எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, April 02, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான்!

நவநீத சோரன் யசோதைக்குத் தன் இடுப்பைக் காட்டி நின்றான் கட்டுவதற்கு. யசோதை எவ்வளவு முயன்றும் இரண்டு அங்குலக் கயிறு குறைவாகவே இருந்தது. மேலும், மேலும், மேலும் எனக் கயிற்றைச் சேர்த்துக் கொண்டே போனாள் யசோதை. கண்ணனோ கட்டுப் படுவதாயில்லை. அவனைப் பார்த்தாலோ விஷயம் ஏதும் அறியாத அப்பாவியாகவே நின்றிருந்தான். இது என்ன இப்படி ஒரு சோதனை என நினைத்த யசோதை, அயர்ந்து போய் உட்கார நினைத்த சமயம் திடீரெனக் கண்ணன் கட்டுக்கு அடங்கினான். கண்ணனைக் கட்டிவிட்டு யசோதை உள்ளே சென்றுவிட்டாள். திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. அம்மாவுக்குக் கோபம், கண்ணன் நினைத்தான். “சரி, அம்மாவுக்குக் கோபம்னா எனக்கும் தான் கோபம்! அவளே புரிஞ்சுக்கட்டும், என் கோபத்தை, அப்புறமாய் ஏன் கோவிச்சோம்னு நினைப்பாள்.” எனக் கண்ணன் நினைத்தான்.

ம்ம்ம்ம் இப்போ ஏதானும் செய்யணுமே! செய்தால் தான் அம்மாவின் கோபத்தில் இருந்து அவளைத் திருப்ப முடியும். என்ன செய்யலாம்? யசோதையின் கனையா எழுந்திருக்க முயன்றான். அவன் கைகளும், பாதங்களும் உரலுடன் சேர்த்துக் கட்டப் பட்டிருந்தது. அவன் எழுந்திருக்க முயன்றபோது உரலும் சேர்ந்தே வந்தது. அவனால் நகரமுடியுமா எனச் சந்தேகமாய் இருந்தது. ம்ம்ம்ம்ம்??? என்ன பண்ணினால் இதில் இருந்து தப்ப முடியும்?? கை, கால்களை அசைத்துப் பார்த்தான் கண்ணன், கயிறு ஏதோ கொஞ்சம் நழுவினாப் போல் தெரிஞ்சது. ஆனால் ம்ஹும் இல்லையே, கயிறு நழுவலை. கயிற்றின் நீளம் தான் இப்போ தெரியும்படி இருக்கிறது. மெல்ல மெல்ல கண்ணன் நகர முயல, ஆஹா, இது என்ன? கண்ணனோடு சேர்ந்து உரலும் நகர ஆரம்பிச்சிருக்கே? ஆனால் கொஞ்சம் வேகம், ம்ம்ம்ம்ம்ஹும், வேகமாய் முடியலை, ஆனால் நான் நகர்ந்தால் உரலும் நகருகிறதே!

தொடர் சங்கிலிகைசலார்பிலாரென்னத் தூங்குபொன்மணியொலிப்ப
படுமும்மதப்புனல்சோர வாரணம்பையநின்றுஊர்வதுபோல்
உடங்கூடிக்கிண்கிணியாரவாரிப்ப உடைமணிபறைகறங்க
தடந்தாளிணைகொண்டுசாரங்கபாணி தளர்நடைநடவானோ

சத்தமே இல்லாமல், மெல்ல, மெல்ல கண்ணன் உரலுடன் நகர ஆரம்பித்தான். அம்மா என்னத்தைக் கண்டாள்? நினைத்துக் கூடப் பார்க்க மாட்டாள் தான் இவ்வாறு உரலுடன் சேர்ந்து நகருவோம் என. மெல்ல, மெல்ல முற்றம் சென்று அங்கே இருந்து தலை வாசலுக்குச் சென்று கண்ணன் இப்போது தெருவுக்கே வந்துவிட்டான். இதோ, காட்டிற்குச் செல்லும் பாதை தெரிகின்றது. கண்ணன் நினைத்தான், இந்த உரலோடு காட்டுக்குச் சென்று நண்பர்களை எல்லாம் பார்த்தால் எப்படி இருக்கும்? ஒரே வேடிக்கையாக இருக்குமே! அவங்க கிட்டே இவ்வளவு தூரம் உரலை இழுத்துக் கொண்டு வந்தது பத்திக் காட்டலாமே! கண்ணன் மேலும் நகர ஆரம்பித்தான். நகரும்போதே யோசனை, உரல் இத்தனை கனமாய் இருக்கே, ரொம்பவே வியர்க்கவும் செய்கின்றதே, ஆனால், இப்போ இப்படிப் போய்த் தான் ஆகணும், அம்மாவோ கோபமா இருக்காள், நம்மைக் காணலைனால் தேடுவாள் இல்லையா? அப்போ வந்தால் போதுமே! கண்ணன் மேலே நகர ஆரம்பித்தான்.

