எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, January 07, 2009

வைகுந்தத்துக்கு வரத் தயாராகுங்கள்!


மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியைத் தான் வைகுண்ட ஏகாதசி என்று சொல்லி வருகின்றோம். உண்மையில் ஏகாதசி ஏற்பட்ட கதையைப் பார்த்தோமானால் முரன் என்ற அசுரனை வதம் செய்யத் திருமாலிடம் முறையிட்டனர் தேவர்கள். திருமால் முரனோடு செய்த போர் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க, களைப்படைந்து பதரிகாசிரமத்தில் ஓய்வெடுத்துக் கொள்ள ஒரு குகையில் போய் தங்கினார். ஆனால் முரன் விடாமல் திருமாலை வம்புக்கு இழுக்க, அவரின் சக்தியை ஒரு பெண் உருவாக்கி அனுப்பி வைத்தார் திருமால். அந்தச் சக்தியானவள் தோன்றும்போதே பெரும் ஓலம் இட்டுக் கொண்டு வந்தாள். அந்த ஓலத்திலேயே முரன் அழிந்து சாம்பலாகிவிட, பின்னர் துயில் நீங்கி எழுந்த திருமால் சக்திக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு இந்த சக்தியை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பதவியை அளிப்பேன் என வரமும் அளிக்கின்றார். இந்த முதல் ஏகாதசி பிறந்தது மார்கழி மாதம் கிருஷ்ண பட்சத்தில் ஆகும். இந்த ஆதி ஏகாதசியையே அனைவரும் வைகுண்ட ஏகாதசியாய்க் கொண்டு உபவாசம் இருந்து வந்தனர்.

