எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, March 24, 2010

மறு மகள் மெச்சிய மாமியார்

வா, வா, டிவி பாரு.

ம்ம்ம்ம்ம்?? நான் சீரியலெல்லாம் பார்க்கிறதில்லை. எதுவும் புரியாதே!

அதனால் என்ன?? இப்போப் பார்த்தியானா புரிஞ்சுடும். இப்போ மேகலா வரும், எனக்கு வேறே என்ன பொழுது போக்கு?? புஸ்தகமும் படிக்க முடியலை. இங்கே வாங்கறதே இல்லை. நீ நிறைய வாங்கிண்டு இருந்தியே?

இல்லை, இப்போ ஆநந்தவிகடன், குமுதம், சிநேகிதி, அவள் விகடன் எல்லாம் நிறுத்தியாச்சு. துக்ளக், கல்கி, சக்திவிகடன், குமுதம் பக்தி, மங்கையர் மலர் மட்டுமே வாங்கிண்டு இருக்கேன்.

அங்கே இருக்கும்போது படிச்சதுதான் எல்லாம். இங்கே துக்ளக் மட்டும் எப்போவானும் பேப்பர்காரர் போடுவார். இந்த சோ துக்ளக் மாநாடு பத்தி எழுதினதைப் படிச்சயோ??

ம்ம்ம் படிக்கிறேனே!

கோயமுத்தூரிலே தமிழ் மாநாடு நடக்கப் போறதாமே?

ஆமாம்,

புதுசா சட்டசபைக்கட்டிடம் கட்டித் திறப்புவிழாவாமே? சோனியா காந்தியும், மன்மோகன் சிங்கும் வராங்களாமே?

அப்படியா?? எனக்குத் தெரியாதே?

டிவியிலே சொன்னாங்களே, நீ பார்க்கலை??

இல்லை, பார்க்கலை. ஒருவேளை வந்திருக்கும் கவனிச்சிருக்க மாட்டேன்.

எஸ்.வி.சேகர் இப்போ அதிமுகவிலே இல்லையாமே??

அப்படியா?? அதிகாரபூர்வமாச் சேர்ந்தாப்பலே தெரியலையே!

பிஜேபிக்கு இப்போ அத்வானி போய்ப் புதுசா வேறே ஒருத்தர் வந்தாச்சாமே!

ஆமாம். படிச்சேன்.

கம்யூனிஸ்ட் தலைவர் ஏரியிலே விழுந்து செத்துட்டாராமே?

அட, ஆமாம்.

பாம்பேயிலே போன வருஷத்துக்கு முந்தின வருஷம் குண்டு வெடிச்சாங்களே, அந்த ஆளை அமெரிக்காவிலே பிடிச்சாச்சுனு பார்த்தேன். அப்படியா? அவனை இங்கே கொண்டு வந்து கேஸ் போடுவாங்களா??

இதுக்குள்ளே எதிராளி அழும் நிலைக்குத் தள்ளப்பட எழுந்து செல்கிறார். அந்த எதிராளி வேறே யாரும் இல்லை. நானே தான்!

மேலே நடந்த சம்பாஷணை கற்பனை அல்ல. நிஜம். எண்பத்தி ஆறு வயதாகும் என் மாமியார் என்னிடம் கேட்டவை. விரல் நுனியில் அனைத்துத் தகவல்களையும் வைத்திருக்கிறார். இப்போவும் ஆர்வமுடன் படிப்பது துக்ளக் பத்திரிகை. பல வருடங்கள் முன்னால் பத்திரிகைகளை வீட்டில் வாங்க முடியாத நிலை இருந்தப்போ, என் கணவர் அலுவலக நூலகத்தில் இருந்து எடுத்து வருவார். அப்போ துக்ளக் பத்திரிகை, மங்கையர்மலர் பத்திரிகை இரண்டும் வந்ததுமே ஒருத்தருக்கும் தெரியாமல் தனியா எடுத்து வச்சுண்டு, தினமும் ஸ்லோகங்கள் சொல்லி முடித்ததும், அந்தப் புத்தகங்களுக்குள் வைத்துப் படித்துவிட்டுப் பின்னர் எடுத்தது தெரியாமல் வைத்துவிடுவார். அவ்வளவு ஆர்வம் புத்தகங்கள் மீதும் அரசியல் விஷயங்களிலும். எங்களுக்கு இந்த விஷயம் தெரிய வந்ததும், நாங்களே புத்தகம் வந்ததும் எடுத்துப் படிக்கக் கொடுத்துடுவோம். இந்த வயசில் நான் இருப்பேனா என்பதே தெரியாது. இருந்தாலும் இவ்வளவு ஆர்வமும், துடிதுடிப்பும் இருக்குமா என்பதும் சந்தேகமே. அதே போல சீரியல்கள் பார்ப்பதிலும் தடுமாறாமல் கதைகளைச் சொல்வதில் அவருக்கு நிகர் யாருமில்லை. சாயந்திரம் ஆறரை மணிக்கு மேகலாவில் ஆரம்பித்தால், அடுத்த சீரியலின் பெயர், அதில் நடிப்பவர்கள் எனச் சொல்லப் படுகிறது. அதே போல் தினமும் எந்தத் தொலைக்காட்சியில் என்ன பக்தி நிகழ்ச்சி என நேரம் தப்பாமல் தெரிஞ்சு வைத்துக்கொண்டு போடச் சொல்லிப் பார்ப்பார். தினமும் சீரியல் பார்க்கும் என் கணவரோ, மேகலாவின் நடிப்பவளை மற்றொரு சீரியலிலும், செல்வத்தில் நடிப்பவளை மேகலாவில் என்றும் ஒரு நாளைக்கு ஒரு மாதிரி மாத்திச் சொல்லுவார். பெயரும் அவர் இஷ்டத்துக்கு மாத்திப்பார். என்ன பார்த்தார், என்ன கதைனு கேட்டால் சொல்லத் தெரியாது. ஆனால் இங்கே கதை மட்டுமின்றி நடிகைகள் பெயரும் சரியாகச் சொல்லப் படுகிறது.

தலை வணங்குகிறோம்.


