இன்று ஐந்த்ரிணி எனப்படும் இந்திராணி. அம்பிகையின் சேனைகளில் இவளும் ஒருத்தி. யானை வாகனத்தில் வஜ்ராயுதத்தோடு காணப்படும் இவளை வணங்கினால் பெரிய பதவிகள், வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்கும். இவளுக்குரிய நிவேதனம் எலுமிச்சைச் சாதம்.
மாலை நிவேதனம் :அரிசிப்புட்டு. செய்முறை போன வருஷமே சொல்லியாச்சு. என்றாலும் மீண்டும் ஒரு முறை: நான் செய்வது வேக வைக்காத புட்டு. ஆகவே அரிசியைக் குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும். ஊற வைத்த அரிசியை நன்கு சிவப்பாக வறுக்கவும். வறுத்த அரிசியை ஆற வைத்துப் பின்னர் மிக்சியில் போட்டு மாவாக்கவும். ஒரு கிண்ணம் மாவுக்கு ஒரு கிண்ணம் நீரை எடுத்துக்கொண்டு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் விட்டுக் கொதிக்க வைக்கவும்.அதிலேயே ஒரு சிட்டிகை உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். கொதிக்கும் நீரைக் கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து அரைத்த மாவில் விட்டுக் கிளறிக்கொண்டே வரவும். கையால் பிடித்தால் பிடிக்கமுடியணும், உதிர்த்தால் உதிரவேண்டும். அந்தப் பதம் வரும் வரைக்கும் நீர் விட்டுக் கிளற வேண்டும். பின்னர் இதையும் குறைந்தது மூன்று மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும்.
பின்னர் நூறு கிராம் வெல்லத் தூளைக் கொஞ்சமாய் நீர் சேர்த்துப்பாகு வைக்க வேண்டும். வெல்லப் பாகை நீரில் போட்டால் உருட்ட வரவேண்டும், அந்த உருண்டை ஒரு தாம்பாளத்தில் போட்டால், டங் என சப்தம் வரவேண்டும். பாகை இந்தப் பதத்தில் காய்ச்சிக் கொண்டு மாவில் கொஞ்சம் கொஞ்சமாக விட்டுக் கிளறவும். போதும் எனத் தோன்றும் வரையிலும் பாகை விட்டுக் கலக்கவும். பின்னர் வாணலியில் நெய் விட்டுத் தேங்காய் துருவல், பொட்டுக்கடலை, முந்திரிப்பருப்பு வறுத்துச் சேர்க்கவும். ஏலக்காய் பொடித்துப் போடவும். இது ஒரு வாரம், பத்துநாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது.
*************************************************************************************
படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளுதல் என அனைத்துத் தொழில்களையும் புரிபவள் ஆதிபராசக்தியே என்றே கூறுவார்கள். சக்தியிலிருந்தே பிரபஞ்சம் உருவாகிறது. அவ்வளவு ஏன்! பரப்ரம்மம் ஆன சிவனும் அவள் செயலாலேயே தனது அசலத்தில் இருந்து அசைந்து கொடுத்து பிரபஞ்சத் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கிறான். பரிபூரணமாக இருக்கும் ப்ரம்மத்தையே ஆட்டிப்படைக்கும் சக்தி அவளே. அத்தனை சக்தி வாய்ந்த பராசக்திக்கு நன்றி கூறும் வகையில் எடுக்கப்படும் விழாவாகிய இந்த நவராத்திரியில் அனைத்துப் பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பெண்களுக்கான பண்டிகைகளிலேயே மிகவும் விமரிசையாகப் பத்து நாட்கள் கொண்டாடப் படுவது இந்த சாரதா நவராத்திரியே. நவராத்திரி என்றால் ஒவ்வொரு நாளும் புத்தம் புதிய இரவுகளை ஒரு பக்கம் சுட்டினாலும், மற்றொரு பக்கம் ஒன்பது இரவுகள் என்றும் பொருளைக் கொடுக்கும். எப்போதுமே உயிருள்ள ஜீவன்கள் அனைத்துக்குமே இரவில் அமைதி கிட்டுகிறது. நம் அன்றாட வேலைகளைப் பகலில் செய்தாலும் இரவிலேயே தூங்கி ஓய்வெடுத்து அமைதியைப் பெறுகிறோம். இதற்கு இன்றைய அவசர நாட்களில் பொருளில்லை என்றாலும் பொதுவானதொரு நியதி இரவிலே உடல் ஓய்வெடுக்கும் வேளையில் மனமும், மூளையும் சேர்ந்து ஓய்வெடுக்கும் என்பதே.
பிறந்த குழந்தையானது எவ்வாறு தாயின் கர்ப்பத்தில் ஒன்பது மாதங்கள் தங்கிப் பின்னர் வெளிவருகிறதோ அதைப் போல் இந்த ஒன்பது நாட்களும் அம்பாளிடம் பக்தி செலுத்தி அந்தக் கர்ப்பவாசத்தில் மூழ்கி இருக்கிறோம். நம் மனதிலுள்ள துர் எண்ணங்கள் மறைந்து நல்லெண்ணங்கள் தலை தூக்கும். புதியதோர் ஜீவசக்தி உடலில் பாய்ந்தாற்போல் இருக்கும். ஆகவே இந்த நவராத்திரியை நாம் கொண்டாடுவது என்பது நம் எண்ணங்களையும், உடலையும் சேர்த்துப் புதுப்பித்துக்கொள்ளவே ஆகும். இது நவராத்திரியில் அம்பிகையைத் தியானிப்பதற்கு ஒரு காரணம் ஆகும். முந்தின ஸ்லோகத்தில் பூர்வபுண்ணியம் இருந்தாலே அம்பிகை வழிபாட்டில் நம்மால் ஈடுபடமுடியும் என சங்கரர் மட்டுமின்றி பட்டரும் கூறுவதைப் பார்த்தோம். அடுத்த ஸ்லோகம் அவளுடைய பாததூளி மஹிமையாலேயே அனைத்துத் தொழில்களும் நடைபெறுவது குறித்து ஆதிசங்கரர் சொல்கிறார்.
தநீயாம்ஸம் பாம்ஸும் தவ சரண-பங்கேருஹ-பவம்
விரிஞ்சி:ஸஞ்சின்வன் விரசயதி லோகா-னவிகலம்
வஹத்யேனம் செளரி:கதமபி ஸஹஸ்ரேண சிரஸாம்
ஹர:ஸம்க்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூளன-விதிம்
த₁னீயாம்ஸம் பா₁ம்ʼஸும்ʼ த₁வ ச₁ரண -ப₁ன்கே₃ருஹ-ப₄வம்ʼ
விரிஞ்சி₁: ஸஞ்சி₁ன்வன் விரச₁யதி₁ லோகா₁ -நவிக₁லம்ʼ
வஹத்₁யேனம்ʼ ஶௌரி: க₁த₂மபி₁ ஸஹஸ்ரேண ஶிரஸாம்ʼ
ஹர: ஸங்க்₁ஷுத்₃யைனம்ʼ ப₃ஜ₁தி₁ ப₄ஸிதோ₁த்₃து₄லன - விதி₄ம்
பாத தாமரையி னுள் உண்டு கட்பரம
வணுவினில் பலவியற்றினால்
வேத நான்முகன் விதிக்க வேறுபடு
விரிதலைப் புவனம் அடைய மான்
மூதரா அடி எடுத்த அனந்த முது
கண-பணா அடவி பரிப்ப மேல்
நாதனார் பொடி படுத்து நீறணியின்
நாம் உரைத்தென் அவள் பான்மையே
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்
அசையாத பிரம்மமாக இருந்த சிவனை ஞானஸ்வரூபமாகத் தெரிந்து கொள்ள வைத்தவள் அம்பிகை. அவனை வெளியே இருந்து எல்லாம் அவள் அசைக்கவில்லை. அவனுள்ளே சக்தியாக ஐக்கியமடைந்திருப்பவள் இங்கே எண்ணமே இல்லாமல் இருந்த ஞான ஸ்வரூபத்திற்கு “நான்” என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அசைத்தாள். இது இவ்வுலகின் முதல் அசைவு எனலாம். ஆட்டமான ஆட்டம்! இதுவே ஸ்ருஷ்டி மூலமாகவும் ஆனது. உள்ளுக்குள்ளே குமுறிக்கொண்டிருந்த ஒரு அசைவு தானே அதிர்வு தானே முதல் முதல் வெளிப்பட்டது! இது தான் big bang எனப்படும் பெருவெடிப்பு என்று அறிவியல் கூறுவதாய்ப் பரமாசாரியார்(காஞ்சி) கருதுகிறார். பரப்ரஹ்மத்தின் அதிர்வே சப்த ரூபமான வேதமந்திரங்களாகி அதிலிருந்தே ஸ்தூல வஸ்துக்கள் அனைத்தும் உண்டானதாய்ச் சொல்கிறார். இதைத் தான் ஸ்பந்தனம் எனப்படும் அசைவு. இத்தகைய அசைவை உண்டாக்கின அம்பிகை இதன் மூலம் ஐந்தொழில்களையும் நடத்துகிறாள். பிரம்மா, விஷ்ணு , ருத்ரன் ஆகியோரின் உதவியோடு. அவர்கள் மூவரும் முறையே படைத்து, காத்து அழித்தல் தொழிலைச் செய்து வருகின்றனர்.
