எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 02, 2013

ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கத் தேரிலே!

இந்த மாலை மாற்றுதல், ஊஞ்சல், பெண்ணின் கையை மாப்பிள்ளை பிடிப்பது போன்றவை அனைத்துமே பாணிகிரஹணத்துக்குப் பின்னர் நடத்த வேண்டும் என்பது கலாசாரப் பற்றுடைய வைதீக/ஆன்மிகவாதிகளின் கருத்து.  ஆனால் பிராமண சமூகத்தைத் தவிர மற்ற சமூகங்களில் இவை எல்லாம் பின்னாலேயே நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத் தக்கது. பிராமணர்களில் மட்டுமே இவற்றை முன்னால் நடத்திவிடுகின்றனர். இனி நாம் நடத்தும் கல்யாணத்தைப் பார்ப்போம்.  பெண்ணும், பிள்ளையும் மாலை மாற்றிக் கொண்டு ஒருவர் கையை இன்னொருவர் பிடித்துக் கொண்டு ஊஞ்சலுக்குச் செல்கின்றனர்.  ஊஞ்சல் சிறிது நேரம் ஆட்டப்பட்டு கன்னூஞ்சல் பாட்டுக்கள் குழுமியிருக்கும் உறவினராலும், நாதஸ்வரக் காரர்களின் நையாண்டி மேளத்தாலும் பாடப்படும். பின்னர் மீண்டும் புரோகிதர் நேரப் பற்றாக்குறையை நினைவூட்டுவார்.  சில கல்யாணங்களில் முஹூர்த்தம் நடக்க நிறையவே நேரம் இருக்கும். அப்போது கொஞ்சம் சாவகாசமாகவே அனுபவித்துச் செய்வார்கள்.  பலருக்கும் அவரவர் திருமண நினைவுகள் வரும்.  திருமணம் ஆகாதவர்களுக்கோ அவரவர் திருமணத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று யோசித்துக் கொள்வார்கள்.

இப்போது பெண் வீட்டு, பிள்ளை வீட்டின் மூத்த சுமங்கலிகளால் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் திருஷ்டி கழிக்கப் படும்.  இதைப் பச்சைப்பிடி சுற்றுதல் என்பார்ர்கள். இது ஒரு விதத்தில் இரு வீட்டுப் பெண்டிரும் கலந்து கொள்ளும் நிகழ்வாகவும், அதே சமயம் சாஸ்திர சம்மதம் பெற்றும் விளங்குகிறது.  ஆபஸ்தம்ப ரிஷி திருமணங்களில் ஆண்கள் செய்யும் காரியங்கள் மட்டுமில்லாமல் பெண்கள் பங்கு பெறும் விதமாகவும் இருந்தாக வேண்டும் எனக் கூறி இருப்பதாகச் சொல்வார்கள். இன்னொரு விதத்தில் பஞ்சபூதங்களின் பிரதிநிதியாக மாலை, ஜலம், தீபம், பாடல்கள், அன்ன உருண்டைகள் ஆகியவற்றின் மூலம் பெண்ணையும், மாப்பிள்ளையையும் இயற்கையோடு இயைந்ததொரு இல்வாழ்வுக்குத் தயார் செய்து, இயற்கைச் சீற்றங்களின் விளைவுகளில் இருந்து காக்கும்படி வேண்டிக் கொண்டு பஞ்சபூதங்களையும் பிரார்த்திப்பதாய்க் கொள்ளலாம்.  இதில் நீர் ஆகிய அப்பு செல்வத்தையும், தீபம் ஆகிய அக்னி அறியாமையை அகற்றி ஜோதியாகிய அறிவையும்/ஞானத்தையும், மலர்கள் விண்ணையும், பாடல் வாயுவையும் குறிப்பதோடு நீண்ட ஆயுளையும், திறமையையும் ஏற்படுத்தும்.  அன்ன உருண்டைகளோ பூமியில் விளையும் உணவுப் பொருட்களின் பிரதிநிதியாகச் செயல்பட்டு மணமக்களின் வாழ்க்கையில் செழிப்பும், உறுதியாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் சுட்டும்.

