எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, September 01, 2014

தில்லானா மோகனாம்பாள்!அதிசயமா ஜிவாஜி படத்தைப் பார்த்தேன்.    வழக்கம் போலப் பாதியிலிருந்து தான் பார்க்க முடிந்தது.  அறுபதுகளின் கடைசியில்(?) வந்த இந்தப் படத்தை முதல் முதல் பார்க்கச் சென்றபோது வீட்டில் ஏதோ பிரச்னை. எனக்கு அப்போக் கல்யாணம் ஆகலை. அண்ணா லீவில் எதுக்கோ வந்திருந்தார். நாங்க குடியிருந்த வீட்டில் இருந்தவங்க எல்லாம்  இரண்டு தரம், மூன்று தரம் பார்த்துட்டு வந்தாங்க. :))) பொதுவாகவே படம் பார்ப்பது குறைவு தான்;  அதிலும் அப்பாவுக்கு மனசு இருந்தால் தான் அனுப்பி வைப்பார்.  இல்லைனா இலவசமா பாஸ் வந்தால் கூட வேறு யாருக்கானும் கொடுத்துடுவார்.  ஆகவே பெரிசா ஆசை எல்லாம் இல்லை படத்தைப் பார்க்கணும்னு எல்லாம் நினைக்கலை.


ஆனாலும் போனால் படத்தை முழுசாப் பார்க்கணும்னு என்னோட விருப்பமா இருக்கும்.  அன்னிக்கு என்னமோ கிளம்பறச்சேயே தாமதம் ஆகி விட்டது.  அப்பா ஏற்கெனவே இந்தப் படத்தைப் பார்த்துட்டதாலே, எங்களை மட்டும் அனுப்பி வைச்சார். படம் வேறே தியேட்டரை விட்டுப்போயிட்டு இன்னொரு புதுப்படம் ரிலீசாக இருந்தது.  ஆகவே தியேட்டரில் இந்தப் படத்தை நூறாவதுக் முறையாகப் பார்க்க வந்தவங்க கூட்டம் வேறே. எங்களுக்கு சென்ட்ரல் சினிமாவில் பால்கனியில் சீட் கிடைச்சிருந்தது. அங்கிருந்து தெரியும் சின்னச் சதுர ஓட்டை வழியாகவே படத்தைப் பார்க்கணும்.


சும்மாவே அது வழியாப் பார்க்கிறது சிரமம்.  இதிலே முன் சீட்டில் எங்களை எல்லாம் விட உயரமாக, குண்டாக நான்கு பேர் ஆக்கிரமித்துக்கொள்ள அவங்க முதுகை மட்டும் நல்லாப் பார்க்க முடிஞ்சது.  வசனங்கள் காதில் விழுந்தன. ஏற்கெனவே இந்தப் படத்தைப் பார்த்திருந்த என் பெரியப்பா பெண் வசனங்களையும், அடுத்தடுத்த காட்சிகளையும் அவளே கிட்ட இருந்து எடிட் பண்ணின மாதிரி சொல்லிக் கொண்டிருந்தாள். இந்தக் கதையை நூறுதரம் படிச்சிருந்த எனக்கோ கதைப்படி படம் இல்லாதது பெரிய ஏமாற்றம்.


அது எப்படி அம்மாதிரி எடுக்க முடியும்? இந்த அளவுக்காவது எடுத்திருக்காங்களேனு எல்லோரும் சொல்ல என்னால் அதை ஒப்புக்க முடியலை.  சிவாஜிக்குத் தனி நாயனம் கொடுக்காமல் ஏவிஎம் ராஜனைக் கூடப் போட்டு இரட்டை நாயனமாப் போட்டதையே என்னால் ஒத்துக்க முடியலை.  என்றாலும் பாடல்கள் இனிமை.  படமாக்கப்பட்டிருந்த விதம் அருமை.  காட்சி அமைப்புகள் அருமை.  நாகேஷும், மனோரமாவும் பின்னி எடுத்துட்டாங்க.  மனோரமா "ரோசா ராணி" என்னும் சர்க்கஸ்காரியாக வரும் காட்சிகளில் நடிப்பில் சிவாஜியை மிஞ்சி (அதாவது இயல்பான நடிப்பாக இருக்கும்னு அர்த்தம்) இருப்பார்.


