எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, August 16, 2025

நான் வந்துட்டேன். வந்துட்டேன்னு சொல்லு!

 ஸ்ரீரங்கத்திலே இருந்து இங்கே வந்தாச்சு. மனமே சரியில்லை. ஆனால் வேறே வழி இல்லாமல் மனசைச் சமாதானம் செய்து கொண்டு தான் கிளம்பி வந்திருக்கேன். முன்னே எல்லாம் ரங்க்ஸ் கூட வருவார். இங்கே சரியில்லை எனில் உடனே பயணச்சீட்டைத் தேதி மாற்றிக் கொடுக்கச் சொல்லிக் கிளம்புவோம். நம்ம இடம் தான் நமக்கு சரி. ஆனால் இப்போ இப்படிச் சொல்ல முடியலை. அதுக்காக எவ்வளவோ மனச்சமாதானங்கள், செய்து கொண்டிருக்க வேண்டி இருக்கு. சில விஷயங்களை வெளியே சொல்லிவிட முடியாது. இருந்து பார்த்தால் தான் புரியும். ராமரை அங்கே தன்னந்தனியாக விட்டுட்டு வந்திருக்கேன். பாவம், சாப்பாட்டுக்கு என்ன செய்வாரோ? இன்னிக்குக் கோகுலாஷ்டமி வேறே. அங்கே இருந்தால் பால், தயிர், பழம் மட்டுமாவது கிருஷ்ணனுக்கு வைச்சு இரண்டு பூக்களைப் போட்டுச் செய்யலாம். பண்டிகை என்றெல்லாம் கொண்டாடப் போவது இல்லை. ஆனால் தினசரி நிவேதனம் உண்டே. அது மாதிரிச் செய்யலாம். இங்கே சரியாக வராது. இங்கே வீடு எல்லாம் பெரிதாக உள்ளது. வில்லா வகையைச் சேர்ந்த வீடு. ஒரு சின்ன டவுன்ஷிப் மாதிரி உள்ளது. அக்கம்பக்கம் இருப்பது வாசலில் நிற்கும் கார்களில் இருந்தும் குழந்தைகளின் விளையாட்டுச் சாமான்களில் இருந்தும் தெரிந்து கொள்ள முடியும். ஆனால் மனிதர்களைப் பார்க்கவே முடியவில்லை. இதை விட அம்பேரிக்க வாழ்க்கை இன்னமும் எளிதானதும், க்ஷ்டமில்லாததுமாக இருக்கும். இங்கேயே இருக்கணும் என்றால் என்னால் முடியுமா? தெரியலை. போகப் போகப் பார்க்கணும்.

நம்ம ஊரில் ஆட்டோக்களில் ஏற முடியாதது போல் இங்கே கார்களில் ஏற முடியவில்லை. விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்குப் போக டாக்சியில் ஏற முடியலை. எப்படியோ கஷ்டப்பட்டுப் பின்னிருக்கையில்  சிரமப்பட்டு ஏறினேன். படுக்கையில் படுத்துக் கொள்ள ஸ்டூல் வைச்சு ஏற வேண்டி இருந்தது. அப்புறமாப் பையரிடம் சொல்லி அவசரமாக ஆளைக் கூப்பிட்டுக் கட்டிலை அரை அடி போல் கீழிறக்கி மெத்தையைப் போட்டதும் கொஞ்சம் பரவாயில்லை. குளியலறை ஒரே கீக்கிடம். ஒரே பக்கம் குளிக்கும் முற்றம் , கழிவறை, தரையோ ஒரே வழுக்கல். காலை வைத்தால் சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

இன்னும் வரும் விரிவாக

21 comments:

  1. தோகா சென்று சேர்ந்தது அறிந்தேன். மகிழ்ச்சி. எல்லாம் நல்லதாகவே நடக்கும். நம்பிக்கையுடன் இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. என்னடா குறைகளாகவே சொல்றாளேனு தோணுதா? எப்போவும் போல் வந்தால் கொஞ்ச நாட்கள் தானேனு தோணும். இது அப்படி இல்லையல்லவா? :) மற்றபடி நேர மாற்றம் எல்லாம் இரண்டூ மணி நேரத்துக்குள் தான் என்பதால் பெரிசாக ஒண்ணும் தெரியலை.

      Delete
  2. தோஹா சென்று சேர்ந்தது மகிழ்ச்சி. ஏர்போர்ட்ல அந்த பெரிய பொம்மையைப் பார்த்தீங்களா?

