எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, June 22, 2022

ஆரூரா! தியாகேசா! என்னே உன் நிலைமை! பகுதி நான்கு!

 //திருமகள் தவஞ்செய் செல்வத் திருவாரூர் பணிவ னென்னா

 ஒருவனே ழடிந டந்து மீண்டிடின் ஒப்பில் காசி 

விரிபுனற் கங்கை யாடி மீண்டவ னாவனென்றால்

 இருடிகாள் ஆரூர் மேன்மை பிரமற்கு மியம்ப வற்றோ.// 

திருவாரூர்த் தலபுராணத்தில் மேற்கண்ட பாடல் காணப்படுகிறது. இந்த நகரில் ஏழடி நடந்தாலே காசிக்கு ஒப்பாகும் என்கின்றது. ஏழு கோபுரங்கள், ஐந்து ப்ராஹாரங்கள், பனிரண்டு மண்டபங்கள், தீர்த்தங்கள், நூற்றுக்கணக்கான சந்நிதிகள் என அனைத்தும் உள்ள பெரிய கோயிலாகும் இது. நிதானமாய்ப் பார்த்தால் காலை ஆறு மணிக்குப் போனால் பனிரண்டு மணி வரையிலும் நேரம் சரியாய் இருக்கும். செங்கல் திருப்பணியில் இருந்த கோயிலைக் கற்றளியாக மாற்றிய பெருமை செம்பியன்மாதேவிக்கு உண்டு. இந்தக் கோயில் பிராஹாரத்திலேயே தனிக் கோயிலாக ஆரூர் அறநெறி என்னும் கோயிலும் அமைந்துள்ளது. இதை இளங்கோயில் என்கின்றனர்.  திருநாவுக்கரசரால் பாடப்பட்ட இந்தக் கோயிலையும் செம்பியன் மாதேவி அவர்களே திருப்பணி செய்திருக்கிறார்கள். இந்தத் தலத்தின் வரலாறு தனியானதொரு கதையாகும்.

பார்ப்பதற்குத் தஞ்சைக் கோயிலின் சிறிய மாதிரிக் கோயில் மாதிரி இருந்தாலும், இது அதற்கும் முன்னே கட்டப்பட்ட கோயில் என்கின்றனர். திருவாரூருக்குத் தெற்கே திருநெய்ப்பேர் என்னும் ஊரில் அவதரித்த நமிநந்தி அடிகள் என்பார் சிவ வழிபாட்டில் மிகச் சிறந்து விளங்கி வந்தார். நாள் தோறும் திருஆரூரில் ஆரூர் அரநெறி அசலேசசுவரருக்கு திருவிளக்கேற்றித் திருப்பணி புரிந்து வந்தார். ஒருநாள் மழைக்காலத்தில் விளக்கேற்ற நெய் தேடி நெடுந்தூரம் செல்லவேண்டி முடியாமல் போகவே பக்கத்து வீடுகளில் கேட்க, சமணர்களான அவர்கள் நமிநந்தி அடிகளையும் ஐயனையும் கேலி செய்ததோடு அல்லாமல், “உம் ஈசன் தான் கையிலேயே நெருப்பை வைத்திருப்பானே? அவனுக்கு எதற்குத் தனியாக விளக்கு?” என்று கேட்டனர். நமிநந்திஅடிகள் நொந்து போன மனதோடு திரும்பக் கோயிலுக்கு வந்து ஈசனை வேண்டி அழுது, அரற்ற, குளத்து நீரை முகந்து வந்து விளக்கிலிட்டு தீபம் ஏற்றுமாறு திருவருள் கூற, அவ்வாறே கமலாலயத்து நீரை எடுத்து வந்து விளக்குகளில் விட்டு ஏற்றினார்.