என்றாலும் படம் மனதில் என்னமோ நிக்கலை. அதற்கப்புறமாப் பல வருடங்கள் கழித்து, நானும் கல்யாணம் ஆகிப் போய் அங்கே இங்கே சுத்திவிட்டு வீடு கட்டி கிரஹப்ரவேசம் செய்த சில மாதங்களில் சென்னைத் தொலைக்காட்சியில் ஏதோ பண்டிகைக்குச் சிறப்புத் திரைப்படமாக இதைப் போட அன்னிக்குத் தான் உட்கார்ந்து முழுசும் பார்த்தேன். கதையின் ஜீவனைக் குலைக்கவில்லை.  ஆனாலும் கடைசிக் காட்சி ரொம்பவே நாடகத் தனம்.  கதையில் வேறு விதமாக வரும். சினிமாவில் அப்படிக் காட்ட மாட்டாங்க போல.  கத்திக்குத்து பட்டதும் சிக்கலார் துடிக்கும் காட்சியில் ஜிவாஜி நடிப்பு ரொம்பவே ஓவர்னு தோணிச்சு. :(  அதைப் போலவே திருவாரூர்க் கோயிலில் போட்டியைத் தடுக்க வந்த நாகேஷ் மக்கள் எதிர்ப்பில் திரும்பிப் போகையில் வேணும்னே ஒவ்வொருத்தர் காலிலேயும் விழறாப்போல் போயிட்டுக் கடைசியில் வெளியேறுவார்.  அதுவும் தேவை இல்லை.  ஏனெனில் அது யதார்த்தமாகத் தெரியாமல் நாகேஷ் வேண்டுமென்றே செய்கிறார் என்பது நமக்குப் புரிகிறது. :(


மூலக் கதையில் சிக்கலாருக்கும், மோகனாவுக்கும் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தையைக் கையில் எடுத்தவண்ணம் மோகனாவின் தாய் சிரித்துக் கொண்டிருப்பதைப் போல கோபுலு வரைந்திருக்கும் சித்திரத்தின் அழகுக்கு ஈடு, இணை இந்தப் படத்தில் இல்லை.  அது இன்னும் மனதில் இருக்கிறாப்போல் படம்?????????? என் கருத்துக்கு மாறுபட்டவர்கள் பலர் இருப்பாங்க தான்.  ஆனாலும் ஒரு கதையைப் படமாக்குவதில் பெரும்பாலான இயக்குநர்கள்  தமிழில் கோட்டை விடுகிறார்கள் என்பதே எனக்கு வருத்தம்.  ஆனாலும் சீரிய முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை.  பல அருமையான கதைகளும் படமாக்கும் முயற்சியில் சீர்குலைக்கப்பட்டிருக்க இதில் கதையின் மையக்கருவைக் கெடுக்காமல் எடுத்ததற்காகவே இயக்குநரையும், தயாரிப்பாளரையும் பாராட்டியாக வேண்டும். 

39 comments:

 1. அடடா மிகச் சிறப்பாக இப் படத்தினை விமர்சனம் செய்துள்ளீர்களே !
  வாழ்த்துக்கள் தோழி எக் காலத்திலும் மனதில் சட்டன நினைவுக்கு
  வரும் ஆச்சி மனோகரம்மாவின் நடிப்பே இங்கு தனிதான் ¨!வாழ்த்துக்கள்
  தோழி தங்களின் சிறந்த விமர்சனங்கள் மென்மேலும் சிறப்பாகத்
  தொடரட்டும் .

  ReplyDelete
 2. ஏற்கெனவே வெளிவந்த ஒரு நாவலித் திரிப்படமாக்குவது என்பது எப்போதுமே மிகப்பெரிய சோதனை.

  நல்ல புகழ்பெற்ற நாவலை முதலில் படித்திருந்தால் திரைப்படம் மனதில் ஒட்டாது. எந்தக் கதையும் கதையைக் கெடுக்காமல் திரைப்படமானதில்லை. ஜெயகாந்தன் கதைகள் வி.வி. அதனால்தானே அவர் படங்களை அவரே எடுத்தார்? ஆங்கிலத்தில் எப்படி என்று எனக்குத் தெரியாது.

  அப்பாதுரை முன்பு ஒருமுறை அவர் கதை ஒன்றைப் பற்றிச் சொன்னது நினைவுக்கு வருகிறது!

  ReplyDelete
 3. அப்புறம் ஒரு தகவல். என் பி என் பொன்னுசாமி மகன் என் தோழன்!

  ReplyDelete
 4. பத்திரிகை ஊடகங்களில் வந்து புகழ்பெற்ற கதைகள் திரைப்படம் ஆக்கப்படும்போது, அவை பெரும்பான்மை தோல்வியையே தழுவிவிடுகின்றது. காரணம் நம் நினைவில் நிழலாடும் கேரக்டர்களின் உருவங்கள், திரைப்படங்களில் வரும் உருவங்கள் ஒன்றாயிருப்பதில்லை. ஆயினும், தில்லானா மோகனாம்பாள் எனும் கதையை எடுத்துக் கொண்டு, திரைக்கதையை செம்மையாக்கி, மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெறச் செய்தவர் ஏ.பி.என். அருமையான திரைக்கதைக்கு ஓர் அற்புத உதாரணம் தி.மோ. (அதில் ஆண் குரல் பாடல் கிடையாது. )நடிப்பு, பாடல், ஆடல், வண்ணம், வித்தியாசமான கேமரா கோணங்கள், ஆடல் கலைஞர்களின் உண்மை நிலை என அனைத்தும் தெள்ளத் தெளிவாக காட்டப்பட்டிருக்கும்.

  ReplyDelete
 5. வாங்க அம்பாளடியாள், வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. வாங்க ஶ்ரீராம், இதைப் போலவே கதையாக வந்து திரைப்படமானதில் வணிக ரீதியாக வெற்றி பெற்றதில் முள்ளும் மலரும் படத்தைக் கூடச் சொல்லலாம். கல்கி வெள்ளிவிழாப் போட்டியில் முதல் பரிசு பெற்ற அந்த நாவலின் முடிவும், சினிமாவின் முடிவும், சில, பல சம்பவங்களிலும் மாற்றம் இருக்கும். சினிமாவுக்காக ரஜினியைக் கதாநாயகனாகக் காட்டி இருப்பாங்க! அதனால் தான் வெற்றி பெற்றதோ?

  ReplyDelete
 7. மஹரிஷியின் கதையா புவனா ஒரு கேள்விக்குறியைப் படமா எடுத்தப்போவும் ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகக் கதாநாயகன் நாகராஜன்(சிவகுமார் நடித்திருப்பார்னு நினைக்கிறேன்) குணச்சித்திரம் சிதைக்கப்பட்டது. :(அந்தப் படமும் வணிகரீதியாக வெற்றியோ? தெரியலை; நினைவிலும் இல்லை. :)))

  ReplyDelete
 8. என்.பி.என் இல்லை, எம்பிஎன் சேதுராமன், எம்பிஎன் பொன்னுச்சாமி. எங்களுக்கு நல்லாவே பழக்கம். மேலாவணி மூலவீதியில் இருந்து அவங்க இருந்த சங்கீத விநாயகர் கோயில் தெரு நடந்து போகும் தூரம் தானே! :))) அந்தப் பிள்ளையாரும் எனக்கு ஃபேவரிட் தான். :)))

  ReplyDelete
 9. வாங்க தீக்ஷிதரே, அபூர்வமாக வந்தாலும் சரியான கருத்துக்களோடு வந்திருக்கீங்க. ரொம்ப நன்றி.

