எல்லாரும் பெண் பார்க்கும் சீனுக்கு ஆவலோடு காத்துட்டு இருக்கீங்க. அதிலே ஒண்ணும் சிறப்பான செய்திகள் கிடையாது. சப்புச் சப்புனு தான் இருக்கும். இப்போப் போல அப்போல்லாம் பெண்ணும், பிள்ளையும் பேசிக்கிறதோ, அப்புறமும் கடிதத் தொடர்போ அல்லது, தொலைபேசியில் தொடர்பு வைச்சுக்கிறதோ, வெளியே போறதோ கிடையாது. மறுநாள் காலையிலே விடிஞ்சதும், விடியாததுமாய்க் காப்பி போடச் சொல்லி என் தம்பியும், அவனோட நண்பன் கிருஷ்ணன் என்னும் பையருமாய்க் காப்பியை ஒரு கூஜாவில் விட்டுப் பெரியப்பா வீட்டுக்கு எடுத்துண்டு போனாங்க. பெரியப்பா வீடு கிட்டத்தான் நடந்து போகும் தூரம். அதுக்குள்ளே அங்கே பெரியம்மாவே காப்பி போட்டுக் கொடுத்துட்டு, அவங்களைத் தயார் செய்து அழைத்து வர வண்டியெல்லாம் ஏற்பாடு பண்ணி வைச்சுட்டாங்க. காலை ஏழரைக்குள் அவங்க வரதுக்கு நல்லவேளைனும், ஒன்பது மணிக்குள்ளாகப் பெண்ணைப் பார்த்துடணும்னும் ஏற்பாடு. என்னோட இரண்டு மாமாக்கள், மாமிகள், சித்தி, சித்தப்பா, பெரியப்பா, பெரியம்மா, இன்னொரு பெரியம்மா(பெரியப்பா இல்லை) இரண்டு பெரியப்பா வழி அண்ணன்மார்கள்னு வீடு நிறைய ஜே ஜேனு கூட்டம். இந்த அழகிலே என்னோட சித்திக்கு என்னுடைய சிநேகிதிகள் யாருமே வரலைனு குறை. கூடத் துணைக்கு ஒருத்தருமே இல்லையே உன் வயசுக்காரங்கனு சொல்லிட்டே இருந்தாங்க. சாதாரணப் புடைவைதான் கட்டுவேன், நகையெல்லாம் போட்டுக்க மாட்டேன்னு நான் அடம் பிடிக்கப் பெரியவங்க என்னைப் படுத்தி எடுக்க, என் கிட்டே இருக்கிற பட்டுப் புடைவைகளில் ஒண்ணைக் கட்டிப்பேன்னு சொல்ல, அதையும் கேட்காத பெரியவங்க சித்தியோட காஸ்ட்லி புடைவையை எனக்குக் கட்டிக்கச் சொல்லி வற்புறுத்திக் கட்ட வைச்சாங்க. சும்மாவே எனக்குக் கொஞ்சம் சில துணிகளெல்லாம் உறுத்தல் இருக்கும். அதோட வெயிலுக்கு வந்த வேனல் கட்டியின் இம்சை வேறே. கட்டியாலே முகம் சிவந்ததா, கோபமா, இல்லாட்டிப் பெண்பார்க்க வரதினாலே வெட்கமானு கேட்கிற அளவுக்கு முகம் ஜிவு ஜிவுனு இருந்தது எனக்கே தெரிஞ்சது. அம்மாவுக்கோ வருத்தம் தாங்கலை. சாதாரணமாக எல்லாரையும் வம்பு பண்ணிண்டுச் சிரிச்சுண்டு, சீண்டிண்டு இருக்கும் எனக்கு இது எல்லாம் அவஸ்தையா இருந்ததுனு புரியலை. என்னோட இயல்பை மீறி நாடகத்திலே வேஷம் போடறாப்போல் இருந்தது. ஆனால் வேறே வழியே இல்லை. எல்லாரும் வெட்கம் அவளுக்குனு சொல்ல, நானும் பேசாமல் வாயை மூடிண்டேன்.