என்ன ஆச்சரியம் விட்ட நீரெல்லாம் நெய்யாக மாறி விளக்குகள் ஆயிரம் கோடி சூரியனைப் போல் பிரகாசித்தன. அவரின் புகழையும், பக்தியையும் கூறும் கோயில் இந்த ஆரூர் அரநெறிக்கோயில். இங்கே குடிகொண்டிருக்கும் ஈசனுக்கு அசலேசுவரர் எனப் பெயர். தனி நந்தி, தனிக்கொடிமரம், தனி பலிபீடம் என அனைத்தும் தனியாக அமைந்த தனிக்கோயில் இது. இங்கே அக்னிஸ்தம்பமும், கையில் அழலேந்தி ஆடும் நடராஜர் சந்நிதியும் சிறப்பு. இங்கு புஷ்ப கைங்கரியம் செய்து வந்த செருத்துணை நாயனார் என்பவர்  சிவனுக்குச் செய்யும் அவமரியாதையைப் பொறுக்கமாட்டாதவராம். இந்தக் கோயிலுக்குப் பல்லவர்கோன் கழற்சிங்கனும், அவர் மனைவியான சங்கவையும் அசலேசுவரரைத் தரிசிக்க வந்தனர். பிராஹாரத்தில் செருத்துணை நாயனால் ஈசனுக்காக “திருப்பள்ளித் தாமம்” என்னும் மாலை கட்டிக் கொண்டிருந்தார். அங்கே வந்த அரசி, கீழே விழுந்திருந்த மலர் ஒன்றை எடுத்துமுகர்ந்து பார்க்க, மனம் பொறுக்காத செருத்துணை நாயனார் அரசியின் மூக்கை அரிந்துவிடுகிறார். அரச கோபத்துக்கு ஆளாகிவிட்டாரே என அனைவரும் கதிகலங்கி நிற்க, கழற்சிங்க அரசனோ, செருத்துணை நாயனார் செய்தது சரியே எனச் சொல்லி, பூவை முகர்ந்த மூக்கை மட்டும் அரிந்தால் போதுமா, எடுத்த கையையும் வெட்டவேண்டும் என்று சொல்லிக் கையையும் வெட்ட, அனைவரும் திடுக்கிட்டுப் போயினர். 

ஆனால் ஈசனோ அவர்கள் பக்தியின் திறத்துக்கு வைத்த சோதனை எனச் சொல்லி, அரசியின் மூக்கையும், கையையும் சரிசெய்து முன்போல் ஊனமற்றவளாக்கி விடுகிறார். இந்த லிங்கத்தை இங்கே ஸ்தாபித்தது நானூறு ஆண்டுகள் தவமிருந்து வழிபட்டது  சமத்காரன் என்னும் அரசன் என்கின்றனர். சமத்காரன் ஈசனைத் தான் தவமிருந்து ஸ்தாபித்து வழிபடும் இந்தத் தலத்து லிங்கத் திருமேனியில் ஈசனின் ஜீவசக்தியோடு எழுந்தருளவேண்டும் என வேண்ட அவ்வண்ணமே ஈசன் எழுந்தருளியதாக புராணங்கள் கூறுகின்றன. அன்னையின் பெயர் வண்டார்குழலி அம்மை. இந்தக் கோயில் விமானத்தின் நிழல் கிழக்குத் திசையில் மட்டுமே விழும் என்றும் சொல்கின்றனர். முசுகுந்தனுக்குத் தியாகேசரைக் கொடுத்த தேவேந்திரன் ஈசனிடமே மீண்டும் தேவருலகு வருமாறு வேண்ட, அவரோ, கிழக்குக் கோபுர வாயிலில் காத்திருக்குமாறு சொல்கின்றார். அவ்வழியே ஈசன் வரும்போது அழைத்துச் செல்லலாம் என்று காத்திருக்கின்றானாம். ஆனால் ஈசனோ, “விட்டவாசல்” என அழைக்கப் படும் வேறொரு வாயில் வழியே வெளியே சென்று, இங்கே காத்திருக்கும் தேவேந்திரனைப்பல யுகங்களாய்க் காத்திருக்க வைத்திருக்கிறார். 

இந்த ராஜ கோபுரத்தின் வழியே உள்ளே நுழைந்தால் முதலில் பிள்ளையார். வீதிவிடங்க விநாயகர் என்ற பெயரில் காட்சி கொடுக்கிறார். பிள்ளையாருக்குப் பின்னே நந்தி! இங்கே பிரம்மநந்தி என்ற பெயரில் அழைக்கப் படுகிறார். மழை வேண்டுமென்றால் சுற்றிலும் சுவர் எழுப்பி நீரை நிரப்பி வேண்டிக்கொண்டால் மழை கொட்டித் தீர்க்கும் என்கின்றார்கள். பசுக்கள் பால் கறப்பதற்கும் இந்த பிரம்ம நந்திக்கு அருகு சார்த்தி அதையே பிரசாதமாக எடுத்துச் சென்று பசுக்களுக்குக் கொடுக்கின்றனர். அடுத்து கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றைக் கடந்து சென்றால் மொட்டைத் தூண்கள் காட்சி அளிக்கும். இருநூறிலிருந்து ஐநூறு இருக்கலாமோ?? இந்தத் தூண்களின் மேல் பெரிய பந்தல்களாகப் போட்டுக் கூரை வேய்ந்து திருவிழாக்காலங்களில் தியாகேசரை எழுந்தருளச் செய்யும் மண்டபமாக மாற்றுவார்களாம். அதனால் மொட்டைத் தூண்களாகவே பல நூற்றாண்டுகளாய் இருக்கின்றன என்று கேள்வி.  அடுத்து நாம் காண்பது தேவாஸ்ரய மண்டபம் அல்லது தேவாசிரிய மண்டபம். இந்த மண்டபத்திற்கு ஆயிரக்கால் மண்டபம் என்றும் சொல்லலாம். இந்த மண்டபத்தின் ஒவ்வொரு தூண்களுமே சிவனடியார்கள் என்றும், இவர்களை வணங்காமல் போனால் அடியார் கூட்டத்திலிருந்தே விலக்கப் படுவார்கள் என்றும் ஐதீகம். இதைத் தான் விறன் மிண்டர் சுந்தரருக்குச் செய்து காட்டினார். அது நாளை பார்ப்போமா?????

