எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 16, 2022

குஞ்சுலு அப்டேட்ஸ்

சின்னச்சிட்டு/குட்டிக் குஞ்சுலு வந்ததில் இருந்து சரியா இருக்கு வேலைகள் எல்லாம். காலம்பரப் பால் குடிப்பதில் இருந்து மத்தியானம் சாப்பிடும் வரைக்கும் பிடிவாதம். இரண்டு நாளைக்குச் சமர்த்தாகத் தலை வாரிப் பின்னிக் கொண்டது. அப்புறமா அதோட இஷ்டப்படி பின்னலைனு என் கிட்டேக் கோபம். வரமாட்டேன்னு சொல்லிடுத்து. பூ வைச்சுக்க மட்டும் என்னிடம் வரும். தாத்தாவோடு பசில்ஸ் விளையாட்டெல்லாம் விளையாடும். நம்ம வீட்டுக் கூடத்தின் டைல்ஸ் இரண்டுக்கு இரண்டு எனப் பெரிசா இருக்கா! அதுக்குப் பாண்டி விளையாடத் தோதாக இருக்கு. சில்லாக்கு ரோஜாப் பூவின் இதழ்கள். அதைத் தூக்கிப் போட்டுவிட்டுத் தாத்தாவோடு பாண்டி ஆடும். ஒரே கொட்டம் தான். அதுக்கப்புறமாக் களைச்சுப் போய்க் கொடுக்கும் பாலை ஒரே மூச்சாகக் குடிச்சுடும்.

நடு நடுவில் அவங்க அம்மாவோ/அப்பாவோ ஆங்கில வார்த்தைகள் டிக்டேஷன் கொடுப்பாங்க. சின்னச் சின்னக் கணக்குகள் கொடுப்பாங்க. அதையும் செய்துக்கும் மூஞ்சியைத் தூக்கினபடியே.மற்ற நேரங்கள் படம் வரையும். ஐபாடில் கார்ட்டூன்கள் பார்க்கும். ஐ பாடைக் கொடுத்துட்டால் வாங்கி வைக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான். அதோட அப்பா வரணும். பையர் வந்து ஏதேனும் சொல்லிச் சமாளிச்சு ஐபாடை வாங்கி வைப்பார். ஐபாடில் சார்ஜ் இல்லைனா பேசாம இருக்கும். வெளியே போனால் கொண்டு வந்திருக்கும் இரண்டு பேபீஸில் ஏதேனும் ஒண்ணை இங்கி/பிங்கி/பாங்கி போட்டுப் பார்த்துத் தேர்வு செய்து கொண்டு எடுத்துப் போகும்.

முந்தாநாள் பையர் வெளியே சாப்பிடலாம்னு  இரவு ஓட்டலுக்கு அழைத்துப் போனார். எல்லோரும் முன்னாடி போயிட நான் மட்டும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தேன். அதோட அம்மா திரும்பிப் பார்த்துட்டுப் பாட்டியால் நடக்க முடியலை பாருனு அதுகிட்டேச் சொன்னதும் உடனே ஓடி வந்து தன் கையை நீட்டி என் கையைப் பிடிச்சுக்கொண்டு அழைத்துச் சென்றது. படி ஏறும்போதும்/இறங்கும்போதும் என் கையைப் பிடிச்சுக்கோ என்று சொல்கிறது. அவங்க அம்மாவிடம் பாட்டியால் ஏன் நடக்க முடியலைனு கேட்டதுக்குப் பாட்டிக்கு முழங்கால் பிரச்னை/வலி என்று சொல்லி இருக்கா. உடனே என்னிடம் வந்து உனக்கு முழங்கால் பிரச்னையா? வலிக்கிறதா? டாக்டர் கிட்டேப் போனியா? நான் கூட்டிப் போகவா என்றெல்லாம் கேட்டது. நான் டாக்டரிடம் காட்டி மருந்தெல்லாம் சாப்பிடறேன் என்றேன். உடனே ஏன் உனக்கு முழங்காலில் வலி என்று கேட்டது. நான் எனக்கு வயசாச்சு இல்லையா அதான் என்றேன். கொஞ்சம் யோசிச்சது. தாத்தாவைப் பார்த்தது. உடனே என்னிடம் தாத்தா கூட வயசாச்சு. அவர் உன்னை விட வயசானவர் தானே? அவர் ஏன் வேகமாய் நடக்கிறார் என்றெல்லாம் கேட்டது. அதுக்கு அவ அம்மா ஏதோ சொல்லிச் சமாளிச்சா. தாத்தாவெல்லாம் பாய்ஸ், ஸ்ட்ரெங்க்த் நிறைய இருக்கும் என்றெல்லாம் சொன்னா.

