எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, November 11, 2012

உங்க வீட்டிலே தீபாவளி வந்தாச்சா? தீபாவளி நினைவலைகள்!


உங்க வீட்டிலே தீபாவளி வந்தாச்சா?  இது தீபாவளி சமயத்தில் அக்கம்பக்கம் ஒருத்தருக்கு ஒருத்தர் கேட்டுக்கும் கேள்வி.  புதுத் துணி வாங்கினால் மட்டும் தீபாவளி வந்துடாது.  பக்ஷணங்களும் பண்ண ஆரம்பிக்கணும். பட்டாசு வகையறாக்களும் வரணும்.  எல்லாம் இருந்தால் தான் தீபாவளி வந்தாச்சுனு சொல்லுவாங்க. இப்போல்லாம் நாங்க ஒரு தீப்பெட்டி மத்தாப்புக் கூட வாங்கறதில்லை. புகை அலர்ஜி என்பதோடு குழந்தைங்களோட சேர்ந்து தீபாவளி கொண்டாடிப் பல வருடங்கள் ஆகிறது என்பது முக்கியக் காரணம். போன வருஷம் ஹூஸ்டனில் இருந்தோம் தான்.  ஆனால் அங்கே இப்படி எல்லாம் பட்டாசு வெடிச்சுக் கொண்டாட முடியாது.  எங்களுக்காகப் பையரும், மாட்டுப் பெண்ணும் லீவ் போட்டுவிட்டுக் காலம்பர எழுந்து எண்ணெய் ஸ்நானம் செய்து கொண்டு, புது உடைகளைப் போட்டுண்டாங்க. நாங்க இல்லைனா வீக் என்ட் தீபாவளிதான். :))))

இந்த வுருஷம் தீபாவளி பர்சேஸ் பத்தி எழுதலையேனு ஜெயஸ்ரீ கேட்டிருக்காங்க. அப்படி ஒண்ணும் சுவாரசியமா நடக்கலை.  விஜயதசமி அன்னிக்குப் புதிய பொருள் ஏதானும் வாங்கற வழக்கம்.  அந்த வழக்கப் படி அன்னிக்குக் காலம்பர கடைக்குப் போய் ஒரு சில்க் காட்டன் புடைவை எடுத்துக் கொண்டேன். அவ்வளவு தான்.  பெரும்பாலான தீபாவளிகளில் உடல் நலமில்லாமல் படுத்திருந்தாலும் சின்ன வயசிலே தீபாவளி என்றால் கொண்டாட்டம் தான். ஸ்கூல் இரண்டு நாட்கள் முன்னாடியே லீவ் விடுவாங்க.  கிறித்துவப் பள்ளி தான் ஆனாலும் தீபாவளிக்கு ஐந்து நாட்கள் லீவ் இருக்கும்.  அந்த ஐந்து நாட்களுக்கும் சேர்த்து ஹோம் வொர்க்கும் கொடுத்திருப்பாங்க.  பக்ஷண வாசனையிலே ஹோம் வொர்க் பண்ணறதுக்கே மனசு வராது.  பண்ணலைனா தீபாவளிக் கொண்டாட்டத்திலே மனசு போகாது.  ஆகவே ஸ்கூல்லே இருந்து வந்ததும், வராததுமா ஆரம்பிச்சா அன்னிக்கு ராத்திரியும், மறுநாள் காலம்பரயும் ஆணி அடிச்சாப்போல் உட்கார்ந்து ஹோம் வொர்க்கை முடிச்சுடுவேன்.  அதுக்கப்புறமா தீபாவளிக்குச் செய்யும் பக்ஷணங்களை ருசி பார்ப்பது.  செய்யறச்சேயே சாப்பிட்டால் அப்பாவுக்குப் பிடிக்காது.  ஆகையால் அவருக்குத் தெரியாமத் தான் எடுத்துக்கணும். ரகசியமா ஒளிச்சு வைச்சுண்டு சாப்பிடறதும் ஒரு தனி ருசி தான்.  தம்பியோ அண்ணாவோ வந்தால் நைசா எங்களுக்கும் எடுத்துண்டு வானு அனுப்புவாங்க.  சில சமயம் மாட்டிக்கிறதும் உண்டு.

