எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 12, 2010

சோபனம், சோபனம், ஸ்ரீலலிதைக்கு சோபனம்! 6


நவராத்திரியின் ஐந்தாம் நாள் “மஹதீ” என்னும் மஹேஸ்வரியாக ரிஷபவாகனத்தில் எழுந்தருளச் செய்யவேண்டும். இவள் ஆயுதம் திரிசூலம். பிறைச்சந்திரனையும், பாம்பையும் தரித்திருப்பாள். உடலுழைப்புச் செய்யும் அனைவருக்கும் வேண்டிய வரமளிக்கும் வல்லமை கொண்டவள். இன்று பெண் குழந்தையை சதக்ஷியாகப் பாவித்து வழிபடவேண்டும். வழிபாட்டுக்குப் பாவைகளால் ஆன கோலம் போடவேண்டும். பால் பாயாசம் , பச்சைப்பயறில் சுண்டல் நிவேதனம் செய்யலாம். .

இவ்வுலகில் எப்போதும் நன்மைக்கும் தீமைக்கும் இடைவிடாத போர் நடந்து கொண்டே இருக்கிறது. தீமைகளே அசுரர்களாக உருவகம் செய்யப் பட்டிருக்கின்றன. தீமைகள் பலவகைப்படும். எனினும் எல்லாவற்றிலும் பெரிய தீமை அதீதப் பெண்ணாசை எனலாம். பெண்கள் மேல் கொண்ட மோகத்தால் அழிந்தவர்களில் ராவணன் தனிப்பட்டுச்சொல்லப் பட்டிருந்தாலும், இங்கே சும்ப, நிசும்பர்களும் அம்பிகையின் மேல் கொண்ட மோகத்தால் அழிகின்றனர். காமத்தையே வென்றவளுக்கு இந்தச் சிற்றின்பமான காமம் ஒரு பொருட்டல்லவே. இங்கே காமம் என்பது ஆசைகளையே குறிக்கின்றது. இப்போது சொல்வது போல் வெறும் உடல் சம்பந்தப்பட்ட காமத்தை மட்டுமே சொல்வதில்லை. அம்பிகையை ஒருமித்த மனத்தோடு உபாசிக்கும் உபாசகன் அல்பசுகமான காமவசப்படுவதில்லை. எல்லாப் பெண்களையுமே அந்த சாட்சாத் அம்பிகை வடிவாகவே பார்ப்பான். அம்பிகையின் பீஜாக்ஷரங்களைத் தியானம் செய்து வேறு எண்ணம் இல்லாதவன் பரமாநந்தக் கடலில் மூழ்கி அம்பிகையின் ஸ்வரூபமாகவே தானும் ஆகின்றான். அத்தகைய பாக்கியத்தைப் பெற்றவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. மீண்டும் கர்ப்பத்வாரத்தைக் காணாமல் அம்பிகை சாயுஜ்ய பதவியை அளிப்பாள்.
துள்ளும் அறியா மனது பலி கொடுத்தேன் கர்ம துட்ட தேவதைகள் இல்லை
துரிய நிறை சாந்த தேவதையாம் உனக்கே தொழும்பன் அன்பு அபிஷேக நீர்
உள்ளுறையில் என்னாவி நைவேத்தியம் பிராணன் ஓங்கும் அதி தூபதீபம்
ஒருகாலம் அன்றிது சதாகால பூஜையா ஒப்புவித்தேன் கருணை கூர்
தெள்ளி மறை வடியிட்ட அமுதப் பிழம்பே தெளிந்த தேனே சீனியே
திவ்ய ரசம் யாவுந் திரண்டொழுகும் பாகே தெவிட்டாத வானந்தமே
கள்ளன் அறிவூடுமே மெள்ல மெள்ல மெளனியாய்க் கலக்கவரு நல்ல உறவே
கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு கருணாகரக் கடவுளே!
என்கின்றார் தாயுமானவ ஸ்வாமிகள். இதையே அபிராமி பட்டரும்.
“நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நினைப்பதுன்னை
என்றும் வணங்குவதுன் மலர்த்தாள் எழுதாமறையின்
