்களின் உணவு பரவாயில்லை எனச் சொல்லும்படித் தென்னிந்திய உணவுகள் இருக்கின்றன. தோசையை முறுகலாக வார்ப்பதாக நினைத்துக்கொண்டு தூள் தூளாக வரும்படி விறைப்பாக வார்த்துவிடுகிறார்கள். ஒரு பக்கம் ரப்பர் மாதிரி இழுக்கும். இன்னொரு பக்கம் நொறுங்கும். தொட்டுக்கக் கொடுக்கும் கண்ணராவி வட இந்திய ஓட்டல்களில் தக்காளிச் சாறில் மிளகாய்த் தூள், உப்புச் சேர்த்து வெங்காயத்தை வதக்கிப் போட்டிருப்பார்கள் சாம்பார் என்னும் பெயரில்! தக்காளிச் சட்டினி கொஞ்சம் பரவாயில்லை ரகம். தேங்காய்ச் சட்டினி கேட்கவே வேண்டாம். பச்சைத் தேங்காயை உடைத்துச் செய்யும் சட்டினியே பல சமயங்களில் இங்கே சுமாராக இருக்கும். தேங்காயின் தரம் அப்படி! பெரும்பாலான ஓட்டல்களில் காய வைத்த தேங்காய்ப் பவுடரிலோ ஃப்ரோசன் தேங்காய்ப் பவுடரிலோ செய்யறாங்க. அது இன்னும் சுத்தம்.

ஆனால் இங்கே அதையும் நல்லா இருக்குனு சொல்லிச் சாப்பிடுபவர்கள் அதிகம். இந்த அழகில் எங்களை எல்லாம் ஓட்டலுக்குக் கூட்டிப் போனால் கூட்டிச் செல்லுபவர்கள் பாடு திண்டாட்டம். பையர் இதைக் கண்டுக்கவே மாட்டார். பொண்ணு நல்ல ஓட்டலுக்குக் கூட்டிப் போகிறோம் என்று முதலில் ஓர் குஜராத்தி ஓட்டலுக்குக் கூட்டிச் சென்றாள். நான் சாமர்த்தியமாகச் சாப்பிடுவதாக நினைத்துக்கொண்டு தயிர் வடையும், கசோடியும் சொன்னேன். கசோடிக்குப் பதிலாக மேதி போண்டா மாதிரிப் போட்டுக் கொண்டு வைச்சுட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! தயிர் வடையில் தயிர் புளிப்போ புளிப்பு! அதையும் போனால் போகிறது என்று சாப்பிட்டு வைத்தேன். நம்மவர் சனா படூரா வாங்கிக் கொண்டு தப்பித்துவிட்டார். எனக்கு அது அவ்வளவாப் பிடிக்காது. கொண்டைக்கடலையில் பூண்டு சேர்த்துப் பண்ணி இருப்பாங்க. இந்த அழகில் இருக்கு எல்லா ஓட்டல்களும். அதனால் பொண்ணு எங்களை சரவணபவன் ஓட்டலுக்குக் கூட்டிச் சென்றாள் போன வாரம்.

அங்கே நம்ம ஊர் மினி டிஃபன் மாதிரி 2,3 கலவை மினி டிஃபன்கள் இருந்தன. அதில் முதல் பட்டியலில் இட்லி 1, மசால் தோசை 1, கிச்சடி, ஸ்வீட் என இருந்தது. இன்னொன்று இட்லி, பொங்கல், வடை, ஸ்வீட், அடுத்தது தோசை சாதா ஒன்று, ஒரு இட்லி, ஒரு வடை! என இருந்தது. நான் கொஞ்சம் வயிறு நிரம்பணுமே என்பதால் பட்டியலில் முதலாவதைத் தேர்ந்தெடுத்தேன். நம்மவர் எப்போப் போனாலும் மசால் தோசை தான். அல்லது மைசூர் மசாலா. மாப்பிள்ளை அடை, அவியல் வாங்கிக்கொள்ளப் பென்ணும், அப்புவும் தோசை வாங்கிக் கொண்டார்கள். எல்லாவற்றுக்கும் முன்னால் எனக்கு வந்துவிட்டது. பொதுவாக மற்ற ஓட்டல்கள் போனால் இம்மாதிரி கலந்து கட்டிய டிஃபன் எனில் ஒவ்வொன்றும் பண்ணி எடுத்துவர நேரம் ஆகும். ஆனால் இங்கே முதலில் வந்ததோடு அல்லாமல் வரும்போதே இட்லி மேல் ஊற்றிய சாம்பாரைக் கொட்டித் தட்டெல்லாம் ஆக்கிக் கொண்டு வந்தார் அந்த ஊழியர். அதையும் முன்னால் உட்கார்ந்திருக்கும் என்னிடம் உங்களுக்கானு கேட்காமல் கடைசியில் உட்கார்ந்திருந்த நம்மவரைக் கேட்டார் உங்களுக்கானு.