***********************************************************************************

2010 ஆம் ஆண்டில் சென்றபோது எழுதியவை மேலே உள்ள தகவல்கள் இம்முறை இவ்வளவெல்லாம் சுத்த முடியலை. எங்கே! தியாகேசரையும், கமலாம்பிகையையும் தரிசனம் செய்தாலே பெரிய விஷயம் என்று ஆகி விட்டதே! ஆனால் இந்த இடங்கள் இப்போதும் அப்படியே தான் இருக்கின்றன. மாறுதல் ஏதும் இல்லை. கோயிலின் பிரம்மாண்டத்தினாலோ என்னமோ பராமரிப்பு என்பது மிகக் குறைவு. நாங்கள் மெதுவாக நவகிரஹங்கள், ரௌத்ர துர்கை, ருண விமோசனர் ஆகியோரைப் பார்த்துக் கொண்டு விரைவாகச் செல்லும் வழியிலேயே கமலாம்பிகை சந்நிதிக்குச் சென்றோம். செல்லும் வழியிலேயே உச்சிஷ்ட கணபதி வரவேற்க அவருக்கு அர்ச்சனையை முடித்துக் கொண்டோம். உள்ளே கமலாம்பிகை சந்நிதியில் உள்ள குருக்கள் தான் அங்கே அர்ச்சனை செய்வார் என்பதால் வாகீச குருக்கள் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் அடங்கிய பையை எங்களிடம் கொடுத்துவிட்டு அங்கே போய் அர்ச்சனை செய்து கொண்டு குருக்களுக்கு மறக்காமல் தக்ஷிணை கொடுக்கும்படியும் சொன்னார். மேலும் எங்களை அங்கிருந்து வடக்கு வாசல் கிட்டக்க என்பதால் அப்படியே அறைக்குச் சென்று காலை ஆகாரம் சாப்பிட்டுச் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு திரும்ப ஒன்பதரை/பத்து மணி அளவில் வந்தால் அபிஷேஹம் செய்து கொண்டு பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு போகலாம் என்று சொன்னார்.

சரினு நாங்க கமலாம்பிகை சந்நிதிக்குச் சென்று அங்கே அர்ச்சனையை முடித்துக் கொண்டோம். ஒரே வெப்பமான சூழ்நிலை. அம்பிகையின் தவத்தாலா? என்னனு புரியலை. அதே தியாகேசர் சந்நிதி குளிர்ந்து இருந்தது. அங்கே அர்ச்சனையை முடித்துக் கொண்டோம். 


பின்னர் மெதுவாக அங்கிருந்து வடக்கு வாசலுக்கு வந்தால்! ஆஹா! மறுபடி மலை ஏறணுமே! ரொம்பக் கஷ்டப்பட்டு என்னை ஒவ்வொரு படியாக மேலே ஏற்றினார். அக்கம்பக்கம் யாருமே அந்தக் காலை வேளையின் தென்படவில்லை. அவர் படியில் என்னை ஏற்ற என் உடம்போ அப்படியே மல்லாக்கக் கீழே விழும்போல் சாய்கிறது. எப்படியோ சமாளித்துக் கொண்டு ஒவ்வொரு படியாக ஏறினாலும் கடைசிப் படி உச்சியில் சுமார் இரண்டடி உயரத்தில் இருந்தது. அதில் ஏறினால் திட்டி வாசல் வழியே வெளியே போயிடலாம். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கூடவே மூச்சையும் பிடித்துக்கொண்டு அந்தப் படியில் ஏறி நடுவில் காலை வைத்தேன். ஓரத்தில் வைத்தால் அப்படியே விழுந்துட்டால் என்ன பண்ணுவது? 