தீபாவளிக்கு நல்ல துணியாகவே எடுத்திருப்பார் அப்பா.  படிக்கப் புத்தகம் கேட்டால் கிடைக்காது.  ஆனால் தினுசு தினுசாகப் பாவாடை, சட்டைகள், தாவணிகள் இருக்கும்.  தீபாவளிக்கு ஒரு மாசம் முன்னாடியே கடைகளை அலசி அந்த வருஷம் என்ன புது மாடல்னு அப்பா கண்டு பிடிச்சுண்டு வந்துடுவார்.  புடைவை கட்டிக்க ஆரம்பிச்சதும் கூட அப்படித்தான்.  அந்த வருஷப் புது டிசைன், கலர் எல்லாம் கேட்டு வைச்சுண்டு வருவார்.  அதன்படியே தீபாவளிக்கு எடுக்கறதும் உண்டு.  அப்பா மட்டும் போனால் ஒரே டிசைனில் வெவ்வேறு கலர்களில் பாவாடைகளை வாங்குவார்.  ஒரு வருஷம் சாடின் பாவாடை எடுத்தப்போ மெஜன்டா கலரில் ஒண்ணும், ஆகாய நீலத்தில் ஒண்ணுமா இரண்டு பாவாடைகள் ஒரே மாதிரி எடுத்துட்டார்.  க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் வேறே வழியே இல்லை;  அப்பா வாங்கினால் வாங்கினதுதான்.  கொஞ்சம் விபரம் தெரிஞ்சதும்  நான் பிடிவாதம் பிடிச்சுக் கூடப் போவேன். வெவ்வேறு டிசைனில் பாவாடைகளை வாங்கிப்பேன். தீபாவளிக்கு எப்போவுமே ஒரே ஒரு செட் டிரஸ் என்பதும் இல்லை.  இரண்டாவது இருக்கும்.  இன்னொண்ணைக் கார்த்திகைக்குனு வைச்சுப்பேன். ஆக எது எப்படிப் போனாலும் உடைகளுக்குப் பஞ்சமே இருந்ததில்லை.  தீபாவளி டிரஸ்ஸை ஸ்கூலுக்குப் போட்டுக் கொண்டு போவதில் சந்தோஷமா இருக்கும்.  விலை அதிகமாகப் பட்டுப்பாவாடை அப்படினு எடுத்திருந்தா பஸ்ஸிலே போகணும், வேண்டாம்னு சொல்லுவாங்க.  சரி, சரினு தலையை ஆட்டிட்டு, ஸ்கூல் கிளம்பறச்சே அவசரமாகப் பட்டுப்பாவாடையைக் கட்டிண்டு அப்பாவோ, அம்மாவோ கவனிக்கிறதுக்குள்ளே ஓட்டமாக ஓடுவேன்.

தீபாவளிக்குப் பட்டாசு பிரிக்கிறது தீபாவளிக்கு முதல் நாள் தான் நடக்கும்.  முதல்லே எல்லாம் இரண்டே ரூபாய்க்குப் பட்டாசுகள் வாங்கிட்டு இருந்தார் அப்பா.  அதுவும் சென்ட்ரல் தியேட்டர் எதிரே இருந்த வி.சூ.சுவாமிநாதய்யர் கடையிலே தீபாவளிப் பட்டாசுக் கடை ஸ்பெஷலாப் போடுவாங்க.  அங்கே தான் வாங்குவார்.  தீபாவளிக்கு முதல்நாள் வாங்கறதாலே அவங்க ஸ்டாக் தீரும் சமயமா இருக்குமா, மிச்சம் இருக்கிறதை எல்லாமும் சில சமயம் கொடுத்துடுவாங்க.  அப்படி ஒரு வருஷம் ஏரோப்ளேன் வாணமும், அணுகுண்டு எனப்படும் வெடியும் கிடைச்சது. அப்பா தான் பட்டாசு பங்கு பிரிப்பார்.  என்னை வெடி வெடிக்கக் கூடாதுனு சொன்னாலும் நான் வெடிகள் எனக்கும் வேணும்னு சொல்லி வாங்கி வைச்சுப்பேன்.  நாலு பங்கு போட்டுத் தனக்குனு ஒரு பங்கு வைச்சுப்பார் அப்பா.  அது எதுக்குனு முதல்லே புரியாமல் இருந்தது.  அப்புறமா கார்த்திகைக்குனு தனியா எடுத்து வைக்கிறார்னு புரிய வந்தது.  எங்க வீட்டிலே பட்டாசு வெடிச்சுட்டு எதிரே இருக்கும் பெரியப்பா வீட்டுக்கும் ஓடுவேன்.  அங்கே பெரியப்பா பெண் எனக்கு அக்கா, அவளுக்குப் பட்டாசு வெடிக்க பயம்.  அதனால் பெரியப்பா என்னை அவளுக்காகப் பட்டாசு வெடிச்சுக் காட்டச் சொல்லுவார்.  அவளுக்காக வாங்கி இருக்கும் பட்டாசுகளையும் நான் தான் வெடிப்பேன். அண்ணாவுக்கும், தம்பிக்கும் பெரியப்பா தனியாக் கொடுத்திருப்பார்.   அதுக்கப்புறமா ஐந்து ரூபாய்க்குப் பட்டாசுகள் வாங்கி, என் கல்யாணத் தலை தீபாவளிக்கு என் தம்பிக்கு நாங்க 25 ரூபட்டாசுக்குனு கொடுக்கவும், அவருக்கு மயக்கமே வந்தது.

