எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 22, 2026

உன் பெயர் என்ன சொல்லு!

 /வெளிநாடுகளில், திருமணமான பெண் கணவனின் பெயரை சர்நேம் ஆக வைத்துக்கொள்வதில்லை. இந்தியாவில் திருமணமானவுடன் பெண்ணுக்கு கணவனின் சர்நேம் வந்துவிடுகிறது. இது எதனால்? இந்தியாவில் மனைவி, கணவனின் உடைமையாக கருதப்படுவதாலா?//

நெல்லை சொல்லி இருப்பது, அதிலும் வெளிநாடுகளில் அப்பா பெயர் வைச்சுக்க மாட்டாங்கனு சொல்லுவது எனக்குத் தெரிஞ்சு தப்பு. பலரும் திருமணம் ஆனதும் கணவனின் குடும்பப் பெயரைத் தான் சுமந்துக்கிட்டு இருப்பாங்க/இருக்காங்க. இங்கே வட நாட்டிலும் கணவனின் குடும்பப் பெயராக மாறிடும். வெகு சிலர் மட்டுமே அப்பா வீட்டுப் பெயரில் இருப்பாங்க. ஆனால் தென்னாட்டில் (மத்த மாநிலங்கள் பத்தித் தெரியாது.) தமிழ்நாட்டில் அப்படி எல்லாம் கல்யாணம் ஆனதும் கணவன் பெயரை நம் பெயரோடு இணைச்சுக்க முடியாது. இதுக்கு நானே ஒரு சிறந்த உதாரணம்/. நான் கல்யாணம் ஆவதற்கு முன்னரே தமிழ்நாடு மின் வாரியத்தில் வேலைக்குத் தேர்வாகி விட்டேன். போஸ்டிங் வருவதில் தான் தாமதம். அதுக்குள்ளே என் அப்பா ரொம்ப அவசரப்பட்டதால் எனக்குக் கல்யாணமும் ஆகி நான் சென்னை/அம்பத்தூரில் குடித்தனமும் வந்தாச்சு. அதுக்குப் பின்னரே எனக்குச் சென்னையில் ஜார்ஜ் டவுன் அல்லது தண்டையார்ப்பேட்டை அலுவலகத்தில் போய் வேலையை ஒப்புக்கொள்ளச் சொல்லி உத்தரவு வந்திருந்தது.

வேலைக்கான உத்தரவு வந்தப்போ அலுவலகத்தில் யாருக்கும் எனக்குக் கல்யாணம் ஆன விஷயம் தெரியாது. குமாரி என்.ஆர்.கீதா என்று போட்டே உத்திரவு வந்திருந்தது. தண்டையார்ப்பேட்டை அலுவலகத்தில் வேலையை ஒப்புக் கொண்டேன். அதில் கையெழுத்து இடும்போது நமக்குத் தான் கல்யாணம் ஆயிடுத்தே என்னும் எண்ணத்தில் "கீதா சாம்பசிவம்" என்று கையெழுத்துப் போட்டு உத்தரவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி உடனே வேலையையும் ஆரம்பிச்சுட்டேன். நான் இருந்தது ஓர் நிர்வாக அலுவலகம் மட்டுமே. தலைமை அலுவலகம் இம்மாதிரியான சென்னை/மற்ற ஊர்களில் உள்ளவை எல்லாவற்றுக்கும் சேர்த்து மவுன்ட் ரோடில் எல்.ஐ.சி.க்கு எதிரே ஓர் பிரம்மாண்டமான கட்டிடத்தில் இருந்தது. உத்தரவை ஏற்றுக் கொண்டு முதலில் அங்கேதான் போய் ரிப்போர்ட் செய்யச் சொல்லி இதில் அனுபவம் உள்ளவர்கள் அம்பத்தூரிலேயே சொன்னதால் நான் முதலில் மவுன்ட்ரோட் அலுவலகம் தான் போனேன். அவங்க இந்த இரு அலுவலகம் தான் தட்டச்சுபவர் கேட்டிருப்பதால் இரண்டில் நீ எங்கே போய் வேலை செய்ய ஆசைப்படுகிறாய்னு கேட்டாங்க. சென்னைக்கு அவ்வப்போது வந்து போனதத் தவிர்த்தால் நான் சென்னைக்கே புதுசு. ஆகவே ஒண்ணும் தெரியவில்லை. சும்மா இருந்தேன். அவரே நீ எங்கே குடித்தனம் இருக்காய்னு கேட்டுட்டு அம்பத்தூ ர்னா பேசின் பிரிட்ஜ் வந்து அங்கிருந்து பேருந்து பிடிச்சு அலுவலகம் போகலாம். சாயந்திரமும் அலுவலக வாசலில் இருந்து பஸ் பிடிச்சு பேசின் பிரிட்ஜ் வந்து ரயிலில் வீட்டுக்குப் போகலாம் என்று சொன்னார். எனக்கு இதெல்லாம் அரை குறையாகத் தான் புரிஞ்சது. என்றாலும் சரினு தலை ஆட்டினேன். தண்டையார்ப்பேட்டை அலுவலக மெசெஞ்சர் வந்திருப்பதாகவும் அவருடன் போயிடுனும் சொன்னார்.

