எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, December 31, 2025

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 16

  திருப்பாவை படங்கள் 16 க்கான பட முடிவு   திருப்பாவை படங்கள் 16 க்கான பட முடிவு


திருப்பாவை படங்கள் 16 க்கான பட முடிவு

நாயக னாய்நின்ற நந்தகோ பனுடைய
கோயில்காப் பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப் பானே! மணிக்கதவம் தாள்திறவாய்!
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்,
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.

கொடியைக் குறித்துச் சொல்லி இருப்பதால் கொடிக்கோலமோ அல்லது தோரணக் கோலமோ போடலாம். மண்டபம், மாவிலைக் கொத்து என்றும் போடலாம்.

கோலம், க்கான பட முடிவு   கோலம், க்கான பட முடிவு
                                                                                       
கோலம், க்கான பட முடிவு


படங்களுக்கு நன்றி கூகிளார்

கண்ணன் வரச் சொன்னதாகவும், அவன் கைகளால் பறையை வாங்கிக் கொள்ள வந்திருப்பதாகவும்,  அவன் நாமத்தையே தாங்கள் அனைவரும் பாடி அவனைத் துயிலில் இருந்து எழுப்பப் போவதாகவும்  வாயில் காப்போனிடம் ஆண்டாள் சொல்கிறாள். இங்கே பறை என்பது கொட்டுக் கொட்டும் பறையை மட்டும் குறிக்கவில்லை என்றே எண்ணுகிறேன்.  துயிலில் இருந்து கண்ணனை எழுப்புவது என்பதும் மறைபொருளாக யோக நித்திரையில் மூழ்கி இருக்கும் பெருமானின் திருநாமத்தைச் சொல்லி உருகி உருகிப் பாடி அவனோடு ஒன்றாய் ஐக்கியம் ஆவதற்கான ஏற்பாடுகள் செய்வதைக் குறிக்கும்.

 கண்ணனின்  இருப்பிடமோ வைகுந்தம்.  அங்கே அவனைக் காணச் செல்லும் முன்னர் வாயில் காப்போரிடம் அனுமதி பெற்றே செல்ல வேண்டும்.  வாயில் காப்போர் இங்கு மறைமுகமாக ஆசானைக் குறிக்கிறது என எண்ணுகிறேன்.  நம் மனக்கதவைத் திறக்கும் முகமாக ஆசான் துணை செய்யப் பறையாகிய ஞான கீதத்தைக் கண்ணன் கொடுப்பான் என்கிறாள் ஆண்டாள்.  குருமுகமாக இருண்டிருக்கும் மனக்கதவைத் திறந்து கண்ணனைக் கண்டு பிடித்தால் அவன் நமக்கு வேண்டிய ஞானத்தைத் தருவான்.  ஆகவே மறுக்காமல் உதவி செய்யுமாறு வாயில்காப்போனாகிய குருவிடம் வேண்டுகிறாள் ஆண்டாள்.


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே!= நந்தகோபன் ஆயர்களுக்கெல்லாம் தலைவன். ஆகவே அவன் மாளிகை மிகப் பெரியதாய் ஒரு கோயில் போல் உள்ளது. இப்போது ஆண்டாள் தான் அழைத்து வந்த பெண்களோடு நந்தகோபன் வீட்டுக்கே வந்துவிட்டாள் போலும். ஆனால் இங்கேயோ ஒவ்வொரு வாயில்கள், பல நிலைகள், பல காவலர்கள் இருப்பார்கள் போலும். ஒவ்வொன்றையும் கடந்தல்லவோ உள்செல்லவேண்டும். முதல்லே வாசலைக் கடக்க அவனைக் கேட்கிறாள்.

கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே!= நந்தனுடைய கொடிக்கம்பத்தில் கொடி கட்டப்பட்டுத் தெரிகிறது. வாயிலில் தோரணங்களும் கட்டப்பட்டிருக்கின்றன. அங்கேயும் ஒரு வாயில் காப்போன். அவனையும் இறைஞ்சுகிறாள் ஆண்டாள்.

