எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 08, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், கம்சனின் தந்திரம்!

இருபத்தைந்து வருஷங்களுக்கு மேலாக மதுராவையும் சுற்றுப் புறங்களையும் ஆட்சி
செய்து வந்த கம்சன் ஒருமுறை கூட இம்மாதிரி யாதவ குலப் பிரிவுகளின் தலைவர்களை அழைத்து ஆலோசனைக்கூட்டம் நடத்தியதில்லை. அவன் தந்தையான உக்ரசேனர் முக்கியமான காலகட்டங்களில் தங்கள் குலத் தலைவர்களோடு கலந்து ஆலோசிப்பது உண்டு. ஆனால் கம்சன் அனைத்துப் பிரிவுத் தலைவர்களையும் உதாசீனமே செய்துவந்தான். சிலரைக் கொன்றும் இருக்கிறான். இப்போது கம்சனிடமிருந்து அழைப்பு அதுவும் ஆலோசனைக் கூட்டத்துக்கு எனத் தெரிந்ததுமே அனைவருக்கும் ஆச்சரியம் கலந்த திகைப்பு. யாருக்கும் நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவர்களுக்குள் பெரியவர்களையும், மூத்தவர்களையும் கலந்து ஆலோசித்தனர். அக்ரூரரையும், வசுதேவரையும் கூட அவ்வாறு சிலர் கலந்து ஆலோசித்தனர் . பல வருடங்கள் அஸ்வமேத யாகக் குதிரையோடு கம்சன் சென்றிருந்தபோது அவர்களில் பலரும் தங்களுக்குள்ள உரிமையையும், செல்வத்தையும், படைபலத்தையும் பெருக்கிக் கொண்டிருந்தனர். சொல்லப் போனால் சிலர் கம்சனை விடப் பலத்தோடும், செல்வத்தோடும் இருந்தனர். ஆனால் அது கம்சனுக்குத் தெரியாவண்ணமும் பாதுகாத்துவந்தனர். இப்போது கம்சன் திரும்பிவிட்ட இவ்வேளையில், தங்கள் அதிகாரமும், செல்வமும், படைபலமும் தங்களிடமிருந்து எந்நாளில் பறிக்கப் படுமோ என்று ஒருவித பயங்கலந்த எதிர்பார்ப்புடனே இருந்தனர்.

தநுர் யாகம் என்ற பெயரில் கம்சனால் அறிவிக்கப் பட்டிருந்த வீரப் போட்டிகளில் பங்கு பெறும் அவர்களின் வீரர்கள் அனைவரும் மறைமுகமாய் வீழ்த்தப் பட்டு கம்சனின் புதிய வீரர்களால் பெருமளவில் கொல்லப் பட்டு வந்தனர். அதுவும் ப்ரத்யோதா என்னதான் பொல்லாதவனாய் இருந்தாலும் அவனும் ஒரு யாதவத் தலைவன். அவனால் காவல் செய்யப் பட்டு வந்த கம்சனின் மாளிகைக் காவலை இப்போது மகத நாட்டுத் தளபதி ஆன வ்ருத்ரிக்னன் ஏற்றிருக்கிறான். மாளிகை முழுதும் மகத வீரர்கள் இப்போது. ஏதோ சதிவேலை நடக்கிறது. கம்சன் மறைமுகமாய் ஏதோ சூழ்ச்சி செய்கின்றான். அனைத்துத் தலைவர்களும் இவ்வாறே நினைத்தனர். எவ்வளவு தூரம் கம்சன் போகின்றான் என்று பார்க்கலாம் என்றும் நினைத்தனர். ஆலோசனைக் கூட்டத்துக்குக் கம்சன் அழைத்த நேரத்துக்கு அனைவரும் வருகை தந்தனர். கிட்டத் தட்ட ஐம்பது தலைவர்கள் பூரண ஆயுதங்கள் தரித்து போர்க்கோலத்தோடேயே வருகை தந்தார்கள். மகதநாட்டு வீரர்களின் நடமாட்டத்தைக் கம்சனின் மாளிகையில் பார்த்ததுமே தங்களுக்கு என்ன காத்திருக்கிறது என்பதையும் அனனவரும் புரிந்து கொண்டனர். பல வருடங்களாக தனி மாளிகையில் சிறை வைக்கப் பட்டிருந்த அரசன் உக்ரசேனனும் கொஞ்சம் தர்மசங்கடத்தோடும், கவலையும் பயமும் ஆக்கிரமிக்க தன் மகன் ஆன கம்சன் அருகே வீற்றிருந்தான். உக்ரசேனன் வெளி மனிதர்களைப் பார்த்தே பல வருஷங்களுக்கு மேல் ஆகிவிட்டது. வெறுமையான பார்வையோடு சூன்யத்தைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான் உக்ரசேனன். கைகள் நடுங்க, உதவிக்குச் சிங்காதனத்தின் கைப்பிடிகளைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.

உக்ரசேனனுக்கு அடுத்து அமர்ந்திருந்த பஹூகா என்னும் யாதவத் தலைவனுக்குத் தொண்ணூறு வயதுக்கு மேல் ஆகிவிட்டது. ப்ரத்யோதாவின் தாத்தாவான அவன் உக்ரசேனனுக்கு மாமாவும் ஆவான். குடும்பத்தின் மூத்த தலைவன் பஹூகாவே. உண்மையின் தன் மாமனின் வரவை உக்ரசேனன் மட்டுமல்ல மற்றத் தலைவர்களும் எதிர்பார்க்கவே இல்லை. பஹூகா ஒரு சிவபக்தன். எந்நேரமும் சிவவழிபாடுகள் செய்வதில் ஆழ்ந்திருப்பவன். கம்சனை அவன் ஒரு பொருட்டாகக் கருதுவதில்லை. தான் உண்டு, தன் சிவ வழிபாடு உண்டு என்றே இவ்வளவு வருஷங்களாய் இருந்தான். இத்தனை வருஷங்களுக்குப் பின்னர் வருகை புரிந்திருக்கும் இந்த வயது முதிர்ந்த பஹூகாவின் உடல் ஒரு இரும்புக் கம்பியைப் போல் இன்னமும் விறைப்பாகவே இருக்கிறதே! வயதானதின் முதுமை சுருங்கிய முகத்தில் மட்டுமே தெரிகிறது. கண்களும் பளிச்சிடுகின்றனவே! அனைவரையும் தனித்தனியாக அடையாளம் கண்டு விசாரிக்கின்றானே! இத்தனையிலும் அனைத்துத் தலைவர்கள் மனதிலும் ஒரே எண்ணம் ஓடியது. ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது. எதற்கும் வராத பஹூகாவே இன்று வந்திருக்கின்றான் என்றால் காரணம் இல்லாமல் போகாது. என்னவாய் இருக்கும்????