ஏகாதசி என்ற சொல்லுக்குப் பதினோராம் நாள் எனப் பொருள் வரும். இங்கே இந்தப் பதினொன்றும் எதைக் குறிக்கின்றது என்றால் நம் உடலில் உள்ள ஞான இந்திரியங்கள் ஐந்து, கர்ம இந்திரியங்கள் ஐந்து இவற்றை இயக்கும் மனம் ஆகிய அனைத்தும் சேர்ந்து பதினொன்று ஆகின்றது. இவை பதினொன்றும் ஆண்டவனுடன் ஐக்கியப் படுத்தித் தியானம் இருப்பதையே உபவாசம்= அருகே இருப்பது, இறைவனுடன் உடலாலும், உள்ளத்தாலும் ஒன்றி இருப்பது என்பது ஆகும். ஆனால் தற்காலங்களில் மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி எனப்படுகின்றது. இதற்குக் காரணம் இந்த நாளில் நம்மாழ்வார் வைகுண்டப் பதவியை அடைந்தார் என்பதே ஆகும். வேதம் தமிழ் செய்த நம்மாழ்வாரின் வைகுந்தப் பயணத்தைக் குறித்தே அன்று அனைவரும் வைகுந்த வாசல் என்னும் குறிப்பிட்ட வாயிலின் வழியே இறைவனுடன் நுழைய முட்டி, மோதுகின்றனர். வேதப் பயிற்சி எடுக்கும் காலத்தை “அத்யயன காலம்” என்றும் ஓய்வு எடுக்கும் “அநத்யயன காலம்” என்றும் சொல்லப் படுகின்றது. இதை ஒட்டியே ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னால் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆதி வைகுண்ட ஏகாதசி அன்று வடமொழியில் வேதங்களைச் செவி மடுத்துப் பரமபத வாயில் திறப்பு விழா நடத்தி வந்ததாய் ஒரு கூற்று இருந்து வருகின்றது.
நாளடைவில் அந்த வழக்கம் நலிந்து போக திருமங்கை மன்னன் காலத்தில் நம்மாழ்வாரையும் சிறப்பிக்கும் வண்ணம் நம்மாழ்வார் வைகுண்ட பதம் எய்திய வளர்பிறை மார்கழி ஏகாதசியிலே திருமுறைகளோடு சேர்த்து ஆழ்வார்களின் திருமொழியான திவ்யப் பிரபந்தமும் படிக்கப் பட்டு, “அரையர் சேவை” நடந்து வந்ததாயும், அந்தச் சமயம் நம்மாழ்வார் அவதரித்த நெல்லை மாவட்டத்து ஆழ்வார் திருநகரியில் இருந்து நம்மாழ்வாரின் விக்கிரஹம் கொண்டுவரப்பட்டு அரையர் சேவை நடந்து வந்ததாயும் ஒவ்வொரு வருடமும் நம்மாழ்வாரை ஸ்ரீரங்கத்து இறைவனே நேரில் சென்று வரவேற்று, ஆழ்வார் திருநகரிக்குத் திருப்பி அனுப்பி வந்ததாயும் சொல்கின்றனர். பின்னர் அதுவும் வழக்கொழிந்து போக, அவருக்குப் பின்னர் வந்த நாதமுனிகளின் பேரன் ஆன ஆளவந்தார் காலத்தில் அவரின் ஐந்து சிஷ்யர்களில் ஒப்பற்ற சிஷ்யரும் வைணவத்திற்குப் புத்துயிர் ஊட்டியவரும் ஆன உடையவர் ஸ்ரீராமானுஜரோடு இணைந்து ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த “அத்யயன” உற்சவத்தை மீண்டும் முதன்மைப் படுத்தினர். திருமங்கை ஆழ்வாரை நினைவுகூரும் வண்ணம் அவருடைய திருநெடுந்தாண்டகம் முதன்மைப் படுத்தப் பட்டது. தற்சமயம் ஆழ்வார் திருநகரியில் இருந்து நம்மாழ்வார் வருவதில்லை. ஆனால் ஸ்ரீரங்கத்திலேயே விக்கிரஹங்கள் செய்து நம்மாழ்வாருக்கு வைகுண்டப் பதவி கொடுத்துக் கெளரவிக்கும் விழாவும், அதை ஒட்டிய அரையர் சேவையும், விமரிசையாக நடை பெறுகின்றது. அப்போது முதலில் பாடப் படும் திருநெடுந்தாண்டகம் தொடங்கிப் பத்து நாட்கள் “பகல் பத்து” என்றும் நம்மாழ்வாரின் திருவாய்மொழித் திருநாட்கள் “இராப்பத்து” எனவும் சொல்லப் படுகின்றது. இந்தப் பகல் பத்து, இராப்பத்து இரண்டுக்கும் இடைப்பட்ட நாளே வைகுண்ட ஏகாதசியாக வருகின்றது. வைகுண்ட ஏகாதசி தொடங்கிப் பத்து நாட்கள் நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஓதிப் பின்னர் இறுதி நாளில் நம்மாழ்வாருக்குப் பரமபதம் கொடுக்கும் காட்சியை நிகழ்த்திக் காட்டுகின்றனர். இதுவே வைணவக் கோயில்களின் வைகுண்ட ஏகாதசி சிறப்பாகும்.

பொதுவாய் வைணவக் கோயில்களிலேயே ஏகாதசிச் சிறப்பு எனச் சொல்லப் பட்டாலும், பாற்கடலில் அமுதம் கடைந்த போது தோன்றிய ஹாலாஹால விஷத்தை ஈசன் உண்டதும் இந்த ஏகாதசி தினத்தில் தான் என்பதால் சிவன் கோயில்களிலும் ஏகாதசி விசேஷம் தான். வைகுந்தத்தில் ஏழு பிரகாரங்கள் என்று சொல்லப் படுகின்றது. அது போலவே ஸ்ரீரங்கத்திலும் ஏழு பிரகாரங்கள் என்று சொல்கின்றனர். பல முறைகள் சென்றும் இதை எண்ணத் தோணலை எனக்கு! வைகுந்தத்தில் ஸ்வாமி அரவணையில் யோக நித்திரை கொண்டிருக்கும் இடத்தைச் சுற்றி மாலை போல் வ்ரஜா நதி ஓடுவதாய் ஐதீகம். இங்கேயோ காவிரி மாலைபோல் அரங்கனைச் சுற்றி ஓடுகின்றாள். அதனாலேயே பூலோக வைகுந்தம் என்ற பெயர் பெற்றுள்ளது ஸ்ரீரங்கம். ஸ்ரீரங்கம் கோயில் பற்றியும் எழுதணும்னு ஆசை! நிறைவேறுமா தெரியலை!


