எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 04, 2013

அயோத்தியை நோக்கி! பணமூட்டையுடன் நாங்கள்! :))))

ராம ஜன்மபூமி செல்லும் வழியில் கட்டவிருக்கும் ராமர் கோயிலின் மாதிரியையும் கட்டிக் கொண்டிருக்கும் இடத்தையும் காணலாம்.  அதைப் படம் எடுக்க முடியவில்லை.  அங்கிருந்து ஆட்டோவில் கொஞ்சம் பயணித்து ஶ்ரீராமஜன்ம பூமிக்குச் செல்லும் பாதையை அடைந்தோம். ஆட்டோ நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து கிட்டத்தட்ட இரண்டு  கிலோ மீட்டருக்கும் மேல் நடந்து சென்று வரிசையில் நிற்பதற்கான வாயிலை அடைய வேண்டும். அதற்கு முன்னர் நாம் கையில் கொண்டு போகும் சாமான்களை வைக்கும் லாக்கர்  உள்ளது.  அங்கே சென்றோம்.  ஶ்ரீராம ஜன்மபூமியைப் படம் எடுக்கக் கூடாது.  மொபைல்களும் அங்கே பயன்படுத்தக் கூடாது.  கைப்பைகளோ, அல்லது ப்ளாஸ்டிக் பைகளோ, துணிப்பைகளோ எதுவும் எடுத்துச் செல்லக் கூடாது.  வெறும் கையோடு தான் செல்ல வேண்டும்.

ஆகவே என்னோட கைப்பையை லாக்கர் வைத்திருக்கும் இளைஞரிடம் கொடுத்தேன்.  அதிலுள்ள பணங்கள், நகைகள் இருந்தால் எடுக்கச் சொன்னார். நகைகளே ஏதும் கிடையாது.  பணத்தை எடுத்தால் எங்கே வைச்சுக்கறது!  அங்கே பணமாக வைத்திருக்க வேண்டும். ஏனெனில் தங்குமிடத்துக்கு அன்றைய வாடகையை அன்றே கொடுத்தாக வேண்டும். இன்று மதியம் பனிரண்டு மணி மேல் அரை மணி நேரம் தங்கினாலும் ஒரு நாள் வாடகையைக் கொடுத்தாக வேண்டும்.  மேலும் ஏடிஎம் எங்கே இருக்குனு தேட வேண்டி இருக்கும். அதெல்லாம் யோசித்துப் பணமாகவும் இருந்தது.  சரி சின்ன பர்ஸில் வைக்கலாம் என சின்ன பர்ஸை எடுத்தேன்.  அருகிலிருந்த பாதுகாப்புக் காவலர் அதையும் மறுத்தார்.  அதுவும் எடுத்துச் செல்லக் கூடாது என்றார். நம்ம ரங்ஸோ வேட்டி கட்டிக் கொண்டு வந்திருக்கார்.  பான்ட் போட்டிருந்தால் பான்ட் பாக்கெட்டில் வைக்கலாம். என்ன செய்வது? அதுக்குள்ளாகப் பையைத் திரும்பக் கொடுத்த லாக்கர் இளைஞன், "நிறையச் சில்லறை இருக்கு,  அதையும் எடுங்க", னு சொன்னார். கைப்பையே கனம் தாங்காத அளவுக்கு கிட்டத்தட்ட முந்நூறு ரூபாய்க்குச் சில்லறை வைத்திருந்தோம்.  ஆங்காங்கே தேநீருக்கு, காபி, பழங்கள் வாங்கினால் சில்லறை இல்லாமல் சிரமப் படும் எனப் பத்து ரூபாய்க் காசிலிருந்து எட்டணா வரை சில்லறை இருந்தது.

எல்லாவற்றையும் காலி செய்தேன்.  அதுக்குள்ளே மேல்துண்டை எடுத்தார் நம்மவர்.  அதிலே கொண்டு போன ரூபாய்களையும் போட்டுச் சில்லறையையும் போட்டோம். ஒரு மூட்டையாகக் கட்டினோம்.  கொஞ்ச நேரம் ரங்க்ஸ் தூக்கிக் கொண்டு வந்தார்.  வழியெல்லாம் கிட்டத்தட்டப்பத்து இடங்களில் பாதுகாப்புச் சோதனை. அவங்களைப் போல் ஐந்து மடங்கு நம் வாநரர்களின் பாதுகாப்பு.  பாதுகாப்புக் காவலர்கள் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் சரளமாகப் பதில் சொல்ல முடிந்தது.  ஆகையால் பண மூட்டையோடு செல்ல எங்களை அநுமதித்ததோடு அவங்களோட கவலையையும் தெரிவிச்சு, என் புடைவைத் தலைப்பில் வைத்து மறைத்துக் கொண்டு குரங்குகளிடமிருந்து பாதுகாப்பாகச் செல்லும்படியும் கூறினார்கள். சுற்றிச் சுற்றிச் சுற்றி வழி சென்று கொண்டே இருந்தது.  ஆங்காங்கே பாதுகாப்புச் சோதனை!  அதே கேள்விகள், அதே பதில்கள்!

