எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, January 09, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், பூதனை மடிந்தாள் பகுதி 21

பூதனை யசோதையைப் பார்த்து அவளுடைய தெள்ளத் தெளிவான முகத்தையும், அன்பான இனிய மொழிகளையும், உபசரிப்பையும் பார்த்து வியந்தாள். அவள் சேலையின் முந்தானையில் ஒளிந்து கொண்டு அவளை எட்டிப் பார்த்துச் சிரிப்பது யார்?? ஆஹா, இந்தக் குழந்தையா கம்சன் சொன்னது? ஆம், இவனாய்த் தானிருக்கும். இவனுடைய இந்த வான் நீல நிறமே சொல்லுகின்றதே இவன் தான் அந்தக் குழந்தை என. ம்ம்ம்ம்., அந்தக் குழந்தையின் அருகே ரோகிணியின் தலை மயிரைப்பிடித்து இழுத்து விளையாடிக் கொண்டிருப்பது, ம்ம்ம்ம்?? ரோகிணியின் மகனோ?? ஆம், அப்படித் தான் இருக்கவேண்டும். பூதனை ரோகிணியை நன்கு அறிவாள். இந்தப் பெரிய பையன் ரோகிணியின் குமாரனாய் இருக்கவேண்டும்.

பூதனை பார்த்துக் கொண்டே இருக்கையில் அந்த நீலமேக வண்ணன், தன் தாயிடம் பால் குடித்து முடித்துவிட்டு, அவள் சேலைத்தலைப்பில் ஒளிந்திருந்த தன் முகத்தை வெளியே கொண்டு வந்தான். திடீரென எழுந்துப் பக்கத்தில் இருந்த ஒரு சிறுவனிடமிருந்த பால் கிண்ணத்தைப் பிடுங்கி, அந்தப் பாலையும் குடித்தான், நீலவண்ணக் கண்ணன். பின்னர் சிரித்துக் கொண்டே விளையாட்டாய் அந்தக் கிண்ணத்தையும் தூக்கி எறிந்தான். பூதனை அந்தக் கிருஷ்ணன் முகத்தையே பார்த்தாள். நீல நிறம் ஒளிவிட்டுப் பிரகாசிக்க, சுருண்ட கூந்தல் நெற்றியில் இருந்து தொங்கிக் குழல்கற்றைகள் முகத்தையே மறைக்க, கண்கள் இரண்டும் விஷமத்தனத்தை எடுத்துக் காட்ட, முகம் முழுதும் விஷமத்தனமான சிரிப்போடு விளையாடும் அந்தக் குழந்தையைப் பார்த்தாலே எடுத்துக் கொஞ்சிக் கட்டி அணைக்கவேண்டும் போல் தாபம் மேலிட்டது பூதனைக்கு.

ஆனால் இந்தக் குழந்தையைத் தான் அவள் கொல்லவேண்டும். அதுதான் அவளுக்கு இடப்பட்டிருக்கும் வேலை. பேசாமல் வேலையையே விட்டுடலாமா என்று கூட எண்ணினாள். இந்தக் குழந்தையைக் கொல்லுவதை விடக் கம்சன் கையால் அவள் இறந்துவிடலாமோ என்று எண்ணினாள். அவள் மட்டும் இறந்தால் பரவாயில்லை, அவள் கணவன் ப்ரத்யோதாவும் இறக்க நேரிடும். பின்னர் அவளுடைய எட்டுக் குழந்தைகளின் கதி என்னாவது? கம்சனின் கடுங்கோபம் அவளுடைய மொத்தக் குடும்பத்தையும், குலத்தையும் பாதிக்குமே. ம்ம்ம்ம்., இந்தக் குழந்தையைக் கொல்லுவதுதான் தன்னுடைய கடைசிக் கடமையாக வைத்துக் கொள்ளவேண்டும். பூதனை அந்தக் குழந்தையையே வைத்த கண் வாங்காமல் பார்த்தாள். குழந்தை அவள் பார்வையால் ஈர்க்கப் பட்டு அவளைப் பார்க்க பூதனை குழந்தையைக் கவரத் தன் கைகளால் தட்டி, வாயால் சத்தம் கொடுத்துக் குழந்தையைக் கூப்பிட்டாள் தன் பக்கம். குழந்தையும் அவளைப் பார்த்து மிக மிக மோகனமாய்ச் சிரித்தது. ஒரு கணம், ஒரே கணம் தன்னை மறந்த பூதனை பின்னர் நிதானத்துக்கு வந்தாள், தன்னிரு கைகளையும் நீட்டிக் குழந்தையைக் கூப்பிட, அவனும் வந்து அவள் கைகளில் அடைக்கலமானான்.