இந்த ப்ளாகருக்கும், நமக்கும் மீண்டும் உறவு சீர்கெட்டுப் போய்விட்டதால் நாளைக்கு எழுதி வெளியிடமுடியுமா, முடியாதானு சந்தேகம். அதனால் இந்தப் பதிவை ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறக்கும் நேரத்துக்கு வெளியிடுமாறு அட்டவணைப் படுத்தி உள்ளேன். சொர்க்கவாசல் திறக்கிறதைப் பார்க்க முழிச்சுட்டு இருக்கிறவங்க எல்லாரும் பாருங்க. sheduled=அட்டவணை என்ற அர்த்தம் வருமா? அது சரியா தப்பா?? யாருங்க அங்கே மொழிபெயர்ப்பு ஆலோசகர், உதவி தேவை! (உதை தேவைனு அடிச்சுட்டேன், நல்லவேளை உடனே பார்த்தேன்) என்ன ஆகுமோ தெரியாது. வந்தால் என்னோட அதிர்ஷ்டம், வரலைனா உங்களுக்கு அதிர்ஷ்டம் வழக்கம்போல! பிள்ளையாரப்பா, காப்பாத்து!

17 comments:

 1. \\பிள்ளையாரப்பா, காப்பாத்து! \\

  உங்க ஃபிரண்டு உங்களை காப்பாத்திட்டார் ;))

  எப்படி தான் எல்லாத்தையும் ஞாபகத்துல வச்சி எழுதுறிங்களோ!!!

  நன்றி ;)

  ReplyDelete
 2. //வேதப் பயிற்சி எடுக்கும் காலத்தை “அத்யயன காலம்” என்றும் ஓய்வு எடுக்கும் “அநத்யயன காலம்” என்றும் சொல்லப் படுகின்றது. இதை ஒட்டியே ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னால் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆதி வைகுண்ட ஏகாதசி அன்று வடமொழியில் வேதங்களைச் செவி மடுத்துப் பரமபத வாயில் திறப்பு விழா நடத்தி வந்ததாய் ஒரு கூற்று இருந்து வருகின்றது.//

  என்ன சொல்ல வறீங்க? புரியலை!

  ReplyDelete
 3. வாங்க கோபி, கரெக்டா வருமா, வராதானு சந்தேகமாவே இருந்தது. எப்போவும் ஷெட்யூல் பண்ணி வச்சாலும், சில சமயம் இந்த அமெரிக்க நேரம் வந்து தொல்லை கொடுக்கும். அதை இந்திய நேரத்துக்கு மாத்தி, எல்லாம் பண்ணினா, illegal time settingனு மிரட்டும் ப்ளாகர். எல்லாத்தையும் முறியடிச்சு இப்போக் கொஞ்ச மாசமா இந்திய நேரத்தையே கடைப்பிடிக்கணும்னு வச்சுருக்கேன். நன்றி.

  திவா, அப்படியா?? ம்ம்ம்ம்ம்???