 கூடவே இன்னொரு கையில் சாதா தோசை அப்புவுக்கு. நாங்க இரண்டு பேரும் எங்களுக்குனு சொன்னதும் கொண்டு வந்து வைச்சார். தொட்டுப் பார்த்தால் ஜில்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ ஜில்! எனக்குத்  தான் அப்படின்னால் அப்புவுக்கும் அப்படியே! வேறே என்ன செய்யறது? நம்ம ஊரானால் நான் ஒரு பிடி பிடிச்சிருப்பேன். இங்கே இவங்கல்லாம் ஏதேனும் நினைச்சுக்கப் போறாங்கனு வாயைத் திறக்காமல் கிடைச்ச கொஞ்சூண்டு இடைவெளி வழியாக அந்த உணவைத் தலை எழுத்தேனு சாப்பிட்டேன். இட்லி மட்டும் பரவாயில்லை ரகம். கிச்சடியில் வெறும் ரவையை வெந்நீரில் கொதிக்க வைத்து(மறக்காமல் உப்புச் சேர்க்காமல்) மஞ்சள் பொடி மட்டும் போட்டு வைச்சிருந்தாங்க கிச்சடி என்னும் பெயரில். மருந்துக்குக் கூட ஒரு காயும் இல்லை. அடுத்து மசால் தோசை. ரப்பர் எனில் உள்ளிருந்த மசாலாவில் வெறும் உருளைக்கிழங்கை வேக வைத்து அதிலும் உப்பு இல்லாமல் வைச்சிருந்தாங்க.ஓட்டலில் உப்பே வாங்க மாட்டாங்களோனு நினைச்சேன். ஸ்வீட் என்னும் பெயரில் இருந்த கேசரி பரவாயில்லை ரகம் என்றாலும் அதில் ஊற்றி இருந்த எண்ணெய் சாப்பிட விடலை.

நம்மவருக்கும் அதே மசாலாவை வைத்து தோசை வர தோசையை ஒரு மாதிரி சாப்பிட்டு வைத்தார். பொண்ணுக்கு அவள் கேட்ட ரவாதோசை வந்தது. ஆனால் ஆறிப்போயிருந்தது. மாப்பிள்ளைக்கு அடை என்னும் பெயரில் இட்லிமாவில் கடலைமாவைச் சேர்த்து மிளகாய்ப் பொடி போட்டு நினைவாக உப்புச் சேர்க்காமல் இரண்டு தோசைகள் வார்த்து வந்தன. அவியல் என்னும் பெயரில் ஒரே ஒரு முருங்கைக்காயும், ஒரு துண்டம் பூஷணிக்காயும் போட்ட மோர்க்குழம்பு மஞ்சளாக ஓடிக் கொண்டிருந்தது தட்டில். அங்கிருந்த சூபர்வைசரிடம் கூப்பிட்டுச் சொன்னோம்.சூபர்வைசர் விசாரிக்கிறேன் என்று சொன்னார். ஆனால் வேறே ஒண்ணும் கவலைப்பட்டுக்கலை அவர். வேறே வழியே இல்லை. காஃபி நல்லா இருக்கும், குடினு பொண்ணு உபசாரம் பண்ண, நான் பயத்துடன் வேண்டாம்னு சொல்லிட்டேன். மத்தவங்க குடிச்சாங்க! அடைக்கு வேணாப் பைசாக் கழிச்சுக்கறோம்னு சொல்லிட்டு அதுக்கு மட்டும் பில் போடாமல் பில் கொடுத்தாங்க. இப்படியாகத் தானே பிரபலமான சரவணபவனாக இருந்தால் என்ன? எதுவாக இருந்தால் என்ன? இப்படித் தான் இருக்கும் என்று புரிந்தது.

