எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, February 16, 2016

அங்குலில் நாங்கள்!

ஊருக்குப் போயிட்டு வந்து சொன்னபடி எழுத முடியவில்லை. இப்போதெல்லாம் நிகழ்வுகளின் போக்கில் தான் நான் போய்க் கொண்டு இருக்கிறேன். சொன்னால் சொன்னபடி பதிவுகளைப் போட முடிவதில்லை. :( 

புவனேஸ்வரில் தங்கி இருந்த முதல்நாள் அனுபவத்தால் அன்றிரவு படுக்கச் செல்லும் முன்னர் இரண்டு வாளி நிறைய நீர் பிடித்து வைத்து விட்டேன். மறுநாள் காலை பயன்படுத்திக்கலாமே! மறுநாள் காலை எழுந்ததும் விடுதிக்காப்பாளரிடம் சொல்லித் தேநீர் போட்டுத் தரச் சொன்னோம். தேநீரும் வந்தது. நாங்கள் அங்குல் செல்ல வண்டியை எட்டு மணியிலிருந்து எட்டரைக்குள் வரச் சொல்லி இருந்தோம்.  தயாரானதும் கீழே போய்விடலாம் என்று நான் சொல்ல விடுதிக்காப்பாளரும், நம்ம ரங்க்ஸும் வண்டி ஓட்டுநர் தொலைபேசியதும் போய்க்கலாம் என்று விட்டார்கள்.  நாங்கள் சொன்னபடிக்கு அவரும் அதே போல் வந்திருக்கிறார். கீழே காத்திருந்திருக்கிறார். அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றால் அந்த நேரம் அவர் எங்களைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார் போல! தொடர்பே கிடைக்கவில்லை. விடுதியில் இருந்த பிஎஸ் என் எல் இணைப்பிலிருந்து காப்பாளரும் தொலைபேசியில் அழைப்புக் கொடுக்க அந்த அழைப்பும் போகவில்லை. 

பின்னர் காப்பாளர் தாம் கீழே போய்ப் பார்த்துவிட்டு வருவதாகச் சொல்லிக் கீழே இறங்க, நாமும் போகலாம் என நான் பிடிவாதம் பிடிக்க ரங்க்ஸ் மறுக்க என் அலைபேசியில் புதியதொரு எண்ணில் இருந்து அழைப்பு வர நான் எடுத்துப் பேசினேன். அதிலே வண்டி ஓட்டுநர் தான் கிட்டத்தட்ட 20 நிமிஷத்துக்கு மேலாகக் காத்திருப்பதாய்ச் சொல்ல, அவர் எங்கே இருக்கார், நாங்களும் தொலைபேசியில் அழைத்தோம்; அழைப்பே போகலை என நான் சொல்ல என்னிடமிருந்து அலைபேசியை வாங்கிப் பேசிய ரங்க்ஸ் கீழே அவர் வந்து விட்டார் என்பதைப் புரிந்து கொண்டு உடனே கிளம்பலாம் வா என்று கிளம்பினார். லிஃப்ட் என்ன செய்யுமோ என்று பயந்து கொண்டே சென்றோம். நல்ல வேளையாக லிஃப்ட் வேலை செய்தது. கீழே போனால் எங்கள் காப்பாளரைக் காணோம். எங்கே போனாரோ! பின்னர் அங்கிருந்த பாதுகாவலரிடம் தகவல் கொடுத்துவிட்டு நாங்கள் அங்குல் செல்லக் கிளம்பினோம். அதற்குள்ளாக எங்களைப் பார்த்த ஓட்டுநர் தான் எட்டு மணியிலிருந்து இங்கே இருப்பதாய்ச் சொல்ல மாடிக்கு வந்திருக்கலாம், அல்லது மாடியில் விடுதியில் தொலைபேசிக்கு அழைப்புக் கொடுத்திருக்கலாம் என நாங்கள் சொல்ல அவர் திரு திரு!

பின்னர் நாங்கள் காலை ஆகாரம் சாப்பிடவில்லை என்பதால் முதல்நாள் சென்ற ஹோட்டல் வீனஸின் அடையாளங்களை ஒரு மாதிரியாக இந்த ஓட்டுநரிடம் சொல்லி அங்கே அழைத்துச் செல்லச் சொன்னோம். அதற்கு வழி தெரியவில்லை எனில் வேறு எதேனும் மதராஸி ஓட்டல் இருந்தால் அழைத்துப்போகும்படி கூறினோம். ஆனால் என்ன ஆச்சரியம், நாங்க சொன்ன அடையாளங்களை வைத்துச் சரியாக அதே ஓட்டலுக்கு அழைத்துச் சென்று விட்டார் ஓட்டுநர். அவரையும் சாப்பிட அழைத்தால் அவர் வரலை என்று சொல்லிவிட்டார். பின்னர் நாங்கள் போய்ச் சாப்பிட்டு வந்து வண்டியில் ஏறிக் கொண்டோம். வண்டியும் கிளம்பியது. புவனேஸ்வர் தாண்டியதும் முழுக்க முழுக்க காட்டுப் பாதை! இரு பக்கமும் அடர்ந்த காடுகள். காடுகள் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றன. ஆங்காங்கே நம்ம யானையார் வரவு இருக்கும் என்பதற்கான எச்சரிக்கைப் பலகை. யானையார் கண்ணில் பட்டால் வண்டியை அப்படியே நிறுத்திட்டு அசையாமல் உட்காரச் சொல்லி அறிவிப்புகள். நானும் ஒரு யானையாவது வருமா என்று ஆவலுடன் காத்திருந்தேன். ஏமாற்றம் தான் மிஞ்சியது. 

மகாநதி உண்மையிலேயே மகாநதி தான். சுத்தமாகவும் காணப்படுகிறது. அதிகம் பேசப்படாத நதி!  செல்லும் வழியில் காணப்பட்ட ஒரு காடு!

கிராமங்களில் பசுமாடுகள் மேய்ச்சலுக்குச் செல்கின்றன. 


எருமை மாடுகளைப் பார்க்க முடியலை. எல்லாம் நாட்டுப் பசுக்கள். ஒழுங்காகப் பராமரிக்கின்றனர். என்றாலும் இப்போதெல்லாம் இந்த ஜெர்சி பசுக்களோடு சேர்த்துக் கலப்பினம் உருவாகின்றபடியால் கொஞ்சம் கவலையாகவே உள்ளது. ஏனெனில் நம்ம நாட்டு நாட்டுப் பசுக்களின் பாலில் மருத்துவ குணம் நிறைய உண்டு. கலப்பினங்கள் அதிகரித்தால் அந்த மருத்துவ குணங்கள் இல்லாமல் போய்விடும். பிடி கத்திரிக்காயைப் போல்! அதே போல் இப்போதெல்லாம் பசுமாட்டுக்கு ஊசி மூலம் கருத்தரிக்க வைப்பதிலும் ஆபத்து இருக்கிறது.  காளைகளே இல்லாமல் போகலாம். அல்லது பிறக்கும் காளைகள் ஆண்மையின்றிப் போய்விடலாம். செயற்கை முறை கருத்தரித்தலை ஆதரிக்காமல் இருத்தலே நல்லது. ஆனாலும் இதை எல்லாம் யார் கேட்கிறார்கள்?

இந்தப் பசுக்களைப் பார்க்கையில் மனதில் மகிழ்ச்சி பொங்கியது. அதோடு இல்லாமல் எல்லாக் கிராமங்களும் மகாநதிக்கரையோரம் என்பதால் செழிப்பாகவும் காணப்பட்டது. சீதோஷ்ணம் வேறு மிதமான குளிர். சூரியனார் முழு விடுமுறை எடுத்துக் கொண்டு விட்டார். நாங்க ஒரிசாவில் இருந்த நான்கைந்து நாட்களும் சூரியனாரைப் பார்க்கவே முடியலை! பயணம் முழுவதும் வழியெங்கும் கிராமங்களில் புத்தம்புதிய காய்கறிகள், பழங்கள்! நாங்க அப்போது மறுநாளே திருச்சி திரும்புவதாக இருந்திருந்தால் நம்ம ரங்க்ஸ் ஒரு காய்கறிப் பழக்கடையையே வாங்கி இருப்பார். ஆனால் எங்கள் பயணம் இன்னும் நாலைந்து நாட்களுக்கு இருந்தது.  ஆகவே அதைப் பார்த்து வாங்க முடியலையே என வருந்திக் கொண்டிருந்தார்.புவனேஸ்வரில் இருந்து கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பயணம் செய்து என் நாத்தனார் இருக்கும் ஜின்டால் டவுன்ஷிப்பை அடைந்தோம். அங்கே நுழைவாயிலில் பாதுகாப்புச் சோதனைகள் முடிந்து வீட்டுக்குத் தொலைபேசி விருந்தினர் உங்களுக்குத் தானா எனக் கேட்டு உறுதி செய்து கொண்டு மேலே செல்ல அனுமதித்தனர்.  கிட்டத்தட்ட மதியம் ஒருமணிக்கு நாத்தனார் வீடு போய்ச் சேர்ந்தோம். 