  ReplyDelete
 4. //ஹாலாஹால விஷத்தை//

  'ஆலகால'ன்னு தான் கேள்விபட்ருக்கேன். :))

  @திவாண்ணா, இது மட்டும் தான் புரியலையா? :p

  ReplyDelete
 5. हालाहलम्= dangerous poison that came out when the ocean was churned for nectar

  @அம்பி, இது தான் அர்த்தம், மொக்கையே படிக்கிறவங்களுக்கு இது எப்படிப் புரியும்?? :P:P:P:P

  @திவாண்ணா, இது மட்டும் தான் புரியலையா? :p

  திவாண்ணா???க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
  அவருக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும், சும்ம்ம்மா எனக்குத் தெரியுமானு பரிட்சை கொடுக்கிறார்! :P:P:P:P

  ReplyDelete
 6. ஓ அம்பி இஸ் பேக்!
  ஒண்ணுமில்லை. அநத்தியயன காலத்துக்கும் கோவில்லே வேதம் சொல்கிறதுக்கும் சம்பந்தமில்லை. அதான் கேட்டேன்.

  ReplyDelete
 7. //எப்போவும் ஷெட்யூல் பண்ணி வச்சாலும், சில சமயம் இந்த அமெரிக்க நேரம் வந்து தொல்லை கொடுக்கும்.//

  gmail லே செட்டிங்க் சரி பண்ணுங்க.அப்புறம் ஒத்துக்கும்.

  ReplyDelete
 8. @திவா, இது நிஜமாவே அம்பிதான் பின்னூட்டம் கொடுத்தது. கணேசன் என்றால் ஹாலாஹாலம் அர்த்தம் தெரிஞ்சிருக்குமே? அம்பியோட சொந்தப் பின்னூட்டம் இது! :P:P:P:P

  அப்புறமா செட்டிங்கை எல்லாம் எப்போவோ மாத்தியாச்சு, அதான் கரெக்டா காலம்பர 3 மணியிலே இருந்து 5 மணிக்குள்ளே வராப்போல் மாத்தி இருக்கேனே, பாருங்க நேரத்தை! :))))))))

  ReplyDelete
 9. எப்படிம்மா இம்புட்டு விஷயம் தெரிஞ்சு வச்சிருக்கீங்க? அதோட மட்டுமில்லாம கோபி சொன்ன மாதிரி அத்தனையும் நினைவு வச்சு, நேரத்துக்குத் தகுந்த மாதிரி எழுதித் தள்ளிடறீங்க வேற :) மிக்க நன்றி.

  ReplyDelete
 10. வாங்க கவிநயா, இது எல்லாம் ஏற்கெனவே எழுதி ஷெட்யூல் பண்ணி வச்சது. அப்புறம் வழக்கமாச் செய்யும் ஒரு வேலையை மறக்கவும் முடியாதே! வருஷா வருஷம் வைகுண்ட ஏகாதசி வருது இல்லையா?? :))))) ஒரு காலத்திலே மதுரையிலே இந்த வைகுண்ட ஏகாதசி சமயம் நடக்கும் இராப் பத்து, பகல் பத்து உற்சவங்களில் கலந்து கொண்டுவிட்டே இரவு படுக்கப் போவோம். காலம்பர சீக்கிரமா எழுந்து பள்ளிக்கும் போயிருக்கோம். மதுரைமாநகர் பதிவிலே எழுதி இருக்கேன் பாருங்க! சின்ன வயசு நினைவுகள் மறக்கமுடியாதே! :))))))

  ரொம்ப நாளாக் காணோம்?? ரொம்பவே பிசியா இருந்தீங்க போல!

  ReplyDelete
 11. வணக்கம் கீதாம்மா!
  நல்ல பதிவு! விரைவிலேயே திருவரங்கம் பற்றி எழுத நினைக்கும் உங்கள் ஆசை நிறைவேறவும் வாழ்த்துக்கள்!