ரொம்பக் களைப்பாய் இருந்தாலும் பொறுத்துக் கொண்டு காட்டுப் பாதைக்கு வந்துவிட்டான் கண்ணன். கொஞ்ச நேரம் ஓய்வு எடுத்துக்க எண்ணி, அந்த உரல் மேலேயே உட்கார்ந்தான் கண்ணன்.
பொத்தவுரலைக்கவிழ்த்து அதன்மேலேறி
தித்தித்தபாலும் தடாவினில்வெண்ணெயும்
மெத்தத்திருவயிறார விழுங்கிய
அத்தன்வந்துஎன்னைப்புறம்புல்குவான்
ஆழியான்என்னைப்புறம்புல்குவான். 7.

ஆனால் தாகமாயும் இருக்கு. தண்ணீர் எங்கே கிடைக்கும்? சுற்றுமுற்றும் பார்க்கின்றான் நீலமேக சியாமளன். அவன் கண்களில் தண்ணீரே படவில்லை எங்கும். கோகுலத்துப் பெண்கள் நதியில் இருந்து நீர் மொண்டு கொண்டு செல்லும்போது பார்த்தாலும் கொடுப்பார்கள். ஆனால் இப்போ மதிய வேளையாயிடுத்தே! எல்லாப் பெண்களுக்கும் அவங்க அவங்க வீட்டு வேலையே மும்முரமாய் இருக்குமே. எத்தனை நேரம் இங்கேயே உட்கார்ந்திருக்கிறது? கண்ணனுக்கு காத்திருப்பதில் பொறுமை இல்லை. வீட்டுக்கு உடனே போயிடலாமா என யோசிக்க ஆரம்பித்தான். அப்போது அவன் கண்களில் தெரு ஓரத்தில் பக்கம் பக்கமாய் வளர்ந்திருந்த இரு மரங்கள் பட்டன. அந்த மரங்களை “யமால்” (இரட்டையர் என்ற அர்த்தத்தில்) என்றும், “அர்ஜுன்” எனவும் அழைப்பார்கள். (மருத மரங்களை வடமொழியில் அர்ஜுன் எனச் சொல்லுவதுண்டு.)

ஒரு நிமிடம் யோசிக்கின்றான் நம் கண்ணன் அந்த மரங்களைப் பார்த்து. “ஆஹா, இதோ ஒரு உபாயம்! நாம இப்போ அந்த மரங்களுக்கு இடையே இருக்கும் சின்ன இடைவெளியில் போய்ப் புகுந்து அந்தப் பக்கமாய்க் குதித்தோமானால் தீர்ந்தது. உரல் இந்தப் பக்கம் மாட்டிக் கொண்டு, நடுவில் பிணைத்திருக்கும் கயிறு துண்டாகிவிடும். நாம் அந்தப் பக்கம் போய்விடுவோம். கயிற்றுப் பிணைப்பில் இருந்து விடுபட்டு சுதந்திரம் ஆயிடுவோம்.” என நினைத்தான். நினைப்பதும், நினைப்பதைச் செயலாற்றுவதற்கும் நம் கண்ணனுக்குச் சொல்லியா தரவேண்டும்? இதோ, கண்ணன் போய்விட்டான் அந்த மரங்களுக்கிடையில். கண்ணன் எப்படியோ மரங்களின் இடைவெளியில் புகுந்து அந்தப் பக்கம் போய்விட்டான். உரல் மறுபக்கம் தான் இருக்கிறது. ஆனால் கயிறு அறுந்து கண்ணனை விடுவிக்கவில்லையே? கண்ணன் பல்லைக் கடித்துக் கொண்டு, இரு கைமுஷ்டிகளையும் மூடிக் கொண்டு தன் சிறு உடம்பால் பலம் கொண்ட வரைக்கும் இறுக்கி இழுக்கின்றான் கயிற்றை. பல்லைக் கடித்துக் கொண்டு மீண்டும், மீண்டும் முயலக் கயிறு அறுந்து போகவில்லை. ஆனால் பெரும் சப்தம்! என்ன இது? ஆஹா, இந்த மரங்கள் அல்லவா விழுந்துவிட்டன? கண்ணன் செய்வதறியாது திகைத்தான். வெறுப்பும், கோபமும் மேலோங்கின. தான் விடுதலையாவோம் என எண்ணி இருக்க மரங்கள் அல்லவோ கீழே விழுந்தன. வேறே வழியே இல்லை. யாரானும் வரவரைக்கும் காத்திருக்க வேண்டியது தான். கண்ணனுக்கு அழுகை வரும்போல் இருந்தது. அழுகையை அடக்கவும் முடியாது போல் இருந்தது. ஆனால் கூடவே இன்னொரு எண்ணம். எதுக்கு அழணும்? நாம்தான் இவ்வளவு பெரிய மரங்களைக் கீழே தள்ளிட்டோமே? எவ்வளவு பலசாலி நாம? அழுதால் சிரிப்பாங்க எல்லாரும். ஆனால் உடம்பெல்லாம் காயம் என்னமோ பட்டிருக்கு. அம்மா கிட்டே போகணும் போல் இருக்கு. பரவாயில்லை, யாரானும் வரவரைக்கும் காத்திருப்போம். அம்மா, அம்மா, யாரானும் சீக்கிரம் வரக் கூடாதா?

