எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 17, 2015

தோசையம்மா தோசை! மங்களூரூ நீர் தோசை!

தோசையம்மா தோசை,
அம்மா சுட்ட தோசை
அரிசிமாவும் உளுந்து மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு ஐந்து
அம்மாவுக்கு நாலு
அண்ணனுக்கு மூணு
அக்காவுக்கு ரெண்டு
பாப்பாவுக்கு ஒண்ணு
திங்கத் திங்க ஆசை
திருப்பிக்கேட்டால் பூசை!

அது ஏன் பாப்பாவுக்கு மட்டும் ஒண்ணு! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரணும் போல இருக்கும் குழந்தையா இருக்கையிலே. (இப்போவும் மீ த குழந்தை ஒன்லி)

ஹிஹிஹி, தோசை பிடிக்காதவங்களே இருக்கமாட்டாங்க! சாதாரணமாக தோசைகளில் மேலே சொன்ன அரிசிமாவு, உளுந்து மாவு அரைச்சுப் பண்ணும் தோசையைத் தவிர, வெந்தய தோசை. கேழ்வரகு தோசை, கோதுமை தோசை, ரவை தோசை, மைதா தோசை, அவல் போட்ட தோசை, ஓட்ஸ் போட்டு தோசை, கோதுமை ரவையில் தோசை, முழுக்கோதுமையை ஊற வைச்சு அரைச்சுப் பால் எடுத்த தோசைனு விதம் விதமா இருக்கு. இதைத் தவிரவும் தேங்காய்ப் பால் ஊற்றிய ஆப்பமும் ஒரு தோசை வகை தான்.

கொஞ்ச நாட்கள் முன்னர் நம்ம துளசி கர்நாடகா போனதைப் பத்திய பதிவு எழுதினப்போ ஒரு பதிவிலே எல்லோரும் மங்களூரில் நீர் தோசை சாப்பிட்டீங்களானு கேட்டாங்க. அது என்ன நீர் தோசைனு நினைச்சுட்டு இருந்தேன். அப்போப் போன வாரம் சனிக்கிழமை பொழுது போகாமல் தொலைக்காட்சிச் சானல்களை மாற்றிக் கொண்டிருக்கையில் விஜய் தொலைக்காட்சியில் வெங்கடேஷ் பட் என்பவர் நீர் தோசை செய்முறை பத்திச் சொல்லிட்டு இருந்தார். சரினு ரங்க்ஸ் கிட்டே இருந்த ரிமோட்டைப் பிடுங்கிக் கொண்டு என்னதான் இருக்கு அதிலேனு பார்த்தேன். கடைசியிலே பார்த்தால் (முதலில் இருந்தே) நம்ம ஆப்பம் வகை தான் இது! கொஞ்சம் சப்புனு போனாலும் ரங்க்ஸுக்கு மேற்சொன்ன தோசை வகைகள் அலுத்துப் போச்சுனு இதைப் பண்ணுனு சொல்ல ஆரம்பிச்சார். சரினு போன வாரம் ஒருநாள் அவசரம் அவசரமாப் பண்ணினேன்.

காலை ஆகாரத்துக்குப் பண்ணினதாலே அப்போ ராத்திரியே அரிசியை ஊற வைச்சுட்டுக் காலம்பர அரைச்சு தோசை வார்த்தேன். அதுக்குத் தொட்டுக்க அங்கே தக்காளி, வெங்காயச் சட்னி னு அதையும் பண்ணிக் காட்டினார். அதுவும் சட்னினு சொல்ல முடியாது. நாம் தக்காளி சான்ட்விச்சுக்கு வைக்க மாட்டோமா அந்தக் கலவை தான். ஒண்ணும் புதுசா இல்லை. :) இருந்தாலும் அன்னிக்கு அதையே பண்ணினேன். ஆனால் அன்னிக்குப் படம் எல்லாம் எடுக்கற மனோநிலையில் இல்லை. ரங்க்ஸ் கூடக் கேட்டார் பதிவு போட்டாச்சானு! படமே எடுக்கலைனு சொல்லிட்டு விட்டுட்டேன். இன்னிக்குத் திரும்பவும் ராத்திரிக்கு அந்த தோசை தான் வேணும்னு ரங்க்ஸ் அடம் பிடிக்கச் சரினு காலம்பரயே அரிசியை ஊற வைச்சுட்டேன். ஆறரை மணிக்கு மேல் அரைச்சு வைச்சுட்டு ஏழரை மணிக்கு தோசை வார்த்தேன். சாம்பார் போதும்னு ரங்க்ஸ் சொன்னார். ஆனாலும் எனக்கு என்னமோ இந்த தோசைக்கு சாம்பார் சரியாக இருக்காதுனு தோணினதாலே எப்போவும் அரைக்கும் தக்காளிச் சட்னி, கொத்துமல்லித் தழை வைத்து அரைச்சேன். அன்னிக்குப் பண்ணினப்போ தோசை மாவு பத்தலை, எனக்கு வரலை. இன்னிக்கு முன் கூட்டித்திட்டமிட்டுப் பண்ணினதாலே இரண்டு பேருக்கும் சரியாக இருந்தது. இப்போ செய்முறை:

நான் இரண்டு பேருக்கான அளவு மட்டுமே சொல்லி இருக்கேன். ஆகவே நீங்க கூட்டிக் கழிச்சு விடை கண்டு பிடிச்சுக்குங்க! :)

அரிசி ஒரு ஆழாக்கு (பச்சரிசி, இட்லி அரிசியோ, புழுங்கல் அரிசியோ கூடாது.) நன்கு கழுவி எட்டு மணி நேரத்துக்குக் குறையாமல் ஊற வைக்கவும்.

தேங்காய்த் துருவல் சின்னத் தேங்காய் என்றால் ஒரு மூடித் துருவல் சரியாக இருக்கும். பெரிய தேங்காய் எனில் 3 டேபிள் ஸ்பூன் அளவுக்குத்துருவல் இருக்கட்டும். இரண்டையும் போட்டு நன்கு நைசாக பெயின்ட் மாதிரி, கவனிக்கவும், பெயின்ட் மாதிரி வழுவழுப்பாக இருக்கணும். அரைக்கவும். அரைச்ச மாவில் தேவையான உப்புப் போட்டு ஒரு டீஸ்பூன் சர்க்கரையும் சேர்க்கவும். இந்தச் சர்க்கரை சேர்ப்பது தோசையில் பொன் நிறம் வரவும் முறுகலாக வருவதற்காகவும் தான். வேண்டாம் என்பவர்கள் சர்க்கரை சேர்க்க வேண்டாம். மாவை நீர்க்கக் கரைத்துக் கொள்ளவும். நீர்க்க என்றால் நீர்க்க இருக்கணும்.




அரைத்த மாவு

இப்போது தோசைக்கல்லை நன்கு சூடு பண்ணிக்கொள்ளவும். எண்ணெய் தடவிக் கொண்டு ஒரு கரண்டியால் மாவை எடுத்து ரவா தோசைக்கு ஊற்றுவது போல் ஊற்றவும். இடைவெளிகளை மீண்டும் மாவை எடுத்துக் கொண்டு நிரப்பவும்.




தோசைக்கல்லில் மாவை ஊற்றி இருக்கேன். பாதி வெந்து விட்டது.

 எண்ணெயைச் சுற்றிலும் விட்டு விட்டு ஒரு தட்டு அல்லது இட்லிக் கொப்பரை மூடியைப் போட்டு தோசையை மூடவும். தோசை வெந்து விட்டதெனில் வாசனையும் வரும். தட்டின் இடைவெளி வழியாக ஆவியும் வரும்.





மூடி போட்டு மூடி இருக்கேன். 

தட்டை எடுக்கும்போது கவனமாகச் சுட்டுக் கொள்ளவும். சே,சே, சுட்டுக்காமல் இடுக்கியால் எடுக்கவும்.தோசை அப்படியே அலாக்காக எடுக்க வரும் இன்னொரு பக்கம் இந்த தோசையை வேக விட வேண்டாம். அப்படியே மடித்துச் சூடாகப் பரிமாறவும். நான் ஆறித்தான் சாப்பிட்டேன். நல்லாவே இருந்தது. இருந்தாலும் சூடு தனி ருசி தான் இல்லையா?
 


வெந்து எடுத்த தோசை!

இப்போ வெங்கடேஷ் பட் சொன்ன தக்காளி, வெங்காயச் சட்னி செய்முறை:

கால் கிலோ தக்காளி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளிச் சாறோடு இருக்கட்டும்

வெங்காயம் பெரிது இரண்டு பொடிப்பொடியாக நறுக்கவும்

தாளிக்க எண்ணெய்

கடுகு, உ.பருப்பு தலா ஒரு டீஸ்பூன்

பெருங்காயப் பொடி, கருகப்பிலை

பச்சை மிளகாய் 3 பொடியாக நறுக்கவும்

மஞ்சள் பொடி

மிளகாய்ப் பொடி,

உப்பு தேவையான அளவு,

சர்க்கரை ஒரு டீஸ்பூன்

பச்சைக் கொத்துமல்லி அலங்கரிக்கப் பொடியாக நறுக்கியது ஒரு டேபிள் ஸ்பூன்.

(தேவையானால் பூண்டுப் பற்கள் பத்து வெங்காயம் வதக்குகையில் சேர்க்கலாம்)

அடுப்பில் கடாயை ஏற்றி (இரும்புக் கடாய் முக்கியம்) எண்ணெய் ஊற்றிக் கடுகு, உபருப்பு தாளித்துப் பெருங்காயம், கருகப்பிலை, பச்சை மிளகாய் போட்டு வதக்கிக் கொண்டு வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் தக்காளியையும் போட்டு நன்கு வதக்கவும். தக்காளி வதங்கும் சமயம் தேவையான மிளகாய்ப் பொடியைச் சேர்க்கவும். மி.பொடி சேர்ப்பது அவரவர் காரத்துக்கு ஏற்றபடி சேர்க்கவும். உப்புச் சேர்க்கவும். சர்க்கரையையும் சேர்க்கவும். பின்னர் கொஞ்ச நேரம் வதக்கி விட்டு ஒரு கிண்ணம் நீர் ஊற்றிக் கொதிக்க விடவும். சேர்ந்து தக்காளி உருத்தெரியாமல் ஆகும் சமயம் அடுப்பை அணைத்துவிட்டுப் பச்சைக் கொத்துமல்லி சேர்க்கவும். மேற்சொன்ன தோசையோடு பரிமாறவும். இது தான் இதற்கு ஏற்ற துணை என்று வெங்கடேஷ் பட் சொன்னார்  அன்னிக்கு அதைப் பண்ணினேன். ஆனால் இன்று அமாவாசை வெங்காயம் சேர்க்க முடியாது. ஆகையால் இன்று செய்தது:


தக்காளி நிதானமான அளவில் நான்கு

கொத்துமல்லித் தழை இரண்டு டேபிள் ஸ்பூன்

மி, வத்தல் 5 அல்லது 6 காரத்துக்கு ஏற்றபடி

பெருங்காயம், உப்பு

வதக்கத் தேவையான எண்ணெய்

எண்ணெய் ஊற்றிய கடாயில் மிவத்தல் வறுத்துக் கொண்டு பெருங்காயம் பொரித்துக் கொண்டு தக்காளியைப்போட்டு வதக்க வேண்டும். தக்காளி நிறம் மாறிச் சுருண்டு வருகையில் அடுப்பை அணைத்து ஆற விட்டுக் கொத்துமல்லித் தழை, உப்பு சேர்த்து மிக்சி ஜாரில் போட்டு அரைக்கவும். தேவையானால் கடுகு தாளிக்கவும். இதுவும் மேற்சொன்ன தோசைக்கு நல்லாவே இருக்கு.  கிட்டத்தட்ட ஆப்பமும் இப்படித் தான். அது இரும்புச் சட்டியில் ஊற்றிக் கொண்டு சட்டியை எடுத்து ஒரு சுழற்றுச் சுழற்றணும். சட்டியைத் திரும்ப அடுப்பில் வைக்க முடியாமல் காலில் போட்டுக்கொள்ளும் வாய்ப்புப் பிரகாசமாகத் தெரிந்ததால் அதை முயலவில்லை. :)

30 comments:

  1. நீர்த் தோசை சூப்பர்.................. ஆப்பம் போல இருந்தாலும் பார்க்க இன்னும் சுவையாக இருக்கிறது. நல்ல ரெகிபி. பெண்ணிடம் சொல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அரைக்க, வார்க்க ரொம்ப எளிதாக இருக்கு ரேவதி. சுவையும் பரவாயில்லை. ஆறினாலும் மெத்தென்றே இருக்கிறது. :)

      Delete
  2. //(தேவையானால் பூண்டுப் பற்கள் பத்து வெங்காயம் வதக்குகையில் சேர்க்கலாம்)//

    இன்று அமாவாசை தர்ப்பண தினத்திற்கு ஏற்ற மிக நல்ல பொருத்தமான பதிவு. :)

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies

    1. //இன்று அமாவாசை தர்ப்பண தினத்திற்கு ஏற்ற மிக நல்ல பொருத்தமான பதிவு. :)//

      கீழே பார்க்கவும். :)

      //இது தான் இதற்கு ஏற்ற துணை என்று வெங்கடேஷ் பட் சொன்னார் அன்னிக்கு அதைப் பண்ணினேன். ஆனால் இன்று அமாவாசை வெங்காயம் சேர்க்க முடியாது. ஆகையால் இன்று செய்தது://

      என்று சொல்லித் தக்காளிச் சட்னி செய்முறையைக் கீழே எழுதியுள்ளேன். நீங்க முழுசும் படிக்கலை போல. மேலே மட்டும் பார்த்துட்டு விட்டிருக்கீங்க! :)))))

      Delete
    2. //நீங்க முழுசும் படிக்கலை போல. மேலே மட்டும் பார்த்துட்டு விட்டிருக்கீங்க! :)))))//

      ஆமாம். கரெக்ட். பூண்டு வெங்காயம் என்று படித்ததோடு நான் ஓடிவிட்டேன் .... அதுவும் என் மேலிடத்திடமிருந்து அமாவாசைப் பலகாரம் செய்ய அழைப்பு வந்துவிட்டதால் .... இப்போதான் முழுவதுமாகப் படித்தேன். தங்கள் அன்பான பொறுப்பான பதிலுக்கும் தக்காளி சட்னிக்கும் மிக்க நன்றி.

      Delete
    3. அமாவாசைக்கு பொருத்தமான பதிவு என்றால் என்ன...விளக்கவும்...அமாவாசைக்கு இரவில் இட்லி, தோசை, உசிலி, அரிசி நொய்யில் செய்த உப்புமா என்று rice made டிபனை தவிர்ப்பதுதான் சரி...அரிசி உணவு ஒரு பொழுதுதான் allowed....இரவு ஆகாரத்திற்கு கோதுமை, ரவை, கேழ்வரகு என்று இந்தப் பக்கம் போகலாம்...

      Delete
    4. வாங்க முன்பின் தெரியாதவரே, அமாவாசை அன்னிக்கு வெங்காயம், பூண்டு சேர்த்துச் சட்னி அரைச்சிருக்கேனு நினைச்சுட்டுக் கொஞ்சம் கிண்டலாகச் சொல்லி இருக்கார் வைகோ. அன்னிக்கு அந்தச் சட்னி பண்ணலைனு நானும் சொல்லிட்டேன். நீங்க அந்த ஒரு வரியை மட்டும் படிச்சுட்டு எழுதி இருக்கீங்க! அமாவாசை அன்று அநேக வீடுகளில் இட்லிதான் இருக்கும். கேழ்வரகெல்லாம் விரத தினங்களில் சேர்த்துப் பார்த்ததில்லை. கோதுமை சிராத்த தினத்தில் சேர்ப்பதால் கோதுமை, கோதுமை ரவை ஆகியன சேர்க்கலாம். ரவை கூட இரண்டாம் பட்சம் தான். அரிசி உணவு ஒரு போது தான் எப்போவுமே சாப்பிடறோம். :)

      Delete
  3. தோசை நன்னா இருக்கு. நானும் இந்த செய்முறை டீவீல பார்த்தேன். இனிமேல்தான் பண்ணிப் பார்க்கணும். வெங்கடேஷ் பட்டோட எல்லா சமையலுமே நன்னா இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், நல்லாவே சொல்றார். நல்லாச் செய்தும் காட்டுகிறார். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராதா பாலு! உங்க பதிவுக்கு வருவேன். ஆனால் அதிகம் கருத்துச் சொல்ல முடியறதில்லை. :)

      Delete
  4. நீர் தோசை பற்றி முன்பு ஒருமுறை அல்லது எங்கள் தோசை புராணம் பகுதியில் ஜி எம் பி ஸார் குறிப்பிட்டிருந்தார்.

    தோசைக் குறிப்பை விட சட்னி குறிப்பு சுவாரஸ்யம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? அவரும் கீழே கருத்திலே சொல்லி இருக்கார். எனக்கு நினைவில் இல்லை மறந்திருக்கேன். :)

      Delete
  5. சரி தண்ணி கிடைக்காத காலத்துல தோசை வேறே செய்றீங்களேனு பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. தண்ணி கிடைக்காத காலமா? எங்கே? இங்கேயா? சரியாப் போச்சு போங்க! நல்ல கோடையிலேயே இங்கே தண்ணீர்ப் பிரச்னை இல்லை. இந்த வருஷம் மழை வேறே வெளுத்து வாங்கி இருக்கு! :)

      Delete
    2. தண்ணிப் பிரச்சினை இல்லையா? பரவாயில்லையே?!

      Delete
  6. செய்து பார்க்கிறோம்...!

    என்று எதை சேர்க்கக் கூடாது என்பதையும் அறிந்தேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க டிடி, கட்டாயம் செய்து பாருங்க!

      Delete
  7. அப்பப்பா... எவ்வளவு பில்ட் அப் கொடுத்து நீர்த் தோசை செய்வது பற்றி எழுதி இருக்கிறீர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன் பே நான் எனது பூவையின் எண்ணங்கள் தளத்தில் எனது இரண்டாவது இடுகையாக அடிப்படைச் சமையல் என்னும் தலைப்பில் நீர்த் தோசை செய்வ்து பற்றி போகிற போக்கில் எழுதி இருந்தேன். நீங்களும் படித்திருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. நீங்க எழுதினதெல்லாம் நினைவில் இல்லை ஜிஎம்பி ஐயா. நான் முதலில் துளசியை அவரோட பதிவின் பின்னூட்டங்களில் எல்லோரும் கேட்டதைத் தான் நினைவில் வைச்சிருந்தேன். தொலைக்காட்சியில் வேறே வரவும் சரினு செய்து பார்த்தேன்.

      முருங்கைக்கீரை அடைக்கு இந்தமாதிரி வெறும் அரிசி+ தேங்காய் சேர்த்து அரைத்து உப்புப் போட்டு முருங்கைக்கீரை போட்டுப் பண்ணுவோம். ஆனால் இவ்வளவு நைசாக அரைக்க மாட்டோம். இது கிட்டத்தட்ட அதே கலவை தான் என்றாலும் நல்ல நைசாக அரைக்க வேண்டி இருக்கு. தோசையும் மெல்லிசாக வருகிறது.

      Delete
  8. சிறப்பான செய்முறை விளக்கம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ், தோசை செய்து பார்த்தாச்சா?

      Delete
  9. அடிக்கடி செய்து சாப்பிடும் டிபன்!.. இங்கே ஹோட்டல்களிலும் நீர் தோசை ரொம்ப ஃபேமஸ்.. நீஈஈஈஈள தோசைக்கல்லுல போட்டுத் தருவாங்க.. நாலஞ்சு மடிப்பு மடிச்சு!.. தொட்டுக்க, உ.கி போட்டு, 'ஸாஹூ'ன்னு ஒண்ணு தருவாங்க.. நல்ல ருசியா இருக்கும்.. கடைகள்ல 'ஸாஹூ' மசாலான்னே தனியா கிடைக்கும்..

    நீங்க உங்க வழக்கமான பெர்ஃபெக்ஷனோட சூப்பரா செய்திருக்கீங்க..பார்த்தாலே ருசி தெரியுது! :))!..

    ஆனால், நம்மூருல, 'கூழ் தோசை' அப்படின்னும் 'கஞ்சி தோசை' அப்படின்னும் செய்வோமே, அதத் தான் கொஞ்சம் மாத்தி இந்தூருல‌ இப்படி செய்றாங்களோன்னு தோணும் எனக்கு..

    ReplyDelete
    Replies
    1. பெரிய கல்லாக இருந்தால் நீளமாப் போட்டு மடிச்சுத் தரலாம். இங்கே சாதாரணமா வீடுகளில் இருக்கிறதை விடப் பெரியது தான். நீங்க சொல்றாப்போல் தோசை மதுரை கோபு ஐயங்கார் கடையிலே கொடுக்கிறாங்க! நாலைந்து மடிப்பு என்ன? ஐந்தாறு இருக்கும் போல. ஒரு தோசை சாப்பிட முடியலை! :)

      கூழ் தோசைக்குக் கொஞ்சம் மாவை எடுத்துக் கொண்டு கூழாகக் காய்ச்சி விட்டுப் பின்னர் மிச்சம் மாவில் கொஞ்சம் கொஞ்சமாய்க் கலந்து வார்க்கணும். இது அப்படி இல்லை. கிட்டத்தட்ட ஆப்பம் தான்! :)

      Delete
    2. நீங்க பெண்களூரிலேயே இருக்கிறதாலே கர்நாடக சமையல் முறைகளையும் பகிர்ந்துக்குங்க பார்வதி. தெரிஞ்சுக்கலாம்.:)

      Delete
  10. என் மருமகளும் ஒருமுறை இதை செய்தாள். பிள்ளை கேரளா போயிருந்தபோது அங்கு இந்த தோசைக்கு கடலைக்கறி (கொத்துக்கடலை+வழக்கமான மசாலா) கொடுத்தார்களாம். அதனால் எங்க வீட்டில் நீர் தோசை, கடலைக்கறி.
    இங்கு ஹோட்டல்களில் இதற்கு சாகு, மற்றும் தேங்காய் வெல்லம் பிசிறியது கொடுக்கிறார்கள். நன்றாகவே இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரஞ்சனி, தோசைக்குக் கொண்டைக்கடலைக்கறி, சாகு எல்லாம் இங்கே பிடிக்காது. :) என்றாலும் அந்தப் பக்கம் வர நேர்ந்தால் சாப்பிட்டுப் பார்க்கணும். பார்ப்போம். :)

      Delete
    2. சென்னை தி.நகர் பாண்டி பஜார் கீதா கஃபேயில் அடைக்கு வெல்லம், வெண்ணெய் கொடுப்பாங்க. அடையும் அருமையாக இருக்கும். :)

      Delete
  11. ஆஹா ஆஹா...

    என்னை விட்டுவிட்டுச் செய்து சாப்பிட்ட எல்லாருக்கும் வயிறு வலி வரக்கடவது :)

    எங்க வீட்டில மாவு தோசை கோதுமை தோசையோடு சரி....!

    உங்கள் பதிவை சேமித்துக் கொண்டேன்.

    வீட்டில் இப்போதே கேட்க ஆரம்பித்துவிட்டேன்.

    மிக்க நன்றி.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஊமைக்கனவுகள், தோசை பத்தியும் கனவுகள் நிறைய இருக்கும் போல! :)

      Delete
  12. கேரளாவில் இது எப்பவும் செய்வதுதான். நம்ம மீனாட்சியம்மா புத்தகத்தில்கூட தேங்காய் தோசைன்னு எழுதி இருக்காங்களே! என் சமையல் குரு அவுங்கதான்:-)

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி, இப்போத் தான் பார்க்கிறேன், இந்தக் கருத்தை. மீனாட்சியம்மாவோட முதல் இரண்டு புத்தகத்தில் இந்தச் செய்முறை இருக்கிறாப்போல் தெரியலை. மூன்றாம் புத்தகம் என்னிடம் இல்லை. ஆகையால் சொல்ல முடியலை. ஆனாலும் மதுரைப் பக்கம் இதையே ஆப்பம்னு செய்வாங்க தான்! ஆகவே எனக்கும் ஒண்ணும் புதுசு இல்லை! இந்த மாவையே அரைத்துவிட்டுக் கொஞ்சம் போல் எடுத்துக் கொண்டு நிறைய நீர் விட்டுக் கரைத்துக் கூழ் போல் காய்ச்சிக் கொண்டு அந்தக் கூழில் மிச்ச மாவைத் தேவையான அளவு சேர்த்துக் கொண்டு கரைத்து தோசை வார்ப்பார்கள். கூழ் தோசை என்பார்கள் அதை!

      Delete