எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 07, 2009

கவிநயாவிற்கு தாமதமாய் நன்றி!

கவிநயா இந்த விருதை எனக்குக் கொடுத்துப் பலநாட்கள் ஆகிவிட்டன. இதோடு கொடுத்த மத்தவங்க எல்லாம் போஸ்ட் போட்டிருப்பாங்கனு நம்பறேன். நான் இதோட மூலத்தைக் கண்டு பிடிச்சுச் சின்னதா ஒரு பதிவு, சின்னதாத் தான் நம்புங்க, எழுதணும்னு இருந்தேன். அதுக்கு உட்கார்ந்து தேடமுடியலை. அதனால் கவிநயாவையே கேட்டேன். அவங்களுக்கும் தெரியலை. போகட்டும். விட்டுடலாம்னு விட்டுட்டேன்.

என்னமோ சொல்வாங்க, "தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடுங்கிப் பார்க்கிறியா?" அப்படினு. அது போல கவிநயா விருது கொடுத்ததைப் பேசாம வாங்கி வச்சுக்காம ஆராய்ச்சி செய்யப் போனால் என்னை விட அர்த்தமும், சுவாரசியமும் உள்ள பதிவுகள் கிடைச்சிருக்கும் தான். அதுக்கு யாருக்கும் கொடுத்துவைக்கலை. இப்போ இதை யாருக்குக் கொடுக்கிறது என்பது தலையாய கேள்வி. எல்லாருமே நல்லாத் தான் எழுதறாங்க. நிறையப் பேருக்குக் கொடுக்கவும் கொடுத்தாச்சு. சிலருக்கு இது இரண்டாம், மூன்றாம் முறையாகிடும். சிலரால் தொடரமுடியாமல் வேலைகள் இருக்கும். ஆகையால் அதனால் இதைத் தமிழ்மணத்தில் எழுதும் நண்பர்கள், சிநேகிதிகள் அனைவரும் சமமாய்ப் பகிர்ந்து கொள்ளுமாறு அழைக்கிறேன். யார் வேண்டுமானாலும் இந்த ஆட்டையை ஆடலாம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் சுவாரசியமும், அர்த்தமும் நிறைந்த பதிவுகளே. மனித மனத்தில் தோன்றும் எண்ண அலைகளின் வித்தியாசமான ஓட்டங்கள். ஆகவே அனைத்து நண்பர்களுக்கும் இதைத் திரும்பக் கொடுத்துவிடுகிறேன். கண்ணன் பதிவுகள் கொஞ்சம் தாமதமாய் வருவதற்கு மன்னிக்கவும். தவிர்க்கமுடியாத தாமதம். நன்றி.

Sunday, September 06, 2009

புலி வலையில் அகப்பட்டுக் கொண்டது!

நேத்தே போடணும்னு இருந்தேன். என்னமோ இரண்டு நாளா ப்ளாகரும் ஜிமெயிலும் படுத்தல். தாமதம் ஆயிடுச்சு. புலிக்கு வாழ்த்துகள். மற்ற விபரங்கள் பின்னர்.!

Friday, September 04, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கம்சனின் தவிப்பு!

மதுரா நகரத்தில் கம்சனின் அரண்மனை. மேல்மாடத்தில் கம்சன் நிலை கொள்ளாமல் தவித்துக் கொண்டு இங்கும், அங்குமாய் அலைபாய்ந்து கொண்டிருந்தான். தன் மாமனாராகிய ஜராசந்தனுக்காக பல தேசங்களுக்கும் அஸ்வமேத யாகக் குதிரையுடன் சென்று வெற்றி வீரனாய்த் திரும்பி இருந்தான் கம்சன். அஸ்வமேத யாகக்குதிரையே ஒரு கடவுளாக வழிபடப் படும். அது இஷ்டத்துக்கு இங்கும் அங்கும் திரிந்து கொண்டே செல்லும். அது போகும்போது கூடவே செல்வதற்கெனப் பிரத்தியேகமாய்த் தேர்ந்தெடுக்கப் பட்டான் கம்சன். குதிரை செல்லும் திசைகளில் இருந்த நாட்டு மன்னர்கள் எல்லாம் ஜராசந்தனுக்குக்கப்பம் கட்டினார்கள். மறுத்தவர்கள் போரில் தோற்கடிக்கப் பட்டனர். இப்படிப் பனிரண்டு வருடங்கள் சுற்றிய குதிரையைத் திரும்ப அழைத்துக் கொண்டு வெற்றி வீரனாய்த் திரும்பி இருந்தான் கம்சன். அவன் மாமனாராகிய ஜராசந்தன் கம்சனின் வெற்றியைப் பெரும் விழாவாய்க் கொண்டாடியதோடு அல்லாமல், அவன் ஜெயித்த பகுதிகளில் சிலவற்றை அவனே சுதந்திரமாய் ஆண்டு கொள்ள அனுமதியும் கொடுத்தான். இந்தப் பனிரண்டு வருஷங்களில் குதிரை மதுராவின் அக்கம்பக்கத்து நாடுகளில் சுற்றிய சில வருஷங்களில் ஓரிரு முறைகளே மதுராவுக்குக் கம்சனால் வர முடிந்திருக்கிறது. பொறுப்பை எல்லாம் தன் முதன் மந்திரியிடம் ஒப்படைத்திருந்தான் கம்சன்.

அவனுடைய முதல் மந்திரியான ப்ரலம்பன் மிக வயதானதோடு அல்லாமல் ஏதோ மனநோயும் தாக்கி மிக மோசமாய் உடல்நிலை சீர் கெட்டுப் படுத்த படுக்கையாய் இருந்தான். அவன் தளபதியான ப்ரத்யோதாவோ தன் மனைவியான பூதனையின் மறைவுக்குப் பின்னர் அவ்வளவு வேகம் காட்டுவதில்லை வேலை செய்வதில். என்றாலும் அவன் நம்பிக்கைக்கு உகந்தவன். ஆகவே அவனை விடமுடியாது. ஆனால் இது என்ன? இந்தப் பனிரண்டு வருடங்களில் யாதவ குலத்தின் 31 பிரிவுகளிலும், ஏன் அவனுடைய சொந்தப் பிரிவான போஜப் பிரிவிலும் உள்ள யாதவர்கள் அனைவருமே தங்கள் அளவில் சுதந்திரம் அடைந்து இருப்பதாய் நினைத்துக் கொண்டு கம்சனால் விதிக்கப் பட்ட எந்தவிதமான நியதிகளுக்கும் கட்டுப் படாமல் வாழ்ந்து வந்திருக்கின்றனர். கம்சன் எவ்வளவோ முயன்று அவர்களுக்குள் ஒற்றுமை ஏற்படாமல் பார்த்துக் கொண்டு, பிரிவினையைத் தூண்டும் வண்ணமே நடந்து வந்திருந்தான். ஆனால், ஆனால், இது என்ன? அவன் முயற்சிகள் அனைத்துமே விழலுக்கிறைத்த நீராய்விட்டனவே! ம்ம்ம்ம்ம்ம்ம்?? அவன் திரும்பி வந்ததில் கூட அவர்கள் சந்தோஷம் அடைந்ததாய்த் தெரியவில்லையே? கம்சனின் சொந்தத் தந்தை உக்ரசேனரை அவன் அரண்மனையிலேயே ஒரு பக்கம் சிறை வைத்துவிட்டுச் சென்றிருந்தான். அவருக்குக் கூட கம்சன் திரும்பி வந்ததில் அவ்வளவாய் சந்தோஷம் இருக்கிறதாய்க்காட்டிக் கொள்ளவில்லை. வேண்டாவெறுப்பாய் வரவேற்றார் அவனை. போதாக்குறைக்குப் ப்ரலம்பா, முதல் மந்திரிக்கு திடீரென பக்கவாதம் தாக்கி உள்ளதாம். இனி பிழைக்க மாட்டானாம்.

