எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, November 30, 2011

ஓ, வெல்கம், ஸ்வீட் வெல்கம், மெரி கிறிஸ்துமஸ்!


சான்டா அங்கே ஒரு மாபெரும் கப்பலில் மிதந்து கொண்டிருந்தார். இந்தப் பையன் பில்லி, அங்கே தான் காலநிலையைக் கவனிக்கும் இடத்தில் அமர்ந்து கொண்டிருந்தான். எட்வர்டும், அந்தச் சுட்டிப் பெண்ணும் அவனை அழைக்கச் சென்றபோது தவறுதலாக எதையோ அழுத்த, அது பின்னாலேயே நகர ஆரம்பிக்க மூவரும் அதோடு பயணித்து, அங்கு நடைபெறும் அனைத்து வேலைகளையும் பார்த்துக்கொண்டே வந்தனர். கிறிஸ்துமஸுக்குப் பரிசளிக்கவென சான்டா கிளம்பும் கலைமான்கள் பூட்டிய வண்டி பயணம் செய்யச் சித்தமாக நின்றது. அப்போது அந்த வெள்ளி மணிகளில் ஒன்று தவறிக் கீழே விழ எட்வர்ட் அதைக் கையில் எடுத்து ஆட்டிப் பார்த்தான். போலார் எக்ஸ்பிரஸில் வருகையில் அந்தப் பெண்ணிற்கு இந்த மணி ஓசை கேட்டது அவன் நினைவில் வந்தது. அப்போது அவனுக்குக் கேட்கவில்லை. ஆகவே இப்போதாவது தனக்குக் கேட்கிறதா என்று பார்த்தான். ஏமாற்றம் தான்! மணி ஓசை கேட்கவே இல்லை அவனுக்கு. உடனே தனக்கு சான்டாவிடமும், கிறிஸ்துமஸின் உண்மையான புனிதத்திலும் நம்பிக்கை இருப்பதாக வாய்விட்டுச் சொல்லிக் கொண்டான். சான்டாவை நம்புவதாகவும் மீண்டும் கூற அவன் கண்களுக்கு சான்டாவும் தெரிந்தார். மணியின் ஓசையும் கேட்டது. அந்த மணியில் சான்டாவின் உருவமும் தெரிந்தது.

கிறிஸ்துமஸின் முதல் பரிசைக் கொடுக்க சான்டா எட்வர்டைத் தேர்ந்தெடுத்தார். எட்வர்டிடம் இவ்வுலகில் இருக்கும் எதை வேண்டுமானாலும் கேள்; உனக்குக் கிடைக்கும் எனக் கூறினார். எட்வர்டுக்கோ அந்த வெள்ளி மணியின் மேலே ஆசை; மணி ஓசை எல்லாருக்கும் எப்போதும் கேட்காது. சான்டாவின் மேலும் கிறிஸ்துமஸின் புனிதத்தன்மையின் மேலும் நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே கேட்கும். சான்டாவின் கைகளில் இருந்து வெள்ளிமணி நழுவ அதை எடுத்துத் தன் ட்ரவுசர் பையில் போட்டுக்கொண்டான் எட்வர்ட். அங்கிருந்த அனைவருக்கும் பரிசளித்த சான்டா மற்றக் குழந்தைகளுக்கும் பரிசளிக்க அங்கிருந்து தன் பயணத்தைத் தொடங்கினார்.
குழந்தைகளும் மீண்டும் போலார் எக்ஸ்பிரஸுக்குத் திரும்பினார்கள். குழந்தைகளின் டிக்கெட்டுகளில் அறிவுரைகள் நிரம்பிய கடிதங்களைக் கோர்த்துக் கொடுத்தார் ரயிலின் கன்டக்டர். தன் வீடு வரும் போது தன் ட்ரவுசர் பையைச் சோதித்துப் பார்த்த எட்வர்ட் அந்தப் பை எப்படியோ ஓட்டையாகி இருப்பதையும் வெள்ளி மணி அதிலிருந்து கீழே விழுந்திருப்பதையும் கண்டு ஏமாந்து போய்ச் சுற்றும் முற்றும் தேடினான். மணி எங்கும் கிடைக்கவில்லை. ரயிலிலிருந்து கீழே இறங்கித் தேடலாம் என்றால் நேரமாகிவிட்டது. மனம் ஒடிந்து போனான் எட்வர்ட். ஆனால் அவன் மனதில் கொஞ்சமாவது சந்தோஷம் கொடுக்கும் நிகழ்வு ஒன்று அப்போது நடந்தது. ஷிகாகோவிலிருந்து வந்த பில்லிக்கு அவன் கேட்ட பரிசு கிடைத்துவிட்டதாம். சான்டா வந்து கொடுத்திருக்கிறார் என மிகவும் சந்தோஷம் அடைந்து கிறிஸ்துமஸ் தனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருப்பதாய்ச் சொன்னான். அவன் வீட்டருகே ரயில் வந்து நின்றதும் அனைவருக்கும் வாழ்த்துச் சொல்லிப் பிரியாவிடை பெற்றான் எட்வர்ட். மறுநாள் கிறிஸ்துமஸ் அன்று காலை அவன் தங்கை கிறிஸ்துமஸ் மரத்தினருகே இன்னும் பிரிக்கப்படாமல் இருந்த பரிசுப் பொருள் ஒன்றைக்கண்டாள். அனைத்துப் பரிசுகளும் பிரிக்கப்பட்டிருக்க அது மட்டும் பிரிக்காமல் காணப்பட்டது.

