எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, October 29, 2012

உங்க டூத் பேஸ்டுல உப்பும் வேம்பும் இருக்கா?''


தினமணி கதிர் அக்டோபர் 7 ம் தேதி இதழில் வெளிவந்த இந்தக் கதை மாறும் சமூக மதிப்பீடுகள் குறித்த மிகவும் சிறந்த வெளிப்பாடு....வாசியுங்கள்...


என்னுடைய சிறிய தகப்பனார் கோயில் குளமெல்லாம் போகமாட்டார். ஆனா பாதயாத்திரை யார் போனாலும் அடிக்கடி போவார். அதுக்கு அவருடைய விளக்கம்: ""நடையன் போடாம இந்த மண்ணுல நடக்கனும்டா அப்பத்தான் இந்த பூமிக்கும் நமக்கும் ஒரு பந்தம் இருக்கிறது புரியும். எந்தவித இடைவெளியும் இல்லாம, ஈர்ப்பு சக்தியின் உணர்வோட, தாயோட தொப்புள்கொடியோட சேருறது போல இருக்கும். அனுபவிக்கணும்டா, காலே வலிக்காதுடா. கல்லு குத்துறதலையும் ஒரு சொகம் இருக்குடா'' அப்படிம்பார்.
அம்மான் மகளான என் மனைவி சொன்னாள்: ""ஏங்க வீடு கட்றப்ப, வாச விரிவா இருக்கனுங்க, முன்னாலையும் பின்னாலையும். முன்வாசல்ல அக்கம்பக்கதோட பேசறாப்லையும், மார்கழி மாசம் பூக்கோலம் போடறாப்லையும், பின்னாடி அரிசி பருப்பு காய வைக்றாப்லையும் இருக்கட்டுங்க. ரொம்ப ஒசத்தி கட்டவேணாங்க, மாமா அத்தைக்கெல்லாம் வயசாகிட்டே போகுது. அவங்க சுளுவா நடமாடனுங்க''தலையாட்டினேன்.
அவர் சொன்னார், ""மாப்ளே கட்றதுதான் கட்றீங்க, ஒரு மாடி வீடும் சேத்து கட்டி விட்ருங்க. அதுக்கு தனி பாதை வச்சுருங்க. ஏன்னா, இடம் ஊருக்கு வெளியே தள்ளி இருக்கு. மேல ஒரு துணைக்கு குடி வைக்கலாம்ல. வருமானத்துக்கு இல்லாட்டியும், ஒரு நல்ல மனுசாள குடில்ல வச்சா, அவசர ஆத்திரத்துக்கு இருப்பாகள்லே. நீங்களும் அடிக்கடி ஊரு பேருன்னு அலையிறவரு. அப்புறம் நாளைக்கு ஏதும்னாலும், ஒரு கைச்செலவுக்கு தோதா இருக்கும்ல'' தலையாட்டினேன்.
கவிதையும் தத்துவமுமாய் வாழும் என் நண்பர்சொன்னார்: ""டேய் நிலமோ வீடோ, நம்ம ஐம்புலனும் ஆட்சி செய்யிற இடமா இருக்கணும்டா. கண்ணுக்கு குளிர்ச்சியா, காதுக்கு இதமா, கெட்ட வாடை இல்லாம, காற்று நேரடியா உடம்புல படர மாதிரியும், சுவையான தண்ணி ஆதாரமும் இருக்கும் வகையிலே சூழ்நிலைய அமைச்சுக்கணும்டா. சத்தம் அதிகம் இல்லாம, சுத்தமா இருக்கணும். வீட்டுக்குள்ளே நல்லா பசியும் ஆறணும். அதே நேரத்துல மனசும் ஆறணும்டா'' தலையாட்டினேன்.
இதல்லாம் மனசுல வச்சு, நானும் கொத்தானாரும் கலந்து ஆலோசிச்சு, வானம் தோண்டறதுக்கு நாள் குறிச்சு, குலதெய்வத்தை வேண்டிகிட்டு, வீடு கட்டற வேலைய ஆரம்பிச்சோம். பின்புறத்துல கேணி வெட்டுனா, தண்ணி சில அடியிலயே வந்துருச்சு. இனிப்புன்னா இனிப்பு அப்படி ஒரு இனிப்பு. நிலையா இருக்கணுமுன்னு நல்ல நாள் பாத்து நிலையும் வச்சு, கட்டடம் கட்டறவங்களுக்கு விருந்தும் வச்சோம். இடத்துக்கு நட்ட நடுவுல வீடு கட்டி, முன்னாடியும் பின்னாடியும் வாசல் வச்சு, மாடி வீடும் கட்டி, சொந்த பந்தமெல்லாம் வரவழச்சு , பால் காய்ச்சி குடி போன நாள்ல இருந்த முழுமையான உணர்வு, இதுவரைக்கும் திரும்பவும் அமையலை.
உடல் உழைப்பு அதிகம் இல்லாத குடும்பத்துல பொறந்தவன் நான். எனக்கு தெரிஞ்சதெல்லாம் கணக்கு .. கணக்கு .. கணக்கு ... மூளை உழைப்புன்னு வேண்ணா சொல்லிக்கலாம். நல்லா வருமானமும் வந்துச்சு. ஆனா மனசோரத்துல, ஒரு உறுத்தல், நெருடல் இருந்துக்கிட்டே இருந்துச்சு. அது என்னனா, அடுத்தவங்க உடல் உழைப்புலயே வாழறோமே, விளைச்சல் செய்யிறவங்களவிட நாம வசதியா வாழறோமே அப்படின்னு. கோயில் குளமுன்னு தானம் தர்மமும் என்னால முடிஞ்ச அளவு செஞ்சு பார்த்தேன். மனசாறலை. வயல்ல இறங்கி வேலை செய்யிறதுக்கு பழக்கப்படாத உடம்ப வச்சுக்கிட்டு என்னால அதுக்கு ஒண்ணும் பண்ண முடியல.