பஹூகாவின் அருகே வசுதேவரும், கலக்கம் நிறைந்த முகத்தோடும், தர்மசங்கடத்தோடும் அமர்ந்திருந்தார். இந்த எதிர்பாராத கூட்டம் அவரை மிகவும் இம்சைப் படுத்தியது என்பதை அனைவரும் உணரும் வண்ணம் இருந்தார் வசுதேவர். கம்சனின் மறுபுறம் உக்ரசேனனின் தம்பியும், தேவகியின் தகப்பனும் ஆன தேவகனும், அக்ரூரரும் அமர்ந்திருந்தனர். அக்ரூரரைப் பார்த்தாலே அனைவரும் கை எடுத்துக் கும்பிட்டனர். பார்க்கவே ஒரு மஹான் போன்ற தோற்றத்தோடு காக்ஷி அளித்தார் அக்ரூரர். அனைவருமே அவரை ஒரு மரியாதையோடு பார்த்தனர். அக்ரூரரின் அருகே உறைந்து போன பார்வையோடு அமர்ந்திருப்பது யார்?? அட, நம்ம ப்ரத்யோதாவா அது??? ஒவ்வொருவரையும் பார்த்து மனசுக்குள்ளே அலசி எடைப் போட்டுக் கொண்டிருப்பான் போல. ஆனால் அவன் நிலைமை??? அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் அவனைக் கண்டால் பிடிக்காது. இப்போது அவன் எஜமான் ஆன கம்சனுமே அவனை நம்பவில்லை என்பது சர்வ நிச்சயம் ஆகிவிட்டது. அவனுடைய சகோதரர்களும் அங்கே வருகை தந்திருந்தனர். அனைவரும் கம்சனின் வருகைக்குக் காத்திருந்தார்கள். ஏதோ ஒன்று நடக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பை அனைவரிடமும் காணமுடிந்தது. கம்சன் வந்தான். அதுவும் எப்படி?? அனைவரும் ஆச்சரியப் படும் வண்ணம் சிரித்த முகத்துடனும், கூப்பிய கரங்களோடும் வந்த கம்சன் அனைத்துத் தலைவர்களையும் தனித்தனியாகப் பார்த்து நலம் விசாரித்தான்.

கம்சனின் இந்தப் பணிவு உண்மையானதாய்த் தெரியவில்லை அனைவருக்கும். இதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்றே நினைத்தனர்.

“முகத்தின் இனிய நகாஅ அகத்தினா
வஞ்சரை அஞ்சப்படும்”

என வள்ளுவன் சொல்லி இருப்பதை இங்கே நினைவு கூரலாம். ஆகவே அனைவருக்கும் அச்சமாகவே இருந்தது. அது மட்டுமா? கம்சன் தன் கைகளையும் கூப்பிக் கொண்டு தன் அப்பாவான உக்ரசேனரையும், சிறிய பாட்டனாரான வயது முதிர்ந்த பஹூகாவையும் பார்த்து, வணங்கினான். அனைவரையும் தநுர் யாகத்தின் கொண்டாட்டங்களில் பங்கு பெறுமாறும் கேட்டுக் கொண்டான். மதுராவை ஒரு பிரசித்தி பெற்ற ராஜ்ஜியமாகத் தான் மாற்றி இருப்பதாகவும், மேன்மேலும் மதுராவுக்குச் சிறப்பு சேர்க்க ஒத்துழைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்வதாயும், அதற்கான ஒரு முன்னேற்பாடே தநுர் யாகம் எனவும் அந்த யாகத்தில் அனைவரும் பங்கேற்குமாறும் அதை வெற்றி அடையச் செய்யுமாறும் கூறினான். யாரும் பேசவே இல்லை. யாருக்கும் கம்சனின் இந்தத் திடீர் இன்சொல்லும், பணிவுக்கான காரணமும் பிடிபடவே இல்லை. ஏழுநாள் கொண்டாங்களுக்கு ஏற்பாடு செய்திருப்பதாயும், நடன நிகழ்ச்சிகள், பாடல் நிகழ்ச்சிகள், வீர விளையாட்டுகள், மல்யுத்தப் போட்டிகள், ரதப் போட்டிகள் என அனைத்துத் தரப்பு வீர விளையாட்டுகளுக்கும் ஏற்பாடு செய்திருப்பதாகவும், அனைத்துத் தலைவர்களும் தங்கள் வீரர்களையும், குடும்பங்களையும் அதில் பங்குபெறச் செய்யவேண்டும் எனவும் வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

Wednesday, October 07, 2009

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் - ப்ரத்யோதாவின் கலக்கம்!

ப்ரத்யோதாவைப் பார்த்த தேவகி நடுங்கினாள் என்றால், ப்ரத்யோதாவின் நிலைமை அதை விட மோசமாய் இருந்தது. அவனுக்கும் மயக்கமே வந்துவிடும்போல் ஆகிவிட்டது. ஆஹா, இவள் அதே இளவரசி, இவள் கல்யாணம் நடந்த அன்று, வீதியில் ஊர்வலம் நடத்தவேண்டி ஏற்பாடுகள் செய்யப் பட்டு இவளும், இவளை மணந்த வசுதேவனும் ரதத்தில் அமர்ந்திருந்தனர். நாம் பக்கத்திலேயே நின்றுகொண்டிருக்கும்போது தானே கம்சன் ரதத்தில் இருந்து இவளைக் கீழே தள்ளினான்?? ம்ம்ம்ம்ம்ம் நான் அப்போது இதைப் பார்த்துக் கொண்டு கையாலாகாமல் சும்மாத் தானே இருந்தேன். அது மட்டுமா? இவள் வயிற்றில் பிறந்த குழந்தைகள் ஒன்றன்பின் ஒன்றாகக் கொல்லப் பட்டபோது கூட நான் கம்சன் அருகே தானே இருந்தேன். அப்போதும் வாய் மூடி ஊமையாக!!! சேசே, சேச்சே, எத்தனை கேவலமான மனிதனாய் இருந்திருக்கிறேன். எல்லாம் எதற்காக? இந்த ஒரு சாண் வயிற்றுக்காக அன்றோ?, அவன் வீசி எறியும் காசுக்கும் அல்லவோ? கம்சனின் கொடூரத்திற்குத் துணை போனேனே! இப்போ மட்டும் என்ன வாழ்ந்தது??? மீண்டும் தேவகியின் மகன் ஒருவனைக் கொல்லவேண்டி கம்சன் செய்யும் ஏற்பாடுகளுக்குத் துணை போக அன்றோ நம்மை அனுப்புகின்றான்? இவள் முகத்தை நான் எங்கனம் நிமிர்ந்து பார்த்துப் பேசுவேன்? ப்ரத்யோதாவின் கண்களில் கண்ணீர் ததும்பியது என்றால் அவனையே பார்த்தவண்ணம் திகைப்பும், பயமுமாய் இருந்த தேவகிக்கோ சர்வாங்கமும் நடுங்கிக் கொண்டிருந்தது.

மிகவும் கஷ்டப் பட்டு தன் கைகளைக் கூப்பியவண்ணம் ப்ரத்யோதா அவளைத் தலை குனிந்து வணங்கினான். அக்ரூரர் அவளிடம், “தேவகி, நான் ப்ரத்யோதாவிடம் பேசி அனுப்பிவிட்டு, உன்னிடம் வருகிறேன்.” என்று சொல்ல, தேவகியும், “சரி” என்று சொல்லிவிட்டு உடனேயே சென்றுவிட்டாள். ப்ரத்யோதா அங்கேயே அமர்ந்தான். அவனால் பேசமுடியவில்லை. துயரமும், துக்கமும் நிறைந்து ததும்பிக் கொண்டிருந்த தேவகியின் ஒவ்வொரு அங்கமும் அவனுக்கு அவள் துக்கத்தின் ஆழத்தைப் பறை சாற்றிக் கொண்டிருந்தது. ம்ம்ம்ம்ம்…. இந்த தேவகி ஒரு பைத்தியம் போல ஏதோ ஒரு குழந்தை பொம்மையை வைத்துக் கொண்டு அதற்குப் பாலூட்டித் தாலாட்டிப் பாடல்கள் பாடி, அலங்காரங்கள் செய்வாளாமே! பாவம் அவள் குழந்தையைப் பிரிந்ததால் இப்படி ஒரு நிலைமை/…….. என்ன, என்ன?? திடீரெனப் ப்ரத்யோதாவுக்குப் பொறி தட்டியது. ஆஹா, இந்த தேவகி அந்தக் குழந்தைப் பொம்மைக்குத் தாலாட்டவில்லை. பாலூட்டவில்லை, அலங்கரிக்கவில்லை. தான் உயிரோடு தூக்கிக் கொடுத்த தன் அருமைக் குழந்தைக்கு, நந்தனிடம் வளர்கின்றான் என்பது தெரிந்தே எல்லாம் செய்திருக்கின்றாள். ஒரு தேவ அர்ப்பணம் போல் செய்து வந்திருக்கின்றாள். ம்ம்ம்ம்ம் இப்போது நாம் செய்யவேண்டியதுஎன்ன?? அந்தப் பையனுக்கு இப்போது பதினாறு வயது எனச் சொல்லுகின்றனரே? அவனைக் கம்சன் கொல்ல நாம் உதவப் போகின்றோமா??