குழந்தையைக் கைகளில் ஏந்திய பூதனைக்குத் தன்னை அறியாமல் அந்தக் குழந்தைக்கு அமுதூட்டத் தோன்றியது. அப்போது அவள் நினைவில் வந்தது, யமுனையில் குளித்ததும், ஒருவருக்கும் தெரியாமல் தன் மார்பில் விஷம், கொடிய விஷத்தைத் தடவிக் கொண்டது. இம்மாதிரிக் கொடிய விஷத்தை மார்பில் தடவிக் கொண்டு சிறு குழந்தைகளுக்குப் பாலூட்டுவது போல் பல குழந்தைகளைத் தான் இத்தனை நாட்களாய்க் கொன்று வந்திருப்பதும், இப்போது கம்சனின் ஆணை இந்தக் குழந்தையையும் இம்மாதிரிக் கொல்லுவது என்பதே என்பது நினைவில் வர அவள் மனதில் போராட்டம். என்றாலும் அதையும் மீறித் தாய்மை உணர்வும், குழந்தையின் அழகும், இத்தனன அழகான குழந்தைக்குத் தன்னிடம் உள்ள எதைத் தான் தரக் கூடாது என்ற உணர்வும் மேலோங்கியது. குழந்தை அவள் கைகளில் மீண்டும் சிரித்தான். அந்தச் சிரிப்பில் தன் வயமிழந்த பூதனை தன்னை அறியாமலேயே குழந்தைக்குப் பாலூட்டத் தொடங்கினாள்.

திடீரென ஏதோ குழப்பம், கூச்சல், யாரோ சத்தம் போடுகின்றார்கள். பூதனை, பூதனை, பூதனை வந்துவிட்டாளாமே! திடுதிடுவென யாரோ ஓடிவரும் சத்தம் கேட்கின்றது. ஆண்கள் யாவரும் என்னவெனப் பார்க்க, மதுரா சென்றிருந்த நந்தனும், அவனுடன் சென்ற ஆட்களும் ஓடி வந்ததைக் கண்டனர். கூச்சல் போட்டுக் கொண்டு வந்தார்கள் அனைவரும். இங்கே பூதனைக்கோ இவை எதுவுமே தெரியவில்லை. ஆழ்ந்த, மிக ஆழ்ந்த, மிக மிக ஆழ்ந்ததொரு நிலையில் இருந்தாள் அவள். நந்தன் யசோதையைப் பார்த்து, "பூதனை வந்தாளாமே இங்கே? எங்கே அவள்?" என்று கேட்க, யசோதைக்கு அப்போது தான் புரிந்தது, மதுராவிலிருந்து பிரார்த்தனை நிறைவேற்றப் போவதாய்ச் சொல்லிக் கொண்டு வந்தவள் பூதனை என. ஆஹா, என் கனையா, எனக் கதறிக் கொண்டே பக்கத்தில் பார்த்தாள். பூதனை கையிலிருந்து குழந்தையைப் பிடுங்க யத்தனித்தாள். அதற்குள்ளாகப் பூதனை மெதுவாய்க் கீழே விழுந்தாள். கண்கள் அகலமாய்த் திறந்து கிருஷ்ணனையே பார்த்திருக்க, அவள் கைகள் கண்ணனை மீண்டும் மார்போடு சேர்த்து அணைக்க முயலக் கீழே விழுந்த பூதனையின் முகத்தில் விவரிக்க ஒண்ணா நிம்மதியும், தாய்மை உணர்வும், அதனால் ஏற்பட்டதொரு விகசிப்பும் படர்ந்திருந்தது.பதற்றத்துடன் யசோதை கிருஷ்ணனை அவளிடமிருந்து பிடுங்கித் தன்னுடன் சேர்த்து அணைத்துக் கொண்டாள். பூதனை வந்திருக்கும் செய்தியை அறிந்த அனைவரும் அவளைக் கொல்ல வேண்டும், என்ற எண்ணத்தோடு ஓடிவர, யசோதை அவர்கள் அனைவரையும் தடுத்தாள். அவளே இறந்துவிட்டாள். என்று சொன்னாள் யசோதை, அதைச் செய்ததும் என்னுடைய கனையா தான். இவனாலேயே அவள் இறந்தாள் என்று சொல்லிவிட்டுத் தன் குழந்தையை மீண்டும் மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள் யசோதை. யசோதை நினைத்தாள்:காணக் கிடைக்காத பொக்கிஷம் இவன், என் குழந்தை, இவன் தான் எனக்கு எல்லாமே!

