எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, October 16, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 10


நவராத்திரி ஒன்பதாம் நாளான இன்று ஆயுதங்களால் கோலம் போட்டு அலங்கரித்து, அம்பிகையை மஹாசரஸ்வதியாக, ஆதிகாரணியாக ஆவாஹனம் செய்யவேண்டும் . சிறு பெண் குழந்தையை சரஸ்வதியாகப் பாவித்து வழிபடவேண்டும். கடைசிநாளான விஜயதசமி அன்று அம்பிகையும், ஈசனும் சேர்ந்திருக்கும் சிவசக்தி ஐக்கியம். அன்றையதினத்து விஜயா முஹூர்த்தத்தில் தான் அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. நவராத்திரி ஆரம்பத்தின்போது தங்கள் சக்திகளை எல்லாம் அம்பாளிடம் ஒப்படைக்கும் தேவாதிதேவர்கள் சக்தியை இழந்து ஒரு பொம்மையைப் போல் இருப்பார்கள். அதை நினைவூட்டும் விதத்திலேயே பொம்மைக்கொலு வைக்கும் வழக்கம் ஏற்பட்டது என்பார்கள். இதைச் சென்ற வருடமே பார்த்தோம். தேவர்களின் அனைத்து சக்தியும் அம்பிகையிடம் சென்றதால் அவர்கள் சக்தியில்லாமல், இயக்கங்கள் இல்லாமல் பொம்மையைப் போல் இருந்ததாலேயே பொம்மைகளை வைத்து வழிபடும் வழக்கம் தோன்றியது என்பதும் ஆன்றோர் கருத்து. பொதுவாகப் பருப்புப் பாயசம், அதிரசம் அல்லது அப்பம், உளுந்து வடை, சிய்யம், கொண்டைக்கடலைச் சுண்டல் போன்றவையே நிவேதனமாய்ச் செய்யப் படும். என்றாலும் நவராத்திரி ஒன்பது நாளும் பெண்குழந்தையை வைத்து வழிபட்டவர்கள் வெண்பொங்கல் செய்து கறிவடாம் பொரித்துச் சாப்பிடக் கொடுக்கலாம். குழந்தைக்குப் பிடித்த ஆடைவகைகளையும் கொடுக்கலாம்.

பெரும்பாலான சிவன் கோயில்களில் மஹிஷாசுர வதமும், சில கோயில்களில் வதம் முடிந்து அம்பாள் சிவபூஜை செய்யும் கோலமும் அலங்கரிக்கப் படும். சிவனும், சக்தியும் ஸமமாகவே இருக்கின்றார்கள். அங்கே ஆணாதிக்கம் என்ற பேச்சோ, பெண்ணீயம் என்ற பேச்சோ கிடையாது. சிவனுக்கு ஸமய: என்றும் சக்திக்கு ஸமயா என்றும் பெயர். அதே போல் சிவ-சிவா என்றாலும் ஈசனையும், சக்தியையும் குறிக்கும். பைரவர், பைரவி என்பதும் அவர்களின் சமத்துவத்துக்கு எடுத்துக்காட்டு. இப்படிப் பெயர்களின் மூலம் காட்டும் ஸமம் நாம ஸாம்யம் எனப்படுகிறது. அவர்களின் ரூபலாவண்யத்தால் சிவந்த நிறம், இருவருக்கும் மூன்று கண்கள், தலையில் பிறை அலங்கரிப்பது போன்றவை ரூப ஸாம்யம் எனப்படும். ஆதியும் அந்தமும் இல்லா இந்தத் தம்பதிகளை வழிபட்டு அம்பாளைச் சிறப்பாக ஸ்ரீவித்யா வழிபாட்டின் மூலம் வழிபடுகிறவர்களின் தாம்பத்தியத்தில் பரஸ்பரம் சிநேகபாவம் உண்டாகும். மேலும் ஆண்களுக்குக் கர்மாக்களைச் செய்வதில் முக்கியத்துவம் கொடுத்திருப்பது போல பெண்களுக்குக் குடும்ப விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்துள்ளது. இவை இரண்டும் சமமாக நடந்தாலே அந்தக் குடும்பம் “நல்லதொரு குடும்பம், பல்கலைக்கழகம்” என்னும்படிக்குச் சிறப்பாக இருக்கும். சிவ தத்துவம் சக்தியில் அடங்கியது. சக்தி சிவத்தோடு சேர்ந்தது. ஒன்றில்லாமல் ஒன்றில்லை. இதையே அபிராமி பட்டர்,

தவளே இவள் எங்கள் சங்கரனார் மனை மங்கலமாம்
அவளே அவர் தமக்கன்னையும் ஆயினள் ஆகையினால்
இவளே கடவுளர் யாவர்க்கும் மேலை இறைவியுமாம்
துவளே இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த்தொண்டு செய்தே!’

என்கிறார். சக்தி தத்துவத்தில் இருந்தே சதாசிவ தத்துவம் தோன்றுதலால் “அவர் தமக்கு அன்னையும் ஆயினள்” என்கின்றார் பட்டர். இதே கருத்தைத் திருவாசத்தில் மணி வாசகரின் பொற்சுண்ணம் இடித்தலிலும் சிதம்பரச் செய்யுட்கோவையிலும், மீனாக்ஷி அம்மன் அம்மானையும் காணக்கிடைக்கிறது என்பது ஆன்றோர் கூற்று. மனைவியைத் தாய் என்றும், சக்திதான் சிவத்தை யீன்றது என்றும் கூறுவார்கள். இதனுடைய உள்ளார்ந்த கருத்து நமக்கு இந்தக் குறிப்பிட்ட யோகப் பயிற்சியை குரு மூலம் தீக்ஷை பெற்று மேற்கொள்ளும்போதே புரியவரும்.

அம்பிகையானவள் நம்முடைய ஆக்ஞா சக்ரத்தில் மனமாகவும், விசுத்தி சக்கரத்தில் ஆகாயமாகவும், அநாஹத சக்ரத்தில் வாயுவாகவும், ஸ்வாதிஷ்டானத்தில் அக்னியாகவும், மணி பூரகத்தில் ஜல தத்துவமாகவும், மூலாதாரத்தில் ப்ருத்வி என்னும் பூமி தத்துவமாகவும் விளங்குகிறாள். இன்னும் சொல்லப் போனால் இந்தப் பிரபஞ்சமே அம்பிகையாகவே பரிணமிப்பதாய் சாக்தர்கள் சொல்வார்கள். என்றாலும் அவள் தன்னைப் பரமசிவனுடைய பத்னி என்னும் பாவனையால் இவற்றை எல்லாம் ஏற்றுக்கொண்டு சிவசக்தி ஐக்கிய வடிவான சச்சிதானந்தத்தை நமக்கும் காட்டுகிறாள். இதையே அபிராமி பட்டரும்,

பாரும் புனலும் கனலும் வெங்காலும் படர் விசும்பும்
ஊரும் முருகு சுவைஒளி ஊறொலி ஒன்றுபடச்
சேரும் தலைவி சிவகாம சுந்தரி சீறடிக்கே
சாரும் தவம் உடையார் படையாத தனம் இல்லையே.”

என்கின்றார். ஐந்து பூதங்களையும் அவற்றால் விளையும் ஐந்து தன்மாத்திரைகள் ஆன கந்தம், சுவை, ஒளி, பரிசம், சத்தம் ஆகியவற்றையும் ஒன்றுக்கொன்று இசைந்து செல்லும்படியாக அவற்றினிடையே வியாபித்து நிற்பவள் சிவகாம சுந்தரியான அந்த சாக்ஷாத் அம்பிகையே ஆவாள். அவள் திருவடியைத் தொழுவோர்க்குக் கிட்டாத செல்வம் ஏதும் இல்லை என்பதே இதன் பொருள்.

இனி ஸ்ரீலலிதையின் திருக்கல்யாணம் காண்போம்.

“அம்மன் கிருபையாலே விச்வகர்மாவும்
அழகான புரங்களும் சபைகளுடன்
சிந்தாமணி ரத்னம் பளபளவென்று மின்ன
சிம்ஹாஸனம் உண்டு பண்ணி வைத்தான்
பட்டண அமைப்பையும் அம்மன் தன் அழகையும்
பார்த்துப் பிரம்ம தேவர் யோசிக்கின்றார்
நாட்டுக்குப் பதியான அம்மனுக்கிப்போ
நாயகர் வேண்டுமே –சோபனம் சோபனம்.

இப்படிப் பிரம்ம மனதிலெண்ணியதை
ஈசர்அறிந்து நல்ல ஒளியுடனே
முப்பது கோடி மன்மதாகார ரூபமாய்
வேஷந்தரித்ததி ஸுந்தரமாய்
மகுட குண்டலத்துடன் அழகு பீதாம்பரமும்
மார்பில் சந்தனம் முத்துமாலையுடன்
மோஹன வேஷந் தரித்திருந்தபடி தேவி
முன்னே நின்றாரீசன் – சோபனம் சோபனம்

நின்ற நிலையில் அதிஸுந்தரமான
லலிதாதேவிக்கு இசைந்த அழகும்
என்றும் பதினாறு வயதுந் தரித்துக்கொண்டு
இருக்கின்ற ஈச்வரரைக் கண்டு பிரம்மா
காமேச்வரரென்று பேருமிட்டவருக்கும்
கண்ணாட்டி லலிதேச்வரி தேவிக்கும்
ஓமென்று இவர்கள் இரண்டு பேருக்கும் இப்போ
விவாஹஞ் செய்யலாமென்றார் – சோபனம் சோபனம்

சோடித்துக் கலியாணத்துக்கெல்லாம் பிரம்மாவும்
கோவிந்தருடைய சம்மதத்தாலே
ஒடுக்க வணக்கமாய் அம்மனைப் பார்த்து
உம்மைக் கணவருடன் பார்ப்போமென்றார்
மாதாவும் தன்னுடைய கழுத்திலிருந்ததொரு
மாலையைக் கழற்றி அம்பலத்தில் போட்டாள்
நாதர் காமேச்வரர் கழுத்திலந்த மாலை
ராஜியாய் சேர்ந்தது –சோபனம் சோபனம்

அம்பாளுக்குத் தக்க மணாளன் காமேஸ்வரரே என நிச்சயித்துக் கல்யாணம் நடக்கிறது. அம்பாளும் ஈசனும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். வாத்தியங்கள் முழங்குகின்றன. தேவலோக மாதர்கள் நர்த்தனம் செய்கின்றனர்.

ஈசருந் தேவியும் மாலையிட்டார்கள்
இருவரும் இருந்து கன்னூஞ்சல் ஆட
வாஸுதேவராலே உமையவளைத் தாரை
வார்க்கச் சொன்னார் பிரம்மா- சோபனம் சோபனம்

பத்மாஸனர் சொல்லால் நல்ல முஹூர்த்தத்தில்
பரிமளிக்கும் தேவஸபை நடுவே
பத்தினியுடன் கூட விஷ்ணு காமேசருக்குப்
பக்தியாய் மதுவர்க்கந்தான் கொடுத்தார்
காமேஸ்வரருக்கு லலிதேச்வரியைக்
கன்னிகாதானம் செய்தார் மஹாவிஷ்ணுவும்
காமேச்வரரும் திருமங்கல்ய தாரணம்
கட்டினார் லலிதைக்குச் –சோபனம் சோபனம்

நெய்யால் ஹோமஞ்செய்து பாணிக்கிரஹணஞ் செய்து
ஈசன் அம்மனை அம்மி ஏற்றினார்
மெய்யாக அக்னியை மூன்று தரஞ்சுற்றி
முக்கண்ணர் பொரியினால் ஹோமஞ்செய்தார்
காமேச்வரரும் லலிதேச்வரியைத் தான்
கலியாணஞ் செய்து கொண்டார் ஸுகமாய்
பூமிமுதல் மூன்று லோகத்தவர்களும்
புகழ்ந்தார்கள் அகஸ்தியரே-சோபனம் சோபனம்

நாளை பண்டாசுர வதம். அப்புறமும் ஒன்றிரண்டு பதிவுகள் வரும். பின்னர் சகோதரி சுப்புலக்ஷ்மி பற்றிய ஒரு அறிமுகத்தோடு முடியும். படித்து வருபவர் அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.

14 comments:

 1. தாரகைகள் ஒளி சூழ வருபவள் மாதா
  இருண்ட என்வாழ்வில் ஒளியும் அவளே மாதா - ககன தாரகைகள்

  கண்ணொளி தனில் சூரிய சந்திரரும்
  முகமொளி தனில் மதி ப்ரகாசமும்
  ஓங்கார த்வ்னியில் அதிர்பவள்
  அதனுள் உறை சாந்தத்தில் அடங்குபவள்
  அசையும் பொருட்களின் அசைவும் அவள்
  அசையாத சிவனின் அடிமை அவள்
  சப்த ப்ரஹ்மமயி சராசரமயி ஜோதிர்திர்மயி வாங்மயீ
  நித்யாநந்தமயி சிவமயி ஸ்ரீமயி:))))

  அக்காரவடிசல் தான் நம்ப ப்ரஸாதம் இன்னிக்கு. வடை, கொழக்கட்டை எல்லாம் பேப்பர்ல எழுதி படிச்சாச்சு:))
  சிய்யம் நா என்ன? ஸ்வீட்டா, சேவொரி யா? நாளைக்கு ஸ்பெஷல் Mrs Shivam's special அரிசி கொழக்கட்டை.இப்பவே ஸ்ரீராமஜயம் எழுதணும் சரியா வர - இன்று போய் நாளை வர வாழ்த்தவும் தாய் குலமே ( கொழக்கட்டையை கொலை பண்ண :((:(( )

  ReplyDelete
 2. ஆர் வெதவல்லி பாடிய லலிதா ஷோபனம் கேட்டுக்கொண்டே இதை எழுதறேன். அருமை அருமை !! அறிமுகபடுத்திய உங்களுக்கு நன்ரறி, நமஸ்காரம்

  ReplyDelete
 3. படித்து இன்புற்று சேமிக்க வேண்டிய தொடர்!
  மிக்க நன்றிகள்!

  ReplyDelete
 4. !!!!!!!!! :))))) Nandrigal AAyiram. Yevalo vishayangaL!!! Thanks a lot.

  ReplyDelete
 5. வாங்க ஜெயஸ்ரீ, ரொம்ப நன்றி, உங்கள் கருத்துக்கும் பகிர்வுக்கும். பிரசாதம் எதுவானால் என்ன?? அம்பாளுக்குச் சமர்ப்பிக்கும் நம்ம பக்தியே பிரசாதம் தானே!

  ReplyDelete
 6. grrrrrrர்ர்ர்ர்ர்ர்ர் என் கிட்டேயே என்னோட ப்ளாக் ஐடி, பாஸ்வேர்ட் கேட்குதே? என்ன அநியாயம்?? :P

  ReplyDelete
 7. //ஆணாதிக்கம் என்ற பேச்சோ,பெண்ணீயம் என்ற பேச்சோ கிடையாது.//

  அருமையான விளக்கம்.

  தேவி லலிதையின் திருக் கல்யாணம் கண்டோம்.
  அவள் அருள் பெற்றோம்.

  நன்றி.

  ReplyDelete
 8. ஓ, காசெட் கிடைச்சுதா ஜெயஸ்ரீ, நல்லது. இதைக் கும்மி மெட்டில் என்னோட பெரியம்மா பாடுவாங்க.

  ReplyDelete
 9. வாருங்கள் ஜீவா, ரொம்ப நன்றிப்பா.

  ReplyDelete
 10. வாங்க எஸ்கேஎம், நன்றி, இருந்தாலும் நறநறநறநற :(

  ReplyDelete
 11. வாங்க கோமதி அரசு, இதைப் பத்தி இன்னும் விளக்க எண்ணினேன். அப்புறமாப் பெரிசாப் போகுதுனு விட்டுட்டேன். உங்களுக்குப் பிடிச்சது பார்த்து சந்தோஷமா இருக்கு. நன்றிங்க.

  ReplyDelete
 12. ஜெயஸ்ரீ, நீங்க கேட்ட சிய்யம் எழுதினதும் லிங்க் கொடுக்கிறேன். Sweet than :))))

  ReplyDelete
 13. காஸெட் இல்லை !! zip file google ல யாரோ நல்ல மனசு உபயம். தேடினப்போ உடனே கிடச்சது. விட மனசில்லை. mp3 player ல DOWNLOAD பண்ணி தினம் வேலைக்கு போறச்சே ஸஹஸ்ரநாமத்தோட இப்ப லலிதா ஷோபனமும் முழங்கறது:))கேட்டுண்டே போகறச்சே தானா சீக்கரம் வந்துடும் மனசுல !

  ReplyDelete
 14. நல்ல பதிவு டீச்சர்

  ReplyDelete