ப்ரத்யோதா, கம்சனின் நம்பிக்கைக்கு உகந்த தளபதி, அவனை விசாரித்ததில், யாதவக் குலமே கம்சனுக்கு எதிராக இருப்பது புரிந்தது. கம்சன் என்னதான் அவன் தந்தையையே சிறையில் அடைத்திருந்தாலும் பல யாதவர்களும் அவரையே மிகவும் மதித்துப் போற்றி வணங்கினார்கள் என்றும் சொல்கின்றான். அரசாங்க நடவடிக்கைகளில் நேரிடையாகத் தலையிடாவிட்டாலும், உக்ரசேனரின் ஒரு சொல்லுக்கு மிக்க மதிப்பு இருந்ததாகவும் சொல்கின்றான். ம்ம்ம்ம்ம்ம்ம்??? மறுபடியும், அனைவரையும் எப்படியாவது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவேண்டும், என்ன செய்யலாம்? கம்சனின் குயுக்தியான மூளை மிகவும் யோசித்தது. யோசித்து யோசித்து மூளையே களைப்படைய ஆரம்பித்துவிட்டது. ஏதாவது செய்யணும், என்ன செய்யலாம்? ஆம் அதுதான் சரி, தனுர்யாகம். தனுர் யாகம் செய்து நாம் வெற்றியோடு திரும்பி வந்ததைக் கொண்டாடலாம். அதுதான் சரி. கம்சன் ஒரு முடிவுக்கு வந்து தனுர்யாகம் நடக்கப் போவதை அறிவிக்க முடிவும் செய்தான். அப்போது ப்ரத்யோதா அங்கே அவனுக்கு ஓர் செய்தியுடன் வந்தான். கம்சனைக் கண்டு பேச ஐயன் வந்தான். விசித்திரமான இந்தச் செய்தியால் ஆச்சரியம் அடைந்த கம்சன் அவனை அனுமதித்தான்.

ஐயனும், ப்ரத்யோதாவும் வந்தனர். ஐயன் பேசி முடிக்கும் வரையில் மெளனமாய்க் கேட்டுக் கொண்டிருந்தான் கம்சன். என்றாலும் அவன் முகம் வெளிறியதையோ, மீசை துடிக்க ஆரம்பித்ததையோ அவனால் தடுக்க முடியவில்லை. பின்னர் ஐயனையும், ப்ரத்யோதாவையும் அறையை விட்டு வெளியே போகச் சொல்லிவிட்டு அறையில் அங்குமிங்கும் நடக்கலானான். கைகளைப் பிசைந்து கொண்டான். தலையில் அடித்துக் கொண்டான். முஷ்டியை மடக்கிக் குத்தினான். ஆஹா, என்ன மடத்தனம்! என்று கூவினான். இத்தனை வருடங்களாய் ராணுவத்துடன் சேர்ந்து அங்குமிங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்ததில் நாரதரின் ஜோசியத்தை மறந்தே போனானே! அவனின் சித்தப்பன் மகளான தேவகியின் எட்டாவது குழந்தையால் கம்சனுக்கு மரணம் நேரிடும் என்றாரே? ஆனால் தேவகிக்கு எட்டாவதாய்ப் பிறந்த குழந்தை பெண்ணல்லவோ? ஆனால் இது என்ன ஐயன் சொல்லுவது? கோகுலத்திலும், பின்னர் விருந்தாவனத்திலும் நந்தனின் பையனாக வளரும் சிறுவன், ஐயன் சொல்லுவதை எல்லாம் பார்த்தால் தேவகியின் எட்டாவது குழந்தையின் வயதே இந்தப் பையனுக்கு இருக்கும் போலுள்ளதே! அதிலும் இந்தப் பையன் ஏதோ அதிசயங்கள் எல்லாம் நடத்துகின்றானாமே? அவனிடம் விருந்தாவனமே மயங்கிக் கிடக்கிறதாமே? ஐயனுக்காக நிச்சயிக்கப் பட்ட ராதையைக் கூட அந்தக் கண்ணன், அதான் அந்த நந்தனின் மகன் கொண்டு போய்விட்டானாமே? அவ்வளவு கெட்டிக்காரனா அவன்? அவன் ஒருவேளை தேவகியின் எட்டாவது மகனாய் இருக்குமோ? சீச்சீ! இருக்காது, ஒருகாலும் இருக்காது. நாம் தான் நேரில் பார்த்தோமே! அது பெண்குழந்தைதான். மேலும் யசோதை பல வருஷங்கள் கழித்துக்கர்ப்பம் தரித்ததும் உண்மைதானே!

ம்ம்ம்ம்ம் போர் செய்யும் போது யுத்தகளத்தில் இறக்க நேரிடுவதில் எந்தத் தவறும் காணமுடியாது. ஆனால் இந்தச் சிறுவன், அதுவும் நான் வளர்த்த தேவகி, அவள் பையன், அவன் கைகளால் கொல்லப் படுவேன் என்றால்! கம்சனால் தாங்க முடியவில்லை. என்னததன் ஐம்பது வயது ஆனாலும் கம்சனுக்கு உயிரின் மேல் ஆசை இருக்கத் தான் செய்தது. நாடாளுவதிலும் இன்னும் அவன் நினைத்த லட்சியத்தை எட்டவில்லை. யாதவ சமூகத்தையே ஒன்றாக்கி அனைத்து யாதவர்களுக்கு மட்டுமில்லாமல், இந்த ஆரியவர்த்தத்துக்கே அரசன் ஆவதே அவன் ஆசை. ம்ம்ம்ம் இது எவ்வாறேனும் நடந்தாகவேண்டும். அதற்கு ஏற்படும் எந்தத் தடைகளையும் உடைக்கவேண்டும். இந்த நந்தனின் குமாரனை ஒரு கை பார்க்கவேண்டும். அவன் தேவகியின் பையனோ, நந்தனின் பையனோ, யாராயிருந்தால் நமக்கென்ன? அவனால் நமக்குத் தீங்கு என்றால் கட்டாயமாய் அவனை ஒழித்துவிடவேண்டும், எப்படியாவது! அவன் சாகவேண்டியவனே!

Wednesday, September 02, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - கோவர்தன கிரிதாரி!

இரவு என்னமோ அமைதியாகத் தான் இருந்தது ஆரம்பத்தில். தெளிந்த வானில் விண்மீன்கள் பளிச்சிட்டன. காற்றும் அமைதியாகத் தென்றலாகச் சுகமாய் வீசிக் கொண்டிருந்தது. “ராஸ்” ஆடி முடித்துக் களைத்துப் போன கோபர்களும், கோபியர்களும் தங்கள் தங்கள் வண்டிக்கு அருகே போட்டிருந்த கூடாரங்களில் சென்று தங்கள் குடும்பத்தினரோடு தூங்க ஆரம்பித்தனர். அனைவருக்கும் நல்ல ஆழ்ந்த உறக்கம். விழா இனிமையாக முடிந்தது. எதிர்க்க வந்த ஐயனும் ஓடி விட்டான். கண்ணனைப் போன்றொரு தலைவன் கிட்டுவானா? சுற்றுவட்டாரமே அமைதியில் ஆழ்ந்திருந்தது. திடீரென நடு இரவில் ஒரு சிறிய கறுப்புப் பொட்டு விண்ணில் தோன்றியது. கூர்ந்து நோக்கினால் மட்டுமே அது கரு மேகம் எனப் புரியும். ஒரு பொட்டைப் போல் தோன்றிய அந்தக் கருமேகம் திடீரென வளர்ந்து பெரியதானது. விண்ணை ஆக்கிரமித்துக் கொண்டது. கூடாரங்களில் தூங்கியவர்களில் இயற்கை உபாதைகளுக்கென விழித்த சிலர் திடீரெனக் கவிந்த இந்த இருட்டால் கொஞ்சம் கலவரம் அடைந்தனர். பார்த்துக் கொண்டிருக்கும்போதே காற்றும் ஆரம்பித்தது. ஒரே சீரான தாளகதியில் வீசிக் கொண்டிருந்த காற்று, இப்போது வலுவடைந்து வேகமாய்த் தாறுமாறாக வீச ஆரம்பித்தது. காற்றின் வேகம் கூடாரங்களைப் பிய்த்துப் போடும்போல் இருந்தது.