அக்ரூரர் ப்ரத்யோதாவின் தனிப்பட்ட யோசனைகளைப் புரிந்து கொண்டவர் போல அவனை நேரிலேயே வசுதேவரிடம் வந்து கம்சனின் அழைப்பைக் கொடுக்கச் சொன்னார். ஆனால் ப்ரத்யோதாவோ வசுதேவரைப்பார்த்துப் பேசும் அளவுக்குத் தனக்குத் திராணி இல்லை என மறுத்தான். அக்ரூரர் ஒரு புன்னகையோடு, “ப்ரத்யோதா, நீ வசுதேவனிடம் வந்தால் ஒருவேளை தேவகி வைத்து வழிபடும் அந்தக் குழந்தைப் பொம்மையைக் காணலாம்.” என்று சொல்ல, ப்ரத்யோதா மீண்டும் உறுதியோடு மறுத்தான். தேவகியை நிமிர்ந்து பார்க்கக் கூட தன்னால் முடியாது என்று சொன்னான். அவளுக்குத் தான் துரோகம் செய்துவிட்டதாகவும் சொல்ல, அக்ரூரர், தேவகிக்கு உயர்ந்த மனம் என்றும், அந்த மனம் அவனை மன்னித்துவிடும் என்றும் கூறுகின்றார். ஏற்கெனவேயே அவள் ப்ரத்யோதாவை மன்னித்திருப்பாள் என்றும் கூறுகின்றார். எனினும் ப்ரத்யோதா மறுக்கின்றான். அங்கிருந்து கிளம்ப ஆயத்தம் ஆக, அக்ரூரர் அவனை, கொஞ்சம் தாமதித்துவிட்டு, ப்ரத்யோதா தன்னைத் தானே ஆசுவாசம் செய்து கொண்டு போகச் சொல்கின்றார். “கடவுள் தன்னுடைய இருப்பை எவ்விதமேனும் இவ்வுலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சரியான சமயத்தில் தெரிவிப்பார். அந்தச் சமயம் உனக்கு இப்போது வாய்த்துள்ளது.” என்றும் அவனைத் தேற்றினார். ப்ரத்யோதா அவரை நமஸ்கரித்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றான்.

அவனிடம் அக்ரூரர், தனது சாந்தமான குரலில், “கடவுள் உன் கதவைத் தட்டும்போது அவருக்காக உன் கதவைத் திறந்தே வை. மூடாதே. அவரை நன்கு பரிசுத்தமான இதயத்தோடு வரவேற்று பக்தி செலுத்து. நம்மால் முடிந்தது அது ஒன்றே. கடவுளை நாம் அறிய முடிவதும் இவ்வாறே.” என்று சொல்லுகின்றார். கண்களில் கண்ணீர் பொங்க ப்ரத்யோதா, “அக்ரூரரே, கடவுள் என்னிடம் வருவாரா? நான் அதற்குத் தகுந்தவனா? ஒருகாலும் நடக்காத ஒன்று.” என்று பெருமூச்சுடன் சொல்லிவிட்டு, சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டு அக்ரூரரிடம் கிசுகிசுப்பான குரலில், “வசுதேவனின் எட்டாவது குழந்தைதான் நந்தனிடம் விருந்தாவனத்தில் வளர்கின்றானா?” என்று கேட்டான். இப்போது அக்ரூரருக்குக் கொஞ்சம் சந்தேகமும், நிறைய பயமும் ஏற்படவே, அவர், அவனிடம், “யார் சொன்னது உனக்கு?” என்று கேட்டார். இந்த ரகசியம் வெளியே தெரிந்துவிட்டதா என எண்ணி அவர் கலக்கமும் அடைந்தார். ப்ரத்யோதா சொன்னான்:”ப்ரலம்பன் சாகும் தருவாயில் கம்சனிடம் சொல்லிவிட்டுச் செத்தான். நான் அப்போது அங்கே காவல் இருந்தேன்.” என்றான். அக்ரூரரின் இதயத்துடிப்பு ஒரு கணம் நின்றது. ஆனால் அவருக்கோ அது பலயுகங்கள் மாதிரித் தோன்றியது. வெளுத்த, கலவர முகத்துடன் அவர் ப்ரத்யோதாவைப் பார்க்க, அதைவிடப் பயத்துடன் தன்னை சுற்றிப் பார்த்து ஒருவரும் இல்லை என நிச்சயப் படுத்திக் கொண்ட ப்ரத்யோதா, அக்ரூரரிடம், “ பயப்படாதீர்கள் அக்ரூரரே! கவலை வேண்டாம். ப்ரலம்பன் அந்தக் குழந்தை தான் வாசுதேவகிருஷ்ணன் என்ற பரவாசுதேவன் ஆவான் என்றும், தர்மத்தை நிலைநாட்டவே அவன் பிறந்திருப்பதாகவும் சொன்னார். நம்மை எல்லாரையுமே அவன் தான் காப்பாற்றப் போகின்றான் என்றும் சொன்னார். நான் கேட்டேன்.” என்று மெல்லிய குரலில் சொல்லிவிட்டு, வெகுவேகமாய் அக்ரூரரின் இருப்பிடத்தை விட்டுச் சென்றான்.

ஜராசந்தனின் பூர்வீகம் பற்றிய குறிப்புகள் இன்றைய பதிவில் போட மறந்துட்டேன். சீக்கிரம் போடுகிறேன். நன்றி.

Tuesday, October 06, 2009

"பாரத நாடு பழம்பெரும்நாடு, நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்"


இந்த வலைப்பக்கத்தில் எல்லா விஷயங்களையும் எழுதுகிறேன். இங்கே தான் அதிகமாய் நண்பர்கள் வந்து பார்க்கின்றனர். மற்றப் பக்கங்களுக்கு வருவதில்லை. அதனாலேயே இந்தப் பக்கத்தில் முதலில் ராமாயணமும், இப்போது பாகவதக் கதைகளை திரு முன்ஷி எழுதி இருக்கும் விதத்திலும் கொடுக்கிறேன். இங்கே வரவங்க படிக்கணும்னு. பின்னூட்டம்னு அதிகம் வராட்டியும், தனிமடல்கள் மூலம் நிறையப் பேர் படிக்கிறது தெரிய வந்து சந்தோஷமாவே இருக்கு. ஏனெனில் இப்போதைய நம் நாட்டுக்குத் தேவையான விஷயங்கள் இதில் அடங்கி உள்ளது. தர்மம்,வீரம், விவேகம், காதல், அன்பு, பாசம், கருணை, இரக்கம், நட்பு என அனைத்துத் தரப்புக்களையும் அரவணைத்துச் செல்லுகின்றான் கண்ணன். ஒரு மனிதன் எவ்வாறு நேர்மையுடனும், நெறியுடனும் இருக்கவேண்டும் என ஸ்ரீராமன் நிரூபித்தானோ அவ்வாறே, அனைவரையும் அவரவர்களின் குற்றங்குறைகளோடு அவற்றைப் பாராட்டாமல், தர்மத்தை நிலைநாட்டுவது ஒன்றே குறிக்கோளாய்க் கொண்டு கண்ணன் நடமாடி இருக்கின்றான். பழிகளையும் சுமந்திருக்கிறான். அதற்காகச் சற்றும் வருந்தவில்லை.