மீனாக்ஷி கோயிலுக்கு 3 ஆம் தேதி போனோம். அது பற்றி விரைவில் எழுதறேன். கொஞ்சம் கொஞ்சம் படங்களுடன் எழுதுவேன்.  இன்னிக்கு இங்கே "திங்க"க்கிழமை இன்னமும் முடியலை. ஆதலால் "திங்க"ற பதிவு போட்டுட்டேன். செரியா? :)))))

45 comments:

 1. //தோசையை முறுகலாக வார்ப்பதாக நினைத்துக்கொண்டு தூள் தூளாக வரும்படி விறைப்பாக வார்த்துவிடுகிறார்கள்.//

  அப்பா...இதை சரியாய் இப்படிச் சொல்லத்தெரியாமல்நான் இவ்வளவு முருகலாகஇல்லை, கருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், நான் எப்போவுமே இங்கெ எல்லாம் வந்தால் தோசையை விரும்பி உண்ணுவது இல்லை. முதல் முறை பதினைந்து வருஷங்களுக்கு முன்னாலேயே பார்த்தாச்சு! இப்போ இன்னும் மோசம். நம்ம ஊர் ஆட்கள் பலர் இந்தியாவுக்கே திரும்பி விட்டதால் இந்தப் பிரச்னை என்று சொல்லுகிறார்கள். ஆனால் எனக்குத் தெரிந்து பதினைந்து வருஷமா இப்படித்தான்! :)))))

   Delete
  2. தோசை வார்ப்பது பற்றி வகுப்பு எடுக்கலாமானு தோணும்! :(

   Delete
  3. வகுப்புலாம் எடுங்க. உங்க இடுகையைப் பார்த்தப்பறம், எண்ணெயில் பெ.பொடி, உப்பு, காரப்பொடி குழைத்து, அதில் வெந்த உருளைகளைப் போட்டுக் கலக்கி பிறகுதான் உருளைக்கறி செய்யறேன். நல்லாவே வருது (சில சமயம் எண்ணெய் அதிகமாகச் சேர்த்துக் குழைத்தால் காரம் குறைந்துவிடும். அது இன்னும் சரியா வசப்படலை)

   Delete
  4. அதைப்பற்றி ஒரு பதிவு தாராளமாக போடலாம். சுவாரஸ்யமாக இருக்கும்.  இங்கு எண்ணங்களிலேயே போடுங்கள்!

   Delete
  5. நெல்லைத்தமிழரே, எண்ணெய் கொஞ்சமாகச் செலவு செய்யத் தான் அப்படிக் குழைப்பதே! க்ர்ர்ர்ர்ர்ர்ர், அதிலே போய் நிறைய எண்ணெய் ஊத்தறீங்களே!அரைக்கிலோ உருளைக்கிழங்கு எனில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் போதும். கடாயில் தாளிக்கையில் ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு தாளித்தால் போதும்.

   Delete
  6. எதைப்பற்றி ஸ்ரீராம்? நெல்லைத்தமிழன் சொன்ன உ.கி.கறியா? இல்லைனா தோசை வார்ப்பதா?

   Delete
  7. தோசை வார்ப்பது பற்றி...

   Delete
 2. திங்கக்கிழமை என்று நீங்கள்போட்டாலும் எங்களுக்கு இப்போது செவ்வாய்க்கிழமைதான்!

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம், இதை எழுதி ஒரு வாரம் ஆகிவிட்டது. சில, பல காரணங்களினால் வெளியிடலாமா வேண்டாமா என்று நினைத்தேன். அதோடு கொஞ்சம் மன வருத்தம் கொள்ளும்படியான சில சம்பவங்கள். அது குறித்து நாளைக்கு விபரமாகத் தெரிய வரலாம். பையர், மாட்டுப்பெண்ணின் உடல்நிலை வேறே ரொம்பவே மோசமாக இருந்து இப்போத் தான் சரியாக ஆயிட்டு இருக்கு! :( இங்கே இன்னமும் திங்கள் முடியலையே! :)))))

   Delete
 3. ஓ...   கடைசி வரியை இப்போதுதான் படிக்கிறேன்.   ஸோ...  நோ கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ப்ளீஸ்!

  ReplyDelete
  Replies
  1. எதுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரணும்? புரியலையே!

   Delete
 4. சரவணபவனிலேயே இந்த கதி என்றால் என்ன செய்ய!   அங்கு கிடைக்கும் பொருட்களை வைத்து சமாளிக்கிறார்கள் போல!

  ReplyDelete
  Replies
  1. இப்போ நிச்சயமா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், பொருட்கள் எல்லாம் நன்றாகவே கிடைக்கிறது. இங்கே வீட்டில் அதே பொருட்கள், காய்கள், மளிகைப் பொருட்கள் தானே! நல்லாத் தான் வருது. கிடைக்கும் ஆட்களை வைத்துச் செய்வதால் வரும் வினை! :)))))

   Delete
  2. என் நண்பர்கள் சொல்லியிருக்காங்க. தென் ஆப்பிரிக்க தேசத்தில் வேலை செய்யவரும் அந்த நாட்டவருக்கு நம் உணவு சமைக்க டிரெயினிங் கொடுத்துவிடுவார்கள், அப்புறம் அந்தப் பெண்ணே சமைத்துவைத்துவிட்டுப் போகும் என்பார்கள்.