இதிலே சொல்லி உள்ளபடி முதலில் பெண்ணின் அம்மா, பிள்ளையின் அம்மா இருவரும் மணப் பெண், மணமகன் கால்களில் பால் தெளித்து, அவர்கள் இருவருக்கும் பால், பழம், சர்க்கரை சேர்த்து உண்ணவும் கொடுப்பார்கள்.  அதன் பின்னர் மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவற்றால் பிடித்த அன்ன உருண்டைகளை வைத்துப் பெண்ணுக்கும் பிள்ளைக்கும் சுற்றிப் போடுவார்கள்.  பிரக்ஷிணமாக மூன்று முறையும், அப்பிரதக்ஷிணமாக மூன்று முறையும் சுற்றுவார்கள். எல்லாத் திசைகளிலும் போடுவார்கள்.  ஒரு சிலர் விளையாட்டாக அங்கே நிற்பவர் மேல் விட்டு எறிவதும் உண்டு. ஒரே கலகலப்பும், விளையாட்டுமாக இருக்கும். பெண் வீட்டுக்காரர்கள் பிள்ளை வீட்டுக் காரங்களையும், பிள்ளை வீட்டுக்காரங்க பெண் வீட்டினர் மேலும் எறிந்து விளையாடுவதுண்டு.  பெண் வீட்டினரில் ஐந்து பேர் எனில், பிள்ளை வீட்டினரிலும் ஐந்து பேர் சுற்றுவார்கள்.  சுற்றி முடிந்ததும், பெண்ணின் அம்மா இதற்கென வாங்கி இருக்கும் அரிக்கும் சட்டி, அல்லது திருப்பத்தூர் வாணாயில் விளக்கின் முகத்தை வைத்துப் புடைவைத் தலைப்பால் மூடிக் கொண்டு செல்ல, பிள்ளையின் அம்மா கல்யாணத்துக்கு வாங்கி இருக்கும் செம்பில் நிறைய நீர் எடுத்துக் கையால் சுற்றிக்கொண்டே பின்னே வர, பெண்ணின் அத்தை, பாட்டி அல்லது பிள்ளையின் அத்தை, பாட்டி எவரேனும் ஒருவர் அல்லது இவர்களில் எவர் மூத்தவரோ அவர் பின்னே செல்வார்.


அப்போது பெண்ணின் கையிலும், பிள்ளையின் கையிலும் மட்டைத்தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், 11௹, 21௹, 51௹ என அவரவர் சக்திக்கு ஏற்பப் பணம் கொடுத்திருப்பார்கள்.  சுற்றி முடிந்ததும், மிச்சம் இருக்கும் சாத உருண்டைகளை அந்தச் செம்பு நீரில் கரைத்துப் பெண்ணின் அம்மாவும், பிள்ளையின் அம்மாவும் ஆரத்தி போல் சுற்றிக் கீழே கொட்டுவார்கள்.  பெண், பிள்ளை இருவர் கையிலும் கொடுக்கப்பட்ட தேங்காய் வெற்றிலை, பாக்கை மேளகாரர்களுக்குக் கொடுக்க வேண்டும்.  அதன் பின்னர் பொதுவாகப் பெண்ணின் கையைப் பிள்ளை பிடித்துக் கொண்டு தான் உள்ளே மணமேடைக்குச் செல்வது வழக்கம்.  என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட ஊர்களில் முக்கியமாய் வட ஆற்காடு மாவட்டம்/சேலத்தில் சில குடும்பங்களில் பெண்ணின் கையைப் பெண்ணின் மாமியாரும், பிள்ளையின் கையைப் பிள்ளையின் மாமியாரும் பிடித்துக் கொண்டு மணமேடைக்கு அழைத்துச் செல்வார்கள்.  இது பிராமண சமூகத்தில் நடப்பது.  மற்ற சமூகங்களில் பிள்ளையின் சகோதரியும், அவள் கணவரும் முறையே பெண்ணையும், மாப்பிள்ளையையும் மணமேடைக்கு அழைத்துச் செல்வார்கள். இனி வைதீகர்களின் வேலைகள் ஆரம்பிக்கும்.  அதைக் கொஞ்சம் விரிவாகவே பார்க்கப் போகிறோம்.  இது தான் மிக முக்கியமானது. :)

13 comments:

  1. மிகவும் முக்கியமானதை தொடர்கிறேன்... நன்றி அம்மா...

    ReplyDelete
  2. முக்கிய கட்டத்தை நெருங்கி விட்டோம்!