தர்மம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்,
தாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்!”

கண்ணனின் திரு அவதாரமே உலகில் தர்மத்தை நிலைநாட்டுவதற்கெனப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்போ நாட்டில் தர்மம் நிலவுகிறதா என்றால் இல்லை என்றே சொல்லவேண்டும். மிகவும் பலஹீனமான ஆட்சி நடக்கிறது இப்போது. இத்தகைய ஆட்சியில் தர்மம் நிலைப்பது எங்கே? நம் கதையில் கண்ணன் தர்மத்தை நிலைநாட்டவெனத் தன் அவதாரக் காரணத்தை நிலைநாட்டக் கிளம்பப் போகின்றான்.
நாம கண்ணனைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டன. இதோ நாளையிலிருந்து தொடர்ந்து வருவான். ஆனால் துவாபர யுகத்தில் தர்மத்தை நிலைநாட்டிய கண்ணன்இப்போ அவதாரம் எடுத்து வந்தே ஆகணும்கிற சூழ்நிலை நம் நாட்டில் இப்போது நிலவுகிறது. இன்னும் கொஞ்ச நாட்களில் நம் கதைத் தொடரில் கண்ணன் கம்சனை அழிக்கப் போகின்றான். தானும், தன் மனைவி, குழந்தைகளுமே வாழவேண்டும், தனக்கு அடங்கி இருப்பவர்களை அடிமை போல் நடத்தவேண்டும் என்றே சுய அபிமானத்துடனும், சுயநலத்துடனும், கொடூர புத்தியுடனும், தனக்கு எதிராய் யார் வந்தாலும் அவர்களைப் பூண்டோடு அழித்துவிடுதல் போன்ற கொடுமையான காரியங்களைச் செய்தவனும், பச்சிளங்குழந்தைகள் என்று கூடப் பார்க்காமல் அநேக குழந்தைகளைக் கொன்றவனும் ஆன கம்சன் அழியவேண்டியவனே என்பதால் அவன் கொல்லப் பட்டான். கண்ணன் அவதாரம் செய்த காலத்தில் மக்கள் அனைவரும் கம்சனின் கொடுங்கோல் ஆட்சிக்குப் பயந்து செய்வதறியாது திகைத்துக் கொண்டு, தங்களை வாழவைக்கப் போகும் கடவுளுக்குக் காத்திருந்தனர். திரு அவதாரம் செய்தான் கண்ணன். தர்மத்தை நிலைநாட்டினான். நம் நாட்டிலும் இப்போது அம்மாதிரியான ஒரு அசாதாரணமான சூழ்நிலையே நிலவுகிறது. மிகவும் கவலை அளிப்பதாகவும் இருக்கிறது.

அடுத்த வீடான நாடுகளை சிநேகிதம் செய்து கொண்டு அதன் மூலம் நம் நாட்டை மூன்று பக்கமும் சூழ்ந்து கொண்டு அண்டை நாடு ஆன சீனா பயமுறுத்திக் கொண்டிருக்கிறது. எந்நேரம் என்ன செய்தி வருமோ என்று பிரதமர் கவலைப்படுகிறாரோ இல்லையோ, நமக்குக் கவலையாய் இருக்கு. பத்தாததுக்கு தீவிரவாதிகளின் மிரட்டல். நாட்டின் ஆதாரமான கலாசாரச் சீரழிவுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொலைக்காட்சி சானல்கள் மூலம், மற்றப் பிரசாரங்கள் மூலமும் நடக்கின்றது. வெளிநாட்டுக் கலாசாரம் வெகுவேகமாய்ப் பரவிக் கொண்டிருப்பதோடு, அதுவே உயர்ந்தது என்றும் அத்தகைய கலாசாரத்தைப் பின்பற்றும் இளைஞர்கள், இளைஞிகள் எடுத்துக்காட்டாகவும் வெளிப்படுத்தப் பட்டு, அவர்கள் புகழே பாடப் படுகின்றது. அத்தகையோரே ஒரு முன்னுதாரணமாகவும் சித்திரிக்கப் படுகின்றனர். இது கொஞ்சம் நஞ்சம் மிச்சமிருக்கும் நம் கலாசாரத்தை அடியோடு அழிப்பதாய் இருக்கிறது. வேறு எந்தவகையிலும் மாற்ற முடியாத நம் நாட்டுக் கலாசாரம் இன்று தொலைக்காட்சிகளின் கைகளில் சிக்கிக் கொண்டு வெற்றிகரமாய் அழிக்கப் பட்டு வருகிறது. அனைவரும் எப்படியோ, எந்தவிதத்திலோ தொலைக்காட்சிகளில் தங்கள் முகம் தெரிந்தால் போதும் என்ற எண்ணத்திலே இருக்கின்றனர். முக்கியமான பண்டிகைகள் என்றால் அன்று முழுதும் தொலைக்காட்சி சானல்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக, நடிகையர் அந்தப் பண்டிகை எவ்விதம் கொண்டாடுகின்றனர் என்பதைத் தான் படம் பிடித்துக் காட்டுகின்றனர். நம் வாழ்க்கையின் முக்கிய ஆதாரம் அதுவே என நினைத்துக் கொண்டு, பண்டிகைக்கு வாழ்த்த (அதுவும் இப்போதெல்லாம் அபூர்வம்) வரும் விருந்தினர்களை உதாசீனம் செய்துவிட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியே கதி என உட்கார்ந்து கொள்கின்றோம்.

சூப்பர் சிங்கர் யார்னு ஒரு சானல் போட்டி வச்சால், நாட்டிய தாரகை யாருனு இன்னொரு சானல் போட்டி வைக்கிறது. மற்றோர் சானலோ மேலும் ஒருபடி போய் ஆதர்சத் தம்பதிகளுக்குள் ஒளிவு, மறைவு இருக்கா இல்லையானு பட்டி மன்றமே நடத்தித் தம்பதிகளைத் தேர்ந்தெடுக்கிறது. முன்னே எல்லாம் நாட்டியமோ, பாடலோ, நன்கு கற்றுக் கொண்டு திறமை இருந்தாலே அரங்கேறலாம் என்பது போய் இன்று தாத்தா, பாட்டி கூட குடும்ப நிகழ்ச்சி என்ற பெயரில் இத்தகையதொரு அற்பமான ஆசைக்கு உட்பட்டு ஆடுகின்றதையும் பல பத்திரிகைகள் மூலம் பார்க்க நேரிடுகிறது. உண்மை பேசுகிறேன் என்ற பெயரிலே குடும்பங்கள் சீரழிக்கப் படுகின்றன. அந்தரங்கங்கள் வெளிச்சத்துக் கொண்டுவரப் படுகின்றன. போதாதுக்கு செல்போன் என்னும் ராக்ஷசன் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டு அனைவர் கையிலும் தவழ்கிறான். குடும்ப ரகசியங்களைப் பொது இடங்களில் அனைவரும் கேட்கும்படியாகப் பேசுகின்றனர். இதனால் ஏற்பட்ட, ஏற்படும், ஏற்படப் போகும் தீங்கைக்குறித்து யாருமே நினைத்துப் பார்க்கவில்லையோ எனத் தோன்றுகிறது. செல்போனில் பேசிக் கொண்டு சாலையைக் கடந்த, ரயில் தண்டவாளத்தைக் கடந்த இளம்பெண்கள், இளைஞர்கள் விபத்தில் பலியாகி இருக்கின்றனர். என்றாலும் இன்று கட்டுப் பாடு என்பது தேவையில்லை என்றே அனைவரும் நினைக்கின்றனர். ஒரு தொலைக்காட்சி ஒன்று சிரிப்பு என்ற பெயரில், தெருவில் சாதாரணமாய் நடந்து செல்பவர்களையும், பேருந்துகளில் ஏறுபவர்களையும் தடுத்துப்ப் பயமுறுத்தி விளையாடுகிறது. இதனால் ஒருவருக்கு அவசரமாக வெளியூர் செல்ல ரயிலைப் பிடிக்க முடியாமல் போய்விட்டது. இன்னொருவருக்கு வேறுவிதமான தொந்திரவு ஏற்பட்டிருக்கிறது. இதை எல்லாம் யோசிக்கவேண்டும்.