ரொம்பப் பெரிசா ஆயிட்டதாலே பதிவாப்போட்டுட்டேன்.

வேலைக்கான உத்தரவில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன்னு சொன்னேன் இல்லையா? அதூ அன்னிக்கே சாயங்காலம் அனுப்பிட்டாங்க. ஆனால் மறுநாள் அலுவலகம் வந்தால் ஒரே அதிர்ச்சி. என்னுடைய வேலைக்கான ஆர்டரை நிறுத்தி வைச்சிருந்தாங்க. என்னடா இது புதுக்குழப்பம்னு அக்கவுன்டன்ட் கிட்டே போய்க் கேட்டால். "உன் பெயர் என்னம்மா?" என்றார். கீதா நு சொல்லிட்டு இப்போக் கல்யாணம் ஆனதாலே கீதா சாம்பசிவம்னு சொன்னேன். இனிக்ஷியல்?  என்று கேட்டார். ஸ்கூலில் இரண்டு ஆர். கீதா இருந்ததால் எனக்கு என்.ஆர். கீதா தான் இனிக்ஷியல் என்றேன். உடனே அந்த மறுப்புக்கான காரணம் சொல்லி வந்திருந்த கடிதத்தை என் பெயருக்கும் அலுவலகம் பெயருக்கும் மவுன்ட் ரோடு அட்மின் அலுவலர் பெயருக்கும் வந்திருந்ததில் எனக்கான காப்பியைக் கொடுத்தார். பார்த்தால் அதில் நாங்கள் தேர்வு செய்த நபர் என்.ஆர். கீதா என்னும் பெண்மணி தான். ஆனால் கீதா சாம்பசிவம்னு கையெழுத்து இருப்பதால் இதை ஏற்க முடியாது. ஆள் மாறாட்டமாய் இருக்கலாமோ என்னும் சந்தேகத்துடன் திருப்பி அனுப்புகிறோம் என்றிருந்தது. உடனே நம்மவருக்குத் தொலைபேசி மூலம் அழைத்துக் கேட்டேன். அவர் சொன்னார் இந்த மாதிரி இந்தத் தேதியில் கல்யாணம் ஆயிடுச்சுனும். அப்போ உன் பெயர் என்.ஆர். கீதா தான் எனவும் கல்யாணம் ஆனதால் தானாகவே கணவன் பெயரோடு இணையும் எனவும் எழுதிக் கூடவே இன்னொரு எஸ்.எஸ்.எல்.சி. சர்டிஃபிகேட்  பிறப்புச் சான்றிதழ், பள்ளியில் கொடுத்த டி.சி. எல்லாத்தையும் ஒவ்வொண்ணு கெஜடட் அலுவலரிடம் கையெழுத்து வாங்கி நிரப்பிக் கொடுத்தேன். இஃகி,இஃகி,இஃகி.