கிட்டத்தட்ட மீண்டும் ஒரு இரண்டு கிலோ மீட்டர் அந்த வரிசைக்கான சுற்றுவழியில் சுற்றிச் சுற்றிச் சென்றதும் திடீர்னு  "இதோ ராமஜென்மபூமி" என்று காட்டி வணங்கச் சொல்கின்றனர். ஶ்ரீராமர் குழந்தை வடிவில் மிகச் சிறிய உருவத்தில் காணப்படுகிறார். சுற்றிலும் ராணுவப்பாதுகாப்பு.  ராஜா அல்லவா?  மெய்க்காவலர்கள் புடைசூழக் காவலில் இருக்கக் காண முடிகிறது.  ஒரு பண்டிட் அங்கே சுற்றிலும் காவலர்கள் புடை சூழ அமர்ந்திருக்கிறார்.  "போலோ,  ஶ்ரீராம்லாலா கி ஜெய் !" என்ற கோஷம் எங்கும் எழுந்தது. ஆம் இங்குள்ள ஶ்ரீராமரைக் குழந்தை என்பதால் "ராம்லாலா" என அழைக்கின்றனர்.  பளிங்கினால் செய்த சிலையில் தங்கத்தால் கோட்டிங் செய்திருப்பதாகச் சொல்கின்றனர்.  ஶ்ரீராமர் விக்ரஹம் இருக்கும் இடத்துக்கும் நாம் தரிசனம் செய்யும் இடத்துக்கும் குறைந்த பக்ஷமாக ஐம்பது அல்லது அறுபது அடிக்கு மேலேயே இருக்கும்.  ஈட்டி மரத்தால் செய்யப்பட்ட பல்லக்கில் வைத்திருப்பதாகவும் சொல்கின்றனர்.

சற்று நின்று தரிசிக்கலாம்.  ஒண்ணும் சொல்வதில்லை என்றாலும் அடுத்தடுத்து மக்கள் வந்து கொண்டிருப்பதால் இரண்டு நிமிடத்துக்கு மேல் நிற்க முடிவதில்லை. விநயமாகவே நகரச் சொல்லி வேண்டுகோள் விடுக்கின்றனர்.  மீண்டும் அதே நாலு கிலோ மீட்டர் தூர நடை.  அதன் பின்னர் ஶ்ரீராமரின் உலோக விக்ரஹங்கள் சில வாங்கிக் கொண்டு அங்கே காத்திருந்த வழிகாட்டியுடன் அறையை நோக்கித் திரும்பினோம்.  அதற்குள்ளாக மணி பதினொன்றுக்கும் மேல்  ஆகிவிட்டதால் ஶ்ரீராமஜென்ம பூமியையும் மூடி விட்டார்கள்.  இனி மதியம் இரண்டு மணிக்குத் தான் திறப்பார்கள்.  அதோடு அங்கே மறுநாள் ஏதோ கிளர்ச்சிக்கு ஏற்பாடுகள் நடைபெறுவதாக ஏற்கெனவே தொலைக்காட்சிச் செய்திகள் மூலம் தெரிந்து கொண்டிருந்தோம்.  அதை உறுதிப் படுத்துவதைப் போல் அயோத்திக்குள் வரும் வழிகளை மூடிக் கொண்டிருந்தனர்.  அதனால் தான் எங்கள் வழிகாட்டியும் எங்களை அவசரப் படுத்திக் காலைத் தேநீருக்குப் பின்னர் எதுவும் உண்ணக் கூட அநுமதிக்காமல் எல்லாவற்றையும் காட்டிவிட்டார். :))))

அறைக்கு வந்து நேரே உணவு எடுத்துக் கொண்டு சற்று ஓய்வு எடுத்துக்கலாம் என்று போனோம்.  ஆட்டோக்காரர் மதியம் பார்க்க வேண்டியவைக்குத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும் என்று பேரம் பேசினார்.  அவை எல்லாம் அயோத்தியிலிருந்து 25, 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளவை.  ஒன்று ஶ்ரீராமன் சரயு நதியில் மறைந்த இடம் குப்தார் காட் என்னும் இடம்.  இன்னொன்று நந்திகிராமம்,  27 தீர்த்தங்களைக் கொண்டு வந்த இடம் ஒன்று , மணி பர்வதம் என்றொரு இடம்.  எங்களால் மணி பர்வதம் ஏற முடியாது என்று சொல்லிக் குறைச்சுக்கச் சொன்னோம். அவர் கூட்டித் தான் போவேன் என்றும் அங்கே போனப்புறம் ஏறுவதோ, ஏறாமல் இருப்பதோ எங்கள் இஷ்டம் என்றும் கறாராகச் சொல்லிவிட்டார். ஆட்டோக்காரரையும் அனுப்பிட்டுச் சாப்பிட்டு ஓய்வு எடுத்துக் கொண்டு மதியம் கிளம்பத் தயாரானோம். 

14 comments:

 1. சுவாரஸ்யம். ஆட்டோக்காரர், "நீங்கள் பார்த்தாப் பாருங்க, பாக்காட்டிப் போங்க...நான் கூட்டிட்டுத்தான் போவேன். காசு கொடுங்க" என்று கேட்பதும் சுவாரஸ்யம்!

  ReplyDelete
 2. அந்த நேரத்தில் கலவரமா...?

  தொடர்கிறேன் அம்மா....

  ReplyDelete
 3. பெரும்பாலான வட இந்திய கோவில்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகம் தான்.

  குரங்குகள் தொல்லையும், வழிகாட்டிகள் தொல்லையும் பிரபலம் இங்கே! :(

  ReplyDelete
 4. நாங்க போனப்ப 5 அடி தூரத்திலேந்து பாத்தோம்! இப்ப இன்னும் இம்ப்ரூவ் ஆயிருக்கு போல!

  ReplyDelete
 5. பணமூட்டை பத்திரமாகத் திரும்பி வந்ததே.குரங்கார் ராம்லல்லாவுக்காக எடுத்துக் கொள்ளாமல் இருந்ததும் அதிசயம் தான்.இதனால் என்ன தெரியவருகிறதென்றால் ஆட்டோ மாறினாலும் ஆட்டோக்காரர்கள் மாறுவதில்லை என்பதுதான்.:)

  ReplyDelete
 6. வாங்க ஶ்ரீராம், இதுக்கு நேர்மாறா சித்திரகூடத்தில் அநுபவித்தோம். :))))

  ReplyDelete
 7. வாங்க டிடி, எங்க பயணத்திட்டம் போட்டதுக்கு அப்புறமா இந்தக் கலவரம் பற்றியும் அன்று நடக்கப் போகும் பந்த் குறித்தும் தொலைக்காட்சியில் நாங்க கிளம்பும் முன்னரே செய்திகள் வந்தன. அதனாலேயே லக்னோவில் தங்காமல் உடனே அயோத்திக்குக் கிளம்பினோம்.

  ReplyDelete
 8. வாங்க வெங்கட், ஒரு வழிகாட்டிகள் நல்ல மாதிரியாவும் இருக்காங்க தான். அதையும் மறுப்பதற்கில்லை. அயோத்தியில் குரங்கும் தொந்திரவு செய்யலை, வழிகாட்டிகள், ஆட்டோக்காரர்னு யாருமே தொந்திரவு செய்யலை. :))))

  ReplyDelete
 9. வாங்க வா.தி. கொடுத்து வைச்சவர் நீங்க. எங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இல்லை. :(

  ReplyDelete
 10. உண்மைதான் வல்லி. எங்களுக்குமே பணமூட்டை பத்திரமாய்த் திரும்பியது இன்று வரை ஒரு ஆச்சரியமே. ஆட்டோக்காரங்க அங்கே நல்லவங்களும் இருக்காங்க. அவங்க ஏழ்மை அதிகம் என்பதால் சம்பாதிச்ச வரைக்கும் லாபம்னு பார்க்கிறாங்க. :(

  ReplyDelete
 11. மிகவும் சிரமப்பட்டு ஸ்ரீராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் இடத்தை தரிசித்தீர்கள் என்று தெரிகிறது.குரங்குகளின் தொல்லையை பல இடங்களில் அனுபவித்திருக்கிறோம். யாதகிரி குட்டா, பழனி மலை, மதுரையில் நூபுர கங்கை என லிஸ்ட் நீண்டுகொண்டே போகிறது. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. அவர் கூட்டித் தான் போவேன் என்றும் அங்கே போனப்புறம் ஏறுவதோ, ஏறாமல் இருப்பதோ எங்கள் இஷ்டம் என்றும் கறாராகச் சொல்லிவிட்டார்.//

  நல்ல மனிதராக இருக்கிறார்.
  அப்புறம் ஏறினீர்களா? அறிய ஆவல்.

  ReplyDelete
 13. ஶ்ரீராம்லாலா கி ஜெய் !"

  அருமையான பகிர்வு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. குழந்தை சிறீராமரை தர்சித்தோம்.

  அவலுக்கு பதில் பணம் சுமக்க கிடைத்திருக்கிறது அதுவும் அவன்செயல்தான் எனத்தோன்றுகிறது.

  ReplyDelete