எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, March 27, 2011

கல்யாணமாம் கல்யாணம் ! பயமுறுத்திய தோடு!

திருச்சி மாப்பிள்ளை வீட்டுக்கு ஒரே பையர். ஏதோ கெமிக்கல் கம்பனி?? சரியா நினைவில் இல்லை. திருச்சிக்குள்ளேயோ அல்லது சுற்றுவட்டாரத்திலோ வேலை. தில்லை நகரில் வீடு. பையரின் அப்பா சங்கரமடத்தில் மிகவும் ஈடுபாடு. இந்த ஜாதகம் திருச்சியிலே பல்லாண்டுகளாய் இருந்த என்னோட ஒண்ணு விட்ட பெரியப்பா ஒருத்தர் மூலமா வந்தது. அவங்க ரொம்பவே வற்புறுத்தினதோடு இல்லாமல் குழந்தையை, (ஹிஹிஹி, மீ ஒன்லி) நாங்க ரெண்டு பேரும் கிட்ட இருந்து கண்ணும், கருத்துமாக் கவனிச்சுப்போம்னு உறுதிமொழி வேறே. அப்பா திருச்சியில் அவங்க வீட்டிலே போய் இறங்கி அந்தப் பெரியப்பாவையும் அழைத்துக்கொண்டு பையர் வீட்டுக்குப் போயிருக்கார். பையரின் அப்பா க்ஷேமலாபங்கள் விசாரிச்சு முடிஞ்சதும் நேரடியாக விஷயத்துக்கு வந்துட்டார். பெண்ணுக்கு வைரத் தோடு போடுவீங்களானு கேட்டிருக்கார். அது வரைக்கும் அப்பா இதை நினைச்சே பார்க்கலை. என்றாலும் சமாளிச்சுட்டுப் போடறேன்னு சொல்லி இருக்கார். வைர மூக்குத்தி? அது ஏற்கெனவே இருக்கு. இது அப்பா.

ம்ம்ம்ம்ம்ம், தோடு வாங்கியாச்சா? வாங்கணுமா??

இனிமேல் தான் வாங்கணும், இப்போத் தானே உங்க அபிப்பிராயம் தெரிஞ்சது. "அப்பா.

நான் சொல்ற இடத்திலே, நாங்க காட்டற வைரக்கற்களை வாங்கி எங்க தட்டான் கிட்டேத்தான் கட்டணும். நீங்க வாங்கறதெல்லாம் சரிப்படாது.

தோடு எங்க பொண்ணுதானே போட்டுக்கப் போறா? அவளுக்கும் பிடிக்கணுமே!

நாங்க சொல்ற தோட்டைத் தான் அவ போட்டுக்கணும்

அப்பாவுக்கு அஸ்தியில் ஜுரம் கண்டிருக்கும் நிச்சயமா. நாம அப்போவே புரட்சிப் பெண்ணில் ஒருத்தியாகத் தீவிரமாக இருந்தோமே! தினமும் ஏதானும் ஒரு விஷயத்துக்கு எனக்கும் அப்பாவுக்கும் யுத்தம் வரும்.

நாளைக்குக் கல்யாணமாகிப்புருஷன் வீடு போனால் தெரியும், இந்த அப்பாவோட அருமை!"

தெரியட்டும், தெரியட்டும், அவங்க வீட்டிலும் பொண்ணுங்க இல்லாமலா இருக்கும்! கூடப் பிறந்தவங்களோட சண்டை போடாமலா இருப்பாங்க?