மறு நாள் நடக்கப்போவதை அறியாமல் ஒரு பெருமூச்சுடன் (நிம்மதியாம்) என் இடத்தில் போய் அமர்ந்து வேலையை ஆரம்பித்தேன். மறுநாள் காலை அலுவலகம் வந்தால் மறுபடி உத்தரவை ரத்து செய்து அனுப்பி இருந்தாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். என்னடா காரணம்னு பார்த்தால் என்.ஆர். கீதாவுக்குக் கல்யாணம் ஆனதெல்லாம் சரி. ஒத்துக்கறோம். ஆனால் அதனால் பெயரெல்லாம் மாறிடாது. என்.ஆர்.கீதா "கீதா சாம்பசிவம்"னு மாறணும்னா கெஜட்டில் விண்ணப்பம் செய்து அதில் விளம்பரம் செய்து அந்த விளம்பரத்தைப் பத்திரிகைகளில் வெளியிட்டு இந்த மாதிரி என் பெயரை நான் சட்ட பூர்வமாகக் கணவர் பெயரோடு இணைத்துக் கொண்டு விட்டேன்னு அறிவிக்கணும். இல்லைனா இவங்க என்.ஆர்.கீதா தான். என்.ஆர். கீதா தான் இங்கே வந்து வேலையை ஏத்துக்கிட்டிருக்காங்கனு நாங்க நம்பணும்னா இவங்க கையெழுத்திலும் என்.ஆர்.கீதா என்றே போடணும். இல்லைனா நாங்க நம்ப மாட்டோம்னு சொல்லிட்டாங்க. வீட்டுக்கு ஆலோசிச்சோம். என்னோட கடைசி நாத்தனார் அப்போ எங்களோட இருந்தாங்க. அவளுக்கு ஒரே கோபம். அது எப்படி அண்ணா பெயரைச் சேர்க்கக் கூடாதுனு சொல்லுவாங்க. நீங்க விடாதீங்க. கல்யாணம் ஆயிடுச்சுன்னா தானாகவே யாரும் சொல்லாமலஏயே பெயர் மாறிடும் என்றெல்லாம் சொன்னார். ஆனால் நாங்க ரெண்டு பேரும் அதை ஏத்துக்காமல் அலுவலக அளவில் என்.ஆர்.கீதாவே போதும்னு வைச்சுட்டோம். கெஜட் வரை எல்லாம் போய்ப் பெயரை மாத்த வேண்டாம்னு இருந்தோம். சரினு அலுவலகத்தில் என்.ஆர்.கீதானே எழுதிக் கொடுத்தாச்சு. அவங்களுக் குமாரியை எடுத்துட்டுத் திருமதி என்.ஆர்.கீதானு போட்டாங்க. ஆனால் இத்துடன் பிரச்னை நிக்கலையே.!

Saturday, July 18, 2026

கு.கு. ஊருக்குப் போயிருக்கு!

 வீடு ஒரே அமைதியா இருக்கு. ஐந்தாறு நாட்களாக. சத்தமே இல்லை. வைச்ச சாமான்கள் வைச்ச இடத்தில் இருக்கின்றன. கம்ப்யூட்டர் அறை வெறிச்சோடிக் கிடக்கு. வாஷ் பேசினில் கை கழுவும் சோப் குறையவே இல்லை. விட்டு வைச்ச மாதிரி அப்படியே இருக்கு. வீட்டில் குப்பையும் இல்லை. ஹால் சோஃபாவில் படுத்திருக்கும் கு.கு.வின் பாப்பாக்கள் எல்லாம் கணினி அறையை விட்டே வெளிவரலை. கு.கு அதில் ஒன்றை எப்போவும் எடுத்துப் போகும். கூடவே வைச்சுக்கும். ஆனால் தோஹாவிலோ என்னமோ அதைப் பத்தி செக்யூரிடி கேட்டாங்களோ இல்லை வேறே காரணமோ தெரியலை. இப்போல்லாம் எடுத்துப் போவதில்லை. ஒருவேளை தான் பிக் கேர்ல் ஆகிக் கொண்டு வருவதாக அது சொல்லுகிறதே அதனாலோ என்னமோ. டைனிங் டேபிளில் பால் தம்பளரை வைச்சிருந்தால் உடனே வந்தெல்லாம் குடிக்காது. குடிச்சுட்டுப் பின்னர் ஓட்டமா ஓடிப் போய் சிங்கில் போட்டுவிட்டு ஓடும். 


