எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 11, 2009

நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே!


நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே!
உனக்கு நச்சுப் பையை வைத்தது யார் சொல்லு பாம்பே!

ஆடு பாம்பே! விளையாடு பாம்பே!
நின்றாடு பாம்பே! குதித்தாடு பாம்பே!
எழுந்தாடு பாம்பே!

நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே!

குற்றமற்ற சிவனுக்குக் குண்டலமானாய்
கூறு திருமாலுக்குக் குடையுமானாய்
கற்றை குழல் பார்வதிக்குக் கங்கணமானாய்
கரவாமல் உள்ளங்களித்தாடு பாம்பே!

ஆடு பாம்பே! நின்றாடு பாம்பே! விளையாடு பாம்பே!
குதித்தாடு பாம்பே! எழுந்தாடு பாம்பே!

சின்ன வயசிலே கிட்டத்தட்ட பதினாறு, பதினேழு வயசு வரைக்கும் பாம்பைப் பாம்பாட்டிகிட்டே பார்த்தது தான். மதுரையில் அப்படி ஒண்ணும் வீடுகளுக்குள் எல்லாம் பாம்பு வந்தது இல்லை. ஆனால் அண்ணா முதலில் வேலைக்குச் சேர்ந்த ஹோசூருக்குப் போனபோது, அங்கே பாம்பு சர்வ சகஜமாய் நடமாடிக் கொண்டிருந்தது ஒரு அதிசயமா இருந்தது. கொல்லையில்(வீட்டில் இருந்து கிட்டத்தட்ட அரை பர்லாங்காவது இருக்கும்) இருந்த கழிப்பறையில், குளியலறையில் பாம்பும் பக்கத்திலேயே வந்து உட்காரும். அந்த அளவுக்கு நண்பர்களாக இருந்தது. அதனால் திருமணம் ஆகி வந்து மாமனார் வீட்டுத் தோட்டத்தில் உள்ள கிணற்றில் பெரீஈஈஈஈஈஈஈஈஈஈஈய நல்ல பாம்பை வெகு சாதாரணமாகவே பார்த்தேன். அதுக்கப்புறமும் நாங்க இருந்த ராஜஸ்தான், குஜராத்தில் இருந்த அலுவலகக் குடியிருப்புகளில் எங்களோடு பாம்புகளும் குடி இருந்தன.

அடிக்கடி வீட்டுக்குள் வரதும், நாங்க விரட்டறதுமாவே இருக்கும். ஒரு தரம், ராணுவ வீரர் ஒருவரை விரட்டக் கூப்பிட்டதில் அவர் பாம்பை அடிச்சுக் கொன்னுட்டார். அதுக்கப்புறமா நாங்க யாரையுமே கூப்பிடாமல் நாங்களே விரட்டிடுவோம். குஜராத் ஜாம்நகரிலோ கேட்கவே வேண்டாம். தினம் காலை நிலையில் மொத்த நீளத்துக்கும் ஆக்கிரமித்துக் கொண்டு படுத்துக்கும். ராணுவக் குடியிருப்பு நிலைக்கதவுகள் எல்லாம் ஏழடிக்கும் மேல் உயரமும், நாலடிக்கும் மேல் அகலமும் உள்ள நிலைகள். எல்லாம் ஆங்கிலேயர் காலத்துக் கட்டிடம். தினமும் அந்தப் பாம்பை விரட்டினப்புறம் தான் வாசலே தெளிக்க முடியும். படுக்கையில் பக்கத்தில் ஒரு நீளக் கம்பை வச்சுண்டு தான் படுத்துப்பேன். எழுந்ததும் அந்தக் கம்பைத் தட்டி ஓசைப் படுத்தினால், பாம்பு வேக வேகமாய் குளிர்சாதனப் பெட்டியைப் பாக்கிங் செய்யும் க்ரேட்டில் போய் ஒளிஞ்சுக்கும். அதுக்குள்ளே நிறைய பாக்கிங் சாமான்கள் இருந்ததால் கண்டு பிடிக்கிறது கஷ்டம். விட்டுடுவோம். ஆனால் எந்த நேரம் வெளியே வருமோனு கொஞ்சம் திக் திக் தான்.

