எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, May 16, 2022

நேரில் பார்க்கும் கர்மாவும், தொலைக்காட்சிக் கர்மாவும்!

 ஒரு வழியா வீட்டில் சீரமைப்பு வேலைகள் முடிவடைந்தன என்றால் இப்போது அடுத்தடுத்து நண்பர்கள்/உறவுகள் வருகை. இந்த அழகில் மூன்றாம் தளத்தில் ஓர் மாமா நரசிம்ம ஜயந்திக்கு வந்து பிரசாதம் வாங்கிச் செல்ல அழைப்பு மேல் அழைப்பு. இருவராலும் போக முடியலை. நான் மட்டும் போனேன். சர்க்கரைப்பொங்கல், கறுப்புக் கொ.க.சுண்டல், வடை, பலாச்சுளைகள்,வாழைப்பழம் ஆகியவற்றோடு வெற்றிலை, பாக்கு வைத்துக் கொடுத்தார். இத்தனைக்கும் அவர் மனைவி சுமார் 20 வருடங்களாகப் படுத்த படுக்கை தான். :(  அதுக்கும் மேலேயே இருக்கலாம். இரு பிள்ளைகள். ஒருத்தர் அம்பேரிக்காவில் மனைவியுடன். இன்னொருவர் சென்னையில் மனைவியுடன். அவ்வப்போது வந்து போவதுடன் சரி. இங்கே மாமா தான் மனைவியைக் கவனித்துக் கொண்டு சுயம்பாகமும் கூட. கிரைண்டரில் மாவு அரைத்து வைத்துக் கொள்ளுவார். நாங்க இந்தக் குடியிருப்புக்கு வந்த புதுசிலே வீல் சேரிலே மாமியை உட்கார வைத்துக் கொண்டு லிஃப்ட் மூலம் கீழே அழைத்து வருவார். பெருமாள் மண்டகப்படியின் போது மாமியையும் உடன் அழைத்து வருவார். நாளாக ஆக ஆக மாமியை எழுப்பி உட்கார வைக்க முடியலை. கீழே சரிந்து விட்டார் போல! அதன் பின்னர் அழைத்து வருவதில்லை. அதனால் அவரும் பெருமாளைப் பார்க்க வருவதில்லை. அவ்வப்போது கொஞ்சம் நினைவு வரும். காஃபி, ஹார்லிக்ஸ், சூப், ஜூஸ் போன்ற திரவ ஆகாரங்கள் தான். குழாய் மூலம் ஏற்றப்படும். கவனிச்சுக்க ஒரு செவிலிப் பெண்மணி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் நான் போகும்போதெல்லாம் பார்த்ததே இல்லை.

அந்த மாமிக்கு அம்மா எண்பது வயதுக்கும் மேல் ஆகிறது. இன்னமும் இருக்கிறார். பெண்ணையும், மாப்பிள்ளையையும் அவ்வப்போது வந்து பார்ப்பார். படுத்த படுக்கையாய் இருக்கும் பெண்ணை மாப்பிள்ளை கண்ணுக்குக் கண்ணாகப் பார்த்துக்கொள்வதைப் பார்த்து மனம் வேதனையுறலாம். என்னமோ தெரியலை. அந்தப் பெரிய மாமியை நான் ஓரிரு முறை பார்த்தது தான். சமையல் எல்லாம் மாமாதான் என்று சொன்னேனே! இத்தனை அமர்க்களத்திலும் பெரிய பெரிய படிகளாக ஐந்து படி கட்டிக் கொலு வைத்துவிடுவார் மாமா!  எங்கள் வளாகத்தில் உள்ள அனைத்துப் பெண்களையும் அழைத்து வெற்றிலை, பாக்குக் கொடுப்பார். பூக்கடையிலிருந்து பூக்களை வாங்கி வந்து எல்லா உம்மாச்சிங்களுக்கும் வைச்சு, வரும் பெண்களுக்கும் கொடுப்பார். முன்னெல்லாம் நவராத்திரிக்குப் பரிசுப் பொருளும் ஏதானும் வாங்கிக் கொடுப்பார். இப்போல்லாம் போக முடியலை போல! தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், சுண்டல் தான். சுண்டல் நன்கு குழைந்து அளவாய்க் காரம் போட்டு நன்றாகவே இருக்கும். சின்ன மருமகள் அந்தச் சமயம் சென்னையிலிருந்து வந்தால் அவளை விட்டுக் கொடுக்கச் சொல்லுவார். வரலைனால் குற்றமோ, குறையோ சொல்லுவதில்லை. இன்று வரை தன் மனைவிக்கு இப்படி ஆகிவிட்டதற்கோ அவங்க உயிர் இருந்தும் ஓர் அசையா பொம்மையாக இருப்பதற்கும் அலுத்துக் கொண்டதே இல்லை.  இரண்டு பையர்கள் பிறந்ததும் நடந்த ஏதோ ஓர் அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறினால் இப்படி ஆகிவிட்டார் எனக் கேள்விப் பட்டேன். அவர் முகத்தில் கொஞ்சமும் வருத்தமோ, கவலையோ, விரக்தியோ தெரியாது. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறார். குடியிருப்பு வளாகத்தில் நடைபெறும் அசோசியேஷன் கூட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு நகைச்சுவைத் துணுக்குகளால் அனைவரையும் சிரிக்க வைப்பார். எந்தவிதமான பித்ரு கர்மாக்களையும் விட்டதில்லை.  அவரால் முடிந்த அளவுக்குச் செய்வார். 

எனக்கு எல்லாம் இந்த வேலையே செய்ய முடியாமல் அலுப்பும்/சலிப்புமாக இருப்பதை நினைத்துக் கொண்டு அவரையும் பார்க்கையில் வெட்கமாகவே வரும். :( அவர் அனுபவிப்பது எல்லாம் "கர்மா"! இதை அவர் அனுபவித்தே ஆகணும் என்கிறார்கள். என்னவோ! 

***********************************************************************************

கர்மா  பாம்பே சாணக்கியாவின் இந்தத் தொடர் பார்க்கப் பார்க்க அசத்துகிறது. பார்ப்பதைத் தவிர்க்கவும் முடியலை.  ஆரம்பத்தில் 2006 ஆம் வருடமோ என்னமோ இந்தத் தொடர் "ராஜ் தொலைக்காட்சியில்" தொடராக வந்து பாதியில் நின்று விட்டது. அதன் காரணம் அப்போது இதைத் தயாரித்தவர் தான் என்பதை இப்போத் தான் பாம்பே சாணக்கியா சொன்னதன் மூலம் தெரிந்து கொண்டேன். பின்னர் என்னவோ தெரியலை திடீரென முகநூலில் இந்தத் தொடர்கள் ஃபாஸ்ட் ஃப்ளிக்ஸ் என்னும் பெயரில் வர ஆரம்பித்தன. பின்னர் பாம்பே சாணக்கியா ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்து மீண்டும் இதைத் தொடரவும், தொடர்ந்து இதில் வரும் வாழ்க்கைப் புதிர்களை விடுவிக்கவும் ரசிகர்கள் விரும்புவதால் தன்னால் பத்துப் பகுதிகள் மட்டுமே எடுக்க முடிந்ததாகவும் இதைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் நன்கொடை அளித்தால் தொடர்ந்து எடுப்பதாகவும் வேண்டுகோள் விடுக்க அப்படியே ரசிகர்கள் மூலம் கிடைத்த நன்கொடையால் "கர்மா -2" பகுதி வெளிவந்து இணையத்திலே சக்கைப் போடு போடுகிறது.  கர்மா முதல் பகுதியில் வந்தவர்களில் எல்லோரும் இதில் வரவில்லை. சிலர் கிட்டத்தட்டப் பதினாறு வருடங்கள் ஆனதில் உயிருடன் இல்லை/சிலரால் முடியாமல் போய் விட்டது.

ஆனால் முக்கியக் கதாபாத்திரமான "ருக்கு"வாக அதே ப்ரீத்தி ஶ்ரீநிவாஸ் இப்போ ப்ரீத்தி சஞ்சய் என்னும் (கணவர் பெயருடன் தன்னை இணைத்துக் கொண்டு ) பெயருடன் அதே ருக்கு கதா பாத்திரத்தில் வருகிறார். மூத்த மாப்பிள்ளையாக அதே சாய்ராமும், முக்கியமான கதாபாத்திரமான சோமசேகர கனபாடிகளாக அதே பூவிலங்கு மோகனும் நடிக்கின்றனர். இரண்டாவது மருமகளாக கமலா காமேஷின் பெண் உமா ரியாஸ் அதே பாத்திரத்தில் தொடர்ந்தார். இப்போது சில பகுதிகளாக அவரைக் காணவில்லை.  வயதான ருக்குப் பாட்டியாக நடித்த பெரியவர் இப்போ இல்லை. இப்போ அந்தக் கதா பாத்திரத்தில் யார் வரப் போறாங்க என்பது இனிமேல் தான் நான் பார்க்கணும். பழைய முதல் பகுதி சுமார் 75 எபிசோட் போன வருஷம் உடம்பு முடியாமல் படுத்திருந்தப்போப் பார்த்தேன். பின்னர் பார்க்கவே முடியலை. இப்போ ஒரு மாதமாக மறுபடி பார்க்க ஆரம்பித்துக் "கர்மா-2" இல் 45 எபிசோட் வரை பார்த்துவிட்டு முக்கியமான கட்டத்துக்கு வந்திருக்கேன். இதுவும் 77 எபிசோட் வரை யூ ட்யூபில் இருக்கின்றன. அவற்றையும் பார்க்கணும்.

கதை ஒண்ணும் பெரிசா இல்லை. வேத வித்தான சோமசேகர கனபாடிகளின் குடும்பம் (கதை ஆரம்பிப்பது 1934 ஆம் ஆண்டில்) காலப்போக்கிலும் வெள்ளையரின் ஆங்கிலப்படிப்பு மோகத்திலும் எப்படி அக்ரஹார வாழ்க்கையை விட்டு நகர வாழ்க்கைக்கு இடம் பெயர நேர்ந்தது என்பதும், அதனால் ஏற்பட்ட தாக்கங்களும் தான் முக்கியக் கரு. அக்ரஹாரத்திலிருந்து பிராமணர்கள் வெளியேறியது/வெளியேற்றப்பட்டது (மறைமுகமாக) எப்படி ஒரு கலாசாரச் சீரழிவுக்குக் காரணமாய் அமைந்தது என்பதும் சநாதன தர்மத்தை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த பிராமணர்கள் இப்போது ஏதோ கொஞ்சம் போல் அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருப்பதும் தான் முக்கியக் கரு. கதையின் முக்கியக் கதாபாத்திரமான சோமசேகர கனபாடிகளுக்கு அவர் காலத்திலேயே இவை எல்லாம் தீர்க்க தரிசனமாகத் தெரிய வருகிறது. அப்போது ஒரு நாள் அவர் கனவில் அவர் தினமும் வணங்கும் ஶ்ரீராமர் வந்து தன்னுடைய இந்தப் படம் தான் அவருடைய ஐந்தாம் தலைமுறையை ஒன்று சேர்க்கும் என்கிறார். அப்படி என்ன விசேஷம் அந்த ஶ்ரீராமர் படத்தில் என்றால் ஶ்ரீராமர் பட்டாபிஷேஹப் படமான  அதில் ஶ்ரீராமர் நின்று கொண்டிருப்பார். பரிவாரங்கள் அனைவரும் நிற்பார்கள் அனுமன் உள்பட. ஶ்ரீராமரின் வலக்கரத்தில் ஒரு மச்சம் காணப்படும். இப்படி வரையப்பட்ட அந்தப் படம் சோம சேகர கனபாடிகளால் அவர் குடும்பத்தின் அனைத்து நபர்களுக்கும் திருமணப் பரிசாகக் கொடுக்கப் படுகிறது. இந்தப் படம் தான் குடும்பத்தை ஒன்றாக இணைக்கப் போகிறது. தன்னோட ஐந்தாவது தலைமுறையாவது மீண்டும் கிராமத்திற்கு வந்து இழந்தும்/மறந்தும் போன அக்ரஹார வாழ்க்கை முறையைத் தொடர வேண்டும் என கனபாடிகள் நினைக்கிறார். அது நடந்ததா என்பது இனிமேல் தான் தெரியணும். 


கர்மா தொடர் முதல் பகுதி 1933 ஆங்கில ஆண்டு  தமிழ் ஈஸ்வர ஆண்டில் ஆரம்பிக்கும் முதல் பகுதியை இந்தச்  சுட்டியில் காணலாம்.  ஆரம்பத்தில் கோனேரிராஜபுரம், பாலூர், போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்டது இரண்டாம் பகுதியிலும் அங்கேயே அதே வீடுகளிலேயே எடுக்கப்பட்டாலும் கணபதி அக்ரஹாரத்திலும் படப்பிடிப்பு நடந்திருக்கு. அரையபுரத்தில் ஒரு கிராமத்து அக்ரஹார வீட்டைத் தற்காலத்துக்கு ஏற்றாற்போல் மாற்றிக் கட்டி இருப்பது அசத்தி விட்டது.  விருப்பமுள்ளவர்கள் பார்க்கலாம். நம்மை எழுந்திருக்க விடாமல் கட்டிப் போடும் தன்மை உள்ள தொடர். பக்கத்து வீட்டில்/அல்லது நம் வீட்டில் நடப்பதை நாம் நேரில் பார்ப்பது போலவே உணர்வோம். 

திருவாரூர்ப் பதிவுகளைத் தொடரணும். இந்தக் கீ போர்ட் ஒரே தகராறு. பிடிவாதம் பிடிக்கிறது. பார்ப்போம். இதைத் தட்டச்ச அரை மணி ஆகிவிட்டது கீ போர்ட் படுத்தலினால். :(

47 comments:

 1. முதல் நிகழ்வு மனதை வருத்துகிறது. என்ன செய்ய? அவரவர் விதி வழி வாழ்க்கை நடக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெல்லை. பத்ரிநாத் பயணம் நன்கு நடைபெற்றிருக்கும் என நம்புகிறேன். சௌகரியமாக வந்து சேர்ந்தது சந்தோஷம்.
   ஆமாம், அவரவர் விதி தான். ஆனால் சந்தோஷமான தம்பதிகளாகப் பத்து வருடங்கள் வாழ்க்கை நடத்தினார்களாம். அந்த மாமி மிகவும் திறமையானவர் என்றும் சொல்கின்றனர். இரண்டாம் பிரசவத்தில் அல்லது அதன் பின்னர் ஏற்பட்ட கோளாறில் பிரபல மருத்துவமனையில் செய்த அறுவை சிகிச்சை தவறாக இப்படி நேர்ந்திருக்கிறது. சரி செய்ய முடியாதுனு சொல்லிட்டாங்களாம். ஆரம்பத்தில் நினைவுடனேயே இருந்திருக்கார். வீல் சேரிலேயே குடும்பமும் நடத்தி இருக்கார்.

   Delete
  2. பத்ரிநாத் பயணம் திருப்தியாக முடிந்தது (கோவில் தரிசனங்கள், கங்கை ஸ்நானம்-ரிஷிகேஷ், தேவப்ரயாக், ஹரித்வார், பத்ரிநாத்-தப்தகுண்டம்...). என்ன ஒண்ணு... பத்ரி ஜனவரி பெங்களூர் போலவும், மற்ற இடங்கள் எல்லாம், மே மாத சென்னை போலவும் இருந்ததுதான்.

   Delete
 2. இருபது வருடங்களாக மனைவியை படுக்கையில் வைத்தே பராமரிக்கும் அந்த முதியவரை வணங்க வேண்டும் போல் இருக்கிறது.
  ஓர்தினம் அவரைக் காணவேண்டும் அதற்காகவாவது தங்களது வீட்டுக்கு வரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, நீங்க எப்போ வேண்டுமானாலும் எங்க வீட்டுக்கு வரலாம்.

   Delete
 3. ஆச்சர்யமான மனிதர்.  வணங்க / போற்றத் தகுந்தவர்.  இபப்டி எல்லாம் மனம் அமைய கொடுத்து வைத்திருக்க வேண்டும்.  அவர் மனைவி பாவம்,   அவரும் செயலாய் இருந்தால் மாமாவோடு எவ்வளவு சந்தோஷமாய் இருப்பார்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், சந்தோஷமாகவே வாழ்க்கை நடத்தி இருக்காங்க. விதி வந்து குறுக்கிட்டிருக்கு. :(

   Delete
 4. இனி இவரை எண்ணியாவது நானும் கொஞ்சம் வாழப் பழகணும்.  சொல்லலாம்.  அதெல்லாம் பிறவியிலேயே வருவதுதான்.  நம் எரிச்சல்களும், அலுப்புகளும் நம்மை விட்டுப் போகாது.  மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்க கொடுத்து என்பது போல நமக்கு இல்லை எனக்கு இதெல்லாம்தான் நினைவுக்கு வரும்!