மணிக்கதவம் தாள் திறவாய்= மணிகள் பொருந்திய அழகிய கதவின் தாளைத் திறக்க மாட்டாயா? என்று கெஞ்சுகிறாள். கண்ணன் உள்ளே இருக்கிறான். நம் மனமாகிய கோயிலுக்குள்ளே. அங்கே சென்று அவனை அடையத் தான் எத்தனை தடை! நம் செயல்களே நம்மைத் தடுக்கின்றன அன்றோ!

அந்த வாயிற்காப்போர்கள் கண்ணனுக்குத் தெரியுமா நீங்க வரதுனு கேட்கிறாங்க போல

ஆயர் சிறுமியரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்= அட, கண்ணன் அறியாதவனா? எங்களை அவனுக்கு நன்கு தெரியுமே! நாங்கள் ஆயர்பாடிச்சிறுமிகள் தாம் என்று ஆண்டாள் சொல்ல, சிறுமிகளாய் இருந்தாலும் ஏன் இப்போது வந்தீர்கள் என்று கேட்க, அவர்கள் எங்களுக்குப் பாவை நோன்புக்கான சாதனங்களைத் தருவதாய்க் கண்ணன் வாக்களித்திருந்தான். அதைப் பெற்றுச் செல்ல வந்தோம். வேறு ஒன்றும் இல்லை என்கிறாள். அவன் கருணா கடாக்ஷம், அவன் கடைக்கண் கடாக்ஷம் ஒன்றே இங்கே சுட்டப் பட்டிருக்கிறது. கண்ணனின் கருணைப் பார்வை ஒன்றே போதும் என்கிறாள் ஆண்டாள்.

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா! = தூய்மையான எண்ணங்களோடு, உள்ளம் முழுதும் கண்ணன் மேல் மாறாத பக்தியோடு வந்திருக்கிறோம் காவலனே, எங்களுக்கு வேறு எந்தவிதமான துர் எண்ணங்களும் இல்லை. கண்ணனைத் துயிலில் இருந்து எழுப்பு என்கிறாள் ஆண்டாள். பகவானின் பாதாரவிந்தங்களே சரண் என அடைந்தவர்களுக்கு, அவர்களுடைய முன்வினைகளையும் போக்கிவிட்டு அவன் தன் யோக நித்திரையிலிருந்தும் எழுந்து அவர்களைத் தன் அருட்பார்வையால் கடாக்ஷிப்பான். ஆனால் முன்வினைகளோ இங்கே தடுக்கின்றன. பக்தர்கள் கதறுகின்றனர். அம்மா, அம்மா, உன் கருணை ஒன்றே போதுமே, உன் கடைக்கண்பார்வை ஒன்றே போதுமே, உன் அருட்பார்வையை எங்கள் பக்கம் திருப்பாமல் மாற்றிவிடாதே கண்ணா, எங்களுக்கு அனுகிரஹம் செய் என்று கதறுகிறார்கள்.

நீ நேய நிலைக்கதவம் நீக்கேலோ ரெம்பாவாய்.= இந்த மாபெரும் தடையாகிய கதவுகளை நீக்கிவிட்டு உள்ளே சென்று கண்ணனைச் சந்திக்க எங்களை அநுமதிப்பாய். இப்பிறவியில் செய்யும் புண்ணியங்களே, நற்செயல்களே நம்மை ஈசன் பால் கொண்டுவிடும். முன்வினைகளோ நாம் ஈசன் பால் செல்லமுடியாமல் தடுக்கும். ஆகவே நாம் தூயமனத்தவராய் எந்நேரமும் கண்ணன் புகழ் பாடுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு வேறு சிந்தனைகளை மனதில் நிறுத்தாமல் இருந்தால் கண்ணன் நம்மை ஆட்கொள்வான்.

கண்ணனோடு ஐக்கியமடைவதைப் பற்றி ஆண்டாள் கூறினால் பட்டத்திரியோ கண்ணன் இல்லாத இடமே இல்லை என்கிறார். அவன் அனைத்துள்ளும் இருக்கிறான். சர்வ வியாபி என்கிறார்.

மூர்த்த்நா மக்ஷ்ணாம் பதா வஹஸி கலு ஸஹஸ்ராணி ஸம்பூர்ய விஸ்வம்
தத் ப்றோத்க்ரம்யாபி திஷ்ட்டந் பரிமிதவிவரே பாஸி சித்தாந்தரேபி
பூதம் பவ்யஞ்ச ஸர்வம் பரபுருஷ பவாந் கிஞ்ச தேஹேந்த்ரியாதிஷ்
வாவிஷ்டோ ஹ்யுத்கதத்வாதம்ருத முகரஸம் சாநு புங்க்ஷே த்வமேவ

ஆயிரக்கணக்கான தலைகள், கண்கள், என உலகனைத்தும் வியாபித்து அதற்கும் அப்பால், அப்பாலுக்கும் அப்பால் வியாபித்து இருக்கும் பரம்பொருளே, உள்ளமாகிய சிதாநந்த வெளியிலே அனைவரின் சித்தத்துக்குள்ளும் பிரகாசிப்பதும் நீரே! இருந்ததும் நீரே, இருக்கிறதும் நீரே; இனி இருக்கப்போவதும் நீரே! உடலின் ஒவ்வொரு அணுவிலும் நீரே இருக்கிறீர்! சரீரத்திலும், இந்திரியங்களிலும் இருப்பதும் நீரே! எனினும் நீர் அனைத்திலும் பற்றில்லாமல் இருக்கிறீரே!

 இணைய உலக நண்பர்கள் அனைவருக்கும் முன் கூட்டிய   இனிய புத்தாண்டு வாழ்த்துகள். அனைவரின் பிரச்னைகளும் தீர்ந்து உடல் நலமும் ஆரோக்கியமாக இருக்கப் பிரார்த்திக்கிறோம்.

கீதா & சாம்பசிவம்

இன்றைய பதினாறாம் நாள் பதிவை நான் இணையத் தளத்தில் கவனக்குறைவால் நேற்றே ஏற்ற முடியவில்லை. தாமதத்துக்கு மன்னிக்கவும். :(

நாளை பிறக்கப் போகும் புத்தாண்டிற்கு நண்பர்கள் அனைவருக்கும் என் உளம் கனிந்த நல்வாழ்த்துகள். 

Tuesday, December 30, 2025

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 15

 திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு


திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 15 க்கான பட முடிவு

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!


கிளி கோலங்கள், க்கான பட முடிவு கிளி கோலங்கள், க்கான பட முடிவு
           

 கிளி கோலங்கள், க்கான பட முடிவு யானை கோலங்கள் க்கான பட முடிவு

 யானை கோலங்கள் க்கான பட முடிவு

கோலங்கள், திருப்பாவைப் படங்களுக்கு நன்றி கூகிளார்!

தோழியைக் கடுமையாக அழைத்தும் அவள் வரவில்லை.  ஆகையால் கிளியைப் போல் மழலை பேசுபவளே என அழைக்கிறாள்.  ஆனால் இப்போது தான் கண் விழித்த அந்தத் தோழி இதையே கடுமையாகப் பேசுவதாய்க் குறை கூறிவிட்டு, என்னை மட்டும் தான் எழுப்புகிறீர்கள்.  எல்லோரும் வந்துவிட்டனரா எனக் கேட்க வந்து எண்ணிப் பார்த்துக் கொள்ளச் சொல்கின்றனர் தோழியர். இங்கே வல்லானைக் கொன்றானை என்பது குவலயாபீடம் என்னும் யானையைக் கண்ணன் கொன்றதைக் குறிக்கும்.  மாற்றாரை மாற்றழிக்க என்பது தன் எதிரிகளை எல்லாம் கண்ணன் அழித்ததைக் குறிக்கும்.

தீமையை அழித்து உலகுக்கு நன்மையைத் தந்தான் கண்ணன் என்பதை இதன் மூலம் சுட்டிக் காட்டுகிறாள் ஆண்டாள்.  அதோடு இரு தரப்பாரும் மாறி மாறிப் பேசுவது போல் அமைந்த இந்தப் பாடலுடன் தோழியை அழைப்பது முடிந்தும் விடுகிறது.


எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?= எலேய் னு அழைப்பது இப்போவும் உண்டு. ஆனால் ஆண்குழந்தைகளையும், நெருங்கிய ஆண் சிநேகிதர்களை மற்ற ஆண் சிநேகிதர்களும் மட்டுமே அழைக்கின்றனர். ஆண்டாளின் காலத்தில் பெண்பிள்ளைகளைக் கூட அழைத்திருக்கின்றனர். அதுவும் இந்தப் பெண் சின்னக் குழந்தையாய் இருக்கவேண்டுமோ? கிளியே என அழைத்திருக்கிறாள். குழந்தைகளையும், சின்னக் குழந்தைகளையும் செல்லமாய்க் கிளி எனக் கூப்பிடுவது உண்டு. அல்லது இந்தப் பெண்ணின் பேச்சுக் கிளியின் மழலை மாதிரி மிழற்றலாய் இருக்கவேண்டும். கிளி கொஞ்சுகிறது என்பார்கள் அல்லவா?? அப்படி!

சின்னஞ்சிறு கிளி போன்ற அழகிய பெண்ணே, இன்னுமுமா நீ உறங்குகிறாய்? என்று கேட்கின்றனர் இந்தப் பெண்ணை அழைக்கவந்த தோழிகளும், ஆண்டாளும்.

சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்= உள்ளே அந்தப்பெண் என்ன செய்யறாளோ தெரியலை, ஒருவேளை சீக்கிரம் எழுந்து குளிக்கச் செல்லத்தயாராகிக்கொண்டிருக்கலாமோ? அல்லது ஏற்கெனவே கண்ணனின் நாமாக்களை நினைந்து நினைந்து பரவசம் அடைந்து கொண்டிருக்கும் வேளையில், இவர்கள் சப்தம் அவளுக்கு இடைஞ்சலாய் இருந்ததோ?? தெரியலை, உள்ளே இருந்து உடனே பதில் வருகிறது. கொஞ்சம் மெல்லத்தான் அழையுங்கள், பெண்களா? நான் வந்துகொண்டே இருக்கிறேன். ஒண்ணும் தூங்கவில்லை என்கிறாள். இதைச் சொல்லாமல் சொல்லி இருக்கிறாள்.

வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்= அவள் அப்படிச் சொல்ல வெளியே இருப்பவர்களுக்கு உள்ளே அவள் ஏதோ நொண்டிச்சாக்குச் சொல்கிறாள் எனத் தோன்ற, அடி, நீ ரொம்பக் கெட்டிக்காரிதான், உன்னைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? அப்படித்தான் சொல்லுவாய், வரேன் வரேன்னு, ஆனால் நீ இதுக்கு முன்னாடியெல்லாம் இப்படிச் சொல்லிவிட்டு என்ன செய்தாய்? எங்களுக்குத் தெரியாதா என்ன உன்னைப் பத்தி? என்று கேலி பேசுகிறார்கள்.

வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.= உள்ளே அவளுக்குக் கோபம் அதிகம் ஆக, ஆமாம், ஆமாம், நானே பொல்லாதவளாய் இருந்துட்டுப் போறேனே, நீங்களெல்லாம் நல்லவங்களாவே இருங்க என்று கூறுகிறாள்.

ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை= சரி, சரி, சீக்கிரமாய்க் கிளம்பு, உனக்குன்னு தனியாவா பாவை நோன்பு நூற்க முடியும், எல்லாரும் சேர்ந்து தானே செய்யணும்னு கூப்பிடுகிறார்கள்.

எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்= உள்ளே உள்ள பெண்ணோ விடாமல் எல்லாரும் வந்துட்டாங்களா என்று கேட்க, நீ முதல்லே வெளியே வா, வந்து நீயே எண்ணிப் பார்த்துக்கோ என்கிறார்கள். மேலும்,


வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க= வல்லானை கொன்றானை என்பதை இங்கே வலிய ஆனையாகிய குவலயாபீடத்தைக் கண்ணன் அடக்கியதையும் குறிக்கும். வல்லவன் ஆன கம்சனைக் கொன்றதையும் குறிக்கும். மேலும் அசுரர்களை அழிப்பதோடல்லாமல் நம்மிடையே இருக்கும் அசுரக் குணங்களையும் கண்ணன் நாமம் அடியோடு ஒழிக்கும் இந்த இடத்தில் அந்தப் பொருளே மிகவும் பொருந்தி வரும்.

வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்= வல்லவன் ஆன மாயக்கிருஷ்ணனைப் பாடி ஆடலாம் வா பெண்ணே.

இங்கே பகவானின் நினைவில் ஒரு கோபி அமிழ்ந்து இருப்பதையும், அவளை மற்றக் கோபிகள் வழிபாட்டுக்குக் கூப்பிடுவதைக் கூட இடைஞ்சலாக எண்ணுவதையும் மேல்பார்வைக்குக் கண்டாலும் உள்ளே இருந்த கோபியின் பணிவான பதிலில் அவள் கண்ணனின் அடியார்கள் அனைவரையும் தன் மனதுக்கு உகந்தவர்களாய்க் கண்டாள் என்பதும் புரியவருகிறது.

இப்படி பகவான் நாமத்தின் மகிமை பற்றி பட்டத்திரி கூறும்போது இவ்வுலகையே படைத்த விஷ்ணுவின் நாமங்களைச் சொல்லாமல் அவனிடம் ஈடுபாடு கொள்ளாமல் இருப்பதும் ஒரு வாழ்க்கையா என்கிறார்.

ஹே லோகா விஷ்ணுரேதத் புவநமஜநயத் தந்ந ஜாநீத யூயம்
யுஷ்மாகம் ஹ்யந்த்ரஸ்த்தம் கிமபி ததபரம் வித்யதே விஷ்ணுரூபம்
நீஹார ப்ரக்க்ய மாயா பரிவ்ருத மநஸோ மோஹிதா நாமரூபை:
ப்ராணப்ரீத்யைக த்ருப்தாஸ்சரத மகபரா ஹந்த நேச்சா முகுந்தே

இந்த உலகை சிருஷ்டித்தது அந்த மஹாவிஷ்ணு தான், மக்களே, இதை யாருமே புரிந்துகொள்ளவில்லையே; அவன் உருவம், ரூப செளந்தர்யம் இத்தகையது என எவராலும் விளக்கமுடியாமல் இருக்கிறது. அவன் உங்களுக்குள்ளேயே இருக்கிறான். ஜீவனாக இருக்கிறான். அவன் உங்கள் உள்ளே உறைவதைத் தெரிந்து கொள்ள முடியாமல் உங்கள் உள்ளம் மாயை என்ற மூடுபனியால் மூடப்பட்டுக்கிடக்கிறதே; வெறுமே உண்டு, உடுத்து உயிர்வாழ்வதிலேயே திருப்தி அடைந்து கொண்டிருக்கிறீர்களே, அந்த விஷ்ணுவின் நாமரூபங்களை மட்டுமே பார்த்து மயங்கி இருக்கிறீர்களே, அவன் உங்களுள்ளே இருப்பதை அறியாமல் இருக்கிறீர்களே; ஏ ஜனங்களே, உங்கள் ஆடம்பரமான முறையிலான வழிபாடுகளை நிறுத்திவிட்டு, வெறும் வயிற்றுக்காக மட்டுமல்லாமல் முகுந்தனிடம் முழு ஈடுபாடு கொண்டு பக்தி செய்யுங்கள்.








    

Monday, December 29, 2025

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள் 14

 திருப்பாவைப் பாடல்கள் 14 க்கான பட முடிவு  திருப்பாவைப் பாடல்கள் 14 க்கான பட முடிவு


திருப்பாவைப் பாடல்கள் 14 க்கான பட முடிவு   திருப்பாவைப் பாடல்கள் 14 க்கான பட முடிவு

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!


தாமரைப் பூக்கோலம் போடலாம். சங்கு, சக்கரம் இரண்டும் வரும்படியான கோலமும் போடலாம்.

தாமரைப்பூக் கோலம் க்கான பட முடிவு    தாமரைப்பூக் கோலம் க்கான பட முடிவு


தாமரைப்பூக் கோலம் க்கான பட முடிவு  தாமரைப்பூக் கோலம் க்கான பட முடிவு


தோழிப் பெண்ணை எழுப்பும் ஆண்டாள் அவள் முன்னர் சொன்ன வாக்கை நினைவூட்டுகிறாள்.  தானே சீக்கிரம் எழுந்து எல்லோரையும் அழைத்துச் செல்ல வருவதாய்க் கூறியவள் இப்போது அது குறித்த வெட்கமில்லாமல் தூங்குகிறாளே எனக் கூறும் ஆண்டாள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்னும் எண்ணம் இல்லாதவர்கள் அனைவரையும் இங்கே மறைமுகமாய்க் கடிகிறாள்.

இறைவன் எண்ணத்தில் அவன் நாமத்தையே எந்நேரமும் பேசுவேன், கூறுவேன் என்றெல்லாம் சொல்லி விட்டு இப்போது அந்த அறிகுறியே இல்லாமல் உலக வாழ்க்கையின் மாயா இன்பங்களில் மூழ்கி இருப்பவர்களை நினைத்து ஆண்டாள் வருந்துகிறாள்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்= ஆண்டாள் இப்போது இன்னொரு பெண்ணின் வீட்டுக்கு வந்திருக்கிறாள். இவள் இன்னும் எழுந்திருக்கவில்லை. இத்தனைக்கும், இவள் நாளைக்கு நானே வந்து உங்களை எல்லாம் முதல்லே எழுப்புவேனாக்கும்னு சொல்லி இருந்தாள். இப்போ அசையக் கூட இல்லை!

அடி, பெண்ணே, உங்க வீட்டுக் கொல்லைப்புறத்திலே, அந்த நாட்களில், இப்போவும் சில ஊர்ப்பக்கம் கொல்லையைப் புழக்கடைனு சொல்வதுண்டு. முன்பெல்லாம் கிணறு மட்டுமில்லாமல் வீட்டுப் பெண்கள் குளிக்கவென்று சின்னஞ்சிறு குளம் கூட இருக்குமென்று என் அப்பா சொல்லி இருக்கிறார். அந்தக் குளத்தில் தாமரை, அல்லிபோன்ற மலர்கள் காணப்படுமாம். இப்போவும் தஞ்சை மாவட்டத்தில் சில கிராமங்களில் பகலில் மலரும் தாமரைப்பூக்கள் நிரம்பிய குளங்களையும் இரவில் மலரும் அல்லிப்பூக்கள் நிரம்பிய அல்லிக்குளங்களையும் காண முடிகிறது. அத்தகையதொரு குளம் இந்தப் பெண்ணின் வீட்டுக் கொல்லையில் இருக்கிறது. ஆண்டாள் மெதுவா எட்டிப் பார்க்கிறாள். தாமரைப்பூக்கள் மலர்ந்திருக்கும் அந்தக் குளத்தின் அல்லிப்பூக்களோ வாடிவிட்டன. மீண்டும் இரவில் நிலவைக்கண்டாலேயே மலரும். ஆகையால் அந்தப் பெண்ணை எழுப்ப இதுதான் சரியான நேரம், எழுந்திரு பெண்ணே, உன் வீட்டுக்கொல்லைப்புறத்தில் இருக்கும் வாவியில் தாமரைப்பூக்கள் மலர்ந்து அல்லிப்பூக்கள் கூம்பிவிட்டனவே.

செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்= அது மட்டுமா, செங்கல்பொடியைப் போலச் சிவந்த காவிநிறமுடைய உடையை அணிந்த தவக்கோலம் பூண்ட சந்நியாசிகள், இங்கே அவர்களை வெண்பல் தவத்தவர் என்கிறாள் ஆண்டாள். வெற்றிலை போட்டால் பற்கள் வெண்மையாய் இராது. இவர்களோ சந்நியாசிகள். சந்நியாசிகள் வெற்றிலை போடக்கூடாது. அதனால் அவர்கள் பற்களும் வெண்மையாகவே இருக்கின்றன. அந்த சந்நியாசிகள் தங்கள் ஈசனின் கோயிலுக்குச் சென்று வழிபடச் செல்கிறார்கள். அந்தக் கோயில்களிலிருந்தெல்லாம் வழிபாட்டுக்கான சங்கநாதம் ஒலிக்கத் தொடங்கிவிட்டது.

எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்= அடியே, எங்களை முன்னாடி வந்து எழுப்புவேன்னெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தாயே, ஏ நங்கையே , உனக்கு வெட்கமாய் இல்லையா? நீ சொன்னதெல்லாம் வெறும் பேச்சுத்தானா?? அதற்கு அர்த்தம் இல்லையா??


சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!= சூரிய, சந்திரர்களைப் போல் விளங்கும், சங்கையும் சக்கரத்தையும் தன்னிரு திருக்கைகளில் தாங்கிக்கொண்டிருக்கும் தாமரை போன்ற விழிகளை உடைய அந்தக் கண்ணனை வந்து பாடு வா, பெண்ணே. தன் அழகான தாமரைக்கண்களால் நம்மைப் பார்த்து அருள் செய்வதோடு நம்மையும் அவனுக்கு அடிமையாக்கிக்கொள்கிறான் அந்தப் பரம்பொருள். அப்படி அவனுக்கு அடிமையாவோம் வா, அவன் புகழைப்பாடி ஏத்துவோம் என்கிறாள் ஆண்டாள்.

இப்படிப் பரம்பொருளுக்கே அடிமையாய் இருப்பதைப் பற்றிய பக்தி யோகத்துக்கு பட்டத்திரி கூறுவது:

த்வத் பாவோ யாவதேஷு ஸ்புரதி ந விசதம் தாவதேவம் ஹ்யுபாஸ்திம்
குர்வந்நைகாத்ம்ய போதே ஜடிதி விகஸதி த்வந்மயோஹம் சரேயம்
த்வத்தர்மஸ்யாஸ்ய தாவத் கிமபி ந பகவந் ப்ரஸதுதஸ்ய ப்ரணாஸ:
டஸ்மாத் ஸர்வாத்மநைவ ப்ரதிஸ மம விபோ பக்திமார்க்கம் மநோஜ்ஞம்

இவ்வுலகிலுள்ள புழு, பூச்சிகளில் இருந்து மிக உயர்ந்த நிலையிலுள்ள மனிதர் வரை அனைவருமே , உயிரற்ற மரம், மலை போன்ற ஜடப் பொருட்களும் கூட பரமாத்மாவின் அம்சம் என்ற நினைப்பே வரவேண்டும். அவ்வாறு நினைக்க எத்தனை நாட்கள் ஆனாலும் அதுவரை நான் தங்களை ஆராதித்துக்கொண்டே இருப்பேன். எந்த ஆத்மாவும் ஒன்றே என்ற உறுதியான அசைக்கமுடியாத மெய்யறிவு எனக்குக் கைகூடவேண்டும். அந்த நிலையில், "நீங்களே நான், நானே நீங்கள்" என்னும் வேறுபாடற்ற இரண்டும் ஒன்றே என்ற பாவம் பெற்று நான் உலவ வேண்டும். ஆஹா, இவ்விதம் என்னுடைய பக்தியானது மாறுமானால் அதற்கு அழிவேது! ஹே ப்ரபு, அத்தகையதொரு பக்தி மார்க்கத்தை நீ எனக்குத் தந்தருளுவாய்!
************************************************