சுமார் 3 வருடங்களுக்குப் பிறகு இன்னிக்கு மருமகளின் தொடர்ந்த வற்புறுத்தலின் காரணமாய் ஒரு தமிழ்ப்படம் பார்த்தேன் 3BHK படத்தின் பெயர். சரத்குமார், தேவயானி நடிச்சது. கூடவே தெரிந்த முகம் சித்தார்த் மட்டும் தான். மற்றப் பெண்கள் யாரெனத் தெரியலை. மிகையில்லாத மேக்கப், நடுத்தர வர்க்கத்தை எடுத்துக்காட்டும் வீடு, குழந்தைகளின் பழக்கங்கள், அண்ணன், தங்கை செல்லச் சண்டைகள், அழகான காதலை மட்டுமே வெளிப்படுத்தும் காதல் காட்சிகள் அங்கொன்றும், இங்கொன்றுமாய். இயல்பான வசனங்கள் மிகையற்ற நடிப்பு.ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு இரண்டுமே தரம். அதிலும் ஒலி குறைச்சு வைச்சுக் கேட்டாலும் வசனங்கள் புரிந்தன. யோகிபாபுவை ஓர் அதிர்ஷ்டமான சின்னமாகப் பார்க்கிறாங்க போல. தேவை;யில்லாத அவரோட தலையீடு. என்றாலும் அதிகம் வந்து போரடிக்கலை. கடைசியில் தான் விரும்பிய பாடத்தைப் படிச்சு வேலையும் தேடிக் கொண்டு எடுத்த காரியத்தில் வெற்றியும் அடையும் சித்தார்த். தந்தை, மகன் பாசத்தை இயல்பான நடிப்பால் சரத்குமாரும், சித்தார்த்தும் வெளிப்படுத்தி இருக்காங்க. வீட்டிலுள்ளவர்களுடைய மனக்குறையைக் களைந்து எப்போதும் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பெண்ணாக வரும் ஆர்த்தி கதாபாத்திரத்தில் நடிக்கும் பெண்,சித்தார்த்தின் வகுப்புத் தோழியும் காதலியும் ஆன ஐஷுவாக வரும் பெண் எல்லோருமே கச்சிதம்.
தேவயானிக்கு அதிகம் வேலை இல்லை என்றாலும் பணக்கார வீட்டுப் பென்ணோடு மகனின் திருமணம் நின்று விட்டதுக்காக சரத்குமார் மகனை ஒதுக்கி வைக்கும் காட்சியில் தன் தாய் மனதின் மகன் அவனுக்குப் பிடித்த பெண்ணைத் தான் திருமணம் செய்துக்கணும் என்னும் எண்ணத்தை வெளிப்படையாகச் சொல்வதோடு சரத்குமாரின் கோபம் அர்த்தமற்றது, பணக்காரப் பெண்ணோடு வரும் வீடு கிடைக்காமல் போனதால் வந்த கோபம் என்று சொல்கையில் அவரின் இயல்பான நடிப்பு கை கொடுக்கிறது. மொத்தத்தில் ஆரவாரமில்லாத அமைதியான கருத்துள்ள குடும்பப் படம். குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கக் கூடியதொரு படம். தமிழில் இப்படி எல்லாமும் படம் எடுப்பாங்க என்பதை எனக்குப் புரிய வைத்த படம். நடுத்தர மக்களின் கனவான சொந்த வீடு, அதிலும் 3BHK கடைசியில் எப்படிக் கிடைக்கிறது என்பதைச் சொல்லும் படம். தியேட்டர்களில் வருதானு வந்திருக்கானு தெரியாது. அமேசானில் பார்த்தேனோனு நினைக்கிறேன். அமேசான் கணக்கு இருந்தால் முடிஞ்சால் பாருங்க.
No comments:
Post a Comment