பிரம்மா அன்னையின் திருவடித்தாமரைகளிலுள்ள மிக மிக நுட்பமான துகள்களே அந்த அதிர்வின் மூலம் வந்ததோ என்னும்படி அவற்றைச் சேகரித்தே இவ்வுலகை சிருஷ்டிக்கின்றாராம். ஆயிரம் தலைகள் உடைய ஆதிசேஷன் உருவில் விஷ்ணுவும் இவ்வுலகை மட்டும் தன் தலையில் தாங்காமல் அம்பிகையின் அந்தப் பாததூளியையும் சேர்த்தே தாங்குகிறான். ருத்ரனோ அவற்றை விபூதியாகத் தன் உடலில் பூசிக்கொள்கிறார். இவ்விதம் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவருமே அம்பிகையைத் தியானிக்கின்றனர் என்கிறார் ஆசாரியர். இதையே அபிராமி பட்டர்,
ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.
கமழ் பூங்கடம்பு சாத்தும் குழல் அணங்கே என விளிக்கிறார். தெய்வீக மணம் கமழும் கடம்பமலரைத் தன் தலையில் சூடிக்கொண்டிருக்கும் அணங்காகிய அம்பிகையை ஏத்தும் பல அடியவர்களோடு இந்த ஈரேழு உலகினையும் படைத்து, காத்து, அழித்து என முத்தொழில்களையும் செய்து வரும் மும்மூர்த்திகள் கூட தெய்வ மணம் பொருந்திய உன் திருவடிகளை வணங்கி, உன்னையும் வணங்கித் துதிக்கின்றனர். அத்தகைய பெருமை வாய்ந்த உன் திருவடிகளைப் போற்றிப் புகழும் அளவுக்கு என்னால் என்ன பாடல் புனைய முடியும்! இருந்தும் என் பாடலையும் நீ ஏற்றுக்கொண்டிருக்கிறாயே! அம்மா, அபிராமி, எளியோனாகிய என் நாவில் இருந்து வெளிவரும் அர்த்தமற்ற சொற்களால் பாடப்படும் பாமாலையையும் நகைப்புக்குரியதாய்க் கருதாமல் ஏற்றுக்கொள்கிறாய் அல்லவா!
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Friday, September 30, 2011
Thursday, September 29, 2011
நலம் தரும் நவராத்திரி வழிபாடு! செளந்தர்ய லஹரி 5

இரண்டாம் நாளான இன்று வாராஹியாகக் காட்சி அளிக்கிறாள் அன்னை. இவளே அம்பிகையின் படைத் தலைவியும் ஆவாள். தொந்திரவுகள் நிறைந்த இவ்வுலகில் போட்டி, பொறாமைகளால் அவதிப்படுபவர்கள் இவளை வணங்கினால் நிவர்த்தி பெறுவார்கள். இன்றைய நிவேதனம் தயிர் சாதம். பொதுவாகவே வியாழன் அன்று தயிர்சாதம் நிவேதனம் செய்யலாம். இந்த வருடம் இரண்டாம் நாள் வியாழக்கிழமையாகவே அமைந்துள்ளது.
மாலைச் சுண்டல்: வெள்ளைக்காராமணி. வெள்ளைக்காராமணியையும் முதல் நாளே ஊற வைக்கவும். மறுநாள் குக்கரில் அல்லது பிரஷர் பானில் வேக வைக்கவும். வெந்த பருப்பை நீரை வடிகட்டிவிட்டு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, மி.வத்தல். கருகப்பிலை, பெருங்காயம் தாளித்துக்கொண்டு, வெந்த பருப்பைப் போட்டுக்கிளறவும். முன் சொன்ன மாதிரியே கொஞ்சம் சாம்பார்ப் பொடி அல்லது மிளகாய், கொத்துமல்லி விதைப் பொடி சேர்த்து வதக்கிவிட்டுத் தேங்காய் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும்.
**************************************************************************************
வழக்கம் போலப் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு இதை ஆரம்பிக்கிறேன். ஏதோ எனக்குத் தெரிந்ததை நான் புரிந்து கொண்டதை மட்டும் இங்கே சொல்கிறேன். குற்றம், குறைகளைப் பொறுத்தருள வேண்டும். நம் அனைவருக்கும் குருவாக இருந்து இந்த ஜகத்துக்கே குருவாக விளங்கிய ஆசாரியருக்கு நம்முடைய நமஸ்காரங்களைச் சமர்ப்பிப்போம்.
ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலமபி முத்ராவிரசனா
கதி:ப்ராதக்ஷிண்ய-க்ரமண-மசனாத்யாஹூதி-விதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸுகமகில-மத்மார்ப்பண-த்ருசா
ஸபர்யா-பர்யாயஸ்-தவ பவது யன்மே விலஸிதம்
நம்முடைய ஆன்மாவையே இறைவனுக்கும், இறைவிக்கும் சமர்ப்பணம் செய்கிறோம். இதுவே அதி உந்நதமானதொரு நிலை. ஆனால் எல்லாராலும் இது இயலுமா? என்றாலும் அத்தகையதொரு முயற்சியை அம்பிகை வழிபாட்டின் மூலம் தொடங்க வேண்டும். இந்த நிலையால் இந்த சமர்ப்பணத்தால் நம்முடைய ஒவ்வொரு பேச்சுமே அம்பிகைக்குரிய ஜபமாகவும், நாம் செய்யும் அனைத்துத் தொழில்களும் அவளுக்குச் சமர்ப்பணம் செய்யும் முத்திரைகளின் விளக்கமாயும், நம் ஒவ்வொரு அடியும், ஒவ்வொரு நடையும் அம்பாளுக்குச் செய்யப் படும் பிரதக்ஷிணமாகவும், நாம் உட்கொள்ளும் உணவு, போன்றவை ஹோமத்தின் ஆஹுதியாகவும், நாம் ஓய்வெடுக்கப் படுப்பது அவளுக்குச் செய்யும் நமஸ்காரமாகவும், இன்னும் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு செய்கையும் அம்பிகைக்குச் சமர்ப்பிக்கிறோம். எப்போதும் இந்த நினைப்போடு இருந்தோமானால் நம்மைத் துன்பங்கள் அண்டாது. அவமானங்கள் தகிக்காது; துயரங்கள் சூழாது. அனைத்தும் அவள் செயலே என நினைப்போம்.
இது சமர்ப்பண ஸ்லோகத்தின் பொருள்.
