எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, November 10, 2025

நினைவோ ஒரு பறவை!

 இந்த வருஷம், இந்த மாதம் ஐந்தாம் தேதியோடு சரியா இருபது வருஷங்கள் ஆகின்றன. நான் வலைப்பக்கம் எழுத ஆரம்பிச்சு 20 வருடங்கள் முடிந்து விட்டன. ஆரம்பத்தில் தமிழ் எழுத வராமல் ஆங்கிலத்தில் தட்டச்சி இருந்தேன். அதுக்கு ஒருத்தரும் கருத்துச் சொல்லவில்லை. சில, பல ஆண்டுகளுக்குப் பின்னர் 2014 ஆம் ஆண்டில் ரஞ்சனி முதல் ஆளாக வந்து கருத்திட்டிருந்தார். பின்னர் கில்லர்ஜி அடுத்த நாளே வந்திருந்தார். இந்த "எண்ணங்கள்" வலைப்பக்கம் மட்டும் இன்று வரையில் 2,972 பதிவுகள் வந்திருக்கின்றன. சில மீள் பதிவுகளையும் சேர்த்து. ஆனால் பலருக்கும் எனக்கு இது ஒன்று மட்டும் நான் வைத்திருக்கும் வலைப்பூ அல்ல இன்னும் சிலவும் இருக்கின்றன என்பது தெரியாது. இதே ஐடியிலேயே என்னுடைய கோயில்களின் புனித யாத்திரை பற்றிய பதிவுகள் ஆன்மிகப் பயணம் என்ற பெயரில் எழுத ஆரம்பித்தேன். அதிலே முதலில் எங்க கயிலை யாத்திரை பற்றி எழுதிட்டுப் பின்னர் சிதம்பரம் பற்றிய ஆய்வுக்கட்டுரைகளின் அடிப்படையில் ஒரு தொடர் எழுதினேன். என்னை ஓரளவுக்குப் பிரபலம் ஆக்கியது அந்தத் தொடர் தான். அதனால் பல சிதம்பரம் தீக்ஷிதர்களும் பழக்கம் ஆனார்கள். பின்னர் ஆங்காங்கே நாங்கள் போய் வந்த கோயில்கள் குறித்தெல்லாம் எழுதிட்டுப் பின்னர் ஸ்ரீரங்கம் வந்த புதுசில் ஸ்ரீரங்கம் பற்றி எழுத ஆரம்பிச்சிருந்தேன். அதைத் தொடர முடியாமல் நான் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் நடக்க முடியாமல் வீட்டுக்குள்ளேயே சிரமத்துடன் நடந்து கொண்டிருந்தேன். அதில்லிருந்தே நான் பதிவுகள் எழுதுவது ரொம்பக் குறைந்து விட்டது. 

முதலில் எழுதிய பதிவின் சுட்டி கீழே

https://sivamgss.blogspot.com/2005/11/my-thoughts.html#comment-form

கண்ணனைப் பற்றி எழுத ஆரம்பிச்சப்போ முதலில் இந்த வலைப்பக்கம் தான் ஆரம்பிச்சேன். பின்னர் அதற்கெனத் தனியாக ஒரு மெயில் ஐடி கொடுத்து அதில் ஒரு வலைப்பக்கம் திறந்து அதில் எழுதி வந்தேன். அதற்கு முன்னரே எங்களோட பிரயாணங்களையும் , முக்கியமான இடங்களையும் பற்றி எழுதத் தனியான ஓர் மெயில் ஐடியில் எழுதி வந்தேன். மின் தமிழ்க் குழுமத்தில் இருந்தப்போ அந்த ஐடி தான் அதிகம் உபயோகிச்சிருக்கேன். மின் தமிழ் குழுமத்திற்காக எழுதிய ஒரு சில பதிவுகள், குறிப்புகள் எல்லாமும் அங்கே வெவ்வேறு பெயர்களில் உள்ள வலைப்பக்கங்களில் காணக் கிடைக்கும். சமையல் பற்றி எழுத ஒரு தனி வலைப்பூ இந்த ஐடியில் துவங்கி பாரம்பரிய சமையலில் இரு புத்தகங்களும் கின்டிலில் போட்டிருக்கேன். எங்க பொண்ணு, இன்னும் சில உறவுக்காரப் பையர், பெண்களுக்காக ஆங்கிலத்தில் ஓர் சமையல் குறிப்புக்கள் கொண்ட வலைப்பூவும் ஆரம்பிச்சேன்.