எட்வர்ட் அதை எடுத்துப் பிரித்தால் ஆஹா, அந்த வெள்ளி மணியே அது! அதை எடுத்து ஆட்டிப் பார்த்தான். இனிய நாதம் கிளம்பியது. அவன் மட்டுமின்றி அவன் தங்கையும் கேட்டாள். ஆனால் அவன் பெற்றோருக்குக் கேட்கவில்லை. ஏனெனில் அவர்கள் சான்டாவை நம்புவதை விட்டுவிட்டனர். ஆனால் எட்வர்டிற்கு மட்டும் அவன் பெரியவனான பின்னரும் தொடர்ந்து கேட்டுக்கொண்டிருந்தது. அவன் சிநேகிதர்களுக்கும் சரி, அவன் சகோதரிக்கும் சரி, அவர்கள் வயதானபின்னால் கேட்கவே இல்லை என்று சொன்னார்கள்; சொல்கிறார்கள். ஆனால் எட்வர்டிற்கு மட்டும் அவனுக்கு வயதானபின்னரும் கேட்டுக்கொண்டிருக்கிறது. ஏனெனில் அவன் உண்மையாக சான்டாவின் இருப்பை நம்புகிறான்.

Sunday, November 27, 2011

ஜிகு ஜிகு ஜிகு ரயில் வண்டி, கூ உச் உச் உச் உச்!

ரயிலில் ஏறிய எட்வர்ட் அங்கே அவன் மட்டும் தனியாக இல்லை, எனவும் அவனைப் போன்ற குழந்தைகள் பலரும் சான்டாவைக்காணப் பயணப்பட்டிருப்பதையும் கண்டான். அவர்களில் ஒரு சிறுமி தனக்கு எல்லாம் தெரியும் என்பது போன்ற தன்னம்பிக்கையோடு இருந்தாள்.
பில்லி என்னும் வேறொரு சிறுவனோ ஷிகாகோவின் இல்லினாய்ஸிலிருந்து வந்திருந்தான். தனிமையை விரும்பினான் . அவனுக்கு ரயிலின் கூரையின் மேலே ஒரு நாடோடியுடனும், நெருப்பு அள்ளிப் போடும் ஃபயர்மேனான ஸ்டீமரோடும் ரயிலின் எஞ்சினியரான ஸ்மோக்கியோடும் மோதல் ஏற்பட்டது. அதோடு இல்லாமல் ரயில்பாதையில் நிறையத் தடங்கல்களுக்கும் குறைவில்லை. ஒரு நேரம் ஒரு பெரிய மலைப்பாதையை ரயில் தாண்டுகையில் அந்த நாடோடியும், சிறுவனும் அங்கே நடுவழியில் குறுக்கிட்ட சுரங்கப்பாதையில் இடித்துக்கொண்டு நசுங்கிப் போய்விடாமல் இருக்கவேண்டிக் கீழே இறங்கினார்கள். வழுக்கிவிட்டது. கிட்டத்தட்ட ரயிலில் இருந்து கீழே விழுந்திருக்க வேண்டும். மேலேயே இருந்திருக்கலாம் என்றால் சுரங்கத்தின் கூரைக்கும், ரயிலின் மேல்பாகத்துக்கும் இடைவெளி ஒரு இஞ்ச் கூட இல்லை. நல்லவேளையாகத் தப்பிப் பிழைத்தனர். அதை அடுத்து கூட்டம் கூட்டமாகக் காரிபோ என அழைக்கப்பட்ட மிருகங்கள் வந்தன. (கலைமான்??) ஒருவழியாக அவற்றிலிருந்தும் தப்பினால் ரயிலின் முக்கியச் சாவி ரயிலை மெதுவாகச் செலுத்த முயன்றபோது உடைந்துவிட்டது. மிகவும் கஷ்டப்பட்டுச் செலுத்திக்கொண்டிருந்த ரயில் இப்போது நீராவியை அள்ளித் தெளித்தபடி (சே, நிஜம்மாவே ஜலம், மேலெல்லாம் தெளிக்கிறதே!:D) கட்டுப்பாடில்லாமல் சென்றது.