அடுத்து ஆநந்த லஹரி முதல் ஸ்லோகம் ஆரம்பம்:
சிவ:சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திது-மபி
அதஸ்-த்வா-மாராத்த்யாம் ஹரி-ஹர-விரிஞ்சாதிபி-ரபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதமக்ருத-புண்ய:ப்ரபவதி
ஶிவ: ஶக்₁த்₁யா யுக்₁தோ₂ யதி₃ ப₄வதி₁ ஶக்₁த₁: ப்₁ரப₄விது₁ம்ʼ
ந சே₁தே₁வம்ʼ தே₃வோ ந க₂லு கு₁ஶல:ஸ்ப₁ந்தி₃து₂-மபி₁
அத₁ஸ்த்₁வா -மாராத்₄யாம்ʼ ஹரி -ஹர - விரின்சா₁தி₃பி₄ -ரபி₁
ப்₁ரணந்து₁ம்ʼ ஸ்தோ₁து₁ம்ʼ வா க₁த₂-மக்₁ருத₁பு₁ண்ய: ப்₁ரப₄வதி₁
சிவம் எனும் பொருளும் ஆதி சத்தியொடு
சேரின் எத்தொழிலும் வல்லதாம்
இவள் பிரிந்திடில் இயங்குதற்கும் அரிது
அரிதெனா மறை இரைக்குமாம்
நவபெரும் புவனம் எவ்வகைத் தொழில்
நடத்தி யாவரும் வழுத்து தாள்
அவனியின்கண் ஒரு தவம் இலார் பணியல்
ஆவதோ பரவல் ஆவதோ
கவிராஜ பண்டிதரின் தமிழாக்கம்
சிவ சக்தி ஐக்கியத்தைச் சொல்லும் ஸ்லோகம் இது. சிவனோடு சக்தி சேர்ந்தாலே சிவன் சீவன் ஆகிறான். சக்தி இல்லை எனில் சிவன் பயனற்று சவம் ஆவான். சிவனுக்கும் மங்களத்தைச் செய்து அவனை விட்டுப் பிரியாத சக்தி நமக்கும் மங்களத்தை உண்டாக்கட்டும். தக்ஷிணாமூர்த்தியாக யோகநிலையில் இருக்கையில் ஈசன் தன் சக்தியை உள்ளூர அடக்கி வைத்துக்கொண்டிருக்கிறான். அந்த சித்சக்தி தான் அம்பாள். அவள் உள்ளே அடங்கிக்கிடக்காமல் வெளியே வந்தால் தான் உலகம் இயங்கும். எந்தக் காரியமுமே பண்ணாமல் ப்ரம்மமாய் சிவன் அமர்ந்திருந்தால் சிருஷ்டிகள் நடைபெறுவது எங்கனம்! சித்சக்தி சேர்ந்தாலேயே பிரபஞ்சம் நடைபெறும்.
ஆகையால் சகலத்தையும் நடத்தும் சக்தியே அம்பாள் ஸ்வரூபம். அவளே அனைத்தையும் படைத்துக்காத்து ரக்ஷிக்கிறாள். மும்மூர்த்திகள் மூலமாக அவள் இந்தத் தொழிலைச் செய்து வருவதாக ஐதீகம்.
இதையே அபிராமி பட்டரும்,ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.
அபிராமி அந்தாதி 7
இப்படி விஷ்ணு, பிரம்மா, ருத்ரன் மூவராலும் அம்பிகை வழிபடப் படுகிறாள். இவ்வளவு பெருமை வாய்ந்த அம்பிகையை நாமும் வழிபடுவதெனில் இது முன் ஜென்மப் புண்ணியம் அன்றி வேறென்ன இருக்க முடியும். பிறவிப் பெருங்கடலாகிய மாபெரும் சுழலில் சிக்கித் தயிர் கடையும் மத்தைப் போல் நாம் அலையாமல் நம்மைத் தடுத்தாட்கொள்ள அந்தச் சுழலில் இருந்து நம்மை விடுவிக்க அம்பிகையின் சேவடிகளைப் பற்றினாலே இயலும். நம்மால் அதாவது நம் போன்ற சாமானியர்களால் நிர்குணமான பிரம்மத்தை வழிபடுவது என்பது அவ்வளவு எளிதில் முடியாத ஒன்று. புரிந்து கொள்ளவும் இயலாது. அதனால் ரூபஸ்வரூபமாக அம்பாளை ஸ்தாபித்து வழிபட்டு வந்தோமானால் நம் மனதை அந்த அம்பாளின் ரூபத்தில், பக்தி மார்க்கத்தில் திருப்பினால் அது தானாகவே நம்மை ஞான மார்க்கத்துக்கு அழைத்துச் செல்லும். நம்முடைய தேவதை ஆராதனைகளின் தாத்பரியமும் இதுவே.
சிவனை விட்டு ஒரு கணமும் பிரியாத இந்தச் சக்தியை நாம் வழிபட்டு வந்தால் ஸர்வ விக்னங்களும் நாசம் அடைந்து, நாம் எடுக்கும் அனைத்துக் காரியங்களும் ஸித்தி அடையும் என்பது ஆன்றோர் வாக்கு.

இதை அபிராமி பட்டர்,
கண்ணியதுன் புகழ் கற்பதுன் நாமங்கசிந்து பத்தி
பண்ணியதுன்னிரு பாதாம்புயத்திற் பகலிரவா
நண்ணியதுன்னை நயந்தோர் வையத்து நான் முன்செய்த
புண்ணியமேது என்னம்மே புவியேழையும் பூத்தவளே.
அபிராமி அந்தாதி 12.
என்று கூறுகிறார். ஊனும், உடலும் உருக உருக, அபிராமி அன்னையின் திருவருள் வேண்டிப் பாடிய இந்த அந்தாதித் தொகுப்பில் மேற்கண்ட பாடலுக்குப் பொருள் காண்கையில்,
புவி ஏழையும் பெற்றெடுத்த அம்மா, என் தாயே, அபிராமி அன்னையே, உன் புகழையே நான் நினைந்து நினைந்து பாடி வருகிறேன், உன் திருநாமம் தவிர மற்ற நாமங்களைக் கற்றேன் அல்ல; எப்போதும், எந்த நேரமும் உன்னையே நினைந்து பக்தி செய்தும் வருகிறேன். அம்மா, உன்னை நினைத்துக்கொண்டே இருந்ததால் அன்றோ, உன் பூரண நிலவு போன்ற முகத்தை நினைத்த காரணத்தால் அன்றோ அமாவாசையைப் பெளர்ணமி எனக் கூறினேன். இப்படி நான் என்னையே மறக்கும் அளவுக்கு பக்தி செய்து வந்திருக்கிறேன் என்கிறார் பட்டர். பகலும், இரவும் உன்னை நெருங்கி எந்நேரமும் உன் புகழ் பாடும் அடியார் கூட்டத்தை அல்லவோ நான் எப்போதும் நாடுகிறேன். இவை எல்லாம் உன் திருவருளால் அன்றோ நடைபெறுகிறது! என் தாயே, நான் முன் பிறவியில் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதனாலேயே இப்பிறவியில் எனக்கு இவை எல்லாம் கிடைக்கப் பண்ணி இருக்கிறாய்.
Wednesday, September 28, 2011
கொலுவுக்கு வந்துட்டுச் சுண்டல் வாங்கிக்குங்க!
நலம் தரும் நவராத்திரி வழிபாடு! செளந்தர்ய லஹரி 4
இன்றைய அலங்காரம் ராஜராஜேஸ்வரி.நிவேதனம் காலை: சர்க்கரைப் பொங்கல்,
மாலை: பயறுச்சுண்டல்.
செய்முறை: எந்தச் சுண்டலுக்கானாலும் முதலில் நன்கு ஊற வைத்துவிடுங்கள். இல்லை எனில் குழைய வேகாது. ஒவ்வொருத்தர் பச்சைப்பயறைச் சும்மா வெறும் வாணலியில் வறுத்துவிட்டுக் குக்கரில் வேக வைத்தால் போதுமானது என்கின்றனர். பயறு வகைகள் சில சமயம் கல் போல இருக்கும். அரித்தால் அடியில் தங்கும். ஆகவே பயறு வேக வைக்கையில் அம்முறையில் பயறு அவ்வளவு நன்கு வேகாது. மேலும் வெல்லம் போட்டுச் செய்கையில் வெல்லத்தைச் சேர்த்ததும் விறைத்துக்கொண்டு காணப்படும். காரம் போட்டுச் செய்தாலும் கொஞ்சம் நறுக் நறுக்கென்று தான் இருக்கும். சுண்டல் குழைய வேண்டும் என்றால் முதல்நாளே பயறாகவே இருந்தாலும் ஊற வைக்கவும்.