நேற்று இரவுச் சாப்பாட்டுக்கு அவ அம்மா சப்பாத்திக்கு மாவு பிசைந்து கொண்டு இருந்தப்போ இது விளையாட்டுக்கு மாவு கேட்டிருக்கு. பாட்டியைப் போய்க் கேள்னு சொல்லி இருக்கா அவ அம்மா. உடனே என்னிடம் வந்து மாவு கேட்டது. அது dough (டோ" என்று சொன்னது எனக்கு டோர்(கதவுனு) காதில் விழுந்தது. அல்லது புரிந்து கொண்டேன். எந்தக் கதவைத் திறக்கணும்னு கேட்கவும் கோபம் வந்து விட்டது. தலையில் அடித்ஹ்டுக் கொண்டு "டோ" "டோ" என்று கோபமாய்ச் சொன்னது. பின்னர் புரிந்து கொண்டு அவ அம்மாவிடம் போய் வாங்கிக்கோ என்றேன். இன்னிக்குப் பழனி போயிட்டு அப்படியே கொடைக்கானல் போகணும்னு காலம்பரவே கிளம்பிப் போயிருக்காங்க. நாங்களும் போகணுனுதான் பையரின் திட்டம். ஆன மட்டும் சொல்லிப் பார்த்தார்.நான் முடியவே முடியாதுனு சொல்லிட்டேன். அலைச்சல் ஒத்துக்கலை. ரொம்பவே அசதியா ஆயிடும். அதோடு மேலே ஏறிக் கீழே இறங்கினு முழங்கால் விட்டுப்போயிடும். அதுக்கப்புறமா அவங்க மட்டும் கிளம்பிப் போயிருக்காங்க. பழனியை முடிச்சுட்டுக் கொடைக்கானலுக்குப் போய்க் கொண்டிருக்காங்கனு நினைக்கிறேன். அல்லது போய்ச் சேர்ந்திருக்கலாம். வீடு வெறிச்சென்று இரண்டு நாளைக்கு இருக்கும். கோகுலாஷ்டமி அன்று திரும்பி வராங்க. எனக்குக் கோகுலாஷ்டமிக்குக் கொஞ்சமா ஏதேனும் பக்ஷணம் பண்ணலாமானு ஒரு எண்ணம். உடம்பு இடம் கொடுக்கணும். பார்ப்போம்.! 

30 comments:

 1. அதனால்தான் இரண்டு நாட்களாக எபியில் காணவில்லையா? நான் 'காணவில்லை' நோட்டீஸ் அடிக்கலாமா என்று நினைத்தேன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் நெல்லை, முன்னெல்லாம் நாங்களும் நெருங்கிய நட்பைக் காணோம்னா "காணவில்லை" னு பதிவு கொடுப்போம். :) அதோடு உடம்பு ரொம்பவே அசதி தாங்கலை! :(

   Delete
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், என்னோட கருத்தே என்னோட ப்ளாகில் வரலை. ஆமாம் நெல்லை. அதோடு உடம்பும் படுத்தல் இப்போப் பார்த்து! :( முன்னெல்லாம் நெருங்கிய நட்புகள் வரலைனா நாங்க "காணவில்லை"னு பதிவு கொடுப்போம்.