நம் ஹீரோவான எட்வர்டும், ஹீரோயின் ஆன அந்தச் சிறுமியும் ரயிலின் கண்டக்டரின் உதவியோடு முன் நின்று ரயிலைப் பனிப்பாறைகளால் நிரம்பியதொரு ஒடுக்கமான பள்ளத்தாக்கிற்குக் கொண்டு வந்தனர். திடீரென அங்கே செங்குத்தாகப் பாதை கீழே இறங்கி மேலே செல்ல, மூவரும் முன்னால் நின்றவண்ணம் இறுக்கமாய்ப் பிடித்துக்கொண்டனர். ரயில் வேகமாய்ச் சென்றது. அங்கிருந்த ஓர் உறைந்த ஏரியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ரயிலை ஓட்டுவதற்குச் சிரமப் பட்டுக்கொண்டிருந்த ஸ்டீமர் அவசரத்திலும் சாவியைச் சரி செய்ய வேண்டும் என்ற வேகத்திலும் தெரியாமல் அதை விழுங்கி விட்டான். இப்போ என்ன செய்யறது? ரயிலோ குலுங்கிக்குலுங்கிச் செல்கிறது. அதோ அந்தச் சாவி! ஸ்டீமரின் தொண்டையிலிருந்து வெளியே வந்து, கீழே உறைந்திருக்கும் பனியில் அல்லவோ விழுகிறது. ஆஹா! இது என்ன! அது விழுந்த வேகத்தில் அங்கே உறைந்திருக்கும் பனியெல்லாம் உடைந்து போகிறதே! அதற்குள் ஸ்மோக்கி தன்னிடமிருந்த ஒரு ஹேர்பின்னால் காட்டர்பின்(சாவி) செய்யவேண்டிய வேலைக்கு மாற்றாகப் பயன்படுத்துகிறான். அவர்களுக்குப் பின்னாலேயும் ஐஸ் உடைந்து கொண்டு வந்தது. ரயிலின் பாதையும் முழுக்க முழுக்க ஐஸால் நிறைந்து இருந்தது. கன்டக்டர் வெகு கவனமாக ஸ்மோக்கியையும், ஸ்டீமரையும் ஏரியின் அடுத்த பக்கம் தாண்டுவதற்கு உதவி செய்கிறார். அப்பாடா, ஒரு வழியா வடதுருவத்துக்கு வந்து சேர்ந்தாச்சு. ஆனால் இந்த பில்லி, என்னமோ சான்டாவைப் பார்க்கத் தான் வரப் போவதில்லை என்கிறானே? ஏனென்று கேட்டால் அவன் எங்கிருந்து வந்திருக்கிறானோ அந்த ஊரும் சரியில்லையாம்; அவன் குடும்பமும் உடைந்து விட்டதாம். கிறிஸ்துமஸோ, சான்டாவோ தனக்கு எதுவும் நன்மை செய்ய முடியாது என்று கூறுகிறான். உண்மையா?

Friday, November 25, 2011

வட துருவத்துக்கு வாரீஹளா!

கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டது. நாளை கிறிஸ்துமஸ். மிசிகனில் உள்ள க்ரான்ட் ராபிட்ஸில், பத்து வயதே ஆன எட்வர்டிற்கு (கற்பனைப் பெயர்) தூக்கம் வரவே இல்லை. நாளை விடிந்தால் கிறிஸ்துமஸ். கிறிஸ்துமஸின் உண்மையான திருப்தியும், புனிதமும் கிறிஸ்துவை நம்புவது மட்டுமில்லாமல், சான்டா என்னும் தாத்தா தான் வந்து வருடா வருடம் பரிசுப் பொருட்களைக் கொடுப்பார்கள் என்று அம்மாவும், அப்பாவும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்களே! அது உண்மையா?? சான்டா கலைமான்கள் பூட்டிய வண்டியில் வெள்ளி மணிகளை ஆட்டிய வண்ணம் "ஹோ ஹோ, ஹோ" என்று கோஷம் போட்டுக்கொண்டு வருவாராம். அவரவர் ஆசைப்பட்டுக் கேட்கும் பரிசுகளைப் புகைபோக்கி வழியாய்க் கீழே இறங்கி (எப்படி முடியும் இது?) கொடுப்பாராமே? உண்மையா? எட்வர்ட் இன்றிரவு விழித்துக்கொண்டு இதைக் கண்டு பிடித்தே ஆகவேண்டும் என நினைத்தான்.

பக்கத்து அறையில் அவன் தங்கையை அவன் பெற்றோர் தூங்க வைக்கும் சப்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தன் படுக்கையில் படுத்திருந்த அவனுக்குக் கீழே இருந்து ஏதோ சப்தம் கேட்க உடனே சான்டா வாயில் வழியாக வருகிறாரோ எனத் தோன்ற அவசரம் அவசரமாகக் கீழே இறங்கினான். ஏதோ நிழல் போல் தெரிந்தது. இதுதான் சான்டாவோ என நினைத்துப் பார்க்கையில் அவன் பெற்றோர் தான் சான்டாவின் அலங்காரத்தில் வந்திருப்பதைப் புரிந்து கொண்டுவிட்டான். என்றால் தங்கையைத் தூங்க வைத்துவிட்டு சான்டாவின் உடையை அணிந்து கொண்டு இருவரும் வருகின்றனரா? எழுந்தவன் தன்னுடைய புத்தக அலமாரியைக் குடைந்தான். என்சைக்ளோபீடியாவிலோ அல்லது அவனிடம் இருக்கும் மற்றப் புத்தகங்களிலோ சான்டாவைப் பற்றிய விபரங்களைத் தேடிக் கண்டுபிடிக்க முயன்றான். சரியான புத்தகம் கிடைக்கவில்லை. அதற்குள்ளாக அவன் பெற்றோர் அவன் அறைப்பக்கம் வருவது தெரிய வரவே, மீண்டும் படுக்கையில் போய்ப் படுத்துக்கொண்டு தூங்குவது போல் நடிக்க ஆரம்பித்தான்.