மெதுவாகத் தியாகேசர்/கமலாம்பிகை அருளால் வெளியே வந்துட்டோம். என்னிடம் அபிஷேஹத்துக்கு வருவியானு அவர் கேட்டதுக்கு நான் முறைத்த முறைப்பிலேயே அவர் அரண்டு போயிருப்பார். ஹிஹிஹி, அங்கே சாலையின் முக்கில் ஒரு தேநீர்க்கடையைப் பார்க்க அங்கே ஏதாவது குடிச்சுட்டுப் போகலாம்னு நான் சொன்னேன். கண்ணெல்லாம் பூச்சி பறக்கிறது. முதல் நாள் இரவு பேருக்குத் தானே சாப்பிட்டது. நடை தள்ளாடியது. மெல்ல அந்தக் கடைக்கு வந்து குடிக்க என்ன இருக்குனு கேட்டதும் காஃபி, தேநீர், பால் என்றார். இரண்டு காஃபிக்குச் சொல்லிட்டு ஒரு பிஸ்கட் பாக்கெட் வாங்கிக் கொண்டு அவருக்கும் கொடுத்துட்டு நானும் சாப்பிட்டேன். காஃபி வரவே அதைக் குடிச்சுட்டு மெதுவாக அங்கிருந்து கூப்பிடு தூரத்திலேயே இருந்த ஓட்டலுக்குப் போய் அறையில் கதவைத் திறந்து படுக்கையில் விழுந்தேன். நம்ம ரங்க்ஸ் டிஃபன் வாங்கி வரேன்னு சொல்லிட்டுப் போனார். நீங்க சாப்பிட்டுட்டு வாங்குங்கனு சொன்னால் வேண்டாம்னு சொல்லிட்டார். அரை மணியில் டிஃப்ன் வர அதே பூண்டு போட்ட தேங்காய்ச் சட்னி! இட்லியை மட்டும் பிய்த்து விழுங்கி விட்டு மறுபடி வாங்கி வந்த காஃபியைக் குடிச்சுட்டுப் படுத்து விட்டேன். சுமார் ஒன்பதரை பத்துக்கு ரங்க்ஸ் மட்டும் கோயிலுக்குக் கிளம்பினார். அது கூடத் தெரியாமல் என்னையும் அறியாமல் கண்ணசந்திருக்கேன். 

49 comments:

 1. மிக அருமையான விவரங்கள். நிறைய விஷயங்கள் தெரிந்தவர். பாராட்டுகள்.

  ஏழு அடிகள் நடந்து போனால் காசி க்ஷேத்திரம் சென்ற பலன் என்பதால் நீங்களும் ஏழு அடிகள் மட்டுமே நடந்திருக்கிறீர்கள் போலிருக்கிறதே

  ReplyDelete
  Replies
  1. இல்லையே, அம்மன் சன்னதி, தியாகேசர் சன்னதி என்று சுற்றி இருக்கிறாரே...!

   Delete
  2. அடிகள் என்பதை படிகள் என்று மாற்றினால் ஒருவேளை நான் எழுதியது சரியாக இருந்திருக்குமோ?

   Delete
  3. பிரகாரத்தில் படிகள் இல்லை என்றாலும் நடக்கச் சிரமமாகவே இருந்தது. கற்கள் பாவிய தளம். இடைவெளிகளில் புல், பூண்டு முளைத்திருந்தது. பின்னர் சந்நிதிகளில் தரிசனத்துக்குப் படிகள் ஏறணும். :( மதுரையில் மீனாக்ஷியைப் பார்த்து 3,4 வருஷங்கள் ஆச்சு. ஆனால் போனால் அம்மன் சந்நிதி, ஸ்வாமி சந்நிதி இரண்டிலும் படங்கள். அதே போல் சிதம்பரம், வைத்தீஸ்வரன் கோயிலிலும். :(

   Delete
 2. பூண்டு போட்ட தே.சட்னி, இட்லி - உணவு மட்டும் சரியில்லாமலோ இல்லை பிடிக்காமலோ போய்விட்டால் சிரமம்தான்.

  ReplyDelete
  Replies
  1. சாம்பார் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...

   Delete
  2. தமிழக சாம்பார்....ஆஹா...நினைத்தாலே மனம் நிறைகிறதே...அடுத்து எப்போ தமிழக டிரிப் என்று யோசிக்கிறேன். உறவினர்கள் வீட்டில் தங்கினாலும் நிச்சயமாக உணவு வெளியில்தான்

   Delete
  3. நெல்லை, நீங்கள் சொல்லுவது சரியே!

   ஶ்ரீராம், அவங்க கொடுத்தது சாம்பாரெல்லாம் இல்லை. "சோம்பா"ர். ஒரே சோம்புப் பொடி. வாசனை தூக்கல். அப்படியே கொட்டிட்டோம்.