அடுத்துப் பேரிடியும், மின்னலும் ஆரம்பித்தது. இடியின் சப்தத்தாலும், மின்னலின் “பளீர்” “பளீர்” என்ற ஒளியாலும் அங்கே கட்டப் பட்டிருந்த ஆவினங்கள் கொஞ்சம் அசெளகரியமாய் உணர்ந்தன போலும். எங்கே பார்த்தாலும் அவற்றின் அவலக்குரல், “அம்மா, அம்மா” எனக் கேட்க ஆரம்பித்தது. தங்கள் செல்வங்களான பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும் காக்கவேண்டி எழுந்த கோபர்களும், கோபியர்களும் இருண்ட வானத்தைப் பார்த்துக் கவலை கொண்டனர். இப்படி ஒரு இருட்டா?? கும்மிருட்டு, மையிருட்டு என்றெல்லாம் சொல்லுவார்களே, அதை விடக் கூட இது மோசமாய் இருக்கே? எதிரே ஆள் நிற்பது கூடத் தெரியவில்லையே? சட்டென ஒரு வயதான கோபருக்குத் தோன்றியது. நிச்சயம் இது கோபம் கொண்ட இந்திரனின் செயலே தான். அவனல்லவோ மழைக்கு அதிபதி? அவனை மறந்துவிட்டோமே? ஒரு சின்னப் பையனின் முட்டாள்தனமான புத்திமதியில் மயங்கிவிட்டோமே? இப்போ என்ன நடக்கப் போகிறது? இந்திரா, ஓ இந்திரா, எங்களைக் காப்பாய்!

மழைக்கடவுளான இந்திரனுக்கு உண்மையாகவே கோபம் தான் போல். மழை ஊழிக்காலத்துப் பிரளயத்தைவிட மோசமாய்ப் பெய்ய ஆரம்பித்தது. முகத்தில் வந்து அறையும் மழைப் பிரவாகம். யாருக்கும் என்ன நடக்கிறதெனப் புரியாமல் மழையின் வேகம் எந்தச் செயலையும் செய்யவிடாமல் தடுத்தது. கூடவே வாயுவின் சேஷ்டைகளும் ஆரம்பித்தன. காற்றின் வேகத்தால் கூடாரங்கள் பிய்த்துக் கொள்ள அனைத்துக் கோபர்களின் குடும்பங்களும் மழை நீரில் தத்தளிக்க ஆரம்பித்தன. மழை நம்மை முற்றிலும் மூழ்க அடிக்கும் முன்னர் நாம் விருந்தாவனத்தை எவ்வாறேனும் சென்றடையவேண்டும். இதுவே அவர்கள் எடுத்த முடிவு. ஆனால் அவர்களால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. மின்னலின் ஆங்காரமான ஒளி கண்ணையே பறித்துவிடும்போல் இருந்தது. கூடவே இடி மேல் இடியாகப் பெரும் சப்தத்துடன் ஒலித்துக் கொண்டிருந்தது. மெல்ல மெல்ல இரவும் கழிந்து பொழுது விடிந்தது, சூரியனும் வந்துவிடுவான் என நினைத்தனர். ஆனால் என்ன இது? பொழுது என்னமோ விடிந்தாச்சு, சூரியனும் வந்துவிட்டான் போல? ஆனால் இங்கே என்ன இத்தனை இருட்டு? ஆஹா, நாம் நன்றாக வசமாக மாட்டிக் கொண்டுவிட்டோமே? எங்கே பார்த்தாலும் மழை நீர் வெள்ளம்போல் பிரவாகம் எடுத்து ஓடுகிறது. குளங்களை விட ஆழமாய் மழை நீர் ஆங்காங்கே ஒரு இரவில் தேங்கிக் கிடக்கிறதே. விருந்தாவனம் செல்லும் பாதை எல்லாம் மூழ்கிவிட்டதே?எப்படிச் செல்வோம் நாம்? கண்ணா, கண்ணா, என்ன வேலை செய்தாயடா?? இப்படி எங்களை மாட்டி வைக்கவேண்டும் என எத்தனை நாட்கள் திட்டம் போட்டாய்? ஆனால் கண்ணன் என்ன சும்மாவா இருந்தான்? அடிவானில் முதன் முதல் கறுப்புப் பொட்டாய் மேகம் தோன்றும்போதே விழித்தவன், இத்தனை அமர்க்களத்தையும் பார்த்துக்கொண்டு வாளா இருப்பானா என்ன??? இந்த இந்திரனை ஒரு கை இல்லை, இரண்டு கையும் பார்க்கவேண்டும். கோவர்தன மலையைக் கண்ணன் நேரம் கிடைக்கும்போதெல்லாம் வந்து பார்த்திருப்பதால் அதன் ஒவ்வொரு மூலை, முடுக்கையும் நன்கு அறிந்து வைத்திருந்தான். தன் நண்பர்களை அனைவரையும் திரட்டினான். வெற்றிடமாய் இருந்த இடங்களிலும் குழிவாய் இருந்த இடங்களிலும் சென்று அவற்றின் மூலம் ஒரு பெரிய குகை போன்ற அமைப்பு ஒன்றை ஒரு பெரிய பாறையை நகர்த்தியதன் மூலம் ஏற்படுத்த ஆரம்பித்தான். வருவதை முன் கூட்டி எதிர்பார்த்தாற்போல் கண்ணன் இந்த இடத்தில் இப்படி ஒரு வெற்றிடம் உள்ளே இருக்கும் என்பதைக் கற்களைத் தட்டிப் பார்த்தும், சத்தம் கொடுத்துப் பார்த்தும் தெரிந்து வைத்திருந்தான். அது இப்போது நல்லதாய்ப் போய்விட்டது. இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து அந்தப் பெரிய பாறை போன்ற அமைப்பை குகையாக இருக்கலாம் என்ற அநுமானத்துடன் தோன்றிய இடத்திலிருந்து நகர்த்த ஆரம்பித்தனர். மெல்ல மெல்ல பாறையை நகர்த்தினார்கள். இதைப் பார்த்து மற்றவரும் உதவிக்கு வரச் சுற்றிலும் இருந்த பெரிய பாறைகள், சிறிய பாறைகள் அப்புறப் படுத்தப் பட்டன. உள்ளே குகை திறந்தது. வெளிச்சம் தெரிந்தது. வெற்றிக் கூச்சல் இட்டனர் அனைவரும்.

கண்ணன் மேல் நம்பிக்கை இழக்காமல் இருந்த கோபியர் அனைவரும் இவ்வளவு நேரம் மாடு, கன்றுகளைப் பராமரித்துக் கொண்டிருந்தவர்கள் இந்தக் கூக்குரல் கேட்டு உடனே ஓடி வந்தனர். அதிசயம் ஒன்று நடக்கும், அதுவும் அது கண்ணன் மூலமே நடக்கும் என்பதை அவர்கள் அறிந்தே வைத்திருந்தனர். கண்ணன் அவர்களை முதலில் குழந்தைகளைக் கொண்டு வந்து குகைக்குள்ளே விடச் சொல்லிவிட்டு, பின் மெதுவாய் அந்தக் குகையை மூடிக் கொண்டிருந்த ஒரு பெரிய பாறையை மலையின் நடு வயிறு என்று சொல்லப் படும் இடத்திலிருந்து நகர்த்தினான். கண்ணனின் முயற்சியைக் கண்ட அனைவரும் இப்போது அவனுக்குக் கை கொடுக்கப் பாறை நகர்த்தப்பட்டு ஒரு பெரிய நகரமே குடி இருக்கும் அளவுக்கான இடம் தென்பட்டது. திடீரென இடித்த இடியில் அந்த இடமே பூகம்பம் வந்தது போல் நடுங்க, எடுக்கப் பட்டுக் கொண்டிருந்த பெரிய பாறை அனைவர் கைகளில் இருந்தும் நழுவ, கண்ணன் ஒருவனே அந்தச் சிறு மலை போன்ற பாறையைத் தாங்கிப் பிடித்தான். சந்தோஷக் கூச்சலுடன் அனைவரும் அந்த மலைக்குடைக்குக் கீழ் புகுந்து கொண்டு ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.