  அப்பவே படிச்சிட்டேன்! இப்ப தான் கமென்ட்டறேன்! :)

  ReplyDelete
 12. //நாதமுனிகளின் பேரன் ஆன ஆளவந்தார் காலத்தில் அவரின் ஐந்து சிஷ்யர்களில் ஒப்பற்ற சிஷ்யரும் வைணவத்திற்குப் புத்துயிர் ஊட்டியவரும் ஆன உடையவர் ஸ்ரீராமானுஜரோடு இணைந்து//

  ஆளவந்தார் காலத்தில் இராமானுசரோடு இணைந்தா? OMG! விட்டா புது சரித்திரம் படைச்சிருவீங்க போல இருக்கே! :)))))

  ஆளவந்தார் காலத்தில் இராமானுசர் அவர் அருகில் கூட இல்லை! ஆளவந்தார் பரமபதித்த போது தான், அவர் திருவுடலையே மிக அருகில் பார்க்க முடிந்தது உடையவரால்!

  //ஸ்ரீரங்கம் கோயிலில் இந்த “அத்யயன” உற்சவத்தை மீண்டும் முதன்மைப் படுத்தினர்//

  //“அநத்யயன காலம்” என்றும் சொல்லப் படுகின்றது. இதை ஒட்டியே ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னால் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆதி வைகுண்ட ஏகாதசி அன்று வடமொழியில் வேதங்களைச் செவி மடுத்துப் பரமபத வாயில் திறப்பு விழா நடத்தி வந்ததாய் ஒரு கூற்று இருந்து வருகின்றது.//

  தவறு! தவறு! தவறு!

  அதன் பேரே திருவாய்மொழித் திருநாள்!
  அதைத் தயவு பண்ணி....
  வடமொழி வேத அத்யயன உற்சவம்-ன்னு ஆக்காதீங்க! :)

  பகல் பத்து-வைகுண்ட ஏகாதசி-இராப் பத்து = இந்த 21 நாட்களில் தமிழ் வேதங்களுக்கே முதன்மை! அதையே அரங்கன் கேட்பான்! வட மொழி வேதங்கள் பிறகு தான்!

  திருமலையிலும் சுப்ரபாதம் நிறுத்தப்படும்! அதற்குப் பதிலாகத் திருப்பாவை ஓதப்படும்!
  திருப்பாவையைத் தினமுமே அங்கு ஓதினாலும், சுப்ரபாதத்தை நிறுத்தி வைத்து, அதற்குப் பதிலாக ஓதுவது என்பது மார்கழிச் சிறப்பு!

  ReplyDelete
 13. //இதற்குக் காரணம் இந்த நாளில் நம்மாழ்வார் வைகுண்டப் பதவியை அடைந்தார் என்பதே ஆகும்//

  தவறான தகவல் கீதாம்மா!
  இராப் பத்தின் இறுதி நாளில் தான் நம்மாழ்வார் மோட்சம்! வைகுண்ட ஏகாதசி அன்று இல்லை!
  திருவரங்கத்திலும் அப்படியே செய்து காட்டுப் படுகிறது!
  http://madhavipanthal.blogspot.com/2007/01/5.html

  வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாள் நம்மாழ்வாரை வாயிலுக்கு வந்து அழைத்துச் செல்வதற்காக வருகிறார்! அவ்வளவே! பெருமாளே அன்று வாசல் வழியாக வருவதால், அவருடன் ஒட்டிக் கொண்டு அடியவர்களும் நுழைந்து வர ஆர்வப்படுகிறார்கள்! நம்மாழ்வாருடன் வாயிலில் புக முனைகிறார்கள்!ஆனால் மோட்சம் அன்று அல்ல!