பெரியப்பாவும், பெரியம்மாவும், அண்ணாவுமாய் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை அழைச்சிண்டு வந்து எங்க போர்ஷனுக்கு மேல் இருக்கும் மாடிக்குப் போயிட்டாங்க. முதல்நாளே மாடி அறையைப் பெருக்கித் துடைச்சு நான் தான் கோலம் போட்டு வைச்சிருந்தேன். ஹிஹிஹி, அப்போல்லாம் கோல எக்ஸ்பர்ட்ங்கறதாலே சொந்தக்காரங்க வீட்டு விசேஷங்களில் எல்லாம் கூப்பிடுவாங்க கோலம் போட. இங்கேயும் கோலம் நானே போட்டிருந்தேன். கீழே நாங்க இருக்க முதல்லே டிபன் கொடுக்கணும்னு சொல்லி என்னோட பெரியப்பாவும், பெரியம்மாவும் டிபனைக் கொடுக்கச் சொல்லிட்டாங்க. சரினு எல்லாருமாய் டிபன் சாப்பிட்டாங்க. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்னைச் சாப்பிட்டியானு ஒருத்தரும் கேட்கலை. எனக்குக் கொடுக்கவும் இல்லை. அதுக்கப்புறமாய்ப் பெண்ணை அழைச்சிண்டு வாங்கனு கூப்பிடவே, சித்தி என்னை அழைச்சுண்டு மாடிக்குக் கூட்டிச் சென்றார். பொதுவாகவே மதுரைப் பக்கம் பெண்களுக்கு அநாவசியக் கூச்சம்னு நான் பார்த்ததில்லை. எல்லாரையும் கண்களுக்கு நேரேயே பார்த்துப் பேசுவோம். அதனால் எனக்கும் கூச்சம்னு எதுவும் இல்லை, தோன்றவும் இல்லை. நன்றாகவே பார்த்தேன். அம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாடி, எம்புட்டு உயரம்! இதான் முதலில் தோன்றியது. அவங்களுக்கும் தோணி இருக்கும். ஆனால் யாரும் எதுவும் சொல்லவில்லை. என்னோட மாமியாருக்குப் பிடிச்சதுனு அவங்க சாப்பிடும்போதே புரிஞ்சு போச்சு எங்களுக்கெல்லாம். மிச்சம் இருப்பது என் மாமனாரும், என் கணவரும் தான். குட்டி மைத்துனரும் கூட வந்திருந்தாலும் அவர் அப்போக் குழந்தை! அப்போ எல்லாம் பெண்ணும், பிள்ளையும் தனியாப் பேசிக்கிறதுனு கிடையாது. பொதுவாய் என் மாமனார் ஓரிரு கேள்விகள் கேட்க நான் பதில் சொன்னேன். பாடத் தெரியுமானு கேட்டதுக்குத் தெரியாதுனு சொன்னேன். என் கணவர் தனியா எதுவும் கேட்கலை. அப்புறமாக எல்லாருமாய் அங்கேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். மேலே செய்ய வேண்டிய கல்யாண ஏற்பாடுகள் பற்றியே பேச்சு நடந்ததால், நிச்சயம் செய்வதற்கு நாள் பார்த்துவிட்டு பிள்ளை வீட்டில் கடிதம் போட்டதும், வேலை துவங்கவேண்டும் என்ற அளவில் பேசிக்கொண்டிருந்தார்கள்.
மதியம் சாப்பாடும் ஆனதும், அவங்க சொந்தக் காரங்க காந்திகிராமத்தில் இருப்பதால் அங்கே போயிட்டு ஊருக்குப் போகப் போவதாய்ச் சொல்லவும், அப்பா அப்படியே என் பாட்டிக்கு மாப்பிள்ளையைக் காட்டவேண்டும் என்று கூறிவிட்டு டிவிஎஸ் நகரில் இருந்த என் மாமா வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அதற்கு முந்தைய வருஷம் தான் தாத்தா இறந்து போயிருந்ததால் அப்புறம் பாட்டி வெளியேயே வரவில்லை. கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கும் மேல் குடும்பம் நடத்தி இருக்கார். ஐந்து வயசில் கல்யாணம் ஆகி இருந்தது அவருக்கு. அங்கே கூட்டிப் போய்விட்டுப் பின்னர் மதுரை செண்ட்ரல் பஸ் ஸ்டாண்டில் அப்பா அவங்களை காந்தி கிராமத்துக்கு பஸ்ஸில் ஏற்றி விட்டார். திரும்பி வருகையில் அப்பா முகம் சுரத்தாகவே இல்லை. என்னனு எங்களுக்கு யாருக்கும் புரியவில்லை.