அப்பாடா, இந்த அற்புதத்துக்கு முன்னர் இந்திரனால் என்ன செய்ய முடியும்? கண்ணா? கண்ணா? ஸ்ரீவாசுதேவ கிருஷ்ணா? நீ உண்மையிலேயே அந்த மஹா வாசுதேவன் தானோ? அனைவரும் சொல்லுவது உண்மையோ? நீ அருகையில் இருக்கும்போது எங்களுக்கு எப்படிப் பட்ட துன்பம் நேர்ந்தாலும் சூரியனைக் கண்ட பனித்துளி போல் விலகி ஓடுகின்றதே? கோபர்களும், கோபிகளும் ஆனந்தம் தாங்க முடியாமல் பலவாறு வாழ்த்துப் பாடி கிருஷ்ணனைக் கொண்டாடினார்கள். அனைவரும் கிருஷ்ணனைப் பார்த்த பார்வையில் அன்பு மட்டுமின்றி இப்போது மிதமிஞ்சிய பக்தியும் கூடி இருந்தது. இந்தக் கிருஷ்ண வாசுதேவனும் தாங்களும் வேறு அல்ல. தாங்கள் அனைவருமே கிருஷ்ண வாசுதேவன். கிருஷ்ண வாசுதேவனே இந்தக் கோகுலத்து அனைத்து மக்களுமாய் இருக்கின்றான். அனைவருக்கும் புரிந்தது, இந்தப் பந்தம் எந்நாளும் யாராலும் பிரிக்க முடியாத ஒன்று என. கிருஷ்ணன் தங்களுக்கு உரியவன், தங்களுடையவன் என்ற எண்ணம் அனைவருக்கும் தனித்தனியாக ஏற்பட்டது. அப்போது ஒரு கோபி “ஏ, கோவிந்தா!” என்று கூவினாள். அனைவரும் திகைப்போடு பார்க்க”கோவர்த்தன கிரிதாரி, நீ எங்கள் கடவுள்!” என்று மனம் நிறைவான பக்தியுடன் சொல்ல, கண்ணனோ “இல்லை நான் உங்களில் ஒருவன். உங்களுடன் இதோ அடுத்த பெளர்ணமி இரவில், யமுனை நதிக்கரையில் “ராஸ்” ஆடப் போகிறவன். இனி நாம் இந்திரனுக்காகப் பயப்பட வேண்டாம். இந்திரனுக்காக விருந்தாவனத்து ஒரு பகுதியினர் எடுக்கும் விழாவையும் போய்ப் பார்க்கலாம். வாருங்கள், இதோ சூரியன் உதித்துவிட்டான். ஒளி பிறந்து விட்டது.” என்று அழைத்தான்.

அடுத்துக் கம்சன் என்ன எண்ணத்தோடு இருக்கிறான் என்பதையும், தேவகியின் நிலைமையும் என்ன என்று பார்ப்போம்.

Tuesday, September 01, 2009

பொன்னியின் செல்வன் படிச்சா என்ன ஆகும்?

ஒரு சரித்திர நாவலின் தாக்கம் சிலரை அதைத் திரும்பத் திரும்பப் படிக்கச் சொல்லும். சிலரை சரித்திர ஆராய்ச்சியில் கொண்டு விடும். நான் முதல் ரகம். திரும்பத் திரும்பப் படிக்கிறதோட நிறுத்திடுவேன். :D ஆனால் திவாகருக்குப் பொன்னியின் செல்வன் நாவல் படித்தது சரித்திர ஆய்வில் மட்டும் கொண்டு விடவில்லை. சரித்திரக் கதைகள் எழுதும் ஆர்வத்திலும் கொண்டு விட்டிருக்கிறது. பொன்னியின் செல்வன் குழுமத்திலும் கலந்து கொண்டு மேலும் மேலும் தமிழகச் சரித்திரங்கள் பற்றித் தெரிந்து கொண்டதோடு நிற்கவில்லை. அதைக் கதைகள் வடிவிலும் கொண்டு வந்திருக்கிறார். அதுவும் பிற்காலச் சோழர்கள் தான் அனைவராலும் பெரிதும் பாராட்டப் படுகின்றனர். எல்லாக் கதாசிரியர்களும் சோழர்கள் பற்றி எழுதிய அளவுக்குப் பாண்டியர்கள் பற்றி அத்தனை கதைகள் வரவில்லை என்பதில் எனக்குக் கொஞ்சம் இல்லை நிறையவே வருத்தம். நா.பா. வும் அகிலன் அவர்களும் ஓரளவு முயன்றனர். என்றாலும் கல்கி அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றே சொல்லணும்.

கல்கியை முன் மாதிரியாகக் கொண்டு அதே சாகசம், வீரம், காதல், பக்தி இவற்றையும் கலந்த ஓர் அற்புதக் கலவை திவாகரின் எஸ்.எம்.எஸ். எம்டன் நாவல். இவருக்குச் சரித்திர நாவல் எழுதத் தூண்டுகோலாக இருந்த பொன்னியின் செல்வனே இந்தக் கதையில் வருகின்றான். சிவபாத சேகரனாக. இவருக்குக் கிடைத்த சில விஷயங்களை மட்டுமே எடுத்துக் கொண்டு அதை விரிவாக்கி எழுதி இருக்கின்றார். இந்திய சரித்திரத்தில் ஆங்கிலேய ஆட்சியும் அப்போது நடந்த எம்டன் கப்பலின் குண்டு வீச்சும் மிகவும் பேசப் படுகின்ற ஒன்று. அந்த விஷயத்தைக் கதையோடு மிக நேர்த்தியாகப் பின்னிக் கதாநாயகனையும் அதற்கேற்றாற்போல் படைத்து, அவனின் சாகசத்தையும், வீரத்தையும், நிதானத்தையும் எடுத்துக் காட்டி இருக்கிறார். தனி ஒரு மனிதனாக இருந்து தன் புத்தியால் தப்பி வந்த கதாநாயகனை ஒரு தமிழனாகப் படைத்துத் தமிழ்நாட்டின் வீரத்தின் அளவுகோலுக்கு எல்லை என்பதே இல்லை என்பதையும் சொல்லி இருக்கிறார். கதையின் ஊடே தேசபக்தியும், தமிழர்களின் வீரம், சாகசம் பற்றிய கதாசிரியரின் பெருமிதமான கணிப்பும் வியக்க வைக்கிறது. காதல் இல்லாமலா? காதலும் இருக்கின்றது, கதையோடு பிணைந்து, இயல்பாக நீரோட்டம் போலச் செல்கின்றது.