குழந்தைகள் இருவரும் படுக்கும் அறையில் ஜன்னல் கம்பி எல்லாம் போயிருந்தது. அதுவழியாவும் சில சமயம் வரப் பார்க்கும். இங்கே அம்பத்தூரிலே நாங்க வீடு கட்டி இருக்கும் இடத்திலே கேட்கவே வேண்டாம். எங்க வீட்டுக் கிணற்றடிக்குச் சில அடிகள் தள்ளி ஒரு பெரிய புற்றே இருந்தது. பின்னாலே வீடு கட்டினவங்க அந்தப் புற்றை இடிச்சுட்டுக் கட்டி இருக்காங்க போல. இப்போ பாம்புக்குக் குடி இருக்க இடமே இல்லை. அலைஞ்சுட்டு இருக்குதுங்க. அநேகமாய்த் தினம் ஒரு முறையாவது தோட்டத்தில் கட்டுவிரியனோ, சாரையோ, வழலையோ தரிசனம் கொடுக்கும். ஒருமுறை கொம்பேறி மூக்கன் வந்து அதைக் கொல்லத் தான் கொல்லணும்னு சொல்லிட்டுக் கொன்னுட்டாங்க. கொல்லாமல் விட்டால் திரும்பவும் வந்து பழிவாங்குமாம். பச்சைப் பாம்புகளோ கேட்கவே வேண்டாம். வாழை இலை பறிக்கப் போறச்சே சில சமயம் தலைகீழாத் தொங்கினால் வாழை இலைனே நினைப்போம். கண்ணு தெரிஞ்சா பிழைச்சோம். இல்லாட்டி நம்ம கண்ணு அவ்வளவு தான்!

இத்தனையும் எதுக்குச் சொல்றேன்னா, கொஞ்ச நாட்களாகவே உள்ளே வருவேன்னு அடம் பிடிச்சுட்டு இருந்த ஒரு கட்டுவிரியன் இன்னிக்கு உள்ளே வந்திருக்கு. குளியலறை வாசலில் வாஷிங் மெஷின் போட்டு பொண்ணு துணிகளைப் போட்டிருந்தா. நான் உள்ளே கிரண்டரில் மாவு அரைக்கிறதும், சமையலையும் ஒரே சமயத்தில் பண்ணிட்டிருந்தேன். ஏதோ வேலையாகக் கொல்லைப்பக்கம் வேலை செய்யற பொண்ணு வரதுக்காகக் கட்டி இருந்த செர்வீஸ் ஏரியாவுக்குப் போனேன். போகும்போது பாம்பைத் தாண்டிட்டுப் போயிருக்கேன். எனக்கே தெரியலை. திரும்ப உள்ளே வரதுக்காக வந்தால் கொல்லை நிலைக்கு முன்னால் உள்ளே பாத்ரூமுக்கு எதிரே நெளிஞ்சுட்டு உள்ளே போக முயற்சி செய்துட்டு இருந்ததும், பாம்பு, பாம்புனு ஒரே கத்துக் கத்தினேன். என்னோட ம.பா. உள்ளே ஜபம் செய்துட்டு இருந்தார் போல. காதிலேயே விழலை அவருக்கு. அப்புறம் பொண்ணை விட்டுக் கூப்பிடச் சொன்னா, அவ பாம்பா, கயிறானு கேட்டுட்டு சாவகாசமா இருக்கா!

அதுக்குள்ளே பாம்பு நான் கத்தின கத்தல்லே பயந்து போய் பாத்ரூமுக்குள்ளே போயிடுச்சு. அங்கே போய்க் குழாயின் மேல் சுத்திக் கொண்டு விட்டது. அதுக்குள்ளே என் கணவரும் கம்பை எடுத்துக் கொண்டு வந்தார். என் பங்குக்கு நானும் ஒரு கம்பை எடுத்து வச்சுக் கொண்டேன். குழந்தைகளை அழைத்துக் கொண்டு படுக்கை அறையில் பொண்ணை இருக்கச் சொன்னால் அவளுக்கு வேடிக்கை பார்க்கும் ஆர்வம்! அதுக்குள்ளே ஒரு தொலைபேசி அழைப்பு. யார்னே தெரியலை. லூசிலே விட்டாச்சு. வாசல்லே அப்போதான் வேலை செய்யற பொண்ணோட அம்மா! அவசரமாப் பார்க்கணும்னு கூப்பிட்டுட்டு இருந்தா. மூன்று நாட்களா அம்மாவும், பொண்ணும் மட்டம் போட்டுட்டு வராமல் இன்னிக்கு நல்ல நேரம் பார்த்திருக்காங்க, பாம்பையும் கூட்டிட்டுனு நினைச்சு, பாம்பு வந்திருக்கிறதாலே அதை எண்டர்டெயின் பண்ணிட்டுத் தான் வருவேன்னு சொல்லி அனுப்பிச்சாச்சு. பொண்ணையும் வலுக்கட்டாயமாய் உள்ளே தள்ளிட்டோம். அதுக்குள்ளே இந்தக் கலவரத்தாலே இன்னும் பயந்த பாம்பு பாத்ரூம் கதவிடுக்கில் போய் ஒளிஞ்சுட்டு சுத்தி வளையமாப் படுத்துக் கொண்டு விட்டது.

நான் பாத்ரூமுக்குள்ளே போய் அதை உசுப்பிவிடறேன்னு சொன்னால் என் கணவர் அந்தப் பாம்பு நல்லாக் குதிக்கிறதாவும், உள்ளே போகும்போது மேலே குதிச்சுட்டா என்ன ஆறதுனும் சொல்லிட்டு வேண்டாம் நான், வெளியே போய் ஜன்னல் கண்ணாடியை எடுத்துட்டும் கம்பாலே தட்டி அதை வெளியே அனுப்பறேன். நீ இங்கேயே கம்போட நின்னு உள்ளே விடாம வெளியே விரட்டுனு சொன்னார். அதுக்குள்ளே கந்த சஷ்டி கவசத்தை உரக்கச் சொல்லிக் கொண்டே இரண்டு பேரும் ஆயத்தமானோம். அவர் வெளியே போய்க்கண்ணாடியை எடுக்க முயன்றால், பல மாதங்கள் கண்ணாடியை எடுக்கவே இல்லை. இப்போத் திடீர்னு எப்படி வரும்? அது எடுக்க முடியலை. திரும்ப உள்ளேயே வந்தார். அதுக்குள்ளே நான் கம்பால் பாத்ரூம் கதவைத் தட்டினேன். அவர் யோசிச்சுட்டு ஒரு கம்பியை எடுத்து வந்தார். பொண்ணு மறுபடியும் வந்து பாம்பாட்டியைக் கூப்பிடலாம்னு யோசனை சொன்னா. பாம்பாட்டி இந்த மாதிரி சமயங்களில் வீட்டை வித்துப் பணம் தரச் சொல்வார்ங்கறதாலே வேண்டாம், அந்தப் பணத்தை நாங்களே பயன்படுத்திக்கலாம்னு சொல்லி அவளை மறுபடியும் உள்ளே தள்ளிட்டுக் கம்பியால் குத்தினார். அங்கே வச்சிருந்த துடைப்பம் பாம்பின் மேல் விழ, பாம்பு அசைந்தது. இப்போ தண்ணீர் போகும் குழாய் அருகே போய்ப் படுத்துக் கொண்டது.

இவருக்கு என்ன பண்ணறதுனு புரியலை. நான் போய் கிரண்டரை முதலில் அணைச்சுட்டு, பருப்புப் போட்டிருந்த கற்சட்டியையும் அணைச்சேன். இப்போத் தான் மூளை வேலை செய்யும்போல் இருந்தது. அதுவரைக்கும் பாதி மனசு சமையலிலேயும், பாதி மனசு பாம்பிடமும் இருந்தது. இப்போ அவரை ஒரு பெரிய கம்பை எடுத்து வரச் சொன்னேன். அவர் அடிச்சுடவானு கேட்டார். எனக்கு அரை மனசுதான். அவருக்கும் கொஞ்சம் யோசனைதான் அடிக்க. அப்புறமாத் தேங்காய் பறிக்க வச்சிருக்கும் துரட்டியை எடுத்துட்டு வந்தார். துரட்டியாலே குத்திடப் போறாரோனு கொஞ்சம் கவலையா இருந்தது. பாம்போ மீண்டும் குளியலறைச் சுவற்றில் ஏறி ஜன்னல் வழியா வெளியே போக முயன்றது. ஆனால் சுவற்றிலும், தரையில் டைல்ஸ் போட்டிருந்தது அதனால் ஏறமுடியவில்லை. டைல்ஸ் போட்டது எவ்வளவு தப்புனு புரிஞ்சது! :( பாம்புக்கு முன்னால் துரட்டியை நீட்டி ஒரு தட்டுத் தட்டக் கீழே இருந்த அது மெல்லத் தலையைத் தூக்கப் பார்த்தது. அதுக்குள்ளே கம்பைத் திருப்பிக் கொண்டு அதன் உடல் நடுவே ஒரு அடி அடித்தார். உடனே பாம்பு நகர ஆரம்பித்தது. அப்பா என்ன வேகம்!! என்ன வேகம்! வெளியே ஒருவழியா வந்துடுச்சு. வீட்டுக்குள்ளே வராமல் இரண்டு பேரும் வழியை மறிச்சு நின்னு அதை வெளியே சத்தம் கொடுத்தும், கம்பால் தட்டியும் விரட்டினோம். ஒரு வழியா வெளியே போய், அங்கே இருந்த சந்தனமுல்லைச் செடிப்புதருக்குள்ளே மறைந்தது.


நானோ, அல்லது என் பெண்ணோ அவள் குழந்தைகளோ, எல்லாருமே அந்தச் சமயம் அங்கே சர்வ சகஜமாய்ப் போய் வந்து கொண்டிருந்திருக்கிறோம். ஒரு நிமிஷம் போதும் அது எங்களைக் கடித்திருக்கலாம், நான் இப்படித் தட்டச்சிக் கொண்டிருந்திருக்க மாட்டேன். கடவுள் காப்பாற்றினார். பாம்பைத் தாண்டிக் கொண்டே நான் போயிருக்கிறேன். ஆனால் திரும்பி உள்ளே வரும்போது தான் பார்த்திருக்கேன். போகும்போது ஏதாவது நடந்திருந்தால்???????

இறைவன் இருக்கின்றான். நமக்குத் தேவையானபோது விழிப்புணர்வையும் தருகின்றான். நாம தான் புரிஞ்சுக்கறதில்லை.ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதவரோ???

14 comments:

  1. :))

    நல்லவேளை!

    கவனமாக இருங்க!

    ReplyDelete
  2. என்ன கீதாம்மா.. ஏதோ பாம்புகூட பயங்கர நட்பு கொண்டாடிக்கிட்டு அது உங்க வீட்டுக்கு பிக்னிக் வந்த ரேஞ்சுக்கு எழுதியிருக்கீங்க...

    //ஆனால் திரும்பி உள்ளே வரும்போது தான் பார்த்திருக்கேன். போகும்போது ஏதாவது நடந்திருந்தால்??????? //

    அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. இந்த தமிழ் தட்டச்சும் பதிவுலகத்துக்கு கீதாம்மாவின் ஆசி எவ்ளோ முக்கியம்ன்னு அந்த பாம்புக்கும் தெரிஞ்சுருக்குது.

    ReplyDelete
  3. நல்ல(pambu)வேளை!

    கவனமாக இருங்க!
    :)))))

    ReplyDelete
  4. புலி, வாங்க, வாங்க, நன்றிங்க கவலைக்கு!

    ReplyDelete
  5. //இந்த தமிழ் தட்டச்சும் பதிவுலகத்துக்கு கீதாம்மாவின் ஆசி எவ்ளோ முக்கியம்ன்னு அந்த பாம்புக்கும் தெரிஞ்சுருக்குது.//

    வாங்க சென்ஷி, உங்களோட கருத்துக்கு நன்றிப்பா! ஒருவழியா என்னையும் பூர்வபிதாமஹி, சீச்சீ மாதாமஹி வகையிலே சேர்த்துட்டீங்க போல??? கொத்தனாரைக் கேட்டுட்டீங்களா???

    அப்புறம் இந்தப் பாம்பு கூட பயங்கர நட்பு நான் வச்சுக்க விரும்பலைனாலும் அது விரும்புது போல!!!! விடலையே எங்களை முப்பது வருஷங்களுக்கும் மேலே! :))))))))

    ReplyDelete
  6. ஹிஹிஹி, வல்லி, நல்ல டைமிங்கா ஜோக்கி இருக்கீங்க! :)))))))))

    ReplyDelete
  7. கவனம் தலைவி...;))

    \\விடலையே எங்களை முப்பது வருஷங்களுக்கும் மேலே! :))))))))
    \\

    30 வருஷமாஆஆஆஆஆஆஆ!!!!!!!!

    ReplyDelete
  8. வாங்க கோபி, ஹிஹிஹி, நான் பிறந்து முப்பது வருஷம் கூட ஆகி இருக்காதுங்கறீங்க??? சரி, சரி!! :P:P:P:P

    ReplyDelete
  9. நட்சத்திர வாழ்த்துக்கள் சகோதரி!
    முதல் கட்டுரையில் பாம்பைவைத்துத் திகிலை உண்டாக்கிவிட்டீர்கள்!
    உங்கள் துணிச்சலுக்குப் பாராட்டுக்கள்!

    ReplyDelete
  10. வாருங்கள் சகோதரர் சுப்பையா அவர்களே, பல மாதங்கள் கழிச்சு வந்ததுக்கு நன்றி.

    பாம்புக் கட்டுரை ஏற்கெனவே போட்டாச்சு. நக்ஷத்திர வாரத்தில் சேர்த்திருக்காங்க போல! :)))))) நக்ஷத்திர வாரக் கட்டுரை முதலில் மின்னும் நக்ஷத்திரமா ஆகணுமா தான். நன்றி. பாராட்டுக்கும், வாழ்த்துகளுக்கும்.

    ReplyDelete
  11. மேடம், என்ன இது!

    உங்க இடத்தில் என் அம்மா, உங்க மகள் இடத்தில் நான், சார் இடத்தில் என் அப்பா, பாத்ரூமுக்குப் பதில் சமையலறை. அதே கட்டுவிரியன், உள்ளே போகும் போது கண்களில் படாமல் வெளியே வரும் போது மிதித்து விட்டுக் குதித்தது என்று முப்பது வருடங்களுக்கு முன்னால் என்னை இழுத்துப் போய் விட்டீர்கள்!

    போன ஜென்மத்தில் சைனாவா, நாகாலாந்தா?

    ReplyDelete
  12. ஹிஹிஹி, ரத்னேஷ், எல்லா ஜென்மத்திலும் இந்தியராகவே இருக்கணும்னு ஒரு வேண்டுதல். வேறே நாடு வேண்டாம். அதிலும் சைனா???? நோ சான்ஸ்!!!!! :))))))))))))))))))

    ReplyDelete
  13. கர்நாடகத்தில் சுப்பிரமணியனை நாகப்பன் என்றே கருதுகிறார்கள். இது-நீங்கள் குறிப்பிட்டபடி-முருகனின் ஆறுமுகம் ஆறு சக்கிரங்கள் என்றும் அதன் வழியாக குண்டலினி சக்தி ஊர்ந்து மேலே செல்வதை குறிப்பதாகக் கூட இருக்கலாம்.

    பாம்புகளோடு உங்களுக்கு உள்ள நெருக்கம் தங்கள் குடும்பத்திற்கு முருகன் அருள் நிரம்பவே உண்டு என்பதை சொல்கிறது. :)
    வளர்க அவனருள்

    ReplyDelete
  14. வாங்க கபீரன்பரே, சுப்ரமண்யாவில் திவ்ய தரிசனம் செய்தோம். என்ன இருந்தாலும் கர்நாடகாவின் கோயில்களில் நிம்மதியாகவும், அமைதியாகவும் தரிசனம் செய்ய விடுகின்றார்கள். இங்கே அண்ணா நகர் ஐயப்பன் கோயிலும், திருச்சி கண்டோன்மெண்ட் ஐயப்பன் கோயிலும் தான் அப்படி ஓர் அமைதியான தரிசனம் கிடைக்கும். மற்றக் கோயில்கள் எல்லாம் ஒரே இரைச்சல், வியாபாரம், தரிசனம் செய்யும்போதே அறங்காவல் துறைப் பணியாளர்களின் பிரசாத விற்பனைத் தொல்லை! :((((((((((((((

    ReplyDelete