எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 09, 2013

உனக்கும், எனக்கும் தான் பொருத்தம், அதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்!


என்ன ஆச்சரியமா இருக்கா?  உண்மையில் அப்படித்தான். பெண்ணுக்கு மணமகனையும், ஆணுக்கு மணமகளையும் பிடித்திருக்க வேண்டும் என்பது கட்டாயம்.  பெண்ணுக்குக் குழந்தை பிறக்குமா என்பதையும் உறுதி செய்து கொள்ளச் சொல்கிறது சாஸ்திரம்.  இதை ஆயுர்வேதம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்கிறது.  பல பெண்களையும் பார்த்திருந்தாலும் திருமணம் செய்து கொள்ளப் போகும் ஆணுக்குத் தக்க மணமகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதோடு மட்டுமல்ல அந்தப் பெண்ணிற்கும் இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்க வேண்டும். நம் இந்து மதம் என்று இன்றைய நாட்களில் அழைக்கப்படும் சநாதன தர்மத்தின் திருமண முறையில் பிரிவு என்பது அவ்வளவாக இல்லை. தம்பதியர் மன ஒற்றுமையோடு வாழுவதையே வலியுறுத்தும்.  திருமண மந்திரங்களும் அதற்காகவே ஓதப்படுகின்றன என்பதோடு மன ஒற்றுமையை உறுதியாக்கும் சக்தியும் கொண்டது.  இன்றைய அவசர யுகத்தில் செய்யப்படும் சுருக்கமான திருமணங்களைக் குறித்துச் சொல்லவில்லை.  ஒரு காலத்தில் முறைப்படி மந்திரங்களைப் பூரணமாக ஓதுவதோடு அதன் அர்த்தங்களையும் பெண்ணும், பிள்ளையும் புரிந்து வைத்துக் கொண்டு கேட்பார்கள்.  மணமகனும் அதன் பொருளைப் புரிந்து கொண்டே திரும்பச் சொல்வார்.

பையரின், பெண்ணின் நக்ஷத்திரத்திற்குப் பொருத்தம் பார்க்கலாம் என்கிறது தர்ம சாஸ்திரம்.  ஏனெனில் அதற்கேற்றவாறு தகுதியான முஹூர்த்த நாளைப் பார்க்க வேண்டும்.  அதே சமயம் இருவரின் ஜாதகத்திலும் பொருத்தம் பார்த்துத் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.  தகுதி வாய்ந்த நாளைப் பார்ப்பது வான சாஸ்திரத்தில் அடங்குகிறது.  ஆகவே நல்ல வேளையின் நல்ல காலத்தின் ஒத்துழைப்புத் திருமணத்துக்குத் தேவை.  அதை மட்டும் இருவரின் நக்ஷத்திரப் பொருத்தத்தின் மூலம் அறிந்தால் போதும்.  ஜாதகப் பொருத்தம் பார்க்க வேண்டாம்;  அதற்கு அவ்வளவு முக்கியமில்லை என்கிறது தர்ம சாஸ்திரம். நல்ல காலத்தின் பங்கு பல விஷயங்களிலும் இருக்கும் குறைகளை மூடிக் கொண்டு செல்லும்.  மணமக்களுக்கும் நல்ல முஹூர்த்த காலத்துக்கும் சுமுகமான தொடர்பு இருக்க வேண்டும்.  அதை உறுதி செய்ய இருவரின் நக்ஷத்திரங்களும் உதவும்.  ஆகவே நக்ஷத்திரப் பொருத்தம் இருந்தாலே போதும் என தர்ம சாஸ்திரம் அறிவுறுத்துகிறது.  களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் எனப்படும் பெரிய பெரிய தோஷங்கள் எல்லாம் திருமணத்தில் ஓதப்படும் முக்கியமான மந்திரங்களின் சக்தியால் அகன்றுவிடும் என்கிறது சாஸ்திரம்.

