எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 10, 2012

அப்பாவின் கம்பீரம்!

அப்பாவைப் பார்த்தாலே எங்களுக்கு நடுக்கம் தான்.  தொலைவில் வரும்போதே தெரிந்து விடும்.  இன்னிக்கு என்ன மூடில் வராரோனு பயமாவும் இருக்கும்.  யார் மாட்டிப்பாங்களோனு நினைப்போம்.  அநேகமா அம்மா தான் மாட்டிப்பா.  அம்மாவை அப்பா உண்டு, இல்லைனு பண்ணிடுவார்.  அப்பாவுக்குத் தெரியாமல் ஒரு தூசி கூட அந்தண்டை, இந்தண்டை நகர முடியாது;  நகரவும் கூடாது.  சமையலறையில் கூட அம்மா ஒரு பாத்திரத்தைத் தன் செளகரியத்துக்கு ஏற்ப இடம் மாற்ற முடியாது.  அப்பா கத்துவார்.  அந்தப் பாத்திரம் முன்னிருந்த இடத்துக்கு வரும் வரையிலும் விட மாட்டார்.  ஒரு விதத்தில் பிடிவாதம்னு தோன்றும் இது இன்னொரு விதத்தில் சாமான்களை வைச்ச இடத்தில் வைக்கத் தானே சொல்கிறார்னும் தோணும்.  அம்மா என்ன இதுக்குப் போய் அலட்டிக்கிறானும் நினைச்சுப்பேன்.

எங்கள் அனைவரையும் அடக்கி ஆளும் அப்பாவின் சாமர்த்தியத்தையும், கம்பீரத்தையும் நினைச்சால் கொஞ்சம் பெருமிதமாக இருக்கும்.  அவருக்கு அடங்கிப் போகும் அம்மாவை நினைச்சால் கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கும்.  அப்பா சொல்வது தான் சரி; செய்வது தான் சரி;  இந்த எண்ணம் எனக்குள் ஊறிப் போயிருந்ததுனு சொல்லலாம்.  அம்மாவிடம் அன்பு இருந்தாலும் அப்பாவுக்கு அடங்கித் தானே போறா என்ற அலக்ஷியமும் இருந்தது.  ஒரு தரம் அம்மா கிட்டேக் கேட்டேன். "நீ பெரியவளா? அப்பா பெரியவரா?

"சந்தேகமே இல்லாமல் அப்பாதான் பெரியவர்."

"அப்போ நீ?"

"அப்பாவுக்கு அப்புறம் தானே நான்!" சகஜமான குரலில் தான் அம்மா சொன்னாள்.

"ஆனால்..... மாதா, பிதா,குரு, தெய்வம்னு சொல்லிக் கொடுக்கிறாங்க.  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்னும் படிக்கிறேனே.  என்னோட படிக்கிற எல்லாருமே அவங்க அவங்க அம்மாவைப் பத்தித் தான் பேசறாங்க.  இங்கே சமையல் கூட அப்பா சொல்றது தான் நீ செய்யறே. எங்களுக்கும் செய்து கொடுக்கிறே!  ஏன் அப்படி?"

"ஏன்னா, அப்பா ஒருத்தர் தானே நம்ம வீட்டிலே சம்பாதிக்கிறார்.  அதான்."

"என்னோட நண்பர்கள் வீட்டிலேயும் அவங்க அவங்க அம்மா சும்மாத் தான் வீட்டிலே இருக்காங்க.  எல்லாரும் வேலைக்குப் போகறதில்லை."

"என் கண்ணே," என அணைத்துக் கொண்ட அம்மா, பதிலே சொல்லவில்லை.

அன்று சாயங்காலமாக அலுவலில் இருந்து வந்த அப்பா காபி சரியில்லை என ஒரு பாட்டம் அம்மாவோடு சண்டை போட்டார்.  இது கூடத் தெரியாமல் என்ன பொம்மனாட்டி! என்ற வழக்கமான கத்தல்.  பின்னர் வழக்கம் போலக் கோயிலுக்குப் போய் விட்டார்.  வீட்டிலே என்ன சண்டை நடந்தாலும், அப்பா தன் வரையில் எதுவும் பாதிக்காதவராகவே இருப்பார்.  அம்மாதான் அழுது கொண்டிருப்பாள்.  அப்பா அதையும் லக்ஷியம் செய்ததாகத் தெரியவில்லை.  அன்று விளையாடும்போது என் சிநேகிதர்களில் யாரோட அப்பா வீரமானவர்னு ஒரு பேச்சு வரவே, நான் "எங்க அப்பா தான்!" என்று அடித்துச் சொன்னேன்.  அதற்கான காரணங்களையும் கூறினேன்.  பக்கத்து வீட்டு கோபு சிரித்தான்.  "உங்க அப்பா பயந்தாங்க்கொள்ளி!" எனச் சீண்டினான்.  எனக்கு வந்த கோபத்தில் அவனோடு "டூ" விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

