எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, July 18, 2011

அடுக்கு மாடிக் குடியிருப்புகளும், அடக்க முடியாத் தொல்லைகளும் 4

நிலத்தின் மதிப்புக்கூடுவது பணவீக்கத்தின் எதிரொலியோ என்றே தோன்றுகிறது. ஏனெனில் நம் நாட்டில் இந்த ஐடி கலாசாரம் வந்தது முதலே எல்லாப் பொருட்களின் விலைகளும் கூடிக்கொண்டே போகின்றனவே தவிரக் குறைந்தபாடில்லை. முன்னெல்லாம் ஒரு படுக்கை அறை, கூடுமிடம், சமையலறை, குளியலறைக் கழிப்பறை வசதியோடு கூடியது ஐந்து லக்ஷத்துக்குள்ளாகவே விலைக்குக் கிடைத்தன. வாடகையும் அதிகம் போனால் ஆயிரம் ரூபாய்க்குள்ளாகவே இருக்கும். முன்பணம் மூன்று மாதங்களுக்கு மேல் வாங்கினால் அதிகம். அதுக்கே வீட்டுக்காரங்க பயப்படுவாங்க திரும்பக் கொடுக்கணுமே என்று கவலைப்படுவாங்க. இப்போதோ, அப்படி ஒரு படுக்கை அறை உள்ள குடியிருப்புப் பகுதியிலே கிடைப்பது குறைந்த பக்ஷமாக ஐந்தாயிரத்தில் இருந்து ஏழாயிரம் வரையிலும் வாடகை கொடுக்கவேண்டும். விலைக்கு வாங்குவது என்றால் சதுர அடி4,000 ரூபாய் வரை அம்பத்தூரிலேயே விற்கின்றனர். எனில் ஐநூறு சதுர அடி உள்ள குடியிருப்பை வாங்க வேண்டுமெனில் குறைந்தது இருபது லக்ஷம் தேவை. இதைத் தவிரவும் குடியிருக்கப் போகும் பகுதியின் உள்ளே தேவைப்படும் முக்கியமான மர வேலைகள் பூரணமாகச் செய்திருக்க மாட்டார்கள். கதவுகளும், ஜன்னல் கதவுகளும் மட்டுமே போடப் பட்டிருக்கும். ஜன்னல்களுக்கும் இப்போதெல்லாம் மரச் சட்டம் வைத்துக் கட்டுவது அரிதிலும், அரிதாகக் காண முடிகிறது. அப்படிக் கட்டினால் அந்தக் குடியிருப்பின் எல்லாக் குடியிருப்புக்களுக்கும் கூடுதல் விலை வைத்துத் தான் கொடுப்பாங்க. நாம கேட்டாலும், கூடுதல் பணம் தனியாகக் கொடுக்கவேண்டும். இதுக்கே இப்படி என்றால் சமையலறையின் அலமாரிகளுக்கு மட்டும் செய்து கொடுப்பாங்களா? நிச்சயமா மாட்டாங்க.