    உண்மையைச் சொன்னால் தோஹா வாழ்க்கை எளிதாக இருக்கும். நீங்க வில்லா டைப் வீடு என்று சொல்வதால் பக்கத்துல கடைகள்லாம் இருக்கா என்று தெரியவில்லை. கல்ஃப் தேசங்கள் மிகவும் பாதுகாப்பானவை, குறிப்பாக பெண்களுக்கு. நிறையபேர் உதவுவாங்க. என்ன ஒண்ணு.. அக்டோபர் மாதம்தான் காலநிலை நல்லா இருக்கும். மார்ச் வந்துவிட்டால் வெயில் வாட்ட ஆரம்பித்துவிடும். முதல்ல anti skid பிளாஸ்டிக் குளியலறைக்குள் வைத்துக்கொள்ளுங்கள் (விலை குறைவு, பாதுகாப்பானது). வழுக்குவதுமாத்திரம்தான் பெரிய பிரச்சனை (ஹால்லயும்). அதை மாத்திரம் ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வீடு முழுவதும் கார்ப்பெட் போட்டிருந்தேன். பிறகு அதில் அழுக்கு நிறைய சேர்கிறது என்று பிறகு எடுத்துவிட்டேன்.

    உடம்பு சரியில்லை என்றால் டாக்டர் மற்றும் மருத்துவமனை வசதிகள் கல்ஃபில் நன்றாக இருக்கும். அம்பேரிக்காவில் அப்படிக் கிடையாது.

    எப்போதுமே நம்ம வீடு, நாம் இருக்கும் ஊர் போல வராது. ஆனால் கல்ஃப் ஓரளவு பரவாயில்லை. நமக்குத் தேவையான நம் உணவுப்பொருட்கள் எல்லாமே சட் சட் என்று கிடைத்துவிடும்.

    ReplyDelete
    Replies
    1. நெல்லை, நான் ஏர்போர்ட்டில் காலையே வைக்கலையே! :) முழுக்க முழுக்கச் சிறப்ப்புக் கவனிப்பில் இருந்ததால் வீல் சேரிலேயே போயிட்டேன். இமிக்ரேஷன் 5 நிமிடம், கஸ்டம்ஸை எட்டிக் கூடப் பார்க்கலை. பிள்ளை, மருமகள்,குஞ்சுலு ஆகியோருக்கு முன்னாலே நான் வெளியே வந்துட்டேன். ஆகவே நீங்க சொன்ன பொம்மையைப் பின்னர் தான் நினைவு வைச்சுண்டு பார்க்கணும்.

      Delete
  3. இண்டர்னெட் இருக்கும். கரண்ட் போகாது. உதவியாளர்கள் சல்லிசாகக் கிடைப்பார்கள். கிடைக்காது என்று சொல்லும் பொருள் ஒன்றுகூட இருக்காது. தேடினா அகத்தி இலைகூட கிடைக்கும்.

    நம்ம ஊர் போல சுத்திவர சைவர்கள்தாம் இருக்கணும், அசைவ உணவு வாசனையே வரக்கூடாது என்று இருக்க முடியாது.

    சரவண பவன் போன்ற நம்ம ஊர் சாப்பாடு, விலை அதிகமில்லாமல் கிடைக்கும். எதற்கும் குறைவு கிடையாது.

    நல்லதே நடக்கும் கீதா சாம்பசிவம் மேடம்.

    ReplyDelete
    Replies
    1. நெட் எல்லாம் இருக்குத் தான். ஆனால் என்னோட பிஎஸ் என் எல் லாக் ஆகிவிட்டதால் பிரச்னை. எந்தவிதமான மெசேஜும் வருவதில்லை. வங்கிக்கணக்குகளையோ என்னோட பென்ஷன் கணக்கையோ பார்க்க முடியாது. இன்னும் ஓடிபி வரும் எந்தக் கணக்கையும் பர்க்க முடியாது. ஸ்ரீராமின் அத்தை மூலமாக அன்லாக் ச்செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கேன். பார்க்கலாம். இன்டர்நேஷனல் ரோமிங் வாங்கலாம் எனில் பையர் அது அநாவசியம், அதிகச் செலவு என்கிறார்.

      Delete
  4. நெல்லை சொல்லியிருப்பது போல அமெரிக்க வாழ்க்கையை விட, கல்ஃப் வாழ்க்கை சுலபமானதுதான். பயணமும் அதிக நேரம் கிடையாது. இருந்தாலும் நம்ம ஊரை விட்டு பிரிந்து இருப்பது கஷ்டம்தான். எனக்கும் கூட இங்கே(கனடா) பெண் வீடுதான், நன்றாகத்தான் பார்த்துக் கொள்கிறார்கள், இருந்தாலும் ஏதோ ஒரு பிரிவாற்றாமை இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்ய முடியும்? O God Please give the courage to change what I can change, and give me the strength to accept gracefully what I cannot change, Also give the the wisdom to understand the difference between these two! என்று பிரார்த்திப்பதை தவிர. குட்டி குஞ்சுலுவோடு சேர்ந்து இருக்கலாமே.