ராத்திரி ஏழு மணி இருக்கும்.  அம்மா கொல்லையிலே பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்தாள்.  திடீர்னு ஒரு அலறல்.  "என்னம்மா, என்ன கொஞ்சறியா?  என்ன அங்கே சப்தம்?" அப்பா கடுமையாகக் கேட்க, அம்மா, "ஒரு பெருச்சாளி, எப்படியோ சமையலறையில் புகுந்திருக்கு.  அது காலில் ஏறிடுத்து.  கத்தவே எங்கேயோ போய் ஒளிஞ்சுண்டிருக்கு."  என்றாள்.

அப்பா திடுக்கிட்ட குரலில், "என்ன பெருச்சாளியா?" என்றார்.

"ஆமாம், அப்படித் தான் இருந்தது."

"சரியாச் சொல்லித் தொலை;  நிஜம்மா பெருச்சாளியா?"

"ஆமாம், ஆமாம், இதோ மறுபடி வெளியே வரப் பார்க்கிறது.  அடுப்பு மேடைக்குக் கீழே போய் ஒளிஞ்சிட்டு இருக்கு."

அப்பா படபடவென எங்களை எல்லாரையும் அழைத்தார்.  நாங்க வேடிக்கை பார்க்கச் சென்றவர்கள், அப்பா இப்போ அதை அடிக்கப் போகிறார்;  குறைந்த பக்ஷமாக அதை விரட்டவாவது முயற்சி செய்வார் என நினைத்துக் கொண்டு, "என்ன அப்பா, உனக்கு நாங்களும் உதவி செய்யட்டுமா?" எனக் கேட்டோம்.  அப்பா எவ்வளவு கம்பீரமானவர்!   அம்மாவையும் அடக்கி ஆள்பவர்.  இந்த வீட்டில் எதுவும் அவருக்குத் தெரியாமல் நடக்காது.  அப்படி இருக்கையில் ஒரு பெருச்சாளி எம்மாத்திரம்!  விரட்டித் தள்ளிட்டுத் தான் மறு வேலை பார்ப்பார்.

நாங்கள் வந்ததும் அப்பா எங்களை அழைத்துக்கொண்டு, கிட்டத்தட்டத் தரதரவென இழுத்துக்கொண்டு, படுக்கை அறைக்குள் சென்றார்.  எங்களை அங்கே தள்ளிக் கதவைச் சார்த்தப் போகிறார் என நினைத்தேன்.  கிட்டத்தட்ட நடந்ததும் அதுவே.  ஆனால் அப்பாவும் கூடச் சேர்ந்து எங்களோடு உள்ளே வந்துவிட்டார்.  கம்பு ஏதானும் தேடறாரோனு நினைச்சேன்.  இல்லை; கம்பெல்லாம் தேடலை.  இங்கிருந்தே அம்மாவுக்குக் குரல் கொடுக்கிறார்.

"மெதுவா அந்தப் பெருச்சாளியை விரட்டப் பாரு.  உன்னால் முடியலைனா அக்கம்பக்கம் யாரையானும் அழைச்சுக்கோ.  நான் இங்கே குழந்தைங்களை பத்திரமாப் பார்த்துக்கறேன்."

அம்மாவின் இதழ்களில் இகழ்ச்சியான (?) சிரிப்பு ஓடியதாக எனக்குத் தோன்றியது.

அப்பா கம்பீரம் இழந்து விட்டார்.


டிஸ்கி:  சில பல பழைய விஷயங்களைத் தோண்டிக்கொண்டிருந்தப்போ கிடைச்ச ஒரு விஷயத்தைக் கதை மாதிரி, கவனிக்கவும், கதை மாதிரிதான். ஆக்கி இருக்கேன்.


பெரிய டிஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்கி:  ஹிஹிஹி, இது மலரும் நினைவுகள் இல்லை.  

18 comments:

 1. அனேகமா பல வீடுகளிலும் இப்படித்தான் இருக்கும்போல இருக்கே.