சான்டாவைப் பற்றிய கதைகளைக் கேட்பதில் எட்வர்ட் எவ்வளவு ஆவலாக இருந்தான் என்பது குறித்து அவன் பெற்றோர் இருவரும் அவர்களுக்குள் கிசுகிசுப்பாகப் பேசிக்கொண்டே அங்கே வந்தனர். இரவு எத்தனை மணியானாலும் விழித்திருந்து சான்டாவைப் பற்றிய கதைகளைக் கேட்டுவிட்டே படுப்பானே என அவர்கள் சொன்னதைக் கேட்டதும் கொஞ்சம் மன உறுத்தலாக இருந்தது அவனுக்கு. யோசனைகள் செய்து கொண்டே தூங்காமல் இருந்தவனுக்கு ஒரு மணி நேரம் சென்றது தெரியவில்லை. அப்போது எங்கேயோ ரயில் ஊதும் சப்தம்.



கூ கூ கூ கூ உச் உச் உச் உச் உச் உச் உச்,

இந்த நேரத்தில் ரயிலா? அதுவும் இங்கேயா?

"எட்வர்ட், எட்வர்ட், வா, எழுந்திரு, இந்த ரயிலில் நாம் வடதுருவத்திற்குப் போகப் போகிறோம். சான்டாவை அங்கே நீ நேரேயே சந்திக்கலாம்."





ரயிலின் கன்டக்டர் கூறினார். சற்றே தயங்கிய எட்வர்ட் தன்னையும் அறியாமல் எழுந்து வந்து ரயிலில் ஏறிக்கொண்டான். ரயிலும் கிளம்பியது.

ரயிலின் பெயரே போலார் எக்ஸ்பிரஸ்.

கூ கூ கூ உச் உச் உச் உச் உச் உச் உச்


ரயில் தொடர்ந்து செல்லும்!

டிஸ்கி: பலருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும் என் போக்கில் சொல்ல முயன்றிருக்கிறேன். ஆகவே ஏற்கெனவே தெரிந்தவர்கள் பொறுத்துக்கொள்ளவும். அதோட எங்கள் ப்ளாகுக்குக் கதை எழுதினதின் தாக்கம் இன்னமும் இருக்கே! :))))))))) நன்றி.

Thursday, November 24, 2011

ஒரு முக்கியமான விஷயம்!

விரைவில் எதிர்பாருங்கள்


நாசாவில் தலைவி!


பூமிக்குக் கீழே 180 அடி ஆழத்தில் ஆய்வுகளை மேற்கொண்ட தனிபெரும் தலைவி!


விபரங்கள் விரைவில்.

Catch me if you can!


பக்கத்து ஊரான சான் அன்டானியோவின் ரிவர் வாக்கிற்குச் சென்றிருந்தோம். வழக்கம்போல் சாப்பாடு பிரச்னை. :))) பழங்கள், பிஸ்கட், சாலட் என சமாளிச்சாச்சு! அங்கே தங்கி இருந்தப்போப் பொழுது போகலைனு தொலைக்காட்சியை மேய்ந்தபோது காட்ச் மீ இஃப் யு கான். என்ற படத்தைப் பார்க்க நேர்ந்தது. நாங்க பார்க்கையிலே வழக்கம்போல் கொஞ்சம் படம் ஓடியாச்சு. ஆஸ்பத்திரியில் நர்சிடம் பொய்யான தகவல்களைக் கொடுக்கும் இடமா இருந்ததா! சரி, நம்ம வசூல்ராஜாவோட ஒரிஜினலோனு நினைச்சுட்டேன். கடைசியிலே பார்த்தாக்க, இது "நான் அவனில்லை(?) படத்தோட ஒரிஜினலோனு சந்தேகம். லியனார்டோ டி காப்ரியோ நல்லா நடிச்சிருக்கார்னு சொல்றது எல்லாம் சும்ம்ம்மா! ஒரிஜினல் Frank Abagnale, Jr. ஆகவே மாறிட்டார்.

அவரோட அப்பாவைச் சந்திக்கிறதெல்லாம் உண்மைக் கதையில் இல்லையாம்; சினிமாவுக்கு மசாலா சேர்க்க வேண்டிச் சொல்லி இருக்காங்களாம். ஆனாலும் அது கதையோட ஒட்டியே வருவதால் வித்தியாசமாத் தெரியலை. கல்யாண ரிசப்ஷன் பார்ட்டியில் அவசரம் அவசரமா மனைவி கிட்டே உண்மையை ஒத்துக்கொண்டு தன்னோட கூட ஓடி வரும்படி கேட்டுக்கொண்டு, அவளுக்காகக் காத்துட்டு இருக்கிறச்சே, மனைவி வரதைப் பார்த்து சந்தோஷப்பட்ட அடுத்த விநாடியே ஆங்காங்கே நிற்கும் உளவுத்துறை ஆட்களை அடையாளம் கண்டு கொண்டு ஏமாந்து போகிறார். மனைவி அப்புறம் என்ன ஆனானு சரியாத் தெரியலை சினிமாவிலே. உண்மை வாழ்க்கையில் பிடிபட்டு தண்டனை அனுபவிச்சப்புறமும் விடுதலையாகிக் கல்யாணம் செய்து கொண்டு மூன்று குழந்தைகளும் 26 வருடத் திருமண வாழ்வும் இந்தப் படத்தை எடுக்கையில் உண்மையான ஃப்ராங்கிற்கு ஏற்பட்டிருக்கிறது.