ஊற வைத்த பயறை நேரடியாகவே வேக வைக்கலாம். குக்கரில் வைத்தால் மாவு போல் ஆகிவிடக் கூடிய வாய்ப்பு உண்டு. வேக வைத்த பயறில் வெல்லம் போட்டுச் செய்வதானால் ஒரு சிட்டிகை மட்டும் உப்புச் சேர்த்தால் போதும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு தாளித்துக்கொண்டு, வேக வைத்த பயறு, கால் கிலோ எனில் 50 கிராம் வெல்லம் பொடி செய்து சேர்க்கவும். வெல்லத்தோடு பயறு நன்கு கலந்து வெல்ல வாசனை போனதும் தேங்காய்த் துருவல் சேர்த்து ஏலப்பொடி சேர்க்கவும்.
காரச் சுண்டல்: பயறு வேக வைக்கையிலேயே தேவையான உப்பைச் சேர்க்கவும். பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, பெருங்காயம், மி.வத்தல், கருகப்பிலை தாளித்துப் பயறைச் சேர்க்கவும். தேவையானால் ஒரு ஸ்பூன் சாம்பார் பொடியைச் சேர்க்கவும். அல்லது மி.வத்தல், தனியாவை எண்ணெய் கொஞ்சமாக ஊற்றிக்கொண்டு வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ளவும். அந்தப் பொடியைப் போடலாம். நன்கு கலந்ததும், தேங்காய் துருவல் சேர்க்கவும்.
****************************************************************************************
பல நாட்களாய் எழுதணும்னு நினைத்த ஒரு விஷயம் தான் செளந்தர்ய லஹரி. ஆனால் நான் அதை ஆழ்ந்து படிச்சதில்லை. ஆகவே தயக்கம் இருந்தது. இப்போ ஒரு குழும விவாதத்தில் திவாகர் திராவிட சிசு பற்றிக் கேட்க, நான் செளந்தர்ய லஹரியை எடுத்துக்காட்ட, திவாகர் அதை விபரமாக எழுதச் சொன்னார். அந்த ஒரு பதிவு தான், அத்தோடு முடிந்தது என நினைத்திருந்த சமயம் அதைப் படித்த பின்னர் ஜெயஸ்ரீ இந்த நவராத்திரிக்கா என்று கேட்க, அட, இது தோன்றவே இல்லையே என நினைத்தேன். முடிந்த வரை பார்க்கலாம் என்று எழுத ஆரம்பித்திருக்கிறேன். தீராத மன வேதனையும், அதனால் ஏற்படும் உடல் கோளாறுகளிலும் கவனம் செல்லாமல், மனம் திசை திருப்பப்பட்டு ஆறுதல் ஏற்படும் என்பதும் இன்னொரு காரணம். ஆக என் சொந்த லாபத்திற்காக நான் செய்யும் இந்த வேலையைப் புகழ்ந்து பின்னூட்டம் போடுவது சரியாய் இருக்காது. அம்பாளையே போற்றி வழிபடுவோம். அம்பாளே கதி என அவள் பாதத்தை இறுகப் பிடித்துக்கொண்டு ஆரம்பிக்கிறேன். அனைவருக்கும் நன்றி.
*************************************************************************************
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. பெண்ணைத் தெய்வமாய்ப் போற்றும் நாடு நம் நாடு. பெண்ணுரிமை பேசுவோர் இதை அடிமைத் தனம் எனக் கூறினாலும் இன்றளவும் அது மாறவில்லை என்றே சொல்லலாம். சக்தி உபாசகன் ஆன பாரதியும் சக்தி வழிபாட்டிலும், காளியை வணங்குவதிலும் காட்டிய ஈடுபாடு நாம் அறிவோம். காளியே அனைத்திலும் நிலைத்து நின்று இருக்கிறாள் என்பதை அவன்
யாதுமாகி நின்றாய் காளி,
எங்கும் நீ நிறைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-காளி
தெய்வ லீலையன்றோ"
என்ற பாடலின் மூலம் காட்டுகிறான். மேலும் பாடலின் கடைசியில் காளியைச் சரணடைந்து அன்பு செலுத்தினால் அவளும் அனைத்தையும் தருகிறாள் என்றும் உறுதிபடச் சொல்கின்றான்.
அன்பு தந்துவிட்டாய்-காளி-காளி
ஆண்மை தந்துவிட்டாய்
துன்பம் நீக்கிவிட்டாய்- காளி
துயரமழித்து விட்டாய்!
என்று காளியைச் சரணடைந்தால் அனைத்துத் துன்பங்களும் நீங்கும் எனக் கூறுகிறான். இது உண்மை என்பதையும் அறிவோமல்லவா! அன்னையின் பாதங்களைச் சரணடைந்தால் அவளே கதி என இறுகப் பற்றிக்கொண்டு விட்டால் அந்தக் குழந்தையை அவள் எட்டியா உதைப்பாள். இந்த எண்ணங்களோடு தெய்வத்தின் குரல் புத்தகத்தில் செளந்தர்ய லஹரி விளக்கங்களைப் படிக்க ஆரம்பித்தேன்..
எல்லாவற்றுக்கும் மேலே ஆச்சரியவசமாக நான் பிரித்த பக்கத்திலும் அம்பாளின் காலடிகளைப் பிடித்துக்கொண்டு கதறுவதையே பரமாசாரியாரும் கூறி உள்ளார். இந்த மனம் பல விதங்களிலும் வெட்கம் அடைந்து, பலராலும் துக்கம் அடைந்து, அதனால் அவமானம் அடைந்து அழுகிறது. துடிக்கிறது. ஆனால் நாம் அப்போதாவது அம்பாளைச் சரணடைய வேண்டாமா! மாட்டோம். உலகாயுத விஷயங்களில் மூழ்கி, அதிலேயே கவனமாக நமக்கு ஏன் இப்படி ஒரு கதி ஏற்பட்டது என்றெல்லாம் யோசிப்போம். அதன் பின்னராவது புத்தி வருமா என்றால் வராது. இவ்வுலகத்தை நாமா உண்டாக்கினோம்? எல்லாமே நம்மால் தான் என்பது போல் ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக்கொண்டு மேலும் மேலும் மனம் புழுங்குவோம். கோபம், ஆத்திரம், அசூயை, எரிச்சல் எல்லாம் ஏற்படும். கொஞ்சம் யோசித்தால், சூரிய, சந்திரரை, மலையை, மரம், செடிகொடிகளை, புழுக்களை, பூச்சிகளை, விலங்குகளை, பறவைகளை எது நம்மால் ஏற்பட்டது! எதுவும் இல்லை. நாமே அவள் சிருஷ்டி. நம் மனத்தை நம்மால் அடக்க முடியாமல் தவிக்கையில் இது நம்மால் இயலக்கூடிய ஒன்றல்ல, இதுவும் அம்பிகையின் மாயை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதை அடக்க வல்லது தேவியின் திருநாமமே என்பதைப் புரிந்து கொண்டால் அவளே கதி எனச் சரணடைந்தால் அப்படி நாம் சரணடைவதும் அவள் அனுகிரஹத்தாலேயே என்பதைப் புரிந்து கொண்டால் மனம் என்பது ஒன்று இருப்பதே தெரியாமல் உடல் இருப்பதும் தெரியாமல் பக்திப் பரவசத்தில் மூழ்கி விடுவோம். ஆனால் எங்கே! அப்போதும் நாம் நம்மைக் குறித்தே தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம்.