   Delete
  3. //சரவணபவனிலேயே இந்த கதி என்றால்// - இரண்டு வாரங்களுக்கு முன், ஆஃபர் என்று, சரவணபவன் சாப்பாடை ஆன்லைனில் வாங்கிச் சாப்பிட்டு நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும். 88களின் தரத்தில் 1 சதவிகிதம் கூட இப்போ இல்லை. நம்ம ஊரே இந்தக் கதி என்றால்...

   Delete
  4. அப்புறமும் ஏன் காய வைத்த தேங்காய்ப் பவுடரிலோ ஃப்ரோசன் தேங்காய்ப் பவுடரிலோ செய்யறாங்?

   Delete
  5. ஆமாம், நெ.த. தெ.ஆப்ரிகா மட்டுமில்லை. அரபு நாடுகளிலும் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும்போது வேலைகளில் உதவி செய்யும் பெண்ணிற்குச் சமைக்கச் சொல்லிக் கொடுப்பாங்க என்று கேள்விப் பட்டிருக்கேன். இப்போ இங்கே இந்தியாவிலேயே அப்படி இருக்கு. மஹாராஷ்ட்ராவில் மும்பையில் இருக்கும் உறவுக்காரப் பெண் கொங்கணி ஊழியருக்குத் தமிழகச் சமையலைச் சொல்லிக் கொடுத்துட்டார்.

   Delete
  6. எங்களுக்கு நேரில் போய்ச் சாப்பிடுவதிலேயே ஆயிரம் நொட்டுச் சொல்லுவோம். ஆன்லைனில் எல்லாம் எந்த உணவும் வாங்கிச் சாப்பிட்டதில்லை/சாப்பிடவும் மாட்டோம். :)))) ஆகவே தப்பு உங்க மேலேத் தான் நெ.த.

   Delete
  7. ஸ்ரீராம், இங்கே முழுத்தேங்காய் வாங்கினால் நம்ம ஊர்த் தேங்காய் மாதிரி ருசி இருக்காது. பல சமயங்களிலும் உள்ளே கறுப்பாக இருக்கும். வறண்டு காணப்படும். தேங்காயாகவே இருந்தாலும் எண்ணெய் வாசனை, காரல் வாசனை வரும். அதுக்கு ஃப்ரோசன் தேங்காய்த் துருவல் வாங்குவதோ கொப்பரைத் துருவல் வாங்குவதோ எளிது, லாபமும் கூட.

   Delete
  8. @ஸ்ரீராம் - கல்ஃப்லயும் பெரும்பாலான ஹோட்டல்கள்ல, தேங்காய் பவுடரை வாங்கி ஊறவைத்து (வெந்நீரில்) பிறகு அரைத்து சட்னி பண்ணுவாங்க. இதுக்கு காரணம், 1 தேங்காய் 30 ரூபாய்னா, 1 கிலோ தேங்காய் பவுடர் அதைவிட கொஞ்சம்தான் அதிகம். அதுவும் சாக்கு சாக்கா வாங்கினா விலை மலிவு.

   அந்த ஊர்ல தேங்காயை வாங்கினோம்னா, துருவித் தர 6-7 ரூபாய் வாங்குவாங்க. அப்படி துருவி வாங்கிக்கிட்டு வந்து நான் ஃப்ரீசர்ல வச்சுடுவேன்.

   Delete
  9. //உதவி செய்யும் பெண்ணிற்குச் சமைக்கச் சொல்லிக் கொடுப்பாங்க// - அரபு நாடுகள்ல, பெரும்பாலும் ஃபிலிப்பினோக்கள், இந்தோநேசியர்கள்தாம் வீட்டில் சமையலுக்கு. நீங்கள் சொல்வது சரிதான். அவங்களுக்கு உணவு சமைக்கச் சொல்லிக்கொடுத்துடுவாங்க. (அவங்க-ஃபிலிப்பினோஸ் இந்தியரோடு வாழ்ந்தால், இந்திய சமையலையும் செய்யக் கத்துக்கிட்டு அதைச் செய்வாங்க)

   Delete
  10. தேங்காய்த் துருவி இருந்தால் நாமே துருவிடலாம். நான் கோயில்கள் போயிட்டு வந்ததும் கிடைக்கும் தே.மூடிகளில் சிலவற்றை வேலை செய்யும் பெண்ணிற்குக் கொடுத்துட்டு மிச்சத்தைத் துருவி ஃப்ரீசரில் வைப்பேன். அவ்வப்போது எடுத்துப் பயன்படுத்தலாம். சுமார் ஒரு மாசம் வரும்.