விமானத்திலிருந்து கழிவறை வழியாத் தப்பிக்கிறதெல்லாம் ரொம்பவே ஓவர்! நம்பறாப்போல் இல்லை. அதுவும் உண்மைக் கதையில் இருந்திருக்காதுனு நினைக்கிறேன். என்னதான் கழிவறை வழியாக் கீழே ஒளிந்திருந்து தப்பிச்சாலும் விமானம் மேலே பறக்கையிலே எப்படி அவ்வளவு நேரம் ஒளிஞ்சிருக்க முடியும்? அந்தச் சின்ன துவாரம் வழியாக் கீழே சக்கரங்களுக்கு நடுவே இறங்கி ஓடிடறாராம். ம்ஹும்; சான்ஸே இல்லை; கஸ்டம்ஸ், இமிக்ரேஷன் எல்லாம் தூங்கிட்டா இருந்தாங்க?

மற்றபடி படம் உண்மைக் கதைங்கறதாலே உள்ளது உள்ளபடி எடுத்திருக்காங்க. எப்.பி.ஐ. கிட்டேயே மாட்டிக்கொண்டு, தண்டனை பெற்று, பின்னால் அவங்களுக்குத் தற்செயலாக உதவி செய்து, விடுதலை அடைந்து, அவங்களுக்கே உதவிகள் செய்து அதன் மூலம் நிரந்தர வருமானம் பெற்று; நடுவில் மறுபடி ஓடிப் போய்; மறுபடி திரும்பி வந்து! எல்லாம் நடந்தவை. உண்மையான ஃப்ராங்கே பார்த்துட்டுப் பாராட்டினாராம். நிறைய விருதுகள் இந்தப் படத்திற்குக் கிடைச்சிருக்கு. தொய்வில்லாமல் இருந்தது.

Friday, November 18, 2011

கவரை, துவரை, விடாதீர்கள் அவரை! (எங்கள் சவடால் 2K+11)

தங்கத் தவளை பெண்ணே!
சவடால் கதைப் போட்டி. எங்கள் 2K+11.


ராஜா வேட்டையாடி விளையாடுகையில் நடந்தவைகளைக் கேள்விப்பட்ட ஜோசியர் "அவரை விடாதீர்கள் !" எனக் கத்த நினைத்துத் தம்மை அடக்கிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டார். பின்னர் தம் அறைக்குச் சென்று உள்ளே தாழிட்டுக் கொண்டார்.

அவரை, துவரை, கவரை ஹோய்

ஹோய், கவரை துவரை அவரை டோய்

டோய் துவரை, அவரை, கவரை ஹோய்

எனத் திரும்பத் திரும்பக் கூறினார். ஒவ்வொரு முறையும் அவர் உடல் சிலிர்த்துக்கொண்டது. எதையோ எதிர்பார்க்கிறாப்போல் காணப்பட்டார். அவர் எதிரே ஒரு கண்ணாடி.
அதிலே சற்று நேரத்திற்கெல்லாம் சில காட்சிகள் தெரிய ஆரம்பித்தன. ஏழு கடல்கள், ஏழு மலைகள் தாண்டி, ஏழு கிணறுகள் தாண்டி அங்கே வசிக்கும் விசித்திரமான தவளைக் குடும்பங்களைத் தாண்டிச், சென்றால் அங்கே ஓர் அவரைப் பந்தல். அதிலே காய்த்தன பச்சைப்பசேலென அவரைக்காய்கள். அதிலே ஒரு அவரைக்காய் மட்டும் தனித்துத் தெரிந்தது. அது அளவில் கொஞ்சம் பெரிசாகவும், அதோடு முழுத்தங்கமாகவும் இருந்தது. அதையே உற்றுப் பார்த்துக்கொண்டு, "விடாதீர்கள் அவரை" என மீண்டும் கத்தினார் ஜோசியர். உடனே அங்கே தூரத்தில் காவல் காத்துக்கொண்டிருந்த முரட்டுத் தவளை ஓன்று வந்து, கண்ணாடியில் தெரிய இங்கிருந்தே அதனிடம், மறுபடியும் தன் மந்திர ஸ்லோகத்தைக் கூறிப் பின் "விடாதீர்கள் அவரை" என்று முடித்தார்.

அந்தத் தவளை பதில் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் அந்தப் பெரிய அவரைக்காயிடம் போய், கேலி செய்வது போல் தன் குரலெடுத்துக்கத்த ஆரம்பித்தது. அவரைக்காய் திடீரெனப் பேசியது. " உன்னை அழிக்கும் வழி எனக்குத் தெரியும். பொறுத்திரு; என் மனைவி ஒரு பெரும்படையோடு வருவாள். பாம்புக்கூட்டங்களை அழைத்துவந்து உங்களை எல்லாம் அழிப்பாள்." என்று பெருமிதத்தோடு கூறியது.

"ஹாஹாஹா, அவள் அப்படி ஏதேனும் செய்யக் கூடாது என்று தானே அவளை நாங்கள் தங்கத்தவளைப் பெண்ணாக மாற்றிவிட்டோம்! ஹையா! ஜாலி, ஜாலி, இப்போ என்ன பண்ணுவே, இப்போ என்ன பண்ணுவே?" என்று அந்தத் தவளை தாவிக் குதித்தது. மனம் நொந்து போனான் இளவரசன்/ராஜா/ராஜகுமாரியின் கணவன்?? எங்கள் ப்ளாக் இதிலே எதுவேணாலும் வைச்சுக்குங்க!

