எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 30, 2025

வியாழக்கிழமை இரவில் மருத்துவமனை வாசம்! 2 தொடர்ச்சி!

 சுமார் பனிரண்டு மணி அளவில் எக்ஸ்ரேக்கு அழைத்துச் சென்று கொண்டு விட்டார்கள். தூக்கம் வேறே முழு ஏசி என்பதால் குளிர் வேறே. ஒண்ணும் சாப்பிடாததால் பசி வேறே. காலை நீட்டிப் படுத்தால் தேவலை போல இருந்தது. கொஞ்சம் சாய்ந்தாற்போல் உட்கார்ந்தால் இடப்பக்கம் அந்த நரம்பு முடிச்சுக்களெல்லாம் நகர்ந்து கொண்டு மேலும் வலியை அதிகப்படுத்தியது. அதற்குள்ளாக மேலும் இரு முறை மருமகள் வந்து பார்த்துட்டு செவிலியரிடம் எப்போ எனக்கு செக்கப் ஆரம்பம் எனக் கேட்டுக்கொண்டாள். சர்ஜன் வரணும் என்றார்கள். அதுக்குள்ளாக ட்யூட்டி மருத்துவர் மாதிரி ஒரு சர்ஜன் வந்து என்னைப் படுக்கையில் படுக்கச் சொன்னார். படுக்கை மிக உயரத்தில் இருக்க என்னால் ஏறிப் படுக்க முடியலை. உடனே ஒரு நர்சை அனுப்பி ஸ்டூல் கொண்டு வரச் சொல்லிப் படுக்கையையும் கொஞ்சம் இறக்கச் சொன்னார். ஏறிப் படுத்தேன். கால்களை மேலே தூக்கிப் போட முடியாமல் தவிக்கச் செவிலியர் தூக்குகையில் வலி தாங்காமல் கத்திவிட்டேன். பின்னர் இந்த மருத்துவர் என்னிடம் விபரங்களைக் கேட்டுக் கொண்டு சின்னதான ஒரு ஸ்கேன் மானிடரில் என் மேல் வயிற்றில் வலி இருக்குமிடம் பரிசோதனை செய்து கொண்டார். அரை மணி நேரத்துக்குப் பின்னர் அது முடிந்து அவர் ஏதோ சொல்லிட்டுப் போனார். என்னவென்று கேட்டதற்கு அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் எடுத்தே ஆகணும் எனவும் அங்கே ஆள் இன்னும் வராததால் சிறிது நேரம் அங்கேயே இருக்கணும் எனவும் சொன்னார்கள். மறுபடி தேவுடு காத்துக் கொண்டிருந்தேன். 

நல்லவேளையாகப் போர்த்திக்கொள்ளப் போர்வை கொடுத்தார்கள். கீழே இருந்து யாரும் வரலை. தூங்கிட்டாங்க போலனு நினைச்சுட்டிருந்தப்போ என்னோடு காத்திருந்த ஒரு தமிழ்ப் பெண் அல்ட்ரா சவுன்டுக்கு நர்ஸ் துணையுடன் கிளம்பிப் போனார். அடுத்து நம்மைக் கூப்பிடுவாங்கனு எதிர்பார்ப்புடன் உட்கார்ந்திருந்தேன்.கொஞ்சம் அப்படியே கண்ணசர யாரோ கூப்பிடும் ஒலி கேட்டுக் கண் விழித்தால் நர்ஸ் ஒருத்தர். என்னை அல்ட்ரா சவுன்ட் ஸ்கேனுக்கு அழைத்துச் செல்ல வந்திருந்தார். அவருடன் அங்கே போனேன். ஆனால் இது விஷயம், பையருக்கோ அவர் மனைவிக்கோ தெரியாது. அவங்க கீழேயே இருந்தாங்க. அங்கே இருந்த பெண்மணி என்னைத் தனியாகவா வந்திருக்கே எனக் கேட்கக் கீழே பையரும், மருமகளும் காத்திருப்பதைச் சொன்னேன். இவர் ஹிந்தியிலும் பேசினார். சுமார் ஒரு மணி நேரம் அல்ட்ரா சவுன்ட் ஸ்கேன் நடந்தது. நான் வெளியே வந்தப்போப் பையர் அங்கே நின்றிருந்தார். செவிலியரோ அல்லது மருமகள் மூலமாகவோ செய்தி தெரிந்து அங்கே வந்திருந்தார். ஸ்கேன் செய்த பெண்மணியிடம் என்ன பிரச்னை எனக் கேட்க அவர் சர்ஜன் தான் சொல்லுவார் எனச் சொல்லிட்டார்.