அப்புறமா எல்லார் வீட்டுக்கும் பக்ஷணங்கள் கொண்டு கொடுத்துட்டு நமஸ்காரம் பண்ணப் போவோம்.  தாத்தா(அம்மாவோட அப்பா) வீடு ஜெய்ஹிந்த்புரத்தில் இருந்தது.  முதல்லே அங்கே போயிட்டு, அங்கே இருந்து அத்தை வீடு போவோம். சில சமயம் அத்தை வீட்டிலேயே சாப்பிடச் சொல்லுவாங்க.  அங்கே சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து தூங்கிட்டு, தீபாவளி மலர்கள் பார்த்துட்டுச் சாயந்திரமா இன்னொரு பெரியப்பா வீடு லக்ஷ்மிநாராயணபுர அக்ரஹாரத்தில் இருக்கும்.  அங்கே போயிட்டு வருவோம்.  அப்பா ஹிந்தி சொல்லிக் கொடுத்த தங்கம் தியேட்டர் அதிபர் கண்ணாயிரம் வீட்டுக்கும் போவோம்.  அவர் புதுரகப் பட்டாசுகளைக் கொடுப்பார். அதுக்கப்புறமா வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டுக் கோயிலுக்குப் போவோம்.  கோயில்களும் அப்போல்லாம் இரவு பதினோரு மணி வரை திறந்திருக்கும்.  மீனாக்ஷி கோயிலில் பல சமயம் பள்ளியறை தீபாராதனை பார்த்துட்டு வீட்டுக்கு வந்திருக்கோம்.  இப்போல்லாம் ஒன்பது மணிக்கே கோயில்கள் நடை சார்த்தப் படுகின்றன.  கோயில்லேருந்து வந்ததும் தீபாவளிக் கொண்டாட்ட அலுப்புத் தீரத் தூக்கம் தான்.  இத்தனைக்கும் அன்று நேரம் இருந்தது.  அதான் எப்படினு புரியலை. :)))))

27 comments:

 1. இனிமையான நினைவுகள். என் நினைவுகளையும் மீட்டிப் பார்த்தது! பட்டென்று வந்த பட்டாசு நினைவுகளில் டப்பென்று வெடிக்க நினைத்தாலும் ஏனோ சட்டென்று புஸ்வாணமாகிப் போனேன்!! மீனாட்சி அம்மன் கோவில் 9 மணிக்கு இப்போது கூட மூடப் படுவதில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் நீங்கள் சொன்னால் சரியாய்த்தான் இருக்கும். தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete
 2. //ஒரு வருஷம் சாடின் பாவாடை எடுத்தப்போ மெஜன்டா கலரில் ஒண்ணும், ஆகாய நீலத்தில் ஒண்ணுமா இரண்டு பாவாடைகள் ஒரே மாதிரி எடுத்துட்டார். //

  எத்தனை வருஷமாச்சு?.. கலர்லேந்து இன்னும் நினைவில் வைச்சிருக்கீங்களே!

  ஒண்ணு நினைவுக்கு வந்தால், அதைத் தொடர்ந்து இன்னொண்ணு. நினைவுகளின் சங்கிலி வரிசை கலகலத்தது. மதுரை நினைவுகளும் சேர்ந்துடுச்சா?.. அதன் தனிக்களைக்கு கேக்கவா வேணும்?..