இதற்கேற்றாற்போல் நாம் நிறையத் திருமணங்களைப் பார்த்திருப்போம்.  எங்க வீட்டிலேயே என் பெரிய நாத்தனார் அத்தை பையரையே திருமணம் செய்து கொண்டதால் அவர்களுக்குள் ஜாதகப் பொருத்தமே பார்க்கவில்லை.  அதே போல் என் மாமனார், மாமியாரும் உறவு என்பதால் பொருத்தமே பார்க்கவில்லை.  இதைத் தவிரவும் என் மாமன்மார் இரண்டு பேருக்கு ஜாதகப் பொருத்தமே இல்லை.  ஆனால் திருமணம் ஆகிக் குழந்தை குட்டிகளோடு சந்தோஷமாக வாழ்ந்தனர்.  பெண்ணுக்கு மூல நக்ஷத்திரம் என்றால் நிர்மூலம் என்றொரு சொலவடை உண்டு.  உண்மையில் அது நிர்மலம் என்றே பொருள் கொள்ள வேண்டும்.  இன்னும் சிலர் ஆணுக்கு மூல நக்ஷத்திரமாக இருந்தாலும் பெண்ணின் அம்மா உயிருடன் இருக்கையில் அவங்களுக்குப் பாதகம் எனச் சொல்கின்றனர்.  மூல நக்ஷத்திரத்துப் பெண்ணும் சரி, மூல நக்ஷத்திரத்துப் பையரும் சரி, மாமியார், மாமனார் இருக்கும் இடங்களில் திருமணம் நடந்து அந்த மாமியார் , மாமனார் 80 வயது வரை இருக்கும் பேறு பெற்றதையும் பார்த்திருப்போம்.  எங்க வீட்டில் பார்த்திருக்கோம்.  பூராடம் நூலாடாது என்பார்கள்.  அப்படிப் பட்ட பூராட நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்கள் சுமங்கலியாக இறந்து போயும் (அதுவும் 75 வயசில்) பார்த்திருக்கிறேன்.

ஜாதகங்களுக்கும், ஜாதகப் பொருத்தத்துக்கும் இன்று நாம் அளிக்கும் முன்னுரிமை அந்தக் காலங்களில் இல்லை.  சாஸ்திரங்களுக்கே முன்னுரிமை கொடுத்திருக்கின்றனர்.  தெய்வத்திடம் பூப் போட்டுப் பார்த்தல், இதிகாசப் புராணப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்து அதில் வரும் பக்கங்களுக்கு ஏற்ப முடிவு செய்தல் எனப் பல திருமணங்களும் நடந்திருக்கின்றன. தர்ம சாஸ்திரமே நமக்காக ஏற்பட்டது தான்.
ஜாதகங்களில் இருக்கும் பலன் சொல்லும் பகுதியை நன்கு செயல்படுத்தினால் குடும்ப வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் விஷயங்களைத் தெரிந்து கொள்ள உதவும்.  அந்தப் பலன் சொல்லும் பகுதியும் ரிஷிகளீன் உபதேசம் என்று பெரியோர் சொல்கின்றனர்.   குடும்ப வாழ்க்கையில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் பெறுவதில் ஏற்படும் இடையூறுகளைக் களையவே ஜாதக பலன்கள் உதவி இருக்கின்றன.  ஆயுள், ஆரோக்கியம், மகப்பேறு, ஆண் குழந்தைப் பேறு போன்றவற்றைத் தெரிந்து கொள்ள உதவுமே அன்றித் திருமண வாழ்க்கைக்கு அல்ல. ஜாதகங்கள் பார்ப்பது என்னும் பழக்கம் இதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டி ஆரம்பித்திருக்கலாம்.  அது இன்றைய நாட்களில் ஒரு கட்டாயமான சடங்காக மாறியுள்ளது.  பல நற்பலன்களையும் பல கெடுபலன்களையும் அளிக்கிறது.


கருத்து உதவி: திரு சேஷாத்ரிநாத சாஸ்திரிகள் உரை சங்கரா தொலைக்காட்சி, சக்திவிகடன் , மற்றும் வீட்டில் பெரியோர்கள் பலரிடம் பேசியதில் கிடைத்த விபரங்கள்.

18 comments:

  1. பலர் என்ன சொன்னாலும் மாறுவதில்லை... நீங்கள் சொல்வது போல், இந்த கட்டாயமான சடங்கால், பல நல்ல உள்ளங்களும் இணையாமல் போவதுண்டு...

    ReplyDelete
  2. முப்பத்திரண்டு வயதுக்கும் மேலோ என்னவோ ஜாதகம் பார்க்க வேண்டாம் என்றும் சொல்வார்களே..

    மனப் பொருத்தம் இருந்தால் போதும் என்றும் சொல்வார்கள்.

    நிர்மூலம் நிர்மலம்.... ! ஓஹோ...

    ReplyDelete
  3. பெண்ணுக்குக் குழந்தை பிறக்குமா என்று பார்க்கச் சொல்லும் சாஸ்திரம் ஆண்களுக்குப் பார்க்க வேண்டாம் என்றா சொல்கிறது.?

    ReplyDelete
  4. வாங்க டிடி, நீங்க சொல்வது உண்மைதான். பல கல்யாணங்கள் நின்று போயிருக்கின்றன.

    ReplyDelete
  5. வாங்க ஸ்ரீராம், முப்பத்தைந்து வயதுக்கு மேலே னு சொல்வாங்க. ஆனால் அதிலும் ஒரு சில கல்யாணங்கள் விவாகரத்திலோ அல்லது இறப்பிலோ முடிந்திருக்கின்றன. :((((

    ReplyDelete
  6. வாங்க ஜிஎம்பி சார், இரண்டு பேருக்கும் தான் பார்ப்பாங்க. பொதுவாகத் தான் எழுதினேன். அந்த இடத்தில் பெண்ணை மட்டும் குறிப்பிட்டுச் சொல்றாப்போல் அமைந்து விட்டது. நக்ஷத்திரப் பொருத்தம் பார்க்கிறச்சேயே இதையும் பார்க்கணும் இல்லையா? பொதுவாகப் பெண்ணை வைத்தே குடும்பம் என்பதால் பெண்ணுக்குத் தான் முன்னுரிமை கொடுப்பாங்க. அவளுக்குத் தான் எல்லாம் பார்ப்பாங்க. பெண் நக்ஷத்திரத்திலேயே கல்யாணம் செய்தல், வீடு கிரஹப்ரவேசம் செய்தல் போன்றவையும் நடை
    பெறுவதுண்டு.

    ReplyDelete
  7. மன ஒற்றுமையை மந்திரம் ஓதி வளர்க்கும் வழக்கத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறோம் என்பது ஒரு சிறு ஆறுதல்.

    ReplyDelete
  8. எங்கள் இரண்டு பேருக்கும் ஜாதகம் பார்க்கவில்லை.
    எங்கள் குடும்பத்தில் என் அக்கா மூத்த மருமகள், நான் நான்காவது மருமகள்.
    என் மாமியார் அவர்கள் என் அக்கா திருமண சமயத்திலேயே சொல்லி வைத்து விட்டார்கள் தன் நான்காவது பிள்ளைக்கு என்று என்னை.

    இரண்டாவது ஓர்ப்படியின் தங்கை கடைசி கொழுந்தனார் அவர்களுக்கு.இப்படி என் மாமியார் யாருக்கும் ஜாதகம் பார்க்கவில்லை மனப்பொருத்தம் தான்.

    ReplyDelete
  9. கோமதி அரசு அவர்கள் சொல்வது, கேட்கவே நிறைவாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
    கொழுந்தனார் என்றால்?