மறுநாள் அப்பாவைப் பார்க்க அப்பாவின் இன்னொரு நண்பர் வரவே அவரிடம் அப்பா முதல்நாள் பிள்ளை வீட்டுக்காரங்க வந்ததையும், திரும்பிப் போகும்போது என் மாமனார் பெண் உயரம் கம்மி, பிள்ளைக்கு ஏற்ற உயரம் இல்லைனும் பேசிக்கொண்டதாயும், பிள்ளையின் அத்தை பெண் ஒருத்தி இருப்பதால் அவளும் உயரமாயும் இருப்பாள் என்பதால் அதையே முடிச்சுடலாமா என யோசித்துக்கொண்டு பேசிக்கொண்டதாயும் சொன்னார். அப்போப் பார்த்து எங்க ஜோசியர் மாமா வந்தார். அவர் ரொம்ப ஏழை. எல்லாருக்கும் ஜோசியம் பார்க்கவும் மாட்டார். பார்த்ததுக்குப் பணமும் வாங்க மாட்டார். எப்போவானும் அவருக்குத் தேவை அவசியம் என்று தோன்றினால் மட்டுமே அப்பாவிடம் வந்து பணம் வாங்கிப்பார். கூடியவரையில் திரும்பக் கொடுப்பார். அப்பா வேண்டாம்னாலும் விட்டதில்லை. எதாவது அவசியம் என்றால் அன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்து சாப்பாடு போடுங்கனு கேட்டு வாங்கிச் சாப்பிடுவார். ரொம்ப ஆசாரம் என்பதால் அன்னிக்கு வீட்டில் யாருக்கானும் அசெளகரியம், வீட்டு விலக்கு என்று தெரிந்தால் உள்ளேயே வரவும் மாட்டார். அப்படிப் பட்டவர் அவர் சொல்லித் தான் அப்பா இந்த வரன் விஷயத்திலேயே இறங்கி இருந்தார். இப்போ அவர் பெண் பார்த்துவிட்டுப் போனது என்ன ஆச்சுனு கேட்க வந்தவரை அப்பா ஒரு பிடி பிடித்துவிட்டார். முதல்லேயே வேண்டாம்னு சொன்னேன். இப்போப் பாருங்க பெண்ணைப் பார்த்துட்டு இப்படிப் பேசிக்கறாங்கனு சொல்லி விட்டார். ஆனால் அவரோ அசரவே இல்லை. மறுபடியும் ஜாதகத்தைப் பாருங்கனு அப்பா சொல்ல, "தேவையே இல்லை. :" னு சொல்லிட்டு ஏதோ மனக்கணக்காய்ப் போட்டுவிட்டு, "உங்க பெண்ணுக்கு இந்தப் பிள்ளைதான். அடுத்த மாசத்துக்குள்ளாகக் கல்யாணம் ஆகிடும். வைகாசி மூணாம் தேதிக்குள் உங்க பொண்ணுக்குக் கல்யாணம் இதே பிள்ளையோட நடக்கும்." னு சொல்லிட்டு வேறே எதுவும் பேசாமல் கிளம்பிட்டார். தள்ளாடிட்டு போனவரை அப்பா கூப்பிட்டு, சாப்பிட்டுட்டுப் போங்கனு சொல்ல, "இன்னிக்கு எனக்கு இங்கே போஜனம் இல்லைனு தெரிஞ்சு தான் வந்தேன். நான் அப்புறமா வரேன்"னு சொல்லிட்டுப் போயிட்டார்.
அப்பா சொன்னதற்கு ஏற்பப் பெண் பார்த்துவிட்டுச் சென்ற உடனேயே எக்ஸ்ப்ரஸ் தபாலில், (அப்போல்லாம் உண்டு, உடனே பட்டுவாடா பண்ணுவாங்க) பெண் பிடித்திருக்கிறது என்றும் ஆனால் உயரம் கம்மி என்பதால் யோசிப்பதாயும், மேலும் கல்யாணத்தை மதுரையில் நடத்தப் போவதாய் என் அப்பா கூறியதால் அவங்க தரப்பில் 200 பேருக்கும் மேல் கல்யாணத்துக்கு வருவாங்க என்றும் அதுக்காகச் சிறப்புப் பேருந்து ஏற்பாடு செய்யமுடியுமா என்றும் கேட்டிருந்தார்கள். இல்லை எனில் கல்யாணத்தைக் கும்பகோணத்தில் நடத்தவேண்டும் என்றும் கூறி இருந்தார்கள். கடிதத்தைப் படிச்சதுமே அப்பாவுக்குப் பிடிக்கலைனு சொல்லாம ஏதோ சுத்தி வளைக்கிறாங்கனு புரிஞ்சு போய் வேறே ஜாதகங்களைப் பார்க்கலாம்னு சொல்லிட்டார். ஆனால் எங்க ஜோசியரோ, "அந்தப்பையரே இந்தப் பெண் தான் வேண்டும்னு தானே வருவார்!" என்று சத்தியமே செய்தார்.