  ReplyDelete
 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. பட்டென்று வந்த பட்டாசு நினைவுகளில் டப்பென்று வெடிக்க நினைத்தாலும் ஏனோ சட்டென்று புஸ்வாணமாகிப் போனேன்!! //

  ஏனோ? நாங்க 2009-இல் போனப்போ அவசரம் அவசரமா வெளியே போகச் சொன்னாங்க. எட்டே முக்கால் மணி தான் ஆகி இருந்தது. என்னனு கேட்டதுக்குக் கோயிலை மூடணும்னு சொன்னாங்க. ஒருவேளை தநுர் மாசத்தில் சீக்கிரம் மூடுவாங்களோனு நினைக்கிறேன். காலம்பர சீக்கிரம் கோயில் திறக்கிறதாலே. ஏன்னா நாங்க போனது டிசம்பரில். :)))))

  நான் சொன்னால் சரியா இருக்கணும்னு எல்லாம் இல்லை. தப்பாகவும் இருக்கலாம். இருக்கும். செக் பண்ணிக்கணும். :)))))

  ReplyDelete
 5. மின்சாரம் போகப் போறது இன்னும் பத்து நிமிஷத்திலே. அதுக்குள்ளே தீபாவளி வாழ்த்துச் சொல்லிக்கிறேன்.

  இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். ஆயிரம் வாலா வெடியைப் போல் தொடர்ந்து வெடித்துக் கொண்டிருக்கவும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 6. ஹா, ஹா ஜீவி சார், இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறச்சே அப்படி நடந்தது. அந்த வருஷம் உடம்பு ரொம்ப மோசமாப் போய் எண்ணெய்க் குளியல் இல்லாமலேயே அந்த ஆகாய நீலக் கலர்ப் பாவாடையைக் கட்டிண்டேன். ஒரு மாசம் போல் பள்ளிக்குப் போகாமல் சரியாகிப்போற அன்னிக்குப் புதுப்பாவாடை கட்டிண்டு போய்ட்டு, மழையில் நனைந்து மறுபடி ஜுரம் வந்து........:))))))))

  ReplyDelete
 7. இனிய நினைவலைகள். சுகமா இருந்துது படிக்க. :)

  என்னோட வீட்ல அண்ணா என்னைவிட நாலரை வயசு பெரியவன். சண்டைன்னாலே என்னை சீண்டறது மட்டும்தான். மத்தபடி எல்லாமே எனக்கு
  விட்டுகுடுத்துவான். தீபாவளி அன்னிக்கு வாங்கின அத்தனை வெடியையும் நான்தான் வெடிப்பேன். கூடவே இருந்து திரிகிள்ளை கொடுத்து, ஊதுபத்தி அணைஞ்சா ஏத்தி குடுத்து, சுறுசுறு கம்பி, சாட்டை எல்லாம் பத்த வெச்சு கைல குடுத்து இப்படி எனக்கு எடுபுடி வேலை பண்ணினது பூரா எங்க அப்பாவும், அண்ணாவும்தான். :) அதுவும் அப்பா நான் மத்தாப்பு கொளுத்தினா கூட கூடவே நிப்பார். :) வெடி வெடிக்க அவ்வளவு பிடிக்கும். சலிக்காம நாள் பூரா வெடிப்பேன். அப்பாவும் சலிக்கமா நாள் பூரா தேமேன்னு என்கூடவே இருப்பார். :)) தீபாவளி வரும்போதெல்லாம் அப்பா நினைவு ரொம்ப வந்துடும்.
  எங்க வீட்ல பட்சணம், சாப்பாடு எல்லாம் நைவைத்யமுமே எனக்குதான். :))

  இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. //மின்சாரம் போகப் போறது இன்னும் பத்து நிமிஷத்திலே. அதுக்குள்ளே தீபாவளி வாழ்த்துச் சொல்லிக்கிறேன்.

  இன்றைய தீபாவளி.

  ReplyDelete
 9. சுவாரசியமான நினைவுப் பயணம். தீபாவளிக்கு முதல் நாள் பட்டாசு வாங்கும் tradition நிறைய குடும்பங்களில் உண்டு போல.