மர வேலைகள் நாம் தான் செய்துக்கணும். சும்மாக் கட்டிக்கொடுக்க மட்டுமே இருபது லக்ஷம் ஆகி இருக்கும். சமையலறை அலமாரிகள், மற்றப் படுக்கை அறை அலமாரிகள், சமையலறையில் சாமான் வைக்கும் அலமாரிகள், வரவேற்பு அறைக்கு, பூஜை அலமாரிக்கு எல்லாம் நாம் தனியாக ஆள் வைத்துச் செய்து கொள்ளவேண்டும். அல்லது கட்டடம் கட்டும் காண்ட்ராக்டரிடம் இதற்கும் சேர்த்துத் தனியாகப் பேசிக்கொண்டு அவர்கள் மூலம் செய்து கொள்ளவேண்டும். இதற்கு ஆகும் செலவு குறைந்தது இரண்டு லக்ஷத்தில் இருந்து பத்து லக்ஷம் வரையிலும் வீட்டின் மொத்தப் பரப்பளவை ஒட்டி ஆகின்றன. இதனால் பலருக்கு வேலை வாய்ப்புக் கிடைக்கிறது ஒருபக்கம் இருக்கட்டும். இதனால் எல்லாவற்றுக்கும் விலைகள் கூடிக்கொண்டே போகின்றன. எப்போதும் தேவை இருப்பதால் இவற்றின் விலை உச்சாணிக்கொம்பை எட்டி விடுகின்றன. அதிலும் ஐடிக்காரர்களுக்கு எல்லாமே நவீனமயமாய் இருக்க வேண்டி உள்ளதே. ஆகவே எலக்ட்ரிக் சிம்னி, மாடுலர் கிச்சன் என எல்லா வீடுகளிலும் அமர்க்களப் படுகின்றது. மாடுலர் கிச்சன் அமைக்கவும் குறைந்த பக்ஷமாய் ஒரு லக்ஷத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இது இல்லை எனில் அவங்க கர்நாடகம், பழமைவாதி. இப்படியான வீடுகளின் மதிப்பும் கூடுகிறது. ஐடிக்காரங்களுக்கு வருமானவரியில் இருந்து தப்பிக்க இந்த வீட்டு லோன் பெருமளவு உதவியும் செய்கிறது. ஆகவே குறைந்த பக்ஷமாய் இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புக்களாவது வாங்கறாங்க. ஒண்ணுமா வாங்க முடியாதவங்களும் இருக்கிறாங்க தான். அது தனி. பெரும்பாலும் பெரிய, பெரிய கம்பெனிகளான டாடா, இன்போசிஸ், சிடிஎஸ், எச் சி எல் போன்ற பெரிய, பெரிய கம்பெனிகள் தங்கள் ஊழியர்களுக்கு இவ்வகையான கடன்களைக் கொடுத்து ஊக்குவிக்கின்றன என்றே கூறலாம்.

மேலும் இந்த ஐடி கம்பனிகள் எல்லாமும் சென்னையிலும், அதன் சுற்றுவட்டாரம் இருபத்தைந்து, முப்பதுமைல்களுக்குள்ளேயே இருக்கின்றன. இதனால் சென்னையில் ஜனத்தொகை அதிகரித்துள்ளது. அதிகரித்த ஜனத்தொகைக்கு ஏற்பத் தண்ணீர், மின்சாரம், போக்குவரத்து வசதி போன்றவை சரியாகக் கிடைப்பதில்லை. இதற்கு அரசின் மெத்தனம் முழுப் பொறுப்பு என்றாலும் ஓரளவுக்கு நாமும் காரணம். இதைப் படிக்கும் அனைவரும் என்னை ஏன் சென்னையில் இருக்கிறாய்? கிராமத்தைப் பார்த்துப் போவதுதானே எனக் கேட்கலாம். அம்பத்தூர் ஒரு அழகிய கிராமமாக இருந்ததாலேயும், சென்னையை விட்டுத் தள்ளி அமைதியாகவும், தண்ணீர் வசதியோடும் இருந்ததாலுமே இங்கே வீடு கட்டிக் குடியேறினோம். ஆனால் இப்போதோ அதைக் குறித்த மறு சிந்தனைகளுக்கு உள்ளாகி இருக்கிறோம். நிலத்தடி நீர் முன்பெல்லாம் 100 அடி, 150 அடிக்குள்ளாகக் கிடைத்து வந்தது, தற்சமயம் 300 அடி வரையிலும் போகிறது. எல்லா வீடுகளிலும் கோடையில் கூட முப்பது அடிக்குள்ளாகக் கிணற்றில் நீர் கிடைத்துக்கொண்டிருந்தது, தற்சமயம் ஐம்பது அடியானாலும் கிடைப்பதில்லை. அதோடு மக்கள் பெருக்கத்தினாலும், போக்குவரத்து நெருக்கடியினாலும் திணறுகிறது அம்பத்தூர். சாலைகள் பராமரிப்பும் இல்லாமல், பாதாளச் சாக்கடைத் திட்டமும் நிறைவேற்றப் படாமல், சென்னைக்கே குடிநீர் வழங்கும் புழல் ஏரியும், அம்பத்தூர் ஏரியும், தாங்கல் ஏரியும், கொரட்டூர் ஏரியும், முகப்பேர் ஏரியும் இருந்தாலும் அம்பத்தூரில் உள்ள எந்த வீட்டிற்கும் குடிநீர்க்குழாய் இணைப்புக் கிடையாது.

குடிநீர் முனிசிபாலிட்டி கொடுப்பதில்லை. குழாய்களும் ஒரு சில முக்கியமான தெருக்களிலேயே பதிக்கப் பெற்றுள்ளன. நாங்கள் குடி இருக்கும் பகுதியில் குடிநீர்க் குழாய்களே பதிக்கவில்லை. நாங்க குடிநீர் விலை கொடுத்தே வாங்குகிறோம். அதோடு பாதாளச் சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப் படாமையால் கழிவுநீர் பூமியின் நீரோடு கலந்து நிலத்தடி நீர் தற்சமயம் சுவையும் குறைந்து, துர் நாற்றம் வீச ஆரம்பித்துள்ளது. இதனால் குளிக்கவும், தோய்க்கவும் மட்டுமே வீட்டின் நிலத்தடி நீரை வேறு வழியில்லாமல் பயன்படுத்திக்கொண்டு மற்றத் தேவைகளுக்கும் நீரைக் காசு கொடுத்து வாங்குகிறோம். இயற்கை நமக்களித்த கொடை நீரும், காற்றும். இப்போது காற்றுக்கும் பஞ்சம், நீருக்கும் பஞ்சம்.

அதோடு ஒரு முக்கியமான விஷயம் அடுக்குமாடிக் குடியிருப்பைக் கட்டும் கட்டிடக் காண்டிராக்டர்கள் சாமான்களைப் போட்டு வைக்க ஒரு குடிசை அல்லது ஆஸ்பெஸ்டாஸ் ஷெட் போடுகின்றனர். அதில் ஒரு காவலாளியையும் குடி வைக்கின்றனர். அவர்களுக்குக் கழிவறையோ, குளியலறையோ எந்தவிதமான அடிப்படை வசதியும் அங்கே இருக்காது. இதே பெரிய பெரிய கட்டிடக் காண்டிராக்டர்கள் எனில், உதாரணமாக நவீன், தோஷி&தோஷி, அருண் எக்ஸெல்லோ போன்றவர்கள் ஒரு தாற்காலிகக் கழிவறையும், குளியலறையும் அலுவலகமும் ஏற்படுத்தி இருப்பார்கள். வீடு வாங்கவெனப் பார்க்கத் தொலைதூரத்திலிருந்து வரும் பயனாளிகளுக்கும் பயன்படும் அது. ஆனால் இங்கேயோ கட்டுவதே ஒரு கிரவுண்டில் இல்லாட்டி அரை கிரவுண்டில். இதிலே எங்கே போய்க் கழிப்பறையைக் கட்டுவாங்க?

ஒரு வாட்ச்மேனோடு இருந்தால் பிரச்னையே இல்லை. ஆனால் எங்க பக்கத்துக் கட்டிடத்திலும் சரி, எதிரே கட்டுவதிலும் சரி ஒரு குடும்பமே குறைந்த பக்ஷமாய் ஐந்து நபர்கள் தங்கி இருக்கின்றனர். அவங்க சமையல், சாப்பாடு, மற்ற வேலைகளுக்கான தண்ணீர் எல்லாமும் பயனுக்கு எடுத்தது போகக் கழிவு நீர் தெருவிலே கொட்டப் படும். அவங்க கழிப்பறையாகப் பயன்படுத்துவதும் தெருவைத் தான். இது ஆண்களாய் இருந்தாலும் எதிரே குடி இருக்கும் வீடுகளிலோ, பக்கத்தில் இருக்கும் வீடுகளிலோ இருப்பவர்களுக்குப் பிரச்னைகள். பெண்களாய் இருந்தாலும் பிரச்னைகள். எங்க பக்கத்துக் கட்டிடத்தின் வாட்ச்மேன், வாட்ச் வுமன், அவங்க குடும்பம் எங்க படுக்கை அறை பக்கமாய்க் கழிவறை, குளியலறையாகப் பயன்படுத்துவதால் எங்க படுக்கை அறையில் எப்போதும் துர்நாற்றம் கண்ணாடி ஜன்னல் கதவையும் கடந்து வீசிக்கொண்டே இருக்கிறது.

பக்கத்துக் காண்டிராக்டர் ஆன ராகுல் அசோசியேட் எம்.டிக்கு இ மெயில் கொடுத்ததில் உடனடியாகப் பதிலும் கொடுத்ததோடு மானேஜரையும் நேரில் அனுப்பித் தொல்லைகளைக் குறைப்பதாய் வாக்குக் கொடுத்தார். கொஞ்சம் பரவாயில்லை. தங்கி இருந்த நபர்களின் எண்ணிக்கை குறைக்கப் பட்டுப் பெயரளவுக்கு பினைல் ஊற்றினார்கள். என்றாலும் தொல்லை தொடரத் தான் செய்கிறது. ஆனால் எதிரே இருப்பவர்களின் காண்ட்ராக்டரோ எத்தனை முறை சொன்னாலும் எங்க வீட்டுக் காம்பவுண்டை ஒட்டி ஜல்லி, மணல், செங்கல் என அடுக்கி விட்டு, வீட்டுக்கு எதிரே கம்பி கட்டும் மெஷினையும் வைத்துக்கொண்டு கம்பிகளையும் போட்டு விடுவார்கள். நாம் நடக்கக் கூட வழியில்லை. இருசக்கர வண்டியை எடுக்கும்போது என் கணவருக்குத் தடுமாறும் என்றாலும் கண்டுக்கவே மாட்டாங்க. அவங்க கிட்டே சொல்லிச் சொல்லி அலுத்தும் போச்சு. அந்த எம்.டி. க்கு மெயில் கொடுத்தும் பதில் ஏதும் இன்று வரை வரவே இல்லை.

இன்று தான் பாதாளச் சாக்கடைக்காக ஜேசிபி வந்து தோண்டியதன் காரணமாய் அவங்க இடத்திற்குள்ளேயே மெஷினை வைத்துக்கொண்டு கம்பி கட்டுகிறார்கள். அதை ஆறு மாதங்களாய்ப் பல முறை நாங்கள் கெஞ்சிக் கேட்டுக் கொண்டும் கேட்கவே இல்லை. தெருவில் நட்ட நடுவில் கம்பிகள் கிலோ கணக்கில் கிடக்கும். அதை நகர்த்தவும் மாட்டாங்க. கடைசிக் கம்பி தீரும்வரை அங்கேயே கிடக்கும். ஆட்டோவோ, வெளி ஊருக்குப் போகக் காரோ வர முடியாது. அப்போவும் அலட்டிக்கவே மாட்டாங்க. சாமானையும் தூக்கிக் கொண்டு நாம் நடந்து போய் இரண்டு , மூன்று வீடு தாண்டி ஏறிக்கொள்வதைப் பார்த்துக்கொண்டு அவங்களுக்குள்ளேயே ரசித்துச் சிரிச்சுப்பாங்க. அவங்களால் இயன்றதுஅவ்வளவே. :(

10 comments:

  1. இந்த மாதிரி சின்ன தெருவாக உள்ள இடங்களில் அவர்கள் கம்பிய வளைக்கும் போது மேலே பட்டிடுமோன்னு பயமா இருக்கும்.நான் நிறைய தடவை இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கஷ்டப்பட்டிருக்கிறேன். இதுக்கெல்லாம் எப்ப விடிவு காலமோன்னு தெரியலை!!

    ReplyDelete
  2. நான் சென்னை வந்த போது ஜெமினி பார்சன்னிலிருந்து ஆயகர் பவன் செல்ல ஆட்டோ டிரைவர் rs100 ௦௦ கேட்டார். எனக்கு தலை சுற்றியது. நான் நடந்தே போய்விட்டேன். டைடல் பார்க் லிருந்து அடையார் செல்ல 150 ௦ . ரொம்ப ஜாஸ்தி என்று சொன்னதுக்கு ஆட்டோ டிரைவர் சொன்னது தான் வேடிக்கை.அதன் 40 ஆயிரம் 50 ஆயிரம் சம்பளம் வாங்குறீங்களே சார்... குடுத்த என்ன கொறஞ்ச போய்டுவீங்க? நீங்களாம் ac ரூம் லையே இருகீங்க. எங்கள மாதிரியா வெயில்ல கஷ்டபடுரீங்கன்னு. நண்பருக்கு வீடு பார்க்க போனால் அப்படியே. 1 பெட்ரூம் வாடகை 15ஆயிரம்... நீங்கள் சொல்வது போல நெறைய பேர் IT -இல் உண்டு. ஆனால் எல்லாரும் இல்லை. நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் எல்லாரும் அப்படி இல்லை. இதில் உள்ள கஷ்டங்களை பற்றி யாருமே சொல்லலியே என்று எனக்கு ரொம்ப நாளா ஆதங்கம் உண்டு. சொன்னால் ரத்தக் கண்ணீர் வரும். நானெல்லாம் 4 1 /2 வருடங்கள் நைட் ஷிப்ட் வேலை பார்த்திருக்கேன். அதுவும் 2 ,3 நாட்கள் தொடர்ச்சியாக.என்னை போல நெறைய பேர். பொதுவாக நம்மவர்களுக்கு
    நான் அப்படித்தான் பண்ணுவேன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ. அப்படி-ன்னு ஒரு அலட்சியம். இந்த மாதிரி ஒன்னுத்துக்கும் உதவாத விஷயங்களில் தான் வீரப்ரதாபங்களை காட்டுவார்கள். தனக்கு நேரும் போது தான் வலி தெரிகிறது. அதையும் கொஞ்ச நாளில் மறந்துவிடுவார்கள். அலட்சியம்,பொறுப்பின்மை,விதண்டாவாதம்,எடுத்தெறிந்து பேசுவது,தான்தான் பெரிய ஆள், தனக்கு தெரியாதது எதுவுமே இல்லை என்ற ஒரு வெட்டி பந்தா இப்படி பட்ட விஷயங்கள் தான் காரணம். லஞ்சத்தை ஒழிப்போம் என்று சொல்பவர்களில்,எத்தனை பேருக்கு தெரியும் 95 % லஞ்சம் வாங்குவது அரசாங்க ஊழியர்கள் தான் என்று? அரசியல்வாதி, அப்பாவி அரசாங்க ஊழியர்கள்( பொழைக்க தெரியாதவர்கள் என்ற பட்டம் வேறு) எல்லாம் மீதி. ரோட்டை மறித்து ஆக்கிரமித்து கொள்ள ரோடு என்ன வீடா?. அரசாங்கம் மட்டும் ஒன்னும் பண்ண முடியாது. நம்மில் எத்தனை பேருக்கு சாலை ஒழுக்கம் கடைபிடிக்கிறோம்? அவன் அவன திருந்தினால் தான் உண்டு. ஆனால் அது நடக்காத ஒன்று.

    ReplyDelete
  3. Dear Mrs Shivam . these are my views :))


    அடுக்குமாடி ஒருசில விஷய்ங்களுக்கு தேவலைன்னாலும் பலவிஷயங்களுக்கு தலை வேதனை தான். சரி தனி வீடுன்னாலும் ரிட்டையர்ட் ஆகும்போது கூட இழுத்து பிடிச்சு சமாளிச்சுடலாம் 80 ஐ தொடறச்சே வீட்டையும் மனேஜ் பண்ண கஷ்ட்டம் துணைக்கு சின்னவாளா கீழ மேல வாடகைக்கு விடலாம்னு தளர்ந்து போன வயோதிக தம்பதிகளுக்கு வாய்ப்பது என்னவோ பயங்கரிகள் தான் L நீங்க சொல்லறாப்பல அபார்ட்மென்ட்ஸ் கட்டட்டும் அது பழைய கேரக்டரை உடைக்கிற மாதிரி செய்யவேண்டாம் ரூல்ஸ் ரெகுலஷன் ஸேஃப்டி இஷ்யூஸ் மனசுல வச்சுண்டு தரமா செஞ்சா நன்னா இருக்கும் . தரத்துக்கு தான் எங்க போகனு தெரியல்ல . அத்தனை இழைத்தும் நம்பளவானால ஏன் ஒரு நல்ல ஃபினிஷை த்ரமுடியல்லைனு வருத்தமா இருக்கும். இப்ப இப்ப மும்பை ஹைதிராபாத் மாதிரி இடங்கள்ல ல கொஞ்சம் வித்யாசம் தெரியறது ஆன ாமெஜாரிடி இடங்கள்ள ஒரு கோடி கொடுத்துஅபர்ட்மென்ட்ஸ் வாங்கினாலும் முன்னால கறிகாய் கடை பந்தல் லௌட்ஸ்பீக்கர் காதை ஓட்டைபோடற மாதிரி சத்தம் இல்லைனா டாய்லெட்/ வலை நாத்தம் .ஊரைவிட்டு வாங்கினா மழைக்காலத்தில குட்டையும் குளமுமா பாசி குப்பை பொங்கி வழிய வால்யுவே இல்லாத மாதிரி தெரியறது . நல்ல infra structure வேணாமா ? நம்ப ஊரில எப்படி மாடுலர் கிச்சன் சரிப்படும் இத்தனை கரப்பான் பூச்சி இருந்தா? HYD ல ISB ல 10 நாளைக்கு ஒருதடவை எல்லாத்தையும் கிச்சன் லேந்து எல்ல சாமானையும் எடுத்து வெளில வச்சுட்டு கரப்பான் பூச்சிக்கு ஸ்ப்றே பண்ணிட்டு போவா. எனக்கு சாமானை திருப்ப வைத்துட்டு மூடீருந்தாலும் pesticide நாத்தம் வர மாதிரி இருக்கும் பேசாம நம்ப ஓப்பன் கிச்சன் ஷெல்ஃப் தேவலை . மொத்தத்துல என் கனவும் நனவாகாது போல இருக்கு . எங்க கொடைக்கானல் போற வழில பண்ணைக்காட்டு பக்கம் நிலம், சின்ன எளிமையான வீடு ,thatched இருந்தாலும் போதும் , சார்ப்பாய் கட்டில் நாலு ஏழைக்குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துண்டு இருக்கறதை பகிர்ந்து கொடுத்து சாப்பிட்டுண்டு அமைதியான வாழ்க்கை . உம்..ஹு..ம் … இப்ப எடம் என்ன விலை தெரியுமா? இந்தக்கால ஊழல் நம்பளை அப்படி எளிதா இருக்கத்தான் விட்டுடுமா. ஆட்டமோ பாட்டமோ என் கனவு இங்க நனவாகறதேன்னு ஆண்டவனுக்கு தினம் gratitude journal எழுதி படிச்சுக்காட்டிண்டு இருப்பதே சுகம் >.

    ReplyDelete
  4. வாங்க ராம்வி, உண்மை தான், கம்பி கட்டுகையில்கொஞ்சம் பயம்மாத் தான் இருக்கு. அதிலும் எங்க பொண்ணு கல்யாணத்தப்போ என்னோட பையருக்குக் கம்பி கட்டறவங்க அடிச்சதிலே நாங்க பட்ட மனக்கஷ்டம் சொல்லி முடியாது! அதை எழுதப் போனாப் பெரிய கதை! :(( அதிலிருந்தே கம்பி கட்டறதிலே பயம் உண்டு.

    எங்க மாப்பிள்ளையின் அப்பாவும் இப்படிக்கம்பி மண்டையிலே குத்தினதிலே தான் இறந்தார். அதனால் கொஞ்சம் ஜாக்கிரதையாத் தான் இருக்க வேண்டி இருக்கு! :(((((((

    ReplyDelete
  5. பப்லூ, சென்னை யிலே ஆட்டோவின் விலையும், ஆட்டோ சார்ஜும் கிட்டத்தட்ட ஒன்றுதான். ஆனால் இப்போப் பரவாயில்லைனு நினைக்கிறேன். ஏனெனில் கோடம்பாக்கம் ஹைரோடில் இருந்து நுங்கம்பாக்கம் ஹாடோஸ் ரோடு ஸ்டேட் பாங்க் போக முப்பது ரூபாய் தான் வாங்கிண்டார் ஒரு ஆட்டோக்காரர். அதே திரும்புகையில் ஒன்வேனு சொல்லிச் சுத்தி வரணும்னு ஐம்பது ரூபாய் ஆச்சு.

    ReplyDelete
  6. நீங்க சொல்றது சரிதான். ஆட்டோக்காரங்க அப்படித் தான் கேட்கிறாங்க. அதுவும் எங்க தெருவுக்கு வரதுக்குக் கூடவே பணம் கேட்பாங்க. தெருவை இப்படி வைச்சிருக்கீங்களே னு திட்டுவாங்க. என்ன பண்ண முடியும்? நம் ஒருத்தரால் ஆகிறதா இது? :(((

    ReplyDelete
  7. வாங்க ஜெயஸ்ரீ, உங்க கமெண்டைப் போடறதுக்குள்ளே என்னையும் என்னோட வலைப்பக்கம் படுத்திடுத்து! :P

    ReplyDelete
  8. வாஸ்தவம் தான் வீட்டைப் பராமரிக்க இயலாமலேயே பாதிப் பேர் கொடுக்கிறாங்க. நாங்க முடிஞ்சவரைக்கும் பராமரிக்கணும்னு நினைச்சோம்; நினைக்கிறோம்; என்னனு தெரியலை. பார்க்கலாம். நீங்க சொல்லுகிறது இந்த மாடுலர் கிச்சன் விஷயத்தில் நான் நூறு சதவீதம் ஒத்துக்கறேன். எல்லாரும் என்னை எங்க கிச்சனையே மாடுலரா மாத்தச் சொல்லியும் பிடிவாதமா எல்லாமும் திறந்து தான் இருக்கணும்னு மற்ற இடங்களுக்குக் கதவு போட்டப்போக் கூட சமையலறை அலமாரிகளில் கதவு வேண்டாம்னு பிடிவாதமா இருந்தேன்.

    ReplyDelete
  9. அதே போல் சமையலறைக்குக் காவியோ, சந்தனக் கலரோ, பாதி வெள்ளையோ கொடுக்காமல் முழுக்கவும் வெள்ளையாகவே அடிக்கச் சொல்லுவேன். எல்லாரும் கிச்சன் கலர் தான் கொடுப்பேன்னு பிடிவாதம் பிடிச்சா நான் வெள்ளை கொடுக்கிற வரைக்கும் அந்த இடத்தை விட்டுப் போக மாட்டேன். சமையலறை,காற்றும், வெளிச்சமும் இருக்கணும்,அதோடு அழுக்குப் பட்டால் தெரியணும். அப்போத் தான் சுத்தம் செய்வோம். டாய்லெட்டில் கம்மோட், வாஷ்பேசின் எல்லாமும் வெள்ளைக் கலர் தான். அதனால் தினசரி விடாமல் பராமரிக்கிறேன். ஆனால் இதை யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை. அழுக்குப் பட்டால் தெரியும் னு சொல்லியே வெள்ளைக் கலரை வேண்டாம்னு சொல்றாங்க. பச்சை நிறத்தில் டாய்லெட்டில் அழுக்கு நிறைய இருக்கும்; சட்டுனு கண்டு பிடிக்க முடியாது. அப்படியே விட்டுடுடறாங்க.

    ReplyDelete
  10. சுற்றிலும் இடம் விட்டுச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கட்டும் அடுக்குமாடிக் குடியிருப்புகளை நானும் ஆதரிக்கிறேன். இங்கே வந்து பார்த்தால் புரியும் நாங்க ஏன் குற்றம் சொல்றோம்னு. பக்கத்து குடியிருப்புக்காரங்க கிட்டே எதையும் அவங்க வீட்டு ஜன்னலில் இருந்து கையில் கொடுத்து வாங்கலாம்.

    ReplyDelete