எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, April 29, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்


இந்தக் கண்ணன் வந்தான் தொடர் பற்றி எழுதும்போது அதனுடன் தொடர்புள்ளவையாகச் சில நிகழ்வுகள் நடப்பதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. ஏற்கெனவே தொலைக்காட்சி ஒன்றில் மஹாபாரதத் தொடரில் ஸ்ரீகிருஷ்ணர் சரித்திரம் காட்டும்போது, முன்ஷி அவர்களின் இந்த கிருஷ்ணா தொடரை அடிப்படையாக வைத்தே எடுக்கப் பட்டிருக்கிறதை பரோடாவில் இருந்தபோது காண நேர்ந்தது. ராதையுடன் கண்ணன் சம்பந்தப் பட்ட இடங்களும், கோகுலத்தில் இருந்து பிருந்தாவனம் மாறுவது, அங்கிருந்து மதுரா செல்வது, கண்ணன் கம்சன் வதம் செய்யும் நிகழ்வுகளும், என அனைத்துமே முன்ஷிஜியின் இந்தக் கிருஷ்ணாவதாரம் புத்தகக் கதையின் அடிப்படையிலேயே எடுக்கப் பட்டிருந்தன. இப்போது தமிழ்த் தொலைக்காட்சியிலும் ஸ்ரீகிருஷ்ணா தொடர், இதுவும் ஹிந்தியில் இருந்து மொழிமாற்றம் செய்யப் பட்டதே என்றாலும் கொஞ்சம் விட்டலாசாரியாவின் பாணியில் ஆன அதிசய நிகழ்வுகளோடு காட்டப் படுகின்றது.

இது தவிர தொலைக்காட்சிகளில் வரும் ஆன்மீக நிகழ்வுகளிலும் கேட்க முடிகின்றது. எல்லாவற்றுக்கும் மேலே சென்ற வாரம் கல்கி பத்திரிகையில் வ்ரஜபாஷை பற்றியும், செளராஷ்டிரர் பற்றியும் ஆய்வு செய்த திரு கே.ஆர்.சேதுராமன் என்பவர் எழுதிய தமிழ்நாட்டில் செளராஷ்டிரர்: முழு வரலாறு என்னும் புத்தகத்தின் விமரிசனத்தில், அநேகம் வரலாற்றுக் குறிப்புகளும், கஜினி காலத்தில் சோம்நாத்திற்கு ஏற்பட்ட அழிவில் இருந்து செளராஷ்டிரர் இடம் பெயர நேரிட்டதையும், பல்வேறு இடங்களில் குடியேறியதையும், நெசவுத்திறனையும், போர்க்கலையின் வல்லமை பற்றியும், பக்தி பற்றியும், மன்னர்களால் செளராஷ்டிரர் இனமே போற்றிக் கெளரவிக்கப் ப்பட்டு வந்ததையும், இன்னும் அதிகமாய் அவர்கள் மொழி தான் வ்ரஜ பாஷை எனவும், ஸ்ரீகிருஷ்ணர் பேசியதும் இந்த வ்ரஜ பாஷை என்றும் சொல்லப் பட்டிருக்கிறது எனப் படித்தேன். செளராஷ்டிர மொழி தான் விரஜ பாஷை என்றும், ஸ்ரீகிருஷ்ணரும் அதே பேசினார் என்றும் அறிய நேரிட்டால் நம் கூடல் குமரனுக்கும், சிவமுருகனுக்கும் ரொம்பவே சந்தோஷமாய் இருக்கும். அல்லது அவங்களுக்கு ஏற்கெனவேயே இது தெரிந்திருக்கலாம். ஆனால் மதுரையில் செளராஷ்டிரா கிருஷ்ணன் கோயில் என்ற ஒன்று உண்டு. இப்போ என்னோட சந்தேகம், மதனகோபால ஸ்வாமி கோயிலும், இதுவும் ஒண்ணா, வேறே, வேறேயானு. ரொம்ப வருஷமாச்சா அந்தப் பக்கமே போய், சரியா நினைவில்லை. ஆதாரபூர்வமாய்ப் பல வரலாற்றுக் குறிப்புகள் இந்தப் புத்தகத்தில் நிரூபிக்கப் பட்டிருக்கிறதாய் விமரிசனம் சொல்லுகின்றது. ஏற்கெனவே இரு பதிப்புகள் விற்றுப் போய் மூன்றாம் பதிப்பு வந்திருக்கும்போது விமரிசனமும் வந்திருக்கு. நான் இப்போத் தான் பார்க்கிறேன். படிக்கணும், புத்தகம் கிடைச்சால்.
********************************************************************************************
கண்ணனைச் சற்று ராதையைப் பற்றி நினைக்கத் தனிமையில் விடுவோமா?? தீர்த்த யாத்திரைக்குச் சென்ற அவனைப் பெற்ற பெற்றோர்களின் நிலையைப் பற்றிக் கொஞ்சம் அறியலாமா? கிட்டத் தட்ட ஐந்து வருஷங்கள் ஆகிவிட்டன வசுதேவரும், தேவகியும் தீர்த்த யாத்திரையை ஆரம்பித்து. இந்தக் கால கட்டத்தில் இவர்கள் இருவரும் மேற்கே செளராஷ்டிரத்தில் சூரியனின் நிரந்தர வாசஸ்தலமாய்க் கருதப் படும் பிரபாஸ க்ஷேத்திரத்தில் இருந்து, புனித கங்கையில் நீராடி வாரணாசி என்னும் காசி க்ஷேத்திரத்தில் தரிசனம் செய்து கொண்டு பலவேறு இடங்களிலும் கங்கைக்கரையில் சென்று தரிசித்துவிட்டுக் கடைசியாக மகா புண்ய க்ஷேத்திரம் எனப்படும் பதரிகாசிரமம் செல்லும் வழியில் நவரத்தினங்களும் கிடைக்கும், இமயமலைப் பகுதியையும் தரிசித்தனர். இரவில் கீதம் இசைக்கும் அலக்நந்தா நதிக்கரையிலும் தங்கிக் கொண்டு அங்கே, ஒரு ஆசிரமத்தில் தன் இரு மனைவியருடனும் இருந்த அஸ்தினாபுரத்து அரசன் ஆன பாண்டுவையும், அவன் மனைவியும், வசுதேவரின் சொந்த சகோதரியும் ஆன குந்தியையும், பாண்டுவின் மற்றொரு மனைவி ஆன மாத்ரியையும் சென்று பார்த்தார்கள்.