இது எல்லாவற்றையும் விட மேலாக மகுடாகமம் பற்றியும் அதில் வரும் கிரியா-காரியா பாதங்கள் பற்றியும் தெளிவாய்த் தெரிந்து கொண்டு லகுளீசர்களின் பாசுபத சம்பிரதாயத்தை ஒட்டி அவை இருப்பதையும் ஆதாரங்களோடு சொல்லி இருக்கின்றார். யோகக் கலையின் உன்னதத்திற்கே சென்று குண்டலினி யோகம் பயின்று தன்னைக் கட்டுப் படுத்திக் கொள்ளக் கூடிய ஒருவன் செய்யக் கூடிய சாகசச் செயலையும் அநாயாசமாய் சொல்லி இருக்கிறார். கதாநாயகனும், அவன் சிநேகிதியும் நடத்தும் யோக முறையில் ஆன சாகஸச் செயலை முறைப்படி யோகம் பயின்ற எவர் வேண்டுமானாலும் நிகழ்த்த முடியும் என்பதும் உண்மை. ஒரு நாவலுக்குத் தேவையான அனைத்தையுமே சரியான விகிதத்தில் கலந்து கொடுக்கிறார். இங்கிலாந்து அரசியலை விமரிசிப்பதிலும், இங்கிலாந்து நாட்டு ஆட்சியாளர்களில் ஒரு சிலராவது இந்திய மக்களிடம் அன்போடும், பாசத்தோடும் பழகினார்கள் என்பதையும் கூறி உள்ளார். எம்டன் கப்பல் பிரதான பாத்திரம் வகிக்கிறது. கப்பல் பற்றிய விபரங்களையும், அவற்றிற்கு ஏற்படக் கூடிய ஆபத்துகள், எச்சரிக்கைகள், வான் நிலை மாற்றங்கள் என அனைத்தையும் பற்றி நன்கு தெரிந்து கொண்டு அவற்றைப் பற்றி விபரங்கள் கொடுக்கிறார். கதை முழுதும் கதாநாயகனாய் வரும் எம்டன் சென்னைக்கு வந்தது ஒரு சரித்திரம் என்றால், அது உடனே திரும்பிச் சென்றது அதைவிடப் பெரிய சரித்திரம்.

காரணமே தெரியாத இந்தப் பின்வாங்கலையும், அந்தக் கப்பலில் ஒருவேளை செண்பகராமன்பிள்ளை இருந்திருக்கலாம் என்ற சாத்தியக் கூறுமே இவருக்குக் கதைக் கரு. அதை வைத்து அருமையான நாவலைக் கொடுத்துள்ளார். சிதம்பரம் யார் என்பதைக் கடைசிவரையிலும் சஸ்பென்ஸாகவே வைத்து விட்டுக் கடைசியில் தெரியும்போது, அடடா, எப்படிப் பட்ட ஒரு வம்சம் இன்று இப்படி? என்ற எண்ணம் மனதில் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை. ஏற்கெனவெ வம்சதாரா, திருமலைத் திருடன், விசித்திர சித்தன் என்ற சரித்திர நாவல்களை திவாகர் எழுதி இருந்தாலும், நான் அவர் நாவலைப் படிப்பது இதே முதல் முறை. எடுத்ததில் இருந்து கீழே வைக்க முடியாமல் மனசெல்லாம் கதையிலேயே இருக்க நேற்று இரவு தொடரமுடியவில்லை. இன்றுதான் மாலைக்கு மேல் முழுமையாக முடிக்க முடிந்தது. எஸ்.எம்.எஸ்.எம்டன் கப்பல் சென்னைவாசிகளுக்கு எல்லாம் மறக்க முடியாத ஒரு பெயர். நமக்கும் திவாகர் அவர்களின் எஸ்.எம்.எஸ். மறக்கவே முடியாத ஒன்று.

Saturday, August 29, 2009

கண்ணன் வருவான் கதை சொல்லுவான் - கோவர்தன மலையில் கண்ணன்!


அம்மைத் தடங்கண் மடவாய்ச் சியரும்
ஆனா யரும்ஆ நிரையும் அலறி
எம்மைச் சரணேன் றுகொள்ளென் றிரப்ப
இலங்கா ழிக்கையெந் தைஎடுத் தமலை
தம்மைச் சரணென் றதம்பா வையரைப்
புனமேய் கின்றமா னினம்காண் மினென்று
கொம்மைப் புயக்குன் றர்சிலை குனிக்கும்
கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே 3



267 கடுவாய்ச் சினவெங் கண்களிற் றினுக்குக்
கவள மெடுத்துக் கொடுப்பா னவன்போல்
அடிவா யுறக்கை யிட்டுஎழப் பறித்திட்டு
அமரர் பெருமான் கொண்டுநின் றமலை
கடல்வாய்ச் சென்றுமே கம்கவிழ்ந் திறங்கிக்
கதுவாய்ப் படநீர் முகந்தே றிஎங்கும்
குடவாய்ப் படநின் றுமழை பொழியும்
கோவர்த் தனமென்னும் கொற்றக் குடையே
4


கோலாகலமாய்த் தயாராகிக் கொண்டிருந்தது விருந்தாவனம். இந்திரனுக்குத் தான் விழா எடுக்கவேண்டும் என்று சிலரும், இல்லை, இல்லை, கண்ணன் சொல்லுவதே சரி, நம்மைக் காத்து ரக்ஷித்து வரும் பசுக்களுக்கும், கன்றுகளுக்கும், வழிபாடுகள் செய்வதோடு, நமக்கு இறைவன் அளித்த கொடையான இந்த கோவர்தன மலைக்கும் வழிபாடு நடத்துவதே சரி என்று சிலரும். ஆகக் கூடி விருந்தாவனம் இரண்டாகப் பிரிந்தது. கண்ணனைப் பலரும், ஐயனைச் சிலரும் ஆதரித்தனர். ஐயனை ஆதரித்தவர்கள் இந்திரனுக்கு விழா எடுக்கத் தங்கள் அளவில் தயார் செய்து கொண்டிருந்தனர். கோபர்களின் தலைவன் ஆன நந்தனோ தன் அருமை மகன் பக்கம்தான். மற்ற கோபர்களிலும் பெரும்பாலோர் கண்ணன் பக்கமே. குரு கர்காசாரியாரும், குரு சாந்தீபனியும் கண்ணனையே ஆதரித்தனர். அவர்கள் இங்கே ஆசாரியர்களாக இருந்து விழாவை நடத்திக் கொடுக்கும் ஏற்பாடுகளில் மூழ்கி இருக்க ஐயனை ஆதரிப்பவர்கள் ஐயனின் தகப்பன் ஸ்தோககிருஷ்ணன் தலைமையில் கூடி அவர்களுக்கென ஒரு ஆசாரியர் தேவை என்பது பற்றி விவாதித்திக் கடைசியில் மதுராவில் இருந்து ஒரு நன்கு கற்றறிந்த அந்தணரை அழைத்து வந்திருந்தனர்.

பண்டிகை நாளும் வந்தது. மாடுகள், கன்றுகள் குளிப்பாட்டப் பட்டு நன்கு அலங்கரிக்கப் பட்டு ஒரு பெரிய ஊர்வலமாய் கோவர்தன் மலையை நோக்கிச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தது. கோபர்கள் அனைவரும் இந்த ஊர்வலத்தில் தங்கள் மாடு, கன்றுகளோடு தாங்களும் செல்லத் தயாரானார்கள். வழியிலேயே ஒரே ஆட்டமும், பாட்டமும் கொண்டாட்டமுமாக இருந்தது. இளைஞர்கள் காளைகளைத் துரத்திவிட்டு அவை ஓடும்போது ஓடிப் போய்ப் பிடித்து, இளம்பெண்களின் கண்கள் முன்னால் அந்தக் காளைகளின் முதுகில் ஏறி அமர முயன்றனர். சிலர் தோற்றனர். சிலர் ஏறி அமர்ந்தனர். தோற்றவரைப் பார்த்து இளம்பெண்கள் தங்களுக்குள் சுட்டிக் காட்டிக் கொண்டு பேசிக் களுக்கெனச் சிரித்துக் கொண்டனர். வென்றவர் தங்கள் மார்பை நிமிர்த்திக் கொண்டு மிகப் பெருமிதமாய் இளம்பெண்களைக் கண்டு சிரித்த வண்ணம் சென்றனர். காளை மாடுகள் பூட்டிய வண்டிகளில் உணவுப் பொருட்களும், சில வண்டிகளில் சமைக்கப் பட்ட உணவுகளும் சென்றன. பெண்கள் தங்களை எவ்வளவு அழகாய் அலங்கரித்துக் கொள்ள முடியுமோ அத்தனை அழகாய் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். ராதையும் அந்தப்பெண்களில் ஒருத்தியாய் தன் திருமண நிச்சயதார்த்தம் கண்ணனுடன் நடந்தபோது யசோதை பரிசாய் அளித்த உடையில் ஜொலித்துக் கொண்டிருந்தாள். கிருஷ்ணனும், பலராமனும் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்கள்.

நன்கு வளர்ந்திருந்த பலராமனுக்கு இப்போதெல்லாம் ஏர்க்கலப்பைதான் ஆயுதமாய்த் தெரிந்தது. அதற்குக் குறைந்த வேறெதுவும் ஆயுதமாய்த் தெரியவில்லை. மற்றவர்களைவிட ஒரு பிடி உயரமாகவே இருந்த பலராமன் பொன்னிறத்துடன் இருந்தான். அவன் அணிந்திருந்த நீலநிற உடை அதை நன்கு எடுத்துக்காட்ட, நீலமேக சியாமளன் ஆன நம் கண்ணனோ, மஞ்சள் பீதாம்பரத்தில் ஜொலித்தான். மேலும் இப்போதெல்லாம் கண்ணனின் எடுத்துக் கட்டிய சிகையில் மயில் பீலி ஒன்றை வைத்துக் கொண்டு அலங்கரித்துக் கொள்ளுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தான். கழுத்தையும், கைகளையும் மலர்களால் செய்யப் பட்ட ஆபரணங்கள் அலங்கரிக்கத் தன் இடையில் தன்னைவிட்டு ஒரு கணமும் பிரியாத புல்லாங்குழலைச் சொருகிக் கொண்டிருந்தான். கண்ணன் தொடரும் கூட்டத்தின் அனைத்து மக்களையும் தனித்தனியாய்ப் பெயர் சொல்லி அழைத்துப் பேசுவதையும், இளம்பெண்களோடு சகஜமாகவும், அதே சமயம் மரியாதை தவறாமலும் பேசுவதையும் சாந்தீபனியும், கர்காசாரியாரும் கவனித்தனர். என்னதான் கண்ணன் சொன்னான் என்று கோவர்தனுக்கு விழா எடுக்கக் கூடிவிட்டாலும், என்ன நடக்கப் போகிறதோ என்ற உணர்ச்சிவசத்தில் அவர்கள் ஒரு எதிர்பார்ப்புடன் இருந்தனர்.

மதியம் போல் கோவர்தன மலையை அடைந்த அனைவரும் கொண்டு சென்றிருந்த உணவைப் பங்கிட்டுக் கொண்டும், பகிர்ந்து கொண்டும் உண்டனர். பின்னர் கிடைத்த ஓய்வு நேரத்தில் ஆடிப் பாடினர். ஒருவர் மற்றவரைக் கேலி செய்து மகிழ்ந்தனர். காட்டு மிருகங்களின் சப்தங்களைப் போல் குரலெடுத்துக் கேலி செய்து களித்தனர். இரவு நன்கு தூங்கிக் காலை எழுந்து வழிபாடுகளுக்குத் தங்களைத் தயார் செய்து கொண்டனர். கொண்டு போன பசுக்கள் அனைத்தும் கறக்கப் பட்டு பால் சேகரம் செய்யப் பட்டது. அனைவரும் குரு கர்காசாரியார் முன் செல்ல கோவர்தன மலை உச்சியை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். அங்கே சென்றதும் குரு கோவர்தன மலைக்குத் தன் வழிபாட்டைத் தொடங்கினார். அனைவருக்கும் மனதில் கோவர்தனம் மலைகளுக்கெல்லாம் மட்டும் அரசன் இல்லை, தங்களுக்கும் கோவர்தன மலையே கடவுள் என்ற எண்ணம் முன்னின்றது. வழிபாடு முடிந்து கற்பூர ஆரத்தி தொடங்க ஆயத்தம் செய்தார் கர்காசாரியார். அப்போது கண்ணன், கோவர்தன மலையின் மறுபக்கத்தில் இருந்து ஐயனும், அவன் நண்பர்களில் சிலரும் மலை ஏறி வந்து கொண்டிருந்ததைக் கண்டான். அதுவும் பெண்கள் இருக்கும் பகுதியில், இளம்பெண்களோடு சேர்ந்து ராதையும் நின்று கொண்டு வழிபாடுகளில் ஆழ்ந்து போயிருந்த பகுதியை நோக்கி ஐயனும், அவன் நண்பர்களும் முன்னேறிக் கொண்டிருந்ததைக் கண்டான். கண்ணன் இதழ்களில் புன்முறுவல் தோன்றியது.

கோபர்களில் சிலரும் ஐயனும் அவன் நண்பர்களும் வருவதைக் கண்டனர். அவர்களுக்கு அவன் வழிபாடுகளில் ஏதேனும் இடையூறு செய்யப் போகின்றானே என்ற அச்சம் ஏற்பட்டது. அதற்குள் ஏதோ முடிவுக்கு வந்த கண்ணன், “ஸ்ரீதாமா, ஐயனும், அவன் நண்பர்களும் வழிபாட்டில் கலந்து கொள்ள வருகின்றனர் போலும். அவர்களை இங்கே அழைத்துவா! ஐயன், உங்கள் நண்பர்களை அழைத்துக் கொண்டு இங்கே வந்துவிடுங்கள். வழிபாட்டை நன்கு காணமுடியும். “ கண்ணனே அழைத்துவிட்டான் ஐயனையும், அவன் நண்பர்களையும். ஆனால் இது என்ன?? ஐயன் வெகுவேகமாய்த் திரும்புகின்றானே??? வந்ததை விட வேகமாய்க் கீழே இறங்குகின்றானே? வழிபாட்டில் ஆரத்தி காட்டப் பட்டது கண்ணனுக்கும் சேர்த்து. அன்றிரவு!!!!

Monday, August 24, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ஐயனா? கண்ணனா?

ஐயன் திரும்பிவிட்டான் விருந்தாவனத்திற்கு. கிட்டத் தட்டப் பத்து வருஷங்கள் கழிச்சுத் திரும்பி இருக்கிறான். கெட்டிக் காரனும், திறமைசாலியும் ஆன ஐயன் கம்சன் அஸ்வமேத யாகக் குதிரையுடன் சென்றபோது அவனுடன் சென்றிருந்தான். கம்ஸனின் மாமனார் ஆன மகத நாட்டுச் சக்கரவர்த்தி ஜராசந்தன் அஸ்வமேத யாகம் செய்து முடித்திருந்தான். இதன் மூலம் உலகையே ஆளும் சக்கரவர்த்தியாகத் தான் ஆகமுடியும் என்றும் ஜராசந்தன் நம்பி இருந்தான். ஜராசந்தனின் மகதத்தில் ராஜகிருஹத்தில் இருந்தபோது கம்சனுக்கு அவன் அனைத்து உரிமைகளையும் வழங்கி இருந்தான். மகத நாட்டுப் படைகளை நடத்திச் செல்லும் உரிமையைத் தன் மருமகனுக்குக் கொடுத்திருந்தான்.கம்சனின் பொறுக்கி எடுத்த வீரர்களில் ஒருவனாய்க் கூடச் சென்றிருந்த ஐயன் அனைத்தையும் பார்த்துக் கம்சனுக்கு அங்கே கிடைத்த மரியாதைகளிலும், அவன் வீரத்திலும், தன்னைப் பறி கொடுத்தான். விவேகம் அவனிடம் இல்லை என்பதை ஐயன் புரிந்து கொள்ளவில்லை. கம்சனின் அலட்சியமும், மனிதரைக் கேட்காமல், விசாரிக்காமல் கொல்லுவதையும் பார்த்து வியந்ததோடு அல்லாமல் அதை ஓர் வீரமாய் நினைத்தான். ஆயிற்று. அஸ்வமேத யக்ஞம் முடிந்து கம்ஸனும் மதுராவிற்குத் திரும்பி விட்டான். அவனுடைய வீரர்களோடு இப்போது கம்சனின் மாமனார் அனுப்பிய மகதப் படைகளும் சேர்ந்து மதுராவில் ஒரே கோலாகலம் தான். எங்கே நோக்கினாலும் ராணுவ வீரர்கள். படைகள் நடமாட்டம். திரும்பிய வீரர்களில் ஒருவன் ஆன ஐயன் தன் பெற்றோரைச் சந்திக்கவேண்டி அனுமதி பெற்று விருந்தாவனம் வந்திருந்தான்.

