எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 09, 2008

கதை கதையாம் காரணமாம்- ராமாயணம் - பகுதி 10


கம்பர் மிக நிதானமாய்த் திருமணக் காட்சிகளை வர்ணிக்கின்றார். மிக மிக நிதானமாய் ஒவ்வொரு காட்சியாக வர்ணித்து விட்டுப் பின்னர் திருமணத்திற்கு வருகின்றார். அந்த மாதிரியாகவே வால்மீகியும் திருமண வைபவங்களை விவரிக்கின்றார். இன்னும் சொல்லப் போனால் குலம், கோத்திரம் போன்ற வர்ணனைகள் நிறையவே வருகின்றன. பெரும்பாலான இந்துத் திருமணங்களில் சொல்லப் படும் பாட்டன், முப்பாட்டன் வரிசையும் சொல்லப் படுகின்றது. "கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால், எடுத்தது கண்டனர், இற்றது கேட்டார்" என்று கம்பர் சுருக்கமாய் முடித்து விட்டார் என நினைத்தோ என்னமோ அருணகிரிநாதர் தன் திருப்புகழில் வில் முறியும் காட்சியைக் கொஞ்சம் விஸ்தாரமாய் வர்ணிக்கின்றார்.வில் உடையும் ஓசையைக் கூட வர்ணிக்கின்றார். "சிலை "மொளுக்"கென முறிபட" என்ற வார்த்தை மட்டும் நினைவில் இருக்கிறது. மன்னிக்கவும், பூராப் பாடலையும் தேடிக் கொண்டிருக்கிறேன். நேரமின்மையால் கிடைத்ததும் போடுகின்றேன். திருவிடைக்கழி திருப்புகழில் இருக்குனு நினைக்கிறேன்.

கம்பர் "ஆர்த்தன பேரிகள் ஆர்த்தன சங்கம்

ஆர்த்தன நான்மறை ஆர்த்தனர் வானோர்

ஆர்த்தன பல்கலை ஆர்த்தன பல்லாண்டு

ஆர்த்தன வண்டு இனம் ஆர்த்தன வேலை" (பால காண்டம் 1199) என மங்கல ஆரவாரம் செய்வதோடல்லாமல், கைகேயி முதலிய மூவரையும் ராமரும், சீதையும் வணங்குவதாயும் தெரிவிக்கின்றார்.

"கேகயன் மா மகள் கேழ் கிளர் பாதம்

தாயினும் அன்பொடு தாழ்ந்து வணங்கி

ஆய தன் அன்னை அடித் துணை சூடி

தூய சுமித்திரை தாள் தொழலோடும்" என்று கூறுகின்றார் பால காண்டம் 1200 பாடலில் கம்பர்.

வால்மீகி ராமாயணத்திலோ தசரதனின் மூன்று மனைவிகளும் திருமணத்திற்கு வருவதே இல்லை. இன்றும் சில வட இந்தியத் திருமணங்களில் பெரும்பாலும் மணமகனின் தாய், தன் மகன் திருமணத்துக்குச் செல்லுவது இல்லை, என்பதைக் கட்டாயமாய்க் கடைப்பிடிக்கின்றனர்.

திருமணங்கள் முடிந்ததும் மணமக்கள் அனைவரும் அயோத்திக்குத் திரும்புகின்றனர். செல்லும் வழியில் சகுனங்கள் சரியில்லாமல் அபசகுனங்களாய்த் தெரிய தசரதனின் மனம் கலங்குகின்றது. வரப்போவதை நினைத்தோ? என்ன காரணம் என வசிஷ்டரை மன்னன் வினவ, வசிஷ்டரோ பரசுராமர் வருகை புரிவதாய்த் தெரிவிக்க மன்னன் அஞ்சுகிறான் என்ன நேருமோ என! பரசுராமரும் வருகின்றார். எப்படி?