பின்னர் பையரைக் கீழே போகச் சொல்லிட்டு நர்ஸ் ஒருத்தர் வந்து மறுபடி எமர்ஜென்சி வார்டுக்கு அழைத்து வந்தார். உட்காரச் சொன்னார்கள். சுமார் அரைமணிக்கும் மேலாக ஆகி விட்டது. இம்முறை கொஞ்சம் நன்றாகவே தூங்கி விட்டேன். மறுபடி எழுப்பும் சப்தம் கேட்டுப் பார்த்தால் என்னை வீட்டுக்குப் போகலாம்  என்று சொன்னார்கள். ஸ்கேன் ரிப்போர்ட் மற்றும் விபரங்கள் கேட்டதற்கு வெளியே கையைக் காட்ட அங்கே பையர் நின்று கொண்டிருந்தார். பின்னர் வீல் சேரை வெளியே தள்ள அங்கிருந்து பையர் என்னைக் கீழே அழைத்துச் சென்றார். போகும்போதே அவர் என்னிடம் உள்ளே நரம்புகள் சுருட்டிக்கொண்டு இருப்பதைத் தவிர்த்து வேறே எதுவும் தெரியலை என்றும் வலி குறைய மாத்திரைகள் கொடுத்திருப்பதாகவும் சொன்னார். பின்னர் எமர்ஜென்சிக்கு வெளியே வந்து ஃபார்மசியில் மருந்துகளை வாங்கிக் கொண்டுக் குட்டிக்குஞ்சுலுவும் அவங்க அம்மாவும் காத்திருந்த இடம்  வந்து அவங்களையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்குத் திரும்பினோம். வண்டியில்  ஏறும் வரை வீல் சேர்தான். சிரமப்பட்டுத் தான் வண்டியில் ஏற முடிந்தது. மணி நாலரை ஆகி இருந்தது. வீடு வந்து சேரும்போது ஐந்தரைக்குக் கிட்டத்தட்ட ஆகி விட்டது. வீட்டில் படிகள் ஏறணுமே! எனக்கு உள்ளே போக இருபது நிமிடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இரவு முழுதும் உட்கார்ந்திருந்ததால் கால்கள் வேலை செய்யவில்லை. நகர்த்தவே முடியவில்லை. கஷ்டப்பட்டுக் கால்களை நகர்த்தி ஒவ்வொரு அடியாக வைத்து வைத்து வீட்டுப் படிகளைக் கடந்து ஒருவழியாக உள்ளே போனப்போ மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் படுத்துவிட்டேன். 

12 comments:

  1. ஆக இரவு முழுவதும் ஆஸ்பத்திரி அவஸ்தை.  எபப்டியோ ஒன்றுமில்லை என்று ஆனதே..  அதுவரை நிம்மதிதான்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், என்னோடு சேர்ந்து குழந்தை உள்பட அவதிப்பட்டார்கள்.

      Delete
  2. இங்கே செய்வது போல எதற்கும் இருக்கட்டும் என்று காசுக்காக நிறைய சோதனைகள் அங்கு செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.  இப்படிச் சொன்னாலும் கூட சில சோதனைகள் அவசியமானதாகத்தான் இருக்கின்றன.

    ReplyDelete
    Replies
    1. அரசாங்க மருத்துவமனை என்பதால் ஒண்ணு இலவசமாய் இருக்கணும். அல்லது குறைவான கட்டணமாய் இருக்கணும். அப்படித்தான் நான் நினைக்கிறேன். அன்றிரவு முழுவதும் பல பெண்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தனர். நல்ல கூட்டம். அத்தனைக்கு அறை சின்னது. அதில் பாதியில் நாலு படுக்கைகள்.

      Delete
  3. விலா எலும்பு பக்கம் நரம்பு எப்படி சுருட்டும்?  அபுரி...

    ReplyDelete
    Replies
    1. தெரியலை ஸ்ரீராம், ஆனால் எனக்கு அடிக்கடி ஒரு சின்னப் பந்து போல் உருண்டையாக மார்புக்கூட்டுக்கு நடுவில் ஏறி இறங்கும். நரம்புச் சுருட்டல் என நான் நினைச்சுட்டு இருக்கேன். ஆனால் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் உணர முடிந்திருக்கிறது.

      Delete
  4. நான் கூட என் ஆஸ்பத்திரி அனுபவங்களை எழுத வேண்டும்.  நினைத்துக் கொண்டே இருக்கிறேனே தவிர...

    ReplyDelete
    Replies
    1. உங்களால் இன்னமும் சுவாரசியமாக எழுத முடியும். எழுதுங்கள்.

      Delete
  5. வலி குறைந்து இருக்கிறதா? இப்படி கஷ்டபட்டுவிட்டீர்களே இனி நல்லபடியாக இருக்க வேண்டும். உடல்நலத்தோடு பேத்தியோடு உரையாடி கவலைகளை மறந்து இருக்க இறைவன் அருள் புரிய வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. குழந்தைக்குத் தாத்தாவின் பிரிவே இன்னமும் ஜீரணிக்கலை. அவ்வப்போது நினைவு வருது. நான் ஏதானும் புலம்பாமல் இருக்கணுமேனு அடக்கி வாசிக்கிறேன். தனியாக அறையில் இருக்கையில் தான் என்னோட மனதைத் திறந்து வைச்சுக்கறேன். மற்றபடி ரொம்பக் கஷ்டப்பட்டு சாதாரணமாக இருக்க முயல்கிறேன்.

      Delete
  6. வணக்கம் சகோதரி

    நல்லபடியாக வீடு வந்து சேர்ந்ததற்கு மகிழ்ச்சி. இரவு முழுவதும் மருத்துவமனையில் இருப்பதென்பது கடினந்தான். அங்கு ஒவ்வொன்றிக்கும் ஏன் இவ்வளவு தாமதமாக்குகிறார்கள். எப்படியோ அன்றைய ராத்திரி முழுவதும் கண் விழித்தபடி அனைவரும் அவஸ்தைபட்டு விட்டீர்கள். இப்போது வலி பூரணமாக குணமாகி உள்ளதா.? மருத்துவர் தந்த மருந்துகளை விடாமல் சாப்பிடுங்கள். உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்.

    அன்புடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல கூட்டம் கமலா. அங்கேயே இருந்த நோயாளிகளைப் பார்க்க மருத்துவர்கள் வந்து கொண்டும் போய்க்கொண்டும் இருந்தார்கள். செவிலியர் அவங்களையும் கவனிச்சு உதவி செய்யணும். வெளி நோயாளிகளாக வந்திருக்கும் எங்களைப் போன்றவர்களையும் கவனிக்கணுமே. மொத்தத்தில் இரவு போல் இல்லை. அங்கே எப்போதும் கூட்டமாகவே இருக்கு. நேற்றோடு மருந்துகள் முடிந்து விட்டன.

      Delete