ஆனால் அம்பாள் அனைத்தையும் மன்னிப்பாள். தாய் எங்காவது தன் குழந்தையிடம் கோபமாய் நடந்து கொள்வாளா?? அப்படிக் கோபமாய் இருந்தால் அது நம் நன்மைக்கே தான் இருக்குமே அன்றி, சும்மாவானும் அம்மா கோபிக்க மாட்டாள் இல்லையா?? அதே போல் தான் அம்பாள் நமக்குத் தரும் கஷ்ட, நஷ்டங்கள் அனைத்துமே நம் நன்மைக்காகவே. நம்மைப் புடம் போட்டு நம் மனதைத் திடம் ஆக்கித் தன்னுடன் சேர்த்துக்கொண்டு தானும் ஆனந்தித்து, நம்மையும் ஆனந்தமாக இருக்கப் பண்ணுவதற்காகவே அனைத்தும் நடக்கின்றன. அன்னையைத் தொடர்ந்து வழிபடுவோர் நாளடைவில் தாம் அவளது குழந்தை என்ற மனோபாவம் தோன்ற ஆரம்பித்து ஒரு குழந்தையைப் போலவே நிர்மலமான மனத்தைப்பெறுவார்கள். குழந்தையாகவே மாறி, தேவி ஒருத்தியே அனைவருக்கும் தாய் என்ற எண்ணம் மேலிட்டு இருக்கும். பார்க்கும் அனைத்துப் பெண்களையும் அன்னை வடிவிலேயே பார்க்க ஆரம்பிப்பார்கள்.
நம் நாட்டில் தெய்வ வழிபாடு, அதிலும் பெண் தெய்வ வழிபாடு தொன்று தொட்டு, எப்போது எனத் தெரியாத காலத்திலிருந்தே இருந்து வருகிறது. பழையோள் எனவும், ஐயை எனவும் போற்றித் துதித்து வந்திருக்கின்றனர். நம் தமிழ் மூதாட்டியான ஒளவையோ “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்” என்கிறாள். மாணிக்கவாசகரோ தம் சிவ புராணத்தில், “தாயிற்சிறந்த தயாவான தத்துவனே!” எனவும், பிடித்த பத்துக்களில் “அம்மையே, அப்பா, ஒப்பிலா மணியே” எனவும் ஈசனுக்கும் மாத்ருபாவத்தை ஏற்றிப் பாடி இருக்கிறார் என்பதையும் காண்கிறோம்.
அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
அன்புடைய மாமனும் மாமி யும்நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
என்கிறார் திருத்தாண்டகத்தில் அப்பரடிகள்.
அவ்வளவு ஏன்! திருச்சியில் மலைக்கோட்டைக் கோயிலில் “தாயுமானவர்” என்ற பெயரிலேயே அருளாட்சி புரிந்து வருகிறார். செட்டிப் பெண்ணின் பிரசவத்திற்காக அவள் தாயைப் போல் வந்து அவளுக்குப் பிரசவம் பார்த்த நிகழ்ச்சி அந்தக் கோயிலின் தலவரலாறாகவே சொல்லப் படுகிறது. இதிலிருந்து தாயின் முக்கியத்துவம் புரிகிறது அல்லவா.
ஆனால் நம் சரீரத்தை, உடலை நமக்குக் கொடுத்த தாய் என்றேனும் ஓர் நாள் மறையலாம்; ஆனால் சர்வலோகத்துக்கும் மாதாவான ஜகத் ஜநநீயான அம்பாளோ நம்மை என்றும் தொடர்ந்து வருகிறாள். அதுவும் ஈசனையும் தன்னுள் அடக்கிய வண்ணம் சிவசக்தியாகத் தொடர்ந்து வந்து என்றென்றும் சாச்வதமாகத் தன் கருணையைக்காட்டிய வண்ணமே இருக்கிறாள். அத்தகையதொரு மாத்ருகாபாவத்தை நாம் அன்னையிடமே காணமுடியும். இந்த அன்னைக்கு எடுக்கும் விழாவே நவராத்திரி ஆகும். பொதுவாக விழாக்களும் பண்டிகைகளும் ஓரிரு நாட்கள் தான் இருக்கும். ஆனால் இந்த நவராத்திரிக்கு மட்டும் ஒன்பது நாட்கள்! ஒன்பது நாட்களும் அன்னைக்கு விழா எடுப்பார்கள். முக்கியமாய்ப் பெண்களுக்கெனவே ஏற்பட்ட மாபெரும் பண்டிகை நவராத்திரிப் பண்டிகை ஆகும். ஏன்?
சிருஷ்டிக்குப் பெண்ணே முக்கியம். அனைத்துக்கும் ஆதாரம் அவளே. பெண்ணில்லையேல் சிருஷ்டி இல்லை. அழிந்து போகும் இவ்வுயிருக்கு எப்படி ஒரு தாய் இருக்கிறாளோ அவ்வாறே இகம், பரம் இரண்டிலும் ரக்ஷிக்கிற ஒரு தாயையே அம்பாள் வடிவில் நாம் வழிபடுகிறோம். இந்த மண்ணில் தோன்றிய புல்லில் இருந்து, புழு, பூச்சி, வண்டுகள், பறவைகள், அசையும் அசையாப் பொருட்கள், விலங்குகள், மலைகள், காடுகள் என அனைத்துக்கும் உருக்கொடுத்து சிருஷ்டியை ஏற்படுத்திய தாயை நாம் வணங்கி அவளுக்கு நன்றிக்கடன் செலுத்துவதே நவராத்திரியின் தாத்பரியம். மஹாபிரளயம் முடிந்து சிருஷ்டி ஆரம்பிக்கையில் முதலில் பரம்பொருள் உண்டாக்குவது இச்சா சக்தி என்னும் சக்தி. அதன் பின்னரே கிரியை உண்டாகிறது. முடிவில் ஞானம் கிட்டுகிறது. இவையே முறையாக முதல் மூன்று நாட்கள் துர்கை, நடுவில் மூன்று நாட்கள் லக்ஷ்மி, கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி என வழிபடப் படுகிறது. இம்மூன்று சக்திகளும் சேர்ந்த திரிபுரசுந்தரியையே விஜயதசமி அன்று வெற்றித் தேவதையாக வழிபடுகிறோம்.
துர்கையானவள் வீரத்தின் விளைநிலமாக, சிவனுக்குப் ப்ரியமானவளாக, நெருப்பைப் பார்க்கையில் அழகாக இருக்கும், தொட்டால் சுடும் என்பது போல் சீற்றம் நிறைந்தவளாக, கேடுகளை அடியோடு அழிக்கும் மாபெரும் சக்தியாக விளங்குகிறாள். இந்த துர்கைகள் ஒன்பது பேர். அவர்கள் முறையே வன துர்கை, சூலினி துர்கை, ஜாத்வே துர்கை, ஜ்வாலா துர்கை, சாந்தி துர்கை, சபரி துர்கை, தீப துர்கை, ஆசுரி துர்கை, லவண துர்கை
லக்ஷ்மி: செல்வத்தின் பிறப்பிடம், விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்பவள், தாமரை மலர் போன்ற அழகுடையவள், அமுதமயமான இவள் வறுமையைப் போக்குவாள். கிரியா சக்தியான இவள் அஷ்ட லக்ஷ்மிகளாகவும் விளங்குகிறாள். அவர்கள் முறையே ஆதி லக்ஷ்மி, தன லக்ஷ்மி, வீர லக்ஷ்மி, தைரிய லக்ஷ்மி, சந்தான லக்ஷ்மி, தான்ய லக்ஷ்மி, கஜ லக்ஷ்மி, விஜய லக்ஷ்மி
சரஸ்வதி: ஆரவாரமில்லாமல் ஜொலிக்கும் வைரம் போன்ற இவள், கல்வியின் தெய்வம், ஞானச் சுடர், பிரம்மனுக்குப் பிரியமானவள். அஷ்ட சரஸ்வதியர் வாகீஸ்வரி, சித்தேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிக்ஷ சரஸ்வதி, கட சரஸ்வதி, நீல சரஸ்வதி, கினி சரஸ்வதி.