    என் கல்யாணத்தில் என்ன நடந்தது என்று யோசித்துப் பார்த்தால்கூட இவ்வளவு நுணுக்கமாக நினைவுக்கு வரவில்லை. ஊஞ்சல் நினைவிருக்கிறது. ஏதோ பாடினார்கள் என்று நினைவிருக்கிறது.

    ReplyDelete
  3. ஊஞ்சல் போது பெண்வீட்டுக்காரகள் மட்டும்தானே பிடி சுற்றி எறிவார்கள்?
    கடையில் ஒரு பிரம்மச்சாரி வந்து திருஷ்டி சுற்றிப் போடணும் இல்லையா கீதா.
    பிள்ளைவீட்டார் சீர்,விளையாடல் தட்டுகளை ஏந்தி மாப்பிள்ளை பெண் பின்னால் வருவார்கள்.
    முஹூர்த்தம் நெருங்கிவிட்டது. ம்ம்.பெண்ணைக் கூப்பிடுங்கோ:)

    ReplyDelete
  4. வாங்க டிடி, இப்போல்லாம் பார்க்கவே முடியறதில்லை! வரவுக்கு நன்றிப்பா. :)))

    ReplyDelete
  5. வாங்க ஶ்ரீராம், அப்படி ஒண்ணும் நுணுக்கமாப் பார்க்கலைனு அடுத்து வந்திருக்கும் வல்லியோட பின்னூட்டத்திலே இருந்து தெரிஞ்சுண்டேன். ஆகவே நோ பாராட்டு! :)))

    ReplyDelete
  6. வாங்க வல்லி, ஊஞ்சலின் போது இரு வீட்டுக்காரங்களும் சுத்திப் போட்டாகணும். இதிலே பிள்ளை வீட்டில் முக்கியமானவங்களைக் கூப்பிடலைனா அம்புடுதேன்! :)))

    அட, ஆமாம், இல்லையா பிள்ளையின் அம்மா, கூறைப்புடைவையையும், பிள்ளையின் சகோதரி விளையாடல் சாமான்கள், புடைவை தட்டுக்களையும் பிள்ளையின் அத்தை முஹூர்த்தப் பருப்புத் தேங்காயையும் எடுத்து வருவார்கள். திருமங்கல்யச் சரடு புடைவையோடு சேர்த்து வைக்கப் பட்டிருக்கும். :)) அடுத்த பதிவிலே அதை இணைக்கிறேன். நினைவூட்டியதுக்கு நன்றிம்மா.

    ReplyDelete
  7. ஊஞ்சல் பாட்டு என அமர்களம்.

    ReplyDelete
  8. மண்மகள் வந்தாள் தங்கதேரில்!
    அம்மாடி கண் கொள்ள காட்சிதான்.

    ReplyDelete
  9. நன்றி மாதேவி.

    ReplyDelete
  10. வாங்க கோமதி அரசு, நீங்களும், மாதேவியும் டிபன் சாப்பிட்டுட்டு வாங்க. :)))

    ReplyDelete

  11. "ஆஹா, மங்கள மேளம் கொட்டி முழங்க மணமகள் வந்தாள் தங்கத் தேரிலே!"

    தலைப்பும் விளக்கமும் அருமை.

    ReplyDelete
  12. வாங்க வைகோ சார், ரொம்பவே தாமதமா வந்திருக்கீங்க. டிஃபன் கிடைச்சதா? :))))

    ReplyDelete
  13. பச்சைப்பிடி சுற்றுதலில் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டேன்....

    அந்த சாத உருண்டைகளை சின்ன சின்ன கவரில் போட்டு சுற்றி போட்டார்கள் விஜய் டிவி நம்ம வீட்டு கல்யாணத்தில் வந்த குற்றாலீஸ்வரன் கல்யாணத்தில் நல்ல ஐடியா தான். யார் காலிலும் மிதிப்பட்டு ஈஷிக்கொண்டு இல்லாமல் என்று நினைத்துக் கொண்டேன்....

    என் கல்யாணத்தில் என்னை என் மாமியாரும் அவரை அவர் மாமியாரும் தான் உள்ளே அழைத்துச் சென்றார்கள்....:)(எல்லோருக்குமே விழுப்புரம் தான் பூர்வீகம்)

    ReplyDelete