எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 16, 2008

சிவகுமாரின் சந்தேகம்!

முதலில் சிவகுமார் என்னும் பட்டாசு சிவாவின் இரு சந்தேகங்களை நிவர்த்தி செய்துவிட்டு அடுத்த பகுதிக்குப் போவோம், முதலில் அவர் கேட்டிருந்தது, ஸ்கந்த புராணம் பற்றியது! வால்மீகி ராமாயணத்தில் அதன் குறிப்புக்கள் இருக்கின்றதா என்று கேட்டிருந்தார். அது பற்றி பால காண்டத்தில் வருகின்றது. விசுவாமித்திரர் ராமனையும், லட்சுமணனையும் அழைத்துச் செல்கின்றார். அப்போது, தாடகையின் வதமும், சுபாஹூ, மாரீசனை வெற்றி கொண்டதற்கும் பின்னர் மிதிலையில் ஜனகரின் யாகத்தில் கலந்து கொள்ளச் செல்லும் முன்னர், ராம, லட்சுமணர்களுக்கு விசுவாமித்திரர் சில சம்பவங்களையும், அதை ஒட்டிய வரலாற்றையும் கூறுவதாய் வருகின்றது. அப்போது அவர் தன் குலத்தைப் பற்றியும் தன் சகோதரியான கெளசிகியைப் பற்றியும், அவள் இப்போது நதியாக ஓடுவது பற்றியும், கூறிவிட்டு, சோன் நதியைக் கடந்து கங்கையை அடையும்போது கங்கையின் வரலாற்றையும் கூறுகின்றார். கங்கை மூன்று வழியாகப் பாயத் தொடங்கியது பற்றிக் கூறும்போது அவர், பரமேஸ்வரனின் அதோமுகத்தில் இருந்து தோன்றிய நெருப்புப் பொறிகளின் வீரியம் தாங்கமுடியாமல் அக்னி அதைக் கங்கையிடம் ஒப்புவிக்க, கங்கையானவள் அதைத் தாங்கிச் சென்று தன் தகப்பன் ஆன இமவானின் அடிவாரத்தில் விட, அதில் இருந்து உருவாகும் தெய்வமகனே "ஸ்கந்தன்" என அழைக்கப் பட்டதாயும், அவனை வளர்க்கும் பொறுப்பை கிருத்திகை நட்சத்திரத்துத் தேவதைகளிடம் கொடுத்ததால் "கார்த்திகேயன்" எனவும் பெயர் பெற்றான் என்றும் கூறுகின்றார். விழுந்தவன் என்ற அர்த்தத்தைக் கொடுக்கக் கூடிய "ஸ்கந்தன்"என்று பெயர் பெற்ற அவனே பின்னாளில் அசுரர்களை வென்று தேவ சேனாபதியாக ஆனான் எனவும், ஆறு கார்த்திகைப் பெண்கள் பாலூட்டி வளர்த்ததாலும், இறைவனின் நேரடி அம்சம் என்பதாலும் ஆறு முகங்களைப் பெற்றான் என்றும் அந்தச் சுப்ரமணியனின் உற்பத்திக்குக் "குமார சம்பவம்" என்றும் பெயர் எனவும் கூறுகின்றார். இந்தக் கார்த்திகேயனின் வாழ்க்கைச் சரிதம் பாவங்களில் இருந்து விடுதலை அளிக்க வல்லது என்றும் கூறுகின்றார்.