மதுராவுக்கு வந்ததுமே அவன் காதுகளுக்கு எட்டிய செய்தியானது ராதையை வேறே யாரோ மணக்கப் போகின்றனர் என்பதே. கோகுலத்து கோபர்களின் தலைவன் நந்தனாம். அவனின் ஒரே மகன் கானையாவாமே? ராதையை விடச் சின்னவனாமே? ம்ம்ம்ம்ம்?? கோகுலத்தில் ஏதோ பிரச்னை என்று சில வருஷங்கள் முன்னால் தான் விருந்தாவனத்திற்கு வந்து குடியேறினார்களாம். அவனுடைய மகன் என்பதால் நான் சும்மா விடுவேனா என்ன??? இந்தக் காமப் பித்துக் கொண்ட கண்ணனின் ஆசைக்கு ராதை எப்படி இணங்கினாள்? அவள் என்னுடையவள். எனக்கு நிச்சயிக்கப் பட்டவள் அல்லவோ? என்னுடைய வீரத்திற்கும், குடிப்பெருமைக்கும் இழுக்கு நேரும் இத்தகைய ஒரு காரியத்தை நான் எவ்விதம் அநுமதிப்பது? நிச்சயிக்கப் பட்ட இந்தப் பெண்ணை நான் இன்னும் பார்த்ததில்லை தான். எப்படி இருப்பாள் என்பதும் தெரியாது தான்.ம்ம்ம்ம்ம்??? என்னுடைய தகுதிக்கும், வீரத்திற்கும், கம்சன் எனக்கு இப்போது அளித்திருக்கும் கெளரவத்திற்கும் இவளை விட அழகான பெண்கள் என்னை மணக்கவருவார்கள்தான். ஆனால், ஆனால், ஆனால், இந்தக் கண்ணன் சிறுபயல், அவன் என்னை ஜெயிக்கவிடுவதா? ராதை எனக்குக் கிடைக்காவிட்டாலும் போகிறாள். எனக்கு நேர்ந்திருக்கும் இந்தத் தனிப்பட்ட அவமரியாதையைப் பொறுக்க முடியாது. அந்தக் கண்ணனை ஒரு கை பார்க்கவேண்டும். ஒரு கை என்ன இருகையாலும் பார்த்துவிட வேண்டியது தான். மீசையை முறுக்கினான் ஐயன்.

ம்ம்ம்ம்ம்??? கம்சனின் படையில் சேர்ந்து பலநாடுகள் சுற்றி என் போர்த்திறமை வளர்த்துக் கொண்டு இன்று இத்தனை முன்னேற்றத்துடன் வந்திருக்கும் என்னுடன் அந்தக் கண்ணன், அதான், அந்த நந்தன் மகன் எந்த முகத்தை வைத்துக் கொண்டு மோதுவான்? நான் தான் ஜெயிப்பேன். ஜெயித்ததும், ராதையையும் விடக் கூடாது தான். எப்படி விடுவது? மற்ற மனைவியோடு இவளும் இருந்துவிட்டுப் போகட்டுமே! கண்ணா, கண்ணா, இருடா இரு! நான் வந்துவிட்டேன்! வந்த ஐயனுக்கு இன்னொரு செய்தியும் காத்திருந்தது. இந்த வருஷம் இந்திரனுக்கு விழா எடுக்கப் போவதில்லையாமே? அட?? ஒவ்வொரு வருஷமும் இந்திரனுக்கு விருந்தாவனத்தில் விழா எடுக்காமல் இருந்ததே இல்லையே! என்ன காரணம் இந்த வருஷம் மட்டும் இப்படி? அதுவும் இந்த வருஷம் விழாவை முன்னின்று நடத்தப் போவதும் கண்ணனாமே? இது எப்படி நடந்தது? ஐயன் விசாரிக்கிறான்.

முதலில் இந்திரவிழாவுக்கே கோபர்களும், கோபிகளும் தயார் ஆனார்கள். விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன. விழாவில் நடக்கும் யக்ஞங்களுக்கு யார் யஜமானாக இருப்பது என ஆலோசிக்கப் பட்டது. சென்ற வருஷம் பலராமன் இருந்தான். இந்த வருஷம் கண்ணனை இருக்கச் சொல்லலாமா? ஆம் அது தான் சரி! ஏற்கெனவே கண்ணனின் அருமையான பேச்சு வன்மையால் கவரப் பட்டிருந்த கர்காசாரியாரும், சாந்தீபனியும் கண்ணனிடம் வந்து அவனை யக்ஞ அதிகாரியாய்த் தேர்ந்தெடுத்திருப்பதைச் சொல்கின்றனர். கண்ணனோ கூப்பிய கரங்களோடு பலராமனையோ, ஸ்ரீதாமாவையோ இருக்கும்படி கேட்கச் சொல்ல, கர்கர் கண்ணன் மறுப்பதின் காரணத்தைக் கேட்கின்றார். தான் தகுதி இல்லாதவன் எனக் கண்ணன் சொல்ல கண்ணனைவிடத் தகுதிவாய்ந்தவர் யார் என கர்கர் கேட்க, கண்ணன் சொல்கின்றான்.
“குருதேவா, எனக்கு இந்திரவிழா பிடிக்கவில்லை”

“என்ன?? என்ன??? என்ன??”

“காலம் காலமாய் நடக்கிறதே!”
இந்திரனுக்காக விழா எடுத்து எவ்வளவு பால், தயிர், தேன், வெண்ணெய், அக்னி, தானியங்கள் எனச் செலவு செய்கின்றோம்? இத்தனையும் அவனிடம் உள்ள பயத்தால் அல்லவா குருதேவா? விழா எடுக்கவில்லை என்றால் இந்திரன் கோபம் அடைவான் என்று தானே?” கண்ணன் கேட்டான்.

“ஏன் கண்ணா, ஆனானப் பட்ட ரிஷி, முனிவர்களே இந்திரனுக்கு விழா எடுத்து யாகங்கள் செய்கின்றனர். நாம் செய்தால் என்ன”

“குருதேவா, ச்யவன மஹரிஷி செய்கின்றாரா? அவருக்கு என்ன நன்மைகளே நடக்கவில்லையா? அனைத்திலும் வென்றவராகவே இருக்கின்றார் அல்லவோ? பயத்திலும், கோழைத்தனத்திலும் விழா எடுப்பதில் என்ன உற்சாகம் இருக்கிறது குருதேவா! விழா என்றால் மனதில் சந்தோஷமும், களிப்பும் இருக்கவேண்டாமா?”

தெய்வநிந்தனை செய்யாதே கண்ணா!”