வெளிநாடுகள் சுற்றிச் சூழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், நாம் விழித்துக் கொண்டு நாட்டைக் காக்கப் போராடும் வீரர்களைக் கெளரவிப்பதில்லை. எங்கே காஷ்மீரிலும், பாகிஸ்தான் இந்தியா எல்லையிலும், அஸ்ஸாம் எல்லையிலும் இறந்து போகும் வீரர்களைப் பற்றிய செய்திகள் செய்தித் தாள்களில் ஒரு மூலையில் வருகின்றன. அத்தோடு சரி. பலரும் அதைப் படிப்பது கூட இல்லை. தொலைக்காட்சி சானல்களும் சினிமா நடிகருக்கும், நடிகைக்கும் வெளிநாட்டில் கஸ்டம்ஸில் சோதனை நடப்பதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம் இம்மாதிரியான செய்திகளுக்குக் கொடுப்பதில்லை. இம்மாதிரிச் செய்திகளையே ஒளிபரப்புவது கிடையாது. வெளியே அந்நிய சக்திகள் ஆக்கிரமிப்பு என்றால் உள்நாட்டில் கலாசாரச் சீரழிவு தலை தூக்கி ஆடுகிறது. இப்போ நாடு இருக்கும் நிலைமையில் நம்மைக் காக்கவேண்டியவன், கண்ணன் ஒருவனே. அவனே மறுபடியும் பிறந்து வந்தால்தான் நமக்கு விடிவுகாலம் என்று தோன்றுகிறது. சுதந்திரப் போராட்ட காலத்தில் ஒரு நல்ல விஷயத்துக்காக சுதந்திரம் பெறவேண்டும் என்ற உன்னத லக்ஷியத்துக்காக மக்கள் போராட்டம் செய்தனர். அத்தகையதொரு உணர்வு இப்போதும் வரவேண்டும். இது இன்னொரு வகை சுதந்திரப் போராட்டம். இதையும் நாம் நடத்திக் காட்டவேண்டும். அந்த சுதந்திரப் போராட்ட நாட்களில் திலகர் ஆன்மீக வழியில் மக்களைத் திசை திருப்பி அதன் மூலம் சுதந்திரப் போராட்டத்தில் அனைவரும் பங்கு பெற வழிவகுத்தார் என்பார்கள். அதுபோல் இப்போது நம்மை அழித்துக் கொண்டிருக்கும் அசுர சக்திகளிடமிருந்து நமக்கு விடுதலை கிட்டி உண்மையான சுதந்திரத்தை அடைய வேண்டிய மனோ வலிமையைக் கொடுக்கும்படி எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம். இப்போது நமக்கு இருக்கும் ஒரே வழி கடவுளிடம் பிரார்த்திப்பது ஒன்றே. நம் நாட்டின் உந்நதமான தர்மத்தைக் காக்கவும், கலாசாரத்தைப் பேணவும் உறுதி பூண்டு, பக்தி வழியில் அதே சமயம் தேவையான சமயம் உறுதியையும், வீரத்தையும் காட்டி நாட்டை அந்நிய சக்திகளிடமிருந்தும், உள்நாட்டைப் பீடித்திருக்கும் கலாசாரச் சீரழிவில் இருந்தும் காக்கவேண்டும். இந்தத் தொலைக்காட்சி, சினிமா மாயையில் இருந்து மக்கள் அனைவரும் விடுபடவேண்டும்.

சுதந்திரப் போராட்டம் போல இப்போ இதுவும் ஒரு வகைக் கலாசாரப் போராட்டமே. இந்த அடிமைத் தளையில் இருந்து நம்மை நாமே விடுவித்துக் கொள்ளவேண்டும். இது நம்மால் மட்டுமே முடிந்த ஒன்று. முக்கியமாய்ப் பெண்களும், அவர்கள் பெற்றெடுத்த செல்லங்களும், குழந்தைகள் தொலைக்காட்சியில் தோன்றுவதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் கஷ்டப் படத் தயாராய் இருக்கும் தாய்மார்கள், அவங்க நல்வாழ்வுக்காகவும் கஷ்டப் படத் தயாராகவேண்டும். இறைவன் அருளால் இந்த போலியான, பொய்யான கலாசார மாயையில் இருந்து நாம் விடுபட இறைவனைப்பிரார்த்திக்கிறேன். இனி போரடிக்காமல் நாளையில் இருந்து கண்ணன் வந்து தன் கதையைச் சொல்லுவான்.

Sunday, October 04, 2009

உங்களுக்கும் 50% வேண்டுமா?

துளசி பிருகு முனிவரையும், பிருங்கி முனிவரையும் குழப்பிண்டப்போவே எழுதணும்னு வச்சிருந்தேன். ஆனால் நவராத்திரி வந்துடுச்சு. அது முடிஞ்சு இளைப்பாறவே இந்த முறை ஒரு வாரம் ஆயிடுச்சு. அதனாலே சும்ம்ம்மா இரண்டு மொக்கையோட நிறுத்திட்டேன். இப்போ எல்லாரும் முக்கியமாய் ஆந்திராவில் கொண்டாடும் கேதார கெளரி நோன்பைப் பற்றிய ஒரு விஷயம் எழுதப் போறேன். நோன்பு கொண்டாடும் அனைவருக்கும் தெரிஞ்சிருக்கும்தான் இந்த விஷயம். என்றாலும் தெரியாத மத்தவங்களுக்காக எழுதறேன். எனக்கும் இப்போ ஒரு நாலு வருஷம் முன்னாடிதான் இந்தக் கதை தெரிய வந்தது.

அம்மையப்பன் அர்த்தநாரீஸ்வரராக ஆனதைப் பற்றிப் பல புராணக் கதைகள் இருக்கின்றன. அர்த்தநாரீஸ்வரராகத் திருக்கார்த்திகை அன்று திருவண்ணாமலையில் தோற்றம் அளிப்பதையும் அந்த நேரத்தில் மலை உச்சியிலும், கோயில் கொடிக்கம்பத்தினருகேயும் தீபங்கள் ஒளி வீசிப் பிரகாசிப்பதையும் காண்கின்றோம். இந்த அர்த்த நாரீஸ்வரப்பதவி என்பது அம்மை தவம் இருந்து பெற்ற ஒன்று. உலகிலேயே முதல் முதலாக பெண்ணுக்கு சரிபாதி உரிமை தந்தவர் ஈசன் ஒருவரே. இப்போ அரசாங்கமே 33% கொடுக்கலாமா? குறைக்கலாமா? இல்லாட்டிப் பேசிட்டே இருந்தால் மட்டும் போதுமானு யோசிக்குது. ஆனால் ஈசன் யோசிக்கவே இல்லை. சரிபாதியைக் கொடுத்துட்டார். இப்போ விஷயத்துக்கு வருவோமா???