   Delete
  4. நெல்லை, சென்னை ஓட்டல்களில் நல்லா இருக்கோ என்னமோ தெரியலை. இங்கெல்லாம் சாம்பார் "சோம்பா"ர் தான் அநேகமாக. சில ஓட்டல்களில் காய்களை நிறையப் பொட்டுடறாங்க. சாம்பாரைத் தேடிக் கண்டு பிடிக்கணும். அதிலும் காரட்டையும் பறங்கிப் பழத்தையும் போட்டிருந்தாங்கன்னா! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

   Delete
 3. முன்பெல்லாம் ஊரும் மக்களும் கோவிலுக்குச் செல்லும் வழக்கம் இருந்தது. இப்போ ஊர்ல பாதிப்பேர் ஊரைவிட்டுச் சென்றுவிட்டார்கள். இருப்பவர்களும் கோவிலுக்கு வருவது குறைவு, திருவிழா நாட்கள் தவிர. அப்புறம் எப்படி பராமரிப்பது? சோழ மன்னர்களோ இல்லை பெரும் அரசர்களோ பலப் பல ஏக்கர்களாக கோவிலை விரிவுபடுத்தி பிரம்மாண்டமாகக் கட்டியிருக்கின்றனர். சில கோவில்களில் கர்ப்பக்ரஹத்துக்குச் செல்லுமுன் ஒரு கிலோ மீட்டருக்குமேல் நடப்பதுபோல் இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. பெரும்பாலான பழைய கோவில்கள் மக்கள் நடமாட்டம் அதிகமின்றிதான் இருக்கிறது.

   Delete
  2. நெல்லை சொல்வது சரியே என்றாலும் சில ஊர்களில் மக்கள் அவங்க அவங்க சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டும் இருக்காங்க. என்றாலும் கோயில்கள் சரிவர நடக்கணும்னா மீண்டும் அக்ரஹார வாழ்க்கை திரும்பணும். பிராமணர்கள் அக்ரஹாரத்துக்குத் திரும்ப வந்தால் தான் கோயில்களுக்குப் புனர் வாழ்க்கை.

   Delete
  3. நம்ம தமிழ்நாட்டில் மன்னர்கள் தாங்கள் தங்கும் அரண்மனைகளை விடக் கோயில்களுக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஏனெனில் நாட்டின் பொருளாதாரம் பெரும்பாலும் கோயில்களைச் சார்ந்தே இருந்தது. இதை விரிவாக எழுதினால் இப்போ யாருக்கும் ரசிக்காது. கோயில்களை ஏதோ சுற்றுலாத்தலம் போல ஆக்கி வைச்சிருக்கும் இப்போதைய ஆள்பவர்கள் இதன் புனிதத்தையும் தத்துவத்தையும் உணரமாட்டார்கள்.

   Delete
 4. பிரம்மாண்டமான கோவில்களில், மூலவரையும் தாயாரையும் வணங்கிவிட்டு, பலப் பல சன்னிதிகளைக் கண்டுகொள்ளாமலேயே விட்டுவிட வேண்டியிருக்கிறது. இது மனதில் குற்ற உணர்ச்சியைத் தருகிறது. எல்லாச் சன்னிதிகளையும் தரிசனம் செய்யணும் என்றால், நடக்க அஞ்சக்கூடாது, ஒரு நாளாவது வேண்டும். என்ன செய்ய?

  ReplyDelete
  Replies
  1. இன்று இந்தக் கோவிலை முழுமையாக பார்த்து விடுவது என்று தீர்மானம் செய்துவிட வேண்டும்.  நான் எனக்கே சொல்லிக்கொள்கிறேன்!

   Delete
  2. முன்னெல்லாம் அப்படித் தான். பிரகாரங்களை முறைப்படி சுற்றி வந்து தரிசனம் செய்து சரியான வழியிலே வெளியேறி எனப் பண்ணிக் கொண்டிருந்தோம் தான். இப்போல்லாம் முடியறதில்லையே!

   Delete
  3. சகோதரர் நெல்லைத் தமிழர் கூறுவது முற்றிலும் உண்மை. ஒரு கோவிலுக்கு செல்லும் போது அவசரம் கூடாது. ஆனால் என்ன செய்வது? அவசர ஏற்பாட்டில்தானே கோவில் தரிசனமே நமக்கு (அதிலும் எனக்கு) அமைகிறது.

   Delete
  4. நான் பதிவு எழுதுவதற்கு என்றே கோயில்களுக்குச் செல்லும்போது திட்டமிட்டு விடுவேன். முன்னெல்லாம் சரியாக நடந்தது. இப்போல்லாம் போகவும் முடியலை. எழுதவும் முடியறதில்லை. இருந்தாலும் விடாமல் 16/17 வருஷங்களாக எழுதிக் கொண்டு வருவதால் ஒரு பேட்டி எடுத்துப் போடறேன்னு சமீபத்தில் வந்திருந்த ஶ்ரீவைணவர் சொன்னார். வேண்டாம்னு சொல்லிட்டேன். அவரும் நிஜமாச் சொன்னாரோ, விளையாட்டாச் சொன்னாரோ கட்டாயப் படுத்தலை.

   Delete
 5. எவ்வளவு பக்தி உணர்வும் அர்ப்பணிப்பும் இருந்தால் இப்படி உடல் அசதியையும் பொருட்படுத்தாமல் கோவில் உலா வருவீர்கள், அது மட்டுமின்றி கட்டுரையை அப்டேட் செய்தும் புதியன எழுதியும் எங்களுக்குத் தகவல்களைத் தருவீர்கள்! உங்களை நமஸ்கரிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க செல்லப்பா சார், உங்களோட புகழ்ச்சிக்கு என்னைத் தகுதியானவளாக மாற்றிக் கொள்ள முயற்சி செய்கிறேன். நன்றி.