  ReplyDelete
  Replies
  1. ஹையோ! நீங்களே இப்படிச் சொன்னால் நானெல்லாம் என்ன சொல்லுவது? நானுமே ரொமப் பழகிக்கணும். அப்படியும்! ஆனால் உங்களுக்கும்/நமக்கும் தெரிந்த இன்னொருவரும் இப்படியான வாழ்க்கையைச் சில வருஷங்களாக வாழ்ந்து வருகிறாரே! :( அவரும் அலுத்துக்கொண்டோ/சலித்துக் கொண்டோ நான் பார்க்கலை.

   Delete
 5. நீங்களும் கர்மா தொடர் பற்றி சொல்லிக் கொண்டே வருகிறீர்கள்.  பார்க்கவ வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறேன்.  நினைப்பதோடு சரி!

  ReplyDelete
  Replies
  1. ஆரம்பத்தில் தொலைக்காட்சித் தொடராகத் தான் வந்தது. இப்போது நெட்ஃப்ளிக்ஸ் மாதிரியான ஃபாஸ்ட் ஃப்ளிக்ஸ் மூலம் பார்க்கணும். எந்தத் தொலைக்காட்சியிலும் வரலை. ஆகவே ஒரே நாளில் சுமார் பத்து எபிசோட் வரை நேரம் இருந்தால் பார்த்துடலாம்.

   Delete
 6. மாமாவுக்கும் உங்களுக்கும் நமஸ்காரங்கள்.  இனிய திருமணநாள் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஶ்ரீராம். உங்கள் அனைவருக்கும் எங்கள் ஆசிகள்.

   Delete
 7. இந்தப் புள்ளி விவரத்தையும் சேர்த்து ஐந்து கமெண்ட்ஸ் போட்டிருக்கேன்.  எவ்வளவு வருதோ பார்ப்போம்!

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹிஹி, நல்ல எண்ணிக்கை. நானாக இருந்தால் எல்லாம் சேர்த்துப் பெரிய பத்தியாக எழுதி இருப்பேன்.

   Delete
 8. தொலைக் காட்சி கர்மா. நிஜமாக எதிரில் கர்மா.
  பல விஷயங்களில் கர்மா தான் காரணம்
  என்பதை யார் ஏற்றுக் கொள்ள மறுத்தாலும்
  நம்மால் மறுக்க முடிவதில்லை. அந்த மாடி வீட்டு மாமா நல் ஆரோக்கியத்தோடு இருந்து

  மாமியைக் கரை சேர்க்க வேண்டும்.
  தொலைக்காட்சி சீரியலில் மாட்டிக் கொள்ள
  பயமாக இருக்கிறது:)

  அவர்கள் துன்பம் நம் துன்பம் அவர்கள் மகிழ்ச்சி நம் மகிழ்ச்சி
  என்று ஆகிவிடும் அபாயம்.
  வீட்டு வேலைகள் முடிந்தது ரொம்ப சந்தோஷம் மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. என்னோட திருமண நாளை அமர்க்களப் படுத்திட்டீங்க! தொலைக்காட்சியில் சுமார் 16 வருடங்கள் முன்னால் தொடராக வந்து பாதியில் தயாரிப்பாளருக்கும் பாம்பே சாணக்கியாவுக்கும் அபிப்பிராய பேதம் வந்து நின்னு போச்சு.

   Delete
  2. இப்போது ஃபாஸ்ட் ஃப்ளிக்ஸ் மூலம் பார்க்கலாம். இரண்டும் சேர்ந்து மொத்தம் 180 எபிசோட்கள் வந்திருக்கின்றன.

   Delete
 9. முதல் கர்மா - வேதனை..... இரண்டாவது கர்மா தொடர் - நான் பார்க்கவில்லை. வீட்டில் தொடர்ந்து பார்க்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட், ஆதியும் இதைப் பற்றி எழுதி இருந்தார்.

   Delete
 10. இனிய மண நாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் இனிதாக அமையட்டும். எல்லாம் வல்ல இறைவனின் பூரண அருள் உங்களுக்குக் கிடைத்திட பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 11. முதல் நிகழ்வு ஒரு புறம் வேதனை மறுபுறம் அப்பெரியவரை நினைத்து வியப்பு. பெரிய உள்ளம். இப்படி எல்லா ஆண்களும் இருக்க முடியுமா? இருப்பார்களா? சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் அவரை.

  இரண்டாவது நீங்கள் இங்கு முன்னமே குறிப்பிட்ட நினைவு. நான் பார்ப்பதில்லை. இங்குத் தமிழ் நிகழ்ச்சிகள் அதுவும் எப்போதேனும் பார்ப்பது அதுவும் என் மொபைலில் மட்டும்தானே. மட்டும்தான்.

  துளசிதரன்

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் துளசிதரன், நான் பலமுறை குறிப்பிட்டிருந்தேன். தொடரின் சுவாரசியம் அப்படி அமைந்து விட்டது.

   Delete
 12. கீதாக்கா அந்த மாமா வியக்க வைக்கிறார். எனக்குச் சென்னைப் பித்தன் நினைவுக்கு வந்தார். அவர் தன் அம்மாவைக் கவனித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது. இந்த மாமாவோ தன் மனைவியை!!!!!! இதை எப்படிச் சொல்ல? அந்த மனைவி கொடுத்துவைத்தவர் என்றா! இல்லை மாமாவின் பொறுமையையும் நல்ல உயர்வான உள்ளத்தையும் பாராட்டுவதா! யாரையும் குற்றம் சொல்லாமல் அலுத்துக் கொள்ளாமல், கண்டிப்பாக நம் எல்லோருக்குமே முன் உதாரணம். பாவம். அந்த மாமியின் அம்மா வயதான காலத்தில் இதைப் பார்க்கும் போது எவ்வளவு வேதனை இருக்குமோ!

  அவருக்கு வணக்கங்கள்! அவருக்கு இறை அருள் துணையாக இருக்கட்டும்!

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அவர் முகம் வாடியோ அலுப்பாகவோ நான் பார்த்ததே இல்லை தி/கீதா. அவர் மனைவி கொடுத்து வைத்தவர் எனில் இப்படி ஒரு கணவன் வாய்த்திருப்பதை அறியாமல் அல்லவோ இருக்கார். என்ன சொல்ல!

   Delete
  2. என்னுடைய பெரியப்பா (மனைவி வழி) ஒருவர் இப்படி மனைவிக்கு அனுசரணையாக இருந்தார். மனைவி இறந்ததும், வடநாட்டு யாத்திரைக்குச் சென்றுவந்தார். உடனே மரணித்தும் விட்டார். பிறரைப் பார்த்துக்கொள்வதற்கு மிகப் பெரிய மனதும், குணமும், சகிப்புத்தன்மையும் வேண்டும். அது பெரும்பாலானவர்களுக்கு (நான் உட்பட) கிடையாது

   Delete
  3. கொடுத்து வைத்தவர்கள்!

   Delete
 13. இனிய திருமண நன்நாள் வணக்கங்கள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி.

   Delete
 14. கர்மா தொடர் பார்த்ததில்லை.

  நேரம் வாய்ப்பு கிடைத்தால் பார்க்க வேண்டும்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நான் பெரும்பாலும் மத்தியானங்களில் பார்ப்பேன். சாயந்திரம் நேரம் கிடைப்பது அபூர்வம்.

   Delete
 15. அந்த மாடி வீட்டு மாமா போற்றுதலுக்குரியவர். அப்படிப்பட்ட மனநிலையைத்தான் தத்துவ ஞானிகள் "ஸ்தித பிரஞ" என்று சொல்கிறார்கள் போலும். அவரின் அந்த அன்புக்காகவாவது ஏதாவது அதிசயம் நிகழ்ந்து அவர் மனைவி எழுந்து நடமாடட்டும்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி இணைய திண்ணை. உங்கள் அனைவரின் பிரார்த்தனைகளும் பலித்து அந்த மாமி எழுந்து நடமாடும் நிலை வரட்டும். மிக்க நன்றி.

   Delete
 16. இனிய மணநாள் வாழ்த்துகள். இன்று போல் என்றும் சேர்ந்திருக்கப் ப்ரார்த்திக்கிறேன், கொஞ்சம் கூடுதல் ஆரோக்கியத்தோடு.

  ReplyDelete
  Replies
  1. நன்றி. நெல்லை! இப்போதைய தேவை கூடுதல் ஆரோக்கியம் தான்.

   Delete
 17. இனிய மணநாள் வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
  வாழ்க்கை துணைநலம் நல்லமனிதராக கிடைத்தது அந்த மாமியின் பூர்வஜென்ம புண்ணியம்.

  நினைவு வந்து கணவரின் அன்பை புரிந்து கொள்ள வேண்டும் அந்த நாளை இறைவன் அருள வேண்டும். மாமாவிற்கும் இறைவன் நல்ல உடலநலத்தை கொடுக்க வேண்டும்.

  நீங்கள் சொல்வது போல அலுப்பும், சலிப்பும் அடிக்கடி வந்து எட்டி பார்த்து கொண்டுதான் இருக்கிறது. கர்மா தொடர் நீங்கள் முன்பு சொன்னதிலிருந்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, திருவாரூர் போயிட்டு வந்தப்புறமா அடிக்கடி எனக்கு வயிற்றுப் பிரச்னை வருவதால் ரொம்ப நேரமெல்லாம் இணையத்தில் செலவு செய்ய முடிவதில்லை. சில சமயம் வரவே முடியலை. அதோடு இப்போ சென்ற வாரம் என் நாத்தனார் பேத்தி கல்யாணத்துக்கு உறவினர்கள் எல்லோரும் வந்து விட்டு வெள்ளியன்று தான் கிளம்பிச் சென்றார்கள். அதிலே வேறே வேலை மும்முரம்.

   Delete
  2. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.

   Delete
 18. இனிய திருமண நாள் ..
  இறைவனின் நல்லருள் என்றும் நிறையட்டும்..

  மலரும் இனிய நினைவுகளுடன் மகிழ்ச்சி என்றென்றும் நிறைந்திருக்கட்டும்..
  மாமாவும் அக்காவும் நலங்கொண்டு வாழ்க..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகளுக்கு மிக மிக நன்றி துரை தம்பி!

   Delete
 19. எல்லாரும் இன்புற்றிருக்கட்டும் என்று நினைத்தாலும் பேசினாலும் அவரவர் பழவினைகளை அவரவர்களே தீர்த்துக் கொண்டாக வேண்டும்.. நம்மால் ஆகக் கூடியது என்ன இருக்கிறது?..

  அந்தத் தம்பதியருக்கு இறைவன் நல்வழி அருள்வானாக..

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் துரை! அவரவர் வினைகளை அவரவரே தீர்த்துக்கணும். நாம் உதவினாலும் அது அவங்களுக்குப் பொருந்தணுமே!

   Delete
 20. வணக்கம் சகோதரி

  பதிவு அருமை. முதலில் தங்களுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துகள். (தாமதமாக வந்து வாழ்த்து கூறுகிறேன். மன்னிக்கவும்.) அன்பும் ஆரோக்கியமுமாக தங்கள் இல்வாழ்க்கை என்றும் சிறப்பாக இருக்க ஆண்டவனை மனதாற பிரார்த்தித்து கொள்கிறேன்.

  தாங்கள் கண்டு கூறிய வயதானவர் உண்மையிலேயே பெரிய மனதை உடையவர். நீங்கள் எழுதி அதைப்படிக்கும் போதே என் கண்களில் நீர் தளும்பியது. நீங்கள் நேரடியாகவே அவரின் அன்பான செயல்களை கண்டு உணர்கிறீர்கள். அவரின் நல்ல மனதுக்கு அவரின் கர்மா நன்றாகத்தான் அமையும். இது போன ஜென்மத்தின் குறைபாட்டால் விளைந்ததாக இருக்கும். என்ன செய்வது? வந்ததை ஏற்று தன் கடமையைச் செய்யும் அவரை நாம் மனங்கனிந்து பாராட்டத்தான் வேண்டும். இறைவனும் நல்ல பலன்களை தரட்டும். நாமும் அவருக்காக வேண்டுவோம்.

  கர்மா தொடர் நீங்கள் முன்பு குறிப்பிட்டு நான்கைந்து வாரம் பார்த்தேன். பிறகு வந்த சூழ்நிலைகளில் பார்க்க தவறி விட்டேன். மறுபடியும் துவக்க முயற்சிக்கிறேன். இந்த மாதிரி தொடர்கள் எனக்கும் பார்க்க பிடிக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா. கர்மா தொடரை முடிஞ்சப்போக்கட்டாயமாய்ப் பாருங்கள். இப்போது இரண்டாவது பகுதிக்கு வந்திருக்கேன். 50 எபிசோடுகள் முடிச்சுட்டேன். மனது வேதனையில் ஆழ்ந்து விட்டது. உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி.

   Delete
 21. திருமணநாள் வாழ்த்துகள்.

  மனைவியை பேணிக்காக்கும் நல்லுள்ளம் படைத்த மனிதரை வணங்குகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி. நன்றி.

   Delete