கொசுறுத் தகவல்: என் மாமியாரின் தந்தை ராதாகிருஷ்ண ஐயர், சுதந்திரப் போராட்டத் தியாகி. சிறை சென்று கஷ்டப் பட்டிருக்கிறார். இவரின் பேட்டியை சுதந்திர வெள்ளிவிழாக் கொண்டாட்டத்தின் போது மும்பை வானொலி நிலையம் ஒலிபரப்புச் செய்தது. ஒருவேளை தந்தையின் ஆர்வம் மகளிடம் இருக்கிறது போலும்!

Tuesday, March 09, 2010

கொலம்பஸ், கொலம்பஸ், விட்டாச்சு லீவு!

நானும் கண்ணன் தொடரைப் போட்டுப் போகத் தான் நினைக்கிறேன். தெரியலை, முடியுமா என. என்னவோ திட்டமிடாத பல வேலைகள். தாமதம். நாளையிலிருந்து 25-ம் தேதி வரைக்கும் கண்ணன் தொடரோ, ஆன்மீகப் பயணம் பக்கத்தில் திருவாரூர்ப் பயணமோ வராது. எல்லாருக்கும் கொஞ்சமாவது ஓய்வு கொடுக்கவேண்டாமா என் தொந்திரவில் இருந்து. அதான். ஜாலியா இருங்க. அப்போ அப்போ என்னையும் நினைச்சுக்குங்க. வரேன். நன்றி.

Saturday, March 06, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

சங்கே முழங்கு!


ஹூக்கு இருந்த இடத்தை விட்டு நகரவே இல்லை. பாஞ்சஜனா ஹூக்கு எனக் கோபமாய் ஒரு அதட்டல் போட்டான். கப்பலின் மாலுமிகள் அனைவரும் ஆச்சரியத்துடன் பார்க்க, வெட்கத்துடனும், கோழை போலவும் ஹூக்கு தயங்கிக் கொண்டிருந்தான். அதற்குள்ளாக பிக்ரு வந்து பாஞ்சஜனாவின் காலில் விழுந்து கெஞ்ச ஆரம்பித்தான். கண்ணனுக்குத் தண்டனை கொடுக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்தான். சத்தம்போட்டு அழவும் ஆரம்பித்தான். “முட்டாளே, சும்மா இரு!” என அவனை அதட்டிய பாஞ்சஜனா தானே அவனை அடிக்கவும் முனைந்தான். பின்னர் திடீரென மனதை மாற்றிக்கொண்டு மீண்டும் ஹூக்குவைப் பார்த்து சைகை செய்தான் கண்ணனை அடிக்கச் சொல்லி. கண்ணனோ இவை எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. இந்தச் சம்பவங்களுக்கும், தனக்கும் எந்தவித சம்பந்தமுமே இல்லை என்பது போல் எந்தப் பாதிப்பும் இல்லாமல் எப்போதும்போலவே இருந்தான். சற்று நேரம் கடந்தால் ஹூக்குவிற்கே அடி விழுமோ எனப் பயந்த ஹூக்கு தன் கைகள் நடுங்க, கால்கள் எழும்பி நடக்கக் கஷ்டப்பட மெல்ல மெல்ல கண்ணனை நோக்கித் தயங்கித் தயங்கி அடி எடுத்து வைத்தான். அதைப் பார்த்த பாஞ்சஜனாவின் கோபத் தீ கொழுந்து விட்டு எரியச் சாட்டையை அவன் ஹூக்குவின் கைகளில் இருந்து பிடுங்கிக் கொண்டான்.

சாட்டை மாடுகளை மேய்ப்பவர் வைத்திருப்பது போன்ற நீண்ட பிடி உள்ளது, பாஞ்சஜனா அதை வாங்கிக் கண்ணனின் முதுகின் மேல் ஓங்கி ஓர் அடி வைத்தான். அவ்வளவு தான். பிறந்தது முதல் மாடுகளுடன் வளர்ந்த கண்ணன் அந்தச் சாட்டையின் அடிப்பாகத்தைப் பிடித்து ஒரு சொடுக்குச் சொடுக்கி இழுத்தான். அந்த அடிக்கே கண்ணன் முதுகு அருணோதயச் சூரியன் போல் சிவந்திருந்தது. கண்ணன் மென்னகை புரிந்துகொண்டே தன் கைகளில் பிடித்த சாட்டையால் தன் முழுபலத்தையும் பிரயோகித்துப் பாஞ்சஜனாவை அடிக்க ஆரம்பித்தான். மாலுமிகள் பயத்தில் அலற ஆரம்பித்தனர். ஹூல்லு தன் முதலாளியைக் காக்கவென விரைந்தான். ஆனால் நடந்துகொண்டிருக்கும் சம்பவங்களினால் பிரமிப்பு அடைந்திருந்த ஹூக்கு அவனைத் தடுத்தான். பாஞ்சஜனா தொடர்ந்து அடிவாங்கினான். அனைவரையும் அடிக்கப் பயன்பட்ட அதே சாட்டையினால் இன்று அவன் அடிவாங்க ஆரம்பித்தான். தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டே பாஞ்சஜனா வலி பொறுக்க மாட்டாமல் கத்த ஆரம்பித்தான். ரத்தம் வழிய ஆரம்பித்தது. எவருமே இருந்த இடத்தை விட்டு அசையவில்லை. முதலில் ஓடி வந்த ஹூல்லுவும் இப்போது இதை ரசிக்கிறாப்போல் பாவனையுடன் நின்று கொண்டிருந்தான். நம்மை எந்த நேரம் வேண்டுமானாலும் நடுக்கடலில் தள்ளிக் கொல்லப் போகிறான் என நினைத்த முதலாளி இன்று ஒரு பதினாறு வயதுச் சிறுவனால் தண்டிக்கப் படுகிறான். அந்தக் கப்பலின் அனைத்துத் தொழிலாளர்களுக்கும் பாஞ்சஜனா தங்களுக்கு இழைத்த கொடுமைகள் வரிசையிட்டுக்கொண்டு கண்ணெதிரே வந்தன. பாஞ்சஜனாவின் உறவின் முறை இளைஞர்கள் ஓடிப் போய் ஒளிய, பாஞ்சஜனா கீழே விழுந்தான். ஹூக்குவிடம் சாட்டையைக் கொடுத்தான் கண்ணன். அவனைத் தட்டிக் கொடுத்தான். சொர்க்கத்துக்கே போய் விட்டது போன்ற உணர்வு ஹுக்குவிற்கு.