சரி நம்மால முடிஞ்சது, மரஞ்செடிகொடியாவது வீட்ட சுத்தி வளப்போம்னு முடிவு செஞ்சு தோட்டம் போட்டேன். தென்னை மரம் மாதிரியெல்லாம் வளர்த்து நம்மால ஏற இறங்க முடியாதுன்னு, மாமரம், வாழைமரம் வச்சு காய்கறிச்செடிபோட்டேன். என் மனைவி சில பூச்செடியும், துளசிச்செடியும், கற்பூரவள்ளி, மணத்தக்காளி செடிகளும் வளர்த்தா. ஆரம்ப பள்ளிக்கூடத்துல படிச்ச ஞாபகம், ஆலும் வேலும் பல்லுக்கு உறுதின்னு. ஆலமரம் வளக்க இடமில்லாட்டியும், வீடு முன்புறம் ஒரு வேப்பங்கன்று நட்டு வச்சேன்.
தெனமும் முன் வாசல்ல அரிசி மாவு கோலம் போட்டு எறும்புக்கு தீனி வச்சோம், பின் வாசல்ல மூதாதையர் நினைவா காக்கைக்கு சோறு வச்சோம். சொந்தபந்தங்களுக்கும், திருவிழா படையலுக்கும் வாழை இலையில விருந்து வைப்போம். அப்பல்லாம் எம்பையன் நுனி இலைதான் வேணும்பான். மத்த நாள்ல காய்கறி சாப்பிட அடம் புடிக்கிற பய, நம்ம தோட்டத்துல அவன் தண்ணி ஊத்தி வெளஞ்ச காய்கறின்னா உடனே சாப்புடுவான். துளசி இலய பிச்சு பிச்சுத் திம்பான். வாய்ப் புண்ணு வந்தா மணத்தக்காளியும், சளி புடிச்சா கற்பூரவள்ளியும் பக்குவம்மா ஆக்கி தருவா எம்மனைவி. சட்டுன்னு கேக்கும்.
ஒரு தடவ, வேப்ப மரத்தடியில அவன் ஒன்னுக்கு போறத பார்த்தேன். ""டேய் நான் ஆசையா வெதச்சு வளத்த மரத்துல ஒண்ணுக்கு அடிக்கிறியேடா, நியாயமா?'' ன்னு கேட்டேன். அதுக்கு அவன் சொன்னான், ""அப்பா நான் பாடத்துல படிச்சிருக்கிறேம்ப்பா, யூரின்ல யூரியாங்க்ற உப்பு இருக்காம்ப்பா. அதனால, நான் ஒண்ணுக்கு அடிக்கிறதுனால, வேப்பமரம் நல்லா வளர உரந்தான் போடறேன்''
எங்க தகப்பனார் , "".....இச்சுவை தவிர யான் போய், இந்திரலோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமா நகருள்ளானே'' என்று ஆழ்வாரை பாடியதுமாய், நான், ""எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா'', என்று பாரதியை பாடியதுமாய், என் மகன், ""மண்ணில் இதைவிட சொர்க்கம் எங்கே?'' என்று ஜேசுதாசை பாடியதுமாய் கழிந்த சொகமான நினைவுகள் பசுமரத்தாணி போல அப்படியே இருக்கு.
அவன் கை நெறைய சம்பாரிக்கிறான். எம்பையன் எங்க மேல வச்சிருக்கிற அன்புக்கும், மதிப்புக்கும், மரியாதைக்கும், எள்ளளவும் குறைச்சல் இல்ல. எம் மருமக எங்க வீட்டுக்கு வந்திருக்கிற வாழ்வரசி. எங்களுக்கு மகள் இல்லாத குறைய போக்க வந்த குணவதி. நல்லா படிச்சவ. பேரனும் பேத்தியுமா ரெண்டு பேரப்புள்ளைங்க, ""அய்யா அய்யா'', ""அப்பத்தா அப்பத்தா''ன்னு உசிரா சுத்திச்சுத்தி வருதுங்க. பிள்ளைங்க முழு நேர பள்ளிக்கூடம் போறவரைக்கும், வீட்ட மட்டும் கவனிச்சுகிட்டிருந்த மருமக, இப்ப அந்த பள்ளிக்கூட நேரத்துக்குள்ள வேலைக்கும் போயிட்டு வரா.
எம்பையன ஒருநாள் கூப்பிட்டு பேசுனேன், ""இங்க பாருப்பா நான் நிறைவா என் கடமையெல்லாம் செஞ்சுட்டேன்னு நினைக்கிறேன். நீயும் நல்லா இருக்க. இந்த வீடு உட்பட மத்ததெல்லாம் உன்கிட்ட ஒப்படைச்சிட்டேன். இந்த காலகட்டத்துக்கு எது செüகரியமோ அத பாத்து செஞ்சுக்கப்பா. உங்களோட எதிர்காலத்துக்கு எது தோதோ, அதபத்தி நீயே முடிவு பண்ணிக்கப்பா''
எங்களையும் சேத்து மொத்த குடும்பமாய் போய்வறதுக்கு தோதா ஒரு பெரிய காருக்கு, அட்வான்ஸ் கட்டிட்டு எம்பையன் சொன்னான்,""அப்பா இன்னும் ஒரு மாசத்துல கார் டெலிவரி கொடுத்துருவாங்க. கார் நிப்பாட்ட எடம் வேணும்ப்பா. அதனால ஒரு பக்கம் தோட்டத்த சுத்தம் செஞ்சிட்டு, கார் ஷெட் போட்ருவோம்ப்பா. இன்னொரு விஷயம், நம்ம வீட்டுக்கு பக்கத்திலயே ப்ரஷ் காய்கறி டிப்பார்ட்மெண்ட் ஸ்டோர் வந்துருச்சு. வேணுங்கிறத போன்ல சொல்லிட்டா போதும். எப்ப வேண்ணாலும் வீட்லே வந்து குடுத்துருவாங்க'' .