    ReplyDelete
    Replies
    1. O God......these two! - மனதைப் பாதிக்கும் வரிகள். Very difficult it was for me to accept what I couldn't change some five six years back

      Delete
    2. பானுமதி, நம்மை எல்லாம் ரொம்பவே ஸ்ட்ராங்கான பெண்களாகச் சொல்லிச் சொல்லி இப்போது சில விஷயங்களைச் சொல்லவே கஷ்டமா இருக்கு. :} மனதில் ஒரு பொருந்தாமை அது இடமும் சரி, மனசும் சரி, ஒட்டாமல் இருக்கிறது. அதை என்ன செய்வது? அங்கே எல்லாம் நம் சௌகரியம். இங்கே அப்படி இல்லை. மருமகள் தான் சமைத்துப் போடுகிறாள். நான் என் வேலைகளை மட்டுமே பார்த்துக்கறே. என்றாலும் ஏதோ ஒரு சு:ணக்கம்.

      Delete
  5. சீக்கிரமே அந்தச் சூழ்நிலையோடு ஒத்துப்போய் விடுவீர்கள்.   அம்பத்தூரிலிருந்து ஸ்ரீரங்கம் மாறி வந்தபோது இருந்த மாதிரி என்று மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.   மாற்றம் ஒன்றே மாறாதது அல்லவா?  நெல்லை சொல்லி இருக்கும் குறிப்புகள் பயனுள்ளவை.

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! அம்பத்தூரில் இருந்து ஸ்ரீரங்கம் வந்தப்போ ரொம்ப சந்தோஷமாகவே வந்தோம். என்ன, சொந்த வீட்டை விட்டுட்டும் மரம், செடி, கொடிகளை விட்டும் வரோமேனு தான் இருந்தது. அதைப் போலவே இந்தியாவுக்குள்ளே எங்கே இருந்திருந்தாலும் சமாளிச்சுடலாம். இது அப்படி இல்லை அல்லவா?

      Delete
  6. பாத்ரூமில் என்றில்லாமல், எங்கு நடந்தாலுமே எச்சரிக்கையாக நிதானமாக கால் வைக்கவும்.  உற்சாகமாக இருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தரையே வழுக்கல் தான். மாடிக்குப் போக சுமார் இருபத்து நான்கு படிகள். மாடியிலேயே வேணா இருந்துக்கோங்க என்கிறார்கள். சாப்பாடெல்லாம் மேலே கொண்டு வந்து தரேன் என்றார்கள். நான் ஒத்துக்கலை. நுதலில் ஏறுவதே எனக்குச் சிரமம். கீழேயே இருந்துக்கறேன்னு சொல்லிட்டேன்.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    நலமாக இருக்கிறீர்களா? உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள். நேற்றைக்கு முந்தின நாள் எபியில் தங்களது தோஹா பயணம் பற்றி தெரிந்து கொண்டேன். அன்றுதான் உங்களைக் குறித்து எபியில் கேட்க நினைத்திருந்தேன். அப்போது உங்களின் பிரயாணம் பற்றி தெரிந்தது. இப்போதைக்கு தங்களது மன ஆறுதலுக்காக தங்கள் மகனுடன் இருக்கும் உங்களது இந்த முடிவு சரிதான்.

    அங்கும் உங்களுக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் தொடர்வது வருத்தமாக உள்ளது. எப்போதும் ஜாக்கிரதையாக இருங்கள்.
    உங்கள் மகனின், மற்றும் உங்கள் பேத்தியின் அன்பு, அக்கறை உங்களுக்கு ஒரு புது பலத்தை தரும். உங்கள் வீட்டில் அனைவரையும் விசாரித்தாக கூறுங்கள்.

    இறைவனின் (உங்கள் பட்டாபிஷேக ராமரின்) துணையால் அனைத்தும் நல்லதாகவே நடக்கட்டும். நானும் உங்களுக்காக பிரார்த்தித்துக் கொள்கிறேன். எங்களை மறவாமல் நீங்கள் அங்கு சென்றதும் தகவல் தந்து பதிவிட்டிருப்பது மிக்க மகிழ்வை தருகிறது. இது போல் அடிக்கடி பல நிறைய பதிவுகளை ஒரு மன மாறுதலுக்காக தாருங்கள். உங்களுக்கும் மனதில் ஒரு உற்சாகம் வரும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, பிரச்னைனு இல்லை. அவர் கூட இருந்திருந்தால் அவருக்குச் செய்வதில் மனமும் பொழுதும் கழியும். அதில்லாமல் தன்னந்தனியாக வந்திருக்கேனே, அதான் ரொம்ப உறுத்தல். மனசெல்லாம் இன்னமும் ஸ்ரீரங்கத்திலேயே இருக்கு. இந்திய நேரத்தை என் கணினியில் கூட மாற்றி வைச்சுக்கலை. நேர வித்தியாசம் அதிகம் இல்லை என்றாலும் இந்தியாவில் இப்போ காஃபி நேரம், ராத்திரி நேரம் என நினைச்சுப்பேன். உங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு மிக்க நன்றி கமலா.