   Delete
 2. பழனி பஞ்சாம்ருதம் பார்சல் வருதா? (உங்களுக்கு)

  ReplyDelete
  Replies
  1. வரும், பையர் வரும்போது வாங்கி வருவார்.

   Delete
 3. இரண்டு நாள் லீவாகையால், பரவாக்கோட்டை அல்லது குலதெய்வம் கோவிலுக்குப் போயிருக்கிறீர்கள், அது சம்பந்தமாக பதிவு ஒன்று எழுதுவீர்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

  ReplyDelete
  Replies
  1. ஹையோ! இந்தக் கூட்டத்தில் யார் அங்கெல்லாம் போறது? அது பரவாக்"கரை" பரவாக்கோட்டை இல்லை. ஹிஹிஹிஹி, போகணும்/போவோம்/விரைவில்

   Delete
 4. கொண்டாட்டமான தினங்கள்.  இதைப்போல் ஒரு இன்பம் உண்டான்னு இருக்கிறது படிக்க..  பாண்டி விளையாடுவது ஒரு ஆச்சர்யம்.  குழந்தையின் அக்கறையும் வியக்க வைக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் இல்ல! குழந்தைகளே தெய்வாம்சம் பொருந்தியவர்கள். எதிர் வீட்டுக்கு ஒரு குட்டிப்பையர் வருவார். அவர் வந்தாலும் ஒரே அமர்க்களமா இருக்கும்.

   Delete
 5. உங்கள் கால் மற்றும் உடல்நிலை எப்படி இருக்கிறது?  வல்லிம்மா கூட இன்னும் நார்மலுக்கு திரும்பவில்லை.  அவருக்கும் உடம்பு படுத்திக்க கொண்டே இருக்கிறது.  எப்போது பழைய மாதிரி ஆவார் என்று இருக்கிறது!

  ReplyDelete
  Replies
  1. கால் தான் படுத்தறது. அவ்வப்போது பாதங்களில் வீக்கமும் வருது. வயிறும் திடீர்/திடீர்னு தகராறு. அதனாலே கொஞ்சம் நேரம் கிடைச்சால் போய்ப் படுத்துடுவேன். :(

   Delete
  2. ஆமாம், ரேவதியைக் காணோமே! நான் என்னோட வேலைகளில் மூழ்கினதை அதை மறந்துட்டேன்.

   Delete
 6. துர்காகுட்டியின் வருகை மனதுக்கு மகிழ்ச்சி, உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.
  அவளுக்கு பிடிக்கும் தானே! சீடை, முறுக்கு எல்லாம். பாட்டி ருசியாக செய்து வையுங்கள்.
  குழந்தை சாப்பிட்டு மகிழட்டும்.

  கண்ணன் வருகை மகிழ்ச்சியை தருவது போல பட்டு குடியின் வருகை வீடு முழுவதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கட்டும்.

  பேத்தியின் குறும்புகள், பாட்டியின் மேல் அக்கறை , பாசம் எல்லாம் படிக்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.

  குட்டி தங்கத்திற்கு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்.

  ReplyDelete
  Replies
  1. சுமார் நான்கு வருஷங்களுக்குப் பின்னர் இன்னிக்குக் கொஞ்சமாய் முறுக்குச் சுற்றினேன். கர்ச்சிக்காயும் கொஞ்சமாப் பண்ணி வைச்சிருக்கேன். நாளைக்குக் கொஞ்சமாய்த் தட்டை பண்ணினால் கோகுலாஷ்டமி வந்தாச்சு. அதிகம் பண்ண உடம்பு இடம் கொடுக்கலை. கோகுலாஷ்டமி அன்னிக்கு இருக்கவே இருக்குப் பாயசம், வடை. குழந்தைங்க வந்திருக்கிறதாலே கொஞ்சமாய்க் கிருஷ்ணனுக்கு இந்த வருஷம் திரட்டுப்பாலும் உண்டு. முன்னெல்லாம் வருஷா வருஷம் பண்ணிக் கொண்டிருந்தேன். 2012 ஆம் ஆண்டிற்குப் பின்னர் பண்ணுவதே இல்லை. :(