எம்பையன் சொன்னான், ""ரொம்ப வருசமா மாடி வீட்ல வாடகைக்கு இருந்தவங்க அடுத்த மாசம் காலி பண்ண போறாங்களாம். எனக்கு தெரிஞ்ச ஒரு ம்யூச்வல் பண்ட் கம்பெனிக்காரங்க, ஒரு ஆபீசுக்கு இடம் வேணுங்றாங்க. நல்ல அட்வான்சும், வாடகையும் தரேங்றாங்க. அத வச்சே நம்ம வீட்டையும் கொஞ்சம் மராமத்துபண்ணிடலாம்ப்பா. மேல்வீட்ட கொஞ்சம் ரீமாடல் செஞ்சா போதும். அதுவும் அவங்களே செஞ்சுக்கிறாங்களாம்''.
எம்பையன் சொன்னான், ""ஏம்பா வீட்டை இடத்துக்கு நட்ட நடுவுல கட்டினீங்க? எதுக்கும் பயன்படாம சுத்தி காலி இடம் வேஸ்டா கிடக்குது. வீட கொஞ்சம் ஒரு பக்கமா கட்டி இருந்தா, நாலு கடை கட்டி வாடகைக்கு விட்ருக்கலாம். சரி அது போகட்டும். அந்த ஏ.டி.எம் - மாமரம் இடத்துல, நான் ஆலோசகராக இருக்கிற பேங்க்காரங்க, ஒரு ஏ.டி.எம் சென்டர் வச்சுக்கிறேங்றாங்க. நல்ல வாடகையும் தருவாங்க. அந்த சென்டருக்கு ஷிப்ட்டு முறையில இருவத்துநாலுமணி நேரமும் செக்யூரிட்டி போட்ருவாங்க. நமக்கு வருமானத்துக்கு வருமானம். பைசா செலவு இல்லாம செக்யூரிட்டியும் அமைஞ்சுரும். நாங்க இல்லாதப்ப, நீங்க மட்டும் தனியா இருக்கிறப்ப, உங்களுக்கும் ஒரு பாதுகாப்புக்கும் ஆச்சு. மரத்துப்பக்கம் பூச்சி அட்டையெல்லாம் வேற வருது''.
எம்பையன் சொன்னான், ""இந்த பழைய வீட்ட மெயின்டைன் பண்றது கஷ்டமா இருக்கு. எம் பொண்டாட்டியும் வேலைக்கு போறா. நீங்களும் தனியா இருக்கீங்க. என் ப்ரண்ட் ஒருத்தன் ஆர்கிடெக்டா இருக்கான். அவன் ஒரு யோசன சொன்னான். இந்த வீட்ட இடிச்சிட்டு, பெரிசா ஒரு அப்பார்ட்மென்ட் கட்டிறலாம். நமக்கு ரெண்டு வீடு கீழ் ப்ளோர்ல, நம்ம தோதுக்கு எடுத்துக்கிட்டு மத்தத வித்திரலாம். இல்லாட்டி வாடகைக்கு விடலாம். கோடி கணக்குல லாபம். அதேநேரத்துல, ரெண்டு அருமையான மாடர்னான அப்பார்ட்மென்ட் வீடு பைசா செலவு இல்லாம கிடைச்சுரும். அதுவரைக்கும்நாமஎல்லோரும் உங்க மருமக ஆபீஸ் குவார்டர்ஸ்ல தங்கிக்கலாம்'' வாழ வந்தவ வீட்டுக்குத்தானே நாம வாழப்போறோம்ன்னு நினைச்சுக்கிட்டேன் நான், ""அதுக்காக செலவழிச்சு கட்டின வீட்ட இடிக்கனுமா?'' ன்னு கேட்டேன். அதுக்கு அவன், ""இந்தவீடுகட்ட நீங்க செலவழிச்சத, இந்த காலத்து பண மதிப்போடவட்டியும்சேத்தாக்கூட, வீட இடிக்கிற செலவு அதிகமாஇருந்தாலும்இருக்கும்ப்பா'' ன்னு சொல்லி லேசா சிரிச்சான்.
நண்பரோட வீட்டு கல்யாணத்துக்கு போயிட்டு, பக்கத்துல இருக்கிற கோயில் குளம் பாத்துட்டு வரலாம்னு, வெளியூர் போய் இருந்தேன். போக, வர டிரைவரோட கார் ஏற்பாடு பண்ணி, நானும் என் மனைவியும் தங்குறதுக்கு, அந்தந்த ஊர்லலாம் ஒரு குறையும் இல்லாம வசதியும் பண்ணி கொடுத்தான் எங்க மகன். தொடர்புல இருக்கிறதுக்காக ஒரு புது செல்போனும் வாங்கி கொடுத்தான்.
அப்ப ஒருவாட்டி, எம்பையன் போன்ல சொன்னான், ""அப்பா அப்பார்ட்மென்ட் கட்டறத பத்தி அப்புறம் முடிவு பண்ணிக்கலாம். அதுக்கு முன்னாடி, அந்த வேப்ப மரம் இருக்கில்ல, அந்த இடம் நல்ல விஷன்ல இருக்காம்ப்பா. அங்க அட்வர்டைஸ்மென்ட் போர்டு வைக்கலாம்னு அட்வர்டைஸிங் கம்பெனி ஆளுங்க கேக்குறாங்க. அத வச்சா நம்ம இடம் பிரகாசமாவும், ஒரு நல்ல லேண்ட் மார்க்காவும் ஆயிரும். சைடு வாக்குல தூசியும் வராது. அவங்க போர்டு வச்சுக்க எடுத்துக்கப்போற இடம் ரொம்ப சின்னது. ஆனா, மாச மாசம் கணிசமா வாடகை தருவாங்க. ஆனா ஒரு சின்ன பிரச்னை. அந்த வேப்ப மரம் வியூவ மறைக்குதாம். அத வெட்டிரலாம்பா. அதையும் அவங்களே பண்ணிக்கிறாங்களாம். அதுக்குரிய ஈடையும் கொடுத்துறாங்களாம். அப்புறம் அம்மாவுக்கும் உங்களுக்கும் உடம்பெல்லாம் சுகமாத்தானே இருக்கு'' தலையாட்டினேன்.