வழியில் பூக்களின் சொர்க்கமாய்த் திகழும் இமயப் பகுதியையும் கண்டு பூக்களின் ஆனந்தத்தையும், நறுமணத்தையும் ஒருசேர அனுபவித்து எந்தக் கவிஞனாலும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு செளந்தரியத்துடன் விளங்கும் அந்தப் பகுதியைக் கண்டு ரசித்தனர். மெதுவாய் பதரிகாசிரமம் அடைந்த வசுதேவரும், தேவகியும் அங்கே ஆசிரமங்களில் தங்கி இருந்த ரிஷி, முனிவர்களின் ஒழுக்கத்தையும், கட்டுப்பாடான தவ வாழ்க்கையையும் கண்டு வியந்த வண்ணம் வியாசர் வசித்த குகைக்குச் சென்று அவரைத் தரிசிக்க எண்ணினார்கள். ஆனால் க்ருஷ்ண த்வைபாயனார் என அழைக்கப் படும் வியாசரோ அப்போது அங்கில்லை. குருக்ஷேத்திரம் சென்றிருந்தார். என்ன காரணமோ தெரியவில்லை. கொஞ்சம் ஏமாற்றமடைந்த இருவரும் அங்கேயே தப்த குண்டத்தில் புனித நீராடிவிட்டு பத்ரிநாதரைத் தரிசனம் செய்தனர். அங்கே நர, நாராயண ரூபங்களாய் இருந்த இரு மலை வடிவங்களையும் தரிசனம் செய்து கொண்டனர். அப்போது திடீரென அவர்களுக்கு ஒரு துக்கச் செய்தி கிடைத்தது. வசுதேவரின் சகோதரியான குந்தியின் கணவர் ஆன மஹாராஜா பாண்டு இறந்துவிட்டதாயும், மாத்ரி அவனுடன் உடன் கட்டை ஏறிவிட்டதாயும், குந்தி ஐந்து குழந்தைகளையும் தனியே வைத்துக் கொண்டு துக்கத்தில் ஆழ்ந்திருப்பதாயும் செய்தி வந்து சேர்ந்தது.

2 comments:

  1. மதனகோபால சுவாமி கோவிலும் தெற்கு/சௌராஷ்ட்ர கிருஷ்ணன் கோவிலும் வெவ்வேறு கீதாம்மா. மதனகோபால சுவாமி கோவில் மேல மாசிவீதியில் கூடலழகர் கோவிலுக்கும் இம்மையில் நன்மை தருவார் கோவிலுக்கும் நடுவில் இருக்கின்றது. தெற்கு மாசிவீதியிலிருந்து பிரியும் ஒரு தெரு தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு. அந்தத் தெருவில் தான் தெற்கு/சௌராஷ்ட்ர கிருஷ்ணன் கோவில் இருக்கிறது. நான் பிறந்து வளர்ந்தது இந்த தெருவில் தான். வேலையில் சேர்ந்து சென்னை வரும் வரையில் தினமும் மாலை/இரவு இந்தக் கிருஷ்ணன் கோவில் பிரசன்ன வேங்கடேஸ்வரப் பெருமாளின் திருவோலக்கத்தில் தான் பொழுதைக் கழித்தேன். இவருக்கு நாள்தோறும் உற்சவ நாளே; வருடத்தில் எல்லா நாளும் கட்டளைதாரர்களால் பெருமாள் புறப்பாடு இருக்கும்.

    திரு. கே.ஆர். சேதுராமன் ஐயா எழுதிய நூலை இன்னும் படிக்கவில்லை. அடுத்த முறை தமிழகம் வரும் போது வாங்க வேண்டிய நூல்கள் பட்டியலில் இதுவும் இருக்கிறது.

    துவாரகை சௌராஷ்ட்ர பிரதேசத்தில் இருக்கிறது; சோமநாதமும். கண்ணன் துவாரகையை ஆண்ட போது அந்த பிரதேசத்தில் சௌரசேனி என்ற பிராகிருத மொழி பேசப்பட்டதாக பாகவதத்திலும் மற்ற நூல்களிலும் படித்த நினைவு. சௌரசேனியின் வழி வந்ததே சௌராஷ்ட்ரம் என்பது மொழி ஆய்வாளர்கள் சொல்வது. அதனால் 1 + 1 = 2 போல் கண்ணன் பேசிய மொழி சௌராஷ்ட்ரம் என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். எனக்கு அதில் இன்னும் முழு ஏற்பு இல்லை.

    விரஜம் என்பது யமுனைக்கரையில் இருப்பது என்று நினைக்கிறேன். அங்கே பேசப்பட்ட மொழி விரஜபாஷை. அங்கே கண்ணன் வளர்ந்ததால் அந்த மொழியை கண்ணன் பேசியிருக்க வாய்ப்புண்டு. மதுராவிலிருந்து துவாரகைக்குச் சென்ற பின்னரும் அதே மொழியைப் பேசியிருக்க வாய்ப்புண்டு; சௌரசேனி பேசியிருக்கவும் வாய்ப்புண்டு. சௌரசேனி பேசியிருந்தால் அதன் வழி வந்த சௌராஷ்ட்ர மொழி பேசுபவர்கள் கண்ணன் எங்கள் மொழி தான் பேசினான் என்று கொண்டாட உரிமை உண்டு. ஆனால் கண்ணன் சௌரசேனி தான் பேசினான் என்பதற்கு தரவை இனி மேல் தான் நான் பார்க்க வேண்டும். திரு. கே. ஆர். சேதுராமன் அவரது நூலில் அந்தத் தரவைத் தந்திருக்கலாம்.

    இது எனக்கும் சிவமுருகனுக்கும் ரொம்ப நல்லாவே தெரியும். சிவமுருகன் இதில் மிக உறுதியாக இருக்கிறார் என்பதும் தெரியும்.

    ReplyDelete