வீடுகள் எல்லாம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் தாம் என்றாலும் மிகப் பெரிதாகவே இருந்தன. எல்லா வசதிகளுடனும் இருந்தது. டவுன்ஷிப்புக்குள்ளேயே மருத்துவமனை,  தபால் அலுவலகம், பள்ளி போன்ற முக்கியமானவை இருந்தன. என்னதான் தபால் அலுவலகம் இருந்தாலும் தபால்கள் வருவது கொஞ்சம் பிரச்னையாகத் தான் இருக்கிறது. வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுக்க தபால்காரர் இல்லை. வரும் தபால்களை எல்லாம் அங்கே மொத்தமாக ஓர் இடத்தில் செக்டார் வாரியாகப்  போட்டு வைத்துவிடுவார்கள். அதிலிருந்து நாம் நம்முடையதைத் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் கேள்விப்பட்டதும் நாம் எப்படிப் பட்ட சொர்க்கத்தில் இருக்கோம்னு புரிஞ்சது! பின்னர்  சொந்தக்கதைகள் எல்லாம் பேசிவிட்டுச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு அன்று முழுதும் ஓய்வு எடுத்துக் கொண்டோம். நாத்தனாரின் பேத்தி இருந்ததால் அவளுடன் விளையாடிக் கொண்டு  நல்ல பொழுதுபோக்காக இருந்தது.


18 comments:

 1. அங்குல் நாத்தனார் இருக்கும் ஜிண்டால் டௌன்ஷிப் இருக்கும் இடமா

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பிசார், அங்குல் என்பது ஓர் ஊர்! அங்கிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் ஜின்டால் டவுன்ஷிப் இருக்கிறது. நாத்தனார் பிள்ளை அங்கே வேலையாக இருக்கிறார். நாத்தனார் பிள்ளை, மருமகளுடன் இருந்து வருகிறார்.

   Delete
 2. சிறு சிறு தடங்கல்கள் வந்தாலும் பயணம் வெற்றிகரமாக நடந்தது போலும்!

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்ம், அப்படினும் சொல்ல முடியாது! வெற்றிகரமாய் நடந்தது, நடக்கலை! :)

   Delete
 3. //அங்கேயே அங்குல் என்னும் ஊருக்கு அருகே இருக்கும் என் நாத்தனாரையும் அவர் மகள்...//
  அவ்வளவு தானா அங்குலுக்கும் இந்தப் பதிவிற்கும் இருக்கும் தொடர்பு?.. இது தெரியாமல் நான் அங்குல் பற்றிச் சொல்லக் காணோமே என்று தேடிக்கொண்டிருந்தேன். சென்ற பதிவுக்கும் தொடர்பு விட்டுப் போய்விட்டதோ என்று பார்த்தேன். அங்கு போனதும் தான் தெரிந்தது, உங்கள் நாத்தனாரே வண்டியும் அனுப்பி வைத்து உங்களை அழைத்துப் போக ஏற்பாடு செய்திருந்தது.

  ReplyDelete
  Replies
  1. தொடர்பெல்லாம் விடலை! அங்குல் போனது பயணத்தின் ஒரு பகுதி என்பதால் குறிப்பிட்டிருக்கிறேன். அவ்வளவே!

   Delete
 4. பசுமாடுகளுடன் கூடிய பசுமையான பயணக்கட்டுரை அருமை. படங்களும் அழகு.

  //நாம் எப்படிப் பட்ட சொர்க்கத்தில் இருக்கோம்னு புரிஞ்சது! //

  கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

  அங்குல் + ஜிண்டால் பற்றிய பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பல சமயங்களில் தமிழ்நாட்டைக் குறித்த அலுப்புத் தோன்றும். அப்போது தான் வெளி மாநிலங்களில் சில ஊர்களில் பெற்ற அனுபவங்கள் தமிழ்நாட்டு வாசம் பரவாயில்லை என்று சொல்ல வைக்கும். இதுவும் அப்படிப்பட்ட ஒரு தருணம்.

   Delete
 5. மகாநதியைப் பற்றிப் படித்தது நினைவு எங்கோ போய்விட்டது. மீட்டுக் கொண்டு வந்தால்--

  'இந்தப் பசுக்களைப் பார்க்கையில் மனதில் மகிழ்ச்சி பொங்கியது. அதோடு இல்லாமல் எல்லாக் கிராமங்களும் மகாநதிக்கரையோரம் என்பதால் செழிப்பாகவும் காணப்பட்டது'--.என்றெல்லாம் சொல்லி விட்டு--

  'இவற்றை எல்லாம் கேள்விப்பட்டதும் நாம் எப்படிப் பட்ட சொர்க்கத்தில் இருக்கோம்னு புரிஞ்சது!' என்று ஒன்றுமில்லாத விஷயத்திற்கு சொர்க்கத்தை இழுத்து விட்டீர்களே! அபார்ட்மெண்ட் தபால் பெட்டிகள் பெரும் பாலும் காலியாகத் தான் இருக்கின்றன.. மிஞ்சி மிஞ்சிப் போனால், எல்.ஐ.ஸி. ப்ரீமியம் ரிமைண்டர்கள், டெலிபோன் பில், ஏதாவது கல்யாண--சஷ்டியப்த பூர்த்தி அழைப்புகள் என்பதைத் தவிர இப்பொழுதுதெல்லாம் வேறென்ன தபாலில் கடிதங்கள் வருகின்றன? இதற்கா சொர்க்கத்தை இழுத்தீர்கள்?..உங்கள் பார்வையில் சொர்க்கம் என்பதே அவ்வளவு தானா? இல்லை, ஸ்ரீரங்க சொர்க்கம் நினைப்பில் சொல்லியிருக்கிறீர்கள்,போலிருக்கு..

  அந்தந்த நேரத்திற்கு ஏற்ப என்னன்ன நினைப்பு ஓடுகிறது என்பதை மட்டும் தெரிந்து கொள்ள முடிந்தது.


  ReplyDelete
  Replies
  1. நாட்டுப்பசுக்களே அரிதாகிக் கொண்டிருக்கும் இந்தக்கால கட்டத்தில் மந்தை மந்தையாக நாட்டுப்பசுக்களைப் பார்த்ததும் சந்தோஷமாக இருந்தது. கிராமங்களின் செழிப்பும் இப்போது மழை பெய்ததாலும், பெய்து வருவதாலும் என்று சொன்னார்கள். கோடைக்காலத்தில் வறண்டே காணப்படுமாம். சூடும் அதிகம்! வெயிலின் தாக்கம் மிக அதிகம் என்கிறார்கள். ஆகவே இதை எல்லாம் கேள்விப் பட்டுவிட்டு இருக்கும் இடமே சொர்க்கம் என நினைத்ததில் தப்பு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.

   Delete
  2. அதோடு எங்கள் நாத்தனாருக்குக் கல்யாணப்பத்திரிகை, சஷ்டிஅப்தபூர்த்திப் பத்திரிகை போன்றவை அனுப்பி வைக்கவே முடியாது. போய்ச் சேராது. மனிஆர்டரும் அனுப்ப முடியாது. பிஎஸ் என் எல் தொலைபேசி இணைப்பும் இல்லை. அலைபேசி ஒன்றே தொடர்பு கொள்ளும் சாதனம். அதிலும் எத்தனை நேரம் பேச முடியும்? அங்கே ஏர்டெல் தான் கிடைக்கிறது. தீட்டி விடுவாங்க தீட்டி! ஆகவே தபாலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்க வேண்டும். குறைந்த பட்சமாக மாதம் ஒரு கார்டாவது போட்டுக் கொள்ளலாமே! நினைப்புக்கும் இதுக்கும் ஏதும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. அங்கே தபால் ஆஃபீஸைப் பார்த்ததுமே வெட்டியா இருக்கே என்று தான் பேசிக் கொண்டோம். அதையே இங்கே வெளிப்படுத்தினேன். அதோடு மத்தவங்க என்ன சொல்லுவாங்க என்பது அவங்க போடும் பின்னூட்டத்தின் மூலம் தான் எனக்குத் தெரியவரும். என்ன நினைப்பாங்க என்று யோசித்துக் கொண்டு எல்லாம் எழுத வருவதில்லை! :))))) என் எண்ண ஓட்டத்தைத் தானே சொல்ல முடியும்! :)))))

   Delete
  3. இதை ஒன்றுமில்லாத விஷயம் என்று சொல்ல முடியாது. இப்போப் பழகிவிட்டது என்றாலும் அவங்க அங்கே ஒரிசா போன புதுசிலே யாரையும் தொடர்பு கொள்ள வழியின்றித் தவித்தது எங்களுக்குத் தெரியும். இப்போத் தான் ஆளுக்கு ஒரு அலைபேசி வைத்து இருக்கின்றனர். இதுவே சூரத்தில் எஸ்ஸாரின் டவுன்ஷிப்பில் இருந்தப்போ எல்லா வசதிகளும் இருந்தது. லான்ட்லைன் தொலைபேசியும் வைச்சுக்க முடிஞ்சது! :)))))))

   Delete
  4. இவங்க ஓரளவுக்கு வசதியானவங்க என்பதால் அலைபேசித் தொடர்பில் இருக்கலாம். கீழ்மட்டத் தொழிலாளர்களுக்கு அதுவும் ஊரைவிட்டுச் சொந்தங்களை விட்டுப் பிரிந்து வந்திருக்கிறவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாக இருக்கும்?

   Delete
 6. ஒரிஸ்ஸா அனுபவங்கள் கிராமப் பயணமாக இருந்து இப்போது டவுன்ஷிப்க்கு வந்திருக்கிறது. பசு மாடுகள் அழகு. உங்கள் ஆதங்கம் நன்றாகப் புரிகிறது. தொலைதொடர்பு வசதிகள் சரியில்லை என்றால் மிகக் கஷ்டம். முன்னொரு கால டிடி ரீஜனல் சினிமாக்கள் நினைவுக்கு வருகின்றன. மிக ஏழ்மையான மா நிலமாகப் படங்கள் சித்தரிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. ஏழ்மையும் இருக்குத் தான். ஆனால் வளங்களுக்கும் குறைவில்லை! பிஹார்ப் பயணத்தின் போதும் நீர்வளத்தையும் வயலில் விளைந்திருக்கும் பயிர்களின் வளத்தையும் பார்த்துப் பிரமித்துத் தான் போனோம். இதன் பின்னரும் ஏன் இத்தனை ஏழ்மை என்றே தோன்றியது. கூடப் பயணித்தவர்களிடம் கேட்டப்போ வந்த பதில் அதிர்ச்சி! இங்கே எழுத முடியாது! :(

   Delete
 7. படங்கள் நன்று. இந்தப் பக்கம் பயணித்ததில்லை என்பது மீண்டும் மீண்டும் மனதுக்குள் வந்து பயணிக்கத் தூண்டுகிறது. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. சீக்கிரமாப் போயிட்டு வந்து எழுதுங்க. நாங்க போக முடியாத இடத்துக்கெல்லாம் நீங்க போய்ப் பார்த்துட்டு வந்து எழுதலாம். நாங்க ஒரு எல்லைக்குள் தான் பயணிக்கிறோம். :))))

   Delete
 8. உங்கள் பயணத் தொடர் அங்கு செல்ல வேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகின்றது. நாட்டுப் பசுக்கள் பற்றியும் ஆர்டிஃபிசியல் இன்செமினேஷன் பற்றியும் நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். கலப்பினத்தினால் பாலில் சத்து குறையாது. பசுவின் நோய் எதிர்ப்புச் சக்தி குறையும். தொடர்கிறோம்

  ReplyDelete