அதே போல் மூன்று தேவியரின் முப்பெரும் சக்திகளாக முதலில் துர்கைக்கு மாஹேஸ்வரி, கெளமாரி, வாராஹி ஆகியோரும் லக்ஷ்மிக்கு இந்திராணி, வைஷ்ணவி, மஹாலக்ஷ்மி ஆகியோரும், சரஸ்வதிக்கு மஹாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகியோரும் சக்திகள். இவர்கள் அனைவரும் சேர்ந்தே மஹிஷனை அழித்தார்கள் எனப்படும்.
துணைப் புத்தகங்கள்: தெய்வத்தின் குரல் ஆறாம் பாகம், செளந்தர்ய லஹரி விளக்கங்கள்
ஸ்ரீதேவி மஹாத்மியம், ராமகிருஷ்ணா பதிப்பகம், விளக்க உரை அண்ணா.
Monday, September 26, 2011
மதுரையில் கொலு பாருங்க!
************************************************************************************
ம்ம்ம்ம், என்ன சொல்றது? இப்போ நவராத்திரி நேரம்ங்கிறதாலே, சின்ன வயசு நவராத்திரி நினைவுகள் எல்லாம் வருது. நாங்க கழுதை அக்கிரஹாரத்திலே இருக்கும்போது தான் எங்க வீட்டிலே கொலு வைக்க ஆரம்பிச்சாங்கன்னு நினைக்கிறேன். விவரம் புரியாத அந்த வயசிலே நவராத்திரிக்கு எங்க வீட்டில் வீட்டு வேலைகளில் அம்மாவுக்கு உதவும் "சுப்பம்மா" என்னும் முதிய பெண்மணி, (இவர் எங்க அப்பாவை "என்னடா ராமகிருஷ்ணா?" என்று பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவு அதிகாரம் படைத்தவர், குடும்பப் பாட்டு, குடும்ப நினைவு மாதிரி குடும்ப உதவியாளர்) எனக்குக் கிருஷ்ணன் கொண்டையில் இருந்து அஜந்தா கொண்டை, பிச்சோடா, மல்லிகைப் பூவைத் தலையில் வைத்துத் தைத்து அலங்காரம் செய்தல் என்று தினம் ஒரு முறையில் அலங்காரம் செய்து விடுவார். பூத் தைத்தல் என்றால் எங்க சுப்பமா நிஜமாவே தலையில் நேரடியாகப் பூக்களை வரிசைப் படுத்தி அலங்கரித்துத் தைப்பார். இப்போ மாதிரி வாழைப் பட்டையிலோ அல்லது வேறு ஏதாவது பட்டையிலோ வைத்துத் தைத்து விட்டுப் பின்னலில் வச்சுக் கட்டறது எல்லாம் இல்லை. வலிக்கும். அதை விடப் பாடு என்னவென்றால், பிரிக்கும்போது நான் கத்தும் கத்தல் தான்.
அண்ணா தலைமை வகிக்கப் பின்னர் தம்பியும் பெரிய பையன் ஆனதும் அவனும் துணைக்கு வர என்னுடைய நவராத்திரிப் பட்டினப் பிரவேசம் நடக்கும். கையில் ஆளுக்கு ஒரு பை எடுத்துக் கொள்வோம். சில தெரிந்த வீடுகளில் அண்ணா, தம்பிக்கும் சுண்டல் அளிக்கப் படும். பொதுவாக அண்ணா உள்ளேயே வரமாட்டார். வெளியே நின்று விடுவார். ஆகையால் தம்பி சின்னவன், குழந்தை என்பதால் அவனுக்குக் கட்டாயம் கிடைக்கும். என்றாலும் அங்கேயே பிரிச்சுத் தின்பது எல்லாம் கிடையாது. வீட்டுக்கு வந்து அப்பா, அம்மாவிடம் அன்றாடக் கொலு வரவு, செலவுகளை ஒப்பித்துவிட்டு ஒற்றுமையாகப் பகிர்ந்து கொள்வோம்! இந்த, இந்தப் பாக்கெட்டில், இன்னார் வீட்டுச் சுண்டல் என்பது நினைவு வச்சுக்கறது எனக்குத் தானாகவே கைவரப் பெற்றிருந்தது.இது இன்றளவும் என்னோட மறுபாதி ஆச்சரியப் படும் விஷயம், எப்படி இவ்வளவு சரியா நினைப்பு வச்சுக்கறே என்பார். அவருக்குச் சில சமயம் என்னோட பேரே மறந்துவிடும். நீ யாருன்னு என்னைக் கேட்கலை. அந்தளவுக்கு மறதி.
அப்போ எல்லாம் குழந்தைகளுக்குத் தேங்காய், பழம் கிடைக்காது. வெற்றிலை, பாக்கு, சுண்டல் மட்டும்தான். பழம் கொடுக்கும் வீட்டில் சுண்டல் கிடைக்காது. மனசுக்குள் திட்டிப்போம். போன முறை இவங்க வீட்டுச்சுண்டல் உப்பு ஜாஸ்தி, என்றோ, உப்போ போடலை என்றோ பேசிப்போம். அவங்க வீட்டுப் பெண்ணுக்கு என்ன அலங்காரம் என்பது உன்னிப்பாய்க் கவனிக்கப் படும். மறுநாள் வீட்டில் அது பற்றிய வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர், அன்றைய என்னோட அலங்காரத்தில் குறிப்பிடத் தக்க மாறுதலோ, அலங்காரமே மாறுதலோ செய்யப் படும். மறுநாள் பிரிக்க நேரமில்லாமல் கொலு அலங்காரத்துடனேயே பள்ளிக்குச் சென்ற அனுபவமும் உண்டு. மேல ஆவணி மூலவீதியில் இருந்த பெரியப்பா வீட்டுக்குத் தினமும் விசிட் உண்டு. லட்சுமி நாராயணபுர அக்ரஹாரத்தில் இருக்கும் பெரியப்பா வீட்டுக்குத் தள்ளி இருப்பதால் பெரியம்மா வந்து அழைத்துச்சென்று கொண்டு விடுவார். அங்கே போவது என்றால் கொஞ்சம் சந்தோஷமா இருக்கும். பெரியம்மா மத்தியானம் மாட்னி ஷோவுக்குக் கல்பனா தியேட்டரில் என்ன படம் ஓடுகிறதோ அதுக்கு அனுப்பி வைப்பார். அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட் என்பதால் நிச்சயமாய் அப்பாவுக்குத் தெரியாமல் தான். திடீர்னு அப்பா அங்கே வந்துவிட்டால், பெரியம்மாவின் அப்பா நைஸாக இங்கே பக்கத்தில் ஒரு வீட்டில் கூப்பிட்டுக் கொண்டிருந்ததால் போயிருக்காங்க, இதோ போய் அழைத்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு மெதுவாய்த் தியேட்டருக்கு வந்து, நான் உட்கார்ந்திருக்கும் இடம் முன்பே பெரியம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டிருப்பார், வெளியே இருக்கும் வாட்ச்மேன் அவங்களுக்கு ரொம்ப நாள் பழக்கம் என்பதால் அவரிடம் சொல்லிக் கூட்டிப் போய் எச்சரிக்கை செய்து வைப்பார்.