ஜோசியர் மீண்டும் கூறினார், "விடாதீர்கள் அவரை!" பின்னர் அந்தக் கண்ணாடியை மூடி வைத்துவிட்டு சந்தோஷமாகத் தன் எதிர்காலத்தைக் குறித்துக் கனவு காண ஆரம்பித்தார்.


இங்கேயோ தங்கத்தவளைப் பெண்ணாக வந்த ராஜகுமாரி ராஜா புங்கவர்மன் ஏதோ செய்யப் போறான்னு நீனைச்சா அவன் வேட்டைனு போயிட்டு கடைசியில் எலி வேட்டை ஆடிவிட்டு அதற்கே களைத்துப் போய்க் கொட்டாவி விட்டுத் தூங்கிவிட்டான் என்பதைப் பார்த்துவிட்டு மனம் வருந்தினாள். என்ன செய்யலாம் என யோசித்துத் தன் தவளைக்குரலில் விடாமல் கத்த ஆரம்பித்தாள். ராஜாவுக்குத் தூக்கம் கலைந்தது. அப்போது பச்சை வண்ண ஆடைக்காவலன் சந்தடியில்லாமல் அறைக்குள் நுழைந்தான். ராஜாவுக்குப் பயத்தில் பேச்சே வரவில்லை. "சே, நீயெல்லாம் ஒரு ராஜா, உனக்கெல்லாம் ஒரு வாளா!" என்றான் காவலன். ராஜா அசடு வழியச் சிரித்து, "என்ன விஷயம், உன் சம்பள பாக்கி....." என இழுக்க, "விட்டுத்தள்ளுங்க, நான் அதைக் கேட்க வரலை இப்போ! உங்க கிட்டே ஒரு ரகசியத்தைச் சொல்லிட்டுப் போக வந்தேன்.' என்றான்.

"ரகசியமா? என்னது அது?' என்று ராஜா கேட்க, "நானும், உங்க கிட்டே சம்பளம் கேட்காமல் நீங்களும் பணக்கார ராஜாவாக ஒரே ஒரு வழி இருக்கு." என்றான் ப.வ.காவலன். ராஜா ஆர்வத்தோடு தன் மூக்கை நீட்ட, அதில் ஓங்கிக் குத்திய காவலன், "என்ன பறக்காவட்டித்தனம்! இருங்க!" என்று சொல்லிவிட்டுச் சுற்றும் முற்றும் பார்த்தான். "விடாதீர்கள் அவரை!" என்றான். ராஜா பயத்தில் துள்ளிக் குதிக்க, தன் தலையில் மடேர் மடேர் என அடித்துக்கொண்ட காவலன்," இது ஒரு ரகசிய மந்திரமாக்கும்" என்றான். "ஹிஹிஹி, என்னைத்தான் எதிரிகளிடம் பிடிச்சுக் கொடுக்கிறயாக்கும்னு நினைச்சுட்டேன்." என அசடு வழிய, "நீங்க கெட்ட கேட்டுக்கு எதிரிவேறேயா?" எனத் தனக்குள் முணுமுணுத்த ப.வ.காவலன் ஜோசியர் அறையின் ஜன்னல் வழியாகத் தான் கண்ட காட்சிகளைக் கூறினான்.
எல்லாவற்றையும் கேட்ட ராஜா, தங்கத்தவளைப்பெண்ணின் கணவன் தங்க அவரைக்காயாக இருக்கிறான் எனக் கேள்விப்பட்டுவிட்டு அங்கே எப்படிச் செல்வது எனக் காவலனையே கேட்டான். காவலன் மறுபடி தலையில் அடித்துக்கொண்டு, "நீயெல்லாம் ஒரு ராஜா, உனக்குக் காவலன் ஒரு கேடு!" என்று சொல்லிவிட்டு ஜோசியரைத் தாஜா செய்ய நாட்டியக்காரியை அனுப்பச் சொன்னான். ராஜாவுக்கு நாட்டியக்காரியை அனுப்பவேண்டும் என்றதும் தானும் உடன் செல்லவேண்டும் என்ற சபலம் தட்டியது. காவலன் கண்டிப்பாக ராஜா போகக் கூடாது என்று சொல்ல அரை மனசோடு ராஜா சம்மதித்தான். நாட்டியக்காரியோ ஒரு வருஷமாகச் சம்பளம் கிடையாது, புத்தாடைகள் கிடையாது; ஜோசியரை மயக்கறது என்றால் அதற்கேற்ற மதுவகைகள் கிடையாது; நான் போக மாட்டேன்." என்று பிடிவாதம் பிடிக்க இதுதான் சாக்கு என்று ராஜா அவளைத் தாஜா செய்யும் சாக்கில் கொஞ்ச ஆரம்பித்தார்.

தங்கத் தவளைப்பெண் எல்லாவற்றையும் பார்த்துவிட்டுக் காவலனின் புத்திசாலித்தனத்தில் மகிழ்ந்து கொண்டிருந்தாள். ராஜாவும் நாட்டியக்காரியும் குலாவுவது கண்டு அவளுக்குப் பொறாமையும் கோபமும் வர மீண்டும் தவளைக்குரலில் கத்தி ஆர்ப்பாட்டம் செய்தாள். காவலன்," ஜோசியரைப் பத்தி உனக்குத் தெரியுமா?" என்று தங்கத்தவளை கிட்டே கேட்க, "விடாதீர்கள் அவரை" என்று தவளைக்கத்தல் கத்தினாள் ராஜகுமாரி. காவலன் அதிபுத்திசாலியாதலால் இதிலே ஏதோ சூட்சுமம் இருக்குனு புரிந்து கொண்டான். நாட்டியக்காரியைப் பலவந்தமாகப் பழைய மதுவையே எடுத்துக்கொண்டு ஜோசியரிடம் போய் அவரை மயக்கி விஷயங்களைத் தெரிந்து வரச் சொல்லி அனுப்பி வைத்தான்.