  ReplyDelete
 2. ஐ... கிட்டத் தட்ட எங்கப்பாவும் இப்படித்தான்... தாட் பூட் தஞ்சாவூர்...! ஆனால் அவர் பாம்பு அடிச்சிருக்கார். அறுபதுகளில் செங்கல்பட்டில் புயலடித்த ஒரு இரவில் தெருவில் ஒரு எருமையுடன் மல்லுக்கு நின்றிருக்கிறார்! பார்வைகளிலிருந்து எங்கோ கிளர்ந்து எங்கோ வந்து முடிந்த நினைவோ....?!! :))

  ReplyDelete
 3. பழைய விஷயங்களை யோசித்து பார்த்தாலே ஒரு சுவாரசியம் தான்.

  அவரவர் பார்வையில் தன்னுடைய அப்பா என்றாலே கம்பீரம் தான் நியாபகத்துக்கு வரும். ஆனால் அம்மா தான் அப்பாவை விட எவ்வளவு விஷயங்களை சமாளிக்கிறார்...

  ReplyDelete
 4. எல்லாரும் மலரும் நினைவுகளாக நினைச்சுட்டீங்க போல! :))))) தெளிவாக்கலை. :)))))

  இது பழைய கடிதங்களைப் படிச்சப்போ கிடைச்ச ஒரு விஷயத்திலே இருந்து எழுதினது.

  என்றாலும் பலர் வீட்டிலும் இப்படித் தான் எனச் சொல்வது ஆச்சரியமாவே இருக்கு. :)))))))

  ReplyDelete
 5. ஹை கோவை 2 தில்லி, வந்தாச்சா?? நல்வரவு. நேத்திக்குச் சாயந்திரம் வரணும்னு ஆசைதான். கூட்டத்தை நினைச்சுட்டுப் போகலை. :(

  ReplyDelete
 6. நன்றாகத் தான் எழுதியிருக்கிறீர்கள்.
  எழுத்தில் கூட ஒரு மாற்றத்தை உணர்ந்தேன். அந்த அரக்கப் பறத்தல் அவசரம் இல்லை. நிதானமாக, நேர்த்தியாக, அனுபவித்து.. சொல்லிக் கொண்டே போகையில்,நான் வெறும் கதை சொல்லி இல்லை, எழுத்தாளரா க்கும் என்று தெரியப்படுத்துகிற, 'நேக்' தெரிஞ்சு அங்கங்கே புகுத்திய உரையாடல் வேறு. நடுவில் ஸ்ரீராம் வேறு எங்கோ, எங்கோ என்று என்னவோ சொல்கிறார்!

  பெருச்சாளி சீனில் வருவதற்கு முன் நான் வேறொன்று நினைச்சேன். அடுத்த வீட்டுக்காரர், எதிர்த்த வீட்டுக்காரர் துவஜம் கட்டிக் கொண்டு எதற்காகவோ வீட்டு வாசலில் மல்லுக்கு நிற்கையில், அம்மா போய் எதிர்கொள்வதாகவும், அப்பா அறையில் பதுங்குவதாகவும்..

  பதினைஞ்சு பதினாறு வயது வரை அப்பா ஹீரோ தான் பலருக்கு; அப்புறம் தான் ஆரம்பிக்கும், "போப்பா.. ஒனக்கு ஒண்ணுமே தெரிலே'ங்கறதெல்லாம்!..

  ReplyDelete
 7. கதை மாதிரி நல்லவே வந்திருக்கு தலைவி...உண்மையும் கூட ;))

  ReplyDelete
 8. வாங்க லக்ஷ்மி, அப்படியா? :))))

  ReplyDelete
 9. வாங்க ஸ்ரீராம், இது ஒரு நகைப்பான சம்பவத்தை வைத்து எழுதப்பட்டது. :)))) இப்போவும் நினைச்சு நினைச்சுச் சிரிப்பேன்.

  ReplyDelete
 10. வாங்க கோவை2தில்லி, நல்வரவு. அம்மாக்கள் எப்போதுமே சாமர்த்தியசாலிகளே. :)))))

  ReplyDelete
 11. ஹை ஜீவி சார், வ.வா.பி.ரி. கிடைச்சிடுச்சு. ரொம்ப நன்றிங்க. இது உண்மையான ஒரு சம்பவத்தை வைத்துப் பின்னப்பட்டது. :))))) ரசனைக்கு நன்றி.

  ReplyDelete
 12. கோபி, நல்வரவு. கருத்துக்கு நன்றி

  ReplyDelete
 13. அப்பா கம்பீரம் இழந்து விட்டார்.

  ReplyDelete
 14. வாங்க வாங்க ராஜராஜேஸ்வரி, வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 15. எல்கே, சிரிச்சால் என்ன அர்த்தம்?

  ReplyDelete
 16. கதைன்னு கடைசில சொல்லலைன்னா, நாங்க மலரும் நினைவுகள்னு நினைத்திருப்போம்!

  நல்ல பகிர்வும்மா...

  ReplyDelete