கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பறந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்! கோது கலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்!
இப்போ வானமோ வெளுத்துவிட்டது. எருமைமாடுகளும் கறவை முடிந்து மேயக்கிளம்பிவிட்டன. நீ இன்னுமா எழுந்திருக்கவில்லை என்கிறாள் ஆண்டாள்.
அவள் அழைக்கும் பெண்ணோ கண்ணன் மனதுக்கு நெருங்கியவளாய் இருக்கணும். அதனால் அவளைக் கோதூகலமுடைய பாவாய் என அழைக்கிறாள்.

கோதூகலமுடைய பாவாய், கீழ்வானம் வெளுத்து எருமைகள் எல்லாம் புல் மேயக் கிளம்பிவிட்டனவே. நீ என்ன இன்னும் எழுந்திருக்கவே இல்லையா? இங்கே வானம் என்பது ஆகாயத்தைக் குறித்தாலும் நம் உள்ளத்தையும் குறித்துச் சொல்லப் பட்டிருக்கலாம். நம் உள்ளம் தூய்மையாக வெளுத்து எந்தவிதமான தோஷங்களும் இல்லாமல் நிர்மலமாய் இருத்தலையே இங்கே சொல்லி இருக்கவேண்டும். அதேபோல் எருமையும் இங்கே நம் அறியாமையைக் குறிப்பதாய் இருக்கவேண்டும். அறியாமையில் மூழ்கி மூழ்கி நாம் ஆங்காங்கே தடங்கித் தடங்கி மெல்ல மெல்ல இறைவன் திருவடியை நோக்கிப் பயணிக்கிறோம். எருமை மாடுகள் மேயப் போனாலும் மேய்ச்சல் நிலத்துக்கு நேராய்ப் போவதில்லை அல்லவா? அதே போல்! வழியில் அதுபாட்டுக்குப் படுத்துக்கும், நிற்கும், தண்ணீரைக் கண்டால் வாலால் அடித்துச் சேற்றைக் குழப்பும். இப்படியே நாமும் அந்த எருமை மாட்டைப் போலவே வாழ்க்கையின் அனைத்து ரசங்களிலும் ஆழ்ந்து போய் மிகவும் தாமதமாகவே இறைவனைத் தேட ஆரம்பிக்கிறோம்.
(இது எல்லாமே என்னையே சுட்டுவது போல் இருக்கே! )
மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை= ஆனால் இங்கே வந்திருப்பதோ பரமனுக்குப் ப்ரீதியான பிள்ளைகள் அன்றோ, அவன் மனதுக்கு அண்மையில் இருப்பவர்கள் அன்றோ. இவர்கள் வெகுவிரைவில் அவர்கள் போகவேண்டிய இடத்துக்குச் சென்றுவிடுவார்களே, அதுவரையிலும் அவர்களைப் போகாமல் உனக்காகத் தடுத்து நிறுத்தி உள்ளேன்.
கூவுவான் வந்து நின்றோம்!
பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம்சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோரெம்பாவாய்! =
பெண்ணே, நீ கண்ணனுக்கு மிகவும் பிடித்தவள் அன்றோ? நாங்கள் முன்னாலேயே இது இது செய்யவேண்டும் என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டோம். இப்போது உன்னை இங்கேயே விட்டு விட்டுச் சென்றால் கண்ணன் நீ வந்திருக்கிறாயா எனக் கேட்டால்?? என்ன சொல்வோம் பெண்ணே! கண்ணனைப் பாடி அவன் புகழைப் பாடி வாழ்த்துவோம். கண்ணன் கம்சன் சபையில் மல்லர்களை வென்றான், கேசி என்ற அசுரனை வென்றான். பகாசுரன் என்னும் கொக்கசுரனை வென்றான். இப்படி அனைத்து அரக்கர்களையும் வென்ற தேவாதிதேவனாகிய கண்ணனின் திருவடியை நாம் போற்றிப் பாடினால் , "ஆஹா, நாம் நம் அடியார்களைத் தேடிப்போகவேண்டியதிருக்க அவர்களே இங்கு வந்துவிட்டார்களா?" என்று கண்ணன் நமக்கு அவன் அருளை மழையாகப் பொழிவான்.
இதையே நாராயண பட்டத்திரி கண்ணனின் மகிமைகளை எடுத்துச் சொல்லும் விதமாய்க் கூறுகிறார். பரப்ரம்மம் என்பது எல்லையைக் கடந்து நிலை பெற்றிருப்பது என்கிறார். மேலே ஆண்டாள் அவன் மனதுக்குப் ப்ரீதியானவர்களை எவ்விதம் விட்டுச் செல்வது என அனைவரையும் கூட வருமாறு அழைக்கிறாள். பட்டத்திரியோ நிறைந்திருக்கும் இந்தப் பரம்பொருள் சகலமாகவும் இருக்கிறானே என ஆச்சரியப் படுகிறார்.
"நிஷ்கம்பே நித்யபூர்ணே நிரவதி பரமாநந்த பீயூஷரூபே
நிர்லீநாநேக முக்தாவலி ஸுபகதமே நிர்மல ப்ரஹ்மஸிந்தெள
கல்லோலோல்லாஸ துல்யம் கலு விமலதரம் ஸத்வமாஹூஸ் ததாத்மா
கஸ்மாந்தோ நிஷ்கலஸ்த்வம் ஸகல இதி வசஸ்த்வத் கலாஸ்வேவ பூமந்
தெளிந்த கடல் போன்ற ஆழமான எங்கேயும் நிறைந்திருக்கும் எல்லைகளே இல்லாத பரப்ரும்மம் ஆனது பரமாநந்தம் என்னும் அமுதக் கடலாகும். அசைவற்றிருக்கும் இது ஒரு சமயம் அசையவும் செய்யும். ஆழ்கடலில் அடியில் காணப்படும் நல்முத்தூக்களைப் போல இங்கே பக்தர்கள் இந்த அமுதக் கடலில் மூழ்கித் தங்களை மறந்து பகவத் பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கிறார்கள். எல்லா நலன்களையும் தன்னில் மூழ்கிய பக்தர்களுக்குத் தரும் இந்தக் கடலில் பகவானுடைய திவ்ய மங்கள விக்ரஹம் ஓர் பேரலையைப் போல் தோன்றுகிறது. பக்தர்கள் அதைக் கண்டு பரவசம் அடைகின்றனர்.
மார்கழி எட்டாம் நாள் வாழ்த்துகள்.
ReplyDeleteThank You.
Deleteஇன்றைய பாடல் சற்றே நீளம் போல.. அர்த்தம் புரிந்து கொள்வதுக் கொஞ்சம் சிரமமாக...
ReplyDeleteஅப்படியா?
Deleteநாராயண பட்டத்திரி பற்றி பதிவுதோறும் நீங்கள் எழுதி இருப்பதைப் படித்துக் கொண்டிருந்த நான் இன்று சென்று நாராயணீயம் டவுன்லோட் செய்திருக்கிறேன். படிப்பேனோ, அப்படியே வைத்திருப்பேனோ... நாராயணனுக்குதான் வெளிச்சம்!
ReplyDeleteசேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் குரலில் முன்னர் கேசட்டில் நாராயணீயம் கேட்ட ஞாபகம். இப்போது யு டியூபில் கிடைக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
குழந்தை பிறக்க நாராயணீயம் படிக்கச் சொல்லுவாங்க. அதோடு பிள்ளைக் குழந்தை வேண்டுமென்றாலும் கர்ப்பிணிப் பெண்கள் நாராயணீயம் படிக்கலாம். இதுக்கு எந்தவிதமான ஆசாரக்கட்டுப்பாடுகள் எல்லாம் இல்லை. சாப்பிடும் முன்னர் படிக்க முடியாவிட்டாலும் மத்தியானங்களில் படிக்கலாம். ஆசுவாசமாகப் படிக்கலாம். தடை ஏதும் இல்லை. நான் சேங்காலிபுரத்தின் நாராயணீயச் சொற்பொழிவை நேரிலேயே கேட்டிருக்கேன், பதின்ம வயதில். மதுரைக்குச் சொற்பொழிவாற்ற வந்திருந்தார். சேதுபதி பள்ளியில் தான் அவர் போன்றவர்களை எல்லாம் தங்க வைப்பார்கள். பட்டத்திரிக்கு வாத நோய் வந்தாற்போல் அவருக்கும் தோல் வியாதி இருந்தது. நாராயணீயம் படிச்சுத் தான் சரியானது என்பார்கள். அவரால் சொல்லப்பட்டதே குருவாயூரப்ப பஞ்சரத்ன ஸ்லோகம். என்னிடம் உள்ள ஸ்லோக புத்தகத்தில் இருக்குனு நினைவு. :( ஏனெனில் புத்தகம் பார்த்து ஸ்லோகம் சொல்லுவது என்பது இப்போல்லாம் விட்டுப் போச்சு.
Deleteஅப்போல்லாம் கடிகாரம் எங்க? இப்படித்தான் விடிதலை அறிந்துகொள்வார்கள் வானம் வெளுத்தால் வானத்தின் நிறத்தை வைத்தே...காற்றின் திசை என்று இயற்கை கடிகாரங்கள்.
ReplyDeleteபாசுரம் விளக்கம் சூப்பர்...கூடவே பட்டாத்திரியின் வியப்பும்! எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள்தானே!
கீதா
என்னோட பாட்டி (அம்மாவின் அம்மா) வீட்டுக்குள் வரும் வெயிலை வைத்தே நேரத்தைச் சரியாகக் கணக்கிடுவாங்க.
Deleteஎன் தங்கையும் நானும் இந்தப் பாசுரத்திலும் இன்னும் சில பாசுரங்களில் இருந்தும்...
ReplyDeleteகூடியிருந்து குளிர்ந்தேல்....எந்த ஒரு நிகழ்விற்கும் எல்லோரும் கூடிச் செய்யும் போது அதில் வேலைப் பளுவோ, சிரரமமோ தெரியாமல் செய்வதற்கு குழு எல்லோரையும் திரட்டிச் செய்வது என்பது எவ்வளவு முக்கியம் அது போல இறைவனை வணங்களும் எல்லோரையும் திரட்டிச் செல்வதாக வரும் பாடல்களில் "தலைமைப் பண்பு" லீடர்ஷிப் க்வாலிட்டி எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்கிறாள் ஆண்டாள் என்றும் இப்போதைய வாழ்க்கைக்கும் வேலைக்கும் பொருந்தும் என்று.
கீதா
மதுரையில் இருந்தவரை நான் திருமதி ராஜம்மாள் சுந்தரராஜன் அவர்களால் நடத்தப்பட்ட திருப்பாவை வகுப்புக்குச் சென்று கொண்டிருந்தேன். அவங்களை நாங்க அத்தையம்மா என்றே கூப்பிடுவோம். வாரம் ஒரு நாள் அல்லது மாதம் இரு முறை விடிகாலை வேளையில் பஜனைக்கு அழைத்துச் செல்வார்கள். கட்டாயமாக ஒரு நாள் ஏதேனும் பக்திப்படம் போடுவாங்க. இலவசம் தான். அநேகமாக சிம்மக்கல் தாண்டி வைகைப்படித்துறைக்குச் செல்லும் வழியில் இருந்த கல்பனா தியேட்டரில் தான் படம் போடுவாங்க. அங்கே தான் பழைய கீழ்ப்பாலம் ஆரம்பிக்கும். அதில் இரு பக்கமும் பால்காரர்கள். யாதவர்கள். மதுரையில் கோனார் என்பார்கள். அவங்க தான் அங்கே அதிகம் இருப்பாங்க. இந்தப் பாதையும் அங்கே இருந்த யாதவ குலம் பற்றியும் சிலப்பதிகாரத்தில் வந்திருப்பதாகவும் சொல்லுவாங்க. கண்ணகியும் கோவலனும் சோழ நாட்டில் பூம்புகாரிலிருந்து வந்த பாதையில் இது இருப்பதாகச் சொல்லுவார்கள். எங்கோ ஆரம்பிச்சு எங்கோ போயிட்டேன். :)
Deleteமேலதிகத் தகவல் ராஜம்மாள் சுந்தரராஜன் நம்ம வல்லிக்கு (ரேவதி சிம்ஹன்) சித்தியோ, அத்தையோ உறவு முறை.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை இன்றைய மார்கழி எட்டாம் நாளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்போதுதான் மார்கழி ஒன்றாம் நாளை கண்டேன். அதற்குள் நேரங்கள் நிமிடங்களாக பறந்து விட்டது.
இன்றைய பாசுரப் பாடல் அருமை. அதன் விளக்கமும் அருமை. எருமையை நம் மனதின் அறியாமையுடன் ஒப்பிட்டது நன்று. அதுதானே என் மனதிலும் நிறைந்து வழிந்திருக்கிறது என இப்(எப்) போதும், நினைக்கிறேன். அறியாமை இருளை நீக்கி ஒளி பொருந்திய பரந்தாமன குடி வைக்க இன்னமும், எத்தனைப் பிறவியோ என மனம் வேதனையுறுகிறது.
நாராயண பட்டத்திரியின் ஸ்லோகங்களும் விளக்கமும் வழக்கம் போல அருமை. மார்கழியில் பக்தி பரவசத்தில் திளைக்க வைப்பதற்கு மிக்க நன்றி. தொடர்ந்து வருகிறேன் சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.