“இல்லை குருதேவா!” கண்ணன் சற்று நேரம் ஒன்றும் பேசவில்லை. “குருதேவா, திருவிழாக்களோ, பண்டிகைகளோ நம்மை உற்சாகப் படுத்தத் தான் அல்லவா? நாம் வணங்கும் கடவுள் இந்தத் திருவிழாவை நாம் எடுக்கவில்லை எனில் நம்மை மிக மோசமாய்த் தண்டிப்பார் என பயந்து எடுத்தால் அதில் என்ன பலன் கிடைக்கும் குருதேவா? நம்மிடம் நம் கடவுளிடம் நம்பிக்கையும், பயம் என்பது இல்லாமலும், அன்பை மட்டுமே கடவுளுக்கு மனமாரக் கொடுத்து, அதைத் திரும்பப் பெறுபவராகவும் இருக்கவேண்டும் அல்லவா? பயத்துடனேயே விமரிசையாக விழா எடுப்பதில் என்ன பயன்? இதோ பாருங்கள், நம் விருந்தாவனத்துப் பசுக்களையும், கன்றுகளையும், காளைகளையும், நமக்கு எவ்வளவு பால் தருகின்றன? நம்மிடம் உள்ள செல்வத்திற்கெல்லாம் காரணமே இந்தப் பசுக்களும், கன்றுகளும் அல்லவோ? மேலும் இவற்றின் சாணத்தைக் கூட நாம் விடுவதில்லை. அடுப்பு எரிக்கப் பயன்படுத்துகிறோம். பாலில் இருந்து தயிர், மோர், வெண்ணெய், நெய் அந்த நெய்யிலிருந்து பலகாரங்கள், பால் சோறு என எத்தனைக்குப் பயன் படுத்துகிறோம் பசுக்களின் பாலை? அந்தப் பசுக்களுக்குத் திரும்ப நாம் என்ன கொடுக்கிறோம்? ஆஹாரம் என்னமோ கொடுக்கிறோம் தான். ஆனால் அதுவும் நம் சுயநலத்திற்குத் தானே? ஆஹாரம் இல்லை எனில் பசுக்கள் பால் கொடுக்கமுடியாது என்பதால் அல்லவோ? “ கண்ணனுக்கு மூச்சு வாங்கியது. ஆனாலும் அவன் பேச்சு நிற்கவில்லை.

“இதோ இந்த மரங்களைப் பாருங்களேன், இதன் பழங்களை நாம் உண்கின்றோம். இதோ இந்தச் செடிகள், இவற்றின் காய்கள் நமக்கு உணவாகின்றன. இந்த கோவர்தன் மலை, இதன் அடர்ந்த காடுகள் நமக்குத் தரும் நிழலும், இதன் புல்வெளிகள் நம் பசுக்களுக்கு அளிக்கும் உணவும், இதிலிருந்து வரும் ஊற்றுக்கள், நதிகளின் தெளிந்த நீர் நமக்குக் கொடுக்கும் சுவையான குடிநீரும்! அப்பப்பா! குருதேவா! சொல்லுங்கள், கோவர்தன மலைக்கு நாம் என்ன செய்திருக்கிறோம் திரும்ப?”

“ஓஹோ, அப்போ நீ உன்னோட இந்தப் புதிய கடவுளருக்கு என்ன செய்யணும்னு சொல்றே கண்ணா?” சாந்தீபனி கேட்டார். கண்ணன் சொல்கின்றான்: “இப்போது நாம் எடுக்கப் போகும் விழா நம் பசுக்கள், கன்றுகள், காளைகளுக்காகவும், இந்த மரம், செடி, கொடிகளை நமக்கு அளித்த கடவுளுக்காகவும், இந்த மலையரசனுக்காகவும், இருக்கட்டும். அவை நம்முடையவை என்ற எண்ணமே நம்மிடம் இருக்கிறது. இல்லை குருதேவா! நாம் தான் அவற்றுக்குச் சொந்தம். அவை இல்லாமல் நாம் எங்கே? நம்மிடம் ஒன்றுமே இருக்காது. நாமே இருக்க மாட்டோம்.”

“அது என்னமோ சரிதான்” விருந்தாவனத்து மூத்த கோபர்களில் ஒருவர் ஆமோதித்தார். “பசுக்களே நம்முடைய செல்வம்” என்று அனைவரும் ஒத்துக் கொண்டனர். “இந்தப் பசுக்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கிறது. இவற்றின் கம்பீரம், விநயம், பெருந்தன்மை, இனிமை, சாதுவான தன்மை என்று கற்றுக் கொள்ளவேண்டும்.”
கண்ணன் மேலும் சொன்னான்.”அது சரி, நாம் இவற்றுக்கு விழா எடுத்தால் இந்திரனுக்குக் கோபம் வராதா? ஏற்கெனவே இந்திரனின் கோபம் மிகவும் பிரபலம் ஆனது.” இன்னொருவர் கேட்டார். “கடவுள் என்றால் கோபம் கூடாது. அதை எடுத்துக் காட்டவேண்டியது நம்முடைய தர்மம் அல்லவோ?” கண்ணன் கேட்டான். அவ்வளவில் கோபோத்ஸ்வம் கொண்டாட முடிவு செய்யப் பட்டு அனைவரும் ஏகமனதாய் ஒத்துக் கொண்டனர். “என்றால் இந்த விழாவை முன்னின்று நடத்த நான் தயாராய் இருக்கிறேன்.” கண்ணன் முன் வந்தான். அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். விருந்தாவனம் பூராவும் செய்தி பரவியது. பழமையான சம்பிரதாயங்களை விடாமல் பின்பற்றும் சிலருக்கும், வயதில் மிகவும் முதிர்ந்த சிலருக்கும் இது சரியெனப் படவில்லை. அதிர்ச்சியையே அளித்தது. காலம் காலமாய்க் கடைப்பிடிக்கப் பட்ட ஒரு பரம்பரை வழக்கத்தை மாற்றுவதா? இதென்ன நந்தனுக்குத் தான் புத்தி கெட்டுப் போய்விட்டது என்றால் கர்கருக்கும், அவருடன் கூட வந்திருக்கும் புதிய குரு சாந்தீபனிக்குமா??

விழா முன்னால் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக எடுக்கப் பட்டு வந்தது. இப்போது மூன்று நாட்கள் மட்டுமே கொண்டாடுவதாய் முடிவு செய்யப் பட்டது. அந்த மூன்று நாட்களுமே வெறும் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். இளைஞர்கள் மனதில் புதிய உற்சாகமே பிறந்தது. கண்ணனைத் தங்கள் மானசீகத் தலைவனாகவே ஏற்றுக் கொண்டனர். கட்டுப்பெட்டித் தனமான வழிபாட்டுக்குப் பதிலாக புதிய முறையில் அனைவரும் கூடி மகிழ்வோடு இருக்கும் வண்ணமாகக் கண்ணன் அனைவரையும் சம்மதிக்க வைத்துவிட்டானே? ஐயனுக்கு இத்தனையும் தெரிய வந்தது. ம்ம்ம்ம்ம்ம்ம்ம்??? யாரவன் மாயக் காரனாய் இருக்கிறானே? இத்தனை வருஷங்களாய் நடந்து வந்த ஒரு பண்டிகையை இவன் ஒரே நாளில் மாற்றிவிட்டானே? போர்க்களத்தில் இருந்த போது கூட இந்திரனை புயலுக்கும், காற்றுக்கும், மழைக்கும் அதிபதியான இந்திரனை, வீரத்தில் சிறந்த இந்திரனைக் கும்பிட்டு வந்திருக்கிறான் ஐயன். விடமாட்டேன், நிச்சயமாய் விடமாட்டேன். நானா, அந்தக் கண்ணனா? ஒரு கை பார்த்துவிடுவோம். கண்ணா, கண்ணா, தயாராய் இரு! என்ன நடக்கப் போகிறது பார்! இந்திரவிழாவே நடக்கும் இந்த விருந்தாவனத்தில் நீ இருந்தாலும், இல்லாவிட்டாலும்.