கண்ணனைப் புதிய மரியாதையுடன் பார்த்தனர் இரு ராக்ஷசர்களும். இத்தனை நாட்கள் பாஞ்சஜனாவின் கட்டளைகளுக்குப் பயந்து கொண்டும், தங்களுக்கே கொடுக்கப் போகும் தண்டனைக்கு அஞ்சியும் தாங்கள் செய்து வந்த கொடூரமான செயல் இன்றைக்கு தங்கள் தலைவனே அநுபவிக்க நேர்ந்துவிட்டது பற்றிய ஆச்சரியம் அகலவில்லை. இந்தப் பையன் கைகளிலும், கண்களிலும் ஏதோ அதிசய சக்தி இருக்கத் தான் செய்கிறது. கண்ணன் திரும்பி உத்தவனைப் பார்த்து பாஞ்சஜனாவைத் தூக்கிக்கொண்டு அவன் அறைக்குச் செல்லும்படிக் கட்டளையிட்டான். தான் பின் தொடருவதாயும் கூறினான். ஹூக்கு உதவியுடன் உத்தவன் பாஞ்சஜனாவைத் தூக்கிச் சென்றான். பிக்ருவைப் பார்த்து கண்ணன் கப்பலை வைவஸ்வதபுரிக்குத் திருப்பச் சொன்னான். அங்கே கட்டாயம் தாங்கள் சென்றே ஆகவேண்டும் என்றும் கூறினான். கீழே பாஞ்சஜனாவின் சங்கு, செந்தாமரைப்பூப் போன்ற வெளிர் சிவப்பு நிறமுள்ள சங்கு கிடந்தது. அதைப் பார்க்கும்போதே தூய்மையான எண்ணங்களே தோன்றின. கண்ணன் அந்தச் சங்கை எடுத்துத் தன் வாயில் வைத்துக்கொண்டு, “பூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்”என ஊதினான். சங்கின் நாதம் கப்பலில் நிரம்பியது. அனைவர் மனதையும் மயக்கியது. சங்கின் நாதம் தொடரும்.

கண்ணன் பின்பு பாஞ்சஜனாவின் அறைக்குச் சென்று அவன் காயங்களைக் கழுவி, அவற்றுக்கு மருந்திட்டான். அரை மயக்க நிலையில் இருந்த பாஞ்சஜனா கண்ணைத் திறந்து பார்த்தான். கண்ணனைக் கண்டதும், அவனைச் சரமாரியாகத் திட்ட ஆரம்பித்தான். கண்ணன் எதற்கும் பதிலே சொல்லவில்லை. அவனுக்குத் தெரிந்த அனைத்துமொழிகளிலும் கண்ணனைத் திட்டினான். பாஞ்சஜனாவின் உறவின் முறை இளைஞர்களிடம் அவனை ஒப்படைத்துவிட்டு உத்தவனும், கண்ணனும், அந்த அறையை விட்டு வெளியே வந்தனர். கப்பலின் கீழ்த்தளத்துக்குச் சென்று மாலுமிகளிடம் உதவி வேண்டுமா எனக் கேட்டு கண்ணனும், உத்தவனும் வேண்டிய உதவிகளைச் செய்தனர். அன்றிரவு கண்ணனுக்கும், உத்தவனுக்கும் ஒரு பெரிய விருந்தைப் படைத்து வெற்றியைக் கொண்டாடினார்கள் கப்பலின் சமையல்காரர்கள். இரவும் வந்தது. அனைவரும் தூங்கச் சென்றனர். கண்ணனும் முதலில் தூங்கிவிட்டான். திடீரென அவனுக்கு விழிப்பு வந்தது. ஏதோ ஆபத்து! என்ன அது? சுற்றும் முற்றும் பார்த்தான். அந்த அரை இருட்டில் மிக மிக மெதுவாக யாரோ நகருவதும், மூச்சுக்காற்றும் கேட்டது கண்ணனுக்கு. சில விநாடிகளில் கண்ணனின் தலைக்கு நேரே ஒரு நீண்ட வாள் வீசப்பட்டது.

கிடைத்தது அதிக பவர்!

அப்பாடா! ஒருவழியாய் அதிக பவர் இன்னிக்குக் கிடைச்சுடுச்சு. ஒரு இரண்டு மாசமப் பட்ட கஷ்டம் இருக்கே சொல்லி முடியாது. என்ன இருந்தாலும் பவர் இருந்தாலும் கஷ்டம் தான், இல்லாட்டியும் கஷ்டம் தானே! அதுவும் அதிக பவர்னால் கேட்கவே வேண்டாம். வலை உலகத் தலைவியாச்சே. பவர் இல்லைனாத் தான் கஷ்டம். அம்பி, மெளலி, திராச, தக்குடு எல்லாம் என்ன விஷயம் அதிக பவர்னு குழம்பிண்டு இருந்தாங்க. இப்போப் புரிஞ்சிருக்குமே!

இரண்டு மாசத்துக்கும் மேலாக "ந" "த" மாதிரியும் "ண" "ன" என்றும் "ற" "ந" மாதிரியும், தெரிஞ்சுட்டு இருந்தது. சில சமயம் கூறு என்பது கூகூறுறு என்று இரட்டையாவும் தெரியும். "ம' போட்டால் "ழ"வோனு சந்தேகம் வரும். "க" போட்டால் கேட்கவேண்டாம். "ச" மாதிரித் தெரியும். சிலசமயம் இரண்டிரண்டு தரம் எழுதிட்டேனோனு கூட நினைச்சுப்பேன். எல்லாத் தொல்லையும் கொஞ்ச மாசங்களுக்கு இருக்காது.

புதுக்கண்ணாடி அதிகப் பவருடன் இன்னிக்குத் தான் வந்தது.

Wednesday, March 03, 2010

ஆனைமேலே , குதிரை மேலே டூ!