    ReplyDelete
  10. அப்பாதுரை, உங்களுக்கு ஆறுதல் அளிக்க முடியவில்லை என்பதே எனக்குக் கவலை! :)))) மறுபடியும் இதெல்லாம் பல இடங்களிலும் திரும்பிட்டு இருக்கே! :)))))

    ReplyDelete
  11. வாங்க கோமதி அரசு, உண்மைதான், பெண்ணும், பிள்ளையும் மனம் ஒத்துக்கொண்டாலே போதுமானது. பகிர்வுக்கு நன்றி.:)))

    ReplyDelete
  12. அப்பாதுரை, கணவனின் தம்பிகளைக் கொழுந்தனார் என அழைப்பது, மதுரை, திருநெல்வேலி போன்ற தென்மாவட்ட வழக்கம். :))))

    தஞ்சை ஜில்லாவில் அனைவரையுமே மைத்துனன் என்று சொல்கின்றனர். என் கணவருக்கு இருவரும் தம்பிகள் என்றாலும் மைத்துனன் என்றே சொல்ல வேண்டும். :)))))இதுவே மதுரை,திருநெல்வேலி எனில் கொழுந்தன் என்பார்கள். கணவனுக்கு மூத்தவர் தான் மைத்துனர்.

    ReplyDelete
  13. குடும்ப வாழ்க்கையில் நமக்குத் தேவையானவற்றைத் தேவையான சமயத்தில் பெறுவதில் ஏற்படும் இடையூறுகளைக் களையவே ஜாதக பலன்கள் உதவி இருக்கின்றன. ஆயுள், ஆரோக்கியம், மகப்பேறு, ஆண் குழந்தைப் பேறு போன்றவை நிறைவாக அமைந்தால்தானே வாழ்வு
    வளம் பெறும் ..??!!!!!

    ReplyDelete
  14. ராஜராஜேஸ்வரி, உங்கள் கேள்வியின் பொருள் எனக்குப் புரியவில்லை என்றாலும் இன்றளவும் நம் நாட்டில் ஆண் குழந்தைப் பிறப்பையே அதிக அளவில் விரும்புவதால் அதைக் குறிப்பிட்டிருக்கிறேன். அதோடு ஆண் குழந்தை தான் கர்மா செய்வதற்குப் பயன்படுவான். பெண்கள் செய்ய முடியாது. அதோடு வம்சமும் விருத்தியாவது ஆண் குழந்தை மூலமே என்பார்கள்.

    ReplyDelete
  15. அப்பாதுரை, கணவனின் தம்பிகளைக் கொழுந்தனார் என அழைப்பது, மதுரை, திருநெல்வேலி போன்ற தென்மாவட்ட வழக்கம். :))))//

    கீதா, அப்பாதுரை சாருக்கு சரியாக விளக்கம் கொடுத்து விட்டீர்கள்.
    நன்றி.

    ReplyDelete
  16. அப்பாதுரை சார் வாழ்த்துக்கு நன்றி.
    கீதா, நான் மனப்பொருத்தம் என்று சொன்னது பெண், பிள்ளை மனப்பொருத்தம் இல்லை, மாப்பிள்ளை, பெண் வீட்டார் மனப்பொருத்தம்.
    எங்கள் வீட்டிலும், எங்கள் கண்வர் வீட்டிலும் பேசி முடிவு செய்யப்பட்டது.
    நல்ல குடும்பம் என்பதால் ஜாதகம் எதுவும் பார்க்க வேண்டாம் எனறு முடிவு செய்யப்பட்டது.

    ReplyDelete
  17. வாங்க கோமதி, விளக்கத்துக்கு நன்றி. பொதுவாய்ப் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் மனப்பொருத்தம் இருப்பதுவும் முக்கியம் இல்லையா? :)))))

    ReplyDelete
  18. இங்கும் பலர் ஜாதகம் பார்ப்பார்கள்.

    மனப்பொருத்தம் என்பது முக்கியம்.

    ReplyDelete