   Delete
 6. நிறைய தகவல்கள் அறிந்தேன் நன்றி.

  தரிசனம் சிறப்பாக செய்து இல்லம் அடைய எமது பிரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி.

   Delete
 7. முதல் பாராவில் சொல்லப்பட்டிருக்கும் விவரங்கள் பிரமிக்க வைக்கின்றன.  நீங்கள் LK பதிவில் சொல்லியிருந்தபடி மாவீரன் சிவாஜியை வடநாட்டவர்கள் கொண்டாடுவதுபோல நம் முன்னோர்களை நாம் கொண்டாடுவதில்லை.  தனி ஒரு மியோசியம் போல வைக்க வேண்டும் அதில் ராஜராஜ சோழன், செம்பியன் மாதேவி போன்றோரின் சிறப்புகள் சொல்லப்பட்டு காக்கப்பட வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. அரசு, கும்பகோணம் தஞ்சைப் பகுதி சிவாலய மற்றும் பள்ளிப்படைகளை புனருத்தாரணம் செய்து (அதாவது உடைந்த கோபுரத்தின்மீது கோபுரம் கட்டுவதல்ல..இருக்கும் நிலையிலேயே புனருத்தாரணம் செய்யணும்) சரித்திரச் சின்னங்களாகப் பாதுகாக்கணும்.

   Delete
  2. செம்பியன் மாதேவி பல கோயில்களுக்குத் திருப்பணி செய்திருப்பதைப் பொன்னியின் செல்வன் புத்தகமே சொல்லும். கோனேரிராஜபுரத்திலும் செம்பியன் மாதேவி செய்திருக்கும் திருப்பணிகள் பற்றி குருக்களே சொல்லுவார். அதே போல் குந்தவை, வானவன் மாதேவி போன்றோரும் பல திருப்பணிகள் செய்திருக்கின்றனர்.

   Delete
  3. நெல்லை சொல்லுவது நடக்கணும் எனில் இறைவன் மீது நம்பிக்கையும் சரித்திரத்தில், தொல்லியலில் ஆர்வமும் உள்ளவர்கள் ஆட்சியில் இருக்கணும். தன்னைத் தானே ராஜராஜ சோழனைப் போல முன்னிலைப் படுத்திக்கிறவங்க இருக்கும்வரை எதுவும் நடக்காது.

   Delete
  4. இவங்க எதுவும் செய்யவும் மாட்டாங்க. அதே சமயம் வெள்ளைக்காரன் வந்து தான் நமக்குப் படிப்பே சொல்லிக் கொடுத்தான் என்று கூசாமல் சொல்லுவாங்க. வெள்ளைக்காரனா வந்து இந்தக் கோயில்களை எல்லாம் கட்டினான்? சோழகாலத்து நீர் மேலாண்மை பற்றி இவங்களுக்கெல்லாம் என்ன தெரியும்? ஒருத்தருக்கொருத்தர் திட்டிக்கிறதையும்/பாராட்டிக்கிறதையும் தவிர்த்து! :( தமிழ்நாடு ஏற்கெனவே கல்வியில் ரொம்பவே பின்னாடி போய்விட்டது. இப்போப் பாடங்களை ஒதுக்கிட்டுக் கொஞ்சமாகப் பாடங்களை வைத்து அதிலும் ஒரு வரி சரியா எழுதினாப் போதும் முழு மதிப்பெண்கள்னு சொல்லித் தேர்ச்சி அடைய வைச்சு! அதில் பெருமை, விளம்பரம்! எங்கேயாவது தரமான மாணவ மாணவிகள் இதன் மூலம் கிடைப்பார்களா என்பதே தெரியலை.

   Delete
  5. உண்மையைச் சொல்லிவிட்டு மாதவன் படுகிற பாடு! இந்தத் தமிழ் மக்களைத் திருத்தவே முடியாது. அனைவரும் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள். :(

   Delete
 8. நீரை நெய்யாக்கியதிருக்கட்டும்.  அந்தக் காலத்தில் செய்யப்பட அற்புதங்கள் போல இந்தக் காலத்திலும் செய்யப்பட வேண்டும்.  குறைந்தபட்சம் மக்கள் மனதிலிருந்து வெறுப்பையும் கெட்ட எண்ணங்களையும் நீக்கி நல்லவர்களாக மாற்ற வேண்டும். 