   Delete
  11. துபாய் மற்றும் அருகே இருக்கும் இடங்களில் வசிக்கும் உறவுப் பெண்களில் சிலருக்கு இப்படியான ஆட்கள் உதவிக்கு இருக்காங்க. குழந்தைகளையும் இவங்க அலுவலகத்திலிருந்து வரும்வரைக்கும் அந்தப் பெண்கள் பார்த்துக்கறாங்க.

   Delete
 5. ஒரு காலத்தில் எந்த ஊர் சென்றாலும் அங்கு இருக்கும் சரவண பவனில் சாப்பிடாமல் வரமாட்டேன் (அந்த தரத்தை மெயிண்டெயின் செய்கிறார்களா என்று பார்க்கும் விதமாக). பாரீஸில்தான் சரவண பவனுக்குள் நுழையாமல் சங்கீதாவுக்குள் நுழைந்தேன் (மீல்ஸுக்கு மோர்/தயிர் உண்டில்லையா என்று கேட்டேன். நீங்கதான் முதல் ஆளா இதைக் கேட்கறீங்க. உங்களுக்குத் தர்றோம்..இங்க யாரும் தயிர்/மோர் கேட்பதில்லை என்றார்கள்)

  லண்டன் சரவணபவன் விலை மிக அதிகம். சாப்பாடு ஓகே ரகம்தான். கேட்டால், இங்க அப்போ அப்போ செக்கிங் உண்டு, நிறைய ஃபைன் போட்டுடறாங்க, அதனால் சாப்பாடு விலை அதிகம் என்றார்.

  கல்ஃபில் தோசையெல்லாம் மோசமாகலை. இங்குள்ள மாஸ்டர்கள் என்பதால்.

  அது சரி..குளிர்காலத்தில் போய், கொண்டுவருவதற்குள் கொஞ்சம் ஆறிவிட்டால் கோபப்படுவது நியாயமா? பேசாம அவங்க தோசை வாக்கிற கல்லிலேயே சாம்பார் விட்டுக்கொண்டு சாப்பிட்டுட்டு வரவேண்டியதுதான்.

  ReplyDelete
  Replies
  1. எண்பதுகளிலேயே சரவணபவன் எங்களுக்குப் பிடிக்காது. போனதில்லை. உட்லன்ட்ஸ், கீதா கஃபே, பட்ஸ் (அப்போ இருந்தது) ஆகியவற்றுக்கே அதிகம் போவோம். தேடிக்கொண்டு சரவண பவன் போகும் அளவுக்கு அங்கே அப்படி எதுவும் சிறப்பாக இருப்பதாகத் தெரியலை. குளிரெல்லாம் ஓட்டல் உள்ளே இல்லை. ஓட்டல் உள்ளே ஹீட் இருக்கும். அவங்க சூடாகத் தான் உணவைக் கொண்டு வரணும். இப்படி எல்லாம் சொல்லிச் சமாளிக்க முடியாது.

   Delete
 6. சரவண பவன் உணவு சாப்பிடும் படி இல்லை என்பதை தெரிந்து கொண்டேன்.
  என்ன செய்வது நன்றாக சமைக்கும் மாஸ்டர் கிடைக்கவில்லை அவர்களுக்கு .

  மகன், மருமகள் உடல் நிலை ஒரே சமயத்தில் கெட என்ன காரணம் ? அங்கு நிலவும் தட்பவெட்ப கால நிலையாலா? உடல் நலம் சரியாகி வருவது அறிந்து மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, மாறி வரும் சீதோஷ்ணம் காரணமாக இருக்கலாம். அதோட வீட்டில் ஒருத்தருக்கு வந்தால் இன்னொருத்தருக்கும் உடல் நலம் கெடுவது வாடிக்கை தானே! இப்போக் கொஞ்சம் பரவாயில்லை என்றார் பையர். நேற்றுப் பேசினார்.

   Delete
 7. பெரிய உணவகங்களில் அலப்பறைதான் இருக்கிறது சுவை கிடையாது இதுவே எனது எண்ணம்.

  ReplyDelete
  Replies
  1. கில்லர்ஜி, நீங்க சொல்லுவது நூற்றுக்கு நூறு சரி.

   Delete
 8. இவ்வளவு குறை சொல்லும் நீங்கள் ரயில் பயணங்களில் எப்படி சமாளித்தீர்கள்?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜேகே அண்ணா, எங்கே சாப்பிட்டாலும் கொஞ்சமானும் சாப்பிடும்படி இருக்க வேண்டாமா? இதைப் போய்க் குறைனு சொன்னால் எப்பூடி?

