எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 08, 2013

பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள்!

ப‌ர‌ந்தாம‌ன் முக‌ம‌தில் பல்வில‌ங்கேற்றினாள்.//

தேவி உபாசகர்களின் கருத்து படைப்பு, காப்பு, அழிப்பு மூன்றுக்கும் ஆதாரமாக இருப்பது ஒரு பராசக்தி. சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய அனைத்தும் பராசக்தி ஒருத்தியாலேயே நடைபெறுவதாக ஐதீகம்.  இவற்றைக் கடந்து அதீதமாக நிற்பது பராசக்தியான காமேசுவரியாகும்.  இந்த மூன்று தொழிலும் அவளுடைய மாயை.  இந்த மாயையால் அகில சராசரங்களையும் அவள் ஆட்டுவிக்கிறாள்.  இந்தத் தொழில்களுக்காகவே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோரை சிருஷ்டித்தாள்.  காரியமில்லா நிலையில் உள்ள ஒரே வஸ்துவான அம்பாள் காரியமாகிறபோது பலரூபங்களையும் எடுக்கிறாள்.  இவற்றில் உயர்வு தாழ்வு என்பது நம் மனம் கற்பிக்கும் பேதமே அன்றி உண்மையில் இல்லை. அம்பாளையே பல ரூபங்களில் பார்க்கிறோம் இல்லையா? ஆனால் அனைத்தும் ஒரே சக்தியே. இத்தகைய சக்தியானவள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய அனைத்தையும் செய்வதற்காக முறையே  பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், மஹேஸ்வரன், சதாசிவன் ஆகியோரைப் படைத்ததாக சாக்தர்கள் சொல்வார்கள்.  மஹாவிஷ்ணுவை ஸ்திதி கர்த்தாவாக அம்பிகையே நியமிப்பதாக சாக்தர்கள் சொல்வார்கள்.  அப்போது இவ்வுலகைக் காப்பதற்காக மஹாவிஷ்ணு பல அவதாரங்களையும் எடுக்க வைத்தாளாம் அம்பிகை.  லலிதா சஹஸ்ரநாமத்தில் ஸ்ருஷ்டிகர்த்ரீ--ப்ரம்மரூபா; கோப்த்ரீ--கோவிந்தரூபிணீ; ஸம்ஹாரிணி--ருத்ரரூபா; திரோதானகரி--ஈஸ்வரி;  ஸதாசிவா--அநுக்ரஹதா:  பஞ்சக்ருத்ய பராயணா! என்று அம்பிகையைக் குறித்து வரும்.  அப்படி அம்பிகையே கோப்த்ரீயாக கோவிந்தரூபிணியாக இருப்பதாகவும் அவளே இந்தப் பத்து அவதாரங்களையும் எடுத்ததாகவும் லலிதாம்பாள் சோபனம் சொல்கிறது.  இங்கேயோ பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள் என்று வருவதால் பரந்தாமனைப் பத்து அவதாரங்கள் எடுக்க வைத்தவள் அம்பிகை என்ற பொருள் கொள்ள வேண்டும்.  கீழே லலிதாம்பாள் சோபனத்தின் பாடல்கள் சிலவற்றைப் பகிர்கிறேன்.  ஏற்கெனவே பகிர்ந்தவையே.



அஸுராளை அனுப்பி வைத்தான்
தன்னையடுத்த பேர்க்கு அபயங்கொடுத்துத்
தற்காக்கும் வலக்கைக் கட்டைவிரலை
உதறிவிட்டாளம்மன் அதிலேயிருந்து
உண்டாகிவந்து மச்சமூர்த்தியும்
வதைத்தந்த அஸுராளெல்லாரையும்
ஜயித்த மச்சாவதாரர்க்குச் சோபனம் சோபனம்.

சமுத்திரத்தை வருத்திவிட்டான் பண்டன்
சக்திசேனைகளை முழுகடிக்க
நிமிஷத்தில் அம்மன் உதறினாளப்போது
நீட்டி ஆள்காட்டி வரல்தனையும்
குதித்தாருடனே யதிலே யிருந்து
கூர்மாவதார மஹாவிஷ்ணுவும்
கொந்தளிக்கும் சமுத்ரங்களெல்லாங்குடித்த
கூர்மாவதாரர்க்குச் சோபனம் சோபனம்

இரணியாக்ஷனை அதிகோபத்துடனே
இந்தப் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
வராஹ மூர்த்தியும் உண்டானாரப்போ
வலக்கை நடுவிரலில் இருந்து
பொல்லாத ஹிரண்யாக்ஷ அஸுரர்களை யெல்லாம்
சற்றுப்போதைக்குள்ளே ஸம்ஹரித்தார்
வெல்ல முடியாத ரூபந்தரித்த லக்ஷ்மி
வராஹ மூர்த்திக்குச் சோபனம், சோபனம்


“இரணியகசிபு முதாலானஸுராளை யெல்லாம்
இந்தப் பண்டாஸுரன் வருத்திவிட்டான்
பரமேச்வரியும் வலக்கைப் பவித்திர
விலையசைத்தாள் அதிலிருந்து
அதிபராக்கிரம நரஸிம்மரும் வந்து
அஸுர ஹிரண்யனை ஸம்ஹரித்தார்
நாகசயனர் பக்தர் பிரஹலாதர லக்ஷ்மி
நரஸிம்ம மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

நரஸிம்மர் வந்து ஹிரண்யனை வதம் செய்துவிட்டார். லக்ஷ்மியைத் திருமணம் செய்துகொண்டு லக்ஷ்மி நரசிம்மராய்க் காட்சி தருகிறார். அடுத்து வாமன அவதாரம். முதல் இரண்டும் இரண்டு வகை நீர் வாழ் ஜந்துக்கள். மீன், கூர்மம்(ஆமை), அடுத்து வராஹம் நிலத்தில் வாழும். அதுக்குப் பின்னர் பாதி மனிதன், பாதி மிருகமான நரசிம்மம். படிப்படியான பரிணாம வளர்ச்சி. இப்போ முதல் மனிதன். முதலில் குட்டையாய்த் தானே இருந்திருக்கணும். ஆகவே வாமனன்.

மஹாபலி முதலான அஸுரசேனைகளை
வருத்திப் போகச் சொன்னான் பண்டாஸுரன்
மஹாமாயையும் வலக்கைச் சுண்டுவிரலைச்
சுழட்டியே உதறினாள் அதிலிருந்து
வந்தார் மஹாவிஷ்ணு வாமன மூர்த்தியாய்
மஹாபலி அஸுரனையும் ஜயித்து
மஹாபலியை பாதாளத்தில் தள்ளின
வாமன மூர்த்திக்குச் சோபனம் சோபனம்

வாமனன் மஹாபலியைப் பாதாளத்தில் அழுத்தி நித்ய சிரஞ்சீவிகளில் ஒருவராய்ச் செய்தாயிற்று. அடுத்து மனிதன் தான். ஆனால் பயங்கர கோபக் கார மனுஷன். ரிஷி புத்திரன். பல அரசர்களுக்கும், மன்னர்களுக்கும் இளவரசர்களுக்கும் ஆசாரியர். மஹாபாரத காலத்துக் கர்ணனுக்கும் ஆசாரியன். ஆனால் இவர் கார்த்த வீர்யார்ச்சுனன் இவரின் தந்தையைக் கொல்லவும், க்ஷத்திரியர்களிடம் கொண்ட பகைமையால் அவர்களை அழித்துவந்தார். இருபத்தொரு தலைமுறைக்கு க்ஷத்திரியர்களை அழித்த இவரை நிறுத்த வேண்டி காச்யபர் இவரிடம் பூமியை தானமாகப் பெற்றார். காச்யபருக்கு தானம் கொடுத்த பின்னர் அந்த பூமியில் இருப்பது முறையல்ல என்பதால் அவர் கடலரசனை வேண்டித் தமக்கென ஒரு நிலத்தை ஏற்படுத்திக்கொண்டார். மேற்குக் கடலோரமுள்ள அந்த நிலம் பரசுராமரால் ஆட்சி செய்யப் படுவதாய் இப்போதும் சிலரால் நம்பப் படுகிறது.  கீழே பரசுராமாவதாரப் பாடல்கள்

கார்த்த வீர்யார்ச்சுனனைச் சேனைகளுடன்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
ஆர்த்திகளைப் போக்கும் லலிதேச்வரியும்
அசைத்தாள் இடக்கைக் கட்டைவிரலை
பரசுராமர் கையிற்கோடாலி கொண்டு
புறப்பட்டார் வெள்ளிவலையைப் போல
பலமுள்ள கார்த்த வீர்யாச்சுனனை வதைத்தப்
பரசுராமருக்குச் சோபனம், சோபனம்.