  ReplyDelete
 10. சிவாஜி பத்மனி மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் நடித்துள்ள நாகேஷ், மனோரம்மா, பாலையா, M N நம்பியார், வடிவு, பாலாஜி போன்ற ஒவ்வொருவரின் நடிப்பும் மிக அருமையாக அமைந்துள்ளன.

  நான் பலமுறை பார்த்து, மிகவும் ரஸித்த படம் இது.

  எனினும் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள இந்தக்கதையை நான் புத்தகத்தில் படிக்கும் வாய்ப்பு எனக்கு ஏனோ கிட்டவில்லை.

  பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete

 11. அதென்ன ஜிவாஜி... உங்களுக்குஅவரைப் பிடிக்காதா. ? திரைப் படத்துக்கு ஏற்ப சில கதைகள் மாற்றம் செய்துதான் ஆகவேண்டும். சில நேரங்களில் அது ரசிக்கப் படும், சில நேரங்களில் அது விமரிசிக்கப் படும்.

  ReplyDelete
 12. சிவாஜி கொடுமை போதாதுன்னு ஏவிஎம்ராஜன் கொடுமை வேறே சேர்ந்த படமாச்சே இது?! இந்த ரெண்டு கொடுமை தாங்கலியேனு ஓடினா அங்கே ஆடிச்சாம் பத்மினிக் கொடுமை.

  நாகேஷ் மனோரமா மட்டும் இல்லையின்னா சித்திரவதை இந்தப் படம்.

  கதையைப் படித்ததில்லை.

  ReplyDelete
 13. நாவலையும், படத்தையும் நன்கு ஒப்பிட்டு எழுதி இருந்தீர்கள். நான் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவலை வாசித்ததில்லை. ( பந்தநல்லூர் பாமா படித்து இருக்கிறேன்) அதனால்தான் படத்தை என்னால் ரசிக்க முடிந்தது என்று நினைக்கிறேன். பதிவில் நடிகர் திலகத்தின் சிவாஜி என்ற பெயரை ஜிவாஜி என்றே குறித்து விட்டீர்கள். அப்புறம் எப்படி “சிவாஜி வாயிலே ஜிலேபி” யை ரசிப்பது?.

  பதிவுகளை படிக்கிறார்கள். ஆனால் பின்னூட்டங்கள்தான் எழுதுவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லாமல் போய் விடுகிறது என்று ஒருமுறை சொல்லி இருந்தீர்கள். இப்போது தில்லானா மோகனம்பாளை முன்னிட்டு நிறையபேர் கருத்துரை தந்து இருக்கிறார்கள். சினிமா என்றாலே ஒருவித ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது. வலைப்பதிவில் இதுபோல் பழைய படங்களைப் பற்றிய விமர்ர்சனம் அடிக்கடி எழுதவும்.

  ReplyDelete
 14. வாங்க வைகோ சார், இந்தக் கதை விகடனில் வந்தப்போ நான் ஆரம்பப் பள்ளி மாணவினு நினைக்கிறேன். ஆனாலும் கொஞ்சம் கொஞ்சம் படிச்சேன்னு நினைக்கிறேன். அதுக்கப்புறமாப் பல வருடங்கள் கழித்து இதை விகடன் பைன்டிங்காகவே படிச்சேன். கொத்தமங்கலம் சுப்பு எழுதியவற்றில் இதுவும் ராவ்பகதூர் சிங்காரமும் பிடிக்கும். ராவ்பகதூர் சிங்காரம் எங்க ஊரான மேல்மங்கலம், கீழ்மங்கலம் காரங்களைப் பத்தின கதை! அதிலேயும் கதாநாயகியும், கதாநாயகனும் பந்தயம் போடுவாங்க. கதாநாயகி வளர்க்கும் காளைக்கன்றை ஜல்லிக்கட்டில் கதாநாயகன் சிங்காரம் பிடிக்க வேண்டும் என்பது தான் பந்தயம்.:)))))

  ReplyDelete
 15. ஜிஎம்பி சார், எல்லாம் ஒரு அன்பிலே தான் ஜிவாஜினு சொல்றது! :)))) பொதுவா ஜிவாஜி நடிச்ச படங்களிலே மிகையான நடிப்பே இருக்குனு என்னோட கருத்து. :))))

  ReplyDelete
 16. ராவ்பகதூர் சிங்காரம் கூட ஜிவாஜி நடிச்சே படமா வந்திருக்குனு நினைக்கிறேன். ஜெமினி பிக்சர்ஸே எடுத்தாங்களோ? படம் பெயர் விளையாட்டுப் பிள்ளையோ என்னமோ வரும். ஆனால் படம் ஓடினதாத் தெரியலை. திரைக்கதை சொதப்பல்னு சொன்னாங்க. :))))

  ReplyDelete
 17. அப்பாதுரை, கதை அந்தக்காலத்தமிழ்நடை. வர்ணனைகள் அதிகம். இரண்டு பாகமோ என்னமோ வந்ததுனு நினைக்கிறேன். பழநியப்பா ப்ரதர்ஸ் வெகு காலம் கழிச்சு இதோட காப்புரிமையை விகடனில் இருந்து வாங்கிப் புத்தகமா வெளியிட்ட நினைவு இருக்கு. அட்டைப்படம் சித்திரம் கோபுலு இல்லை. அவர் கதை வந்த காலத்தில் வரைந்தார். புத்தகத்தில் அட்டைப்படம் மணியம் செல்வன்னு நினைக்கிறேன். :)

  ReplyDelete
 18. வாங்க தமிழ் இளங்கோ சார், பந்தநல்லூர் பாமா எனக்கு அவ்வளவாப் பிடிக்கலை. மிஸ் ராதானு கூட ஒண்ணு எழுதினார். அதுவும் சோபிக்கவில்லை. இவை எல்லாம் கொத்தமங்கலம் சுப்புவின் கடைசி காலங்களில் எழுதப்பட்டவைனு நினைக்கிறேன்.

  பொதுவாவே நம் மக்கள் சினிமா விஷயங்களுக்கும் மொக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறாங்கனு தெரிஞ்சது தான். ஆரம்பத்திலே மொக்கை போட்டே ரசிகர்களை இழுக்கும்படி இருந்தது. முக்கியமான விஷயத்துக்கு வரவே ஒரு வருஷம் ஆச்சு! இனிமேலும் மொக்கைகளே எழுதினால் நல்லா இருக்காதே! :)))))

  ReplyDelete
 19. முள்ளும் மலரும் படத்தில் கூட சிவாஜியை ஹீரோவாகப் போடவில்லை என்பது முதலில் தயாரிப்பாளருக்குப் பெரும் குறையாக இருந்ததாம். மகேந்திரன் சொல்லியிருக்கிறார்.

  ReplyDelete
 20. மகரிஷியின் கதைகளில் நான் படித்த ஒரு கதையின் தலைப்பு நினைவுக்கு வராமல் இருந்தது. திடீரென இப்போது நினைவுக்கு வந்ததாலேயே இந்தப் பின்னூட்டம். மற்றபடி இந்தப் பதிவுக்கும் அந்தக் கதைக்கும் ஒரு தொடர்புமில்லை! :)))

  ReplyDelete
 21. நல்லவேளையா ஜிவாஜியை முள்ளும், மலரும் படத்தில் போடலையோ, பிழைச்சது படம்! :)) தங்கைக்காக ஜிவாஜி ஓவராவே உருகி இருப்பார். ஃபில்மே நனைஞ்சு போயிருக்கும். :)

  ReplyDelete
 22. என்ன கதை அது? மஹரிஷியோடது அநேகமா எல்லாம் படிச்சிருப்பேன்.

  இப்போக் கூடத் தொலைக்காட்சியின் ஏதோ ஒரு சானலில் சேவற்கொடியோனின் என் கண்ணில் பாவையன்றோ கதையைத் தழுவி எடுக்கப்பட்ட படம் ஓடிட்டு இருக்கு! :)))) கதையைக் கொலை தான் செய்திருப்பார்கள். ஆனால் என் கண்ணில் பாவையன்றோ கதையும் சுமார் ரகம் தான்.

  ReplyDelete
 23. ஹிஹிஹி... அதுதான் இந்தக் கதைக்கு சம்பந்தமில்லைன்னு சொன்னேனே... அது எதுக்கு இங்கே?

  ReplyDelete
 24. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  ReplyDelete
 25. ஒரு க்ளூ தரட்டுமா... மூளையை மாற்றி ஆபரேஷன் செய்த கதை. (இதய மாற்று சிகிச்சையோ!)

  ReplyDelete
 26. அது ராணி பத்திரிகையில் குரும்பூர் குப்புசாமியோ வேறே யாரோ எழுதி வந்ததுனு நினைக்கிறேன்.

  ReplyDelete
 27. இல்லை... தலைப்பைச் சொன்னால் ஒத்துக் கொள்வீர்கள்!

  ReplyDelete
 28. சொல்லுங்க! :)

  ReplyDelete
 29. ஆனால் அதற்கும் இந்தப் பதிவுக்கும்தான் சம்பந்தம் இல்லையே... அதுதான் அதைப் போய் இங்கே சொல்ல வேண்டுமா என்று பார்க்கிறேன். வேறொன்றுமில்லை.

  ReplyDelete
 30. உங்க ரகசியத்தை நீங்களே வைச்சுக்குங்க! :)))))

  ReplyDelete
 31. "அது வரையில் காஞ்சனா"

  ReplyDelete
 32. ராணி முத்து வெளியீடு?? லேசா நினைவில் இருக்கு. ஆனால் மொத்தக்கதையும் நினைவில் வரலை. :)) கல்யாணம் ஆகிட்டுக் கதாநாயகி தடுமாறுவாள் இல்லையா?

  ReplyDelete
 33. பெரிய சிதம்பர ரகசியம்... நான் முதல்ல கவனிச்சிருந்தா அப்பவே சொல்லியிருப்பேன் கீதாம்மா... ஸ்ரீராம் குறிப்பிடற மகரிஷியின் நாவல் பேர் - அதுவரையில் காஞ்சனா.

  அவரோட ‘நதியைத் தேடி வந்த கடல்’ படம் ஆச்சு. பாத்திருக்கீங்களோ... நாவலைப் பிடிச்ச எனக்கு அது படமாவும் பிடிச்சிருந்தது.

  ReplyDelete
 34. ஆமாம். ஒரிஜினல் அங்கத்தின் உறவுக் குழப்பங்கள் புதிய உடம்புக்கு வந்து கதை செல்லும்.

  ReplyDelete
 35. ராணிமுத்து இல்லை... மாலைமதி. கல்யாணமான பெண்ணுக்குள் கன்னிப் பெண் உணர்வகள். அவள் பழிவாங்க வேண்டியதை முடிச்சுட்டு... தான் மெல்ல மெல்ல அவன் மனைவியாக மாறுவதாகவும், அதுவரையில் தான் காஞ்சனா தான் என்றும் சொல்லுவாள். ரசனையான நாவல்.

  ReplyDelete
 36. ராணி முத்து இல்லையா? பால கணேஷ், சிதம்பர ரகசியத்தை விட ஶ்ரீராமின் ரகசியம் பெரிசா இருக்கு இல்ல? :))))

  ReplyDelete
 37. கொஞ்சம் கொஞ்சம் நினைவு வருது! :)

  ReplyDelete
 38. மகரிஷி கதைகள் ஒரே தொகுப்பாக வெளி வந்திருக்கிறதா கணேஷ்?

  ReplyDelete
 39. தில்லானா மோகனாம்பாள் கதையில் சண்முகசுந்தரம் மோகனாம்பாள் இருவருமே சின்னஞ்சிறுசுகள். படத்தில் பாதிக் கிழங்கள் சிவாஜியும் பத்மினியும். கொடுமையோ கொடுமை!கோபுலுவின் படத்தில் பார்த்த சண்முகசுந்தரமும், மோகனாம்பாளும் இன்னும் மனதில் இருக்கிறார்களே!

  அதிலும் பத்மினி ஆடுவது நாட்டியமா?

  ReplyDelete