   அப்புறமா நீங்க கேட்டதுக்கு வரேன், நாங்க ரயிலில் 3 நாட்கள், 4 நாட்கள் எல்லாம் பிரயாணம் செய்திருக்கோம். கையில் சாப்பாடு கொண்டு போயிடுவோம். சப்பாத்தி, உருளைக்கிழங்குக்கறியை ஈரமில்லாமல் செய்து வைச்சுப்போம். சப்பாத்திக்குத் தொட்டுக்கத் தக்காளித் தொக்கு, ஊறுகாய், தயிர்சாதம் பாலிலேயே அரிசியை வேக வைத்துச் சும்மாக் கொஞ்சம் போல் பால் ஆடையைப் போட்டுப் பிசைந்தால் புளிக்காமல் இருக்கும். 2 நாட்கள் தாராளமாக வரும். நினைவாகக் கரண்டி போட்டே எடுக்கணும். புளியோதரையும் இரண்டு நாட்களுக்குக் குறையாமல் வந்துடும். அதைத்த் தவிர்த்து கிளம்புகிற அன்னிக்குச் சாப்பிட தோசை பயணங்களுக்குச் செய்யறாப்போல், மறுநாளைக்கு இட்லிகள் மி.பொடி எண்ணெயில் குளிப்பாட்டியது! போதுமா! இந்தச் சாப்பாடு விஷயத்தில் நாங்க வட இந்தியர்களைப் போல். வீட்டிலே இருந்து கொண்டு போவது தான் அதிகம். தங்கும்படி நேர்ந்தால் தங்கற இடத்தில் சாப்பாடு நல்லா இருந்தால் சாப்பிட்டுப்போம். இல்லைனா பழங்கள், பால், ஜூஸ், ப்ரெட், வெண்ணெய், ஜாம். ப்ரெட் டோஸ்ட்டும் சாப்பிடுவோம். சோம்பல் படாமல் இத்தனையும் பண்ணி எடுத்துச் சென்றதால் தான் இத்தனை விதமாக இப்படிச் சமைத்தால் நல்லா இருக்கும்னு இப்போ தைரியமாச் சொல்ல முடியுது.

   Delete
  2. எங்க வீட்டிலேயே யாரை வேணாலும் கேட்டுக்கலாம். இப்போவும் கும்பகோணத்தில் குலதெய்வம் கோயிலுக்குப் போகக் காலை சீக்கிரமே எழுந்து சாதம் வைச்சு, இட்லி வார்த்து எலுமிச்சை சாதம்/புளியஞ்சாதம், தயிர் சாதம் இட்லி, சட்னி/மிளகாய்ப் பொடினு எடுத்துட்டுப் போயிடுவோம். எனக்கு உடல்நிலை சரியில்லைனால் அவருக்கு மட்டும் எடுத்துப்பேன். நான் ஹார்லிக்ஸ் கரைச்சு எடுத்துப் போயிட்டு அதோடு இருந்துடுவேன். கூடியவரை வெளியே சாப்பிடுவதைத் தவிர்ப்போம். உடம்பு சரியில்லாமல் போனால் வெளியே சாப்பாடு வாங்கினால் குறிப்பிட்ட இடங்கள் தான். அதனால் தான் இப்போ காடரர் கொடுக்கும் சாப்பாடும் ஒத்துக்கிறது என்று தெரிந்த பின்னரே வாங்கறோம்.

   Delete
  3. பத்ரிநாத் யாத்திரை, முக்திநாத், நேபாள், கயிலை யாத்திரையில் நான் அதிகம் ஹார்லிக்ஸ், ஜூஸ், சூப் என்றே சாப்பிட்டேன். பழங்கள் எடுத்துப்பேன். அவங்க கொடுக்கும் உணவை ஒரு நேரம் சாப்பிட்டுப்பேன். மற்ற நேரங்களில் எல்லாம் திரவ ஆகாரம் தான்.

   Delete
 9. வணக்கம் சகோதரி

  அங்குள்ள சரவணபவன் உணவு நிலைப்பற்றி அறிந்து கொண்டேன்.பெரிய பெரிய ஓட்டல்களில் உணவு பொதுவாக சூடாகவே இருப்பதில்லை. இட்லி என்றால் ஆறித்தான் வரும். சாம்பார் மட்டும் சூடு பண்ணி கொண்டு வருவார்கள். தோசையைப் பற்றி தாங்கள் விரிவாக கூறிய முறை ரசிக்க வைத்தது. (தொட்டால் நொறுங்கி விடும் ரகம், இல்லையென்றால் பாதி வெந்து மீதி வயிற்றில் வேகும் தோசைகள்..) இங்கும் அப்படித்தான்..! ஒவ்வொரு உணவகத்திற்கும் அதை ஆரம்பிக்கும் ஆரம்பத்தில் ஒவ்வொன்றும் ஸ்பெஷலாக இருக்கிறது. நாளடைவில் அதன் சுவையே போய் விடுகிறது. நாமும் இங்கு இதுதான் நன்றாக இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கையை விடாமல் அதையே சாப்பிட்டு வருகிறோம்.

  தங்கள் மகன். மருமகள் உடல்நலம் தற்சமயம் குணமாகி விட்டதா? குட்டி குஞ்சலுவை பார்த்துக் கொள்ள வேண்டுமே! தாங்களாவது அங்கிருந்தால், பேத்தியை பார்த்துக் கொள்ள சௌகரியமாக இருக்கும்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, பெரிய ஓட்டலோ, சின்ன ஓட்டலோ நாம் ஆர்டர் கொடுத்த பின்னர் தானே தயாரிப்பாங்க? இங்கே என்னமோ ஏற்கெனவே பண்ணி வைச்சதை எடுத்துட்டு வந்திருப்பாங்க போல! ஆரடர் கொடுத்த உடனே வந்துவிட்டது! !!!!!!!!!!!!!!!!! மாப்பிள்ளைக்கு அடை மட்டும் கொஞ்சம் தாமதம் ஆனது. மாவு தயாரிக்க வேண்டி இருந்ததால் போல! நாங்க அங்கே வரோம்னு தான் சொன்னோம். இங்கேயும் கொஞ்சம் இருக்க வேண்டிய சூழ்நிலையாக ஆகிவிடவே போகலை. இப்போக் கொஞ்சம் பரவாயில்லை இருவருக்கும்.

   Delete
 10. ///ஆனால் இங்கே அதையும் நல்லா இருக்குனு சொல்லிச் சாப்பிடுபவர்கள் அதிகம்//
  அதை. ஏன்  சொல்வானேன் கர்ர்ர்ர் என் மைத்துனர்கள் அவங்க மனைவிகள் இவங்களுக்கு டேஸ்ட்டே தெரியாது எனக்கு சரியில்லாததுஎல்லாம் அவங்களுக்கு ஆஹா ஓஹோன்னு சொல்வாங்க ..கோபமா வரும் .

  ///அதையும் முன்னால் உட்கார்ந்திருக்கும் என்னிடம் உங்களுக்கானு கேட்காமல் கடைசியில் உட்கார்ந்திருந்த நம்மவரைக் கேட்டார் உங்களுக்கானு// 
  ஹாஹ்ஹா ஒருவேளை உங்களுக்கு கொட்டாததை கொண்டுவர நினைச்சாரோ :) 
  //மாப்பிள்ளைக்கு அடை என்னும் பெயரில் இட்லிமாவில் கடலைமாவைச் சேர்த்து மிளகாய்ப் பொடி போட்டு//டவுட்டே இல்லை :) உங்க திப்பிச போஸ்டை படிச்சிருப்பாரோ செஃப் குக் :)

  நீதி = வெளிநாடு வந்தா நாமளே செய்து சாப்பிடுவது பெட்டர் முக்கியமா இட்லி தோசை பொங்கல் கிச்சடி :)
  இன்னொன்று இங்கே சோள மாவையும் க்ரிஸ்ப்பினசுக்கு சேர்க்கறாங்க தோசையில் ..

  ReplyDelete
  Replies
  1. வாங்க, ஏஞ்சல், சிலருக்கு எப்படிச் சமைச்சாலும் ஓகே தான் போல! பானுமதி போட்டிருந்த ஒரு இட்லிக்கு ஆறுவகைச் சட்னிகள் பதிவு தான் நினைவில் வந்தது. ஆனால் மெயின் சாப்பாடு வயிற்றில் போகணும்னால் அது நல்லா இருக்கணும் தானே!ஹிஹிஹி, ஆமா, இல்ல, அடை பண்ண என்னோட திப்பிசப் பதிவைப் படிச்சிருக்கலாமோ? ஆனால் கடலைமாவில் எல்லாம் நான் அடை வார்த்தது இல்லை! :))))) தோசைக்குனு தனியா அரைச்சா உளுந்தோடு சேர்ந்து அரைக்கும்படியாக ஒரு டீஸ்பூன் துவரம்பருப்பும், ஒரு டீஸ்பூன் வெந்தயமும் நனைச்சு அரைச்சால் தோசை பொன்னிறமாக முறுகலாகவும் வரும். ருசியும் நன்றாக இருக்கும். கல்லிலும் ஒட்டாது.