எழுதியவர் 
சுப.திருப்பதி.
இன்று எனக்கு எங்க உறவினரிடம் இருந்து வந்த ஃபார்வர்ட் மடலில் படித்தது . படிக்கும்போதே நெஞ்சு விம்மி, மனம் கலங்கியது.  ஒரு வீடு  என்பது வெறும் கற்களாலும், சிமென்ட், மணலாலும், ஜல்லிகளாலும் ஆன கட்டிடம் மட்டும் அல்ல.  அது ஒரு உணர்வு.  வாழ்க்கை. ஜீவன் இன்னும் என்ன என்னமோ. இதைப் படிக்கையில் அம்பத்தூரில் எங்க வீடும் முன் வாசலில் இருக்கும் வேப்ப மரமும் நினைவில்(எங்கே மறக்க) வந்தது. எங்க பையர் இப்படி எல்லாம் சொல்லலை என்றாலும் என்றோ ஓர் நாள் இந்த முடிவு தான் ஏற்படப் போகிறது என்ற எண்ணத்தைத் தவிர்க்க முடியவில்லை.  ஏனெனில் வீட்டின் இருபக்கமும் அடுக்கு மாடிக் குடியிருப்புகள், எதிரேயும், அடுக்குமாடிக் குடியிருப்பு.  சுற்றிலும் இப்படி இருக்க எங்க வீடு மட்டும் இப்போதைக்குத் தன்னந்தனியாய் இருக்கு.  என்னதான் சென்னை பிடிக்கலைனாலும் கட்டின வீட்டில் வாழ முடியவில்லை என்பது துன்பம் தான்.  மக்கள் இனியாவது விழித்துக்கொள்வார்களா????????????