  ReplyDelete
 14. //திவா said...
  //வேதப் பயிற்சி எடுக்கும் காலத்தை “அத்யயன காலம்” என்றும் ஓய்வு எடுக்கும் “அநத்யயன காலம்” என்றும் சொல்லப் படுகின்றது. இதை ஒட்டியே ஆழ்வார்கள் காலத்துக்கு முன்னால் ஸ்ரீரங்கம் கோயிலில் ஆதி வைகுண்ட ஏகாதசி அன்று வடமொழியில் வேதங்களைச் செவி மடுத்துப் பரமபத வாயில் திறப்பு விழா நடத்தி வந்ததாய் ஒரு கூற்று இருந்து வருகின்றது.//

  என்ன சொல்ல வறீங்க? புரியலை!//

  ஹா ஹா ஹா! Geethamma in action :)
  //ஒரு கூற்று இருந்து வருகின்றது//,
  //அப்படின்னு சொல்றாங்க//
  = இப்படித் தான் முன்பு தில்லைப் பதிவுகளிலும் சொன்னீங்க! :)

  அன்+அத்யயன காலம், அத்யயன காலம் பற்றிய "சரியான" தகவல் இது தான்:

  அனத்யயன காலம் இல்லங்களுக்குத் தான்! அப்போது இல்லங்களில் எந்த வேதங்களும் ஓதப்பட மாட்டாது!

  அதற்கு மாறாக, தமிழ் வேதங்களான திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி மட்டுமே ஓதப்படும்! அவற்றுக்கு மட்டுமே விதிவிலக்கு! மற்ற அருளிச் செயல்களையும் கூட ஆலயங்களில் கூடி இருந்தே தான் ஓத வேண்டும்!

  தெரிந்தவர்கள் அனைவரும் ஆலயங்களில் வந்து, அடியார்களோடு சேர்ந்து நாலாயிரம் ஓத வேண்டும்! பொது இடத்தில் ஓதித் தெரியாதவர்க்கும் தமிழ் மறைகளைப் பரப்ப வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு!

  அனத்யயன காலத்தில், வடமொழி வேதங்கள் ஓதப்படவே மாட்டாது!
  ஆலயங்களிலும் தமிழ் அருளிச் செயல்களுக்கே முதன்மை! வேதங்கள் அல்லாத சூக்திகள் அப்புறம் தான்!

  கார்த்திகையில் கார்த்திகை தொடங்கி, தை ஹஸ்தம் வரை இந்த முறைப்பாடு அமலில் இருக்கும்!

  ReplyDelete
 15. அத்யயனம் என்றால் படித்தல்.
  அன்+அத்யயனம் =அனத்யயனம், அதாவது படிக்காது இருத்தல்.

  தமிழ் மறைகளைத் தவிர வேறு எதுவும் படிக்காது இருத்தல். (அந்தக் காலத்தில் வடமொழியில் சொன்னால் தானே, சிலர் வடமொழியையும் கொஞ்ச காலத்துக்கு நிறுத்தி வைப்பார்கள்! :-) அதனால் இப்படி ஒரு பெயர் கொடுத்தார்கள்!)

  பகல்பத்து, ராப்பத்து = இவை தமிழ்ச்சொத்து!
  மொத்தம் 21 நாட்கள்!

  முதல் நாள் திருமங்கை மன்னன் நினைவாக அவருடைய திருநெடுந்தாண்டகம் ஓதப்படும்! அதன் பின்னர், பகல்பத்து திருவிழா = வைகுந்த ஏகாதசிக்கு முன்னுள்ள பத்து நாட்கள்!

  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆழ்வார் பாசுரங்கள்! பகல் வேளையில் கோலாகலங்கள்!

  மொத்தம் 4000 திவ்யப் பிரபந்தங்கள் அல்லவா! நம்மாழ்வார் நீங்கலாக ஏனைய பதினோரு ஆழ்வார்களின் பாசுரங்களைப், பகல்பத்தில் பண்ணோடு இசைத்து ஓதுகிறார்கள்!
  தினமும் 200 பாசுரங்களாக மற்ற ஆழ்வார்களின் பாசுரங்கள் எல்லாம் இப்படி ஓதப்படுகின்றன.

  பகல்பத்தின் கடைசி நாளன்று, நம்பெருமாளின் மோகினித் திருக்கோலம்! அதன் பின்னர் தான் சொர்க்க வாசல் சேவை! ஏகாதசி அன்று விடியற்காலையில்!

  அன்றே ராப்பத்து திருவிழாவும் தொடங்குகிறது! = வைகுந்த ஏகாதசியும் சேர்த்து மொத்தம் பத்து நாட்கள்!

  இந்தப் பத்து நாளும் இரவு நேரக் கோலாகலங்கள்! நம்மாழ்வாரின் பாசுரங்கள் மட்டுமே பத்து நாட்களும் ஓதப்படுகிறது! நூறு நூறு பாசுரங்களாக பத்து நாட்கள் ஓதப்படுகின்றன.

  அதன் பின்னர் நம்மாழ்வார் மோட்சம்!

  இறுதி நாளில் நம்மாழ்வாரின் மற்றைய மூன்று பிரபந்தங்களும் இராமானுச நூற்றந்தாதியும் ஓதப்படுகின்றன.

  ReplyDelete
 16. இந்த விழாவை முதலில் துவக்கி வைத்தது திருமங்கை மன்னன் (கலியன்)!
  அதற்கு முன்னரே தமிழ் ஓதப்பட்டு தான் இருந்தது! ஆனால் பெரும் விழாவாக கொண்டாட்டம் எல்லாம் கிடையாது!

  அரங்கன் அனுமதி பெற்று, திருமங்கை மன்னன் தான், இவ்விழாவை ஒரு நாடகம் போல் நடத்திக் காட்டினார்!

  இதை உடையவர் ராமானுசர் இன்னும் முறைப்படுத்தி வைத்தார்! வெறுமனே பாசுரம் ஓதுவதோடு மட்டும் இல்லாமல், குப்பன், சுப்பன் இன்னும் எளியோரும் எல்லாரும் இதில் மனமொப்பி ஈடுபடுமாறு வழி வகை செய்தார்!
  http://madhavipanthal.blogspot.com/2007/01/2006-2007-4.html

  திருமங்கையாழ்வார் காலத்தில் அரங்கனின் திருவோலை ஆழ்வார் திருநகரிக்கு அனுப்பப்பட்டு அங்கே மதுரகவி ஆழ்வாரால் நிலைநிறுத்தப்பட்ட நம்மாழ்வாரின் திருமுன்பு அவ்வோலை படிக்கப்படும்.

  நம்மாழ்வார் அங்கிருந்து வந்து திருவரங்கத்தில் இத்திருவிழா முழுதும் அரங்கனுடன் வீற்றிருந்து பின் திரும்பிச் சென்று கொண்டிருந்தார்.

  ஆளவந்தாருக்குப் பிறகு.....
  இராமானுசர் காலத்தில் காலத்தின் கோலத்தால் நம்மாழ்வார் திருநகரியிலிருந்து வர சில நேரம் தாமதம் ஆனபடியால்...அந்த வழக்கத்தை மாற்றி திருவரங்கன் திருக்கோயிலிலேயே நம்மாழ்வாரை எழுந்தருளிவித்தார் இராமானுசர்.

  நம்மாழ்வாரும் அரங்கனுமாய் அமர்ந்து இவ்விழாவை நடத்தும்படி செய்தார். அப்போதிலிருந்து அரங்கனின் திருவோலை திருவரங்கத்தில் இருக்கும் நம்மாழ்வார் திருமுன்பே படிக்கப் பட்டு திருவிழா தொடங்குகிறது.

  ReplyDelete
 17. //ஸ்ரீரங்கம் கோயில் பற்றியும் எழுதணும்னு ஆசை! நிறைவேறுமா தெரியலை!//

  நிறைவேறட்டும்! ததாஸ்து! ஆமென்!
  ஆனால் முடித்த பின்னர், ஓரிருவரிடம் கொடுத்து, முழுத் தகவல்களையும் சரி பார்த்துக் கொண்டு, பிறகே வெளியிடுமாறு விண்ணப்பிக்கிறேன்! கேட்டுக் கொள்கிறேன்!

  ReplyDelete