பிருங்கி முனிவரைப் பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள் அல்லவா? ஈசன் ஒருவனைத் தவிர மற்ற யாரையும் அவர் வணங்கமாட்டார். ஈசனோடு சேர்ந்தே அம்மையும் காக்ஷி கொடுத்தாலும் அவர் அம்மையை வணங்காமல் வண்டு உருவெடுத்து ஈசனை மட்டும் பிரதக்ஷிணம் பண்ணுவார். எந்நேரம் வேண்டுமானாலும் திருக்கைலை சென்று சிவதரிசனம் செய்யும் பிருங்கி முனிவர் ஒரு சமயம் அவ்வாறு சென்றபோது அம்மையப்பனாக வீற்றிருந்த இருவரையும் கண்டுவிட்டுத் தம்மை ஒரு வண்டாக மாற்றிக் கொண்டு அப்பனை மட்டுமே சுற்ற ஆரம்பித்தார். வண்டாகவோ, மனிதனாகவோ தனக்கு வேண்டிய சக்தியைக் கொடுப்பது அவள் அல்லவோ? அதை மறந்தார் பிருங்கி முனிவர். பார்த்தார் ஈசன். அம்மையும் பார்த்தாள். சிவமும், சக்தியும் ஒன்றையொன்று பரிபூரணமாய்ப் புரிந்து கொள்ள, அம்மை தன் சக்தியால் பிருங்கி முனிவரின் உடல் சக்தியை வற்றச் செய்தாள்.

நிற்கக் கூட முடியாமல் தடுமாறினார் பிருங்கி முனிவர். இவர் உடலில் ரத்தமோ, சதையோ இல்லாமல் வெறும் கூடு மட்டுமே இருந்தது. அந்நிலையிலும் அவர் ஈசனை மட்டுமே வணங்கி, தன் நிலைக்கான காரணத்தைக் கேட்க, ஈசன் அன்னையை வணங்காததால் அன்னை சக்தியை உறிஞ்சிவிட்டாள் எனச் சொல்ல, தங்களையே சரணம் என நினைக்கும் எனக்கு இந்தக் கதியா எனக் கண்ணீர் விட்டார் முனிவர். முனிவருக்குப் பாடம் புகட்டவேண்டும். அவர் திருந்துவதாய்த் தெரியவில்லையே? என்றாலும் ஈசன் முனிவருக்கு ஒரு ஊன்றுகோலை அளிக்க அதன் உதவியால் முனிவர் ஈசனை மட்டும் வணங்கிவர ஆரம்பிக்க, அன்னை வெகுண்டாள். சக்தியும், சிவமும் ஒன்று என்பதை இத்தனை தவம் செய்த இந்த முனிவன் அறியாமல் இருக்கிறானே என எண்ணிய வண்ணம் கெளதம முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்றாள் அன்னை. அங்கே தான் தவம் செய்யப் போவதாயும் சொன்னாள். கெளதம முனிவர் சகல செளகரியங்களையும் அன்னைக்குச் செய்து கொடுத்து க் கேதார கெளரி விரதம் என்றொரு விரதம் கடைப்பிடிக்கப் படுவதையும் நினைவூட்டினார். புன்னகை புரிந்த அன்னை, தாம் அந்த விரதமே இருக்கப் போவதாய்த் தெரிவித்துவிட்டு புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமி தனம் துவங்கி இருபத்தொரு நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்தாள்.

விரதம் நிறைவு நாளன்று ஈசன் அன்னையிருக்குமிடம் தேடி வந்து, தம் இடப்பாகத்தை அன்னைக்கு அளித்துப் பெருமை சேர்த்தார். அன்னையும், ஈசனும் பிரிக்கவே முடியாத அர்த்த நாரீஸ்வரக் கோலம் கொண்டனர். இந்த விரதம் முடியும் நாளையே ஆந்திராவில் நோன்பாய்க் கொண்டாடுகின்றனர். புரட்டாசிமாதம் விஜயதசமிக்குப் பின்னர் ஐப்பசி மாசம் தீபாவளி அமாவாசையன்று முடிவடையும் விதத்தில் இந்த நோன்பு அமைந்திருக்கும். சில சமயம் நவராத்திரிக் கடைசிநாட்கள் ஐப்பசி மாதத்தில் வந்தாலும் தீபாவளி அமாவாசை அதற்குப் பின்னர் இருபத்தோராம் நாளிலேயே வரும். ஆகவே ஒவ்வொரு தீபாவளி அமாவாசையிலும் இந்த விரதம் அனுஷ்டிப்பார்கள் தெலுங்கு பேசும் சகோதரிகள். இந்த விரதம் இருந்தால் தாம்பத்திய வாழ்வு சிறந்து, கணவனை விட்டுப் பிரியாமல் இருப்பார்கள் என்று ஐதீகம்.

தெலுங்கு எழுத்துக்கள் கூட வாமபாகமாக அதாவது இடப்பக்கமாய்ச் சுழித்து வருவதாயும், இடப்பக்கமே அம்பாளுக்கு விசேஷம் என்பதால் அவளுக்குரிய ஸ்ரீசக்ரத்தில் அக்ஷரங்கள் தெலுங்கிலேயே இருக்கும் என்றும் ஆந்திராவே சிவப் பிரதான க்ஷேத்திரம் என்றும் ஸ்ரீபரமாசாரியாளின் தெய்வத்தின் குரல் சொல்லுகின்றது. மற்ற இடங்களில் அக்ஷராப்பியாசத்தின் போது விஷ்ணுவின் எட்டெழுத்து நாமத்துடன் துவங்கினால், ஆந்திராவிலே சிவனின் ஐந்தெழுத்திலேயே துவங்கும் என்றும், அந்த மாநிலமே சுற்றிலும் காளஹஸ்தி, ஸ்ரீசைலம், கோடிலிங்க க்ஷேத்திரம் என்ற மூன்று க்ஷேத்திரங்களுக்குள்ளேயே அடங்கி இருப்பதாயும், அதனால் த்ரிலிங்க க்ஷேத்திரம் என்ற பெயர் ஏற்பட்டு அதுவே பின்னர் தெலுங்கு என்று ஆகிவிட்டதாயும் ஸ்ரீபெரியவாள் தெரிவிக்கிறார். அதனாலேயே இந்த நோன்பும் அங்கே மட்டும் பிரதானமாய்க் கொண்டாடப் படுகிறது.

Wednesday, September 30, 2009

லலிதா நவரத்ன மாலை - கோர்த்தது!



லலிதா நவரத்னமாலை:

வைரம்

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே! மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

கற்றும் தெளியார் காடே கதியாய் கண்மூடி நெடுங்கனவான தவம்
பெற்றும் தெரியார் நிலையென்னில் அவம் பெருகும் பிழை என பேசத் தகுமோ
பற்றும் வயிரப் படைவாள் வயிரப் பகைவர்க்கெமனாக எடுத்தவளே
வற்றாத அருட் சுனையே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!



லலிதா நவரத்னமாலையின் நீலம்!