31 comments:

 1. ஒரு வீடு என்பது வெறும் கற்களாலும், சிமென்ட், மணலாலும், ஜல்லிகளாலும் ஆன கட்டிடம் மட்டும் அல்ல. அது ஒரு உணர்வு. வாழ்க்கை. ஜீவன் இன்னும் என்ன என்னமோ.

  உயிரோட்டமான் வரிகள் !

  ReplyDelete
 2. படித்த ஞாபகம் இருக்கிறது. ரிஷபன் சமீபத்தில் எழுதிய வீடு பற்றிய கவிதை படித்தீர்களோ?

  ReplyDelete
 3. கதையின் வலியும் உண்மை. உங்கள் ஆதங்கமும் உண்மை.
  பழையன கழிய வேண்டும் என்பதும் தவிர்க்கமுடியாதது. என்ன செய்ய? கொஞ்சம் அமர யோசித்துப் பார்த்தால் பழையன கழிதல் நல்லது தான் என்று தோன்றலாம்.

  ReplyDelete
 4. மனதை கலங்க வைத்தது.இது கதையே அல்ல நிதர்சனமான உணமை.

  ReplyDelete
 5. When I read this post I also remembered your home. manasu ganathu poyiduthu maa

  ReplyDelete
 6. வாங்க ராஜராஜேஸ்வரி, கருத்துக்கு நன்றி.

  ReplyDelete
 7. வாங்க வா.தி. என்ன ஆச்சு? :)))

  ReplyDelete
 8. வாங்க ஸ்ரீராம், ரிஷபன் கவிதையா? படிக்கிறேன்.

  ReplyDelete
 9. அப்பாதுரை, வாங்க. பழையன கழிதல் வேண்டும் என்பது ஏன் தவிர்க்க முடியாது? புரியலை. எல்லா இடங்களிலும் பழமை என்பது கலாசாரம் எனப் பழமையைப் பேணும்போது நம்நாட்டில் விவசாய நிலங்கள் கூட அடுக்கு மாடிக் குடியிருப்புகளாக மாறிக் கொண்டு வருகிறது. அப்புறமா அரிசிக்கு என்ன செய்வாங்க? டூத் பேஸ்டில் இருக்கும் உப்புக்கும், வேம்புக்கும் வெளிநாட்டினர் கையையா எதிர்பார்க்கிறாங்க? ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பு கட்டணும்னா என்ன என்ன வசதிகள் இருக்கணும், எவை எவை இருக்கக் கூடாது என்பது என்னை விடவும் உங்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அப்படியா இங்கே எல்லாம் கட்டறாங்க?ஆற அமர யோசிக்க வேண்டியது இளைய தலைமுறை தான். வருங்காலத்துக்கு என்னத்தை விட்டுட்டுப்போகப் போகிறோம்னு நினைக்கவே கலக்கம் ஜாஸ்தியாகிறது. :((((((((

  ReplyDelete
 10. வாங்க ராம்வி, புரிதலுக்கு நன்றி.

  ReplyDelete
 11. வாங்க சுபா, ஆறுதல் வார்த்தைகளுக்கு நன்றி.

  ReplyDelete
 12. வீடு என்பது கற்களாலும் சிமெண்ட்டாலும் மட்டும் ஆனது அல்ல..... எவ்வளவு சந்தோஷங்களையும், நிகழ்வுகளையும் உள்ளடக்கியது....

  இதை படிக்கும் போதே மனதை கலங்க வைத்தது.

  ReplyDelete
 13. கதை மனதை கனக்க வைத்தது.

  மாற்றம் ஒன்றே மாறாதது... என்பது தான் நினைவுக்கு வருகிறது.