டிஸ்கி: இந்த மருத மரங்களுக்கிடையே கண்ணன் புகுந்து வருவதை தர்க்க ரீதியாக யோசித்து முன்ஷிஜி தன்னுடைய பார்வையிலே எழுதி இருப்பதையே இங்கே குறிப்பிட்டுள்ளேன். ஏனெனில் ஒரு குழந்தையால் இப்படி எல்லாம் முடியுமா என்ற கேள்விகள் எழுவதையும், முடியும் என்பதையும், எப்படி முடிந்தது என்பதையும் நன்கு ஆராய்ந்து அவர் குறிப்பிட்டிருக்கின்றார் பல விஷயங்களிலும் என்பதையும் காண முடிகின்றது. பல சமயங்களில் கண்ணனுடைய அந்தக் குழந்தைப் பருவத்துக்கே போய் அவரே கண்ணக் குழந்தையாக இருந்து அனுபவித்துப் புரிந்து கொண்டிருக்கின்றார். இந்த மருத மரங்களையும், அவை பற்றிய தொகுப்பையும் பாகவதத்தில் குறிப்பிட்டிருக்கும்படி நாளை காணலாம்.

பாசுரங்கள் பொதுவான அர்த்தத்தையே குறிக்கின்றன. இந்த நிகழ்ச்சியைக் குறிப்பன அல்ல.

9 comments:

 1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் நாலு நாள் கழிச்சு வந்து தமிழ்மணத்திலே சேர்க்கப் போனால் மறுபடியும் விரட்ட ஆரம்பிச்சிருக்கு! நறநறநறநற!

  ReplyDelete
 2. ரொம்பக் கோபமா இருக்கீங்க போல, நான் அப்பாலே வாரேன்

  ReplyDelete
 3. :))))) இப்போக் கொடுத்தப்போ தமிழ்மணத்துக்குப் போயிடுத்து, அதனாலே வந்து சொல்லிட்டே போங்க கிருஷ்ணமூர்த்தி சார்! :)))))))

  ReplyDelete
 4. //நான் நகர்ந்தால் உரலும் நகருகிறதே!//
  மத்தவங்க எழுதற url இல்லையே இது?
  :-))
  முன்ஷி கற்பனை அருமை!

  ReplyDelete
 5. //மத்தவங்க எழுதற url இல்லையே இது?
  :-))//
  :)))))))))))))

  ReplyDelete
 6. உலவு, நன்றி.

  ReplyDelete
 7. \\ “சரி, அம்மாவுக்குக் கோபம்னா எனக்கும் தான் கோபம்! அவளே புரிஞ்சுக்கட்டும், \\

  ஆகா..சூப்பரு ;) நாமளும் அப்படி தான் ;)

  ReplyDelete
 8. குட்டிக் கண்ணனுக்கு கட்டி முத்தங்கள் :)

  ReplyDelete
 9. கோபி, நீங்களும் அப்படித் தானா?? சரிதான்! :))))))))

  கவிநயா, நன்றிம்மா!

  ReplyDelete