அடுத்து பூரணமான மனிதன்.  ஶ்ரீராமன்.  மர்யாதா புருஷோத்தமன்.  மனிதனாக எப்படி வாழ்ந்து காட்டுவது, ஒரு அரசனாக அரசனுக்குரிய நீதி பரிபாலனத்தை எப்படிக் காப்பது?  அதற்காக மனைவியையே துறக்க வேண்டி இருந்தாலும் அவளையும் துறந்து அரச தர்மத்தைக் காப்பது என இருந்த மஹாவீரன்.  தான் ஒரு அவதாரம் என்ற நினைப்பில்லாமல் மனிதனாகவே வாழ்ந்து காட்டியவன்.

“இராவணனைக் கும்பகர்ணனிந்திரஜித்தனை
இராட்சதாளை யவன் அனுப்பி வைத்தான்
தேவியும் இடக்கை ஆள்காட்டி விரலைச்
செப்பிடுவித்தை போல் உதறினாளே
ஸ்ரீராமலக்ஷ்மணர் ரதத்திலிருந்து கொண்டு
ராவணன் முதலோரை வதைகள் செய்தார்
தாமஸியாமல் ராக்ஷதாளை வதைத்த
ஸ்ரீ ராமலக்ஷ்மணருக்குச் –சோபனம், சோபனம்.

அடுத்து வருகிறார் நம்ம பலராமர். மூத்தவர். கண்ணனுக்கு அண்ணன். ராமாயணத்தில் இவர் இளவலாய்ப் பிறந்து அண்ணனுக்குச் சேவை செய்ததால் இங்கே மூத்தவராய்ப் பிறந்து உலக்கையையும், கலப்பையையும் வைத்துக்கொண்டு எல்லாரையும் நாசம் செய்கிறார்.

“வானரங்களையும் வருத்திவிட்டான் பண்டன்
மலைமலையாகவே தேவிமேலே
விஜய அம்பாள் தன் இடக்கை நடுவிரலை
மின்னல் மின்னினாற்போல் உதறினாளே
பலபத்திரரும் வந்தார் கைலாச மலைபோலப்
பெரிய உலக்கைக் கலப்பை கொண்டு
உலக்கைக் கலப்பையால் குரங்குகளைக் கொன்ற
உக்கிரபாலருக்குச் –சோபனம், சோபனம்.

அடுத்து நம்ம கண்ணன் வந்தே விட்டான்.  சகலரையும் மகிழ்வித்துக் கொண்டு தான் பூரண அவதாரம் என்பதை ஒவ்வொரு நொடியிலும் நிலைநாட்டிக் கொண்டு கேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்.  கேள்வியே பதிலாகக் கண்ணன் வந்தான்.

“சிசுபாலன் கம்ஸன் சகடன் பூதன் தன்னை
துஷ்டன் பண்டாஸுரன் அனுப்பி வைத்தான்
விச்வேச்வரியும் இடக்கைப் பவித்திர
விரலை அசைத்தாள் அதிலிருந்து
சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தனாகவே
ஸ்வாமி வந்தவர்களை ஸம்ஹரித்தார்
சங்கர்ஷணன் ஸ்ரீகிருஷ்ணன், அநிருத்தன் ப்ரத்யும்னன்
ஸ்வாமி நாலுபேருக்கும்-சோபனம் சோபனம்.

அடுத்து இனி நடக்கப் போகும் அவதாரம்.

அடுத்துக் கல்கி அவதாரம்.
கலியுகாஸ்திரத்திலே கக்கும் மிலேச்சரைக்
கண்டகன் பண்டன் அனுப்பி வைத்தான்
கல்யாணியும் இடக்கைச் சுண்டு விரலைக்
காட்டி அசைத்தாள் அதிலிருந்து
அட்டஹாஸத்துடன் கல்கி அவதாரமாய்
அச்சுதரும் வந்தார் அந்தக்ஷணம்
முரட்டுத் தனமுள்ள மிலேச்சரை வதை செய்த
முரஹரி கல்கிக்குச்-சோபனம் சோபனம்

17 comments:

  1. லலிதாம்பாள் சோபனம்

    அருமையான பாடல் வரிகள் திகைக்கவைத்தன..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. லலிதாம்பாள் சோபனம் அறிந்தேன்... நன்றி அம்மா...

    ReplyDelete
  3. அம்பிகைதான் பிரம்மா, விஷ்ணு சிவன் என்று எல்லோரையும் படைத்தாள் என்பதை நான் முதல்முறை படிக்கிறேன். ல.ஸ எல்லாம் கேட்பதே அரிது. அர்த்தம் எங்கே கண்டேன்! :))

    ReplyDelete
  4. உங்களுடைய தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் பிரமிக்க வைக்கிறது. ஆதார் கார்டுக்கான வரிசையில் நிற்கும் போது இதன் நினைவாக நின்றிருந்திருந்தேன் என்று முன்பு எழுதியிருந்தீர்கள்.

    மிகவும் உன்னிப்பாக படித்தேன். மிக்க நன்றி.

    ReplyDelete
  5. அழகான பதிவு. அற்புதமான விஷயங்கள். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  6. பரந்தாமன் முகமதில் பல்விலங்கேற்றினாள்!

    மச்ச அவதாரத்தில் மீன் முகம்


    கூர்ம அவதாரத்தில் ஆமை முகம்

    வராஹ அவதாரத்தில் பன்றி முகம் மனித் உடல்,

    நரசிம்ம அவதாரத்தில் சிம்ம முகம் மனித் உடல் என்று

    என திருமால் ஆரம்ப கால அவதாரங்களில் பல விதமான விலங்குகளின் முகத்தை மனித உடலில் ஏற்றவர்..

    ReplyDelete
  7. பல்விலங்கு என்பதை பல் + விலங்கு -> பல் உடைய விலங்கு என்று பொருள் கொண்டால், இரண்டு அவதாரங்களாவது(வராஹம், நரசிம்மம், கூர்மம்)

    இருந்தாலும் பத்து அவதாரங்களும் அவளே பொறுப்பு - நிச்சயமாக.

    நன்றிகள்!

    ReplyDelete
  8. மேலும், பல் உடைய விலங்கு என்பதை விட, பல்விலங்கு = பல + விலங்கு = பல விலங்கு முகங்களை பரந்தாமனுக்கு கொடுத்தாள் !

    ReplyDelete
  9. வாங்க ராஜராஜேஸ்வரி, ஏற்கெனவே லலிதாம்பாள் சோபனம் எழுதிட்டேன். இரண்டு வருடங்கள் முன்னர்னு நினைக்கிறேன். யாருக்கும் நினைவில் இல்லை; அல்லது படிக்கவில்லை. :)))))))))

    ReplyDelete
  10. வாங்க டிடி ஏற்கெனவே எழுதிட்டேன். :))))

    ReplyDelete
  11. வாங்க ஶ்ரீராம், தேவி மஹாத்மியத்திலே வரும். தேவி பாகவதத்திலேயும் வரும்னு நினைக்கிறேன். தேவி பாகவதம் படிச்சது இல்லை. லலிதாம்பாள் சோபனம் சின்ன வயசிலே சொன்னது. அம்மா சமைத்துக்கொண்டே சொல்வாங்க. அப்போக் கேட்டுக் கேட்டு வந்தது. அப்புறமா மறந்தே போய் சில வருடங்கள் முன்னர் தான் புத்தகம் வாங்கினேன். கிரி ட்ரேடர்ஸில் கிடைக்கலாம்.

    ReplyDelete
  12. ஜீவி சார், ஆமாம், இந்த வரிக்கு அர்த்தம் புரியாமல் இதே நினைவா இருந்தது தான். அப்புறமா ஈரோடு நாகராஜன் அவர்கள் பொருளை அனுப்பி வைச்சதும் தான் லலிதாம்பாள் சோபனத்திலே இருக்கேனு நினைவு வந்தது. ஆனால் இந்தப் பாடலின் இந்த வரிகளுக்குப் பொருள்புரியாமல் குழம்பியது என்னமோ உண்மை. :))))

    ReplyDelete
  13. ஆமாம், ராஜராஜேஸ்வரி, அதே பொருளில் தான் பாடி இருக்கார். :)))

    ReplyDelete
  14. வாங்க ஜீவா, அழைப்புக்கு இணங்கி உடனே வந்ததுக்கும் கருத்துப் பதிந்ததுக்கும் நன்றி. நீங்க சொல்லும் இரண்டு பொருளுமே ஏற்கக் கூடியதே. வரவுக்கு நன்றி.

    ReplyDelete
  15. வாங்க வைகோ சார், வரவுக்கு நன்றி.

    ReplyDelete

  16. நான் எழுதி இருந்த பின்னூட்டம் cut-ஆ

    ReplyDelete
  17. ஜிஎம்பி ஐயா, இந்தப் பின்னூட்டம் தான் வந்திருக்கு. :( வேறே எதுவும் ஸ்பாமிலும் இல்லை. ட்ராஷிலும் நன்கு அலசித் தேடி விட்டேன். இயன்றால் மறுபடி முயன்று பார்க்கவும். வருத்தமா இருக்கு. :(

    ReplyDelete