      Delete
  8. தோஹா சென்று சேர்ந்தது மகிழ்ச்சி கீதாக்கா.

    நல்லதே நடக்கும் கீதாக்கா. புது இடத்தில் ப்ளஸ்களை நினைத்துக் கொள்ளுங்கள்.

    அக்கா பாத்ரூமுக்குள் வழுக்காமல் இருக்க ஒரு mat கிடைக்குதே சல்லிஸாகக் கிடைக்கிறது. அதைப் போட்டுக் கொள்ளலாம். எல்லாருக்குமே நல்லது, வயசானவங்க என்று இல்லை, அவர்களுக்கும் நல்லது. யார் விழுந்தாலும் கஷ்டம்தானே.

    கூடிய சிக்கிரம் பழகி நன்றாக ஆகிவிடும் கீதாக்கா.

    கீதா

    ReplyDelete
    Replies
    1. பாத்ரூம் மேட் போட்டிருக்கு தி/கீதா!, ரொம்பச் சின்ன பாத்ரூம் என்பதால் சீக்கிரமா நனைஞ்சுடறது. தினம் மாத்த வேண்டி இருக்கு. சில விஷயங்கள் எத்தனை காலம் ஆனாலும் மனதில் ஒட்டாது. இங்கே இருப்பதும் அந்த வகை தான் தி/கீதா! நம்ம ரங்க்ஸ் ஒவ்வொரு முறை அம்பேரிக்க வரும்போதும் இப்படித்தான் ஒட்டவே மாட்டார். இப்போத் தான் அந்த நிலை எனக்கும் புரியுது.

      Delete
  9. அப்புறம் ஒன்று சொல்ல மறந்துவிட்டேன் கீதா சாம்பசிவம் மேடம்.

    புதிய பதிவுகள் எழுதுங்க. என்ன எழுதுவீங்கன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் முன்கூட்டியே நானே சொல்லிவிடுகிறேன்.

    முன்ன, 'எங்க அம்பத்தூர் வீட்டுல வேப்பமரம்....' இனி, 'எங்க ஸ்ரீரங்கம் வீட்டுல.. தடுக்கி விழுந்தால் காவிரி ஆற்றில்தான் விழணும். அந்தப் பக்கம் சாயவேண்டாம் என்று நினைத்து எதிர்ப்பக்கம் சாய்ந்தால், பெரிய கோபுரம் நம் கண் முன்னே தெரியும்...' என்று எழுத ஆரம்பிங்க. வலைத்தளத்துக்கு வந்தால் கொஞ்சம் கஷ்டங்கள்லாம் மறக்கும்.

    ReplyDelete
  10. நெல்லை, ஸ்ரீரங்கம் காவிரியிலும் சரி, கொள்ளிடத்திலும் சரி, தண்ணீர் கரை புரண்டு ஓடிட்டு இருக்கு. அதை எல்லாம் விட்டுட்டு இங்கே வந்து உட்காரும்படி பெருமாள் பண்ணிட்டாரே! கிளம்புவதற்குமுதல் நாள் பெருமாள் அம்மா மண்டபம் மண்டகப்படி. காவிரிக்குச் சீர் கொடுப்பதற்காக வந்திருந்தார். போய்ப் பார்க்கும்படி சந்தர்ப்பம் அமையவில்லை. இதெல்லாம் நம்ம ஊரில் தான். இங்கெல்லாம் நினைச்சுப் பார்க்க முடியுமா?

    ReplyDelete
  11. மகன் ஊருக்கு வந்து விட்டீர்களா
    ? நான் ஊரில் இல்லை கோவை போய் இருந்தேன்
    இப்போதுதான் உங்கள் பதிவை பார்த்தேன்
    மனது சரியாக நாள் பிடிக்கும் . பேத்தி விளையாடுவதை பார்த்து , அவள் மழலை மொழியை கேட்டு அவளுடன் கதைகள் பேசி மகிழ்ந்து இருங்கள்

    ReplyDelete
  12. ராமருக்கு இங்கிருந்தே நீங்கள் கொடுக்க நினைக்கும் உணவை மானசீகமாக கொடுங்கள்.
    அவர் அதை ஏற்றுக் கொள்வார். தினம் மலர்களை சூடி மகிழுங்கள்.
    அன்னை அரவிந்தர் அப்படித்தான் சொல்கிறார். நம் மனதை அவரிடம் வைத்து அனைத்தையும் அவருக்கு அர்பணம் செய்யுங்கள்.

    உங்களுக்கு தெரியாதது இல்லை.

    ReplyDelete