மூலக்கனலே சரணம் சரணம் முடியா முதலே சரணம் சரணம்
கோலக்கிளியே சரணம் சரணம் குன்றாத ஒளிக்குவையே சரணம்
நீலத் திருமேனியிலே நினைவாய் நினைவற்றெளியேன் நின்றேன் அருள்வாய்
வாலைக்குமரி வருவாய் வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே




லலிதா நவரத்தினமாலையின் முத்து!

முத்தே வரும் முத்தொழிலாற்றிஅடவே முன்நின்றருளும் முதல்வி சரணம்
வித்தே விளைவே சரணம் சரணம் வேதாந்த நிவாஸிநியே சரணம்
தத்தேறிய நான் தநயன் தாய் நீ சாகாத வரம் தரவே வருவாய்
மத்தேறுத்திக் கிணை வாழ்வடையேன் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!




பவளம்

அந்தி மயங்கிய வானவிதானம் அன்னை நடம் செய்யும் ஆநந்த மேடை
சிந்தை நிரம்ப வளம் பொழிவாளோ தேன்பொழிலாமிது செய்தவளாரோ
எந்த இடத்தும் மனத்தும் இருப்பாள் எண்ணுபவர்க்கருள் என்ணமிகுந்தாள்
மந்திர வேதமயப் பொருளானாள் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே, மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!


மாணிக்கம்

காணக்கிடையா கதியானவளே கருதக் கிடையாக் கலையானவளே
பூணக்கிடையாப் பொலிவானவளே புனையக் கிடையாப்புதுமைத்தவளே
நாணித் திருநாமமும் நின் துதியும் நவிலாதவரை நாடாதவளே
மாணிக்க ஒளிக்கதிரே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே



மரகதம்

மரகத வடிவே சரணம் சரணம் மதுரித பதமே சரணம் சரணம்
சுரபதி பணியத் திகழ்வாய் சரணம் ஸ்ருதி ஜதி லயமே இசையே சரணம்
ஹர ஹர சிவ என்றடியவர் குழும அவரருள் பெற அருளமுதே சரணம்
வரநவ நிதியே சரணம் சரணம் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே!


கோமேதகம்

பூமேவிய நான் புரியும் செயல்கள் பொன்றாப் பயனும் குன்றா வரமும்
தீ மேலிடினும் ஜயசக்தி எனத் திடமாய் அடியேன் மொழியும் திறமும்
கோமேதகமே குளிர்வான் நிலவே குழல்வாய்மொழியே தருவாய் தருவாய்
மாமேருவிலே வளர் கோகிலமே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய் ஓம் லலிதாம்பிகையே!




புஷ்பராகம்

ரஞ்சனி நந்தினி அங்கணி பதும ராக விகாஸ வியாபினி அம்பா
சஞ்சல ரோக நிவாரணி வாணி சாம்பவி சந்த்ர கலாதரி ராணி
அஞ்சன மேனி அலங்க்ருத பூரணி அம்ருத ஸ்வரூபிணி நித்ய கல்யாணி
மஞ்சுள மேரு ஸ்ருங்க நிவாஸினி மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே


வைடூரியம்

வலையொத்த வினை கலையொத்த மனம் அருளப் பறையாற்றொளியொத்தவிதால்
நிலையற்றெளியேன் முடியத் தகுமோ நிகளம் துகளாக வரம் தருவாய்
அலையற்றசைவற்றநுபூதி பெறும் அடியார் முடிவாழ் வைடூரியமே
மலையத்துவசன் மகளே வருவாய் மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே


நூற்பயன்:
எவர் எத்தினமும் இசைவாய் லலிதா நவரத்தின மாலை நவின்றிடுவார்
அவர் அற்புத சக்தியெலாம் அடைவார் சிவரத்தினமாய்த் திகழ்வாரவரே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே
மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே மாதா ஜய ஓம் லலிதாம்பிகையே

துர்காஷ்டகம் - தொகுப்பு!




துர்கா அஷ்டகம்:

1. வாழ்வுமானவள் துர்கா வாக்குமானவள்
வானில் நின்றவள் இந்த மண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள் துர்கா தாயுமானவள்
தாபம் நீக்கியே என்னைத் தாங்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே!


உலகையீன்றவள் துர்கா உமையுமானவள்
உண்மையானவள் எந்தன் உயிரைக் காப்பவள்
நிலவில் நின்றவள் துர்கா நித்யையானவள்
நிலவி நின்றவள் எந்தன் நிதியும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


செம்மையானவள் துர்க்கா ஜெயமும் ஆனவள்
அம்மையானவள் அன்பு தந்தையானவள்
இம்மையானவள் துர்க்கா இன்பமானவள்
மும்மையானவள் என்று முழுமை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


உயிருமானவள் துர்கா உடலுமானவள்
உலகமானவள் எந்தன் உடமையானவள்
பயிருமானவள் துர்கா படரும் கொம்பவள்
பண்பு பொங்கிட என்னுள் பழுத்த துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


துன்பமற்றவள் துர்கா துரிய வாழ்பவள்
துறையுமானவள் இன்ப தோணியானவள்
அன்பு உற்றவள் துர்கா அபயவீடவள்
நன்மை தங்கிட என்னுள் நடக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே


குருவுமானவள் துர்கா குழந்தையானவள்
குலமுமானவள் எங்கள் குடும்ப தீபமே
திருவுமானவள் திரிசூலி மாயவள்
திருநீற்றில் நின்றிட என்னுள் திகழும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே



ராகுதேவனின் பெரும்பூஜை ஏற்றவள்
ராகுநேரத்தில் என்னைத் தேடி வருபவள்
ராகுகாலத்தில் எந்தன் தாயை வேண்டினேன்
ராகு துர்க்கையே என்னைக் காக்கும் துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே



கன்னி துர்கையே இதயக் கமல துர்கையே
கருணை துர்கையே வீர சுகன துர்கையே
அன்னை துர்கையே என்றும் அருளும் துர்கையே
அன்பு துர்கையே ஜெயதுர்கை துர்கையே

தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே
தேவி துர்கையே ஜெய தேவி துர்கையே




நீண்ட தாமதத்திற்கு மிகவும் மன்னிக்கவும். :(

Sunday, September 27, 2009

நவராத்திரி நாயகி - சரஸ்வதி - தொடர்ச்சி!

தங்கக் கலசத்தில் அந்த நெருப்புக் கொழுந்து வைக்கப் பட்டது. சரஸ்வதியை அழைத்து நீ நீர் உருவெடுத்து நதி ரூபத்தில் சென்று இந்தத் தீக்கொழுந்தை கடலினடியில் சேர்ப்பித்துவிடு எனச் சொல்ல, சரஸ்வதியாலும் அந்த நெருப்பைத் தாங்க முடியவில்லை. பின்னர் பிரம்மன் கங்கை, யமுனை, நர்மதை, தாபி போன்ற மற்ற நதிகளையும் அழைத்து அந்தத் தங்கக் கலசத்தை தீக்கொழுந்தோடு எடுத்துச் சென்று சமுத்திரத்தின் அடியில் வைக்கப் பணித்தார். இவ்விதம் அந்தத் தீக்கொழுந்தானது கடலினடியில் சென்று மறைந்தது. அது முதன்முதல் சரஸ்வதி கையில் கொடுக்கப் பட்ட இடமே பத்ரிநாத்தில் உள்ள தப்த குண்டம் என்று சொல்லுகின்றனர்.