  ReplyDelete
  Replies
  1. இதுக்கும், நாம் வெற்றி பெறுகிறமாதிரி சீட்டுக்களை நாமே எடுத்துக்கொண்டு விளையாடுவதற்கும் என்ன வேறுபாடு? மனிதன் பெரும்பாலும் நல்லவன். அவனிடம் பொறாமை, கோபம், வெறுப்பு போன்றவைகள்தான் அந்த நல்ல தன்மையைக் குழப்புகின்றன

   Delete
  2. இப்போவும் பற்பல அற்புதங்கள் நடப்பதாகவே நண்பர்கள் பகிர்ந்து வருகிறார்கள். நமக்கெல்லாம் நடக்கவில்லை. அதற்கும் ஓர் புண்ணியம் செய்திருக்கணுமே.

   Delete
  3. பொறாமை, கோபம் மட்டும் காரணமாய்ச் சொல்ல முடியாது. நல்ல செயல்களைச் செய்யும் அளவுக்கு மனம் பக்குவப்பட வேண்டும். செய்வதெல்லாம் இறைவனுக்கு அர்ப்பணம் என்னும் உணர்வு வேண்டும்.

   Delete
  4. அல்லது எதிர்வரும் தீய செயல்களை மனதில் ஏற்றாமல்  புறக்கணிக்க மனம் பக்குவப்படவேண்டும்.

   Delete
 9. நீங்கள் சொல்லி இருக்கும் விவரங்களை படிக்கும்போது அங்கு சென்று பார்க்கும் ஆவல் வருகிறது.  இங்கும், திருவானைக்கா கோவிலும் சென்று திரும்ப நீண்ட நாள் ஆசை.

  ReplyDelete
  Replies
  1. திருவானைக்கா கோவிலிலிருந்து திரும்பி பார்த்தசாரதி விலாஸில் சாப்பிட மறக்காதீர்கள்

   Delete
  2. வாங்க ஶ்ரீராம், திருவானைக்கா கோயிலுக்கு சீக்கிரமா வாங்க.

   நெல்லை, பார்த்தசாரதி ஓட்டலை நீங்க தான் மெச்சிக்கணும். மாமா என்னிடம் கேட்டுக் கொண்டே இருக்கார். ஒரு நாளைக்கு நெய் தோசை வாங்கவானு! நான் வேண்டாம்னு திட்டவட்டமாகச் சொல்லிண்டிருக்கேன். சீக்கிரமா ஒரு நாள் வாங்கிச் சாப்பிட்டுப் பார்க்கிறேன். ஏற்கெனவே சாப்பிட்ட அனுபவம் பயமுறுத்துகிறது.

   Delete
  3. கோவிலை மறந்தாலும் பா வியை மறக்க மாட்டேன்! :)

   Delete
 10. படி ஏறமுடியாத உங்கள் சிரமம் படிக்கும்போது கஷ்டமாக இருக்கிறது.  ரோடோரக்கடையில் காஃபியா?  நன்றாய் இருந்ததா?  அந்த மாதிரிக்கு கடைகளில் எல்லாம் பேசாமல் தேநீர் வாங்கி அருந்தி விடலாம்.

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், ரோடோரக்கடைன்னா? அதுவும் ஒரு மெஸ் மாதிரித்தான் இயங்கியது. நாங்க உள்ளே போய் உட்காராமல் வெளியே நின்று கொண்டே சாப்பிட்டோம். காஃபி ஃபில்டர் காஃபி. நன்றாகவே இருந்தது. கும்பகோணத்திலும் டவுன்ஹாலுக்கு அருகே ஒரு தேநீர்க்கடையில் காஃபி சுவையான ஃபில்டர் காஃபியாகக் கிடைக்கும். நன்றாக இருக்கும்.

   Delete
  2. மதுரையில் வடக்குச் சித்திரை வீதியில் கோபு ஐயங்கார் கடையை ஒட்டிய ஒரு தேநீர்க்கடையில் நல்ல ஃபில்டர் காஃபி கிடைக்கும். நாங்க ப்ளாஸ்டிக் வேண்டாம்னு வட்டை, தம்பளர் எனச் சொல்லிடுவோம். காஃபி நன்றாக இருக்கும். சுறுசுறுப்பான வியாபாரம் ஆகும் இடமும் கூட.

   Delete
 11. அருமையான தகவல்கள். செம்பியன் மாதேவி செய்திருக்கும் பணிகள் எல்லாம் பிரமிப்பாக இருக்கிறது.

  கீதாக்கா படி ஏற சிரமம் இருந்தாலும் விடாது சென்று தரிசித்து எங்களுக்கும் தகவல்கள் தருகிறீர்களே அதுவே சிறப்பு. நன்றியும். எனக்கு இக்கோயில் மிகவும் பிடித்த கோயில். முழுவதும் நிதானமாகச் சுற்றி தரிசிக்க கண்டிப்பாக அரை நாள் வேண்டியிருக்கும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, சுமார் 2 நாட்களாவது தங்கி இருந்து பார்க்கணும். முன்னே பார்த்திருக்கேன். 2 தரமோ என்னமோ! இப்போல்லாம் உடல்நிலை படுத்தல் தாங்கலை. அதனால் முடியலை.