விஷயம் வேறே ஒண்ணும் இருக்காது. அண்ணா அப்போவே ஹோசூரில் வேலைக்குப் போய்விட்டார். ஆகையால் இருந்தது தம்பியும் நானும் மட்டும் தான். தம்பிக்குத் தட்டலம்பிப் போட்டிருக்க மாட்டேன். அல்லது சாப்பிட்ட தட்டை அவரே அலம்பட்டும்னு சொல்லி இருப்பேன். இப்படி ஏதாவது ஒண்ணு. அதே தம்பியும் நானும், அவருக்குத் தமிழ்க் கட்டுரை எழுதவும், படம் வரையவும் கூட்டுச் சேர்ந்துப்போம். அதனாலே இதை எல்லாம் லக்ஷியமே பண்ணறதில்லை. ஆனால் அப்பாவுக்குத் தம்பியை நான் படிக்கவிடாமல் கெடுக்கிறேன்னு ஒரு எண்ணம். அதோட அவருக்குத் தமிழில் அவ்வளவா எழுத வராதுங்கறதாலே நான் எழுதிக் கொடுப்பேன். அதுவும் பிடிக்காது. ஆகையால் எப்போவும் அப்பாவுக்கும், எனக்கும் ஏழாம் பொருத்தம் தான். ஆனால் அம்மா ஏதானும் செய்து கொடும்மானு கேட்டாலும், அலக்ஷியமாக போம்மா, நான் படிக்கணும் தான்! ஹிஹிஹி, அப்போப் படிச்சுட்டு இருந்தோமுல்ல! அம்மாவும் ரொம்பச் சொல்ல மாட்டாங்க தான். ஏன்னா அம்மா சித்திகளின் பிரசவத்திற்கு உதவிக்குப் போறச்சே எல்லாம் ஸ்கூலுக்குப் போறச்சே கூட சமையலையும் முடிச்சுட்டுத் தான் போயிருக்கேன். அதனால் பொண்ணுக்கு வேலை தெரியும், நம்ம கிட்ட சலுகைனு புரியும். ஆனால் அப்பாவுக்கோ அவர் சொன்னால் உடனே செய்தாகணும். அப்படி இருக்கையில் போற இடத்திலும் மாமனார் இப்படி இருந்தால்???? அப்பாவின் கண்ணெதிரே காட்சிகள் ஓடி இருக்கும்னு நினைக்கிறேன். ஆனால் உள்ளூர அப்பாவுக்கே பிடிக்கவும் இல்லை.

அடுத்து நகைகள் பத்திப் பேச்சு. நகைகள் எல்லாம் பண்ணி வச்சாச்சு, அவள் ஸ்கூல் முடிக்கிறதுக்கு முன்னாடியே பண்ணிட்டேன். அப்பா/

அதெல்லாம் ஒத்துக்க முடியாது. இப்போ என்ன வயசு உங்க பொண்ணுக்கு? பதினெட்டு முடிஞ்சு பத்தொன்பதா?? ஹும், நாலு வருஷத்துக்கு மேல் இருக்குமே பண்ணி. எல்லாம் பழசாப் போயிருக்கும்

பாலிஷ் பண்ணிடறேன். எங்க கடைக்காரர்ட்டே சொன்னால் வைரப் பாலிஷ் கூடக் கொடுத்துத் தருவார்.

அதெல்லாம் வேண்டாம்னேன். நீங்க அந்த நகைகளை என் கிட்டேக் கொடுங்க. நான் எல்லாத்தையும் எங்களுக்குப் பிடிச்சாப்பல மாத்திடறேன்.

தூக்கிவாரிப் போட்ட அப்பா அப்போ புடைவைகள், சோமன்கள் எல்லாம்??

எல்லாத்துக்கும் பணத்தைக் கொடுங்க, நாங்க இங்கே திருச்சியிலேயே வாங்கிடறோம்.

அப்பாவுக்குச் சுரத்தே இல்லை. இப்போவே இவ்வளவு கெடுபிடின்னா அப்புறமா என்னென்ன கேட்பாரோ?

அப்புறமா வருஷாந்திரச் சீரெல்லாம்???

அததுக்கு யாருக்கு என்ன செய்யணுமோ ஒரு லிஸ்ட் கொடுக்கிறேன். அதுப்படி செய்யணும்.

சரி. அப்பா திரும்பிவிட்டார். அங்கே எதுவும் பேசாமல் வந்ததே பெரிய விஷயம், சாதாரணமாய்ப் படபடவெனப் பொரியும் சுபாவம் கொண்டவர் பெண்ணுக்குக் கல்யாணம் என்பதால் பொறுத்துக்கொண்டாரோ என்னமோ, தெரியலை. அன்னிக்கே கிளம்பி மதுரைக்கும் வந்தாச்சு. இங்கே வந்து ஆகாயத்துக்கும் பூமிக்கும் ஒரு குதி குதிச்சார் பாருங்க. நாங்கல்லாம் நடுங்கிப் போயிட்டோம்.