  ReplyDelete
 14. அப்படிங்கறீங்களா?
  இப்போ ஏன் குமிட்டி வரட்டியடிப்புனு உபயோகிக்கறதில்லே? நம்ம குழந்தைகளுக்கு ஏன் வித விதமா உடை வாங்கிப் போடுறோம்? ஏசி பேன் ப்ரிஜ்னு ஏன் வாங்கிப் போடுறோம்? பஸ்லயும் ப்ளேன்லயும் ஏன் போறோம்? மாட்டு வண்டியை ஏன் மறந்தோம்? செல்போன் ஏன் உபயோகிக்கிறோம்? இதையெல்லாம் பொருந்தாத உதாரணமா சுலபமா ஒதுக்கிடலாம். ஆனா இது எல்லாமே அடிப்படையில் பழையன கழிதல் தான். இதையெல்லாம் ஏத்துக்கிட்ட நம்மளால் இன்னும் சிலவற்றை சுலபமா ஏத்துக்க முடியலே. அனுபவித்த வரைக்கும் பிரமாதமானம்னு நெனச்சா நிறைவு கிடைக்கும்னு நம்பறேன். நம்மளைச் சுத்தி எல்லாமே தம்மைத் தாமே புதுப்பிச்சுட்டுத்தான் இருக்கு.

  ReplyDelete
 15. change is the norm of the world! செண்டிமெண்ட்ஸ் !! வருத்தம் தான். ஆனா பையரும் தப்பா ஒன்னும் சொல்லலியே.. நாம "அப்பா உன் இஷ்டம்னு" உரிமையை பிறத்தியாரிடம் தந்தப்புறம் பிறத்தியார் மேல பழுது இல்லை. இன்னிக்கு நடைமுறைல ஒரே மாதிரி எல்லாரும் நினைக்கணுனு கட்டாயம் இல்லை தானே. நடைமுறையில் எனக்கு இன்டிபென்டென்ட் ஆ இருக்கணும்னு சொல்லற பெற்றோர்களும் எத்தனை நாள் அப்படி இருக்க முடியறது. எனக்கு எதிர்பார்ப்பு இல்லைன்னு சொல்லற பெற்றோருக்கும் நிறைய பேருக்கு ரொம்பவே எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் இருக்கு. நம்ப கையில் இருக்கும் வரை நம்ப ப்ரின்சிபில் படி இருந்துடலாம்.
  படிச்சப்புறம் எனக்கு உதயமானது:-
  மாற்றத்துக்கு தயாராத்தான் இருக்கணும்;
  ஆசைதீர நம்ப கையில் வலுவு இருக்கிற வரை நம்ப நம்பிக்கைக்கு ஏத்தாப்பல இருந்துட்டு
  போக வேண்டியது.
  போகும் போது ஒரு நுண் மண்ணு கூட நம்ப கூட வரப்போறது இல்லை.
  நம்ப வழில சந்ததி நினைக்கலைன்னாலும் கெடுதல் விளையாமல் நல்லதே நடக்கட்டும். இதுதான் . ஆனா முக்கா வாசி குழந்தைகளுக்கு தகப்பன் தாயோட சென்டிமன்ட் நன்னாவே தெரியறது . மதிப்பும் தரா. அதையும் நமக்கு appreciate பண்ண தெரியனும் is it not?

  ReplyDelete
 16. change is the norm of the world! செண்டிமெண்ட்ஸ் !! வருத்தம் தான். ஆனா பையரும் தப்பா ஒன்னும் சொல்லலியே.. நாம "அப்பா உன் இஷ்டம்னு" உரிமையை பிறத்தியாரிடம் தந்தப்புறம் பிறத்தியார் மேல பழுது இல்லை. இன்னிக்கு நடைமுறைல ஒரே மாதிரி எல்லாரும் நினைக்கணுனு கட்டாயம் இல்லை தானே. நடைமுறையில் எனக்கு இன்டிபென்டென்ட் ஆ இருக்கணும்னு சொல்லற பெற்றோர்களும் எத்தனை நாள் அப்படி இருக்க முடியறது. எனக்கு எதிர்பார்ப்பு இல்லைன்னு சொல்லற பெற்றோருக்கும் நிறைய பேருக்கு ரொம்பவே எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் இருக்கு. நம்ப கையில் இருக்கும் வரை நம்ப ப்ரின்சிபில் படி இருந்துடலாம்.
  படிச்சப்புறம் எனக்கு உதயமானது:-
  மாற்றத்துக்கு தயாராத்தான் இருக்கணும்;
  ஆசைதீர நம்ப கையில் வலுவு இருக்கிற வரை நம்ப நம்பிக்கைக்கு ஏத்தாப்பல இருந்துட்டு
  போக வேண்டியது.
  போகும் போது ஒரு நுண் மண்ணு கூட நம்ப கூட வரப்போறது இல்லை.
  நம்ப வழில சந்ததி நினைக்கலைன்னாலும் கெடுதல் விளையாமல் நல்லதே நடக்கட்டும். இதுதான் . ஆனா முக்கா வாசி குழந்தைகளுக்கு தகப்பன் தாயோட சென்டிமன்ட் நன்னாவே தெரியறது . மதிப்பும் தரா. அதையும் நமக்கு appreciate பண்ண தெரியனும் is it not?