ஒன்றும் அரும்பொருளே அருளே உமையே இமயத்
தன்றும் பிறந்தவளே அழியாமுத்தி ஆனந்தமே!
என்றும்,
ஆனந்தமாய் என் அறிவாய் நிறைந்த அமுதமுமாய்
வானந்தமான வடிவுடையான் மறை நான்கினுக்கும்
தானந்தமான சரணாரவிந்தம் தவள நிறக்
கானந்தம் ஆடரங்காம் எம்பிரான் முடிக்கண்ணியதே!
இதையே லலிதா சஹஸ்ரநாமமும், பரமாநந்தா, தயாமூர்த்தி, முக்திரூபிணி” என்றெல்லாம் சொல்கிறது. அபிராமி பட்டர் கூறும் நிறைந்த அமுதம் என்பது இந்த மரணமில்லாப் பெருவாழ்வு பெறும் பரமாநந்தத்தைக் குறிக்கிறது. இனி சும்ப, நிசும்பர்கள் என்ன ஆனார்கள் எனப் பார்க்கலாமா??
சுக்ரீவன் கூறியதைக் கேட்ட சும்பன் முதலில் தூம்ரலோசனன் என்பவனை அனுப்புகிறான். அம்பிகையைக் கேசத்தைப் பிடித்து இழுத்துவரப் பணிக்கப்பட்ட தூம்ரலோசனன் அம்பிகையை நோக்கிப் பாய்ந்தான். தன் ஹூங்காரம் ஒன்றாலேயே அம்பிகை அவனை அழித்தாள். அம்பிகையின் வாகனம் ஆன சிங்கமும் கோபத்துடன் அசுரச் சேனையின் மீது பாய்ந்து அவர்களை அழித்தது. திகைத்துப் போன சும்ப, நிசும்பர்கள் இப்போது சண்ட, முண்டர்களை அனுப்புகிறான். சண்ட, முண்டர்கள் பலத்த ஆயத்தங்களோடு கூடிய சதுரங்க சேனைகளுடன் பரிபூர்ண ஆயுதபாணிகளாய்த் தேவியைக் கொல்லச் செல்கின்றனர். அம்பிகை தன் கோபத்தில் இருந்து காளியைத் தோற்றுவித்தாள். நாக்கைச் சுழற்றிக்கொண்டும், நாக்கை நீட்டிக்கொண்டும் பயங்கர ஸ்வரூபத்துடன் தோன்றிய காலியானவள், சற்றும் தாமதிக்காமல் அசுரப் படைக்குள் புகுந்து அவர்களை அழிக்க ஆரம்பித்தாள். கோபம் கொண்ட சண்டன் காலியை நோக்கி ஓடி அம்புகளால் அவளை மறைத்தான். காலியின் சிரிப்பால் அவை சரமழையாக உதிர்ந்தன. பின்னர் காலி தேவி , சண்டனை அழித்துப் பின் முண்டனையும் அழிக்கிறாள். கெளசிகீ அவளை நோக்கி சண்ட, முண்டர்களைக் கொன்ற அவளைச் சாமுண்டா என அழைக்கப்படுவாள் என்றாள். இதையேலலிதா சஹஸ்ரநாமம், இந்த ஸ்வரூபமே லலிதா சஹஸ்ரநாமத்தில், “மஹேஸ்வரி, மஹாகாலி, மஹாக்ராசா, மஹாசநா” அபர்ணா, சண்டிகா, சண்ட, முண்டாசுர நிஷூதினி!” என்று கூறும்.
தூம்ரலோசனன் பட்டுப் போனானென்று
தூதர்கள் ஓடிச் சொன்னாருடனே
மந்திர்யும் பட்டுப்போனான் என்றவுடன்
மண்டியெரிந்து கண்கள் சிவந்து,
சண்டமுண்டரைக்கிட்டழைத்து நீங்கள்
ஸம்ஹரித்திங்கே வாருமென்றான்
சண்டமுண்டரும் ஓடிவந்து அந்தச்
சங்கரிதேவியை வந்தெதிர்த்தார்.
கண்டுதேவிதன் கோபத்தினாலே
காளிதேவியை உண்டாக்கினாள்(அவள்)
சண்டமுண்டர் தலையை வெட்டிச்சிவ
சங்கரிதேவிமுன் வைத்து நின்றாள்.
சங்கரியம்மனும் ஸந்தோஷமாயப்போ
சாமுண்டி என்ற பேர்தான் கொடுத்தாள்
தேவர்கள் எல்லாருங்கூடிக்கொண்டு மஹா
தேவிக்குப் புஷ்பமலர் சொரிந்தார்.”

9 comments:

 1. மிக நல்ல பகிர்வு கீதாம்மா !
  நானும் வந்து படித்து பயன் பெற்று செல்கிறேன்

  //அம்பிகையின் பீஜாக்ஷரங்களைத் தியானம் செய்து வேறு எண்ணம் இல்லாதவன் பரமாநந்தக் கடலில் மூழ்கி அம்பிகையின் ஸ்வரூபமாகவே தானும் ஆகின்றான். அத்தகைய பாக்கியத்தைப் பெற்றவர்களுக்கு மறுபிறவி என்பதே கிடையாது. மீண்டும் கர்ப்பத்வாரத்தைக் காணாமல் அம்பிகை சாயுஜ்ய பதவியை அளிப்பாள்.//
  இது இரு பாலாருக்கும் பொருந்தும் தானே !

  ReplyDelete
 2. Nice one maami... especially for people like us who wouldn't get to read these kind of information

  ReplyDelete
 3. ஒரு பிரமிப்பாக இருக்கிறது !
  ஆட்சிரியமாக இருக்கிறது !
  WELL DONE GEETHA MADAM!!

  உங்களின் 1050 பதிவுக்கு எனது வாழ்த்துக்கள் !
  GREAT ACHEIVEMENT MADAM!!

  கணேசரும் கண்ணரும் உங்களை ஆசிர்வதித்து
  இந்த பதிவு பயணத்தில் இன்னும் சிலபல சாதனைகளை
  புரிய அருள் புரிவார்களாக !
  kanaggai sari parggum pothu ithu thaan ungalin 1050 vathu pathivu endru therigirathu Geethamma!

  Wish U all t best & success madam

  ReplyDelete
 4. அகிலநாயகியே இவ்வாறே மூவுலகின் துன்பங்கள் முழுவதும் நாசம் செய்யப் பட வேண்டும்.எனறு தேவியை உங்களுடன் சேர்ந்து நானும் கேட்டுக் கொள்கிறேன்.

  நன்றி.

  ReplyDelete
 5. கெளசிகீ சண்டனையும்,முண்டனையும் கொன்றமையால் “சாமுண்டா” என்று பெயர் பெற்றாள்.

  நாமும் பூமாரி பெய்து அவளை வணங்குவோம்.

  நன்றி.

  ReplyDelete
 6. இரு பாலாருக்கும் பொருந்தும் ப்ரியா, எனினும் பெண்களுக்கு என உள்ள சில கட்டுப்பாடுகளை அறிவீர்கள் தானே?? ஆகவே அம்பிகை வழிபாட்டில் கவனம் தேவை என்பார்கள். மேலும் குருமுகமாகவன்றி மற்ற எந்த முறையிலும் ஸ்ரீவித்யை வழிபாட்டைத் தொடங்கக் கூடாது. லலிதா சஹஸ்ரநாமம் மட்டும் படியுங்கள். இப்போதைக்கு அது போதும். போகப் போக முன்னேற்றம் காண்பீர்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 7. நன்றி ஏடிஎம்.

  ReplyDelete
 8. நன்றி கோமதி அரசு.

  ReplyDelete
 9. மிக்க நன்றி கீதாம்மா
  தற்போதைக்கு எனது தோழி ஜானுவின் வழிகாட்டுதலின் பேரில்
  ஹரே ராம ஹரே கிருஷ்ணா
  கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே
  ஹரே ராம ஹரே கிருஷ்ணா
  ராம ராம ஹரே ஹரே
  என்பதை மட்டும் தான் சொல்லி கொண்டு இருக்கிறேன்
  நீங்கள் சொல்லிய வண்ணமும் செய்ய முயற்சி செய்கிறேன்
  எனக்கு ஆன்மிகத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறது
  கீதாம்மா !

  ReplyDelete