சின்ன வயசு நினைவுகளில் இந்த டூ விடறது ஒண்ணு இருக்கே! அப்பா! அதுக்கு நான் எவ்வளவெல்லாம் அழுதிருக்கேன் தெரியுமா?? கூடப் படிக்கும் பொண்ணுங்க, பையர்கள், (ஐந்து வகுப்பு வரைக்கும் இருபாலாரும் சேர்ந்து தான் படிச்சோம்) டூ விட்டுட்டா அன்னிக்குப் பூரா மனசே சரியா இருக்காது. நினைச்சு நினைச்சு துக்கம் பொங்கும். ஏற்கெனவே அப்பாவோட கண்டிப்பாலே அதிகமா நட்பை வெளிக்காட்டிக்க முடியாது. அந்த மாதிரி சமயத்தில் இந்த டூவும் சேர்ந்துடுத்துனா கேட்கவே வேண்டாம். மொத்த உலகமே நமக்கு எதிரா இருக்கிறாப்போல் இருக்கும். வீட்டுக்கு வந்து அம்மா கிட்டே மட்டும் தனியாச் சொல்லிட்டு அழறச்சே, அம்மா, போடி பைத்தியம்! இதுக்கெல்லாமா அழுவா? னு சொல்லுவா. தைரியமா இருக்கணும்னும் சொல்லுவா. ஆனால் அப்போ அதெல்லாம் புரியாது, தெரியாது.டூ விட்டவங்க நம்மளைப் பார்த்து, "டூ, டூ, டுப்பாக்கி, போலீஸ்காரன் பொண்டாட்டி"னு பாட்டு வேறே பாடுவாங்களா! துக்கம் இன்னும் ஜாஸ்தியாகும். ஒரு தரம் தாங்க முடியாம நான்,,"டூ விட்டா விட்டுக்கோ, டா, டா டப்பி, டப்பிக்காரன் டாண்டாட்டி"னு திருப்பிச் சொல்ல, அப்புறம் இது எங்க வீட்டுக் குடும்பப் பாட்டாய் மாறிடுச்சு.(முக்கியமாய் இதை எழுத நினைச்சுட்டு ஆன்லைனிலே எழுதினேனா?? விட்டுப் போயிருக்கு! இப்போத் தான் நினைப்பு வந்தது.)

சும்மா டூ மட்டும் விட்டாலே மனசுக்கு துக்கமா இருக்கும். அதிலும் சிலர் ஆனை மேலே, குதிரை மேலே டூ விடுவாங்க. அப்போ உலகமே வெறுத்துட்டாப்பல ரொம்பவே வேதனையா இருக்கும். அதிலும் மதுரை மீனாக்ஷிக்கு த.பி. சொக்கலால் ராம்சேட் ஒட்டகங்கள் பரிசளிச்சதுக்கு அப்புறம் ஒட்டகத்தின் மேலே கூட டூ விட்டிருக்கோம். பொதுவா நான் யாரோடயும் டூ விடறதில்லை. யாரானும் டூ விட்டால் கூட அவங்களைக் கெஞ்சி, கொஞ்சி சமாதானம் பண்ணிண்டுடுவேன். என்றாலும் சில சமயங்களில் இந்த டூ படுத்தின பாடு இருக்கே மறக்கவே முடியாது. என்னோட டூ விட்டு, பள்ளிப் பருவத்து நினைவுகளையும் , பல நண்பர்களையும், அவங்க விட்ட டூவையும் நினைக்க வைக்கச் செய்த இந்த டூவின் மகத்துவம் சொல்லி முடியாது.

வலை உலக நண்பர்கள் அனைவரோடும் டூ விடறதே இல்லை. சேத்திதான். சேர்த்தி தான், வழக்குச் சொல்லில் சேத்தினு வரும்னு நினைக்கிறேன். :)))))))))))))))) பிள்ளையார் கூட மட்டும் அப்போஅப்போ டூ விடுவேன். அதை இதிலே எழுத மறந்திருக்கேன். ஏன்னா, பிள்ளையார்தானே நாம டூவிட்டாக் கூடத் திருப்பி டூ விட்டு நம்மை அழ வைக்க மாட்டார்.

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்

கண்ணனை என்ன செய்யலாம்?


மறுநாள் அதிகாலை நேரம், பொழுது புலர இன்னும் ஒரு நாழிகை இருக்கையில் ஹூக்கு கப்பலின் முன்பக்கம் தற்செயலாக வந்தான். வந்தவன் அதிர்ச்சியில் உறைந்தான். தன் கண்களைத் துடைத்துவிட்டுக்கொண்டு, கசக்கிவிட்டுக் கொண்டு, தன்னைக் கிள்ளிப் பார்த்துக்கொண்டு, பல விதங்களிலும் பார்த்தும், அவனால் தன் கண்களை நம்பமுடியவில்லை. அங்கே சூரியன் உதிக்கும் திசையை நோக்கி அமர்ந்து காலை அநுஷ்டானங்களைச் செய்வது யார்?? கிருஷ்ணனும், உத்தவனும். என்ன இது? இருவரையும் கூண்டில் அடைத்துப் பெரிய பூட்டையும் போட்டல்லவோ பூட்டினேன்? இங்கே எப்படி இவர்கள்? இது என்ன மாயம்? அதிசயம்? இந்தப் பையனுக்கு உண்மையிலேயே தெய்வீக சக்தி உள்ளதா? அல்லது சின்னச் சின்ன சித்துவேலைகளைக் கற்று வைத்திருக்கிறானோ? ஓட்டமாய்க் கப்பலின் கீழ்ப்பகுதிக்கு ஓடிக் கூண்டு வைத்திருக்கும் இடம் சென்று அங்கே அவர்கள் இருவரும் இருப்பதை உறுதி செய்து கொள்ள நினைத்தான். ஓடிப் போய்ப் பார்த்தான். கூண்டு காலியாக இருந்தது. எந்த இடத்தில் கூண்டின் கதவை அல்லது அதன் கம்பிகளை உடைத்திருக்கமுடியும் எனக் கூர்மையாகக் கவனித்தான். எல்லாமே சரியாக இருந்தது. எங்கேயும் எந்தத் தப்பும் நடக்கவில்லை. கூண்டின் கதவுகளும் உடைக்கப்படவில்லை. கம்பிகளும் வளைக்கப்படவில்லை. அப்போ??? எப்படி இது நடந்தது??

ஹூக்குவிற்கு எதுவுமே புரியவில்லை. விளங்கவில்லை. எங்கிருந்தோ வந்த இரு பையன்கள், ஏதோ கெட்ட சூன்யக் காரங்களோ இவர்கள்? காற்றில் நடப்பார்களோ? கடல் நீரின் மேலும் நடப்பார்களோ?? கடவுளே, இப்படிப்பட்டவர்களின் கோபத்தால் பல வீடுகளும், பல மக்களுக்கும் நாசம் விளையுமோ?? இவர்களை ஏன் நம் கப்பல் தலைவர் அநுமதித்தார்?? நம்மை விடவும் இவர்கள் கெடுதலைச் செய்வார்களோ? யாருக்கும் பயப்படமாட்டார்கள் போல் தெரிகிறதே. இப்போ இந்தக் கூண்டிலிருந்து எப்படித் தப்பினார்கள்? அதுவும் கூண்டின் எந்தப் பாகமும் உடையாமல்?? ம்ம்ம்ம்ம்??? எதுக்கும் நம் எஜமானிடம் சொல்லிவிடவேண்டும் இவர்களைப் பற்றி. ஹுல்லுவையும் அழைத்துக்கொண்டே போய்ச் சொல்லலாம். ஹூக்கு தன் தலைவன் பாஞ்சஜனாவிடம் சொல்லிவிட்டு, அந்த இரு இளைஞர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டி ஹூல்லுவையும், தங்கள் சாட்டைகளையும் எடுத்துக்கொண்டு மீண்டும் கப்பலின் முன்பக்கம் வந்தான். பாஞ்சஜனா அங்கே நின்றுகொண்டிருந்தான். அவன் கண்களில் கோபத் தீ கொழுந்து விட்டெரிந்தது. கிருஷ்ணனையும் உத்தவனையும் பார்த்து, “எங்கே போயிருந்தீர்கள் இருவரும்? நேற்றிரவெல்லாம் எங்கே உறங்கினீர்கள்?” என வினவினான்.

கண்ணன் சற்றே அலக்ஷியமாக, “ம்ம்ம்ம்???” என்றான். பின்னர் சிறிய ஒரு மென்னகையுடன், “ஹூக்கு சொல்லவில்லை?? உன்னிடம் தண்டனை வாங்கிய அந்தச் சிறுவனுக்குத் தேறுதல் கூறி அவன் புண்களுக்கு மருந்திட்டு அவனைத் தூங்க வைத்தோம்.” என்றான்.

“என்ன அலட்சியம்?? என்ன தைரியம்?? உங்கள் வேலை அதுவன்று.” என்றான் பாஞ்சஜனா.
கண்ணன் முகத்தில் மீண்டும் புன்னகை சிரிப்பாக மலர்ந்தது. “ஆம், ஆம், அது எங்கள் வேலை அல்லதான். ஆனால் அது எங்கள் தர்மம். எங்களுக்கு விதிக்கப்பட்ட ஒன்று. நீ அவனுக்குத் துன்பத்தையும், வலியையும் கொடுத்தாய். அந்தத் துன்பத்தில் இருந்தும், வலியிலிருந்தும் அவனை விடுவிக்கச் சிறு முயற்சி எடுத்துக்கொண்டோம். அது எங்கள் தர்மம்.” மீண்டும் கண்ணன் அவனைப் பார்த்துக் கொண்டே பிடிவாதம் பிடித்துக்கொண்டிருக்கும் குழந்தைக்கு ஒரு தாய் எப்படிப் புரிய வைப்பாளோ அவ்வாறு அதே அன்பு குரலில் தொனிக்க, முகத்திலும் அன்பைக் காட்டியவண்ணமே சொன்னான்.

“தண்டனை அளிக்கப்பட்டவர்களைத் தனிமையிலே தான் விடவேண்டும் என்பது என் கண்டிப்பான கட்டளை. அதை அறிய மாட்டீர்களா இருவரும்? அதனால் போனீர்களோ?” பாஞ்சஜனாவிற்குக் கிருஷ்ணனின் அழகான, மென்மையான உடலில் சாட்டை அடி பட்டால் விலை போகமாட்டானே என்ற கவலை. ஆகவே அவனுக்குத் தெரியாமல் செய்துவிட்டான் என்ற சாக்கில் தண்டனையை நிறுத்தி வைக்கலாம் என நினைத்தான் போலும். ஆனால் கண்ணனோ, “எங்களுக்கு நன்றாகத் தெரியுமே! தெரிந்தேதான் போனோம். எங்கள் தர்மத்தை நாங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் கைவிடமுடியாது. காயம்பட்டு மனத்துயரம் நிரம்பி உள்ளவனுக்கு உதவியே ஆகவேண்டும்.”

“என்ன துணிச்சல் உனக்கு? இங்கே நீ தலைவனா? நான் தலைவனா? என்ன அவமரியாதை?? மிருகங்களா நீங்கள்? ம்ம்ம்ம்ம்…, மறந்தே விட்டேனே, ஹூக்கு உங்கள் இருவரையும் கூண்டில் அல்லவோ அடைத்திருந்ததாய்ச் சொன்னான்?”

“ஆம், கூண்டில் தான் இருந்தோம்.”

“”ஆஹா, கூண்டை உடைத்துக்கொண்டு வந்திருக்கிறீர்களா?? உங்களை…… உங்களை……..”

கிருஷ்ணன் கலகலவென்று சிரித்தான். அவனின் அலக்ஷியத்தைப் பார்த்த பாஞ்சஜனாவின் கோபத்துக்கு இன்னும் எண்ணெய் வார்த்தாற்போல் ஆயிற்று. “எப்படி வெளியே வந்தீர்கள்?” அவன் போட்ட சப்தத்தில் கப்பலில் இருந்த அனைவரும் ஒவ்வொருவராக அங்கே கூட ஆரம்பித்தனர். அனைவர் கண்ணெதிரேயும் இந்த இரு இளைஞர்களும் தங்கள் வாழ்நாளில் மறக்கமுடியாத அளவிற்குத் தண்டனை கொடுக்கவேண்டும் என்று பாஞ்சஜனா எண்ணினான். ஹுல்லுவைக் கூப்பிட்டான்.ஹூக்குவையும் அழைத்தான். ஏற்கெனவே இவர்கள் சூன்யக்காரர்கள், கெட்ட ஆவி என நினைத்துக்கொண்டு அதையே ஹூல்லுவிடமும் சொல்லி இருந்தான் ஹூக்கு. இருவருக்கும் இப்போது நடுக்கம் ஏற்பட்டது. என்றாலும் எஜமானின் கட்டளையையும் மீறமுடியாது. மெல்ல மெல்ல இருவரும் சென்றனர். ஹூக்குவிற்குப் போகும்போதே உடல் நடுங்கியது; திடீரென ஒரு பெரிய காற்று வீசியது . அந்தக் காற்றில் அலைகள் மேலே எழும்பக் கப்பல் பேயாட்டம் ஆடியது. வானம் இருண்டு வர ஆரம்பித்தது. ஹூக்குவிற்கு இது சாத்தானின் வேலை என்றும் கெட்ட ஆவிகள் கோபமாய் இருக்கும்போது இப்படிப் புயலையும், மழையையும் வரவழைத்து அனைவரையும் கஷ்டப்படுத்தும் என்றும் அறிந்திருந்தான். ஆகவே இது இந்த இரு இளைஞர்களின் வேலையே என எண்ணிக்கொண்டே கிருஷ்ணனின் அருகே தயக்கத்தோடேயே சென்றான்.

கண்ணனோ அவனை ஒரு சிரிப்போடு வரவேற்றான். “ஹூக்கு, இருவரையும் கூண்டில் அடைத்து நன்கு பூட்டினாயா? நிச்சயமா அது?” எனப் பாஞ்சஜனா வினாவினான். “ஒருவேளை உன் கனவாய் இருந்திருந்தால்?” என்றும் சந்தேகப்பட்டான். ஹூக்கு நிச்சயமாய் மறுத்தான். தான் தன் கைகளாலேயே கூண்டில் இருவரையும் அடைத்துப் பூட்டியதை உறுதிபடச் சொன்னான். பின்னர் எப்படி வெளியே வந்தார்கள்?? எஜமானனின் இந்தக் கேள்விக்குப் பதில் தெரியாமல், சொல்ல முடியாமல் ஹூக்குவின் உதடுகள் நடுங்கின. கூண்டு உடைக்கப்படவில்லை என்றும் கூறினான். பாஞ்சஜனா நம்பவில்லை. தன் பிரியத்துக்கு உகந்த மருமகனைக் கூப்பிட்டுப் போய்க் கூண்டைப் பார்த்துவரச் சொன்னான். அவனும் சென்று கூண்டு நன்றாகவே இருப்பதாகவும், எந்த இடத்திலும் உடைக்கப்படவில்லை என்றும் தெரிவித்தான். அதிர்ந்து போனான் பாஞ்ச ஜனா.

“என்ன???”

நீண்ட மெளனம் நிலவியது அங்கே. யாருமே பேசவில்லை. கப்பலின் மற்றத் தொழிலாளர்கள் நடுங்கியவண்ணம் பார்த்துக்கொண்டிருந்தனர். பாஞ்சஜனா கண்ணனைப் பார்த்து, “எப்படி வெளியேறினாய்?” என்று கேட்டான். “நீயே கண்டுபிடி!”என்று கண்ணன் சர்வ அலக்ஷியமாய்ச் சொன்னான். ஆனாலும் அவன் முகத்தில் காட்டிய விநயம், மென்னகை இரண்டையும் பார்த்த பாஞ்சஜனாவிற்கு அவனைத் தண்டிக்க மனம் வரவில்லை,

“சரி, போனால் போகட்டும், தம்பி, இனி இம்மாதிரிச் செய்யாதே! நான் எவருக்குத் தண்டனை அளித்தாலும், நீ அதில் தலையிடாதே! நீ உண்டு, உன் வேலை உண்டு என்று இருந்துவிடு. இம்முறை உன்னை மன்னித்தேன்!” என்றான் பாஞ்சஜனா.

கண்ணனோ, “ம்ஹும், அது மட்டும் என்னால் முடியாது அப்பனே! நீ அப்பாவி ஒருவனைத் தண்டிப்பாய், நான் பார்த்துக்கொண்டிருக்க முடியுமா?? இனி நீ உன் சாட்டையைத் தூக்காதே! நானும் பேசாமல் இருக்கிறேன்.” என்றான் கண்ணன்.

“நீ யார் எனக்கு ஆணையிட! உன்னால் முடியாத காரியத்தில் தலையிடாதே! நான் எவருக்கு வேண்டுமானாலும் தண்டனை அளிப்பேன். உனக்கு என்ன வந்தது!” என்றான் பாஞ்சஜனா.

“நீ சாட்டையால் அடிக்கும் ஒவ்வொருவருக்கும் என் அன்பான கவனிப்பு நிச்சயம் உண்டு.” கண்ணன்.

“உன்னால் முடியாது.” பாஞ்சஜனா.

“பார்ப்போம்!” கண்ணன்.
“ஹூக்கு, அந்தச் சாட்டையை எடு, இருவருமாய்ச் சேர்ந்து இந்தக் கண்ணனைச் சாட்டையால் நாலு முறைகள் அடியுங்கள்.” என்றான் பாஞ்சஜனா. அதைப் பார்த்துக்கொண்டிருந்த மாலுமி பிக்ருவின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.

Monday, March 01, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம்பாகம்!

கண்ணனை அடைக்க முடியுமா???


மறுநாள் காலை ராது தன்னுடைய காயங்களைக் கூட நினைக்காமல் வழக்கம்போல் வேலை செய்ய ஆரம்பித்தான். கப்பலின் மாலுமி ஏதோ தைலத்தைத் தடவி யிருந்தான். ராதுவின் மனம் பூராவும் கண்ணன் நேற்றிரவு தனக்குக் கிடைக்கப் போகும் தண்டனையைப் பற்றிக் கூட எண்ணாமல் பணிவிடைசெய்து தன்னைத் தேற்றியதே நிரம்பி இருந்தது. மெல்ல, மெல்லக் கப்பலின் மற்றப் பணியாளர்களுக்கும் இந்த விஷயம் பரவ, அவர்களுக்குள் மெல்லக் கிசுகிசுத்துப் பேசிக்கொண்டனர். அனைத்து மாலுமிகளும் புதிதாய் வந்த இரு இளைஞர்களின் நன்னடத்தையையும், அன்பையும், கருணையையும் பார்த்து வியந்தனர். பாஞ்சஜனாவின் கொடூரத்தால் பாலைவனம் போல் காய்ந்திருந்த அவர்கள் மனதில் ஊற்றுப் போல் அன்பு பெருக்கெடுத்தது. அது முழுதும் கண்ணனுக்காகவே என நிரம்பி வழிந்தது. பாஞ்சஜனாவும், கண்ணனிடமும், உத்தவனிடமும் அன்பாகவே நடந்துகொண்டான். அவனுடைய மெய்க்காவலர்களான இரு ராக்ஷசர்களும் வழக்கம்போல் சாட்டையும், கையுமாக அலைந்தனர்.

மூன்றாம் நாள் கப்பல் ஏதோ ஒரு துறைமுகத்தில் நங்கூரமிட்டு நின்றது. அது குஷஸ்தலை எனச் சொல்லப் பட்டது. அந்த நாட்டு அரசனான குக்குடுமின்னைத் துரத்திவிட்டு புண்யாஜனா ராக்ஷசர்கள் இதைக் கைப்பற்றிவிட்டதாகவும் கூறப்பட்டது. கப்பலில் இருந்து இறங்கிக் கரைக்குச் சென்று அவர்கள் தங்கள் கப்பலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டே அல்லது பெற்றுக்கொண்டோ வந்தனர். மறுநாள் காலையில் ஒரு சின்னஞ்சிறு சிறுவன் வயது பதினாறு கூட இருக்காது. பாஞ்சஜனாவின் தண்டனைக்குக் காத்து நின்றான். அவன் செய்த தவறு மரியாதையுடன் நடக்கவில்லை என்பதாம். பாஞ்சஜனாவின் உத்தரவின் பேரில் ஹுல்லு அவனுக்கு சாட்டை அடிகளை வழங்க சிறுவன் துடிதுடித்தான். பாஞ்சஜனாவோ அதை ஓர் சிரிப்போடு பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான். அன்றிரவும் கண்ணனும், உத்தவனும் தண்டனை பெற்றுக்கொண்டு துடிப்பவனைப் போய்ப் பார்த்து ஆறுதல் மொழிகள் சொல்லி, தேற்றி, சாட்டை அடியினால் பட்டிருக்கும் காயத்திற்கு மருந்தையும் இட்டனர். அவனுக்குத் தங்கள் பங்குக்கு அளிக்கப் பட்ட நீரிலிருந்து குடிக்க நீரும், அருந்த உணவும் அளித்தனர். கப்பலின் மாலுமிகள் கொஞ்சம் ஆச்சரியத்தோடே வந்து, வந்து பார்த்துவிட்டுச் சென்றனர். பாஞ்சஜனாவின் செய்கையை இவ்வளவு தைரியமாகவும் ஒருவனால் எதிர்க்கமுடியுமா??

அந்தச் சிறுவன் இந்த செளராஷ்டிரக் கடற்கரையில் எங்கேயோ ஓர் இடத்திலிருந்து இந்த ராக்ஷசர்களால் கடத்திக்கொண்டுவரப்பட்டவன் என்றும், அவன் இங்கு வந்து சில மாதங்கள் ஆயிற்று என்றும், அவனுக்கு ஆதரவு அளிக்கவோ, அன்பைக் காட்டவோ யாருமே இல்லை என்பதால் மனம் நொந்து வெம்பிப் போய் இருக்கிறான் என்பதும் கண்ணனுக்குப் புரிந்தது. தன் பூரண அன்பையும் அவனிடம் பொழிந்து கண்ணன் அவனுக்குத் தேறுதல் சொன்னான். அந்தப் பையனைத் தன் மடியில் போட்டுக்கொண்டு ஒரு தாயைப் போல் அவனுக்குப் பணிவிடைகள் செய்தான். அழுதுகொண்டிருந்த அந்த இளைஞன் மெல்ல, மெல்ல தன்னை மறந்து தூங்க ஆரம்பித்தான். ஒரு தாயைப் போலவே தன் மடியிலிருந்து அவனை எடுத்துக் கீழே விட்ட கண்ணனுக்குத் தனக்குப் பின்னால் யாரோ நிற்கின்றார்கள், தன் செயல்களைப் பார்க்கிறார்கள் என்ற உணர்வு ஏற்பட்டது. சட்டெனத் திரும்பிப் பார்த்தான். ஹூக்கு! ராக்ஷச இரட்டையர்களில் ஒருவனான ஹூக்கு கண்ணனைச் சாட்டையால் தாக்கச் சமயம் பார்த்துக்கொண்டிருந்தான். கண்ணன் மெதுவாக உத்தவனுக்கு எச்சரிக்கைக் குரல் கொடுத்தான். “அசையாதே! உத்தவா! அப்படியே நில்! இந்த ராக்ஷதனை எதிர்கொள்ளுவோம்!” என்றான் கண்ணன்.

முதலில் யாரோவென நினைத்த ஹூக்குவிற்கு இப்போது இந்த இரு இளைஞர்களையும் அடையாளம் புரிந்தது. தன் எஜமானின் மனதுக்கு உகந்தவர்கள் என்பதும் புரிந்தது. ஆனாலும் அவனுக்குக் கட்டளை தவறு செய்பவர்களைப் பிடித்து இழுத்துவருவது ஒன்றே. அதிலிருந்து அவன் மீற முடியாது. இவர்கள் யாரானால் என்ன?? இழுத்துச் செல்வோம் எஜமானிடம். ஹூக்கு இருவரையும் தோள்களைப் பற்றி இழுத்துக்கொண்டே கண்ணனுக்கு விளங்காத ஏதோ ஓர் மொழியில் என்னவோ சொன்னான். பின்னர் இருவரையும் தரதரவென்று இழுத்துக்கொண்டே போனான்.

ஏற்கெனவே அடி வாங்கிக்கொண்டு கிருஷ்ணனால் தூங்க வைக்கப்பட்ட பையனும் எழுந்து நடந்ததைப் பார்த்தான். பிக்ரு என்ன செய்கிறான் எனக் கவனித்தான். இதை ஒன்றையுமே அறியாதவன் போல அவன் கப்பல் சரியான திசையில் தான் செல்கிறதா என்பதை அறிபவன் போல விண்ணின் நக்ஷத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவற்றிலிருந்து அவன் தன் கண்களை அகற்றவே இல்லை. கண்ணனும், உத்தவனும் கீழே சாமான்கள் கொட்டி வைக்கும் இடத்திற்குக் கொண்டு செல்லப் பட்டு அங்கே இருந்த ஒரு மரக் கூண்டில் அடைக்கப் பட்டனர். அதை நன்கு ஒரு பெரிய பூட்டினால் பூட்டினான் அந்த ஹூக்கு என்னும் ராக்ஷசன். பின்னர் அவன் சென்றுவிட்டான். கூண்டு வைத்திருந்த இடமும் சரி, கூண்டும் சரி, காற்றுக்குக் கொஞ்சமும் இடம் கொடுக்காவண்ணம் அமைக்கப் பட்டிருந்தது. அதோடு அங்கே குவிக்கப் பட்டிருந்த வித விதமான மளிகைப் பொருட்கள், மற்றும் பல்வேறு பொருட்களின் வாசனைகளும் சேர்ந்த ஒரு கலவை மூச்சை அடக்க வைத்தது. சீக்கிரத்திலே உத்தவனுக்கு வாந்தி வந்துவிட்டது.

கொஞ்ச நேரம் ஆனதும் கண்ணன் மெல்ல மெல்ல உத்தவனையும் தூங்கச் சொல்லிவிட்டுத் தானும் தூங்க யத்தனித்தான். யாரோ அங்கே வந்திருக்கிறார்கள். மெல்லிதாக மூச்சுவிடும் சப்தமும், மெதுவாக நடமாடும் சப்தமும் கேட்டது. கண்ணன் எச்சரிக்கை அடைந்தான். “கிருஷ்ணா! என்ன செய்கிறாய்?” மெல்ல மெல்ல ரகசியம் பேசுவது போல் ஒரு குரல்.

அப்பாடா, அது பிக்ருதான் வேறே யாருமில்லை. கண்ணனும், “என்ன விஷயம்?” என்று விசாரித்தான். “கப்பல் தலைவன் கப்பலின் யாத்திரை செல்லும் திசையை மாற்றச் சொல்லிவிட்டான். நாம் வைவஸ்வதபுரிக்குப் போகப் போவதில்லை” என்றான் பிக்ரு.
“ஓ, பின்னர் எங்கே போகிறோம்?”

“மிக மிக தூரத்தில், ஷோனிதாபுரி என்னும் நகரம்!” என்றான் பிக்ரு. கண்ணனுக்கு முதல்நாள் குஷஸ்தலையில் நிறுத்தி ஏன் அவ்வளவு பொருட்கள் வாங்கப்பட்டன என்பது புரிந்தது. “ம்ம்ம்ம்ம்..,, பாஞ்சஜனாவின் எண்ணம் என்னவாய் இருக்கும்? நீ என்ன நினைக்கிறாய் பிக்ரு?” கண்ணன் கேட்டான்.

“வேறு பக்கம் சென்று தொலைதூரத்து நாடுகளில் ஏதாவதொன்றில் உன்னை விற்கப் போகிறான். யாரேனும் அரசனுக்கு விற்பான். நிறையப் பணம் கிடைக்குமே அவனுக்கு. அவன் பணத்தாசை பிடித்தவன்.”

“பிக்ரு, நாம் எப்படியேனும் வைவஸ்வதபுரி போயாகவேண்டும். எனக்குப் புநர்தத்தனைப் பார்த்தே ஆகவேண்டுமே!”

“ஆஹா, அவன் விடமாட்டான், கண்ணா, விடமாட்டான். போகமுடியாது!”

“சரி, அப்போ அவனுக்குத் தெரியாமல் அவனின் அநுமதி இல்லாமலேயே இந்தக் காரியத்தைச் செய்தாகவேண்டும். உன்னிடம் இந்தக் கூண்டின் சாவி இருக்கிறதா?”

“ஹூக்குவிடம் அன்றோ உள்ளது?”

“அப்போ நான் கூண்டை உடைத்துக்கொண்டு வரட்டுமா?”

“வேண்டாம், கண்ணா, வேண்டாம், பின்னர் அதற்கும் சேர்த்துத் தண்டனை கிட்டும் உனக்கு. உன்னைக் கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.”

“ம்ம்ம்ம்??? சரி, நான் இந்தக் கூண்டின் கம்பிகளை உடைத்துக்கொண்டு வெளியே வந்துவிடுகிறேன். ராதுவால் காலை விடிவதற்குள்ளாக இதைச் சரி செய்யமுடியுமா என்று கேள்” என்றான் கண்ணன். கண்ணன் முகத்தைப் பார்த்த பிக்ரு அவன் உண்மையாகவே சொல்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு, ராதுவைத் தேடிக்கொண்டு போனான். அவனைக் கேட்டுப் பார்க்கவேண்டும் என்று சொல்லிக் கொண்டே போனான். கண்ணனோ அவனால் முடியாவிட்டாலும் தங்களால் இந்தக் கூண்டில் இருக்கமுடியாது என்றும் உடைத்துக்கொண்டு வெளிவரப் போவதாயும் அறிவித்தான். கண்ணனும், உத்தவனும் கலந்து பேசிக்கொண்டனர். கூண்டை நன்கு ஆராய்ந்தனர். எந்தப் பக்கம் கம்பிகள் ஆட்டம் கொடுக்கின்றன என்பதைக் கண்டுகொண்டு அந்தக் கம்பிகளைப் பிளந்துகொண்டு இருவரும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள். பின்னர் ராதுவைத் தேடிக்கொண்டு இருவரும் சென்றனர். வழியிலேயே கீழே வந்துகொண்டிருந்த ராதுவைப் பார்த்தார்கள். ராது ஒருவருக்கும் தெரியாமல் மறைந்து மறைந்து வந்து கொண்டிருந்தான். கிருஷ்ணன் புன்னகை புரிந்தான்.