   Delete
 12. வணக்கம் சகோதரி

  மிக மிக அருமையான பதிவு. பதிவை படிக்கையில் காட்சிகள் கண் முன்னே விரிகிற மாதிரி சொல்லும் உங்கள் திறமைக்கு, அருமையான எழுத்துக்கு தலை வணங்குகிறேன்.கோவிலைப் பற்றிய பல தகவல்கள் படிக்கவே நன்றாக உள்ளது. நமிநந்தி அடிகளார் பற்றி நாயன்மார்கள் சரித்திரத்தில் படித்திருந்தாலும், தாங்கள் எழுதிய பக்தி காவியத்துடன் படிக்கையில் மனதுக்கு பெரும் மகிழ்வு கிடைத்தது.

  அவ்வளவு உயரமான படிகளை தாங்கள் சிரமத்துடன் ஏறி இறங்கியது படிக்கையில் மனதுக்கு வருத்தமாக இருந்தது. எப்படியோ தியாகேசரும், அன்னையும் தங்களை பத்திரமாக காத்து, நல்ல தரிசனம் தந்து விட்டார்கள். அந்த வகையில் மகிழ்ச்சி.

  நீங்கள் சொல்லிய விதத்தில் உங்களுடன் பயணித்த திருப்தி வந்தது. எனினும் இந்தக் கோவில்களுக்கு செல்லும் வாய்ப்பை இறைவன் அருள வேண்டுமென பிரார்த்தித்துக் கொள்கிறேன். இன்று காலையிலிருந்தே வலைத்தளம் வரவில்லை. ஆதலால் இன்று தாமதமாக உங்கள் தளத்திற்கு பதிவை படிக்க வந்துள்ளேன். மன்னிக்கவும். பதிவை படித்தவுடன் இறைவனின் அருளை, அவன் கருணைகளை நினைத்து மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, வருகைக்கு நன்றி. உங்கள் சௌகரியம் போல் வாருங்கள். கருத்துச் சொல்லுங்கள். எல்லாருக்கும் தினம் தினம் வந்து கருத்துச் சொல்லுவதில் சிரமங்கள் இருக்கும். விரைவில் உங்களுக்கு இங்கெல்லாம் செல்லும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். திருவாரூரில் இருந்து திருக்குவளை செல்லும் வரை சாலை அருமையாகப் போட்டிருப்பாங்க. அதன் பின்னர் மோசமோ மோசம்! :(

   Delete
 13. தல புராணம் அறிந்தோம்.

  பிரமாண்ட கோவில் என கேள்விப்பட்டதுண்டு யாத்திரையில் நமக்கு செல்லக்கிடைக்கவில்லை இப்போது உங்கள் தரிசனத்தில் நாங்களும் பலவற்றையும் அறிந்து வணங்கினோம். விரிவாக தந்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. இந்தியா வரும்போது உங்களுக்கும் விரைவில் இந்தக் கோயில் செல்லும் வாய்ப்புக் கிடைக்கத் தியாகேசன் அருள்புரிய வேண்டும். நன்றி மாதேவி.

   Delete
 14. இரண்டு பகுதிகளாகப் பதிவு..இரண்டும் வெவ்வேறு ரகம்..

  முசுகுந்த சக்ரவர்த்திக்கு வாக்கு கொடுத்து விட்டு வழிந்து நின்ற தேவேந்திரன் ஈசனிடமே சென்று யோசனை கேட்கின்றான்.. கிழக்கு வாசல் வழியாக எழுந்தருளும் போது கைப்பற்றிக் கொள்.. என்கிறார் ஸ்வாமி.. அது முதல் காத்திருந்து - காத்திருந்து கதை தான்.. இன்று வரைக்கும் தேவேந்திரனின் எண்ணம் ஈடேறவில்லை..

  ReplyDelete
  Replies
  1. வாங்க தம்பி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. முதல் பகுதி சுமார் பத்துப் பனிரண்டு வருடங்கள் முன்னால் எழுதினது. இப்போப் போனது பின் பகுதியில் சொல்லி இருக்கேன்.

   Delete
 15. திருவாரூரில் பிறக்க முக்தி என்பார்கள்.
  திருவாரூரில் பிறந்தார்கள் எல்லோருக்கும் அடியேன்.
  திருவாரூர் பெருமைகளை பற்றி மிக அருமையாக சொன்னீர்கள்.
  இந்த தலத்தை அடிக்கடி பார்க்க முடிந்தது மாயவரத்தில் இருந்த போது.
  இப்போது அந்த இனிமையான நினைவுகளை அசை போடுகிறது மனது.


  ReplyDelete