படங்களுக்கெனத் தனியாக ஒரு வலைப்பூவும் தொடங்கி இருந்தேன்.  ராம்லக்ஷ்மியிடம் இருந்து  பாராட்டுக் கிடைத்தால் சந்தோஷம். அதையும் சின்னப் புத்தகமாகப் போட்டிருக்கேன். ஆக இவை எல்லாமும் சேர்ந்தால் மொத்தப்பதிவுகள் நிறையவே இருக்கும். மழலைகள் குழுமத்துக்கு, நம்பிக்கை குழுமம், முத்தமிழ்க் குழுமம், ரத்தினமாலை குழுமம் எனக் குழுமங்களுக்காக எழுதியவையும் உண்டு. அப்போல்லாம் நிறையப் படித்துக் கொண்டிருந்ததாலும், அடிக்கடி கோயில்களுக்குப் போனதாலும் எழுத விஷயங்கள் இருந்து கொண்டே இருக்கும். இதைத் தவிர்த்தும் லினக்ஸிற்காகத் தமிழ் மொழீபெயர்ப்பு, தினத்தந்தி நூற்றாண்டு மலருக்காக வேலை எனப் பற்பல வேலைகள். இப்போ எதுவும் இல்லை. நேரம் என்னமோ இப்போக் கடினமாக இருப்பதோடு கொஞ்சம் எழுதவே நிறைய நேரம் எடுக்கிறது என்பது உண்மை. 

இதை எல்லாம் இப்போ ஏன் எழுதுகிறேன் எனில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் முன்னால் நாங்க எழுதினப்போ எழுதிக் கொண்டிருந்த க்ருத்திகா ஸ்ரீதர் என்னும்  ஒரு சிநேகிதியின் பதிவை முகநூலில் படிச்சேன். அவர் சில நாட்களுக்கு முன்னர் வந்து கூட என்னிடம் இன்னமும் ப்ளாக் எல்லாம் எழுதறீங்களா என ஆச்சரியமாய்க் கேட்டிருந்தார். இவர் தெரிந்தவரே ஒழிய நான் அதிகம் போனதில்லை. படிச்சது இல்லை. என்றாலும் படிச்சிருக்கேன். ஒரு சில சமயங்களில் கருத்துப் போட்டிருப்பேன். ஆனால் அவர் எழுத்துப் பரிச்சயம் தான். இத்தனை வருஷங்கள் கழிச்சும் அவர் என்னை நினைவு கூர்ந்திருப்பது ஆச்சரியத்தை அளித்தது. அப்போதெல்லாம் இவர், கவிதா கஜானன் போன்றவர்கள் எழுதுவதைப் படிக்கையில் எனக்கு அறிவுஜீவிகள் தோற்றம் வரும். நமக்குத்தான் அறிவு ஜீவி என்றால் ஒத்து வராது என ஒதுங்கியே இருந்திருக்கேன். உண்மையில் இன்று அவர் என்னை நினைவு கூர்ந்திருந்தது நெகிழ வைத்தது. அப்போது எழுதிக் கொண்டிருந்த பல நண்பர்களின் நினைவுகளும் வந்து அலை மோதின. 