கல்யாணமா பேசறார் அந்த மனுஷன்?? வியாபாரம், இதிலே சங்கரமடத்துக்கு நெருக்கம்னு வேறே பீத்தல். இருக்கட்டும், இவர் இப்படி எல்லாம் கேட்கிறதை நான் அவர் இருக்கிற சங்கர மடத்துக்கே எழுதிடறேன். ஒரே கத்தல்.

மெல்ல மெல்லப் பெரியப்பா, பெரியம்மா, மாமாக்கள், என்னோட அம்மாவழிப்பாட்டி எல்லாருக்கும் விஷயம் போக எலலாரும் வந்து சங்கர மடத்துக்கு எழுதிடறேன்னு அவருக்கு பதில் போடச் சொன்னாங்க. சரினு அப்பாவும் அந்தப் பையரின் அப்பாவுக்கே சங்கரமடத்தில் இருந்து கொண்டு நீங்க இப்படிக் கேட்டது, பேசியது எதுவும் சரியில்லை. அதனால் சங்கரமடத்திற்கு நான் எழுதி இவற்றை எல்லாம் சொல்லிட்டு அவங்க செய்யலாம்னு சம்மதம் கொடுத்தால் நீங்க சொல்றாப்போலவே செய்துடறேன் என்று எல்லாரையும் சாட்சி வைத்துக்கொண்டு எழுதிப் போட்டுவிட்டார். அங்கே இருந்து பதிலே இல்லை.

. ஹோசூரில் இருந்த அண்ணாவுக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைனு லெட்டர் வரவே அம்மாவை மட்டும் அப்பா அனுப்பிட்டுத் தம்பி அப்போ பியுசி படிச்சுட்டு இருந்தார். அவரோட பரிக்ஷை முடிஞ்சதும், எல்லாருமா வரோம்னு சொல்லி என்னையும், தம்பியையும் மட்டும் இங்கே வைச்சுக்கொண்டார். அதுக்குள்ளே எங்க சித்தப்பா ஜாதகம் பார்த்தாச்சா, பார்த்தாச்சானு லெட்டருக்கு மேலே லெட்டர் அப்பா பாட்டுக்கு அதை எல்லாம் படிச்சுட்டு நிதானமா எங்க கிட்டே மைசூருக்குப் பக்கத்திலே மேல்கோட்டையில் வைரமுடிசேவை பார்க்கப் போறேன். நீங்க ரெண்டு பேரும் பத்திரமா இருங்க. அவன் காலேஜ் போனதும் நீ க்ளாசுக்குப் போ. காலம்பர அவனுக்குக் காபி போட்டுக் கொடுத்துட்டு க்ளாசுக்குப் போனு ஏகத்துக்கு எனக்கு மட்டும் (க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) புத்திமதி சொல்லிட்டுப் போயிட்டார். வீட்டுக்காரங்களும், நாங்களும் அடுத்தடுத்து இருந்ததால், ஒண்ணும் பயமில்லை. வீட்டு வாசல் ஒரே வாசல் தான். வீட்டுக்காரங்க போர்ஷனுக்குள் நுழைஞ்சு அவங்க ஹால் வழியா அவங்களுக்குத் தெரிஞ்சு தான் யார் வந்தாலும் உள்ளே வரணும்.

நானும் தம்பியும் மட்டும் தான் இருந்தோம். அம்மாவும் இல்லை, அப்பாவும் இல்லை. ஒருநாள் காலம்பர நான் சமைச்சுச் சாப்பிட்டு விட்டு என்னோட அக்கவுண்டன்சி கிளாசுக்குக் கிளம்பிட்டிருந்தேன். அப்போ வாசல்லே யாரோ எங்க அப்பா பேரைச் சொல்லிக்கேட்டுட்டு இருந்தது காதில் விழுந்தது. யாருனு பார்த்தா, சித்தப்பாவோட தம்பி. நான் அடிக்கடி வங்கி பரிக்ஷை எழுத சென்னை போயிட்டிருந்தப்போ எல்லாம் சித்தி வீட்டில் தான் தங்குவேன். சித்தப்பாவோட தம்பிக்கு அப்போக் கல்யாணம் ஆகலை. அதுக்கு அப்புறம்தான் கல்யாணம் ஆச்சு. அந்தக் கல்யாணத்துக்கு நானும், அப்பாவும் போறதா இருந்து போக முடியலை. போயிருந்தால் ஒருவேளை அங்கேயே என்னோட கல்யாணமும் நிச்சயிக்கப் பட்டிருக்குமோ?