பிரம்மசக்தியாகத் திகழும்போது சரஸ்வதிக்கு பிராம்மி என்ற பெயர் உண்டு. பிரம்ம வித்யை இவள் முகமாகவும், நான்கு வேதங்கள் நான்கு திருக்கரங்களாகவும், இசையும் இலக்கணமும் ஸ்தனங்களாகவும், எண்ணும், எழுத்தும் இரு கண்களாகவும், இதிஹாசம், புராணம் ஆகியவை இரு திருவடிகளாகவும் கொண்ட இவள் கையில் இருக்கும் வீணை ஓங்கார வீணை. ஓங்காரத்தின் வடிவானது. கச்சபி என்னும் பெயருடைய இந்த வீணை பரமேஸ்வரனால் பிரம்மாவுக்கு அளிக்கப் பட்டு சரஸ்வதிக்கு வந்தது.

பொதுவாக வெண்பட்டாடை தரித்து வெண்தாமரை மலராசனத்தில் நான்கு திருக்கரங்களுடன் சுவடி, ஜபமாலை, வீணை இவற்றைத் தாங்கியவண்ணம் காணப் படும் சரஸ்வதி, ஆங்காரசக்தியாய்த் தோன்றும்போது எட்டுக்கரங்கள், மணி, சூலம், கலப்பை, சங்கு, சக்கரம், வில், அம்பு, உலக்கை ஆகியவற்றோடு காட்சி கொடுப்பாள். உக்ரவடிவாய் கெளரியின் தேகத்தில் இருந்து தோன்றிய இவளே கம்பாசுரனை வதம் செய்தாள் என்று தேவி மகாத்மியம் கூறும். வாகீஸ்வரியாக வடிவம் கொள்ளும்போது வாணி நான்குகரங்கள், ஜடாமகுடம், ரத்னகுண்டலம், தண்டம், சுவடி, ஜபமாலை, கிண்டி ஆகியவை தாங்கி முக்கண்களுடன் காட்சி கொடுப்பாள். நான்கு முகங்கள், ஆறு கரங்கள், ஜபமாலை, சுவடி, வீணை, கமண்டலத்துடன் சரஸ்வதியாகக் காட்சி கொடுப்பாள். மான் தோலாடை அணிந்து இடது மூன்று கரங்களில் வரதம், சூத்திரம் ஆகியவற்றையும் வல மூன்று கரங்களில் சுவடி, குண்டிகை, அபயமுத்திரை தாங்கியும் நான்முகவடிவினளாக பிரம்ம பத்னியாக சரஸ்வதி காட்சி கொடுப்பாள் .
கல்விக்கு அதிதெய்வமாகப் போற்றப் படுபவள் சரஸ்வதியே! யாகத்தைக் காக்கும் தேவதையாகவும், யாகத்தை நடத்துபவர்களுக்குத் தேவையான ஞானம், தேஜஸ், வெற்றி ஆகியவற்றைக் கொடுப்பவளும் சரஸ்வதியே.

யஜுர்வேத மந்திரம் ஒன்று, “வீரமும் அறிவும் நிறைந்த சரஸ்வதி திடசித்தமுடையவர்களாக எங்களை விருத்தி அடையச் செய்வாளாக!” என்று பிரார்த்தித்துக் கொண்டு யக்ஞத்தில் நெய்யை அளிக்கிறது. ஞானாம்பிகை, ஞானேஸ்வரி, ஞானசக்தி என்று போற்றப் படுபவளும் இவளே. நாவில் சரஸ்வதியை வைத்திருப்பதாய்ச் சொல்லும் பிரம்மனே இவளைத் துதித்ததும் தான் சனத்குமாரருக்கு “பதிஞானத்தின்” உட்பொருளை உபதேசித்தான் என்கின்றனர் பெரியோர்கள். தேவகுருவான பிரஹஸ்பதியும் கலைமகளைத் துதித்ததுமே “சப்தசாஸ்திரம்” என்னும் நூலை இந்திரனுக்குக் கற்பித்தார். சரஸ்வதியின் அருட்கடாட்சம் பெற்றே கவிஞன் காளிதாசன், சியாமளா தண்டகம், சியாமளா தந்திரம், போன்றவற்றில் தேவியின் சொரூபத்தையும், லீலைகளையும் பற்றி எழுதியுள்ளான்.
சகல கலைகளுக்கும் அதி தேவதையான இவளே சாரதை எனவும் போற்றப் படுகிறாள். தனம் தரும் லக்ஷ்மியாகவும், வீரம் செறிந்த துர்க்கையாகவும் வணங்கப் படுபவளும் இவளே. இவளைக் குறித்தே சாரதா நவராத்திரி கொண்டாடப் படுகிறது. இந்த சாரதையை சிருங்கேரியில் நல்ல முஹூர்த்த வேளை பார்த்துப் பிரதிஷ்டை செய்தவர் ஆதிசங்கரர் ஆவார். ஸ்ரீசக்ரமும் இங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது.

இவள் மற்ற மதங்களிலும் முக்கியமாய் சமணம், பெளத்தம் ஆகிய மதங்களிலும் காணப்படுகிறாள். சமணர்கள் வாக்தேவி, ஸ்ருதிதேவி என்றும் ஜின ஐஸ்வர்யா என்றும், ஜினவாணி, ஆகமஸ்வரூபி என்றும் அழைப்பார்கள். பெளத்தர்கள் மகா சரஸ்வதி, வஜ்ர சாரதா, வஜ்ரவீணாதாரா, ஆர்ய சரஸ்வதி, வஜ்ர சரஸ்வதி, என ஐந்து வடிவங்களில் சரஸ்வதியை அமைத்து வழிபடுகின்றனர். மஞ்சுஸ்ரீ எனவும் பெளத்தத்தில் சரஸ்வதி அழைக்கப் படுகின்றாள்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளான இன்றைய வழிபாடு இவளுக்கே உரியது. புத்தகங்கள் வைத்தும் வழிபடுவார்கள். ஆயுதங்களைச் சுத்தம் செய்து அவற்றையும் வைத்து வழிபடுவார்கள். இசைக்கருவிகளுக்கும் சிறப்பு வழிபாடு உண்டு. இன்று பூராவும் வழிபாட்டில் இருக்கும் புத்தகங்கள், ஆயுதங்கள், இசைக்கருவிகளை விஜயதசமி அன்று எடுத்துப் பயன்படுத்துதல் சிறப்பாகக் கருதப் படும். பள்ளிக்கு முதன் முதல் செல்லும் குழந்தைகளுக்கு விஜயதசமி அன்று பள்ளியில் சேர்த்தல் சிறப்பாகக் கருதப் படும். அன்றைய தினம் ஒரு தாம்பாளத்தில் அல்லது சுத்தம் செய்யப் பட்ட தரையில் நெல் பரப்பி அந்த நெல்லில் "ஹரி ஓம்" எனக் குழந்தையின் அம்மாவோ, அப்பாவோ குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு எழுதச் செய்வார்கள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று மாலையில் நக்ஷத்திரங்கள் தோன்ற ஆரம்பிக்கும் விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு அசுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முஹூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது. தீய சக்திகளை அம்பிகை அழித்த அந்த நல்லநேரமே விஜயதசமி என இன்றும் அம்பு போடுதல் என்னும் நிகழ்ச்சியாகப் பல கோயில்களிலும் சிறப்பாய் நடக்கின்றது. நம் வாழ்விலும் தீமைகளை அழித்து, நன்மைகள் பெருகி வாழ்வில் வளம் பெற அம்பிகையைப் பிரார்த்திப்போம்.

அனைவருக்கும் விஜயதசமி நல்வாழ்த்துகள்.