ஏன் இவங்க எழுத்தை எல்லாம் பற்றிப் பயந்தேன் என்றால் நான் என்னை ஸ்திரப்படுத்திக்கொள்ள அப்போல்லாம் மொக்கைப் பதிவுகளாகவே போட்டுக் கொண்டிருந்தேன். நாம தீவிரமான சிந்தனைப்பதிவுகளை எழுதினால் படிப்பாங்களா என்னும் சந்தேகம். பின்னர் மெல்ல மெல்ல நானும் நடு நடுவே பக்திப்பதிவுகள், நவராத்திரிப் பதிவுகள்னு போட ஆரம்பிச்சேன். தமிழ் மணம் நக்ஷத்திரமாக இருந்தப்போ இந்த மும்மொழித்திட்டம் குறித்த ஓர் பதிவைக் கூட எழுதினேன் என்றால் பார்த்துக்கோங்க.  அதோடு அப்போல்லாம் வருடா வருடம் பதிவு எழுதிய/எழுத ஆரம்பிச்ச தினத்தைக் கொண்டாடுவேன். ஆரம்பத்தில் ஆதரவளித்த சூப்பர் சுப்ரா என்பவரை வருடா வருடம் நினைவு கூர்ந்து வந்தேன். பின்னர் காலப் போக்கில் எத்தனை வருடங்கள் என்பதே மறந்தும் விட்டது. என்றாலும் பலரின் நினைவுகள் இன்னமும் மங்காமல் இருக்கின்றன. இதில் என்னைப் போல் இன்னமும் ப்ளாக் எழுதுவது துளசி மட்டும் தான். வல்லி சிம்ஹன் அவ்வப்போது எழுதுகிறார். என்னை விடத் துளசி இன்னும் பிரயாணம் அதிகம் செய்வதால் அவர் இன்னமும் புத்துணர்வோடு எழுதிட்டு இருக்கார். வாழ்த்துகள். ஏதோ இந்த அளவுக்காவது என்னாலும் எழுத முடிகிறதே என்பதில் எனக்கும் சந்தோஷம் தான்.

18 comments:

  1. தொடர்ந்து எழுதுங்கள். எழுத்து பல சமயங்களில் நமக்கு ஒரு வடிகால். நானும் 2009-ஆம் ஆண்டிலிருந்து வலைப்பூவில் எழுதிக்கொண்டிருக்கிறேன். தினம் ஒரு பதிவு என்ற நிலை மாறி தற்போது எழுதுவது குறைந்து விட்டது. அவ்வப்போது எழுத ஆரம்பித்தாலும், சூழல்கள் எழுத தடையாகவே இருக்கிறது.

    தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், நன்றி. எ.பி. தவிர்த்து மற்றப் பதிவுகளுக்குப் போக நேரம் வாய்க்கவில்லை. முன்பெல்லாம் பல பதிவுகளுக்கும் போய், என்னோட வலைப்பக்கங்களையும் நிர்வகித்துக் கொண்டு எழுத்துப்பணிகளும் செய்து கொண்டு, வீட்டையும் கவனித்துக் கொண்டு இருந்த நானா என நினைத்துப் பார்த்துக்கிறேன். இப்போல்லாம் கருத்துக்களுக்குப் பதில் சொன்னாலே பெரிய விஷயமாக ஆகி விட்டது. :(

      Delete
  2. தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணிகள். உங்கள் மற்ற தளங்களையும் நான் அறிவேன். உங்கள் பன்முகத்திறமை குறித்து வியந்திருக்கிறேன். இருபது நீண்ட வருடங்கள்... அம்மா... பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம், நீங்க சாப்பிடலாம் வாங்க பதிவுக்கு மாத்திரம் வந்திருப்பீங்க. "என் பயணங்களில், பேசும் பொற்சித்திரமே ஆகிய பதிவுகளைப் படித்திருக்கவோ, பார்த்திருக்கவோ வாய்ப்பில்லை. மின் தமிழுக்காகப் போட்ட சில வலைப்பூக்களையும் பார்த்திருக்க மாட்டீர்கள்.

      Delete
    2. வந்திருக்கிறேன், படித்திருக்கிறேன்!