  பட்டாசைப் பிரித்து வெயிலில் காய வைக்கும் சடங்கு உண்டு. குரோம்பேட்டை நாட்களில் உடன் இருந்த பத்து குடியிருப்பிலிருந்து மொத்தமாக கிணற்றடியில் பெரிய கித்தான் விரித்து அவரவர் வீட்டுப் பெயரிட்டு ஒரு பேப்பரில் பட்டாசு காய வைப்பார்கள். எதிர் வீட்டு முதியவர் தான் காவல் காப்பதாக ஒவ்வொரு வருடமும் வருவார். அவர் போகும் பொழுது எங்கள் எல்லார் வீட்டுப் பட்டாசுக் கணக்கில் ஏதாவது கூடுதலாக இருக்கும். இரண்டு மூன்று வருடங்கள் தான் வந்தார் அவர். ஒரு நன்றி கூடச் சொன்னதில்லை நாங்கள்.

  ReplyDelete
 10. வாங்க மீனாக்ஷி, மீனாக்ஷினு பேர் வைச்சாலே அப்படித்தானோ! :)))))

  எங்க வீட்டிலேயும் எங்க பொண்ணுக்குத் தான் எல்லாமும் முதல்லே! அவள் தான் முதலிலும் பிறந்தாள் என்பது வேறு விஷயம். எங்க பையர் அவளை விட நான்கு, ஐந்து வயசு சின்னவரா இருந்தாலும் அக்காவுக்குனு ஸ்பெஷல் கவனிப்புக் கொடுப்பார். இப்போவும்! :))))))

  எங்க பொண்ணு பேரும் மீனாக்ஷி தான். :)))))

  ReplyDelete
 11. வாங்க அப்பாதுரை, இன்னிக்குக் காலம்பர மின்சாரம் கொடுத்திருக்காங்க. அவசரம் அவசரமா வந்திருக்கேன். மின்சாரம் போறதுக்குள்ளே நான் எழுந்துக்கணும், வீட்டு வேலைகள்! :))))

  இனிய தீபாவளி வாழ்த்துகள். அடுத்த முறை இந்தியா வந்தா கட்டாயமா ஸ்ரீரங்கம் வாங்க. உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதைச் செய்து தரேன். :)))))

  ReplyDelete
 12. ஆமாம், பட்டாசுகளை வெயிலில் காய வைப்பது உண்டு. அது கல்யாணம் ஆனதுக்கு அப்புறமா, எங்க பையரும் பிறந்தப்புறமாத் தான். பையர் வெடிக்கணும்னு முன்னாடியே வாங்கிடுவார் என் கணவர். அதை எடுத்துக் காய வைத்து நமுத்துப் போகாமல் வைப்பது ஒரு தனிவேலை. எங்க மாமனார் இருந்தவரை அவர் இந்த வேலையைப் பார்ப்பார். :))))

  எங்க குழந்தைகளுக்கெல்லாம் பட்டாசு போதும், போதும்ங்கற அளவுக்கு இருக்கும். சில சமயம் முதல் வருஷத்துப் பட்டாசே மிச்சம் இருக்கும். ஆபீஸிலே மொத்தமாக வாங்கிப் பிரிப்பார்கள். ஆகையால் கூடவே இருக்கும். அலுத்துப் போற அளவுக்குப் பட்டாசு வெடிப்பாங்க. :)))))))

  ReplyDelete
 13. நிச்சயமாக வருகிறேன்.

  எங்க வீட்டு தீபாவளி ஸ்வீட்ல திரட்டுப்பால்னு ஒண்ணு செய்வாங்க எங்க அம்மாவோட அம்மா. சில சமயம் கரிஞ்சிக்காய்னு ஒரு ஸ்வீட் அட்டகாசமா இருக்கும் (பேர் எப்படி வந்ததுனு இதுவரைக்கும் கேட்டுத் தெரிஞ்சுக்கலே - சாப்பிட்டதோட சரி). எங்கம்மா தீபாவளிக்கு ஸ்வீட் மாதிரியே எதாவது செய்வாங்க. நாங்களும் ஸ்வீட் மாதிரியே இருக்குமா என்று பாராட்டி சாப்பிட்டு விடுவோம்.

  சென்ற 25 வருடங்கள்ள தீபாவளி ஒரு தடவை கொண்டாடினதா ஞாபகம். அவ்வளவுதான் இப்பல்லாம்.