அப்பா வந்திருப்பது தெரியாமல் படம் முடிந்து வந்து படத்தைப் பற்றிப் பேசிக் கொண்டு மாட்டிக் கொண்டதும் உண்டு. தாத்தா வீட்டுக்குப் (அம்மாவின் அப்பா) போவது இன்னும் ஒரு தனி அனுபவம். அங்கே கொலு எல்லாம் வச்சுக் கட்டுபடி ஆகாது. சும்மாப் போயிட்டு வருவோம். அப்பாவின் அப்பா பத்திச் சொல்லலைனு நினைக்காதீங்க. அவர் என் தம்பி பிறக்கும் முன்னேயே காலம் ஆகிவிட்டார் என்பதால் அவ்வளவாய் நினைவு இல்லை. என்றாலும் அவரைப் பற்றிய குறிப்புக்களும் இடம் பெறும். எல்லா வீட்டு உலாவும் முடிந்து வீட்டுக்கு வந்து எல்லார் வீட்டுச் சுண்டலும் விமரிசங்களுடன் அரைபட்டு முடிச்சதும், சாவகாசமாய்க் கோவில் உலாக் கிளம்புவோம். அப்பா, அண்ணா, தம்பி தனியாப் போவாங்க. நான், அம்மா அக்கம்பக்கம் பெண்களுடனோ அல்லது இரண்டு பேரும் தனியாவோ போவோம். அது வரை எல்லாக் கோவிலிலும் அலங்காரமும் இருக்கும். வீதிகளில் கூட்டமும் இருக்கும். நிதானமாய் மீனாட்சி கோவில், மதனகோபாலசாமி கோவில், இம்மையில் நன்மை தருவார் கோவில்,கூடலழகர் கோவில் என்று ஒரு நாள் வைத்துக் கொண்டால் மறுநாள் மீனாட்சி கோவில் போயிட்டு வடக்குப் பக்கம் கோவில்களுக்கும், ராமாயணச்சாவடியில் தினமும் செய்யும் அலங்காரமும் போய்ப் பார்ப்போம். இப்போ ராமாயணச் சாவடி அப்படியே இருக்கா தெரியலையே?
Sunday, September 25, 2011
பெயர்க்காரணம்! ஸெளந்தர்ய லஹரி! 3
ஸெளந்தர்ய லஹரி எனப் பெயர் வைத்துவிட்டு ஆசாரியாரின் அவதாரத் தேதிகளிலேயே ஆழ்ந்து போகாமல் கொஞ்சம் லஹரியில் மூழ்குவோமா?? இது சாக்ஷாத் பரமேச்வரனாலேயே அம்பிகையைப் போற்றிப் பாடப்பட்டது என்பார்கள். அந்தக் கைலை சங்கரன் சொன்னதை நம் அவதார சங்கரர் கைலை சென்ற போது நேரிலேயே ஈசனிடமிருந்து ஐந்து ஸ்படிக லிங்கங்களையும் இந்த ஓலைச்சுவடிகளையும் பெற்றுக்கொண்டதாய்ச் சொல்லுவார்கள். லிங்கங்கள் ஈசன் ஸ்வரூபம் எனில் இந்தச் சுவடிகளில் அம்பாளின் மந்த்ரமயமான ரூபஸ்வரூபம். ஆகவே இது உலக மக்களுக்குப் பயன்படவேண்டியே கொடுத்திருக்கின்றனர். இது வசின்யாதி வாக்தேவதைகளே அம்பாள் மேல் பாடியதாகவும் சொல்கின்றனர். ஆனால் லிங்க புராணத்திலோ இது மஹாமேருவில் விநாயகரால் எழுதப்பட்டது என்று இருப்பதாய்த் தெரிய வருகிறது. புஷ்பதந்தர் என்பார் மேருமலையில் இதை எழுதி வைத்ததாயும் ஒரு கூற்று. இன்னொரு கூற்று அவருக்கும் முன்னரே மேரு மலைச்சுவர்களில் இது காணப்பட்டது என்றும், ஸ்ரீ கெளடபாதர் இதைக் கிரஹித்துப்பின் ஆதிசங்கரருக்கு உபதேசம் செய்ததாயும் சொல்லப்படுகிறது. காலத்தால் முந்திய சில ஆக்கங்கள் எப்போது எழுதப்பட்டது என்பதை விட்டுவிட்டு அதன் சாரத்திற்குப் போவோம்.
எப்படியானாலும் நமக்குக் கிடைத்தது ஆதிசங்கரர் மூலமே என்பது என்னவோ உறுதி. அவர் ஈசனிடமிருந்து இதைப் பெற்று வந்தபோது அங்கே காவல் இருந்த நந்திதேவர் இவர் கைகளில் இருந்த சுவடிகளைக் கண்டதும் அவற்றை வேகமாய்ப் பிடுங்கிவிட்டாராம். ஆசாரியாரிடம் 41 ஸ்லோகங்கள் கொண்ட சுவடிகள் மட்டுமே தங்க, திகைத்த ஆசாரியாரை அம்பிகை மீதம் உள்ள ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை சங்கரரையே பாடிப் பூர்த்தி பண்ண ஆக்ஞாபித்தாள் என்பதும் கேள்விப் படுகிறோம். இதில் முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஸ்ரீசக்ர வழிபாட்டு முறைகளையும், தாந்த்ரீக பூஜை முறைகளையும் விளக்குகிறது எனில் அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் அம்பிகையைக் கேசாதிபாதம் வர்ணனை செய்கிறது. முடிந்த வரையிலும் பார்க்கலாம்.
செளந்தர்ய லஹரி என்ற பெயர் அம்பாளின் கேசாதி பாத வர்ணனையைக் குறிப்பதால் மட்டும் வரவில்லை. அழகு அலைகள் அல்லது அழகு வெள்ளம் என்றெல்லாம் நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்தால் அதன் உண்மையான அழகு என்னமோ குறைந்து தான் காணப்படுகிறது. அலைகள் கரை ஏறாது. கரை வரைக்கும் வந்துவிட்டுத் திரும்பக் கடலுக்குச் சென்று விடுகின்றன அல்லவா? அப்படித் தான் இங்கேயும். அம்பாளின் அருள் வெள்ளமானது நம்மைத் திரும்பத் திரும்ப அவள் பாதத்துக்கே இழுத்துச் சென்று அவள் கருணை வெள்ளத்திலே நாம் என்றென்றும் மூழ்கி ஆனந்த சாகரத்தில் இருக்கும்படிப் பண்ணுகிறது. அதோடு இந்த ஸ்லோகங்களை ஆசாரியாள் தன் பக்திப் பிரவாஹத்தின் மூலம் வெள்ளமாய்க் கொட்டும்படி பண்ணி இருக்கிறார். இந்த ஸ்லோகங்களின் மூலம் அம்பாளின் கருணை வெள்ளத்தை அவள் அன்பை அவள் நம்மை ரக்ஷிப்பதை, சிவ சக்தி ஸ்வரூபமாய்க் காட்சி அளிக்கும் அற்புதத்தை என்றென்றும் நினைவில் இருத்தி பக்தி செலுத்தலாம்.
எப்படியானாலும் நமக்குக் கிடைத்தது ஆதிசங்கரர் மூலமே என்பது என்னவோ உறுதி. அவர் ஈசனிடமிருந்து இதைப் பெற்று வந்தபோது அங்கே காவல் இருந்த நந்திதேவர் இவர் கைகளில் இருந்த சுவடிகளைக் கண்டதும் அவற்றை வேகமாய்ப் பிடுங்கிவிட்டாராம். ஆசாரியாரிடம் 41 ஸ்லோகங்கள் கொண்ட சுவடிகள் மட்டுமே தங்க, திகைத்த ஆசாரியாரை அம்பிகை மீதம் உள்ள ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்களை சங்கரரையே பாடிப் பூர்த்தி பண்ண ஆக்ஞாபித்தாள் என்பதும் கேள்விப் படுகிறோம். இதில் முதல் நாற்பத்தி ஒன்று ஸ்லோகங்கள் ஸ்ரீசக்ர வழிபாட்டு முறைகளையும், தாந்த்ரீக பூஜை முறைகளையும் விளக்குகிறது எனில் அடுத்த ஐம்பத்தி ஒன்பது ஸ்லோகங்கள் அம்பிகையைக் கேசாதிபாதம் வர்ணனை செய்கிறது. முடிந்த வரையிலும் பார்க்கலாம்.