பூமி தேவியே அதிரும்போன்றதொரு சத்தத்துடன், வானத்தில் சூரியன் கூட அஞ்சி மறையும் வண்ணம், திசைகள் தடுமாறும் வண்ணம் தோன்றினார் எதிரே ஒரு முனிவர். அவர் தோற்றத்தில் அச்சத்தை உண்டாக்கும் விதத்திலும், நெருப்பைப் போல் யாராலும் அணுகமுடியாத தன்மையுடனும், தோளில் கோடரியைச் சுமந்து கொண்டும் இருந்தார். முப்புரத்தையும் எரித்த சிவனின் வடிவமோ என்னும் எண்ணத்தைத் தோற்றுவித்த அவர் தான் பரசுராமர் என்னும் முனிவர். ப்ருகு முனிவரின் வம்சத்தில் தோன்றிய ஜமதக்னியின் புத்திரன் ஆன அவர் தன் தகப்பனைக் கொன்ற கார்த்த வீர்யாச்சுனனைப் பழி வாங்க ஆரம்பித்து அதில் இருந்து ஆரம்பித்து 21 முறை க்ஷத்திரியர்களைத் தொடர்ந்து அழித்து வரவும், க்ஷத்திரியர்கள் இல்லாமல் பூமியில் சமானத் தன்மை ஏற்படாது, என்பதை நன்கு உணர்ந்த காசியபர் பரசுராமர் வென்ற பூமி முழுதையும், தான் தானமாய்ப் பெற்று, இந்தப் பூமியில் நல்லாட்சி புரிந்து வருமாறு கூறி எஞ்சிய சில க்ஷத்திரியர்களுக்குக் காசியபர் பூமியை அளிக்கின்றார். என்றாலும் பரசுராமரின் கோபம் அடங்காமலேயே அவர் மீண்டும் மகேந்திரமலையை அடைந்து தவம் செய்து வந்த போது, ஸ்ரீராமர் சிவ தனுசுவை உடைத்த விபரம் தெரிந்து கொண்டு அவரிடம் வந்து, தன்னிடம் இருக்கும் இன்னொரு வில்லைக் காட்டுகின்றார். அது விஷ்ணு தனுசு. விஸ்வகர்மாவால் செய்யப் பட்ட அதி அற்புத விற்கள் இரண்டில் ஒன்று சிவனிடமும், மற்றது விஷ்ணுவிடமும் இருந்தது. சிவன் தன் வில்லை மிதிலை அரசனுக்கு அளிக்க விஷ்ணுவோ ப்ருகு வம்சத்து ரிசீகருக்கு அளிக்க அவரிடமிருந்து ஜமதக்னி முனிவர் பெற்றுப் பின்னர் பரசுராமரை வந்தடைகின்றது.


ஸ்ரீராமரைப் பார்த்துப் பரசுராமர் நீ முறித்த வில்லுக்குச் சமானம் ஆன இந்த வில்லையும் நீ நாண் ஏற்றிக் காட்டுவாயாக! இல்லை எனில் என்னுடன் நீ யுத்தம் செய்யவேண்டும்!" என்று கூற ஸ்ரீராமரும் உடனேயே குழந்தை தன் விளையாட்டுப் பொருளை அசிரத்தையாக எடுப்பது போல், அந்த வில்லை எடுத்து நாண் ஏற்றிவிட்டு, "அடுத்து என்ன செய்யவேண்டும்" என்று பரசுராமரைக் கேட்கின்றார். பரசுராமரோ மனம் மகிழ்ந்து,,"ஏராமா! செயற்கரிய செயலைச் செய்த நீ அந்த சாட்சாத் விஷ்ணுவே தான்! நான் காச்யபருக்குத் தானமாய் அளித்த இந்தப் பூமியில் ஓரிடத்தில் தங்காது நிலையில்லாது சுற்றிக் கொண்டே இருப்பதாய் வாக்களித்திருக்கின்றேன். இப்போது நான் மீண்டும் மகேந்திர மலைப்பகுதிக்கே செல்கின்றேன். இந்த வில் இனி உன்னுடையது!" என்று சொல்லிச் செல்கின்றார்.அதன் பின்னர் அனைவரும் அயோத்தியை வந்தடைய மணமக்களுக்கு அயோத்தி மக்கள் ஆரவார வரவேற்பு அளித்ததும் கழிகின்றது பனிரண்டு வருடங்கள் நிம்மதியாக. இங்கே பால காண்டத்தைச் சுருக்கமாய் முடித்துவிட்டு அயோத்யா காண்டத்துக்குச் சென்று விடுகின்றார் அருணகிரிநாதர். ஜானகியான சீதையின் அன்பிலும், பொறுமையில் ஒன்றாய்க் கலந்த ராமன் என அவர் வர்ணிப்பதாய் அறிகின்றோம். நாளைக்குள் பாடலைத் தேடி எடுத்து விடுகின்றேன்.

1 comment:

  1. அருணகிரிநாதர் சொல்லியிருப்பதையும் தொட்டுச் செல்வது சிறப்பு. எனக்கு தெரியாதது...தெரிந்து கொள்ள வாய்ப்பாகிறது. நன்றி. வணக்கம். :)

    ReplyDelete