  ReplyDelete
 14. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் மாமி. நினைவலைகள் அருமை

  ReplyDelete
 15. இனிய நினைவுகள்...

  தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 16. சமயம் கரிஞ்சிக்காய்னு ஒரு ஸ்வீட் அட்டகாசமா இருக்கும் (பேர் எப்படி வந்ததுனு இதுவரைக்கும் கேட்டுத் தெரிஞ்சுக்கலே - சாப்பிட்டதோட சரி). //

  அது கர்ச்சிக்காய் அப்பாதுரை. அநேகமா நீங்க சாப்பிட்டது அரிசி கர்ச்சிக்காயாக இருக்கும். மைதாவில் பண்ணி இருந்தது என்றால் சோமாசி என்பார்கள். பொட்டுக்கடலை, சர்க்கரை, தேங்காய்ப் பூரணம் வைத்தது. அதுவே சர்க்கரை போடாத கோவா, பழங்கள் சேர்த்துச் செய்தால் வேறே பெயர். :))))சூர்யகலாவோ, சந்திரகலாவோ எதுனு நினைவில் இல்லை. :)))) சாப்பிட்டே பல வருஷங்கள் ஆகிறது.

  ReplyDelete
 17. நன்றி சுபாஷிணி,

  ReplyDelete
 18. அருமையான உல்லாசமான நாட்கள். இப்போது என் சாட்டின் பாவாடைகளைப் பார்க்க ஆசையாக இருக்கிறது. கிழியவே கிழியாது.மதுரையில் டவுனில் பட்டாசின் அட்டகாசம் காதுகள் போய்விடும்!மனம் நிறைந்த தீபாவளி வாழ்த்துகள் கீதா.

  ReplyDelete
 19. The article was such a nice read!! Reminded me of my paatti... Deepavali is just not the same without her. She used to make us all sit (height-wise) at 3 am- and apply this hand full of oil... Mom's family is as big as "Hum aapke hain kaun" family. All cousins/aunts/uncles used to burst crackers together! We used to have this big room full of 1000 walas/Flower-pot/Chakram/H2 Bomb etc! I really miss that kind of Deepawali...

  ReplyDelete
 20. இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் மாதங்கி. அடுத்த முறை ஸ்ரீரங்கம் வரும்போதாவது பார்க்கணும். :)))))

  ReplyDelete
 21. என்னோட சாடின் பாவாடையை அலுத்துப் போனதுக்கப்புறமா வேறொரு ஏழைப் பெண்ணுக்குக் கொடுத்துட்டேன். அநேகமா எல்லாப் பாவாடைகளையும் அப்படித் தான் கொடுத்திருக்கேன். :))) இப்போவும் அப்படித் தான். புடைவைகளைக் கொடுத்துடறேன். வாங்கிக்கறாங்க. வேண்டாம்னு சொல்றதில்லை. :))))

  ReplyDelete
 22. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் வல்லி.

  ReplyDelete
 23. மாதங்கி, என் அப்பா குடும்பமும் பெரிசு, அம்மா குடும்பமும் பெரிசு. :)))) ஆகவே எனக்கும் இவற்றில் நிறையவே அனுபவம் உண்டு. என்ன இருந்தாலும் அந்த மாதிரியான தீபாவளிக் கொண்டாட்டம் இப்போ இல்லை தான். இப்போ தொலைக்காட்சியில் தான் தீபாவளிக் கொண்டாட்டங்களே. யாரும் யார் வீட்டுக்கும் போறதில்லை. அப்படியும் மீறிப் போனால் எதிரியைப் பார்ப்பது போல் பார்ப்பாங்க. சரியான வரவேற்பு கிடையாது. 95--ஆம் ஆண்டு ஜாம்நகரில் இருந்து சென்னை திரும்பியதும் அந்த வருஷ நவராத்திரியிலும், தீபாவளியிலும் தனிமையை அனுபவித்தேன். இப்போக் கேட்கவே வேண்டாம். வட இந்தியாவில் கொஞ்சம் பரவாயில்லை, இப்போதும். :))))

  ReplyDelete
 24. இனிய தீபாவளி நினைவுகள்...

  ReplyDelete
 25. வாங்க வெங்கட், உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

  ReplyDelete