   Delete
 7. ரசித்து ரசித்து வாசிக்கிறேன் கீதாக்கா. குட்டி குஞ்சுலுவின் கொட்டங்களை.....ரசனையான கொட்டங்கள்...அதை நீங்க எவ்வளவு ரசிக்கிறீங்கன்னு பதிவிலும் தெரிகிறது...இதோ மீண்டும் வருகிறேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் தி/கீதா. என்னால் அதோடு ஓடியாட முடியலையேனு வருத்தமா இருக்கு. பின்னி விடும்போதே அங்கும் இங்குமாய்ச் சிரிச்சுண்டே ஓடும். இப்போக் கொஞ்ச நாட்களாய் அவங்க அம்மாவும் பின்னக் கூடாதாம். தானாய்த் தலையை வாரிக்கிறது. நல்ல நீளமான கூந்தல். ஒற்றைப் பின்னலோ, இரட்டைப் பின்னலோ பின்னிவிட்டுப் பூ வைச்சு விடுவேன். பூ வைச்சுக்க ரொம்ப ஆசை. மல்லிகைப் பூ/அல்லது முல்லைச் சரத்தை இப்போதைய ஃபாஷனில் வைச்சுட்டு மேலே தெரியறாப்போல் ரோஜாப்பூக்களை வைச்சுடுவேன். கண்ணாடியில் போய்ப் பார்த்துக்கும். :)))))

   Delete
 8. குஞ்சுலு ஓடி வந்து உங்கள் கையைப் பிடித்து அழைத்துச் சென்றது என்பதை வாசித்துநெகிழ்ந்துவிட்டேன் கீதாக்கா...நீங்க எவ்வளவு சந்தோஷமா அதை உணர்ந்திருப்பீங்கன்னு புரிஞ்சுக்க முடிகிறது. நெகிழ்ச்சியில் என் கண்ணில் நீர்...சத்தியமாக!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்,எங்கே பாட்டியைனு கேட்டிருக்கு. பாட்டியால் நடக்க முடியலை.மெதுவா வராங்கனு சொல்லவும் உடனே திரும்பி வந்து என்னைக் கூட்டிச் சென்றது.

   Delete
 9. மாமா குஞ்சுலுவுடன் பாண்டி ஆடியது...ஆஹா என்னவோ நானும் கூட ஆடியது போல ஒரு மகிழ்ச்சி. தாத்தா பாட்டி என்றால் அது தனி தான், கீதாக்கா...நானும் சின்ன வயசில் தாத்தா பாட்டியுடன் அதுவும் என்னோடு பாட்டி 92 வயது வரை இருந்ததாலோ என்னவோ மனம் தாத்தா பாட்டி பேத்தி பேரன் உறவு எனக்கு மிகவும் பிடிக்கும். ரசித்து வாசிக்கிறேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அதோடு ஈடு கொடுக்க அவ அப்பா/தாத்தாவால் தான் முடியும். அவ அம்மாவுக்கும் சீக்கிரம் களைச்சுடும். நாங்களும் தாத்தா/பாட்டி/மாமா/சித்திகள்/பெரியம்மா/பெரியப்பா என இருந்ததால் இந்த வாழ்க்கையின் அருமை புரியும்.

   Delete
 10. குஞ்சுலு உங்களிடம் ஆதரவாக அன்போடு பரிவுடன் கேட்டதை வாசித்து ரொம்பவே நெகிழ்ந்துவிட்டேன். குழந்தை இத்தனை தெளிவாக தாத்தா நடக்கிறாரே அவர் பெரியவர்தானே என்றெல்லாம் கேட்பதால் உங்களுக்கு ஏன் வலி என்று சொல்லலாம் கீதாக்கா அது புரிந்துகொள்ளும். சிம்பிளாகச் சொல்லலாம்...

  இந்த முறை ரெண்டு தோழிகள்தான் கூட வந்திருக்காங்களோ!!!!!! ஹாஹா இப்ப ஏதேனும் ஒரு தோழியும் கூடாப் போயிருக்குமே.

  கோகுலாஷ்டமி அன்று குழந்தை இருப்பது குதூகலம்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம் சொல்லி இருக்கோமே. முழங்காலில் வலி என்று. ஏன் என்று கேட்டதுக்கு அது காய்கறி சாப்பிடணும் என்பதால் பாட்டி சின்ன வயசில் காய்கள் சாப்பிடலைனு சொல்லி வைச்சிருக்கோம். :)

   Delete
 11. அதனால்தான் இரண்டு நாட்களாக காண வில்லையா?..

  குஞ்சுலுவுடன் குதூகலம் தொடரட்டும்.. மகிழ்ச்சியான தருணங்கள் நிறையட்டும்!..

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நாளைக்கு வந்துடும் குஞ்சுலுக் குட்டி.

   Delete
 12. வணக்கம் சகோதரி

  தங்கள் பேத்தி இப்போது தங்களுடன் இருப்பது தங்களுக்கு எவ்வளவு மகிழ்வை தருகிறது என்பதை தங்கள் பதிவு சொல்கிறது. பேத்தி நிறைய விஷமத்தனம் செய்தாலும், தங்களுடன் அன்பாக இருப்பது ரொம்ப மகிழ்வை தருகிறது. அவளின் விளையாட்டுதனங்களை ரசித்தேன். அவர்கள் ஊருக்கு திரும்புவதற்குள் அவளுடன் ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் சந்தோஷமாக நாட்களை கழியுங்கள். வீட்டில் அனைவரையும் மிகவும் கேட்டதாகக் கூறுங்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா. மிக்க நன்றி. குழந்தைக்கு விஷமங்கள் இப்போது குறைந்து விட்டன. அவளே சொல்லிக்கிறா தான் பெரிய பெண் என்று. மற்றபடி காய் நறுக்கினால் கூடவே உதவி செய்வதும், சப்பாத்தி மாவு பிசைந்தால் உடனே விளையாட்டுக்கு மாவு வாங்கிக்கவும் ஓடி வந்துடும் கீரை நறுக்கினால் ஆய்ந்து கொடுக்கும். இப்போக் கொஞ்சம் உடம்பு சரியில்லை. சுருண்டு படுத்துக்கறது. சாப்பிடவும் இல்லை. ஏற்கெனவே சாப்பிடப் படுத்தும். இப்போ இன்னமும் சாப்பாட்டை உள்ளே இறக்கணும்.

   Delete
 13. குஞ்சுலுவோடு சநாதோஷத்தை கொண்டாடவும்.

  இப்பதிவு இன்றுதான் பார்த்தேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி. அதனால் என்ன? மெதுவாக வந்தால் போதும். உங்கள் நேரத்தைப் பொறுத்து வரலாமே!

   Delete
 14. குட்டிக் குஞ்சுலுவின் விளையாட்டுக்கள் மகிழ்ச்சி தருகின்றன. மகிழ்ந்திருங்கள்.

  இங்கும் பேரன் என்னுடன்தான் அம்மா வெளியூரில் வேலை. அவனுடனேயே பொழுது விடிந்து செல்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி. பேரனுடன் பொழுதுகள் இனிமையாகக் கழியட்டும். அம்மாவை விட்டுட்டுக் குழந்தை இருக்கானே, அதுவே பெரிய விஷயம்.

   Delete