கலர் கலராக வார்னிஷ் பேப்பர் அல்லது கலர் பேப்பர்களைக் கத்திரித்து அதுக்குத் தோன்றிய டிசைனில் வெட்டி ஒட்டிக் கொண்டு வீட்டில் காகிதக் குப்பைகளைப் போடும். கத்திரிக்கோல்கள் எல்லாம் அதன் அதன் இடத்தில் இருக்கு இப்போ. வண்ணக்கலவை குழைக்கும் கிண்ணங்கள் காய்ந்து கிடக்கின்றன. அதன் பாட புத்தகம் மட்டும் கையில் எடுத்துப் போயிருக்கு போல. மற்றபடி அதன் நினைவுகள் இந்த வண்ணக்கலவைகளிலும், வெட்டிப் போடும் காகிதக் குப்பைகளிலும் ஆங்காங்கே கிடக்கும் அதன் பேபி பொம்மைகளும் அது இல்லை ஊருக்குப் போயிருக்கு என்னும் உண்மையைச் சத்தமாகச் சொல்லிக் கொண்டே இருக்கிறாது. இப்போத் தான் நாலைந்து நாட்கள் ஆகின்றன.  அது அடுத்த மாதம் 10 அல்லது 15 தேதிக்குத் தான் வரும். தினம் ராத்திரி அதுக்காக உணவு வரவழைத்துக் கொண்டிருந்தேன். இப்போ நான் கிடைத்ததைச் சாப்பிட்டுக் கொள்கிறேன். அமாவாசைக்கு அரைச்ச மாவு கொஞ்சம் மீதம். அதைப் பயன்படுத்துகிறேன். 


காகிதங்களைக் கத்திரித்து வெட்டி ஒட்டி ஒரிகாமி போலப் பற்பல டிசைன்களில் ஏதாவது பண்ணிக் கொண்டே இருக்கும். இல்லைனா படங்களை வண்ணம் குழைத்து வரைந்து வெட்டி அட்டையில் ஒட்டி வைச்சுக் கொடுக்கும். சில சமயம் வந்து காட்டிட்டுத் திரும்ப வாங்கிக் கொண்டு போயிடும். இப்போ! வெறிச். ஆச்சு, இன்னும் கொஞ்ச நாட்கள் தான். என்றாலும் ஒரு குழந்தை வீட்டில் மனிதர்களிடையே இத்தனை மாற்றங்களை உண்டு பண்ணும் என்பதை நினைத்தாலே சந்தோஷமா இருக்கு. முன்னெல்லாம் ஓல்ட் மேன், ஓல்ட் லேடினு எங்களைக் கூப்பிடும். இப்போத் தாத்தா இல்லை என்னும் நிதர்சனத்தை ஒப்புக் கொண்டிருக்கு. ஆகவே என்னிடம் அதிகம் வந்து முன்னைப் போல் எதுவும் கேட்பதில்லை. என்றாலும் பாசமும் இருக்கு. அது இரண்டு வருஷங்களுக்கும் முன்னால் ரங்க்ஸ் எனக்கு வெண்டைக்காய் நறுக்கித் தரும்போது செய்த சில்லறை விஷமம். கீழே.



நான் உடம்பு முடியாமல் இருந்தப்போ கெட் வெல் ஸூன் பாட்டி! என்று எழுதி துர்கானு கையெழுத்துப் போட்டுக் கொடுத்தது இது.







தாத்தா வெண்டைக்காய் நறுக்கும்போது அதன் காம்புகளைப் பொறுக்கித் தாத்தாவுக்கு ஆபரணங்களாக அணிவித்த படம் இது இரண்டும்.