      Delete
  3. அப்போது ஆரம்பத்தில் ஏகப்பட்ட பதிவர்கள் இருந்தனர்.  அதில் சிலர் ஒரு தனிக்குழுவாக இயங்கியும் வந்தனர்.  சிலர் அரசியலில் ஒதுங்கி விட்டனர்.  உதாரணமாக எம் எம் அப்துல்லா.  

    ReplyDelete
    Replies
    1. ஓஓ, அப்படியா? அப்துல்லாவெல்லாம் எனக்குப் பழக்கம் இல்லை என்றாலும் கேள்விப் பட்டிருக்கேன். அப்போல்லாம் அமீரகப் பதிவர்கள் தான் மிகப் பிரபலம். டோண்டு என்னும் ஒரு பதிவர், புற்று நோயால் இறந்து விட்டார். அரசியல் பதிவுகளில் வெளுத்துக் கட்டுவார். எனக்கு ஆரம்பத்தில் வரும் மோசமான கருத்துக்களைப் படிச்சுட்டு உடனே என்னைத் தொடர்பு கொண்டு அவற்றை நீக்கிவிட்டுக் கமென்ட் மாடரேஷன் எப்படி வைப்பது எனச் சொல்லியும் கொடுத்திருக்கார்.

      Delete
  4. 20 வருடங்கள் நிறைவு பெற்று விட்டதா? பாராட்டுகள்! தொடர்ந்து எழுதுங்கள். நம்மை உயிர்ப்புடன் வைத்துக் கொள்ள அது உதவும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, ஆரம்பத்தில் பலவும் அர்த்தமற்ற பதிவுகள். ஆனாலும் குழுமங்களில் நல்ல முறையில் வாத, விவாதங்களில் கலந்து கொண்டிருக்கேன். மின் தமிழில் மாடரேட்டர் ஆகச் சில வருஷங்கள்!முக்கியமான பழமையான பல விஷயங்களையும் கோயில்கள், குலதெய்வங்கள் பற்றிய பல தகவல்களையும் சிரமப்பட்டுச் சேகரித்து மின் தமிழின் மரபு விக்கியில் இணைப்பேன். வெங்கட் சாமிநாதன் என்னும் விமரிசகரின் பல கட்டுரைகள் மரபு விக்கியில் இணைத்திருக்கேன். அந்த நேரமெல்லாம் இப்போ எங்கே போச்சுனு தெரியலை. இத்தனைக்கும் இப்போச் சமையல் வேலை எல்லாம் அவ்வளவா இல்லை.

      Delete
  5. இருபது வருடங்களாக எழுதறீங்களா? வாவ். பாராட்டுக்கள்

    நான் உங்களின் வேறு தொடர்களையும் படித்திருக்கிறேன்

    தொடர்ந்து உற்சாகத்துடன் எழுதுங்கள்

    இன்று ப்ராப்தம் இருந்தால் கன்யாகுமரி அம்மனைத் தரிசிப்பேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க நேல்லை, ஆரம்ப காலப் பல பதிவுகளை நீங்க படிச்சிருக்க வாய்ப்பில்லை. எங்கள் ப்ளாக் ஆசிரியர்களில் முதலில் என்னைத் தொடர்பு கொண்டு என் பதிவுகளில் கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தது திரு கௌதமன் அவர்கள் தான். ஸ்ரீராமெல்லாம் அப்போ என்னோட பதிவுகளுக்கே அதிகம் வந்தது இல்லை. ஒரு போட்டியில் கல்ந்து கொண்டதின் மூலமாக எங்கள் ப்ளாகிற்குத் தொடர்ந்து செல்ல / ஆரம்பித்தேன். "அவரை" நு முடிக்கணும்னோ என்னமோ போட்டி. கணேஷ் பாலா என்பவரின் விமரிசன வலைப்பூவில் கூட எழுதி இருக்கேன். ஆ.வி. எனச் செல்லமாக அழைக்கும் ஆனந்தராஜா விஜயராகவன் நல்ல நண்பர். உடல்நிலை சரியில்லாமல் இப்போத் தான் தேறி வருகிறார். சீனு என்பவரும் நண்பரே. கணேஷ் பாலா நடத்தின போட்டியில் எல்லாம் கலந்து கொண்சிருக்கேன். திரு ஜிஎம்பி அவர்கள் நடத்திய போட்டியில் கலந்து கொண்டு அவர் கைகளால் வரையப்பட்ட தஞ்சாவூர் தவழ்ந்த கிருஷ்ணன் சித்திரத்தை ஃப்ரேம் போட்டுப் பரிசாக அனுப்பி இருந்தார். இப்போ நினைவுகள் தான் மிச்சம். பலரிடமும் தொடர்பு இல்லை. :(