நாட்டியக்காரியையும் ,மதுவையும் பார்த்ததுமே ஜோசியர் உளற ஆரம்பித்தார். தான் முன்னர் இருந்த நாட்டில் அவரை ராஜகுமாரனின் பணச் செருக்கையும் அவன் சபையில் தான் இருந்தபோது இரண்டு பேருக்கும் வந்த சண்டையையும், அவனைப் பழிவாங்கவென்றே தான் இந்த நாட்டுக்கு வந்து அவனையும் அவரைக்காயாக மாற்றிவிட்டு, ராணியையும் தவளையாக மாற்றித் தன் அடிமையாக வைத்திருப்பதையும் உளறிக்கொட்டிக் கிளறி மூடினார். அப்படியா? அங்கே செல்ல வழி என்ன? என்று நாட்டியக்காரி கேட்க, தன் கண்ணாடியைக் காட்டிய ஜோசியர் அதைத் தேய்த்தால் அதிலிருந்து வரும் ஒளிக்கிரணங்களில் ஜிலுக்கு குலுக்கு பாய் பாய், என்னும் மந்திரத்தைச் சொன்னால் அது பறக்கும் பாயாக மாறும் என்றும்
அதில் ஏறிச் செல்லவேண்டும், அங்கே போய், அந்தத் தங்க அவரைக்காயைப் பறித்துக்கொண்டு,
அவரை, துவரை, கவரை ஹோய்

ஹோய், கவரை துவரை அவரை டோய்

டோய் துவரை, அவரை, கவரை ஹோய்"


என்னும் மந்திரத்தைச் சொன்னால் தங்க அவரை ராஜா உருவம் பெற்றுவிடுவான் என்றும், மீண்டும் அதே மந்திரத்தை மட்டும் சொல்லாமல் கூடவே , கவரை, துவரை, விடாதீர்கள் அவரை என்னும் மந்திரத்தை மட்டும் தனியாகச் சொன்னால் தான் அவரைக்காயாக நிரந்தரமாக ஆகிவிடுவோம் என்றும் தனக்கு அப்படி ஒரு சாபம் இருப்பதாகவும், அதனால் தான் கவரை, துவரையைச் சேர்த்துச் சொல்லாமல் வெறும் "விடாதீர்கள் அவரை" என்பதை மட்டுமே சொல்வதாகவும் கூறிவிட்டார். அவரை மயக்கித்தூங்க வைத்த நாட்டியக்காரி ராஜாவை நம்பாமல் காவலனிடம் எல்லாவற்றையும் கூற, அவனும் ஜோசியரின் கண்ணாடியைத் தேய்த்து அதிலிருந்து வரும் ஒளிக்கிரணங்களில் ஜிலுக்கு, குலுக்கு பாய் பாய் என்னும் மந்திரத்தைச் சொல்லப் பாய் பறந்து வந்தது. அதில் ஏறிய காவலன் ராஜாவும் கூட வரவேண்டும் என்று அழுது அடம் பிடிக்கிறதைப் பார்த்துச் சகிக்காமல் கூடவே ராஜாவையும் ஏற்றிக்கொண்டான். தங்கத்தவளைப் பெண்ணோ தான் தத்தித்தத்தியே வந்துவிடுவதாய்ச் சொல்லிவிட்டாள்.


ஏழு மலைகள், ஏழு கடல்கள், ஏழு கிணறுகள் தவளைக்குடும்பங்கள் தாண்டி அவரைத் தோட்டத்துக்குப் போனால் அங்கே எல்லாமும் தங்க அவரைக்காய்களாக இருந்தன. எது ராஜா அவரை எனப் புரியவில்லை. சற்று நேரம் பிரமித்துப் போன காவலன், மந்திரத்தைத் திரும்பத் திரும்ப உருப்போட ஆரம்பித்தான். அப்போது முன்னம் பார்த்த பெரிய தவளை வந்து ஹாஹாஹா எனச் சிரிக்க தங்கத்தவளைப் பெண் அங்கே வந்து சேர்ந்தாள் ஒரு பெரும் பாம்புக்கூட்டத்துடன்.
அவள் தன் தங்கத்தோலைக்கழட்டி மானுடப் பெண்ணாக மாறிப் பாம்பாட்டியின் உதவியோடு பாம்புகளைப் பிடித்து வந்திருந்தாள். அதுக்குத்தான் பின்னாடி வரேன்னு சொல்லி இருக்கிறாள். பாம்புகள் தவளைகளைப் பிடிக்கச் செல்ல தவளைகள் பயந்து ஓட அவரைப்பந்தலில் இருந்த அவரைக்காய்கள் நிஜமாக மாற ஒரே ஒரு காய் மட்டும் தனித்துப் பெரியதாகத்தங்கமாய்த் தெரிய அதைப் பறித்த தங்கத்தவளைப்பெண் அந்த மந்திரத்தைச் சொல்லச் சொன்னாள்.

காவலனும் சொல்ல ராஜாவும் உருவம் பெற்றான். பின்னர் அந்தப் பறக்கும் பாயைப் பிடித்துக்கொண்டு, மீண்டும் மந்திரத்தைச் சொல்லக் கண்ணாடி எதிரே தெரிந்தது. அதில் தூங்கிக் கொண்டிருந்த ஜோசியர் தெரிய அவரைப் பார்த்துக் காவலன் சொன்னான்.

கவரை, துவரை, விடாதீர்கள் அவரை!


இங்கே பார்க்கவும்

Thursday, November 17, 2011

ஶ்ரீ சக்ரராஜ சிம்மாசனேஸ்வரி! தொடர்ச்சி!

அம்பிகையின் பரிபூரண சாந்நித்யம் ஶ்ரீவித்யா தேவதையாக இருக்கும் யந்த்ர ரூபத்திலேயே சிறப்பாகக் காணப்படும். ஆகவே இதற்கெனச் சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகிறது. அடுத்து இவற்றில் காணப்படும் எட்டுத்தளங்கள் வஸுதல: வஸுக்கள் எனப்படும். அஷ்டவஸுக்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா? ஆகையால் இங்கேயும் எட்டு என்னும் எண்ணையே இந்த வஸு தல: என்னும் சொல் குறிக்கும். அடுத்து வரும் பதினாறு தளங்கள் பதினாறு கலைகளையும் குறிக்கின்றன. இவற்றோடு பிந்துவையும் சேர்த்துக்கொண்டு நாற்பத்து நான்கு கோணங்கள் என்று சொல்வார்கள். இந்த ஶ்ரீசக்ரமும் பூப்ரஸ்தார்ம், மேரு ப்ரஸ்தாரம் என இருவகைப்படும். மேரு என்பதையும் அனைவரும் பார்த்திருப்போம். மேருவும் பூர்ண மேரு, அர்த்த மேரு என இருவகைப்படும். ஆகவே அவற்றுக்கு உரிய முறையில் வழிபடவேண்டும்.

அம்பாளின் இந்த வாசஸ்தலத்துக்கு ஶ்ரீநகரம், ஶ்ரீபுரம் என்றே பெயர். இதை எல்லாம் குருமுகமாகத் தெரிந்து கொள்ளவேண்டும். மேலோட்டமாகச் சொல்லியதை வைத்து எதுவும் செய்யக் கூடாது. சக்கரங்கள் வழிபடுபவரின் எந்தப்பக்கமாக இருக்கவேண்டும் என்பதில் இருந்து கணக்கு உண்டு. அம்பிகையை வழிபடுவதும் இருவிதமான முறைகளில் வழிபடுவது உண்டு. ஒரு வழிபாட்டு முறையில் சக்கரத்தின் நடு முக்கோணம் மேல் நோக்கியும், இன்னொரு முறையில் நடு முக்கோணம் கீழ் நோக்கியும் காணப்படவேண்டும். ஆகவே மிகவும் கவனத்தோடு செய்யப்பட்டு, அதைவிடக்கவனத்தோடு பூஜையில் வைத்து, ஆசாரம் தப்பாமல் குரு மூலம் உபதேசம் பெற்ற பின்னரே இந்த வழிபாடுகளைச் செய்யலாம். அதுவரைக்கும் ஸ்லோகம் மட்டும் சொல்லுவோம்.

இப்படியான தேவியைத் துதித்த பட்டரோ தான் அழிவற்ற இன்பத்திலே வாழும்படியான ஒரு பரம்பொருளே அவள் எனக் கூறுகின்றார். ஶ்ரீசக்ர ராஜ்யத்தில் வசிக்கும் தேவியைத் தன் மனக்கண்ணால் தரிசித்தவர், இந்லழகை வாயினால் உரைக்கவும் முடியுமோ என்கிறார். ஏழு கடல்களாலேயும், ஏழு உலகங்களாலேயும், பெரிய அட்ட குலாசலங்களாலேயும் அணுக முடியாத தேவியானவள் சூரிய, சந்திரர்க்கு நடுவே அவர்களின் சுடரை விடப் பிரகாசமாகக் கோடி சூரியப் பிரகாசமாக நித்தியசூரியாக விளங்குகிறாள் என்கிறார்.

வாழும்படி ஒன்று கண்டு கொண்டேன் மனத்தே ஒருவர்
வீழும்படி அன்று விள்ளும்படி அன்று வேலை நிலம்
ஏழும் பருவரை எட்டும் எட்டாமல் இரவு பகல்
சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே.

மனதாலும் வாக்காலும் அணுகுவதற்கு அரியவளான தேவியை நம் பேரின்ப வாழ்க்கைக்குப் பற்றுக்கோடானவள் என்பதைப் புரிந்து கொண்டு, அவளே கதி எனச் சரணடைந்து, நாம் செய்யும் அனைத்துத் தவறுகளையும், அவள் விலக்கும் காரியங்களைச் செய்தாலும் பொறுக்கும் தன்மையையும் கொண்டவள் அம்பிகை. அந்த உரிமையிலும், தைரியத்திலுமே தாம் அவளை வாழ்த்தித் துதிப்பதாக பட்டர் கூறுகிறார்.