பிறங்கியபேய்ச்சி முலைசுவைத்துண்டிட்டு
உறங்குவான்போலேகிடந்த இப்பிள்ளை
மறங்கொளிரணியன் மார்பைமுன்கீண்டான்
குறங்குவளைவந்துகாணீரே
குவிமுலையீர். வந்துகாணீரே. 5.

9 comments:

 1. ச்சோ ச்சோ, பூதனை செத்து போயிட்டாளே பாவம்!

  கதை ஆரம்பத்திலேந்து பாத்து வரேன். பாத்திரங்களை ஒரு தெய்வத்தன்மையோட அல்லது அசுரத்தன்மையோட கூடிய மனிதர்களாகதான் சித்தரிக்கிறார். ரொம்ப அசாதரணமான நிகழ்வுகளாக சித்தரிக்கவில்லை.

  ReplyDelete
 2. இந்த அளவு தாய்மை உணர்வுடன் இருந்த அந்த பூதனைக்கு கண்ணன் எதுவும் பாவம் பார்த்து எந்த ஒரு வரமும் தரவில்லையா தலைவி!!??

  ReplyDelete
 3. @திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., இது உங்க கமெண்டின் முதல் பாகத்துக்கு.

  ஆமாம், பாத்திரங்களை நீங்க சொன்னாப்போல் தான் சித்திரித்திருக்கின்றார் என்பதோடு தர்க்கரீதியாகவும் ஒத்துக் கொள்ளக் கூடியவையாக இருக்கின்றது. என்னை அந்தக் குறிப்பிட்ட விஷயம் மிகவும் கவர்ந்தது. நடக்க முடியுமா என்றதொரு விஷயத்தை எவ்வாறு நடந்திருக்கும் என்று அலசிக் கண்டு பிடித்துச் சொல்லி இருக்கார். ரசிக்கின்றேன்.

  ReplyDelete
 4. @கோபி, அவளுக்கு எந்தவிதத் துன்பமும் இல்லாமல் முக்தி கொடுத்தாரே அதுவே பெரிசு இல்லையா?? கம்சன் கையால் இறக்க நேர்ந்திருந்தால்?? அப்படி யோசிங்க, புரியும். :))))))

  ReplyDelete
 5. //@திவா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்., இது உங்க கமெண்டின் முதல் பாகத்துக்கு.//
  அக்கிரமமா இல்லை? அதன் முன்னேயே சொன்னேனே அவள் மீது அனுதாபமே வருதுன்னு!

  ReplyDelete
 6. //நடக்க முடியுமா என்றதொரு விஷயத்தை எவ்வாறு நடந்திருக்கும் என்று அலசிக் கண்டு பிடித்துச் சொல்லி இருக்கார். ரசிக்கின்றேன்.//

  ரிப்பீட்டேய்...

  ReplyDelete
 7. நன்றி கவிநயா!

  ReplyDelete
 8. ராமானந்த் சாகரின் கிருஷ்ணாவில் பூதனையின் முந்தைய பிறவி பற்றி கூறப்படுகிறது. அவள் மகாபலியின் பெண். வாமனனது குழந்தை முகத்தை பார்த்து தாய்மை பொங்க தான் அவனுக்கு பாலூட்ட வேண்டும் என நினைக்கிறாள். பிறகு வாமனன் திருவிக்கிரமனாக மாறி ஈரடியால் மண்ணையும் விண்ணையும் அளந்து மூன்றாம் அடியால் பலியை பாதாளலோகத்துக்கு தள்ளியதைக் கண்டு சினமடைந்து அக்குழந்தைக்கு பால் தரும்போது நச்சுப்பாலை தந்து கொல்ல வேண்டும் என்னும் ஆவல் கொள்கிறாள். அதுதான் கிருஷ்ணாவதாரத்தில் அவள் பூதனையாக வருகிறாள்.

  இதை அக்காலக் கட்டத்தில் அந்த சீரியலில் பார்த்தேன். ஹிந்தி எனக்கு நன்றாக வருமாதலால் புரிதலில் தவறு ஏதும் இல்லை.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  ReplyDelete
 9. வாங்க டோண்டு சார், ரொம்ப வருஷம் கழிச்சு வந்திருக்கீங்க! நன்றி, இந்தக் கருத்தை நானும் கேட்டிருக்கேன், சில ப்ரவசனங்களில், என்றாலும் அதை இங்கே சுட்டும் அளவுக்கு அதன் உண்மை தெரியாததால் சொல்லவில்லை, நன்றி, உங்கள் கருத்துக்கும், வந்ததுக்கும்.

  ReplyDelete