   Delete
 11. அமெரிக்கா போயும் அடை அவியல்தானா! சரி, வயிற்றுக் ஒத்துவரும் சங்கதிகள்தான் உள்ளே போகவேண்டும். மீனாட்சி கோவில் கதையைப் பார்ப்போம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏகாந்தன்,பின்னே? அம்பேரிக்க உணவெல்லாம் சாப்பிடவா முடியும்? :D அம்பேரிக்க உணவெல்லாம் பிடிக்காது. ஒத்துக்காது. வீட்டிலே அன்றாடம் சமையலே சாம்பார், வத்தக்குழம்பு, மோர்க்குழம்பு, துவையல், பொடி, ரசம், கறி, கூட்டு வகையறாதான்.

   Delete
 12. செவ்வாயும் முடியப்போகுது இது திங்களில் வந்த பதிவோ ... கண்ணுக்குத் தெரியல்லியே கர்ர்ர்ர்ர்:)...

  அது கீசாக்கா வெளிநாட்டில் சைவ ஹோட்டேல்கள் பெரிசா நல்லாயில்லை, சரவணபவான் ஓகேதான், கனடாவில் போவோம்., ஆனாலும் சைவ உணவை ஹோட்டேல்/ ரெஸ்ரோரன்களில் போய்ச் சாப்பிடுவது வேஸ்ட்...

  அசைவம் எனில் பெரும்பாலும் நம் நாட்டுக் ஹோட்டேல்கள் வெளிநாடுகளில் சூப்பராக இருக்கு....

  ReplyDelete
  Replies
  1. வாங்க இலக்கியம், இங்கே இப்போச் செவ்வாய் மதியம் தான். மணி ஒன்றே முக்கால். ஆகவே இன்னிக்குப் பதிவு இல்லை இது. "திங்க" போட்ட பதிவு தான். பொதுவாகவே இப்போல்லாம் நன்றாக உணவு சமைப்பவர்கள் அரிதாகிவிட்டனர். இது நம்ம ஊரிலேயே இப்படி இருக்கு. அப்போ வெளிநாட்டுக்குக் கேட்கணுமா!

   Delete
 13. ஒரு முறை மாயவரம் காளியாக்குடியில் ரவா தோசை முறுகலாக என்று கூறி விட்டேன், கொண்டு வந்து வைத்தார்கள் பாருங்கள் கடக்,முடக்கி என்று, வாயில் குத்தி, வயிறும் ரொம்பாமல்..  பெங்களூர் எம்.டி. ஆரிலும் ரவா தோசை வார்க்கத் தெரியாது. 

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, எந்த வருஷம் போனீங்கனு தெரியலை. பல வருடங்களாகக் காளியாகுடி ஓட்டல் முன்பிருந்தவர்களால் நடத்தப்படவில்லை, பெயரை மட்டும் மாற்றாமல் காளியாகுடியில் வேலை பார்த்தவர்களுக்கு அந்தப் பெயரோடு நடத்த அனுமதி கொடுத்திருக்காங்க. மாயவரத்தில் உறவுக்காரர்கள், நண்பர்கள் அதிகம். அவங்க சொன்னது தான் இது. சென்னை மடிப்பாக்கத்தில் காளியாக்குடி வாரிசு ஒருத்தர் ஒரு ஓட்டல் ஆரம்பித்தார். ஆனால் அதையும் மூடிட்டாங்க என்று கேள்வி. மற்றபடி எந்த ஓட்டலிலும் இப்போல்லாம் தோசை வார்க்கத் தெரியலை.அப்புறமாத் தானே ரவா தோசை! சென்னை எழும்பூரில் இருக்கும் சங்கீதா ஓட்டலில் ஊத்தப்பம் கேட்டதுக்குப் பொடி தடவிக் கொண்டு வைச்சாங்க. அதுவும் பூண்டு போட்ட பொடி. ஏன் என்று கேட்டதுக்கு இங்கே இப்படித்தான் என அலட்சியமாக பதில்! அப்படியே தள்ளி வைச்சுட்டேன். சாப்பிடவே இல்லை.

   Delete
  2. அன்பு கீதா,
   சரவணபவன் கதையே இப்படியா.
   சிகாகோவில் ,கோவிலில் மட்டும் தான் வெளி உணவு. அதைத்தவிர கிருஷ்ணா கேடரிங்க் மிக நன்றாகச் செய்து தருகிறார்கள்.

   இந்தியவிலேயே நாங்கல் தங்கி இருந்த இடத்தில்
   தோசை வார்த்துக்கொண்டு வருவதற்குள் ஆறி விட்டது.
   மற்றபடி உடலுக்கு கெடுதி இல்லை.

   மகன்,மருமகள் குணமாகி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.
   மகள் வீட்டிலும் எல்லோருக்கும் சளித்தொல்லை.
   என்ன ஊரோ அது.
   நீங்களும் கவனமாக இருங்கள்.

   Delete