  ReplyDelete
 17. வாங்க கோவை2தில்லி, புரிதலுக்கு நன்றி.

  ReplyDelete
 18. வெங்கட், நன்றிப்பா.

  ReplyDelete
 19. அப்பாதுரை, எங்க கிராமத்திலே இன்னமும் விறகு அடுப்புத்தான். அங்கே போனால் ஒரு சில தயாரிப்புகளுக்கு நானும் அதிலேயே சமைப்பது உண்டு. குமுட்டி இரு வருடம் முன்னால் கூட நான் ஒரு நாள் முழுதும் சமையலுக்குப் பயன்படுத்தி இருக்கேன். தேவையானால் உடனே எடுக்கும்படியாகக் குமுட்டி தயாராக இருக்கிறது. :))))

  இப்போதைய செளகரியங்கள் எல்லாம் இருந்தாலும் அவற்றால் நம்மால் முழுப் பலன் அடைய முடியாதபடிக்கு மின் தடை வந்து விடுகிறது. இந்தியாவில் மின் தடை இல்லாத மாநிலமே இல்லைனு சொல்லலாம்.

  ReplyDelete
 20. சென்னையிலே இருந்த வரைக்கும் அம்மியைத் தினம் பயன்படுத்தினேன். விதவிதமான உடைகள் குழந்தைகளுக்கு வாங்கியதில்லை. :))))) ஏசியைப் பயன்படுத்த எங்கே மின்சாரம்?? பழைய கைவிசிறிக்குத் தான் வர வேண்டி இருக்கு! :))) பேருந்துகளும், ரயிலும், விமான சேவையும் வேறு. வீடும், வீட்டில் வாழுவதும், அதன் நிகழ்வுகளும், நம்மால் மறக்க இயலாத சம்பவங்கள் வீடோடு தொடர்பு கொள்வதும் வேறு. வீடு ஒரு உயிருள்ள ஜீவன். மற்றவை தேவைனாப் பயன்படுத்தலாம். தேவை இல்லைனா தூக்கி எறிஞ்சுட்டு நிம்மதியா இருக்கலாம். வீடு வாழ்வதற்கான இடம். அது இல்லைனா வாழ்க்கை ஏது? வாழ்வாதாரம்னு கூடச் சொல்லலாமோ?

  ReplyDelete
 21. என்னாலே உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லத் தெரியலைனு நினைக்கிறேன்.

  ReplyDelete
 22. வாங்க ஜெயஶ்ரீ, ரொம்ப நாளாச்சு வந்து. எங்க பையர் இன்னி வரைக்கும் வீட்டை விற்கவோ, அடுக்குமாடிக் குடியிருப்புக்குக் கொடுக்கவோ வேண்டாம்னு தான் சொல்றார். இப்போதைக்கு வாடகைக்கு விட்டிருக்கோம். அங்கே அக்கம்பக்கம் இருக்கும் சூழ்நிலையில் எங்களால் ஒத்துப் போக முடியவில்லை என்பதால் விட்டு விட்டு வந்துட்டோம். இங்கே இருப்பதும் அடுக்கு மாடிக் குடியிருப்புத்தான் என்றாலும் பிறருக்கு எந்த வகையிலும் தொந்திரவு வராவண்ணம் கட்டப்பட்டிருக்கிறது. சென்னையில் அப்படி இல்லை. பக்கத்துக் கட்டிடத்து மாடிக் குப்பை நாம் தோட்டத்தில் இருந்தால் நம் தலை மீது தான்! :))))

  ReplyDelete
 23. நான் பொதுவாகச் சொன்னேன். கரென்ட் கட் தமிழ்நாட்டில தானே? குஜராத் போனா இதையெல்லாம் பயன்படுத்தாம இருப்பீங்களா? மக்கள் இருப்பாங்களா? நான் சொல்ல வந்தது - வசதிக்கேற்றபடி நம் மனநிலைகள் மாறுகிறது என்பதை. மாற்றத்தை மாற்றமாகப் பார்க்காமல், தன்னிலைப் படுத்திப் பார்க்கையில் சில மாற்றங்களை ஏற்க முடியாது போகிறது. சுய கண்ணோட்டத்தை விடுத்த புறப்பார்வையில் மாற்றங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. குடியிருக்க வீடு தானே தேவை - வாடகை வீட்டில் இருக்கலாமே? வானமே கூரை என்று கூட தேவைப்படும் பொழுது சொல்கிறோமே? கதை என்ற வகையில் உணர்வுகளைத் தட்டிச்செல்கிறது. ஆனால் இதை யதார்த்தப் பார்வையில் பார்க்கையில் பிள்ளையின் செயலில் தவறே இல்லை - பெரியவரின் பார்வையில் சுயநலமே தெரிகிறது.