அடுத்து அவர் கேட்டிருப்பது, சீதை என்ன குத்திப் பேசினாள் ராமரிடம் என்றே! கம்பர் வெகு சுலபமாய் ஒரே பாடலுடன் இதைத் தாண்டி விடுகின்றார். ஏனெனில் அவர் நோக்கில் சீதையும் ஒரு அவதாரமே. அந்த ஸ்ரீ என்னப் படும் மகாலட்சுமியே அவதாரம் செய்திருக்கையில் கம்பர் அவளை இகழ்ந்து ஒரு சொல் சொல்வாரா என்ன?
"கொற்றவள் அது கூறலும் கோகிலம்
செற்றது அன்ன குதலையாள் சீறுவாள்
உற்று நின்ற துயரம் இது ஒன்றுமே
என் துறந்தபின் இன்பம் கொலாம் என்றாள்" உன்னை அடைந்து உன்னோடு இருக்கும் துன்பம் நான் வருகின்றது என்றால் நான் இல்லை என்றால், என்னைப்பிரிந்து சென்றால் எல்லாம் இன்பம் ஆகுமோ?" என்று கேட்கின்றாள் சீதை. ஆனால் வால்மீகியோ இன்னும் ஒருபடி மேலும் போய், சீதை ராமனைப் பார்த்து, ராமர் காட்டுக்கு வரவேண்டாம் எனக் காரண, காரியங்களையும், கடமைகளையும் சுட்டிக் காட்டி மறுத்த பின்னர், "ஏ, ராமா! நீர் சுத்த வீரன் என்றெண்ணி அல்லவோ என் தந்தையான ஜனகர் என்னை உமக்குத் திருமணம் செய்து கொடுத்தார்? நீர் என்ன ஆண் வடிவை ஏற்ற ஒரு பெண்ணா? என்னை இங்கே விட்டுச் செல்வதன் மூலம் உம் வீரத்துக்கு இழுக்கு நேரிடும் என்பதை மறந்தீரோ? உமக்குத் தைரியம் இல்லை என அயோத்தி மாநகர் பூராவும் பேச நேரிடுமே? உம்மையே நம்பி வந்திருக்கும் என்னை விட்டுச் செல்ல என்ன காரணம் குறித்து உமக்கு அச்சம் நேரிடுகின்றது? மனதினால் கூடப் பிறரை நினையாத நான் உம்மை விட்டுப் பிரிந்து எவ்வாறு உயிர் வாழ்வேன்? நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். அதோடு குலத்திற்குக் களங்கம் நேரிடும் வகையில் நான் நடக்க மாட்டேன். காட்டிலே கிடைக்கும் கிழங்குகளோ, கனிகளோ அவையே எனக்கு அமிர்தம்! நீர் என்னை இங்கே விட்டுச் சென்றீரானால் நான் உடனே விஷம் குடித்து இறப்பேன்! அதன் பின்னரும் உயிர் வாழமாட்டேன்!" என்று கடுமையாகச் சொல்வதாய் வால்மீகி கூறுகின்றார்.
************************************************************************************

நம் அன்றாட வாழ்வில் நடக்கும் கணவன், மனைவி உரையாடல் போன்ற ஒன்றையே வால்மீகி சுட்டிக் காட்டுகின்றார். ஏனெனில் அவரளவில் ராமன் ஒரு அவதாரம் இல்லை, அவதாரம் என்பதை அவன் உணரவும் இல்லை. ஆகவே வாதப் பிரதிவாதங்களும், நிகழ்வுகளும் ஒவ்வொரு அரச குடும்பத்திலும் நடைபெறும் தன்மையாகவே காட்டுகின்றார்.

3 comments:

 1. Geetha,
  Thought of buying some books with the explanations on kamba ramayanam.This won't be required further as i started reading your blogs from today onwards.
  Good work, keep going.

  Regards
  Karthick S

  ReplyDelete
 2. நான் கேட்க நினைந்திருந்த கேள்விக்கு இங்கே பதில் சொல்லிவிட்டீர்கள் அம்மா. இந்தப் பகுதியை வைத்துக் கொண்டு சிலர் அடிக்கும் கும்மிகளுக்கு அளவே இல்லை. சீதையே இராமனைப் பேடி என்று சொல்லிவிட்டாள் என்று அவர்கள் குதிப்பதைப் பார்த்தால் 'ஐயோ பாவம்' என்று தலையில் அடித்துக் கொள்ளத் தான் தோன்றுகிறது.

  ReplyDelete
 3. நல்ல விளக்கம் கீதாம்மா....நன்றிகள் பல...

  ReplyDelete