28 comments:

 1. அநியாயக் கொள்ளையா கேட்டு இருக்காளே அந்தக் காலத்திலே ??

  ReplyDelete
 2. ஹிஹிஹி எல்கே, இதைத் தவிர வரதட்சணை தனி. அதைப் பத்தி இங்கே எழுதலை. ஆனால் அப்பா அதைக் குறிப்பிட்டே இப்படி எல்லாம் நீங்க கேட்கிறதை சங்கரமடத்துக்கு எழுதிடுவேன்னு சொல்லித் தான் அந்தக் கல்யாணத்தை நிறுத்தினார். :)))))

  ReplyDelete
 3. இப்பவா இருந்தா வரதட்சனை தடுப்பு சட்டத்தில் உள்ளப் போட்டுடலாம் :))

  ReplyDelete
 4. >>நாங்க காட்டற வைரக்கற்களை வாங்கி எங்க தட்டான் கிட்டேத்தான் கட்டணும்


  எக்ஸ்க்யூஸ் மீ .. ஒரு டவுட்.. தட்டான்ன்னா என்ன?

  ReplyDelete
 5. மஹா புத்திசாலி உங்க தந்தை.
  என்ன ஒரு அநியாயம் பிடித்த மனிதர்கள் அந்தத் திருச்சிக்கார்கள்.
  இந்த வைரத்தோடு எத்தனை கல்யாணத்தை நிறுத்தி இருக்கிறது:(
  நடுத்தர் வர்க்கத்து மக்களுக்கு ஏன் பெண்வீட்டாரைக் கசக்கணும்கிற எண்ணம் தோன்றுமோ.
  கல்யாண சாமாசாரங்களுக்குக் காத்திருக்கிறேன்:)

  ReplyDelete
 6. ""அநியாயக் கொள்ளையா கேட்டு இருக்காளே அந்தக் காலத்திலே ??"""

  !!!!!! ஏன் இந்தக்காலத்துல குறைச்சலா இருக்காமா இப்போ !!தேவலையே!

  இந்த கண்டிஷன்ஸை ந்யாய படுத்தல, ஆனா நகையாவது பொண்ணுக்கு இன்வெஸ்ட்மென்ட்னு கொடுக்கறதும் வாங்கறதும் வழக்கமா accept பண்ணிண்டதா இருந்தது அந்த காலத்தில .கட்டாயப்படுத்தி கேக்காம இருக்கறது மரியாதை decency.இப்ப ஒரு தெரிந்தவர்கள் வீட்டு கல்யாணத்தில் பாதி ஜம்பமா எனக்கு தெரிந்தது !! சங்கீத்!!, மெஹந்தி!!bridal shower , bachelors party, 1500Rs / head catering. இப்ப landscapeனு receptionக்கு,floral தனியா ஒவ்வொரு நேரத்துக்கும், multi cuisine, chart bhandar, விடியோ, லைவ் டெலிகாஸ்ட்னு விதம் விதமா!! 50 grand 11/2 நாள் weddingக்கு!!சாப்பாடு என்னமோ so.. so.. அலங்காரங்களா கண்ணில்லா காளியாத்தா தான் பாக்கணும்:(( நகை sundries honeymoon தனியாவாம் !! இது என்னடா புதுசா பூதம்னு நினச்சேன்!! நாம தான் outdated நு நினைச்சுண்டேன்

  ம்... அப்புறம்?? வாசல்ல வந்தது மிஸ்டர் ஷிவமா??

  ReplyDelete
 7. பதிவுல போட்டோ எல்லாம் கலக்குறிங்க தலைவி ;))

  ஆனாலும் அந்த சங்கரமடம் ரொம்ப ஓவரு...!

  அடுத்த பதிவுல நாயகன் அறிமுகும் ஆவரா!? ;)

  ReplyDelete
 8. ஏஅப்பா, அவங்கவீட்லதான் கல்யாணம் ஆச்சா?

  ReplyDelete
 9. எல்கே, அப்போவும் வரதக்ஷணைத் தடுப்புச் சட்டம் உண்டு. அதோடு சங்கரமடத்தில் பெண் வீட்டுக்காரங்க கிட்டே வரதக்ஷணை வாங்கக் கூடாது, கறுப்புப் பெண்களை ஒதுக்கக்கூடாது என்று பிரசாரமே செய்து கொண்டிருந்தனர். இப்போவும் சொல்கிறார்கள் தான். இப்போவும் சொல்கிறார்கள் தான், ஆனால் எங்கே! கீழே ஜெயஸ்ரீ சொல்லி இருப்பதைப் படிங்க. இதை விடவும் இன்னும் மோசமாய் இன்று நடக்கின்றன. :((((((

  ReplyDelete
 10. செந்தில் குமார், தட்டான் என்றால் பொன்னாசாரி. பொன் நகைகள் செய்யும் ஆசாரி. தஞ்சைப் பக்கம் இவர்களைப் பத்தர் என்று சொல்கின்றனர். திருச்சிப் பக்கம் தட்டான் என அழைப்பார்கள் போல! :)) பிரபல பாடக நடிகர் தியாகராஜபாகவதர் நகைகள் செய்யும் ஆசாரி தான்! அதிலேயும் நல்லா நகைகள் செய்து பிரபலமாய் இருந்ததாய் என் அப்பா சொல்லி இருக்கிறார். திருச்சியில் என் அப்பா இருந்திருக்கிறார். அப்போ தெரியும் என்பார். :)))))

  ReplyDelete
 11. வல்லி, ஆமாம், ஒரு பக்கம் ஆசாரியாளுக்குத் தொண்டன் என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம் இப்படி இருக்கிறாங்க என்பதைத் தான் இன்னிக்கும் புரிஞ்சுக்க முடியலை. அதான் அப்பா ஆசாரியாளுக்கே தெரிவிக்கிறேன், அவர் சரின்னா செய்யறேன்னு சொல்லிட்டார். :)))))))))

  ReplyDelete
 12. ஜெயஸ்ரீ, நீங்க சொல்வதை விடவும் இன்னும் மோசமாக நடக்கின்றன. ஒரு நாள் வாடகை சத்திரத்துக்கு ஒன்றரை லக்ஷம் ரூபாய் நான் போயிருந்த ஒரு கல்யாணத்தில். செண்ட்ரலைஸ்ட் ஏசி. மூன்று நாட்களுக்குக் கணக்குப் பண்ணிக்குங்க. இது தேவையா?? 95-ல் எங்க பொண்ணைப் பெண்பார்க்க வந்த ஒரு பிள்ளை வீட்டில், இரண்டடிக்குக் குறையாமல் ஒரு ஜோடி குத்துவிளக்கு வைக்கணும்னு சொன்னாங்க. வாங்கி வச்ச விளக்கை என்ன பண்ணறதுனு கேட்டால் அதை கார்த்திகைச் சீருக்குக் கொடுத்துடுங்கனு அதையும் விடாமல் கேட்டாங்க. நான் க்ளீனா எங்க பொண்ணையே கொடுக்கப் போறதில்லைனு தெளிவாவே சொல்லிட்டேன். :)))))

  ReplyDelete
 13. வாசல்லே அவர் வரலை. அவர் அப்போ புனாவில் தான் இருந்தார். வந்தது என் சித்தப்பா(அசோகமித்திரன்) தம்பி. இவரையும் நான் சித்தப்பானே கூப்பிடுவேன்.

  ReplyDelete
 14. ஆசாரியாளுக்குத் தொண்டன் என்று சொல்பவர்கள் இன்னொரு பக்கம் இப்படி இருக்கிறாங்க என்பதைத் தான் இன்னிக்கும் புரிஞ்சுக்க முடியலை. //

  நடுவே ஒரு வார்த்தை விட்டுப் போயிருக்கு. சங்கர மடத்தின் பெயரையே கெடுக்கிறாங்க இப்படிப் பட்டவங்கனு சொல்லலாம். :(((((

  ReplyDelete
 15. வாங்க கோபி, படிக்கிறீங்கனு தெரிஞ்சு சந்தோஷம். :)))))))

  ReplyDelete
 16. இல்லை லக்ஷ்மி, அந்த இடத்திலே கல்யாணம் ஆகலை. :)))))))

  ReplyDelete
 17. மலைப்பா தான் இருக்கு .வொர்கிங்க் Middle class எங்கிற வர்கமே யோசிக்கவே இல்லாம 50 லக்ஷம் செலவு பண்ண தயங்கலேன்னா politicians ஏன் தங்கத்திலும் வெள்ளிலேயும் பத்திரிக்கை அடிக்க மாட்டா . அண்டம் பிண்டத்துக்கு அழுதா ......இவா பஞ்சாம்ருதத்துக்கு அழுதுண்டு இருக்கற கதை தான் :((இப்ப பொண்கள் வீட்டில் எதிர்பார்ப்பதுனு reverseல போனாலும் ஆச்சர்ய படறதுக்கு இல்லை !! .

  ReplyDelete
 18. ஜெயஸ்ரீ, இன்னமும் உங்களுக்கு உண்மை நிலை புரியலை. பெண்கள் இப்போக் கிடைக்கிறது ஒருபக்கம் கஷ்டமா இருக்குன்னா, இன்னொரு பக்கம் அவங்களோட எதிர்பார்ப்புகள். தங்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஒத்துவரக்கூடிய பையர்களையே பண்ணிக்கிறாங்க. அப்படியும் பெரும்பாலான திருமணங்களில் பிரச்னைதான் இப்போது. போன வாரம் போன ஒரு கல்யாணத்தில், எங்க தெருப் பெண்தான். அப்பா ஏதோ கம்பெனியில் வேலை, அம்மா ஈஎஸ் ஐயில் வேலை. அவங்க பொண்ணு கல்யாணத்திலே எக்ஸிபிஷன்லே வைக்கிறாப்போல் ஒவ்வொண்ணுக்கும் ஸ்டால்.

  ஒருபக்கம் வரும் விருந்தினர்களுக்குக் கொடுக்கப்பூக்கள், வித விதமா, இன்னொரு பக்கம் வளையல்கள், அவங்க அவங்க புடைவை, அல்லது டிரஸ்ஸுக்கு ஏத்த கலர்லே எடுத்துக்கலாம், இதெல்லாம் பெண் வீட்டுக்காரங்க விருந்தாளிங்களுக்குக் கொடுத்த பரிசுப் பொருட்கள், இன்னொரு பக்கம் காய், கனிகளாலே அலங்காரம், மேடையைச் சுற்றிலும் பூ அலங்காரத்தைத் தவிர திருச்சூர் விளக்கு ஐந்தடியில் இருந்து ஆரம்பித்து விதவிதமானப் புத்தம்புது விளக்குகளால் மேடை அலங்காரம்.

  ஒரு பக்கம் சாட் ஸ்டால், பேல் பூரி, பானி பூரி இன்னொரு பக்கம், ஜூஸ் வகைகள் தனி ஸ்டால், சமோசா, கசோடா, புதினா வடைனு இன்னொரு பக்கம், தேநீர், காப்பிக்குத் தனி ஸ்டால, சூப் வகையறா தனியா. இதெல்லாம் அபிடைசர.

  சாப்பாடு பப்ஃபெட் மெதடில். தோசையில் நான்கு விதம், சப்பாத்தியில் நான்கு விதம், பூரியில் நான்கு விதம், நாலைந்து ஸ்வீட்கள், கலந்த சாத வகைகள, வெறும் சாதம், ரசம், அப்பளம் பப்பட வகைகள்,வடையில் நான்கு ரகங்கள், இட்லி, மினி இட்லி, சாம்பார் இட்லி, பொடி இட்லி. அதைத் தவிர பாதாம்கீர், ரோஸ்மில்க், போன்ற குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம், பீடா தனி ஸ்டாலில்.

  எதுக்கும்மா இத்தனைனு கேட்டால், அவங்க அவங்க எது பிடிச்சுதோ சாப்பிடலாமேனு பதில்! :((((

  ReplyDelete
 19. இப்போ பெண்களின் திருமண வயதே முப்பதும் ஆகிவிட்டது. :( அதுக்கு முன்னால் திருமணம் செய்து கொள்ள எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை. அவங்க அப்பா, அம்மாவே இருக்கட்டும், என்ன அவசரம்னு சொல்றாங்க. :((((

  ReplyDelete
 20. //அததுக்கு யாருக்கு என்ன செய்யணுமோ ஒரு லிஸ்ட் கொடுக்கிறேன். அதுப்படி செய்யணும்//
  அடப்பாவமே... என்னமோ மளிகை லிஸ்ட் ரேஞ்சுக்கு இருக்கே... டூ மச் ஐ சே...

  //அததுக்கு யாருக்கு என்ன செய்யணுமோ ஒரு லிஸ்ட் கொடுக்கிறேன். அதுப்படி செய்யணும்//
  மறுபடியும் சஸ்பென்ஸ்??????????????

  ReplyDelete
 21. சங்கர மடம் என்ன மத்யஸ்தமா? அப்படி ஒரு வசதி இருந்ததா என்ன?

  ReplyDelete
 22. சஸ்பென்செல்லாம் இல்லை ஏடிஎம், அந்த அந்தப் பண்டிகைக்கு ஏற்றாற்போல் சீர் செய்யணும்னு அர்த்தம். ஆடி என்றால் மாப்பிள்ளைக்குச் சீர், தீபாவளி என்றால் பெண், மாப்பிள்ளையில் ஆரம்பிச்சு அவங்க வீட்டு நாய்க்குட்டி வரையிலும் டிரஸ் எடுக்கச் சொல்வாங்க. இப்படி எல்லாம் உண்டு ஒரு கால கட்டத்தில். இப்போல்லாம் பெண்ணோ, மாப்பிள்ளையோ தீபாவளிக்கு வருவதே அரிது. அதனால் பிரச்னையே இல்லை! :)))))

  ReplyDelete
 23. அப்பாதுரை, ஒருவிதத்தில் அப்படித் தான். மத்யஸ்தம்னு இல்லை. ஆனால் அவங்க இதெல்லாம் கூடாதுனு சொல்லிட்டு இருக்காங்களே, அதனால் அங்கே நெருக்கமா இருந்துட்டு இப்படி லிஸ்ட் போட்டால் கேட்பாங்க இல்லையா? moral fear இருக்குமே!

  ReplyDelete
 24. இவ்வளோ வரதட்சனை கொடுமை எல்லாம் உங்க பக்கம் இருந்து இருக்கா ?

  எங்க ஊர் பக்கம் எல்லாம் இல்லை என்று நினைக்கிறேன்  சரி, "எப்போ அண்ணலும் நோக்கினார் அவளும் நோக்கினாள்" வரும் என்று காத்து இருக்கிறோம்

  கீதாம்மா :)

  ReplyDelete
 25. இதெல்லாம் எப்போவும் நடக்கும் ஒரு விஷயம் ப்ரியா. எல்லா இனங்களிலும், பேதங்கள் இல்லாமல் நடக்கும் ஒரே விஷயம் இதுவே. இப்போக் கொஞ்சம் குறைஞ்சிருக்குனு சொல்லலாம். ஆனால் நேர்மாறாகப் பெண்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துவிட்டன.:((((

  ReplyDelete
 26. சங்கரமடம் இந்த ஆட்டம் போட்டிருக்கே.

  ReplyDelete
 27. சங்கரமடம் இந்த ஆட்டம் போட்டிருக்கே.//

  மாதேவி, பெரியவங்க வேண்டாம்னு தான் சொல்லிட்டிருக்காங்க இப்போவும். கல்யாணங்களில் ஆடம்பரத்தைத் தவிர்க்கவும் சொல்றாங்க. ஆடம்பரக் கல்யாணங்களின் பத்திரிகைகளை இங்கே அனுப்பக் கூடாதுனும் சொல்றாங்க. ஆனால் கேட்பவர்கள் யார்?? அதனால் இதுக்கும் மடத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் குறிப்பிட்டதன் காரணமே மனிதர்களின் இரட்டை வேடத்தைக் குறிப்பிடுவதற்காகவே. நன்றிம்மா. பதில் நீண்டு போச்சு! :(

  ReplyDelete