      Delete
    2. அது என்னமோ நேத்திலே இருந்து நான் எத்தனை முறை திருத்தினாலும் "நெல்லை" என்பது "நே"ல்லை என்றே வருது. :))))

      Delete
    3. பகவதியைப் பார்த்தீங்களா? கன்யாகுமரிக்கு இது எத்தனாவது முறை? அங்கே கடற்கரையைச் சுற்றி இருக்கும் அமைப்பைப் பார்க்க முடிஞ்சிருக்கும். நாங்க முதல் முதலாக எண்பதுகளில் பார்த்த கன்யாகுமரி கடற்கரைக்கும், பின்னர் 90 களில் குழந்தைகளோடு, பின்னர் பையர், மருமகளோடு 2009 இல் அதன் பின்னர் கடைசியாக 2015 ஆம் ஆண்டில் பார்த்ததுக்கும் உள்ள வேறுபாடுகள் மனதைப் புண்படுத்தி விட்டன. இந்த மட்டும் பகவதி அம்மன் கோயிலும் பகவதியையும் பார்க்க முடிந்ததே என மனதுக்கு ஆறுதலாக இருந்தது. :(

      Delete
  6. நினைவுகள் அருமை. நீங்கள் எழுதிய பழைய பதிவுகளை படித்து பாருங்கள் அது உங்களுக்கு உற்சாகம் தரும், மேலும் பதிவுகள் போட உத்வேகம் பிறக்கும். நான் 2009 ஆம் ஆண்டு ஆரம்பித்து எழுதி வருகிறேன். உங்களை போல பல தளங்கள் இல்லை ஒரு தளம் தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி, வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க. பழைய பதிவுகளில் சிலவற்றை மீண்டும் படிப்பேன். ஆனாலும் பெரும்பாலும் அதிகம் படிக்க முடியவில்லை. கண்களும் ஒரு பிரச்னை.

      Delete
  7. வாழ்த்துகள் 20 ,ஆவது வருடங்களூக்கு.

    தொடரட்டும் உங்கள் பகிர்வுகள்.

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. நீங்கள் தொடர்ந்து 20 வருடங்களாக பதிவுகள் எழுதி வருவது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நான் கடந்த சில வருடங்களாகத்தான் தொடர்ந்து உங்கள் பதிவுகளுக்கு விடாமல் வந்து கொண்டிருக்கிறேன். உங்கள் எழுத்துக்கள் வசீகரமானவை. உங்களின் வேறு சில வலைத்தள பதிவுக்கும் ஒன்றிரண்டு முறை வந்துள்ளேன் என நினைக்கிறேன்.ஆனால், உங்களின் "எண்ணங்களோடு" கலந்து கவரப்பட்டு தொடர்ந்து வந்து கொண்டேதான் உள்ளேன். நீங்களும் தொடர்ந்து எழுதுங்கள். என்னென்றும் உங்கள் எழுத்துக்களின் ரசிகை நான். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி

    தாங்கள் தற்சமயம் ஸ்ரீரங்கம் வந்தாயிற்றா ? உங்கள் உடல்நிலை பரவாயில்லையா? உடம்பைக் கவனித்துக் கொள்ளுங்கள். நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete