எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, February 02, 2024

கோலத்தில் கொண்டாடிய பண்டிகை!


 பால்கனியில் கனுப்பிடி வைச்சேன். மொட்டை மாடிக்கு இப்போல்லாம் ஏற முடியாததால் இங்கேயே வைச்சுடுவேன். நான் மட்டும் தான் என்பதால் ஒற்றை இலை போடாமல் இரண்டு இலைகள் போட்டு இரண்டிலும் வைப்பேன். கூட யாரேனும் இருந்தால் எனக்குத் தனி இலை, அவங்களுக்குத் தனி இலைனு இரண்டு ஆயிடும். ஆனால் யாருமே இல்லையே!



கனுவன்று போட்ட கோலம்.


 
பொங்கலன்று போட்ட கோலம்.



இந்த வருஷம் பூஜை பண்ண முடியலை என்பதால் பால்கனியில் சூரியக் கோலம் போட்டு எல்லாம் எடுத்து வைச்சுப் பண்ணாமல் பொங்கல், அன்னம், அவிசு, காய்கள், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய், மஞ்சள் கொத்து, கரும்பு ஆகியவ்ற்றை சுவாமிக்கு எதிரே வைத்து முடிஞ்ச மட்டும் கொண்டு வைத்துக் கொண்டு நிவேதனம் மட்டும் பண்ணினேன். அதுக்குள்ளேயும் அவருக்குப் பசி அதிகமாகி விட்டது. நேரம் ஆயிடுச்சே! :( பின்னர் சாப்பிடும்போது சாப்பாடு இறங்கலை . கஷ்டமாக இருந்தது. படம் எடுக்க முடியலை. ஒரேயடியாகப் பரத்தி இருந்ததால் மற்றவற்றை எடுத்து வைச்சுட்டு முக்கியமான பொங்கல், அவிசு மட்டும் படம் எடுத்துப் போட்டிருக்கேன்.


போகி அன்று போட்ட கோலம்

குட்டிக் குஞ்சுலுவிடம் பொங்கல் தினங்களை இந்தியாவின் தாங்க்ஸ் கிவிங் டே எனச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தேன். முதல்நாள் என்ன செய்வோம்,என்பதை வீடு சுத்தம் செய்து பண்டிகை நாளுக்காகத் தயார் செய்வோம் என்றும்  இரண்டாம் நாளான பொங்கலன்று சூரிய, சந்திரர்க்கும் மற்றவர்களுக்கும் நன்றி தெரிவிப்போம் என்றும் சொல்லிவிட்டு மூன்றாம் நாளன்று மாடு, கன்று, பறவைகளுக்கு உணவு கொடுப்பதன் மூலம் அவங்களுக்கும் இயற்கையைப் பேணி வருவதற்கான நன்றியைச் சொல்லுவோம் என்றும் சொன்னேன். அதோடு சகோதரர்களுக்காகச் சகோதரிகள் பிரார்த்தனை செய்து கொள்ளுவார்கள் என்றும் சொன்னேன். எல்லாமே வாய்ஸ் மெசேஜ் அதான். அதுவும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பியது. ஊருக்குப் போகும் அவசரத்தில்.

Sunday, January 07, 2024

என்ன தான் நடந்தது?

 நான் தான் முடியாமல் அடிக்கடி படுத்துப்பேன் என்பதால் எனக்கு முடியலைனால் யாரும் அதைத் தீவிரமாக எடுத்துக்கறதில்லை. ஆனால் இம்முறை நம்ம ரங்க்ஸ் படுத்து விட்டார். நவம்பர் 25ம் தேதிக்கு முன்னாடி இருந்தே முடியலை, முடியலைனு சொல்லிட்டு இருந்தார். மருத்துவரிடம் போகச் சொன்னால் போகமாட்டேன் என அடம். அன்னிக்கு சனிக்கிழமை காலம்பர மறுநாள் கார்த்திகைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரச் சென்றபோது மார்க்கெட்டில் வண்டியைப் போட்டுக் கொண்டு விழுந்திருக்கார். சொல்லவே இல்லை. எங்கே எப்படி அடிபட்டதுனு தெரியலை. வீட்டுக்கு வந்து படுத்துக் கொண்டு விட்டார். குளிக்கலை. உம்மாச்சிங்களுக்குப் பூக்கள் எடுத்து வைக்கலை. என்னனு கேட்டால் முடியலை தொந்திரவு பண்ணாதே என்றார். சரினு விட்டுட்டேன். பதினோரு மணிக்கு எழுந்தவர் குளிக்கக் கிளம்ப நான் வற்புறுத்தி மருத்துவரிடம் அனுப்பி வைத்தேன். அங்கேயும் வண்டியில் போயிருக்கார். வண்டியை ஸ்டான்ட் போட்டு நிறுத்த முடியாலை பின்னர் மருந்துக்கடைக்காரர் பார்த்துட்டு உதவி செய்து மருத்துவரிடம் அனுப்பி வைத்தால் 102க்கு மேல் ஜூரம் இருந்திருக்கு. மருந்தை ஐவியில் செலுத்தி எச்சரிக்கை செய்து ஒரு சில பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்திருக்கார். வீட்டுக்கு வந்து ரசம் சாதம் சாப்பிட்டு மருந்துகளை எடுத்துக் கொண்டு படுத்தவர் சாயந்திரம் தான் எழுந்தார். இப்போ ஒண்ணும் இல்லைனும் சொன்னார். 

மறுநாள் கார்த்திகைக்கு வேன்டிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டு நடு நடுவே இவரையும் பார்த்துக் கொண்டு இருந்தேன். கார்த்திகை அன்னிக்குக் காலம்பர இருந்து எழுந்துக்கவே இல்லை. ஆனால் என்னிடம் நீ தனியா எப்படி எல்லாவிளக்கையும் ஏத்திக் கொண்டு வைக்கப் போறேனு மட்டும் கேட்டார். எல்லா விளக்குகளையும் ஏற்றவில்லை. கொஞ்சமாத்தான் ஏத்தப் போறேன்னு சொல்லிட்டுக் கார்த்திகைப் பண்டிகையையும் கொண்டாடி முடிச்சாசு. 

திங்களன்று பரிசோதனை முடிவுகளுடன் மருத்துவரைப் பார்க்கலாம் என்றால் அவர் வேறொரு மருத்துவரைச் சொல்ல சரினு அவரைப் பார்க்க இருவரும் போனோம். அப்போக் கூட என்னை வர வேண்டாம், நான் மட்டும் போறேன்னு தான் சொன்னார். நான் பிடிவாதமாகக் கூடவே சென்றேன்.முதல் நாளில் இருந்தே தலையில் குத்துவலி மண்டையை உடைக்கிறாப்போல் இருக்குனு சொல்லிட்டு இருந்தார். இந்த மருத்துவர் பார்த்துட்டு ஒரு ஊசி போட்டு அனுப்பினார். சாயந்திரம் கொஞ்சம் சரியாப் போனாப்போல் இருந்தது திடீரென அதிகமாக ஒரே கத்தல், புலம்பல். இரவு நரகமாக இருந்தது. அதுக்குள்ளே இது நரம்பு சம்பந்தமான பிரச்னை என்பதால் அதற்கேற்ற ஒரு மருத்துவ மனை நியூரோ ஒன் என்னும் பெயரில் சத்திரம் பேருந்து நிலையம் அருகே இருப்பதாகவும் அவங்களைத் தொடர்பு கொள்ளும்படியும் நம்ம ரங்க்ஸே சொல்ல அவங்களைத் தொடர்பு கொண்டுப் பேசினேன். உடனே வரச் சொன்னாங்க. ஆனால் நம்மவரோ அன்று செவ்வாய்க்கிழமை என்பதால் மறுத்து விட்டார். இருந்த மாத்திரைகளை வைத்துக் கொண்டு வலியைக் கொஞ்சம் குறைக்க முயற்சி செய்தோம். ஆனால் அன்றிரவு முதல் நாளை விட மோசமாக ஆகி விட்டது. நடு இரவில் திடீரெனப் படுக்கையில் ஆளைக் காணோம். திகிலுடன் தேடினால் குரல் மட்டும் வருது, ஆள் எங்கேனு தெரியலை. அப்புறம் பார்த்தால் பொதுக் கழிவறை ஒண்ணு உண்டு. அதில் விளக்கே போடாமல் கம்மோடில் போய் உட்கார்ந்திருந்தார். மெல்ல மெல்ல பேசிப் பாதி தூக்கி, பாதி இழுத்துக் கொண்டு வந்து படுக்கையில் சேர்த்தேன். இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்து விடிந்ததும் முதலில் அந்த மருத்துவமனைக்குத் தொலைபேசி மருத்துவரைப் பார்க்க நேரம் குறித்துக் கொண்டேன். பத்தரைக்கு மேல் தான் வருவாராம்.

மனடில் கவலை/பயம். பையர், பெண், என் மைத்துனர் ஆகியோருக்குத் தகவல் கொடுத்துட்டு எதிர் வீட்டு மாமா உதவியுடன் மருத்துவமனை கிளம்பினேன்.

Monday, December 11, 2023

மகாகவிக்கு அஞ்சலி!

 




அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை

அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;

வெந்து தணிந்தது காடு;-தழல்

வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.”


துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்

சோர்ந்துவிட லாகாது பாப்பா!

அன்பு மிகுந்ததெய்வ முண்டு-துன்பம்

அத்தனையும் போக்கிவிடும் பாப்பா!

Tuesday, November 28, 2023

கார்த்திகை நல்லபடியா முடிஞ்சது! இறைவனுக்கு நன்றி!


 



 


  


கார்த்திகை தீபத்திருநாள் படங்கள். இம்முறை கார்த்திகை மன நிறைவுடனும், மகிழ்வுடனும் கொண்டாடினேன் எனில் அது குட்டிக் குஞ்சுலுவால் தான். கார்த்திகைக்கு முன்னாலும் தீபாவளிக்குக் கேட்டுக் கொண்டாற்போல் அது என்னிடம் எல்லாமும் கேட்டு வைத்துக் கொண்டது. அதே போல் ஞாயிறன்று கார்த்திகை தீபம் அங்கே நைஜீரியாவிலும் ஏற்றிக் கொண்டாடினார்கள். பட்டுப்பாவாடை, ப்ளவுஸ் போட்டுக் கொண்டு என்னிடம் காட்டியது. ஒரே ஆட்டம் தான். கொண்டாட்டம் தான். அது மட்டும் இங்கேயே இருந்திருந்தால் என்னும் எண்ணமும் வரத்தான் செய்தது. என்றாலும் இத்தனை ஈடுபாட்டுடன் நம் பாரம்பரியப் பண்டிகைகளைக் கொண்டாடுவதில் அதுக்கு இருந்த சந்தோஷம் அளவிட முடியாத ஒன்று.  குஞ்சுலு என்னிடம் பாட்டி, நீ எத்தனை விளக்கு ஏத்தினே? எனக் கேட்டது. சுமார் 20/25 இருக்கும் என்றேன். அதுங்கிட்டே பத்து விளக்குகள் தானாம். ரொம்ப சோகமாச் சொன்னது. அடுத்த வருஷம் நிறைய ஏத்தலாம்னு சொல்லிட்டு இருந்த விளக்குகளை அவ அம்மா ஏத்தினாள். இது கூடவே நின்னுண்டு பார்த்துட்டு இருந்தது. நிலைப்படியில் எல்லாம் நான் வைச்சிருக்கிறதைப் படத்தில் பார்த்துட்டு அதே போல் அங்கேயும் வைக்கச் சொன்னது. ஒரே ஆட்டம், பாட்டம், குதியாட்டம் தான். கோடி துக்கம் போகும் குழந்தை முகத்திலே என்பார்கள். அதை ஞாயிறன்று அனுபவித்தேன்.

கார்த்திகைக்கு முன்னாலிருந்தே ரங்க்ஸின் உடம்பு சரியில்லாமல் இருந்தது. சரியாக சனிக்கிழமை அன்று காலை ஒரே தலை சுற்றல், நிற்க முடியவில்லை. என்னை இறுக்கப் பிடித்துக் கொண்டிருந்தவர் கீழே விழுந்து விடுவார் போல் இருந்ததால் நல்லவேளையாகப் பக்கத்தில் இருந்த நாற்காலியை மெதுவாக நகர்த்தி அதில் உட்கார வைத்தேன். பின்னர் மருத்துவரிடம் அவர் தானாகவே தான் சென்றார். மருத்துவரோ ஜூரம் மிக அதிகமாக இருப்பதாகச் சொல்லித் தனியே வந்ததுக்குத் திட்டி விட்டுப் பின்னர் மருந்தை ஐவி மூலம் ஏற்றித் தக்கத்துணையோடு வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அன்று படுத்தவர் நேற்றுக் கொஞ்சம் பரவாயில்லை என்னும்படி இருந்தார். நான் ஏதோ முடிந்ததைச் சமைத்துப் பொரிப் பாகு செலுத்திக் கார்த்திகை தீபத்தை நிறைவேற்றினேன். குழந்தையின் வரவும் அதன் சந்தோஷமும் தான் மனதுக்கு ஆறுதலைக் கொடுத்தது. இன்று காலை வரை சரியாக இருந்தவருக்கு மத்தியானத்தில் இருந்து தலையில் மீண்டும் வலி. அவரை நேரில் பார்த்தவர்களுக்கு அவருக்குக் கழுத்துப் பிரச்னை இருப்பது தெரிந்திருக்கும். அதனால் ஏற்பட்ட வலி தலை முழுவதும் வியாபித்துப் பொறுக்க முடியாமல் இருக்கு. 
நாளை நியூரோ மருத்துவரிடம் போக நேரம் கேட்டு வாங்கி இருக்கேன். நாளைக்காலை போகணும். திடீரென ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்தினால் வீட்டில் யாருக்குமே ஒண்ணுமே ஓடலை. பார்க்கலாம் இறைவன் நினைப்பு என்னனு. 

Monday, November 13, 2023

உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி!

 

குளிக்கப் போகும் முன்னர் எல்லாம் எடுத்து வைச்சிருந்த படம்.  சம்புடங்களில் பக்ஷணங்கள். ரிப்பன் பகோடா, மிக்சர், பாதுஷா, லட்டு ஆகியவை மட்டும். வீட்டில் நான் செய்த பாதம் பர்ஃபி   அல்வா,  என்னும் பெயரில். மருந்துப் பொடி கடையில் வாங்கியது இந்த வருஷம் அதைக் கிளறினால் கமர்கட் மாதிரி வந்திருக்கு. என்னோட தீபாவளி மருந்துக்கு ரசிகர்கள் நிறைய உண்டு ஒரு காலத்தில் பாராட்டினவங்க   எல்லோரும்  இதைப் பார்த்தால்   நீயா செய்தது எனக் கேட்டு வியப்பார்கள். :( வயசாச்சு/அதான் உனக்கு  முடியலைனு எல்லோரும் சொன்னாலும் அது நொண்டிச்சாக்கு என எனக்குத் தோணும்.



நெல்லை பார்த்தால் இந்த ரிஃப்லெக்ஷன் இல்லாமல் எடுக்கத் தெரியலைனு கேலி செய்வார். வெங்கட் நவராத்திரிம் போது வந்து ஓர் ஆய்வே நடத்திட்டார். ரிஃப்லெக்ஷன் இருக்கத்தான் இருக்கும் என்கிறார். நெல்லை என்னமோ ஒத்துக்கப் போறதில்லை. என்றாலும் ஸ்ரீராமர் ஒத்துப்பார்.


இதோ! பிரிச்சு வைச்சிருக்கேன் பாருங்க. மேலே உள்ள பிங்க் நிறப் புடைவை தான் நேத்திக்குக் கட்டிண்டேன். எங்க ஊர்ப்பக்கம் (மதுரை) ஒற்றைப் புடைவையாக வைக்கக் கூடாது என்பார்கள். இரண்டு தான் வைக்கணும் என்பார்கள். அப்பாவும் எனக்குப் பாவாடை என்றாலும் 2, புடைவை கட்ட ஆரம்பிச்சதும் 2 புடைவை என்றே எடுத்திருக்கார். ஒரு புடைவை க்ரான்டாக இருக்கும். க்ரான்டாக இருப்பதை தீபாவளிக்குக் கட்டிப்பேன். இப்போவும் அப்படித்தான். குஞ்சுலு செலெக்ஷன் க்ரான்டாக இருந்தது. அதைத் தான் கட்டிண்டேன். 

எல்லோரும் தீபாவளி கொண்டாடி இருப்பீங்க. இங்கேயும் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முடிஞ்சது. ஒரு வாரமாகவே வெடிச் சப்தம் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் பயங்கரமான வெடிச் சப்தம். நேற்று மத்தியானமெல்லாம் படுக்கவே முடியலை. சாயந்திரமாக் குஞ்சுலு வந்தப்போப் பேசவே முடியலை. அதுக்கும் வெடிச் சப்தம் கேட்கணும்னு இருந்ததாலே கேட்டுட்டு இருந்தது. இரண்டு, மூன்று நாட்களாகவே தீபாவளி பற்றிய சந்தேகங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்தது குஞ்சுலு.  என்னிடம் பாட்டி, தீபாவளி கொண்டாடியதும் எனக்குப் படம் எடுத்து அனுப்பு என்றது.

நான் இந்த வருஷம் எந்த பக்ஷணமும் பண்ணவில்லை. போன வருஷம் தேன்குழல் மட்டும் பண்ணிட்டு லாடு ஏதோ பிடித்தேன். இந்த வருஷம் பாதம் பர்ஃபி பண்ணலாம்னு பண்ணினால் அது பாதாம் அல்வாவாக வந்திருக்கு. சரினு பெயரை மாத்திட்டு அதையே எல்லோருக்கும் கொடுத்தாச்சு. நம்ம ரங்க்ஸ் நீ தேன்குழலெல்லாம் பண்ணாதேனு திட்டவட்டமாகச் சொல்லிட்டார். அதை மீறிட்டு என்ன செய்ய முடியும்? காடரர் கிட்டே ஆர்டர் செய்த பக்ஷணங்களையே எல்லோருக்கும் கொடுத்தாச்சு.

குட்டிப் பட்டுக் குஞ்சுலு நாங்கல்லாம் சொன்னதைக் கேட்டுக் கொண்டு நேத்திக்கு அதுவாகவே சீக்கிரமாய் எழுந்து கொண்டு அவ அம்மாவிடம் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டச் சொல்லிக் குளித்துப் புது ட்ரஸ் எல்லாம் போட்டுக் கொண்டு எங்களிடம் காட்டியது.  பாட்டி, நீ சொன்ன மாதிரி நானும் தீபாவளி கொண்டாடினேன் என்று சொன்னது. பட்டாஸுகள் வெடிப்பதைக் கேட்க வேண்டும்/பார்க்க வேண்டும் என்று ஆசை. நமக்கோ அந்தப் புகையே ஒத்துக்காது. என்ன செய்யலாம்னு யோசிச்சப்போ நம்ம வளாகத்தின் வெளியே மேற்குப் பக்கமாக வெடி வெடிக்க அனுமதி கொடுத்திருந்தாங்க. உள்ளே வெடிச்சால் கார் பார்க் நிரம்பி வழிஞ்சது. ஆகவே பாதுகாப்பைக் கருதி வெளியே வெடிச்சாங்க. அதை அசோசியேஷன் தலைவர் வீடியோ எடுத்துப் பகிர்ந்திருந்தார். சரினு குஞ்சுலுவுக்கு அதை அனுப்பிட்டேன். அதுவும் பார்த்து ரசிச்சது.

சென்னையை விட்டு வந்தப்புறமாச் சுண்டல் கலெக்ஷன் குறைஞ்ச மாதிரி தீபாவளி கலெக்ஷனும் குறைஞ்சு போச்சு. எதிர் வீடுங்க இரண்டு மட்டும் தான் கொடுக்கல்/வாங்கல். ஆகவே பக்ஷணங்களை என்ன செய்யலாம்னு மண்டைக்குடைச்சலும் இல்லை. காடரர் கொடுத்திருக்கும் பக்ஷணங்களை விநியோகம் போக மீதம் சாப்பிட்டாலே போதுமானதுனு ஆயிடுச்சு. இப்படியாக இந்த வருஷ தீபாவளியைக் கொண்டாடி முடிச்சாச்சு. எல்லோருக்கும் தாமதமான இனிய தீபாவளி வாழ்த்துகள்..

நேத்திக்குக் காலம்பர 3 மணிக்கே எழுந்து கொண்டு வாசல் பெருக்கிக் கோலம் போட்டேன். பாரத்தவங்க எல்லாம் இத்தனை பெரிய கோலத்தை உங்களால் குனிஞ்சு போட முடிஞ்சுதானு ஆச்சரியப்பட்டாங்க. அந்த நேரம் பகவான் கொடுத்த தெம்பில் முடிஞ்சது. பின்னர் வீடு பெருக்கித்துடைச்சு, (வேலை செய்யும் பெண் தீபாவளிக்கு லீவு) இன்னிக்குத் தான் வந்திருக்காங்க. உம்மாச்சிக்கு எல்லாம் எடுத்து வைச்சு, எண்ணெய் காய்ச்சி, சீயக்காய் கரைச்சு  மஞ்சள் பொடியோடு எடுத்து வைச்சுப் புடைவை வேஷ்டி எல்லாமும் எடுத்து வைச்சேன். இந்த வருஷ தீபாவளிப் புடைவைங்க எல்லாம் ஓ.சி. புடைவை தான். பையர் மைசூர் போனப்போ குஞ்சுலு செலக்ஷனில் ஒரு புடைவை வாங்கி வந்திருந்தார். அதைத் தான் கட்டிக் கொண்டேன். குஞ்சுலு பிங்க் கலரில் எடுத்திருக்கு. அதுவுமே நேத்திக்குப் பிங்க் கலர் ட்ரஸ் தான் போட்டுக் கொண்டிருந்தது. மும்பையிலிருந்து வந்த என் ஒண்ணு விட்ட ஓர்ப்படி ஒரு புடைவை கொடுத்தாங்க. அதை நவராத்திரிக்கே கட்டிண்டாச்சு. செப்டெம்பரில் நடந்த உறவினர் திருமணத்தில் ஒரு புடைவை, நவராத்திரியில் நாத்தனார் பெண் ஒரு புடைவையும் கொடுத்திருந்தாங்க. நான் பையர் வாங்கின புடைவையையே சிறிது நேரம் கட்டிக் கொண்டேன்.  நான் தீபாவளி ஜவுளி மட்டுமல்ல, பொதுவாகக் கடைகளுக்குப் போயே 3 வருஷங்கள் ஆகின்றன. எல்லாக் கடைகளிலும் சுமார் 15/20 படிகள் ஏறணும். பிடிச்சுக் கொள்ளப் பிடிமானமும் இல்லை. ரங்க்ஸ் முதலில் மேலே ஏறிக் கொண்டு பின்னர் என்னை மேலே ஏத்தணும். சுற்றிலும் உள்ளவங்க என்னையே பார்ப்பாங்க. சில கோபக்கார மாமிகள் அவரே முடியாமல் இருக்கார், நீ அவரைப் போய் ஏன் தொந்திரவு பண்ணறே? ஏன் வெளியே வாசல்லே வரேனு கேட்டுச் சத்தமும் போட்டிருக்காங்க. ஆகவே நான் மருத்துவரைப் பார்க்க வேண்டியது தவிர்த்த மற்ற இடங்களுக்கு இப்போதெல்லாம் போவதில்லை.

Tuesday, October 24, 2023

நவராத்திரி முடிஞ்சாச்சா?


நவராத்திரிப் பத்து நாட்களூம் பதிவு போட முடியலை. முக்கியமாய் இந்தக் கணீனி ஒரு காரணம். எழுதுவது சிரமமாக ஆகி விட்டது. காப்பி, பேஸ்ட் பண்ணீப் பழைய பதிவுகள் போடலாம் எனில் அதுவும் சிரமமாக இருந்தது. ஆகவே சும்மாவே இருந்துட்டேன். இப்போ நேத்திக்கு சரஸ்வதி பூஜைப் படங்கள் குஞ்சுலுவுக்காக எடுத்தது போட்டிருக்கேன். இதிலே தீபாராதனைப் படங்கள் எல்லாம் வரலை. பார்க்கணூம் பார்த்துக் கிடைச்சதும் அதைச் சேர்க்கிறேன். இப்போதைக்குப் பூஜை நடக்கும் படங்கள் மட்டும். நிவேதனம் சாதம், பருப்பு, பாயசம், வடை, அதிரசம் மட்டும். கொண்டைக்கடலைச் சுண்டல் சாயந்திரம் பண்ணீனேன். நேத்திக்குக் கொஞ்சம் பேர் வரவும் வந்தனர். ஒரு வழியாய் நவராத்திரி முடிஞ்சாச்சு. 



 









புடைவை தெரியுதே, நான் உட்கார்ந்திருக்கேன். 

 


 







Sunday, October 08, 2023

மதுரைக்கு வந்த சோதனை!

 பதிவு எழுதணும்னு தான் ஆசை. ஆனால் நேரம் என்னமோ இறக்கை கட்டிப் பறக்கிறது. அடுத்தடுத்து உறவினர் வருகை, வீட்டு வேலைகள்னு கணினி பக்கமே வர முடியலை. முன்னெல்லாம் காலை ஒரு மணி நேரமாவது கரெக்டா உட்கார்ந்துடுவேன். இப்போல்லாம் முடியலை. அதிலும் வீட்டு வேலை செய்யும் பெண் வருவாளா/மாட்டாளா என பூவா/தலையா போட்டுப்பார்த்துட்டு வேலை செய்ய வேண்டி இருக்கே. அதோட இப்போல்லாம் வேகமா வேலை செய்ய முடியறதில்லை. சுணக்கம். பிள்ளையாருக்கு முன்னாடி நடந்த கிருஷ்ண ஜயந்திப் படங்களையே இன்னமும் போட முடியலை. அதோடு இந்தக் கணினி பிரச்னை வேறே. பழைய டெல் கணினியில் இ கலப்பையினால் எழுதினால் எழுத்துப் பிழைகள் நிறையவே வருகின்றன. சுரதா மூலம் தட்டச்சிப் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போ சுரதா வேலையே செய்வதில்லை.

இந்தப் புதுக்கணினியில் வேலை செய்தாலும் இதில் வேறே சில பிரச்னைகள். இதில் அடிக்கடி உட்கார்ந்து வேலை செய்ய முடியலை. நடுவில் பிரின்டர் வேறே வேலை செய்யாமல் படுத்தல். இதுக்கு நடுவிலே செய்ய வேண்டிய ஆன்லைன் ட்ரான்சாக்ஷன் எல்லாம் செய்ய வேண்டி இருக்கு. வீட்டு வரி, தண்ணீர் வரி, மின் கட்டணம்னு எல்லாமும் செய்வதால் அதுக்கெல்லாம் உட்கார்ந்தால் ஒரு அரை மணியாவது ஒவ்வொண்ணுக்கும் ஆகிடும். அதுக்கப்புறமாப் பதிவுகள் பக்கம் வரவோ, ஏதேனும் எழுதவோ தோன்றுவதில்லை. 

வெளியே எங்கேயும் போகாமல் வீட்டிலேயே இருப்பதால் கோயில்கள் பற்றியோ சென்ற இடங்கள் பற்றியோ எழுத முடியலை. வேறே சில விஷயங்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எழுத யோசனை. இப்படியே நாட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. இதுக்கு நடுவிலே எஸ் எம் எஸ் கொடுத்து மிரட்டும் சைபர் திருடர்கள்! என்னத்தைச் சொல்ல! எத்தனை கவனமாக இருந்தாலும் வந்து மிரட்டுகிறார்கள். நேத்திக்கு அக்கவுன்டே ப்ளாக் ஆகிடுத்துனு தகவல். போனாப் போகட்டும்னு அந்த எஸ் எம் எஸ்ஸை டெலீட் செய்துட்டேன். :)))))) அடுத்து உங்க வீட்டில் மின்சாரம் கட் ஆகும்னு செய்தி வரும். இதுக்கு நடுவில் தொ(ல்)லை பேசித் தொந்திரவு கொடுக்கும் நண்பர்கள். பெல் அடிக்குதேனு ஃபோனை எடுக்கப் போனால் கிட்டப் போகிறவரை அடிச்சுட்டுக் கிட்டப் போனதும் நின்னுடும். :P

எடுத்துக் கேட்டாலோ ஷேர் மார்க்கெட், சீட்டுக் கட்டுவது, ஃபைனான்ஸ் தரேன், வாங்கிக்கோனு ஏகப்பட்ட ஆஃபர்கள். இதுக்கு நடுவிலே ஷாப்பிங் வேறே தொ(ல்)லைபேசி மூலம்! அப்பாடா! எத்தனை பேரைச் சமாளிக்க வேண்டி இருக்கு. இந்தக் கணினிப் பயன்பாடு வந்தாலும் வந்தது எல்லோரும் ரொம்பவே கெட்டிக்காரங்களாவும் புத்திசாலிகளாவும் எப்படி எல்லாம் திருடலாம்னு பத்துப் பேருக்கு யோசனை சொல்லக் கூடியவங்களாவும் ஆயிட்டாங்க. எல்லாம்     தலைவர்களால் தான். அவங்க வழியிலேயே மக்களும் ரொம்பக் கெட்டிக்காரங்களா ஆயிட்டாங்க போல!  ஒவ்வொருத்தரின் சொத்துக்கள் பற்றியும் கேட்டால் ஆகா! தமிழகம் இவ்வளவு பணம் படைத்த மாநிலமாகவா இருந்திருக்கு என ஆச்சரியப்பட வேண்டி இருக்கு.

இப்போ என்னோட தலையாய கவலையே இன்னும் வீட்டு வேலை செய்யும் பெண் வரலை! வருவாங்களா? மாட்டாங்களா? என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!