எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 19, 2024

தமிழ்த்தாத்தாவுக்கு அஞ்சலி

 உ.வே.சா. சிறுவயதில் விளையாட்டிலும் இசையைக் கற்பதிலும் ஆர்வமுடையவராய் இருந்தார். ஆனாலும், அவர் தந்தையவர்கள் உ.வே.சா. விளையாடுவதை விரும்பியதில்லை. எப்பொழும் படித்துக்கொண்டே இருக்கவேண்டுமென்று விரும்பினார். தமது சிறிய தந்தையாரிடம் இயற்கையாகவே இசையில் ஆர்வமுள்ள உ.வே.சா. இசை பயின்றாா்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்வது அக்காலத்தில் மிகவும் பெருமைப்படும் செயல். உ.வே.சா.விற்குச் சிறுவயதில் ஆங்கில எழுத்துகள் மட்டும் கற்கும் வாய்ப்பு கிட்டியது. சடகோபஐயங்காரே தமக்குத் தமிழில் ஆர்வம் உண்டாகும் வண்ணம் முதன்முதலில் கற்பித்தாா் என்று உ.வே.சா. தெரிவிக்கின்றார்கள். அரியலூரில் தம் குடும்பம் மிக்க வறுமையில் வாழ்ந்து வந்ததையும் பதிவு செய்கின்றார்.கல்வி, கேள்வி இல்லாதவரும் அக்காலத்தில் கல்வி அறிவுடையவர்களைக் கண்டால் அவர்களுக்கு மதிப்பு கொடுத்து ஆதரிப்பதில் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகிறது.


உ.வே.சா.வின் தந்தை இவருக்கு நல்ல கல்வி கற்பித்துச் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துத் தரவேண்டும் என்பதில் தீவிர ஆர்வமும் கவலையும் கொண்டிருந்தார். பல தமிழ் நூல்களை அவருக்கு முறையாகக் கற்பித்தார். சிதம்பரம்பிள்ளை என்னும் தமது தந்தையின் நண்பரிடம் திருவிளையாடற்புராணம் நூலைக் கற்றார். அக்காலத்தில் கற்பது என்பது தற்போது முறையாகப் பள்ளியிலமர்ந்து பாடம் வாரியாக அல்லாமல் இது போன்று தமிழ் நூல்களை நன்கு கற்பதே போலும். உ.வே.சா. தமது வாழ்நாள் முழுவதும் இது போன்றே தமிழ் நூல்களை ஐயம் தீர்ந்தபடி கற்றுத் தேர்ந்தார்கள். நன்னூல், தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும் சமகாலத்தில் இயற்றிய பிள்ளைத்தமிழ், கோவை முதலிய இலக்கியங்களையும் இது போன்றே தமிழறிஞா்களிடம் பாடம் கேட்டும் புலமையடைந்தார். சிறுவயது முதலேயே நன்னூலை நன்கு கற்றிருந்ததால் இவருக்கு இது மிகவும் உதவியாக இருந்துள்ளது. எந்தப் புலவரிடம் பாடம் கேட்கச் சென்றாலும், இவரது நன்னூல் புலமை கைகொடுத்து உதவியது.


உ.வே.சா. கவிதை எழுதும் கலையையும் பயின்று வந்தார். அவர் முதலில் செய்யுள் இயற்றிய போது பிறர் கருத்தை வைத்துச் செய்யுள் இயற்றினார். அவர், தந்தை அவருக்கு இது முறையாகாது என்றும் அவருடைய பாட்டில் அவர் அனுபவம் இருப்பதுதான் உசிதம் என்று கூறியதைப் பின்பு நன்கு உணர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றார். உ.வே.சா. தமது தந்தையாருடன் சென்று இராமயண விரிவுரையில் உதவி செய்துள்ளார். இதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இதன் மூலம் இவர் தந்தைக்கு நல்ல வருமானமும் கிடைத்தது.


உ.வே.சாவிற்குத் திருமணம் முடித்துவிட வேண்டுமென்று அவர் தந்தையார் விரும்பினார். இளம்வயதில் மணமுடிப்பது அக்காலப்பழக்கம். பதினாறு வயதில் மணம் முடியாமலிருந்தால் அது பெருங்குறை என்று கருதியது அந்தக்காலம். காலமாற்றத்தின் பலனாக அக்காலத்தில் சிறந்தது என்று நினைத்தது தற்பொழுது நகைப்புக்குரியது ஆகிறது. அது போல் அக்காலத்தில் நகைப்புக்குரியது, தற்பொழுது சிறந்தது ஆகின்றது என்றும் குறிப்பிடுகின்றார். அப்பொழுது கூட உ.வே.சா. தமிழை நிறைவாகக் கற்றுக் கொள்ளவில்லை என்ற மனக்குறைதான் பெரிதாக இருந்ததாகக் குறிப்பிடுகின்றார். உ.வே.சாவிற்குப் பதினான்காம் வயதில் திருமணம் நடந்தது. மணபெண் வயது எட்டு. பொருட்செலவிற்குப் பெரும்பாலும் கிராமத்தினர் உதவி செய்து திருமணத்தை நடத்தினர். திருமணத்திற்கு முன்னும் பின்னும் உ.வே.சாவின் சிந்தனை எல்லாம் “தமிழ்தான் எனக்குச் செல்வம் அதுதான் என் அறிவுப் பசிக்கு உணவு . . .அன்றும்சரி இன்றும்சரி இந்த நிலைமை மாறவே இல்லை” என்னும் அவருடைய சொற்கள் தமிழ் கற்கவேண்டும் என்பதிலும், தமிழ் மீது அவர் கொண்ட பற்றின் வெளிப்பாடும் ஆகும். இறுதிவரை அவர் வாழ்க்கையில் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தமிழைக் கற்க வேண்டும் என்னும் ஒரே சிந்தனையைத் தவிர, அவர் வேறு எதிலும் நாட்டம் கொண்டதற்கான சாயலே கிடையாது.


தம் தந்தையின் நண்பராகிய கும்பகோணம் வக்கில் வேங்கிடராவ், உ.வே.சா. தமிழ் கற்பதனாலும் இசைப் பயிற்சியினாலும் பெரிய பயனில்லை; ஆங்கிலம் கற்றுக் கொடுங்கள், தாம் உதவி செய்வதாகவும் தமது நண்பர்கள் முலம் உதவி செய்வதாகவும் கூறியபொழுது அவர்பால் உ.வே.சா. அவர்களுக்குக் கோபமுண்டாயிற்று; தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும் பதிவு செய்கிறார்.

3 comments:

 1. அரிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 2. நேற்று வாட்ஸாப்பில் பார்வேர்டியபோது என்னடா, கீதா அக்கா ஒரு பதிவு போட்டிருப்பார்களே, மறந்து விட்டார்களா என்று நினைத்தேன்!

  ReplyDelete
 3. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. தங்கள் பதிவால் தமிழ் தாத்தா உ. வே. சா. அவர்களைப்பற்றி நல்ல விபரமாக அறிந்து கொள்ள முடிந்தது. அவரின் கல்வித்திறன்கள் பற்றி குறிப்பிட்டு சொன்னது சிறப்பு. அக்காலத்தில் பெற்றோர்களுக்கு அடங்கிய பிள்ளைகளாக வாழ்ந்த வரலாற்றை இக்கட்டுரை சொல்கிறது. அவரின் தமிழ் பற்று வியந்து மெய் சிலிர்க்க வைக்கிறது. . அவர் நினைவை என்றுமே நாம் மறக்க முடியாது.

  அந்த காலத்தில் பெண்களுக்கு மட்டுமின்றி, ஆண்களுக்கும் இளவயது திருமணம் நடைபெற்றது உண்மைதான். அவர்கள் படிக்கும் காலத்திலேயே திருமணத்தை முடித்து விடுவார்கள். நல்லதொரு பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete