எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 26, 2011

மதுரையில் கொலு பாருங்க!

இது 2009-ம் வருஷம் எங்க வீட்டில் வைத்த கொலுவின் படம். துளசி கோபால் எடுத்தது. இந்த வருஷப் படம் அப்புறமாப் போடறேன். மற்ற விபரங்களும் பின்னர். கீழ்க்கண்ட பதிவு மதுரைமாநகரம் வலைப்பக்கங்களில் மதுரை நினைவுகளில் நான் சில வருடங்கள் முன்னர் எழுதியது. மீள்பதிவுக்கு மன்னிக்கவும்.
************************************************************************************


ம்ம்ம்ம், என்ன சொல்றது? இப்போ நவராத்திரி நேரம்ங்கிறதாலே, சின்ன வயசு நவராத்திரி நினைவுகள் எல்லாம் வருது. நாங்க கழுதை அக்கிரஹாரத்திலே இருக்கும்போது தான் எங்க வீட்டிலே கொலு வைக்க ஆரம்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். விவரம் புரியாத அந்த வயசிலே நவராத்திரிக்கு எங்க வீட்டில் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவும் "சுப்பம்மா" என்னும் முதிய பெண்மணி, (இவர் எங்க அப்பாவை "என்னடா ராமகிருஷ்ணா?" என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவு அதிகாரம் படைத்தவர், குடும்பப் பாட்டு, குடும்ப நினைவு மாதிரி குடும்ப உதவியாளர்) எனக்குக் கிருஷ்ணன் கொண்டையில் இருந்து அஜந்தா கொண்டை, பிச்சோடா, மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துத் தைத்து அலங்காரம் செய்தல் என்று தினம் ஒரு முறையில் அலங்காரம் செய்து விடுவார். பூத் தைத்தல் என்றால் எங்க சுப்பமா நிஜமாவே தலையில் நேரடியாகப் பூக்களை வரிசைப் படுத்தி அலங்கரித்துத் தைப்பார். இப்போ மாதிரி வாழைப் பட்டையிலோ அல்லது வேறு ஏதாவது பட்டையிலோ வைத்துத் தைத்து விட்டுப் பின்னலில் வச்சுக் கட்டறது எல்லாம் இல்லை. வலிக்கும். அதை விடப் பாடு என்னவென்றால், பிரிக்கும்போது நான் கத்தும் கத்தல் தான்.

அண்ணா தலைமை வகிக்கப் பின்னர் தம்பியும் பெரிய பையன் ஆனதும் அவனும் துணைக்கு வர என்னுடைய நவராத்திரிப் பட்டினப் பிரவேசம் நடக்கும். கையில் ஆளுக்கு ஒரு பை எடுத்துக் கொள்வோம். சில தெரிந்த வீடுகளில் அண்ணா, தம்பிக்கும் சுண்டல் அளிக்கப் படும். பொதுவாக அண்ணா உள்ளேயே வரமாட்டார். வெளியே நின்று விடுவார். ஆகையால் தம்பி சின்னவன், குழந்தை என்பதால் அவனுக்குக் கட்டாயம் கிடைக்கும். என்றாலும் அங்கேயே பிரிச்சுத் தின்பது எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் அன்றாடக் கொலு வரவு, செலவுகளை ஒப்பித்துவிட்டு ஒற்றுமையாகப் பகிர்ந்து கொள்வோம்! இந்த, இந்தப் பாக்கெட்டில், இன்னார் வீட்டுச் சுண்டல் என்பது நினைவு வச்சுக்கறது எனக்குத் தானாகவே கைவரப் பெற்றிருந்தது.இது இன்றளவும் என்னோட மறுபாதி ஆச்சரியப் படும் விஷயம், எப்படி இவ்வளவு சரியா நினைப்பு வச்சுக்கறே என்பார். அவருக்குச் சில சமயம் என்னோட பேரே மறந்துவிடும். நீ யாருன்னு என்னைக் கேட்கலை. அந்தளவுக்கு மறதி.

அப்போ எல்லாம் குழந்தைகளுக்குத் தேங்காய், பழம் கிடைக்காது. வெற்றிலை, பாக்கு, சுண்டல் மட்டும்தான். பழம் கொடுக்கும் வீட்டில் சுண்டல் கிடைக்காது. மனசுக்குள் திட்டிப்போம். போன முறை இவங்க வீட்டுச்சுண்டல் உப்பு ஜாஸ்தி, என்றோ, உப்போ போடலை என்றோ பேசிப்போம். அவங்க வீட்டுப் பெண்ணுக்கு என்ன அலங்காரம் என்பது உன்னிப்பாய்க் கவனிக்கப் படும். மறுநாள் வீட்டில் அது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர், அன்றைய என்னோட அலங்காரத்தில் குறிப்பிடத் தக்க மாறுதலோ, அலங்காரமே மாறுதலோ செய்யப் படும். மறுநாள் பிரிக்க நேரமில்லாமல் கொலு அலங்காரத்துடனேயே பள்ளிக்குச் சென்ற அனுபவமும் உண்டு. மேல ஆவணி மூலவீதியில் இருந்த பெரியப்பா வீட்டுக்குத் தினமும் விசிட் உண்டு. லட்சுமி நாராயணபுர அக்ரஹாரத்தில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்குத் தள்ளி இருப்பதால் பெரியம்மா வந்து அழைத்துச்சென்று கொண்டு விடுவார். அங்கே போவது என்றால் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். பெரியம்மா மத்தியானம் மாட்னி ஷோவுக்குக் கல்பனா தியேட்டரில் என்ன படம் ஓடுகிறதோ அதுக்கு அனுப்பி வைப்பார். அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் நிச்சயமாய் அப்பாவுக்குத் தெரியாமல் தான். திடீர்னு அப்பா அங்கே வந்துவிட்டால், பெரியம்மாவின் அப்பா நைஸாக இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் கூப்பிட்டுக் கொண்டிருந்ததால் போயிருக்காங்க, இதோ போய் அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மெதுவாய்த் தியேட்டருக்கு வந்து, நான் உட்கார்ந்திருக்கும் இடம் முன்பே பெரியம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பார், வெளியே இருக்கும் வாட்ச்மேன் அவங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம் என்பதால் அவரிடம் சொல்லிக் கூட்டிப் போய் எச்சரிக்கை செய்து வைப்பார்.

அப்பா வந்திருப்பது தெரியாமல் படம் முடிந்து வந்து படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு மாட்டிக் கொண்டதும் உண்டு. தாத்தா வீட்டுக்குப் (அம்மாவின் அப்பா) போவது இன்னும் ஒரு தனி அனுபவம். அங்கே கொலு எல்லாம் வச்சுக் கட்டுபடி ஆகாது. சும்மாப் போயிட்டு வருவோம். அப்பாவின் அப்பா பத்திச் சொல்லலைனு நினைக்காதீங்க. அவர் என் தம்பி பிறக்கும் முன்னேயே காலம் ஆகிவிட்டார் என்பதால் அவ்வளவாய் நினைவு இல்லை. என்றாலும் அவரைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறும். எல்லா வீட்டு உலாவும் முடிந்து வீட்டுக்கு வந்து எல்லார் வீட்டுச் சுண்டலும் விமரிசங்களுடன் அரைபட்டு முடிச்சதும், சாவகாசமாய்க் கோவில் உலாக் கிளம்புவோம். அப்பா, அண்ணா, தம்பி தனியாப் போவாங்க. நான், அம்மா அக்கம்பக்கம் பெண்களுடனோ அல்லது இரண்டு பேரும் தனியாவோ போவோம். அது வரை எல்லாக் கோவிலிலும் அலங்காரமும் இருக்கும். வீதிகளில் கூட்டமும் இருக்கும். நிதானமாய் மீனாட்சி கோவில், மதனகோபாலசாமி கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில்,கூடலழகர் கோவில் என்று ஒரு நாள் வைத்துக் கொண்டால் மறுநாள் மீனாட்சி கோவில் போயிட்டு வடக்குப் பக்கம் கோவில்களுக்கும், ராமாயணச்சாவடியில் தினமும் செய்யும் அலங்காரமும் போய்ப் பார்ப்போம். இப்போ ராமாயணச் சாவடி அப்படியே இருக்கா தெரியலையே?

6 comments:

  1. நவராத்திரி கொலு படமும், நினைவுகளும் சுவாரசியமா சொல்லி இருக்கீங்க.

    ReplyDelete
  2. உங்களோட நவராத்திரி நினைவுகள் அருமை.நானும் என் தங்கையும் இப்படித்தான் பையை எடுத்துண்டு எல்லோர் வீட்டுக்கும் போனது நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  3. வாங்க லக்ஷ்மி, நல்வரவு. கருத்துக்கு நன்றி.

    ReplyDelete
  4. வாங்க ராம்வி, சுண்டலைப் பத்திய கமெண்டெல்லாம் போடலை; விட்டுட்டேன். இப்போல்லாம் சுண்டல் கலெக்ஷன் குறைஞ்சும் போச்சு!

    ReplyDelete
  5. என்னம்மா நீங்கள் அநியாயத்திற்கு பழைய நினைவுகளைக் கிளறிவிட்டுத்
    துன்பபடுத்துகிறூர்களே.சிம்மக்கல் அக்ரகாரத்தில் வசித்த,வசிக்கும் எனக்கு
    உங்கள் பதிவு மிகவும் இனிக்கிறது.சரி,
    அப்பா பெயர் சொல்லாமல் புதிர் போட்டீர்களே.இப்போது வெளியே வந்து
    விட்டதே.நான் ஊகித்த்து சரிதான்.
    மீள்பதிவிட்டதால்தான் எனக்கு படிக்க முடிந்த்து.நன்றி.அருமையான பதிவு.

    ReplyDelete
  6. இனிய நவராத்திரி நினைவுகள்.

    பிள்ளைகள் சிறுவர்களாக இருந்தபோது கொலுவைப்போம். இப்பொழுது சிறியஅளவில் பிரசாதம் வைத்து வணங்குவோம்.

    ReplyDelete