செளந்தர்ய லஹரி என்ற பெயர் அம்பாளின் கேசாதி பாத வர்ணனையைக் குறிப்பதால் மட்டும் வரவில்லை. அழகு அலைகள் அல்லது அழகு வெள்ளம் என்றெல்லாம் நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்தால் அதன் உண்மையான அழகு என்னமோ குறைந்து தான் காணப்படுகிறது. அலைகள் கரை ஏறாது. கரை வரைக்கும் வந்துவிட்டுத் திரும்பக் கடலுக்குச் சென்று விடுகின்றன அல்லவா? அப்படித் தான் இங்கேயும். அம்பாளின் அருள் வெள்ளமானது நம்மைத் திரும்பத் திரும்ப அவள் பாதத்துக்கே இழுத்துச் சென்று அவள் கருணை வெள்ளத்திலே நாம் என்றென்றும் மூழ்கி ஆனந்த சாகரத்தில் இருக்கும்படிப் பண்ணுகிறது. அதோடு இந்த ஸ்லோகங்களை ஆசாரியாள் தன் பக்திப் பிரவாஹத்தின் மூலம் வெள்ளமாய்க் கொட்டும்படி பண்ணி இருக்கிறார். இந்த ஸ்லோகங்களின் மூலம் அம்பாளின் கருணை வெள்ளத்தை அவள் அன்பை அவள் நம்மை ரக்ஷிப்பதை, சிவ சக்தி ஸ்வரூபமாய்க் காட்சி அளிக்கும் அற்புதத்தை என்றென்றும் நினைவில் இருத்தி பக்தி செலுத்தலாம்.
Saturday, September 24, 2011
பிச்சை எடுத்தானாம் பெருமாள்
சின்ன வயசிலே இருந்து புரட்டாசி சனிக்கிழமை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருக்கும். இந்த மாசம் பெருமாளுக்கு உகந்தது என்பதாலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் எங்க உறவினர் ஒவ்வொருத்தர் வீட்டிலும் பெரிய அளவில் வெங்கடாசலபதி சமாராதனை நடைபெறும் என்பதாலும் தான். அதோடு இன்னும் சிறப்பாக என்னோட பெரியப்பாவின் வக்கீல் சங்கத்து நண்பர்கள் அனைவரும் நடத்தும் பஜனையும் கூட. பஜனை முடியும் போது கடைசியில் குத்துவிளக்கை நடுவில் ஏற்றி வைத்துவிட்டுப்பெரியப்பாவும் அவரின் வக்கீல் நண்பர்களுமாக அதைச் சுற்றிச் சுற்றி வந்து ஆடுவது கண்கொள்ளாக் காட்சியாகும். அந்த வயசில் அதன் தாத்பரியம் புரியாவிட்டாலும் குடுமி அவிழ்ந்து ஆட, கழுத்தில் போட்டிருக்கும் மாலைகளும் அவங்க ஆட்டத்திற்கு ஏற்ப ஆட ஒவ்வொருத்தரும் ஆடுவதைப் பார்க்கையில் நான், என் அண்ணா, தம்பி, பெரியப்பா பெண் ஒருத்தி நாலுபேருமே அப்போ குழந்தைகள்; நாங்க எல்லாரும் ஒருத்தருக்கொருத்தர் நமுட்டுச் சிரிப்புச் சிரிப்போம். அந்தப் பெரியப்பா பெண் இப்போ இல்லை.
கல்யாணமாகி வந்ததும் புகுந்த வீட்டிலும் வெங்கடாசலபதி சமாராதனைப் பழக்கம் உண்டுனு சொல்லவும் சந்தோஷமாய் இருந்தாலும் நாளாவட்டத்தில் அது வீட்டு மட்டும் செய்யற ஒண்ணா மாறிபோச்சு. அப்போவானும் வீட்டில் குறைந்தது பத்துப் பேர்கள் இருந்தோம். இப்போ நாங்க இருவர் மட்டுமே. அதிலும் இந்த வருஷம் தான் சிறப்பான வருஷம் ஆச்சே. பெருமாள் எங்க பரம்பரையில் பூஜித்து வந்தவர் வீட்டுக்கு வந்து பத்து மாசங்கள் ஆகின்றன. அவருக்கும் பிள்ளையாரைப் போலவே இங்கே இதுதான் முதல் பண்டிகை. கிருஷ்ணருக்கும் இதான் முதல் பிறந்தநாள். அதைத் தான் ஒருமாதிரியா சொந்த வீட்டிலேயே கொண்டாடினோம். கிருஷ்ணரைத் தான் அன்னிக்குப் படம் எடுக்க முடியலை. இன்னிக்குப்பெருமாளையும், கிருஷ்ணரையும் சேர்த்து வைச்சு எடுத்திருக்கேன்.
கீழே பெருமாளுக்குச் செய்த பிரசாதங்கள் மஹா நிவேதனம், சர்க்கரைப் பொங்கல், எள் சாதம், வடை, வெற்றிலை, பாக்கு, பழம். எப்படியோ புரட்டாசி சனிக்கிழமை கொண்டாடியாச்சு.
முன்னெல்லாம் காலை ஆறு மணிக்கு ஆரம்பிச்சா மதியம் பனிரண்டு மணி வரையிலும் கோவிந்தா கூப்பிட்டுக்கொண்டு அரிசிக்கு வருவார்கள். வாசலில் ஒரு சின்ன வாளியில் அரிசியை நிரப்பி ஒரு கிண்ணத்தையும் வைத்துக் கொண்டால் வரவங்களுக்குப் போட்டு முடிக்கவும் மணி பனிரண்டு ஆகவும் சரியா இருக்கும். பெரிய பெரிய மனிதர்கள் கூட வந்து பிக்ஷை வாங்கிப் போவாங்க. இப்படி பிக்ஷை எடுத்து வாங்கிய அரிசியில் அன்னதானம் பண்ணுவதைச் சிறப்பாகச் சொல்லி இருப்பதோடு நம் ஆணவமும் கலையும் என்பார்கள். ஆனால் பிக்ஷை எடுப்பதையும் கேலி செய்யறவங்க இருக்காங்க. என் அண்ணாவுக்கு பிக்ஷை எடுத்தே திருப்பதியில் பூணூல் போட்டாங்க. அப்படி ஒரு வேண்டுதல் அந்தக் காலத்திலே. ஒரு சிலர் கல்யாணத்திற்கும் திருமாங்கல்யம் செய்ய மட்டும் அம்மாதிரி வேண்டுதல் செய்வதுண்டு. இதெல்லாம் செய்வதன் காரணமே, நாமெல்லாருமே அவன் போட்ட பிச்சை என்ற நினைப்பு மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே.
பெருமாளும் பிச்சை எடுத்திருக்கிறார் வாமனன் ஆக. ஈசனும் பிக்ஷாண்டவராக வந்து பிச்சை எடுத்திருக்கிறார். நாமெல்லாம் எம்மாத்திரம்!
கல்யாணமாகி வந்ததும் புகுந்த வீட்டிலும் வெங்கடாசலபதி சமாராதனைப் பழக்கம் உண்டுனு சொல்லவும் சந்தோஷமாய் இருந்தாலும் நாளாவட்டத்தில் அது வீட்டு மட்டும் செய்யற ஒண்ணா மாறிபோச்சு. அப்போவானும் வீட்டில் குறைந்தது பத்துப் பேர்கள் இருந்தோம். இப்போ நாங்க இருவர் மட்டுமே. அதிலும் இந்த வருஷம் தான் சிறப்பான வருஷம் ஆச்சே. பெருமாள் எங்க பரம்பரையில் பூஜித்து வந்தவர் வீட்டுக்கு வந்து பத்து மாசங்கள் ஆகின்றன. அவருக்கும் பிள்ளையாரைப் போலவே இங்கே இதுதான் முதல் பண்டிகை. கிருஷ்ணருக்கும் இதான் முதல் பிறந்தநாள். அதைத் தான் ஒருமாதிரியா சொந்த வீட்டிலேயே கொண்டாடினோம். கிருஷ்ணரைத் தான் அன்னிக்குப் படம் எடுக்க முடியலை. இன்னிக்குப்பெருமாளையும், கிருஷ்ணரையும் சேர்த்து வைச்சு எடுத்திருக்கேன்.
பெருமாளும் பிச்சை எடுத்திருக்கிறார் வாமனன் ஆக. ஈசனும் பிக்ஷாண்டவராக வந்து பிச்சை எடுத்திருக்கிறார். நாமெல்லாம் எம்மாத்திரம்!
Subscribe to:
Posts (Atom)