  ReplyDelete
 24. அப்பாதுரை, உங்க பின்னூட்டத்துக்குப் பதிவாய்த் தான் போடணும். :)))))மெதுவா வரேன்.

  ReplyDelete
 25. வாங்க வாங்க.. அதுலயும் பின்னூட்டம் போட்டுற மாட்டேன்?

  ReplyDelete
 26. அருமை மா!

  நம்ம வீட்டையும் அப்படி தான் கட்டினோம். அதில் உள்ள, சுகமும், அதனுடன் பகிர்ந்து கொள்ளும் உணர்வுகளும், விலைமதிப்பு இல்லாதவை.

  இப்போதைக்கு வாரிசுகள், ஒன்றும் தலையிடாமல், எங்கள் விருப்பத்திற்கு விட்டு வைத்துள்ளனர்.

  பிற்காலத்தில்,நம் வாழ்க்கையை பகிர்ந்து கொண்ட வீடு, எப்படி கையாளப் படுமோ?

  நினைத்தாலே ஒரு சோகம் தான்.


  ReplyDelete
 27. ஏந்தான் இந்தப் பசங்களுக்கு இப்படி புத்தி போகுமோ.

  எங்க குழந்தைகளுக்கு இந்த வீட்டின் மீது இன்னும் பிடிப்பு ஜாஸ்தி.

  அது கதையாக எனக்குத் தெரியவில்லை. கரையான் அரிப்பது போல எல்லோருடைய மனத்தையும் பணம் அரித்துவிட்டது.
  மனம் ரொம்ப வருத்தப்பட வைத்த நிகழ்வு நீங்கள் இங்கிருந்து ஸ்ரீரங்கம் கிளம்பியது.

  ReplyDelete
 28. வாங்க வெற்றி மகள், கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்னு சொல்வாங்க. அது இந்தக் காலத்தில் யாருக்கும் தெரிய வாய்ப்பு இல்லை. கல்யாணத்தில் காடரிங் காரங்களே எல்லாம் செய்து கொடுத்துடறாங்க. வீடோ கேட்கவே வேண்டாம். பில்டர் பொறுப்பு. ஆகவே உட்கார்ந்த வண்ணம் எல்லாம் கிடைக்குது இல்லையா! :))))) மனதில் தாக்கம் எப்படி இருக்கும்! :(

  ReplyDelete
 29. வாங்க வல்லி, புரிதலுக்கு நன்றி. இன்னொருபின்னூட்டத்திலே அப்பாதுரை சிவாஜி டான்ஸ் பத்திச் சொல்லி இருப்பாரே, அதைக் காணோம். :)))) எப்படியோ நாங்க ஸ்ரீரங்கம் வந்து வாடகை கொடுத்து வசித்தாலும் பிரச்னைகள் இல்லை. சொந்த வீட்டில் இருந்த டென்ஷன் இல்லை. :)))) அங்கே இருந்தால் அக்கம்பக்கம் இரண்டு குடியிருப்புக்காரங்களும் எப்போப் பார்த்தாலும் போடும் குப்பைகளைப் போடாதீங்கனு சொல்லிச் சொல்லியே அலுத்துடும். :)))) இப்போ மட்டும் போடலையா என்ன?? போடறாங்கனு தான் குடி இருக்கிறவங்க சொல்றாங்க. சாப்பாடு டப்பாவில் மிச்சம் இருக்கும் சாப்பாடை எல்லாம் மாடியிலே இருக்கிறவங்க அங்கிருந்து வீசிப் போட
  றதில் எங்க வீட்டில் தான் வந்து விழுதாம். சாப்பாடு போடறாங்க போல! :)))))

  ReplyDelete
 30. முதலில் மாற வேண்டியது மனிதர்களே. அதுக்கப்புறம் இல்லை இந்த மாற்றங்களைக் கொண்டு வரணும். சக மனிதரை மனிதராக எண்ணாதவங்க வெளிப்படையாகத் தெரியும் நாகரீக மாற்றங்களை ஏற்பதில் உள்ள முரண்பாட்டை யாருமே புரிஞ்சுக்கலையே! :(((((

  ReplyDelete